Monday, September 28, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 3

தாலி கட்டியதும் இருவரும் எதிரும்புதிருமாக அமர்ந்து மாலை மாற்றும்படி அய்யர் சொல்ல, மான்சி முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி சத்யன் கழுத்தில் மாலையை போட, சத்யன் ஒரு அலட்சியப் பார்வையுடன் அவள் கழுத்தில் மாலையை தூக்கி போட்டான்

இருவரும் மணவறையை சுற்றி வருமாறு அய்யர் சொன்னதும் சாந்தா வேகமாக வந்து சத்யனின் தோளில் இருந்த பட்டுதுண்டையும் மான்சியின் பட்டுப்புடவையின் நுனியை சேர்த்து முடிச்சு போட்டுவிட்டு “ கையைப் பிடிச்சுக்கிட்டு போ சத்தி” என்று கூறினாள்

சத்யன் அவளை பின்னால் திரும்பி பார்த்து, மான்சியை நோக்கி தனது வலக்கரத்தை நீட்ட , மான்சி அவன் கையைப் பற்றாமல் அலட்சியம் செய்து அவன் பின்னால் வர ‘ போடி இவளே’ என்று மான்சியை மனதுக்குள் திட்டியபடி தனது கையை இழுத்துக்கொண்டு அவனும் ஒதுங்கியே வர இருவரும் தங்கள் துணியில் போடப்பட்ட முடிச்சை விட மனதில் பெரிய குழப்ப முடிச்சுடன் மணவறையை சுற்றிவந்தனர்



மணவறையை சுற்றி முடிந்ததும் வேறு எந்த சம்பிரதாயங்களுக்கும் ஒத்துழைக்காமல் மான்சி ஒதுங்க, மற்றவர்களும் இதற்கு மேல் அவளை சோதிக்க வேண்டாம் என அவளது அறைக்கு அழைத்துச்சென்றனர்

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் , எந்த விதத்திலும் பொருந்தாத இந்த ஜோடியை எண்ணி மனதுக்குள் பலவிதமான குழப்பங்களுடன் அங்கிருந்து வெளியேறினார்கள், பாதிபேர் பொறாமையில் வெந்தனர் , பாதிபேர் சத்யன் அதிர்ஷ்டக்காரன் என்று வியந்தனர்,

சத்யன் தனித்து நிற்க ஊருக்கு கிளம்பிய பாபநாசம் சொந்தங்கள் எல்லாம் மேடைக்கு வந்து சத்யனின் கையைப்பிடித்து ஆளுக்கொரு விதமாக வாழ்த்தினர், சத்யன் தான் தனது முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருக்க ரொம்பவே சிரமப்பட்டான், இப்போது சந்தோஷமாக இருப்பது போல் முகத்தை வைத்திருந்தால் இதற்காகவே காத்திருந்தது போலாகிவிடும் , வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டால் ஆராவமுதனின் வற்புறுத்தலுக்கு பணிந்துவிட்டு இப்போது வருத்தப்படுவது போல் ஆகிவிடும், எனவே அனைவரின் வாழ்த்துக்கும் சங்கடமாக நெளிந்தான்,

நக்கல் சிரிப்புடன் சத்யன் அருகே வந்தான் சுப்பிரமணி, “ என்னலே எட்டாதுன்னு சொல்லிட்டு யானையை குழில விழ வச்சிட்ட போலருக்கு,, ஆனா குழி வெட்டுனது யாருலே? நீயா? ” என்று கேட்டுவிட்டு சமந்தமேயில்லாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தவனின் முகத்தில் ரத்தம் வர ஓங்கி ஒரு குத்துவிட்டால் என்ன என்று சத்யன் யோசிக்கும் போதே... நேற்று காலையில் சத்யனிடம் பேசிய வேன் டிரைவர் புன்னகையுடன் சத்யனை நோக்கி வர,

சத்யன் முதன்முதலாக சிறு சிரிப்புடன் அவரை எதிர்கொண்டான்,
சத்யனின் தோள்ப் பற்றி அணைத்தவர் “ ம்ம் நேத்து காலையில மதுரையை விட்டே போகனும்னு சொன்ன? இப்பப்பாரு,, விதி வலியது ராஜா,, ம்ம் கடவுள் உனக்கு நல்ல வழியை காட்டியிருக்கார், இனிமேல் அதே பாதையில் போப்பா, என்னோட மனசு நிறைஞ்ச வாழ்த்துக்கள்” என்று அவர் மனதார வாழ்த்துச் சொல்ல..

சத்யன் சங்கடத்துடன் சிறிய தலையசைப்புடன் வாழ்த்தை ஏற்றுக்கொண்டான்
சிறிது நேரத்தில் மண்டபமே காலியாகிவிட, மிச்சமிருந்த பொருட்களை எல்லாம் வேன்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர், சத்யன் மணமேடையின் ஒரு மூலையில் சேரில் அமர்ந்திருந்தான், அவனருகே யாருமேயில்லை, தாலி கட்டியதும் மாடிக்குப் போன மான்சி திரும்பவும் கீழே வரவேயில்லை,, 


நேரம் ஆகஆக சத்யனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது, அவனை கடந்து சென்ற பாலாவும் அவன் மனைவி அட்சயாவும் அவனை ஒரு மனிதன் என்ற பார்வையை தவிர்த்து காட்டில் இருந்து தப்பிவந்த ஏதோ ஒன்றை பார்ப்பது போல பார்த்துவிட்டு போனார்கள்,

வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் முயற்சியில் பேச்சியின் உதவியுடன் சாந்தா காரில் ஏற்றிக்கொண்டு இருந்தாள், எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும் நேரம் வந்துவிட்டது என்று சத்யனுக்கு புரிய ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து மண்டபத்தின் வாசலுக்கு வந்தான்,

அப்போது மணமகள் அறையில் இருந்து வந்த மான்சி இவனை திரும்பியும் பார்க்காமல் அலட்சியமாக காரில் ஏறி அமர, சாந்தா அவசரமாக சத்யனிடம் ஓடிவந்து “ சத்தி சீக்கிரமா கார்ல ஏறி அவ பக்கத்துல உட்காருடா” என்று அவன் கையைப்பிடித்து இழுத்துவந்து காருக்குள் தள்ள, சத்யன் வேண்டாவெறுப்பாக ஏறி மான்சியின் அருகில் அமர்ந்தான்

மான்சி திரும்பி தன் அருகில் அமர்ந்த சத்யனை ஒரு பார்வைப் பார்த்தால், அந்த பார்வையில் எதுவுமேயில்லை என்றாலும் சத்யன் அவளைவிட்டு தள்ளி அமர்ந்தான், இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது,, வீடு வரும்வரை சத்யன் பக்கமே திரும்பாமல் வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே வந்தாள்.

இருவரும் காரைவிட்டு இறங்கியதும் சுமங்கலி பெண்கள் ஆரத்தி சுற்ற, அவளருகே நின்ற சத்யனுக்கு பெரும் இம்சையாக இருந்தது, இருவரும் விரைப்பாகவே வீட்டுக்குள் போனார்கள்,

வீட்டுக்குள் நுழைந்ததும் மான்சி யாரிடமும் எதுவுமே பேசாமல் வேகமாக தனது அறைக்கு போய்விட, சத்யன் மட்டும் தனித்து நின்றான், சாந்தா உடை மாற்ற தனது அறைக்கு போக, பாலாவும் அட்சயாவும் முறைப்புடன் தங்களது அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டனர்

சோபாவில் அமர்ந்திருந்த ஆராவமுதன் ஆத்திரத்தில் அவசரப்பட்டு சத்யனை மருமகனாக்கிக் கொண்டது இப்போது அவருக்கு தர்மசங்கடத்தில் விட்டுவிட்டது என்று அவரின் தடுமாறும் பார்வையிலேயே தெரிந்தது,

ஒரிரு நிமிடங்கள் நின்று இவற்றையெல்லாம் பார்த்த சத்யன் விடுவிடுவென வெளியேறி அந்த வீட்டில் தனக்கு கொடுத்திருந்த அறைக்குப் போனான், கதவைத் திறந்து உள்ளேபோய் போட்டிருந்த உடைகளை கலைந்துவிட்டு ஒரு கைலியை எடுத்துக் கட்டிக்கொண்டு ஒரு பாயை தரையில் விரித்து அதில் காலை நீட்டி படுத்துவிட்டான், இரண்டு நாட்களாக திரிந்த அலைச்சல் காரணமாக படுத்த சிலநிமிடங்களில் உறங்கிப்போனான் சத்யன்

மகனைத் தேடிவந்த பேச்சி அவனுடைய அயர்ந்த தூக்கத்தை கலைக்க மனமின்றி அதே அறையின் மற்றொரு மூலையில் படுத்துகொண்டாள், ஒருநாள் முழுவதும் ரயிலில் வந்த கலைப்பும் கல்யாண கலைப்புமாக பேச்சியும் கண்களை திறக்க முடியாமல் தூக்கம் அழுத்தியது,

சாந்தா வந்து பேச்சியை எழுப்பும்போது மணி மாலை ஆறாகியிருந்தது, இருவரும் சத்யனை எழுப்பாமல் வெளியே வந்து தோட்டத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்,

ஒரு பெருமூச்சுடன் சாந்தா தான் முதலில் ஆரம்பித்தாள் “ எப்படியோ கல்யாணம் நிக்காம நல்லபடியா முடிஞ்சது அண்ணி, எனக்கு சத்தி மருமகனா வந்தது சந்தோஷம் தான், சின்ன புள்ளையில இருந்து நான் பார்க்க வளர்ந்தவன், அவன் வெகுளித்தனமானவனே தவிர கெட்டவன் இல்லேன்னு எனக்கு தெரியும், ஆனா இந்ந மான்சி பொண்ணு இப்படி முறைச்சுகிட்டு இருக்காளே அதான் எனக்கு ஒன்னுமே புரியலை அண்ணி, இவ்வளவு நேரமா அவ ரூம்ல தான் இருந்தேன், என்ன சமாதானம் பண்ணாலும் எதுவுமே பேசாம கண்ணை மூடிக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருக்கா, ஏற்கனவே அவ ரொம்ப அழுத்தம் இப்போ சொல்லவே வேண்டாம், அசையாம அப்படியே உக்காந்திருக்கா,, எனக்கு ஒன்னுமே புரியலை அண்ணி, ஆனா இனிமே சத்தி உன் ரூம்ல தான் படுப்பான்னு தீர்த்து சொல்லிட்டு வந்துட்டேன், ஆனா இந்த சத்தியும் இப்படி விலகியே இருக்கானே, இவங்க ரெண்டுபேரும் எப்படித்தான் ஒன்னா சேர்ந்து வாழப்போறாங்களோ தெரியலை அண்ணி ” என்று சாந்தா புலம்பினாள் 




“ விடுங்க மதினி காலம்போற போக்கில் எல்லாம் சரியாயிடும், நாம பெத்ததுகள் சோடை போகாது, ஆனா இன்னிக்கே அவசரப்பட்டு மொத ராத்திரிக்கு ஏற்பாடு பண்ணவேண்டாம் மதினி, அதுக மொதல்ல ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அதுகளா சேர்ந்துக்கட்டும், இந்த காலத்து புள்ளைகளுக்கு நாம எதுவும் சொல்லவேண்டியது இல்ல அவுகளுக்கே எல்லாம் தெரியும், அதனால நீங்க எதுவும் கவலைப்படாம இருங்க மதினி, சத்தி பய எழுந்திரிச்சதும் நானும் கொஞ்சம் சொல்லி வைக்கிறேன் ” என்று பேச்சி ஆறுதலாக பேசி சாந்தாவின் வயிற்றில் பாலை வார்த்தாள்

“ அப்போ இன்னிக்கு நைட்டு எதுவும் ஏற்பாடு பண்ண வேனாம்னு சொல்றீங்களா அண்ணி?” என்று சாந்தா கேட்க

“ அய்யோ அந்த கதையே வேனாம் மதினி அவ்வளவுதான் ரெண்டுபேரும் நம்மளை ஒழிச்சு கட்டிடுவாங்க” என்று பயத்துடன் கூறிய பேச்சி “ ஆனா அண்ணி சத்யன் மான்சியோட ரூம்லதான் படுக்கனும்,, இல்லேன்னா வேலைக்காரங்க மூலமா விஷயம் வெளிய போனா வீராப்பா மக கல்யாணத்தை பண்ண அண்ணணுக்குத் தான் அவமானம்,, அதனால மான்சியை நீங்க எப்படியாவது பேசி சரிகட்டி வச்சா போதும், இவன்கிட்டயும் நான் சொல்லி வைக்கிறேன் மதினி ,, அதுக்கப்புறம் ஆண்டவன் விட்ட வழி ” என்ற பேச்சி வானத்தை நோக்கி கையெடுத்துக்கும்பிட்டாள்

சிறிதுநேரம் பேசிவிட்டு “ சரி அண்ணி நான் போய் உங்கண்ணன் கிட்ட பேசுறேன், நீங்க சத்யனை எழுப்பி பேசி கூட்டிட்டு வாங்க, வரும்போது மறக்காம அவனோட டிரஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு சாந்தா வீட்டுக்குப் போக, மகனை என்ன சொல்லி சரிகட்டுவது என்ற யோசனையுடன் பேச்சி சத்யன் அறைக்குள் வந்தாள்

மல்லாந்து படுத்து உறங்கிய சத்யன் இப்போது கவிழ்ந்து படுத்து உறங்கினான், பாத்தா புதுமாப்பிள்ளை மாதிரியா இருக்கான், என்னமோ லாரில லோடு ஏத்துனவன் மாதிரி கவுந்து கெடக்கானே?’ என்று எண்ணியபடி மகனின் தோளைத் தொட்டு பேச்சி உலுக்கி எழுப்பினாள்

கவிந்த வாக்கில் தலையை மட்டும் உயர்த்தி பார்த்த சத்யன் “ என்னாம்மா? இப்ப ஏன் எழுப்புற? ” என்று எரிச்சலுடன் அதட்டினான் ,

“ அய்யா, ராசா, ஏஞ்சாமில்ல எழுந்திரு கண்ணு மணி ஏழாகுது” என்று பேச்சி தனது வேண்டுகோளை கொஞ்சலில் ஆரம்பிக்க,,

மெதுவாக எழுந்து அமர்ந்த சத்யன் கண்களை கசக்கிக்கொண்டு “ மணி ஏழாயிருச்சா, ரெண்டு நாளா ஒரே அலைச்சல் ம்மா அதான் நல்லா தூங்கிட்டேன்” என்றவன் வெளியே வந்து தோட்டத்து குழாயில் முகத்தை கழுவிவிட்டு சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்

அவன் பின்னாலேயே வந்த பேச்சி அவனுக்கு அருகே அமர்ந்து “ சத்தி கண்ணு குளிச்சுட்டு வேற துணி போட்டுக்க,, உன்னோட அழுக்கு துணியெல்லாம் குடு நான் தொவைச்சு காயவச்சு பெரியவீட்டுல வைக்கிறேன், அப்புறம் அண்ணே மக கல்யாணத்துக்கு ஐயாயிரமாவது மொய் எழுதனும்னு முத்தம்மா கிட்ட போட்டிருந்த சீட்டு பணத்தை வரும்போது வாங்கிட்டு வந்தேன், ம்ஹும் நடந்த கலாட்டாவுல நான் எங்க மொய் எழுதினேன்,, அந்த காசு அப்படியேதான் இருக்கு காலையில வாங்கிட்டு போயி நல்லதா நாலு உடுப்பு வாங்கிக்க, அப்புறம் அந்த புள்ளைக்கும் நல்லதா ஒரு சீலை வாங்கி குடு” என்று மகனிடம் ஆர்வமாக பேசிக்கொண்டே போனவளை கையமர்த்திய சத்யன்


“ சீலையா? அவளுக்கா? அய்யோ, அய்யோ, நான் இங்கே வந்து இவ்வளவு நாள்ல அந்த பொண்ணு சீலை கட்டி நான் பார்த்ததேயில்லை,, வெறும் பேன்ட்டும், சட்டையும், டவுசரும், பனியனும் தான், அவளுக்கு நான் சீலை எடுத்து குடுத்தேன்னு வையி என் மூஞ்சியிலயே வீசி எறிவா,, ஆமா உனக்கு யாரு இந்தமாதிரி யோசனை எல்லாம் சொல்றது, போம்மா போம்மா ஊருக்குப் போய் பொழைக்கிற வழிய பாக்கலாம்” என்று சத்யன் உச்சபட்ச கேலியில் பேச்சியை விரட்டினான்

“ ஏலேய் ராசா மொதல்ல நீவேற, அவவேற, இப்போ நீ அவ புருஷன்டா” என்று பேச்சி மகனின் பொறுப்பை எடுத்துச்செல்ல.

“ எங்க இதே வார்த்தையை அவகிட்ட போய் சொல்லு பாக்கலாம்,, அட போம்மா,, காலையிலேர்ந்து அவ முறைக்கிற முறைப்புக்கு எப்படா இந்த வீட்டைவிட்டு போகலாம்னு இருக்கேன், வந்த புதுசுல ஒருமுறை அந்த புள்ளைய காலேஜ்லேருந்து கூட்டிட்டு வரும்ப்போனேன், அவகூட இன்னும் மூனு பொண்ணுங்களும் கார்ல வந்துச்சுக, அப்ப கார் டயர் பஞ்சராகி வண்டி வழியிலேயே நின்னுபோச்சு, ஸ்டெப்னி டயரும் இல்ல, அதுக்கு அந்த பொண்ணுங்க முன்னாடி காச்மூச்ன்னு கத்துச்சு, எனக்கு வந்த கோவத்துல அவளை பளார்னு நாலு அறை வைக்கனும்னு தான் நெனைச்சேன், சரி பொட்டப்புள்ளய கைநீட்டக் கூடாதுன்னு ஆத்திரத்தில் அவளுகளையும் அந்த காரையும் அங்கயே விட்டுட்டு நான் மட்டும் பஸ்ல ஏறி வீட்டுக்கு வந்து ரூம்ல படுத்துட்டேன், அப்புறம் மாமாக்கு போன் போட்டு வேற கார் அனுப்பி அவளுகளை கூட்டிட்டு வந்தாங்க, மாமாவும் அன்னிக்கு என்னைய ரொம்ப திட்டிட்டாரு, நான் உடனே ஊருக்கு கிளம்பிட்டேன், அத்தை தான் ஏதேதோ சொல்லி என்னை நிறுத்திடாங்க,, அதுலேர்ந்து எனக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாதும்மா,, நான் எது செஞ்சாலும் அவளுக்கு பிடிக்காது, என்னையப் பார்த்தாலே முகத்தை திருப்பிக்குவா,, அதனாலதான் சொல்றேன் அவளுக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் ஒத்து வராதும்மா,, இதுல நீவேற என்னைய வெறுப்பேத்துற, மாமாகிட்ட பேசிட்டு நானும் உன்கூடவே ஊருக்கு வரப்போறேன் ” என்று அசால்ட்டாக கூறிய சத்யன் பேச்சியின் வயிற்றில் நெருப்பை வைத்தான்

“ அய்யய்யோ என்னடா பைத்தியக்காரன் மாதிரி பேசுற,, அவ்ளோ பெரிய சபையில, அவ்வளவு பெரிய பணக்காரனை எதித்து நின்னு உன்னைய மாப்பிள்ளையா ஆக்கியிருக்காரு, இப்போ போயி நான் ஊருக்குப் போறேன்னு சொன்னா மாமா என்ன நெனைப்பாரு, அய்யா கண்ணு அப்படித்தான் ஏதாவது போய் உளறி வைக்கப்போற, அப்புறம் அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் பேச்சி பேச,,,

அம்மாவின் வார்த்தையில் இருக்கும் நியாயம் சத்யனுக்கு புரிந்தது, ‘ஆமாம் அத்தனைபேரையும் எதித்து நின்னு அவருக்கு தகுதியே இல்லாத என்னைய மருமகனா ஏத்துகிட்டாரு, இப்போ போய் நான் ஊருக்குப் போறேன்னு சொன்னா மாமா என்ன நினைப்பார்’ என்று சத்யன் யோசிக்க,

மகனின் அமைதி பேச்சிக்கு தெம்பளித்து, “ கண்ணு நான் சொல்றத கேளு, இப்பத்தான் நானும் உன் அத்தையும் பேசினோம்,, அந்தப் புள்ள பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கு, அது பொறந்ததுல இருந்த பணத்துல தான் அஞ்சாங்கல்லு விளையாடுச்சு, அதனால கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், நாமதான் அனுசரிக்கனும்,, யாரு எவரு உன் மாமன் மக தானடா,, ஏதோ சின்னப்புள்ளக மாதிரி சண்டை போட்டுக்கிட்டீங்க இனிமேல் அதுபோல எல்லாம் நடக்காது ராசா,, இனிமேல் நீ பகல்ல எங்க சுத்துனாலும் ராவுல அவ ரூமுல தான் படுக்கனும், அதுக்கப்புறம் காலப்போக்குல எல்லாம் சரியாப்போயிரும்பா, அத்தை அவகிட்ட பேசி சரிகட்டி வைக்கிறேன்னு சொல்லிட்டு போயிருக்காக, நீயும் அவகிட்ட முறைப்பு காட்டாம இரு” என்று மகனுக்கு புரியும்படி பேச்சி சொல்ல..


அம்மாவை பார்த்து முறைத்தவன் “ அப்போ கொல்லிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்சுக்க சொல்றியா? ” என்று கோபமாக கேட்டான்

“ அப்படியில்லை ராசா, நீ ஒரு ரூமுலயும், அவ ஒரு ரூமுலயும் படுத்தா இருக்குற வேலைக்காரங்க என்ன நினைப்பாங்க, யாரு மூலமாவது விஷயம் வெளியே போன மாமாவோட மானம் மரியாதை என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருப்பா, என்னைய அவரோட சொந்த தங்கச்சி மாதிரி நெனைக்க வச்சிதான், அத்தனை பேருக்கு முன்னாடி இவன்தான் என் மாப்பிள்ளைன்னு ஊரறிய சொன்னாரு, இப்போ அவரோட மானம் மரியாதையை காப்பாத்த வேண்டியது நம்மளோட கடமை கண்ணு, கொஞ்சம் பெரியமனசு பண்ணுப்பா ” என்று பேச்சி மகனிடம் கெஞ்சி கேட்க..

சிறிதுநேரம் அமைதியாக இருந்த சத்யன் பெஞ்சில் இருந்து “ சரி என்னமோ செய்ங்க” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குப் போனான்

மகன் தனது கருத்துக்கு சம்மதம் சொன்னதும் பேச்சிக்கு தலைகால் புரியவில்லை, வேகமாக சாந்தாவை தேடி ஓடினாள்..



மகளின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த சாந்தா படுக்கையில் படுத்து ஏதோவொரு ஆங்கில புத்தகத்தில் தனது கவனத்தை வைத்திருந்த மகளின் அருகே போய் அமர்ந்தாள்

பக்கத்தில் அமர்ந்த அம்மாவை பார்த்துவிட்டு புக்மார்க் வைத்து புத்தகத்தை மூடிய மான்சி, திரும்பி படுத்து “ என்னம்மா?” என்றாள்

மகளின் தலையை வருடிய சாந்தா “ என்னடா கண்ணம்மா அப்பா அம்மா மேல கோபமா இருக்கியாடா? ” என்று கேட்க

ஒரு முறை கண்களை மூடித்திறந்த மான்சி “ கோபமெல்லாம் எதுவுமில்லம்மா,, எனக்கு உரிமையுள்ள இடத்துலதானே கோபப்பட முடியும்?, அதனால எனக்கு கோபமே வரலை” என்று பட்டென்று பதில் சொன்னாள்

மகளின் வார்த்தை சவுக்கடி போல் சாந்தாவின் நெஞ்சில் விழ துடித்துப் போனாள் “ என்னடா தங்கம் இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்ட,, உனக்கு இல்லாத உரிமையா நாங்க வாழுறதே உனக்காகத்தானேம்மா, உன் அப்பா இரவும் பகலும் ஓடி ஓடி சம்பாதிக்கிறது எல்லாம் உனக்காகத்தானேடா,, உன்னோட வாழ்க்கையை பாதுகாக்க தானேடா அப்பா இப்படியொரு முடிவு எடுத்தாரு, இல்லேன்னா அந்த மானங்கெட்ட குடும்பத்துல போய் மாட்டியிருப்பியே கண்ணம்மா, அப்புறம் நானும் உன் அப்பாவும் உயிரையே விட்டுருப்போம்” என்று கண்ணில் வழிந்த நீரை தனது முந்தானையால் துடைத்தபடி சாந்தா கண்ணீர் குரலில் கூறியதும்..

தனது வார்த்தை அம்மாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது என்று மான்சிக்கு புரிந்தாலும், அவளது இழப்பு அவளுக்கு ரொம்ப பெரியதாக தெரிந்தது, “ அம்மா நீ சொல்றது உங்க தரப்புக்கு நியாயமா தெரியலாம்,, ஆனா நான் ஒரு உயிருள்ள மனுஷின்னு யாருமே யோசிக்கலையே, நான் மேல படிக்கப் போறேன்னு சொன்னேன் அதையும் வேனாம்னு சொல்லிட்டு இந்த திருச்சி மாப்பிள்ளையை பார்த்தாரு, சரி அது பரவாயில்லை அந்த மாப்பிள்ளையை பத்தி தீர விசாரிச்சாரா? அதுவும் இல்லை, அவனோட பணம்தான் மொதல்ல அவரோட கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு, சரி அப்பாவோட சந்தோஷம் தான் முக்கியம்னு நெனைச்சு அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், ஆனா நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்ச இந்த ஒரு மாசத்துல நான் அந்த ரங்கேஷை காதலிச்சிருந்தாலோ, இல்ல இந்த ஒரு மாசத்துல வேற எங்கயாவது சந்திச்சு இன்னும் சிலநாளில் புருஷனாகப் போறவன் தானேன்னு நான் என்னையே அவன்கிட்ட இழந்திருந்தாலோ, என்னால இன்னொருத்தனோட சேர்ந்து எப்படிம்மா வாழமுடியும்? ” என்று மான்சி கேட்டதும் 


சாந்தா தீயை மிதித்து போல அதிர்ந்து விழித்து மான்சியின் கையைப்பிடித்து “ மான்சி நீ என்னம்மா சொல்ற?” என்று அதிர்ச்சி மறையாத குரலில் கேட்க..

தனது வார்த்தை கரெக்டாக போய் சேர்ந்த திருப்தியுடன் “ கவலைப்படாதே நான் அந்தமாதிரி ஈனப்பிறவி கிடையாது, ரங்கேஷ் கூட நிச்சயம் முடிஞ்சதும் சிலமுறை போன்ல அவன்கூட பேசினேன் அவனோட பேச்சு எனக்கு பிடிக்கலை அதனால அவன் கூட போன்ல பேசுறதை கூட அவாய்ட் பண்ணிட்டு ஒழுக்கமாத்தான் இருந்தேன்" என்றவள் நிதானமாக தன் தாயை ஏறிட்டு....

" ஆனா அம்மா,, அப்பா நெனைச்சிருந்தா அந்த பொறுக்கி கூட நடக்கவிருந்த கல்யாணத்தை தடுத்தோட என்னை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கலாம், ஆனா அவரோட சுயமரியாதையை பாதுகாக்க என்னோட வாழ்க்கையை பலியாக்கினது எந்தவிதத்தில் நியாயம், என்கிட்ட ஒருவார்த்தை கூட கேட்கலையேம்மா,, இவன் எனக்கு பொருத்தமானவனா அப்படின்னு கொஞ்சமது யோசிச்சாரா,, அந்த சமயத்தில் அவரோட மரியாதையை காப்பாத்த ஒரு மாப்பிள்ளை வேனும், அது இந்த சத்யனே இல்லாம வேற எவன் இருந்தாலும் என்னை அவனுக்கு தாரைவார்த்து குடுத்திருப்பாரு போலருக்கு, அவரு ஒரு அப்பாவா என்னைப் பத்தி யோசிக்காம, சமூகத்தில் ஒரு அந்தஸ்துள்ள மனுஷனா அவரோட மரியாதையை மட்டுமே யோசிச்சாரு, ஆனா எனக்கு யோசிக்க ஒரு பத்து நிமிஷம் கூட அவகாசம் குடுக்கலையேம்மா,, நான் அவரோட செல்லமகள்னு தான் இவ்வளவு நாளா நெனைச்சேன், ஆனா இப்பதான் புரியுது அவருக்கு கௌரவம் தான் முக்கியம்னு, நீயே சொல்லும்மா இந்த சத்யன் எனக்கு எந்தவிதத்தில் பொருத்தமானவன்?” என்று மான்சி தனது தாயை நேராகப் பார்த்து தீர்கமாக கேட்க..

சாந்தாவால் அவளுக்கு பதில் சொல்லமுடியவில்லை, மகளின் நேரடித் தாக்குதலில் கண்ணீர்தான் பெருகி வழிந்தது, கண்ணீருடனேயே மகளை நிமிர்ந்து பார்த்தவள் “ சத்யன் ரொம்ப நல்லவன் ராசாத்தி, அவன் உன்னைய நல்லபடியா பார்த்துக்குவான்” என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது

அந்த வார்த்தையை கேட்டதும் மான்சியின் கோபம் இன்னும் அதிகமாக கை முஷ்டியை மடக்கி ஷிட் என்று மெத்தையில் குத்தியவள் “ அம்மா அவன் நல்லவனா இருந்தா மட்டும் போதுமா? என்னோட காலேஜ் வாசலில் இருக்குற பிச்சைக்காரனுக்கு நான் தினமும் காசு போடுறேன் அவனும் என்னை எப்பபார்த்தாலும் நீங்க நல்லாருக்கனும்மான்னு சொல்லுவான், அதுக்காக அவனை நான் கல்யாணம் பண்ணிகிட்டா உங்களால ஏத்துக்கமுடியுமா?” என்று வார்த்தையில் அதிகமான காரத்தை சேர்த்து மான்சி கூர்மையாக கேட்க

சத்யனுடன் ஒரு பிச்சைக்காரனை ஒப்பிட்டு பேசியதும் சாந்தாவுக்கு பலியாய் கோபம் வந்தது,, சட்டென்று மகளின் கையை உதறிவிட்டு எழுந்து “ ஏய் என்ன ரொம்ப பேசுற, சத்யனும் நீ காசு போடுற பிச்சைக்காரனும் ஒன்னா? இவன் உன் அத்தை மகன்டி, இவன் அப்பாவால தான் உன் அப்பா இன்னிக்கு சொத்துப் பத்தோட பணக்காரரா வாழுறாரு, சத்யனோட அப்பாவுக்கு படிப்பு வரலைன்னு அவரு வேலைக்கு போயி தன்னோட நண்பன இன்ஜினியரிங் படிக்க வச்சவரோட மகன்டி இந்த சத்யன், எத்தனை முறை ஊருக்கு போறப்ப எல்லாம் பேச்சிக்கு பணம் குடுக்க முயற்சி பண்ணோம் தெரியுமா? அண்ணே நீங்க மட்டும் இன்னொரு முறை பணம் குடுத்தா அது உங்க பிரண்டுக்கு செய்ற துரோகம்ண்ணே ன்னு சொன்ன பேச்சியோட மகன்டி சத்யன், அவனப் போயி ஒரு பிச்சைக்காரனோட ஒப்பு நோக்கி பேசுற?" என்று மூச்சுவிடாமல் இரைந்தவள் மகளை கூர்மையுடன் நோக்கி



" என்ன சொன்ன உங்கப்பா சுயநலம் பிடிச்சவரா? அவரு சுயநலமா யோசிச்சிருந்தா? அந்த கோடீஸ்வரன் சம்மந்தம் கையை விட்டுப் போகாம விஷயத்தை மறைச்சு உன்னை அந்த ரங்கேஷ்க்கே கல்யாணம் பண்ணி குடுத்திருக்கலாம, நம்ம மக வாழ்க்கை முக்கியம்னு நெனைச்சதால தான் அவனுங்களை ஆளவிட்டு தொரத்திட்டு சத்யனை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்தாரு, என்னது உங்கப்பாவா பணத்தை பெரிசா நினைக்கிறவரு? அப்படி பணம்தான் பெரிசுன்னு அவரு நெனைச்சிருந்தா அந்த கல்யாண கூட்டத்துல இன்னொரு பணக்காரனைத் தான் தேடியிருப்பாரு,, சத்யனை மாப்பிள்ளையாக்கி யிருக்க மாட்டாரு,, ச்சே உன்னை எங்களை மாதிரி மனுஷங்களை புரிஞ்சிக்கிற புத்திசாலின்னு நெனைச்சேன் , ஆனா நீயும் பகட்டை விரும்புற சராசரி பணக்காரப் பொண்ணுதான் சொல்லாம சொல்லிட்ட” என்று பொரிந்து கொட்டிய சாந்தா மகளைப் பார்க்க பிடிக்காது திரும்பிக்கொண்டாள் 



1 comment: