Friday, September 4, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 7

சத்யன் அருணாவின் பேச்சில் அவளை முற்றிலும் அருவருத்தான்,, அவன் மனக்கண்ணில் மனிதாபிமானம் மற்ற ஈனப்பிறவியாக அருணா தோன்றினாள்,, முகம் தெரியாத அந்த வாடகைத்தாய் மீது பரிதாபம் வந்தது,, அப்படி என்ன எழுதி வாங்கியிருப்பாள் என்று சத்யன் யோசித்தான்

ஏதோ தோன்ற அருணாவின் அறைக்குப் போய் அங்கிருந்த அத்தனை கப்போர்டுகளையும் திறந்து ஏதாவது டாக்குமெண்ட் இருக்கிறதா என்று தேடினான்,, எதுவுமே கிடைக்கவில்லை, சோர்வுடன் கதவை நோக்கி திரும்பியவனின் கண்ணில் அருணாவின் கட்டிலுக்கு அடியில் இருக்கும் ரகசிய அறைகள் தெரிந்தது



உடனே ஓடிச்சென்று பெட்டை இழுத்து கீழே போட்டுவிட்டு அந்த டிராவை திறந்தான், உள்ளே ஏகப்பட்ட டாகுமெண்ட்கள் இருக்க நிதானமாக தேடி அந்த வாடகைத்தாய் கையெழுத்திட்ட பைலை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அங்கேயே வைத்துவிட்டு தனது அறைக்கு திரும்பினான்

கட்டிலில் அமர்ந்து நிதானமாக அத்தனை பேப்பர்களையும் படித்தான், ஒன்றில் கூட அந்தப்பெண்ணுக்கு சாதகமாக எழுதப்படவில்லை, அந்தப்பெண் எந்தவிதத்திலும் பிரச்சனை செய்யமுடியாத அளவுக்கு ரொம்ப கவனமாக பத்திரம் தயார் செய்யப்பட்ட இருந்தது,, அதாவது அருணா தேவைப்பட்டால் குழந்தையை எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் அந்தப்பெண்ணே பொறுப்பேற்க வேண்டும்,, அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான சொத்தோ பணமோ தரப்படுவதாக ஒருவரிகூட குறிப்பிடப்படவில்லை,, எல்லாவற்றையும் படித்துமுடித்துவிட்டு சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தான் சத்யன்

இந்த பத்திரங்களில் இருந்த விஷயங்களை விட அவனை அதிகமாக வதைத்தது அந்தப்பெண்ணின் வயதுதான்,, பதினெட்டு வயது நான்கு மாதங்களே ஆன ஒருப் பெண்ணை பணம் கொடுக்கிறேன் என்று ஏமாற்றி இந்தளவுக்கு துணிந்த அருணா மட்டும் அவன் எதிரில் இருந்தால் கொலையே செய்யுமளவுக்கு சத்யனின் ஆத்திரத்தில் கொதித்தான்

தாயையும் இழந்து வயிற்றில் சிறு குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் அந்த பெண்ணை நினைத்து பெரிதும் வருந்திய சத்யன் ஒரு முடிவுடன் எழுந்தான்

கையில் இருந்த அந்த பேப்பர்களை கிழித்துப் போட நினைத்தவன், பிறகு தன் முடிவை மாற்றி அதில் இருந்த அவளின் பெயரை மட்டும் மனதில் பதியவைத்துக் கொண்டு,, தனது லாக்கரை திறந்து அதில் வைத்து பூட்டினான்,, ஒரு பேக்கை எடுத்து அதில் இரண்டு செட் உடைகளை வைத்து கொஞ்சம் பணமும் தனது செக் புக்கையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்

டிபன் சாப்பிட அழைத்த வேலைக்காரனிடம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு, கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்,,

அப்போதுதான் அருணாவின் மேனேஜர் எதிரில் வர, “ ஊட்டில எனக்கு ஒரு வேலையிருக்கு சன்முகம் அதனால நானே போய் அந்தப் பொண்ணை பார்த்துட்டு வர்றேன், நீங்க வேற ஏதாவது வேலையிருந்தால் பாருங்க” என்றவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்

சத்யன் ஊட்டி செல்லும் சாலையில் தனது காரை திருப்பி வேகத்தை அதிகப்படுத்தினான், அவன் மனமெல்லாம் அந்தப்பெண்ணின் பரிதாபமான நிலையைப் பற்றியே யோசித்தது,, ஏதாவது பெரிய அளவில் உதவி செய்து பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யனும் என்ற முடிவில்தான் அவனுடைய செக் புக்கையும் கையோடு எடுத்துச்சென்றான்

ஆனால் அவன் கார் ஊட்டியின் எல்லையை தொடும்போதே ஏகப்பட்ட தடைகள், வழியில் பாறைகள் சரிந்து கிடந்ததால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது,, மக்கள் அனைவரும் நடந்தே அந்த பாறைகள் விழுந்து கிடந்த இடத்தை கடந்து அந்த பக்கம் இருந்த வாகனங்களில் ஏறி ஊட்டிக்கு சென்றனர்

சத்யனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் சிறிதுநேரம் தவித்து நின்றான், அப்போது அந்தபக்கம் நின்றிருந்த ஏகப்பட்ட வாகனங்களில் இருந்த கார் ஒன்றில் நபர் இவனுக்கு தெரிந்தவர் போல் இருக்க சத்யன் பாறையை கடந்து அந்த காரை நெருங்கினான்

அங்கே இருந்தவர் சத்யனின் நண்பர்தான், அவரும் கோவை செல்லவேண்டி வந்தவர் இந்த தடையால் தவித்து நின்றிருந்தார்,, அவர் வந்திருந்தது ஒரு வாடகை கார்,,, தனது காரில் அவரை கோவைப் போகுமாறு சத்யன் கூறவும், அவர் சந்தோஷமாக சத்யனின் காரில் கோவைக்கு கிளம்பினார்,, சத்யன் அவர் வந்த வாடகை காரில் ஊட்டிக்கு பயணமானான்


வழி நெடுகிலும் தெரிந்த இயற்கையின் சீற்றம் கண்டு சத்யனின் மனம் நொந்தது,, அந்த வாடகை காரின் டிரைவர் காரை எப்படி எப்படியோ காரை லாவகமாக ஓட்டி அருணாவின் எஸ்டேட்க்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து காரை நிறுத்தினார் “ சார் இதுக்கு மேல கார் போகாது சார்,, நிறைய இடங்களில் மண்ணு சரிஞ்சு ரோட்டை மூடிருக்கு அதனால நீங்க நடந்துதான் போகனும்” என்றார்

அவர் சொல்வது உண்மை என்பதால் சத்யன் சரியென்று காரைவிட்டு இறங்கி அவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு தனது பேக்குடன் அருணாவின் எஸ்டேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான், வழியெங்கும் ஏகப்பட்ட இடர்பாடுகளை கடந்து எஸ்டேட்டின் எல்லையில் சத்யன் கால் வைத்தபோது மணி மாலை நான்கு ஆகியிருந்தது,
சிறிதுநேரம் ஒரு மேட்டில் அமர்ந்து இளைப்பாறியவன் அதுவரை தூறலாய் பெய்த மழை தனது சீற்றத்தை ஆக்ரோஷத்துடன் காட்டவும் அவசரமாக எழுந்து வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்,,

வீட்டை நெருங்குவதற்குள் சத்யன் தொப்பலாக நனைந்துவிட்டிருந்தான், முன்புறம் வீடு பூட்டியிருக்க,, முன்பு வாட்ச்மேன் இருந்த அறையைத்தான் அருணா அந்தப்பெண்ணுக்கு ஒதுக்கியிருப்பாள் என்று எண்ணி வீட்டை சுற்றிக்கொண்டு தோட்டத்தில் இறங்கி அந்த சிறிய வீட்டின் கதவை தட்டினான் சத்யன்

உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே, பதட்டத்துடன் மறுபடியும் சத்யன் கதவை சற்று பலமாக தட்டினான்

சற்றுநேரம் கழித்து " யாரது" என்று ஒரு பெண்ணின் குரல் ஈனஸ்வரத்தில் கேட்க

" கதவைத்திற,, நான் யார்னு சொல்றேன்" என்று சத்யன் கூற

பெரும் தயக்கத்திற்கு பிறகு கதவு பாதியாக திறந்து மான்சி தலையை மட்டும் வெளியே நீட்டினாள்

வெளியே மழையின் வேகம் அதிகமாக இருக்க சத்யன் அவசரமாக கதவை முழுவதுமாக திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்

தனது பேக்கை ஓரமாக வைத்துவிட்டு சத்யன் நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்தான்,, அழுதழுது கண்ணீர் வற்றி ஜீவனிழந்த கண்கள்,, பசியினால் சோர்ந்து போன முகம்,, தனது நிறைமாத வயிற்றை சுமக்க முடியாமல் தடுமாறி நின்ற அவளது தோற்றம் சத்யனின் நெஞ்சில் ஈட்டியை இறக்கியது போல் இருந்தது

திடுக்கென்று உள்ளே நுழைந்த அவனை மான்சி பயத்துடன்ப் பார்த்து " நீங்க யாரு?" என்று நடுங்கும் குரலில் கேட்க

அவசரமாக அவளை நெருங்கி " ப்ளீஸ் நீ உட்கார்,, நான் யாருன்னு சொல்றேன்" என்றவன் பிடிவாதமாக அவள் கையைப் பற்றி அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்தான்,

ஆனால் அவள் உட்காரக்கூட ரொம்பவே சிரமப்பட்டு வேதனையில் நெளிவது போல் சத்யனுக்கு தோன்ற " உன் பெயர் மான்சி தானே,, நான் அருணாவோட புருஷன்,, என்பேர் சத்யன்,, உன்னைப்பார்க்க தான் வந்தேன்" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்

அவ்வளவு வேதனையிலும் முகம் சந்தோஷத்தில் மலர " அருணா அக்கா உங்களை அனுப்பினாங்களா? அந்தக்கா நல்லாருக்காங்களா?" என்று குழந்தை போல அவள் வெகுளியாக கேட்க

சத்யனுக்கு நெஞ்சை பிசைந்தது,, ஆமாம் என்று அவளுக்கு தலையசைத்து விட்டு " நீ ஏன் இப்படி இருக்க ஏதாவது சாப்பிட்டயா?" என்றான்

உட்கார முடியாமல் மறுபடியும் எழுந்து சுவற்றை பிடித்துக்கொண்டு நின்ற மான்சி " எங்க சாப்புடுறது,, காலையிலேர்ந்து வயித்த வலிக்குது, உள்ளாரா பாப்பா வேற வேகவேகமா உருளுது,, டாக்டர் நேத்தே வந்து அட்மிட் ஆகச் சொன்னாங்க, ஆனா அருணா அக்கா சொன்ன கார் வரவேயில்லை,, என்னால வலியை தாங்கவே முடியலை, காலையிலேர்ந்து இந்த வீட்டுக்குள்ளயே நடந்துக்கிட்டு இருக்கேன்,, யாருமே வரலை, எங்கம்மா இருந்தா எதுக்கு வலிக்குதுன்னு சொல்லும், ஆனா அதுதான் செத்துப்போச்சே,, இப்போ என்னா செய்றது?" என்று மூச்சு வாங்க வாங்க பேசிவிட்டு அவனிடமே என்ன செய்வது என்று கேட்டாள்,

சத்யனுக்கு அவளது நிலைமை ஓரளவுக்கு புரிவதுபோல் இருந்தது,, " டாக்டர் கொடுத்த சீட்டு ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா? என்ன எழுதியிருக்காங்கன்னு பார்க்கலாம் " என்றான்,

கட்டிலில் தலையணைக்கு கீழே இருந்த சீட்டை எடுத்து சத்யனிடம் கொடுத்தாள்,, அதை வாங்கி படித்தவன் திகைத்துப்போனான்,, அதில் மான்சியின் பிரசவ தேதி இன்றையதேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது

சத்யன் திகைப்புடன் மான்சியை நிமிர்ந்து பார்க்க,, அவள் வலியை உதட்டை கடித்துப் பொருத்தபடி சுவற்றில் சாய்ந்துகொண்டிருந்தாள்

சத்யனுக்கு அவள் நிலைமை தெளிவாக புரிந்தது,, இப்போது இருக்கும் நிலைமையில் இவளை எப்படி ஆஸ்பிட்டல் கொண்டு போறது, போகும் வழியே இல்லை, மழை வேற கொட்டுது,, இப்போ என்ன செய்வது என்று அவளை பரிதாபத்துடன் பார்க்க,,

அடுத்தடுத்து வந்த வலியை பொறுக்கமுடியாமல் " அம்மா அம்மா அம்மா என்னால முடியலைம்மா,, என்னையும் உன்கூட கூட்டிட்டுப் போயிடேன்" என்று எங்கோப் பார்த்து அரற்றினாள் மான்சி

அவள் நிலைமையைப் பார்த்து சத்யனுக்கே அழுகை வரும் போல் இருந்தது, வேகமாக அவளை நெருங்கி அவள் தலையை தன் தோளில் சாய்த்து மெதுவாக நடத்தி கட்டிலில் படுக்க வைத்தான்,,

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலில் கிடந்து துடித்தவளை கண்ணீரோடு பார்த்தான் சத்யன்

' அவளுக்கு உதவி செய்து ஏதாவது நல்வழி காட்டவேண்டும் என்று வந்தவனை,, அவன் குழந்தையின் பிறப்பை அவனே காணவேண்டும் என்ற ஆண்டவனின் கணக்கை என்னவென்று சொல்வது'





" பிறக்கும் போதும் அழும் மனிதன்"

" இறக்கும் போதும் அழுகின்றான்"

" பிறக்கும் போது தன்னால் எதையும் எடுத்துவர முடியவில்லையே என்று அழுகின்றான்!

" இறக்கும் போது தன்னால் எதையும் எடுத்துச்செல்ல முடியவில்லையே என்று அழுகின்றான்!

" மனிதனின் பிறப்பிலும் இறப்பிலும் ஏனிந்த முரண்பாடு?

" அறியாத, தெரியாத, புரியாத இந்த வாழ்வில்,,

" பிறந்ததும் இறப்பதும் இறைவன் செய்த விதியே!


No comments:

Post a Comment