Monday, September 28, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 4

அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மான்சியின் முகத்தில் அறைந்தது, என்ன சொல்வது என்று புரியாமல் தலைகவிழ்ந்தாலும், சத்யனை கணவனாக ஏற்க அவளது வீம்பு பிடித்த மனது முரண்டியது, அவனுக்கு இல்லாத தகுதிகளை ஒப்பிட்டுப் பார்த்து பார்த்து நெஞ்சில் வன்மம் வளர்த்தது பகை கொண்ட மனது
சத்யன் எந்த மறுப்பும் இன்றி அவளருகில் மணமகனாக அமர்ந்தது வேறு மான்சியின் பார்வையில் அவனை இன்னும் தாழ்த்திக் காட்டியது, அவன் பிடிவாதமா மறுத்திருந்தா இந்த கல்யாணமே நடந்திருக்காது,, பொண்ணோட சேர்த்து சொத்தும் கிடைக்கும்னு வாயை திறக்காமல் வந்து தாலி கட்டிட்டான் ராஸ்கல், இவனுக்கு எதுவுமே கிடைக்காமல் பண்ணனும், ஆனா அது உடனே நடந்தா நல்லாருக்காது, என்று மனதுக்குள் எண்ணியவள், சத்யனை விரட்ட எடுத்துக்கொண்ட காலக்கெடு தொன்னூறு நாட்கள், தொன்னூற்று ஒன்றாவது நாள் நான் யார்னு இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு புரியவைக்கிறேன், அதுவரைக்கும் பொறு மனமே பொறு, என்று வஞ்சம் வளர்த்த நெஞ்சத்தை ஆறுதல் படுத்தினாள்



மகளிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போகவே சாந்தா ஆத்திரத்துடன் கதவை நோக்கிப் போக, “ என்ன சொல்ல வந்தேன்னு முழுசா சொல்லிட்டு போம்மா?” என்ற மான்சியின் குரல் சாந்தாவை தடுத்தது

மான்சியின் குரலில் இருந்த அமைதி சாந்தாவை மறுபடியும் திரும்ப வைத்தது, மகளின் அருகே வந்தவள் “ மான்சி எனக்கு உன் மனசு புரியுதுடா கண்ணா,, ஆனா விதியை மாத்த யாரலையும் முடியாது,, குடும்பத்தோட நல்லது கெட்டது புரிஞ்சு நடந்துக்க மான்சி” என்றவள் சிறிது தயங்கி தாமதித்து பிறகு “ இனிமேல் சத்யனும் இந்த ரூம்ல தான் படுப்பான், நீ ஒரு இடத்தில் அவன் ஒரு இடத்தில் தங்கினா பார்க்கிறவங்க ஒரு மாதிரியா பேசுவாங்க மான்சி அதான்” என்று சாந்தா சொன்னதும்

அம்மாவையே தனது துளைக்கும் விழிகளால் நோக்கியவள் “ அப்படின்னா எனக்கும் அவனுக்கும் பர்ஸ்ட் நைட் நடத்த ஏற்பாடு பண்றீங்களா?” என்று நேரடியாக மான்சி கேட்க...

இந்த நேரடி கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சாந்தா தான் பெரிதும் தடுமாறிப் போனாள், “ அதெல்லாம் இல்லடா,, அவனும் இந்த ரூம்லயே தங்கட்டும், காலப்போக்கில் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்குள்ள நடக்கவேண்டியது நடக்கும்,, இன்னிக்கு நாங்க எதுவுமே ஏற்பாடு பண்ணலை மான்சி” என்று ஒருவழியாக சொல்லி முடித்தாள் சாந்தா

கட்டிலில் இருந்து ஒரு துள்ளலுடன் கீழே இறங்கிய மான்சி கையில் இருந்த புத்தகத்தை புக் ஷெல்பில் வைத்துவிட்டு வேறு புத்தகத்தை தேடியபடி “ அவ்வளவுதானே விஷயம் இதை நீ வந்தவுடனேயே சொல்லிருக்கலாமே அம்மா,, தாராளமா வந்து தங்கட்டும், பின்ன புருஷனாச்சே, ஒரே ரூம்ல தங்கித்தான் ஆகனும் ” என்றவள் ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக்கொண்டு பட்டென்று திரும்பி தாயை கூர்மையாக பார்த்து “ ஆனா இந்த ரூமுக்குள்ள அவனுக்கும் எனக்கும் நடுவுல என்ன நடக்குதுன்னு யாரு புலன்விசாரணை பண்ணாத வரைக்கும் எல்லாமே ஓகே” என்று கூறிவிட்டு அருகில் இருந்த பால்கனியின் கதவை திறந்துகொண்டு வெளியே போனாள்

பரவாயில்லை இவ்வளவுக்காவது ஒத்துக்கிட்டாளே என்ற சிறு சந்தோஷத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள் சாந்தா,

ஆனாலும் என்னா பார்வை பார்க்குறா? எதிரே இருக்குறவங்க நெஞ்சில் இருக்குறதை பார்வையாலேயே வெளியே கொண்டு வர்றமாதிரி, எங்கம்மா மாதிரி என் மகள் என்று ஆராவமுதன் அடிக்கடி சொல்வது சாந்தாவுக்கு ஞாபகம் வந்தது, கடவுளே நல்லவேளையா நான் தாலிகட்டிகிட்டு வரும்போது அந்தம்மா இல்லை, இருந்திருந்தாங்கன்னா இந்த கூர்மையான பார்வைக்கு ஒருநாள் கூட தாக்கு பிடிச்சிருக்க மாட்டேன்,, என்று எண்ணியபடி ஹாலுக்கு வந்தாள் 



தோட்டத்தில் இருந்து வேகமாக வந்த பேச்சி, சந்தோஷத்துடன் சாந்தாவின் கையைப்பற்றிக்கொண்டு “ மதினி சத்தி மான்சியோட ரூம்ல தங்க சம்மதிச்சிட்டான்,, எப்படி எப்படியோ பேசி சம்மதிக்க வச்சிட்டேன், அவன் துணியெல்லாம் தொவச்சு எடுத்துப்போய் மான்சி ரூம்ல வைக்கவா மதினி?” என்று பேச்சி உற்சாகமாய் கேட்டாள்

“ மான்சியும் ஒத்துக்கிட்டா அண்ணி,, துணியெல்லாம் நீங்க துவக்க வேனாம், நான் வேலைக்காரியை எடுத்துட்டு வந்து தொவச்சு வைக்கச் சொல்றேன், நீங்க போய் சத்யன சாப்பிட கூட்டிட்டு வாங்க?” என்று சொல்லிவிட்டு சமையலறையின் பக்கமாக போனாள் சாந்தா

மான்சியை எப்படி சம்மதிக்க வைத்தோம் என்று பேச்சியிடம் சொல்ல மனசு வரவில்லை சாந்தாவுக்கு, அறைக்குள் நடந்த விவாதங்கள் தெரிந்தால் பேச்சியின் பூஞ்சை மனசு தாங்காது என்று சாந்தாவுக்குத் தெரியும், அதனால்தான் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் வந்து புகுந்து கொண்டாள்

அனைவரும் ஒவ்வொருவராக சாப்பிட அமர்ந்தனர், எப்போதும் கலகலப்பாக இருக்கும் டைனிங் ஹாலில் இன்று பெரும் அமைதி நிலவியது, யாருமே சத்யன் சாப்பிடவில்லையா? என்று கேட்கவில்லை,, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமலேயே எல்லோரும் சாப்பிட்டு முடிக்க, சத்யன் இறுதியாக சாப்பிட வந்தான், அவன் முகமும் உணர்ச்சியைத் தொலைத்து கல்லாக இறுகியிருந்தது, சாந்தா அமைதியாக மருமகனுக்கு தட்டு வைத்து இட்லியை பரிமாறினாள், அப்போதுதான் சாப்பிட வந்த மான்சி சத்யன் சாப்பிடுவதை பார்த்துவிட்டு அலட்சியமாக தோள்களை குலுக்கிக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்து டிவி பார்த்தாள்,

சத்யன் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவ எழுந்தபோது “ என்னா சத்யா வெறும் அஞ்சு இட்லியோட எழுந்துட்ட” என்று சாந்தா வருத்தமாக கேட்டாள்.. அவளுக்கு சத்யனின் சாப்பாட்டு அளவு தெரியும்

“ போதும் அத்தை, அவ்வளவா பசியில்லை” என்று கூறிவிட்டு கையை கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தான், அவன் வந்ததும் மான்சி எழுந்து டேபிளுக்கு போனாள்,

பாலாவும் அவன் மனைவியும் அவர்களின் அறைக்குப் போய்விட, ஆராவமுதன் மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தார், சத்யன் நின்றபடியே டிவியை பார்க்க தனக்கு எதிரே இருந்த சோபாவைக் காட்டி “ உட்கார்ந்து பாரு சத்யா” என்றார்

வழக்கமாக இதுபோல சத்யன் நின்றால் “ என்னாலே மாப்ளே நின்னுகிட்டு டிவி பார்க்கிற, இப்படி வந்து எம்பக்கத்துல உட்கார்ந்து பாருலே” என்று உரக்க உற்சாகமாய் கூறும் ஆராவமுதனிடம் இன்று மாப்ளையோடு உற்சாகமும் மிஸ்ஸிங்

சத்யன் சோபாவில் அமர்ந்து டிவியில் கவனத்தை செலுத்தினான், மடியில் இருந்த லெட்ஜரில் எதையோ எழுதிக்கொண்டு இருந்த ஆராவமுதன் குனிந்தபடியே சத்யனிடம் மண்டபத்தில் ஆன செலவுகள் பற்றிக் கேட்க, சத்யன் தன்னிடம் அவர் கொடுத்த பணத்துக்கான கணக்குகளை ஒவ்வொன்றாக சொன்னான், அவர் மறந்த சில செலவு கணக்குகளையும் கரெக்டாக ஞாபகப்படுத்தினான்,, கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குமிடையே சூழ்நிலை இயல்பானது

தட்டில் இருந்த இரண்டு இட்லியை பத்து நிமிடங்களாக சாப்பிட்டு முடித்த மான்சியிடம் “ மான்சி கண்ணூ நாலுபேருக்கு எதிரில் சத்யனை அவன் இவன்னு பேசதம்மா,, அப்புறம் தாயோட வளர்ப்பு சரியில்லைன்னு என்னையத்தான் ஏசுவாங்க, சும்மா சத்யான்னு பேர் சொல்லியே கூப்பிடு மான்சி” என்று நைசாகப் பேசி இறுதியாக கெஞ்சினாள் சாந்தா

மான்சி சரியென்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை, அமைதியாக கைகழுவிவிட்டு மாடிக்கு போனாள்




மாமனாரும் மருமகனும் கணக்கை அலசி ஆராய்ந்து முடிக்க இரவு பத்தரையானது, சாந்தாவும் பேச்சியும் சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தனர், சாந்தா தனது முகத்தைப் பார்த்த கணவனுக்கு ஜாடையாக ஏதோ சொல்ல,,

தனது கையிலிருந்த லெட்ஜரை மூடி வைத்த ஆராவமுதன் “ சரி நீ போய் படு சத்யா, மீதியை நாளைக்கு கணக்குப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அவரும் எழுந்துகொண்டார்

சத்யனும் எழுந்து தயங்கி நின்றான், எங்கே போய் படுப்பது, அவ ரூம்லயா? என்ற குழப்பத்தோடு நின்றவனின் அருகே வந்த சாந்தா “ சத்யா உன்னோட பொருட்கள் எல்லாம் மான்சியோட ரூம்ல வச்சுட்டேன், வலது பக்கம் இருக்குற கடைசி கபோர்டுல வச்சிருக்கேன், நீ போய் அங்கேயே படுத்துக்க சத்யா ” என்று இயல்பு போல் சொல்லிவிட்டு சாந்தா பேச்சியை அழைத்துக்கொண்டு வேறு ஒரு அறைக்குள் போய்விட்டாள்

சிறிதுநேரம் தயக்கத்துடன் நின்ற சத்யன், பிறகு மெதுவாக மாடிப்படிகளில் ஏறி மான்சியின் அறையை அடைந்தான், சத்யன் இந்த இளவயதுக்குள் எவ்வளவோ பிரச்சனைகளை திறமையுடன் சமாளித்திருக்கிறான், ஆனால் இன்று மான்சியின் அறைக்குச் செல்ல அவனுக்கே தடுமாற்றமாகத் தான் இருந்தது,

சத்யன் மான்சியின் அறை கதவைத் தட்டுவதற்காக கைவைத்த போது அது தானேக திறக்க உள்ளே நுழைந்து கதவை மூடினான், திரும்பி மான்சியை தேட, அவள் சோபாவில் அமர்ந்து ஒரு ஆங்கில புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள், சத்யன் வந்த சத்தம் நிச்சயம் அவள் காதுகளில் விழுந்திருக்கும், ஆனால் நிமிரவில்லை மான்சி

சத்யன் அப்படியே சிறிதுநேரம் நின்றிருந்தான், அவனுக்கு உள்ளுக்குள் இருந்து கோபம் தீயாய் எரிந்தது, பல்லை கடித்துக்கொண்டு அடக்கியபடி நின்றிருந்தான், அப்போதுதான் கப்போர்டில் அவனது பொருட்களை வைத்திருப்பதாக சாந்தா சொன்னது ஞாபகம் வர அங்கே போய் கபோர்டை திறந்து பார்த்தான்,

அவனுடைய உடைகள் எல்லாம் இருந்தது, அவன் உபயோகித்த தலையணை பாய் பெட்சீட் எல்லாம் கபோர்டின் கீழ் அறையில் இருந்தது, குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டு கப்போர்டை மூடிவிட்டு திரும்பினான்

“ அனேகமா உனக்கு ஏஸி குளிர் ஒத்துக்காதுன்னு நெனைக்கிறேன், அதனால அந்த கதவை திறந்தா பால்கனிக்கு போகலாம், நீ அங்கே படுத்துக்கலாம்” என்று புத்தகத்தில் இருந்து நிமிராமலேயே விரலை மட்டும் நீட்டி பால்கனி செல்லும் கதவை காட்டினாள் மான்சி,

சத்யனின் கோபம் வெடிக்கும் அளவிற்கு வந்தது,, கை முஷ்டியை மடக்கி விரல்களை நெறித்து கோபத்தை அடக்கியவன், ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் அவளை சீற்றத்துடன் பார்த்து “ எனக்கும் இந்த ரூம்ல படுத்துகறதை விட தெருவுல போய் தெருநாய்களோட படுத்தாக் கூட நிம்மதியா தூக்கம் வரும்னு தெரியுது தான் ,, ஆனா என்னோட நிலைமை இந்த பெரிசுகளுக்கு எங்க புரியுது, அதான் தெருநாய்கள் கூட படுக்குறதை விட இப்போதைக்கு இங்க படுக்குறதுதான் சரின்னு வந்தேன்” என்று சுள்ளென்று உறைக்கும் மாறு சத்யன் கூற..

அதே சீற்றத்துடன் புத்தகத்தில் இருந்து நிமிர்ந்தவள் “ ஏய் மைன்ட் யுவர் வேர்ட்ஸ்,, யாரைப் பார்த்து நாய்ன்னு சொல்ற?” என்று மான்சி ஆத்திரமாக மெல்லிய குரலில் கிறீச்சிட்டு கத்தினாள்

தனது வார்த்தை சரி இலக்கை தாக்கியதில் சந்தோஷமடைந்த சத்யன் தன் முழு உயரத்திற்க்கும் நிமிர்ந்து “ ஏன் புரியலையா? உன்னைத்தான் சொல்றேன்,, பணக்கார வீட்டு ஜாதி நாய் நீ ,, ஆனா விசுவாசம்ங்கறது தெருநாய்கள் கிட்டதான் இருக்கும்,, ஜாதி நாய்கள் கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது,, ஆனாபாருங்க மேடம் எனக்கு தெருநாய்களை பிடிச்ச அளவுக்கு பணக்கார வீட்டு ஜாதி நாய்களை சுத்தமா பிடிக்காது ” என்று மறுபடியும் எறியும் நெருப்பில் எண்ணையை கொட்டினான் சத்யன்

ஏதோ கோபமாக பேச வாயைத் திறந்த மான்சி சட்டென்று அடங்கினாள், இவன் தன்னை மட்டம் தட்டுவதையே குறிகோளாக கொண்டு பேசுகிறான், இவனிடம் இன்னும் பேச்சை வளர்த்தி இவனை ஜெயிக்கவிடக் கூடாது’ என்ற எண்ணத்தில் மறுபடியும் பால்கனியின் கதவை விரல் நீட்டி காட்டி “ அவுட் மேன் ” என்றாள்


அவள் அப்படி தன்னை அடக்கிக்கொண்ட பிறகு மேலும் பேச்சை வளர்த்துவது அநாகரிகமான செயல் என்று சத்யனுக்கு புரிந்தது, ஒரு வேகத்தோடு திரும்பி பால்கனி கதவை திறந்து பாயை விரித்து அதில் தலையணையை போட்டு படுத்துக்கொண்டான்

தோட்டத்தில் இருந்து பூக்களின் வாசனையுடன் வந்த மெல்லிய பூங்காற்று சுகமாகத்தான் இருந்தது, ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் சத்யன் இல்லை, பெரியவர்கள் எவ்வளவு பெரிய தவறான முடிவெடுத்துவிட்டார்கள், எண்ணையும் தண்ணியும் எப்பவுமே ஒட்டாதுன்னு அவங்களுக்க ஏன் புரியாமல் போச்சு என்று அவன் மனம் குமுறியது,

மான்சி நாலே வார்த்தை பேசினாலும் அதில் இருக்கும் வேற்றுமைகள் அவன் நெஞ்சை உறுத்தியது,, ஏழையாய் வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையை விட்டு இங்கே வந்து இவளிடம் இப்படி தன்மானத்தை இழந்து நிற்க்க வேண்டியிருக்கிறதே என்று சத்யனுக்கு மனம் வெதும்பியது,, சற்றுமுன் நடந்த சம்பவம் இதயத்தில் இரும்பு குண்டாய் அழுத்த, தூக்கம் அவனிடமிருந்து விடைபெற்றது,

சத்யன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான், இனிமேல் அவளிடம் எதுவுமே பேசக்கூடாது,, நிச்சயம் இந்த வாழ்க்கை இப்படியே போகாது, அவளே அதற்கு ஒரு முடிவு செய்வாள், அதுவரை காத்திருக்க வேண்டியதுதான், இரவு தூங்கும் நேரம் தவிர இந்த அறைக்குள் நுழையவே கூடாது,, என்ற முடிவுடன் கண்களை மூடினான், தோட்டத்தில் ஏதோவொரு இரவுப் பறவை அவனுக்காகவே சோகமாக கூவிக்கொண்டு எங்கோ சென்றது

சோபாவில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்த மான்சிக்கு அதிலிருந்த எழுத்துக்களில் கவனம் செல்லவில்லை, சத்யன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது, ராஸ்கல் என்னைப் போய் நாய்ன்னு சொல்றானே,, ச்சே எல்லாம் இந்த அம்மாவால் வந்தது, எங்கயாவது அவுட்டவுஸ்லயே கிடக்கட்டும்னு விடாம இங்கே கூட்டிவந்து விட்டுடாங்க, என்னோட பிரைவேசியே போச்சு, இனிமேல் நான் என்ன பண்ணாலும் இவனுடைய பார்வை என் முதுகை துளைக்கும், இவன் இருக்கானான்னு பார்த்து பார்த்து ஒன்னொன்னும் செய்யனும் ’ என்று எரிச்சலாக நினைத்தவள் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து போய் கட்டிலில் விழுந்தாள்

மனம் முழுவதும் சத்யனின் வார்த்தைகளே நிறைந்து இருந்தது,, என்னதான் அவனை அலட்சியப்படுத்தி பதிலுக்கு பதில் பேசினாலும், எதிலோ தோற்றுப்போன உணர்வு மான்சிக்கு,, அது என்ன என்றுதான் அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை,, ஆனால் வானவில் உடைந்து உதிர்ந்தது போல அவளது சிரிப்பும் சந்தோஷமும் நிரந்தரமாக உதிர்ந்து உலர்ந்து போய்விட்டது போல் அவளுக்கு தோன்றியது

என் வாழ்க்கையை மறுசீரமைக்க இன்னும் தொன்னூறு நாட்கள் நான் காத்திருக்க வேண்டும், அதுவரை இவனிடம் எந்தவிதமான பேச்சும் வைத்துக்கொள்ள கூடாது,, இந்த அறைக்குள் அவனொருவன் இருப்பதாகவே நாம காட்டிக்க கூடாது, என்னோட மௌனத்தை ஆயுதமாக்கி அவனை விரட்டுவேன்,, என்று மான்சியும் ஒரு முடிவுடன் படுத்துக்கொண்டாள்

இருவரின் சிந்தனையும் ஒன்றேதான், ஆனால் சிந்தனையின் தரத்தில் தான் சிறு வித்தியாசம்,, திருமணம் ஆன தம்பதிகள் முதல் நாள் இரவே தங்களின் பிரிவை எப்படி செயல்படுத்துவது என்ற தீவிர சிந்தனையுடனேயே உறங்கிப் போனார்கள்


மறுநாள் காலை மான்சி கண்விழிக்கும் முன் சத்யன் அந்த அறையிலிருந்து போய்விட்டிருந்தான், அவனது படுக்கை கபோர்டுக்கு கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது,

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த மான்சிக்கு அந்த இளங்காலை பொழுதை ரசிக்க முடியவில்லை, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று பல்லைக் கூட விளக்காமல் படுக்கையில் அமர்ந்து பெரிதாக யோசித்தாள்




" ஒரு பெண் தனது இதய ஒளியால்,,

" ஒரு குடும்பத்தையே பிரகாசிக்க செய்கிறாள் !

" அதே பெண் தனது மமதையால் ,,

" அந்த குடும்பத்தையே இருட்டாக்குகிறாள் !

" ஆணின் இதயத்தில் மின்னலாய் உட்புகுந்து,,

" மின்சாரத்தை பாய்ச்சும் பெண் !

" அவளால் அவன் இதயத்தில் ஏற்படும்,,

" அதிர்வலைகளை உணர மறுப்பதேன்?"

" கட்டிப் பிடிப்பது காதல் என்றால்"

" விட்டுக் கொடுப்பது வாழ்க்கை அல்லவா?"

" இவை இன்றுமே இல்லாவிட்டால்,,

" ஆணும் பெண்ணும் மனித மிருகங்கள் தானே? 



No comments:

Post a Comment