Saturday, September 12, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 24

மறுநாள் நாகர் கோட் சென்றார்கள், கடுமையான மலைப்பாதையில் இருபக்கமும் பைன் மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப்ப சுழன்று ஆடுவதை ரசித்தபடி ஏறினார்கள், தூரத்தில் தெரிந்த சாகர் மாதா கோயிலைக் இங்கிருந்தே கும்பிட்டனர், சிறு குன்றாய் தெரிந்த எவரெஸ்ட்டை மான்சிக்கு சுட்டிக்காட்டினான் சத்யன்

ராயல் சித்வான் நேஷனல் பார்க் சென்று யானையின் மீதேறி காட்டைச் சுற்றி வந்தனர், பல மிருகங்களையும் பறவைகளையும் பார்த்து சந்தோஷித்த மனைவியை ரசித்தான் சத்யன்

போவா டால் ஏரியில் படகுச் சவாரி அழைத்துச்சென்றான், மான்சியின் அருகே அமர்ந்து ஒரே சால்வையை இருவரும் போர்த்திக்கொண்டு படகில் பயணம் செய்தது அவன் வாழ்க்கை ஏட்டில் பொன் நிமிடங்களாக பதிக்க வேண்டியவையானது,



அவள்மேல் அவனுக்கிருந்த காதல் அவன் பிறப்புக்கே பெரும் அர்த்தம் சொன்னது, அவன் இதயக்கண்ணாடியில் அழுத்தமாய்ப் பதிந்திருந்து அவள் உருவத்துக்கு பொன் தகடுகளால் சட்டமிட்டு தனக்குள் சிறைவைத்தான் சத்யன்

அந்த ஒருவாரமும் பகலில் நேபாளை சுற்றிவிட்டு இரவின் குளிரில் சத்யனும் மான்சியும் இதமாக விதமாற்றி தாம்பத்தியத்தின் எல்லைவரை சென்றார்கள், இந்த தனிமையான உறவில் அவர்களுக்குள் இருந்த நேசமும் நெருக்கமும் இன்னும் அதிகரித்தது,

அவனுடன் இருக்கும் ஒவ்வொரு விநாடியும் இன்பச் சாரலாய், நேசத்தூரலாய், இருந்தது மான்சிக்கு, அவன் இல்லாத நிமிடங்களில் அவனின் சீண்டல் பார்வைகளை மனதில் கொண்டுவந்து துணைக்கு வைத்துக்கொண்டாள்

இருவரும் கிளம்புவதற்கு முதல் நாள் காலை சூரிய உதயத்தை பார்த்து ரசிக்க ஸ்தூபிக்கு சென்றனர், ஸ்தூபியில் ஏறி விடியலின் கரங்கள் சுகமாய் தாலாட்ட பனிச்சாரலின் பின்னனியில் வெள்ளி கிரகணங்களால் உலகை உசுப்பியபடி சிவந்த கரங்களுடன் உதயமாகிக் கொண்டிருந்தான் சூரியன்

சத்யன் மான்சியின் பின்னால் நின்று அவளை அணைத்தபடி அந்த அழகிய காட்சியை ரசிக்கும்போதே மான்சி மெதுவாக அவன்மீது சரிய முதலில் அவள் காதலால் விளையாடுகிறாள் என்று எண்ணி மனைவியை குறும்பாக அணைத்தவன் அவள் முற்றிலும் சரியவும் நிலைமையின் தீவிரம் உறைக்க அவளை தன்மீது சரித்து “ மான்சி, மான்சி” என்று அவள் தாடையைத் தட்டி பதட்டத்துடன் உலுக்கினான்


சிரமமாய் கண்விழித்த மான்சி வெட்கமாய் அவன் தோள் சாய்ந்து, தன் கூர் நாசியால் அவன் கழுத்தை உரசி “ ரூமுக்கு போகலாம் வாங்க ” என்றாள்,

அவள் வெட்கம் எதையோ உணர்த்த அவளை தோளில் சாய்த்தபடி காட்டேஜ்க்கு வந்து சோபாவில் அமர்த்தினான், அவள் அருகே அமர்ந்து அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான்

ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு மொழி செய்துவைத்திருந்த சத்யனால் அவளின் மயக்கத்திற்கும் வெட்கத்திற்கும் காரணம் புரிந்தது, முறையான உறவில் பூத்து முதல் மொட்டு அவள் வயிற்றில் உருவாகியிருப்பது சத்யனுக்கு அவள் சொல்லாமலேயே புரிந்தது,

முதல் குழந்தையை அவள் வயிற்றில் சுமக்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவன் கண்முன் வந்துபோக, அவனின் அணைப்பு இறுகியது, இம்முறை அவளை காற்றும் பலமாக தீண்டா வண்ணம் பாதுகாக்கும் வேட்கை வந்தது சத்யனிடத்தில்

மிச்சமிருந்த இரண்டு நாட்களையும் அறையிலேயே கழித்தார்கள்,, மான்சி வாந்தியும் மயக்கமுமாக தவிக்க சத்யன் அவளை மீண்டும் ஒரு தாயுமானவனாக மாறி பாதுகாத்தான், கோழியின் இறகுக்குள் தஞ்சமடையும் குஞ்சுகளைப் போல மான்சி எப்போது அவன் அணைப்பிலேயே அவன் நெஞ்சில் தஞ்சமடைந்திருந்தாள்

அன்னலட்சுமி மகளாக வந்து பிறக்கவேண்டும் என்று சாகர் மாதவை வேண்டிக்கொண்டு நேபாளைவிட்டு புறப்பட்டார்கள்,, அவர்கள் கோவை வருவதற்குள் கருவைச் சுமந்த மான்சியைவிட அவளை பாதுகாத்து அழைத்துவர சத்யன்தான் பெரிதும் சிரமப்பட்டான்


மனைவியை கவனமுடன் பாதுகாக்க நினைக்கும் மகனின் தவிப்பு புரிந்து அவனது அலுவல்களை பாதியாக குறைத்து மில்லின் பொருப்பில் பாதியை ராஜதுரை ஏற்றுக்கொண்டார்,

மான்சி கர்ப்பம் என்று தெரிந்ததும் பூரித்துப் போன பூங்கோதைக்கு பேரன் அசுவத்தாமனை கவனிப்பதே பெரும் பாக்கியமாக கருதி பேரனுடனேயே பொழுதை கழித்தாள்,

பத்மா வாராவாரம் சனி ஞாயிறுகளில் வீட்டுக்கு வந்து கருவை சுமக்கும் மான்சியைவிட அவளுக்காக துடிக்கும் சத்யனைப் பார்த்து உள்ளம் கசிந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல், பெரிய வயிற்றுடன் படுத்திருக்கும் மனைவியின் பாதத்தை இதமாக பிடித்துவிடும் சத்யனைப் பார்த்து “ ரொம்ப ஓவரா இருக்கு சத்யா, இவ்வளவு கவனமா உங்கண்ணன் என்னை பார்த்திருந்தா நான் இன்னும் பத்து பதினைஞ்சு பிள்ளை பெத்திருப்பேன்” என்று போலியாய் ஆதங்கப்படுவாள்

“ ஆமாம் அண்ணி, நம்ம மில்லுல ஆளுங்க தேவையே இருந்திருக்காது, உங்க பசங்களை வச்சே மில்லை நடத்திருக்கலாம்” என்று சத்யன் செய்யும் கேலியையும் ரசித்துவிட்டு போவாள்

மான்சியின் பிரசவநாள் நெருங்க நெருங்க மான்சியின் முதல் பிரசவ நிமிடங்கள் வந்து சத்யனை பயமுறுத்தியது,

லேபர் வார்டுக்குள் அவள் பிரசவிக்கத் துடித்தபோது அவளருகிலேயே நின்ற சத்யனுக்கு ஒவ்வொரு நிமிடமும் முள்மேல் நிற்பது போன்ற வேதனையை தந்தது, தன் மனைவிக்காக ஊமையாய் அழுதது அவன் மனம்

மான்சி முன்பைவிட தைரியமாக இருந்தாள், தவிப்புடன் இருந்த கணவனுக்கு அவள் ஆறுதல் சொன்னாள், மருத்துவ வசதிகள் பெருகியிருக்க அதிகநேரம் துடிக்காமல் மான்சி குழந்தையை பெற்றெடுத்தாள்

ஆனால் இருவரின் வேண்டுதலையும் பொய்யாக்கி மறுபடியும் ஆண் குழந்தையே பிறந்திருக்க, அன்னலட்சுமி மகளாக வந்து பிறப்பாள் என்று காத்திருந்த சத்யன் சலிப்புடன் வெளியே வந்து “ பையன் தான்மா” என்று தன் தாயிடம் சொன்னான்

“ விடுங்க அடுத்த குழந்தை அன்னம்மா வந்து பொறப்பாங்க” என்று பத்மா ஆறுதல் சொல்லிவிட்டு புதிதாய் உலகை காண வந்திருக்கும் மகனைப் பார்க்க அறைக்குள் ஓடினாள்

மான்சியின் பிரதியாய் பிறந்திருந்த இரண்டாவது மகனுக்கு அபிமன்யு என்று பெயர் வைத்தார்கள்,, புராணத்தில் அசுவத்தாமனும் அபிமன்யுவும் நேர் எதிரிகளாக இருந்தாலும் இப்போது ஒரு தாய் வயிற்றில் பிறந்து சகோதரர்களாக வாழவேண்டும் என்று எண்ணிய ராஜதுரையின் யோசனைதான் அபிமன்யு என்ற பெயர்

சத்யனுக்கு மான்சியும் மகன்களுமே உலகம் என்றானது, வாழ்வின் ஒவ்வொரு விநாடிகளையும் ரசித்து வாழ்ந்தான் சத்யன், புதையலாய் கிடைத்த மனைவி, பொக்கிஷமாய் கிடைத்த மகன்கள் என அவன் உலகம் எப்போதுமே வெளிச்சமாக இருந்தது

அந்த வெளிச்சத்தில் விழுந்த கரும்புள்ளியாய் அருணா வெளிநாட்டில் இருந்து வருகைதர, இனி என்னவாகுமோ குடும்பத்தில் அனைவரும் பயந்தாலும், சத்யனும் மான்சியும் மட்டும் பயங்கொள்ள வில்லை, தங்களின் காதல் எதையும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருவருக்கும் இருந்தது ,,




அடுத்ததாக ராஜதுரை,, இவருக்கு தன் மகனின் மனிதாபிமானமும் நேர்மையும் அவனுக்கு பாதுகாப்பு வளையங்களாக இருந்து செயல்படும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது

அருணா வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவளிடம் இருந்து எந்த தகவலோ வக்கீல் நோட்டீஸோ வராத நிலையில்,, வக்கீலின் ஆலோசனையின் பேரில் சத்யனே அவளை நேரில் சந்திக்க முடிவெடுத்து அவள் வீட்டுக்கு சென்றான்

சத்யன் சென்றது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருணா வீட்டிலேயே தான் இருந்தாள், முன்பு இருந்ததை விட வீட்டில் பலமாற்றங்கள், எல்லாமே அதிநவீனமாக மாறியிருந்தது, அங்கிருந்த மனிதர்களை தவிர...

வீட்டின் பாதுகாவலர் சத்யனை சோபாவில் அமரச்சொல்ல, சத்யன் ஒரு அலட்சிய பாவனையுடன் அமர்ந்தான், சத்யன் வந்திருப்பது இன்டர்காமில் தகவல் சொல்லப்பட்ட ஐந்து நிமிடங்கள் கழித்துதான் அருணா வந்தாள்

அவனெதிரே வழக்கமான அலட்சியத்துடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவள், “ என்ன சத்யா எப்படியிருக்க?, உன் வண்ணாத்தி மனைவியும் அவ பெத்ததுகளும் எப்படியிருக்குது?” என்று குரலில் திமிரை குழைத்து வார்த்தைகளாக அருணா துப்ப..

சத்யனுக்கு உள்ளே கொதித்தது பற்களை கடித்து அடக்கினான்,, “ ம்ம் என் அழகு மகாராணியும் அவள் பெற்ற இளவரசர்களும் ரொம்ப சூப்பரா இருக்காங்க, என்னாலதான் சமாளிக்க முடியலை, அழகான பொண்டாட்டியை கவனிக்கிறதா,, குறும்பு செய்யும் மகன்களை ரசிக்கிறதான்னு ஒருநாளைக்கு இருபத்திநாலு மணிநேரம் பத்தலை, இப்போ உன்னைய பார்க்கவே ரொம்ப சிரமப்பட்டு டைம் ஒதுக்கி வந்தேன்” என்று சத்யன் அவளைவிட திமிராக பதில் சொன்னான்

அருணாவின் முகம் இறுகியது “ சரி என்ன விஷயமா பார்க்க வந்த, எனக்கு நிறைய வேலையிருக்கு நான் பார்லர்க்கு போகனும்” என்றாள்

பார்லருக்கு போய் இந்த அழகை பாதுகாத்து என்னப் பண்ணப்போறா,, பாம்பைப் போல விஷமுள்ள அழகு என்று மனதுக்குள் வன்மமாக நினைத்த சத்யன் “ எனக்கு சொல்லவேண்டிய பதிலை சொல்லிட்டா நான் உடனே கிளம்பி போயிடுவேன்,, நானும் மான்சியும் சுதந்திரமாக வாழனும் அதுக்கு உன்னோட கையெழுத்து வேனும்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

“ டைவர்ஸ் தரமுடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவ சத்யா?” என்றாள் அருணா திமிறான குரலில்

நிமிர்ந்து அமர்ந்து அவளை நேராகப் பார்த்த சத்யன் “ என்ன அருணா கர்வமா?, இந்த இரண்டு வருஷமா மான்சிக் கூட சுதந்திரமா தான் வாழ்றேன்,, ஆனா உன்கிட்ட இருந்து முற்றிலும் விலகிடனும் நினைக்கிறேன்,, என்னை உனக்கு பிடிக்காது, குடும்பம் குழந்தைகள் இப்படி எந்த தேவைகளும் இல்லாத ஒரு அல்ட்ரா மார்டன் வுமன் நீ அப்படியிருக்கும் போது நான் கேட்ட டைவர்ஸை குடுத்துட்டு போகவேண்டியதுதானே அருணா, இதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று சத்யன் தீர்கமாக கேட்க
பாலீஷ் செய்யப்பட்டிருந்த விரல் நகங்களையே சிறிதுநேரம் பார்த்த அருணா அவனைப்போல வே நிமிர்ந்து அமர்ந்து “ சரி நானும் நேரடியாக விஷயத்துக்கு வர்றேன், இதுவே முதலும் கடைசியுமாக நாம பேசி முடிச்சிரலாம்,, நீ சொல்றது சரிதான் சத்யா எனக்கு குடும்பம் குழந்தைகள் என்று எந்த தேவையும் இல்லைதான்,, ஆனா சமீக அந்தஸ்தை ரொம்ப முக்கியமாக நான் நினைப்பேன்னு உனக்கே தெரியும், நான் என்னோட பிசினஸ் வட்டாரத்தில் சத்யனுடைய எக்ஸ் மனைவி என்ற பெயரோடு உலாவர விரும்பலை, அதேசமயம் பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொருத்தியை சேர்த்துக்கிட்டான் சத்யன் என்ற அசிங்கமான ஒரு பட்டத்தை உனக்கும் அந்த வண்ணாத்தி மகளுக்கும் கொடுக்க நினைக்கிறேன்” என்று அருணா தனது வக்கிரத்தை வார்த்தையாக கொட்ட

சத்யன் அவளை புரியாமல் பார்த்தான் “ இப்போ நீ என்ன சொல்ல வர்ற?” என்று கேட்டான்


“ என்ன புரியலையா சத்யா? இப்போ நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்த அந்த மான்சி உனக்கு முறையுள்ள மனைவி,, நான் டைவர்ஸ் கொடுக்கலைன்னா அவ உனக்கு வைப்பாட்டி தான் சத்யா,, அதாவது நான் பொண்டாட்டி அவ வைப்பாட்டி, இப்போ புரியுதா” என்று அருணா விளக்கம் கூற

சத்யனின் கோபம் கரை கடந்திருந்தது வேகமாய் எழுந்து அருணாவை நெருங்கி குட்டையான கூந்தலை ப ற்றி“ ஐய் யாரைப் பார்த்து வைப்பாட்டின்னு சொல்ற, எவ என்னை வாழ வச்ச தேவதைடி, புருஷனை மதிக்காத அவனோட உணர்வுகளை காலடியில் போட்டு மிதிச்ச உனக்கு எங்கடி என் மான்சியோட புனிதம் தெரியப்போகுது, ச்சீ நான் வந்ததே தப்பு” என்று அவள் கூந்தலை பற்றிய கையை நெருப்பை உதறுவது போல் உதறிவிட்டு அங்கிருந்து வெளியேற வாசலை நோக்கி போனான்

“ ஏய் சத்யா ஒரு நிமிஷம் நில்லு, எத்தனை காலம் நீ தவமிருந்தாலும் நான் உனக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன்,, என்னைப்பொறுத்தவரை என்னோட எச்சிலைதான் மான்சிக்கு நீ படையல் போட்டிருக்க, அவ உனக்கு வைப்பாட்டி என்ற உணர்வோடயே உங்களோட ஒவ்வொரு நாளும் கடந்து போகும், இதுதான் நான் உனக்குத் தர்ற பனிஷ்மெண்ட்,, அதுமட்டுமல்ல இந்த இரண்டு வருஷமா வெளிநாட்டில் சும்மா இருந்தேன்னு நெனைச்சியா பல நாடுகள் சுத்தி வந்து என் தொழில் அபிவிருத்தி சம்மந்த பலதையும் கத்துகிட்டு வந்திருக்கேன் நான் அதை தொழில் ரீதியா பயன்படுத்தி உன்னை இந்த கோயமுத்தூர் நூல் மார்கெட்டை விட்டே ஓடஓட விரட்டலை நான் அருணா இல்லை” என்று அருணா ஆவேசமாக பேச

வெளியே போக நினைத்தவன் அவள் பேசுவதை கேட்பதற்காக திரும்பியிருந்தான், அருணா பேசிமுடித்ததும் அவளைப் பார்த்து தன் அழகான பல்வரிசை பளிச்சிட சத்தமிட்டு சிரித்த சத்யன் “ ஏய் நீ நினைக்கிற மாதிரி செய்யும் தொழிலே புருஷன், குழந்தை, குடும்பம்னு நெனைக்கிறவன் நான் இல்லை, எனக்கு என் மனைவி மகன்கள் குடும்பம் மட்டும் தான் முக்கியம், தொழில் போனா மயிரு போச்சுன்னு போய்கிட்டே இருப்பேன், இருக்கவே இருக்கு என் சொந்த கிராமமும் அங்கே இருக்கிற எங்களின் பரம்பரை நிலங்களும் இப்பகூட இப்படியே என் கிராமம் காமநாயக்கன் பாளையம் போய் போட்டுருக்கிற பேன்ட்டு சட்டையை அவுத்துப் போட்டுட்டு ஒரு கோமணத்தை கட்டி கலப்பையை தோள்ல எடுத்துக்கிட்டு வயல்ல இறங்கி ஏர் உழுது விவசாயம் பண்ண எனக்கு தெரியும்டி, ஆனா நீ இந்த பீல்டுல கொஞ்சம் இறங்கினாலும் உடனே தூக்குப்போட்டுகிட்டு செத்துப் போவ, அதனாலதான் இத்தனை நாளா உனக்கு விட்டுக் கொடுத்துக்கிட்டே வந்தேன், இனிமேலும் உனக்கு அந்த உயிர்ப் பிச்சையை போடுறேன் பொறுக்கிட்டு பேசாம போயிடு, ,, உனக்கு என்னத் தேவைன்னு எனக்குத் தெரியும், உன் பேருக்குப் பின்னால போட்டுக்கிறியே திருமதி அருணா சத்யமூர்த்தி.. அது மட்டும் தான் உனது தேவை என் பெயரால உன் சமூக அந்தஸ்தை உயர்த்திக்க நினைக்கிற போ போ பொழச்சுப் போ,, ஆனா என் வழில வந்து மேலும் மேலும் என்னை சீண்டின அப்புறம் நாறிடுவ,, ஏழுவருஷம் என் பொண்டாட்டி என்ற பெயருல சுத்துனவளாச்சேன்னு உன்னைய சும்மா விடுறேன் இல்லேன்னு வை நீ மான்சிகிட்ட கையெழுத்து வாங்கி வச்சிருந்தியே அதை வச்சே உன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவேன், ஜாக்கிரதை” என்று ஆவேசமாக பேசிய சத்யன் வாசலைத்தாண்டி தனது காருக்கு சென்றான்

கார் கதவை திறந்தவன் விக்கித்து வெறித்தபடி நின்றிருந்த அருணாவை பார்த்து பெரிதாய் பொங்கிய சிரிப்புடன் “ இன்னொரு முறை என் மகாராணியைப் பத்தி பேசாதே, ஏன்னா நீ அவளுக்கு பணிப்பெணா இருக்கக்கூட தகுதியில்லாதவ,, என்ன சொன்ன நீ எனக்கு பொண்டாட்டி, மான்சி எனக்கு வைப்பாட்டியா? மெடிகல் ரீதியா ஒருப் பிள்ளையும் முறையான உறவோட ஒரு பிள்ளைன்னு ரெண்டு புலிக்குட்டிகளை வாரிசா என் குடும்பத்துக்கு பெத்து குடுத்திருக்கா, இன்னும் கூட நிறைய முயற்சி செய்யப் போறோம், தினமும் பகலில் அவளை என் கண்களிலும் நைட்டுல என் நெஞ்சிலும் தூக்கி சுமக்கிறேன் அருணா,, ஆனா இதுல எந்த இடத்திலாவது ஒத்து போறியான்னு யோசிச்சுப் பாரு,, அப்புறம் தெரியும் நீ யாருன்னு” என்று உரக்க கூறிவிட்டு விருட்டென காரில் ஏறியமர்ந்து வேகமாய் ஸ்டார்ட் செய்து கிளம்பினான்

அருணா திக்பிரமைப் பிடித்தவள போல் அப்படியே நின்றிருந்தாள், இது அவளறிந்த சத்யன் இல்லை, அவனிடம் எப்போதுமே ஒரு கோழைத்தனமான பின்வாங்கல் இருக்கும், ஆனால் இப்போது வந்த சத்யன் ஒரு மாவீரனைப் போல் தெரிந்தான், அவன் பேச்சு நடை பாவனை எல்லாமே ஒரு மாவீரனின் பிரதிபலிப்பு இருந்தது, இதெல்லாம் எப்படி வந்தது, அந்த வண்ணாத்தியின் மகளால் தானா?

சிலநிமிடங்கள் தான் அயர்ந்து நின்றிருந்தாள் அதன்பின் அதே அலட்சியத்துடன் தோள்களை குலுக்கிக்கொண்டு வீட்டுக்குள் போனாள் அருணா

அதன்பின் அருணா தன் தொழில் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட, சிறியதாக இருந்த நூற்பாலை பிரம்மாண்டமான பேக்டரியாக உருவெடுத்தது, ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் என பல கிளைகள் உருவாக்கி தன் வளர்ச்சியை அனைவரும் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்திருந்தாள் 


சத்யனும் முன்னேறினான், ஆனால் அவனுக்கு தனது அன்பான குடும்பம் முதலாவதாக இருந்தது, தொழில் இரண்டாவதாக இருந்ததால் அளவாக நிதானமாக முன்னேறினான், அவனுக்கு பணத்தின் தேவையைவிட தனது அன்பான குடும்பத்தின் அன்பின் தேவை அதிகமாக இருந்தது,

மான்சியும் அவனும் வாழ்ந்த காதலான வாழ்க்கைக்கு சான்றாக இன்னுமொரு மகன் பிறந்தான், தியாகப் பெண்மணியாம் அன்னலட்சுமி வந்து மகளாக பிறக்கவில்லையே என்ற வருத்தம் அவன் குடும்பத்தினருக்கு இருந்தாலும் மூன்றாவது பேரனின் வருவை விமரிசையாக கொண்டாடினார்கள், ராஜதுரை தனது மூன்றாவது பேரனுக்கு அனிருத்தன் என்று பெயர் வைத்தார்

ஆனால் எந்த வழியிலும் அருணாவின் தொல்லை அவர்களுக்கு இருக்கவில்லை,, அவளை எந்தவிதத்திலும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்து வந்தனர், சத்யன் மட்டும் எப்போதாவது தொழில் ரீதியான மீட்டிங்குகளில் அருணாவை சந்திப்பதுண்டு, இருவருமே ஒரு அலட்சியப் பார்வையோடு கடந்து சென்றுவிடுவார்கள்

காலம் வெகு வேகமாக சுழன்று ஓட ஐந்து வருடம் கழித்து கௌதம் பத்மாவின் மூத்தமகன் சாந்தனுவின் திருமணம் நடக்கவிருந்தது, அந்த குடும்பத்தின் முதல் பேரனின் திருமணம் என்பதால் மொத்த குடும்பமும் சேர்ந்து வெகு விமரிசையாக எல்லா ஏற்பாடுகளும் செய்தனர்

அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பப்பட்டது,, தொழில் ரீதியான அனைவருக்கும் சத்யனும் கௌதமும் அழைப்பிதழ்களை நேரில் சென்று கொடுத்தனர் ,, தொழிற்சங்கத்தின் தலைவி என்ற முறையில் அருணாவுக்கு அழைப்பு அனுப்பவேண்டும் என்று ராஜதுரை நடுநிலையாக பேச,

கௌதம் அரைமனதோடு அருணாவின் வீட்டுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்துவிட்டு வந்தான்,, திருமணநாள் நெருங்க நெருங்க அவர்களின் இரண்டு வீடுகளும் திருவிழாக் கோலம் பூண்டது,, சத்யனும் மான்சியும் பலப் பொறுப்புகளை தங்களே முன்னின்று செய்தனர்

ஆறுமாத கருவை வயிற்றில் சுமந்தபடி தன் மனைவி அனைத்து திருமண வேலைகளையும் பொறுப்பாக செய்வதை சத்யன் பெருமையுடன் பார்த்தான், இந்த குழந்தையாவது பெண்ணாக பிறக்கவேண்டும் என்ற வேண்டுதல் அவனிடம் பலமானதாக இருந்தது

திருமணத்திற்கான நாளில் மான்சி அழகான அரக்குப் பட்டும் வைர நகைகளுமாகவும், சத்யன் பட்டுவேட்டி பட்டுசட்டையுடன் தங்களின் மூன்று மகன்களுடன் திருமண மண்டபத்திற்கு கிளம்பினார்கள்,,

காரில் செல்லும்போதா தன் மனைவியை அடிக்கடி திரும்பிப்பார்த்து ரசித்த சத்யனை, “ டாடி ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு மம்மியை அப்புறமா பாருங்க” என்று ஏழுவயது அசுவத்தாமன் அதட்ட..

“ ஆமாம்டா இந்த டாடியோட தொல்லை தாங்கலை,, அம்மாவைப் பார்த்து பயங்கரமா ஜொள்ளு விடுறாரு,, பேசாம நாமெல்லாம் தாத்தா பாட்டியோட கார்ல கிளம்பி வந்திருக்கலாம்” என்று ஆறுவயது அபிமன்யு அலுத்துக்கொண்டான்

“ ஏன்டா டேய் பசங்களா நான் என் பொண்டாட்டியை ரசிக்கிறேன், இதுல உங்களுக்கு என்னடா வந்துச்சு” என்று மகன்களை அதட்டியவன் மான்சியிடம் திரும்பி “ இதுக்குத்தான்டி நான் அப்பவே சொன்னேன் இவனுங்களை அவங்க தாத்தா பாட்டிக்கூட அனுப்பிட்டு நாம மட்டும் ஜாலியா போகலாம்னு நீதான் கேட்கவேயில்லை” என்று மான்சியிடம் போலியாக கோபப்பட்டான் சத்யன்

கண்களில் இருந்த கூலிங்கிளாஸை கழட்டி தனது கோட்டில் மாட்டியபடி “ அய்யோ கடவுளே இவங்க தொல்லை தாங்கலையே,, அப்பா என்னோட சொத்தை பிரிச்சு குடுங்க நான் அமெரிக்காவுக்கு போய் செட்டிலாயிர்றேன்” என்று பெரியதாக ஒரு குண்டை மூன்றமவன் அனிருத்தன் சொன்னதும் அந்த காரில் பலத்த சிரிப்பு சத்தம்

அனைவரும் சந்தோஷமாக காரில் சென்று மண்டபத்தில் இறங்கி அவரவர் வேலையை செய்ய, திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது,, மான்சி பிள்ளைகளை பூங்கோதையின் பொருப்பில் விட்டுவிட்டு வருபவர்களை கவனிக்க வாசலுக்கு போனாள்

அப்போது ஒரு பெரிய வெளிநாட்டு கார் வந்து நிற்க, அங்கிருந்தவர்களிடம் பரபரப்பு கூடியது, அப்படி யார் வந்திருக்கிறார்கள் என்று மான்சி பார்க்க அருணாதான் அந்த காரில் வந்து இறங்கினாள்

மண்டபத்துக்குள் நுழைந்த அருணாவை மான்சி மனதில் எந்த கள்ளமும் இன்றி “ வாங்க அக்கா,, நல்லாருக்கீங்களா?” என்றாள்
அவளை நிமிர்ந்து பார்த்த அருணாவின் முகத்தில் அதே அலட்சியப் பாவனை, மான்சி கொடுத்த சந்தனத்தை எடுத்து கையில் தடவிக்கொண்டு உள்ளே போனாள் அருணா





“ முறையான தாம்பத்தியம்,, அழகான காதலும்,, ஒரு மனிதனை எப்படி மாற்றும்”

“ காட்டில் குழுமும் பறவையும் நான்!

“ கத்தி நகரும் அருவியும் நான்!

“ ஆற்றில் அசையும் மீனினம் நான்!

“ அப்புறத்தில் தெரியும் பச்சையும் நான்!

“ பூக்களில் அடைத்த புதுமணம் நான்!

“ புத்தியில் தெளிந்த தலைக்கணம் நான்!

“ மண்ணிலே கிடக்கும் சருகுகள் நான்!

“ மிதந்தே நடக்கும் மேகமும் நான்!

“ ஓங்கி ஒலிக்கும் ஒலிகளும் நான்!

" ஒற்றைக்காலில் தவம் செய்யும் முனியும் நான்

“ ஓயாது உழைக்கும் உயிர்களும் நான்!

“ காதலில் வழியும் கண்களும் நான்!

“ காமத்தில் நசுங்கும் புண்களும் நான்!

“ குழந்தையின் முதல் புன்னகை நான்!

“ குமரியின் கொலுசு சத்தமும் நான்!

“ தெய்வத்தின் மனக்கருணையும் நான்!

“ தேடாமல் கிடைத்த தேடலும் நான்!

" நான் நான் நான்!


No comments:

Post a Comment