Tuesday, November 24, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 1

தங்க நதியும்.. வெள்ளி நதியும் கைகோர்த்துக் கொண்டு வந்து ஒன்றாக கலக்கும் ஒரு பொன்மாலைப்பொழுது... நிலவின் வருகைக்காக சூரியன் ரத்தினக் கம்பளம் விரித்து காத்திருக்க... மலர்ந்த பூக்கள் தங்கள் வாசனையால் நிலவுக்கு வரவேற்புரை வாசித்தது..

அப்போதுதான் வயக்காட்டில் இருந்து வந்த சத்யன் சட்டையை கழட்டி கொக்கியில் மாட்டிவிட்டு, முற்றத்தில் இருந்த பெரிய அண்டாவில் இருந்து தண்ணீரை மொண்டு முகம் கைகால்களை கழுவிட்டு கொடியில் கிடந்த டவலை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு வந்து முற்றத்தை ஒட்டியிருந்த கூடத்தில் இருந்த பிரம்பு சேரில் அமர்ந்தான்

சத்யன் வீடு பிரமாண்டமான பழையகாலத்து மச்சு வீடு...

அதாவது சதுரக்கட்டு வீட்டின் நாலாபுறமும் ஓடுகள் வேயப்பட்டு, நடுவே காங்க்ரீட் போடப்பட்ட மச்சு வீடு. பின்புறம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தோட்டம், தோட்டத்தின் கடைக்கோடியில் சுமார் முப்பது மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாட்டு கொட்டகை,, சுற்றிலும் இரண்டடி அகலமும் எட்டடி உயரமும் கொண்ட காம்பவுண்ட் சுவர், அதற்கு மரத்தால் ஆன பெரிய கேட்... வீட்டின் தரைதளம் முழுவதும் பெரிய பெரிய கருப்புநிற கருங்கற்கள் பதிக்கப்பட்டு தரையில் நம் முகம் தெரியுமளவிற்கு வழவழவென்று பாலீஷ் செய்யப்பட்டிருந்தது,

நான்கு பக்கமும் ஏராளமான அறைகள் கொண்ட இந்த வீட்டில் தற்சமயம் வசிப்பது சத்யனும் அவன் அம்மா பஞ்சவர்ணமும் தான்,, இந்த இருவருக்கும் எட்டு வேலைக்காரர்கள்.. பின்னால் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் வேலை செய்ய நான்கு ஆண்களும்... தோட்டக்காரன் ஒருவன்.. சமையலுக்கு சின்னம்மாள், மற்ற வேலைகளுக்கு இரண்டு பெண்கள், என்று மொத்தம் எட்டு ஊழியர்கள்... வீட்டின் செல்வச்செழிப்பு ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது

அந்த வீட்டில் வெகு காலமாக சமையல் செய்யும் சின்னம்மாள் கையில் காபி டம்ளரோடு வந்து பணிவுடன் நீட்ட ... அதை வாங்கிய சத்யன் “ அம்மா எங்க சின்னம்மா?” என்று கேட்டான்

“ நாளைக்கு அறுப்புக்கு ஆள் சொல்ல போயிருக்காங்க தம்பி” என்றுவிட்டு சமையல நோக்கி திரும்பியவள் மறுபடியும் வந்து தயங்கி தயங்கி “ தம்பி ரெண்டு நாளா நீஙக சரியா சாப்பிடாததால பெரியம்மாவும சரியா சாப்பிடலை தம்பி... இன்னிக்கு ராவைக்காவது அம்மாவை சாப்பிட வைஙக தம்பி” என்று கலங்கிய கண்களுடன் கூறிவிட்டு “ எப்படியிருந்த குடும்பம் நாலு நாளைக்குள்ள இப்படியாருச்சே... எந்த பாவி கண்ணு பட்டுச்சோ” என்று போகிறபோக்கில் சொல்லியபடி முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டு போனாள்...

சின்னம்மாள் சொல்லிவிட்டு போய்விட்டாள்.. ஆனால் சத்யனுக்கு அதன்பிறகு காபி தொண்டையில் இறங்க மறுத்தது, எப்படியிருந்த குடும்பம்? ஆமாம் எப்படியிருந்த குடும்பம்தான்,, இன்று அத்தனை மரியாதையையும் இழந்து கடைசியாக இருக்கும் கொஞ்சநஞ்ச மானமும் இன்னும் இரண்டு நாட்களில் ஏலம் போய்விடும்,, அதன்பிறகு?

எல்லாம் என்னால்தான்.... நான் செய்த தவறு என் குடும்பத்தையே அளித்துவிடும் போலருக்கே? சத்யன் இதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சை அடைத்தது.... காபியை குடிக்காமலேயே வைத்துவிட்டு எழுந்து தனது அறைக்கு போனான்,

மிகப்பெரிய படுக்கையறை, பிரமாண்டமான தேக்குமரக் கட்டிலில், சத்யன் அந்த கட்டிலில் படுத்து பலவருடங்கள் ஆகிவிட்டது,, அவனது தூக்கம் மிக சொற்பமான நேரம்தான், அதுவும் வெளியே வராண்டாவில் கிடக்கும் கயிற்று கட்டிலில் தான்,, பணக்காரத்தனம் இல்லாத எளிமையான கைத்தறி வேட்டியும் காட்டன் சட்டையும் தான் அவனது உடைகள்,


தனது உடைகள் இருந்த அலமாரியை திறந்தான்,, இரண்டு நாட்களுக்கு முன்பு முதன்மை வேலைக்காரன், நீண்டநாள் உண்மை ஊழியன் ராமையா ஒரு லெதர் பேக்கில் சத்யனது உடைகளை எடுத்து வைத்து, அதை இவனிடம் கொடுத்து “ ஐயா கொஞ்ச நாளைக்கு எங்கயாவது போய் தலைமறைவா இருங்கய்யா” என்று காலில் விழுந்து கதறியது ஞாபகத்தில் வந்து மறுபடியும் சத்யனின் நெஞ்சை அடைத்தது...

அந்த பையை அலமாரியில் வீசிவிட்டு கட்டிலில் வந்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்,, இரண்டே நாட்களில் அவனை உருக்குலைத்த இந்த பிரச்சனைக்கு முடிவுதான் என்ன? அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை...

இதுவரை எத்தனையோ துன்பங்கள் வந்தபோதெல்லாம் மரணத்தைப் பற்றி யோசிக்காதவன் “ நிம்மதியாய் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டால் என்ன?” என்று யோசித்தான்.. ஆனால் அதன்பிறகு இவனுக்காகவே உயிர்வாழும் எனது அம்மாவின் கதி?

சத்யன் பலவாறாக யோசித்து குழம்பிக்கொண்டிருக்கும் போது.. மூடியிருந்த கதவுக்கு வெளியே ராமையாவின் குரல் பதட்டமாக அழைத்தது “ சின்னய்யா இருக்கீங்களா?”.குரல் நடுங்கியது .

ராமையாவின் பதட்டம் வித்தியாசமாக இருக்க சத்யன் அவசரமாக கதவை திறந்து வெளியே வந்து “ என்ன ராமையா?” என்றான்

“ தம்பி நம்ம பெரிய வைக்கோல் படப்பு நாலாபக்கமும் தீ பிடிச்சு எரியுதுங்க, ஆளுக தீயை அணைச்சு பார்த்தாக முடியலை, அதான் ஓடியாந்தேன்ங்க ” என்றவர் சொல்லி முடித்துவிட்டு துண்டை எடுத்து வாயைப்பொத்திக் கொண்டு கண்கலங்கினார்...

இது ஒரு இடியா என்று யோசித்த சத்யன் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து தனது புல்லட்டில் அமர்ந்து வயலுக்கு வண்டியை விரட்டினான்...

அவன் போய் சேர்வதற்குள் நாற்பது மாடுகளின் உணவும் தீக்கிரையாக்கியிருந்தது, சுற்றிலும் இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததில் இரண்டு செமை வைக்கோல்தான் மிஞ்சியது.. காற்றில் சாம்பலாய் பறந்த தனது உழைப்பை கண்டு சத்யனின் வயிறு கலங்கியது...
அவனுக்குப் பின்னாலேயே ஓடிவந்த பஞ்சவர்ணத்தம்மாள் எரிந்துபோன வைக்கோல் போரைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு “ அடப்பாவிகளா வாயில்லா ஜீவனுங்க வயித்துல அடிச்சிட்டானுங்களே.. நல்லாருப்பாங்களா?” என்று கத்தி கதறினார்..

சத்யன் திரும்பி தனக்குப் பின்னால் நின்ற ராமையாவை கூர்மையுடன் பார்க்க ... அவர் தலையை குனிந்துகொண்டு “ பொழுதுசாய நம்ம மீனாம்மா பசங்க தானுங்க இந்த பக்கமா வந்தாங்களாம் நம்ம செவலமுத்து பார்த்திருக்கான்” என்றார் மெல்லிய குரலில்..

“ அய்யோ என் வயிறு எரியுதே... பத்தவச்ச பாவிக குலம் விளங்குமா....” என்று மண்ணை வாரி காற்றில் தூற்றியபடி கூச்சலிட்ட தாயின் வாயைப் பொத்திய சத்யன் “ ஆத்தா உன் வாயால இந்த மாதிரி சொல்லாத.. பத்தவச்சது உன் பேரனுங்க தானாம்” என்ற சத்யன் விரக்தியுடன் பக்கத்தில் இருந்த நெற்களத்தின் சிமிண்ட் மேடையில் அமர்ந்தான்

சத்யன் அருகே வந்து அமர்ந்த ஊர் பெரியவர் ஒருவர் “ ஏலே சத்தி இது அநியாயம்... நேத்து கரும்பு ஏத்திக்கிட்டுப் போன டிராக்டருக்கு தெரிஞ்சே நெருப்பு வச்சானுங்க, யாரு செஞ்ச புண்ணியமோ டிரைவரு எகிறி குதிச்சிட்டான்,, இன்னிக்கு வாயில்லா ஜீவனுங்க தீனியை அழிச்சிட்டானுங்க,, ஊரு சனம் வந்து தீயை அணைக்கலைன்னா நாளைக்கு அறுவடையாகுற நெல் பயிரெல்லாம் தீயில நாசமாயிருக்கும்” நாங்க இத சும்மா விடுற மாதிரி இல்ல, மணியத்துக்கிட்ட சொல்லி அவனுகளை கூப்பிட்டு விசாரிக்களாம் வாப்பா ” என்று அழைத்தார்


கண்களில் தேங்கிய அளவற்ற சோகத்துடன் அவரை நிமிர்ந்துப் பார்த்த சத்யன் “ என்னன்னு விசாரிக்கிறது சித்தப்பு.. தப்பு செஞ்சவன் அனுபவிச்சே ஆகனும்... இப்போ அனுபவிக்கிறேன்.. என்னோட ஒரு நிமிஷ சபலத்துக்கு நான் இன்னும் நிறைய அனுபவிக்கனும் சித்தப்பு ” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்துகொண்டான்

“ என்னலே சத்தி திரும்ப திரும்ப இதையே சொல்லிகிட்டு?... என்னமோ ஊரு உலகத்துல நடக்காதது மாதிரி?.... அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாத பய எல்லாம் அஞ்சாறு கூத்தியா வச்சிக்கிட்டு அலையறான்,, நீ பெரிய மிராசு மகன்டா” என்று அவர் முடிக்கும்முன்..

அவரை தீயாய் விழித்த சத்யன் “ சித்தப்பு எத்தனை கூத்தியா வச்சிருந்தாலும் அவனெல்லாம் வெளியதான் வச்சுருப்பான்,, சொந்த வீட்டுலயே கைவைக்க மாட்டான் சித்தப்பு,, நான் அழியனும் சித்தப்பு.. இருந்த இடம் தெரியாம பூண்டோட அழியனும் ” என்று கர்ஜித்தவனைக் கண்டு எதுவும் பேசமுடியாமல் தலைகுனிந்தார் பெரியவர்...

ராமையா கக்கத்தில் இடுக்கிய துண்டோடு அவனெதிரே வந்து அமைதியாய் நின்றார்,, சத்யனுக்கு அவர் அமைதியின் பொருள் விளங்கியது... கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்துபோனது,, நாற்பது மாடுகளுக்கு அடுத்தவேளை உணவுக்கு தேடவேண்டும்..

அமைதியாய் நான்குநாள் தாடியுடன் இருந்த தாடையை சொரிந்த சத்யன் “ அண்ணே நம்ம ரத்தினச்செட்டியார் வயலு நேத்துதான் அறுவடையாச்சு... நான் சொன்னேன்னு பத்து தரை வைக்கோல் செமை உருட்டச் சொல்லுங்க, நாமா அறுவடை முடிச்சதும் குடுத்துரலாம், நான் அவருக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன்,, நீங்க ஆளுகளை கூட்டிக்கிட்டு சின்ன டிராக்டர எடுத்துக்கிட்டு போங்க” என்று கூறிவிட்டு எழுந்தவன்.. “ சித்தப்பு வாங்க உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன்” என்று முன்னால் போனான் ..

எரிந்துபோன போரின் அருகில் அமர்ந்து இன்னும் அழுதுகொண்டிருந்தார பஞ்சவர்ணம்... ஆனால் சாபமிடவில்லை.. நெருப்பை மூட்டியது பேரன்கள் ஆச்சே..

சத்யன் தாயருகே தயங்கி நின்றான்... எப்போதும் அவனுக்கு அம்மாவிடம் எதையாவது பேசவேண்டும்.. அல்லது கேட்கவேண்டும்... அப்படிப்பட்டவன் இந்த நான்கு நாட்களும் தாயின் முகத்தைப் பார்க்க கூசி பேச்சற்று நிற்கிறான்..
அவனை நிமிர்ந்துப் பார்த்த தாயின் கண்களில் இருந்த குற்றச்சாட்டு சத்யனின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.. வேண்டாம்மா என்பதுபோல் கண்களால் யாசித்தான் சத்யன் ..

எழுந்த பஞ்சவர்ணம் தனது கண்டாங்கிச் சேலையின் முந்தானையை உதறி தனது வலது தோளில் போட்டுக்கொண்டு வரப்பில் விடுவிடுவென நடந்தார்.. அந்த முதிய வயதிலும் தனது கம்பீரத்தை தொலைக்காமல் அந்த ஊரின் மகாராணியாக வலம் வந்தவர் இன்று மகனுக்காக தனது மானம் மரியாதை அத்தனையையும் இழந்து தலைகுனிந்து நடக்கிறார்..
சத்யன் தனது பைக்கை உதைத்து கிளப்ப.. பின்னால் வந்து அமர்ந்தார் பெரியவர்..

“ சத்தி பஞ்சாயத்து குடுத்த கெடு நாளையோட முடியுது, பொழுதுசாய அஞ்சு மணிக்கு பஞ்சாயத்தை கூட்டனும்னு தலைவரு சொல்லிகிட்டு இருந்தாரு,, இந்த பயலுக பஞ்சாயத்துல இன்னும் என்ன கலாட்டா பண்ணப் போறாங்களோ தெரியலையே... ஆனாக்க அவனுக எத சொன்னாலும் நீ வாய தொறக்காத சத்தி.. ஊர் பெரியவக நாங்கப் பார்த்துக்கிறோம்.. இன்னிக்கு காலையில மணியம் கூட டீக்கடையில இதத்தான் சொன்னாரு.. அவனுக அப்படி என்னாதான் பண்றானுகன்னு பார்த்துப்புடலாம்டா சத்தி” என்று பின்னால் அமர்ந்து அவர்பாட்டுக்கு பேசிக்கொண்டே வர.. பாதி வார்த்தைகள் காற்றில் கரைந்தாலும் மீதி வார்த்தைகள் சத்யனின் நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது




பெரியவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போன சத்யன் கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்திருந்த அம்மாவின் காலடியில் போய் அமர்ந்தான் ..

‘ என்னடா பாவி?’ என்பதுபோல் அவனைப்பார்த்த அம்மாவின் கால்களை கண்ணீருடன்ப் பற்றிய சத்யன் “ குடும்ப மானத்தையே கொலைச்சுப்புட்டேன், அப்பாருக்கு இருந்த மரியாதை கௌரவம் எல்லாம் என்னால போச்சு,, திங்கிற சோத்துல வெசத்த வச்சு என்னை கொன்னுடு ஆத்தா... நாளைக்கு பஞ்சாயத்துல நின்னுட்டு நான் உயிரோட இருக்குறதவிட உன் கையால செத்துப் போறேன்” என்ற தாயின் கால்களை தன் கண்ணீரால் கழுவியபடி சத்யன் கதறியதும்...

பஞ்சவர்ணத்தின் சர்வாங்கமும் ஒடுங்கிப் போனது.. அய்யோ இவனைப் பெற எத்தனை கோயில் ஏறி எறங்குனேன், எம் மவனைப் போல சத்தியவான் உலகத்துலயே இல்லேன்னு இறுமாப்புல இருந்தேனே.. என் நெனப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டானே, என்று நெஞ்சு கொதித்தாலும்... அய்யோ தவமா தவமிருந்து பெத்த என் மகனை நானே கொல்லனுமா என்று பெற்ற வயிறு குலுங்கியது

“ ஏலேய் என் மவனே” என்று மகனின் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு “ வேனாம்டா மவனே சாவுறேன்னு சொல்லாத அப்பு.. என் ஈரக்குலை நடுங்குதே” என்று கதறிவிட்டாள்

சமையலறையில் இருந்து இவர்களை கவனித்த சின்னம்மா.. முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு வேகமாக இவர்களை நெருங்கி “ தம்பி நீங்க சொல்றது கொஞ்சங்கூட சரியில்ல... இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இந்த வார்த்தை சொல்றீக... முறையிருக்கு கைய வச்சிட்டீக.. இப்ப அதையே பேசுனா எப்புடி தம்பி.. இத்தனை காலமா நீங்க எப்படியிருந்தவருன்னு இந்த ஊருக்கே தெரியும்.. பஞ்சாயத்துல எவனும் உங்களை ஒரு வார்த்தை சொல்லமுடியாது, இப்புடி நீங்களும் அழுது, ஆத்தாலையும் அழ வச்சு ஊட்டையே எலவு ஊடு மாதிரி ஆக்கிப்புட்டீகளே,..தப்பே பண்ணாம இருக்க நீங்க என்ன சாமியா? மனுசன் தானய்யா? நான் தப்பு பண்ணிட்டேனேன்னு கலங்கி நிக்காம பழைய தைரியத்தோட பஞ்சாயத்துல போய் நெஞ்சை நிமித்திக்கிட்டு நில்லுங்க தம்பி என்னதான் நடக்குதுன்னு பாப்போம்” என்று குரலை உயர்த்தி சத்யனை அதட்டியவள்...

பஞ்சவர்ணத்தின் பக்கம் திரும்பி “ ஆத்தா உனக்கும் இப்ப சொல்றது தான்.... சின்னய்யா அப்படியென்ன கொல குத்தம் பண்ணிட்டாரு... அவருபோல கட்டுப்பாடா வாழ்ந்தவன் இந்த ஊருல இருக்கானா? ஏதோ சபலத்துல பண்ணிப்புட்டாரு, விட்டுத்தள்ளுடா மவனே ஆத்தா நான் உன்கூட இருக்கேன்னு தைரியம் சொல்லாம... ஊருக்கே ராசாவாட்டம் இருந்த புள்ளைய இப்புடி அழ வக்கிறீகளே ஆத்தா,, நானாருந்தா என் மவன் கொலையேப் பண்ணிட்டு வந்தாலும் மறைச்சு வக்கைத்தான் பாப்பேன்... உம் மவன மட்டும் மனசுல வச்சு யோசனை பண்ணிப்பாருங்க ஆத்தா, இந்த உலகமே தூசியாத் தெரியும் ” என்று சூடாக சொன்னவள் “ இப்ப நீங்க ரெண்டுபேரும் எந்துருச்சு சாப்பிட வர்றீகளா இல்லையா?” என்று அதட்டிவிட்டு போனாள்...

அவள் வார்த்தையில் சத்யன் தெளிவடைந்தானோ இல்லையோ, பஞ்சவர்ணம் மனதில் நிறைய தெளிவு வந்தது, தவமிருந்து பெத்த புள்ளைய கலங்க வச்சுட்டு அப்படியென்ன கவுரவமும் மரியாதையும் வேண்டிக்கெடக்கு, எனக்கு என் புள்ளைதான் முக்கியம் என்று நெஞ்சுறுதி வந்தது.. ஆனாலும் இவன் உன் புள்ளை சரிதான்,, இவனுக்கு எதிராக போர்க்களத்தில் நிற்கும் எதிராளி யார்? என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் கலங்கித்தான் போனது பஞ்சவர்ணத்தின் நெஞ்சம்..

மனதைத் தேற்றிக்கொண்டு மகனை எழுப்பியவர் “ வா ராசு சாப்புடலாம்” என்று சத்யனை சிறு குழந்தைபோல் அழைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி போனார்..


அந்த தாயின் கையால் இட்ட அன்னம் நான்கு நாட்களுக்குப் பிறகு சத்யனின் வயிற்றை நிறைத்தது, சத்யன் சாப்பிட்டதும் எழுந்துவிடாமல் தன் அம்மாவை சாப்பிட வைத்தப் பிறகுதான் வெளியே வந்தான்...

வைக்கோல் வண்டி வந்து சேர்ந்ததும் வேலையாட்களுடன் இவனும் சேர்ந்து எல்லாவற்றையும் மாட்டுக் கொட்டகையில் கொண்டு போய் போட்டுவிட்டு,, வெளி வராண்டாவில் இருந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டுக்கொண்டு படுத்தான்..

காலையிலிருந்து உழைத்த களைப்பு அவன் கண்களை தழுவவில்லை,, நாளைய பஞ்சாயத்து எப்படியிருக்கும் என்ற சிந்தனை ஓட்டம் அவன் தூக்கத்தை தூரவிரட்டியது.. இவன் போய் பஞ்சாயத்து பேசிய காலம் போய் இப்போது இவனே மற்றவர்கள் முன்பு கைகட்டி நிற்கவேண்டிய நிலையை எண்ணி வேதனையில் குமுறினான்..

சத்யனின் நினைவுகள் சந்தோஷத்துடன் இருந்த காலத்தை எண்ணி பின்னோக்கி போனது

தேனி மாவட்டம் சின்னமனூர் மிராசு ... ஆள்வார் அய்யனார், பஞ்சவர்ணம் இருவருக்கும் தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் சத்யமூர்த்தி , இவனுக்கு எட்டுவயது மூத்தவள் அக்கா மீனாள்... இவர்கள் இருவருக்கும் பிறகு பிள்ளைகள் இல்லாமல் போக.. மீனா இளவரசியாகவும்.. சத்யன் அந்த வீட்டின் ஒற்றை இளவரசனாக வளர்ந்தான்..

பஞ்சவர்ணம்,, அந்தகால மகாராணிகள் அந்தபுரங்களில் இருந்துகொண்டு இப்படித்தான் நாட்டை ஆண்டிருப்பார்களோ என்று எண்ணும்படியான தோற்றம்,, ஐந்தேமுக்கால் அடி உயரத்தில்.. ஒரு ஆணைப்போல நிமிர்வுடன் வீட்டை ஆள்பவர்... ஆள்வாருக்கு அதிக உழைப்பின்றி இன்றுவரை தன் தலையில் அனைத்தையும் சுமக்கும் அற்புதமான பெண்மணி

சத்யனுக்கு அம்மாவைவிட அக்கா மீனாவின் மீதுதான் உயிர்.. இவனுக்கு பதினோரு வயதாக இருக்கும்போது மீனாவுக்கு திருமணம் நடந்தது, மாப்பிள்ளை அதே ஊரில் இவர்களை விட சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன் .. மகளை பிரிந்து இருக்கமுடியாத காரணத்தால் உள்ளூரிலேயே நல்லவன் ஒருவனைத் தேடி மகளுக்கு மணமுடித்தார் ஆள்வார்

மாப்பிள்ளை தர்மலிங்கத்தின் கத்தையான மீசைப் பார்த்து மீனாளை விட சத்யன்தான் பயந்துபோய் அக்காவை அந்தாளுக்கு கல்யாணம் பண்ணாதீங்க என்று கத்தி ஆர்பாட்டம் செய்தான், அவனை சமாதானப்படுத்த மணவறையில் இருந்த மீனாவே எழுந்து வரவேண்டிய நிலை....

திருமணம் முடிந்த நான்கு நாட்கள் வரை தம்பியை உறங்க வைத்துவிட்டுதான் கணவனின் அறைக்குள் வந்தாள் மீனா, முதலில் கேலி செய்து கோபப்பட்ட தர்மன்.. சத்யனுக்கு மீனா இன்னொரு தாய் என்பதை புரிந்துகொண்டான் பிறகு அவரும் சத்யனை அனுசரித்துக்கொண்டு அவனை தன் அன்பால் ஈர்த்தார்..
தான் எதிர்பார்த்தது போல் அல்லாமல் மாமா நல்லவராக இருக்கவும் தர்மனின் வீடு சத்யனுக்கும் புகுந்தவீடு போல் ஆனது,, அக்கா மீனா கொண்டு சென்ற சொத்துக்களோடு சத்யனும் அங்கேப் போனான்.. மீனாள்.. தர்மனுக்கு சத்யன் மூத்த மகன் போல் ஆனான்..

ஆள்வார் தன் மகள் தன் வீட்டில் இருந்தது போல் வசதியாக வாழவேண்டும் என்ற காரணத்தால் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மகள் பெயரில் எழுதிவிட்டு அடுத்த தெருவில் இருந்த இன்னொரு பெரிய வீட்டையும் மகளுக்கு கொடுத்தார்...

தர்மன் திறமையானவர், மாமனார் கொடுத்ததை வைத்துக்கொண்டு உழைத்து ஒன்றுக்கு நான்காக சொத்தை பெருக்கி ஊரில் ஆள்வாரின் சம அந்தஸ்துக்கு வந்தார்.. ஆனாலும் மாமனார் மாமியார் எதிரில் நின்றுகூட பேசமாட்டார், அவ்வளவு மரியாதை அவர்கள் மீது


மீனாவுக்கு முதல் மகன் வீரேந்திரன் பிறந்தபோது சத்யனுக்கு வயது பதிமூன்று... அடுத்த இரண்டு வருடத்திலேயே அடுத்த மகன் தேவேந்திரனை பெற்றாள் மீனா, சத்யனுக்கு பதினேழு வயதாக இருக்கும்போது தான் அந்த வீட்டின் தேவதை மான்சி பிறந்தாள்.. அவள் பிறந்ததை திருவிழாபோல கொண்டாடினார்கள்,, வெள்ளை வெளேரென்று சின்னச்சின்ன கைகால்களை ஆட்டிக்கொண்டு உருண்டை விழிகளை உருட்டியபடி சிரிக்கும் அக்கா மகள்தான் சத்யனுக்கு உலகம் என்பதுபோல் ஆனது,, பள்ளிக்கூடம் விட்டதும் தன் வீட்டுக்குப் போகாமல் நேராக அக்கா வீட்டுக்குத்தான் வருவான்...

பனிரெண்டாம் வகுப்பு முடித்து மதுரையில் ஒரு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முதலாமாண்டு சேர்ந்த ஆறாவது மாதமே அவன் படிப்பில் இடி விழுவது போல அப்பாவுக்கு பக்கவாதம் என்ற செய்தி வர.. சத்யன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வரவேண்டிய நிலை வந்தது..

ஆள்வார் இடது பக்க பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்க அந்த ஊரே கண்ணீரில் மிதந்தது.. சத்யன் வந்ததும் மகனின் கையைப்பிடித்துக் கொண்டு கலங்கிய ஆள்வார், பக்கத்தில் இருந்த மருமகனை பார்வையால் அழைத்தவர் மகனின் கையை எடுத்து அவர் கையில் வைத்து “ என் உசுரு போறதுக்குள்ள என் மகன் கல்யாணத்தை பார்க்கனும் மாப்ள ” என்று ஈனஸ்வரத்தில் முனங்கினார்

அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள், பதினெட்டு வயது பையனுக்கு கல்யாணமா என்று அனைவரும் குழம்பி தவிக்க.. தன் கணவரின் ஆசையை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று ஒரே வைராக்கியமாக நின்றார் பஞ்சவர்ணம்...

படிக்க போகிறேன் என்று மைத்துனனை “ அப்பாவுக்காகடா மாப்ள” சமாதானம் செய்து ஒருவழியாக அவனை சம்மதிக்க வைத்து பக்கத்து ஊர்களில் அவன் கம்பீரத்துக்கு ஏற்ற பெண்ணை தேடினார் தர்மன்..

இவர்களின் அவசரத்துக்கு ஏற்றார்போல் சத்யனின் கம்பீரத்துக்கும் அழகுக்கும் ஏற்றப் பெண் எங்கும் கிடைக்கவில்லை,, தர்மன் சத்யனின் திருமணத்தை நடத்துவது தன் கடமையாக செயல்பட்டார்.. இறுதியாக கோவையிலிருந்தாள் சத்யனின் மனைவியாக ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்ட சொர்ணாம்பிகை , ஒரே வாரத்தில் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு மறாவது வாரமே திருமணம் செய்வது என முடிவானது...

ஆள்வாரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாது அப்படியே கிடக்க,, நிச்சயிக்கப்பட்ட நாளில் சத்யன் சொர்ணாம்பிகை இருவரின் திருமணமும் பெரியவர்களின் ஆசியுடன் நடந்தேறியது..

தாலி கட்டும்வரை தன் மனைவியாகப் போகிறவள் எப்படியிருக்கிறாள் என்றுகூட நிமிர்ந்து பார்க்கவில்லை,, தன் படிப்பு வீனானது ஒருபுறம், அப்பாவின் உடல்நிலை மறுபுறம் என அவன் நெஞ்சை வாட்டி வதைக்க,, பொம்மை கல்யாணம் போல் நடந்தேறியது சத்யனின் திருமணம்..

ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆள்வாரின் அறைக்குள் நுழைந்தனர் மணமக்கள்.. கண்கள் குளமாக மகனையும் மருமகளையும் ஆசிர்வதித்தவர் மகனை திருமணக்கோலத்தில் பார்த்ததே போதும் என்ற நிறைவுடன் அன்று இரவே தனது உயிரை எமன் கையில் ஒப்படைத்தார் ஆள்வார்...


திருமண இரவில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் சத்யனுக்கு தகப்பனின் மரணம் இடிபோல் விழ அதிலிருந்து அவன் மீண்டு தன் மனைவியைப் பார்க்கவே சத்யனுக்கு ஒரு மாதம் ஆனது,

ஆள்வார் இறந்து முப்பது நாட்கள் கழித்துதான் சத்யன் சொர்ணா இருவரும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்,, முதல்முறையாக மனதில் எந்த குழப்பமும் இன்றி மனைவியை ஏறிட்டவனுக்குள் அவளது அழகும் அமைதியும் பெரிதும் கவர்ந்தது...

இவனைவிட இரண்டு வயதே சிறியவள் என்றாலும் சத்யனுக்குப் பொருத்தமின்றி ரொம்பவே பூஞ்சையாக இருந்தாள் சொர்ணா.. அவன் உயரத்துக்கும் கம்பீரத்துக்கும் தான் ஏற்றவள் இல்லை என்ற குற்றவுணர்வோடு அவனை தனக்குள் அனுமதித்தவள்,, சத்யன் காட்டிய அன்பிலும் மென்மையிலும் கவரப்பட்டு அவனே உலகம் என்று ஆனாள்

அவர்களின் அழகான உறவுக்கு பரிசாக அழகான பெண் குழந்தை பிறந்தது,, ஆனால் அந்த ஒரு குழந்தையை சுமந்ததிலேயே சொர்ணாவின் கருப்பை பலகீனமாகிவிட உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டிய நிலை,,

தன் குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற துக்கத்தை மனதுக்குள் போட்டு புதைத்த பஞ்சவர்ணம், மருமகளை மகளாக கனிவுடன் கவனித்தார்...
காதலை உணரவேண்டிய தருணத்தில் சத்யனின் வாழ்க்கை ஆஸ்பத்திரி மருந்து மாத்திரை என்றானது, அடிக்கடி நோய்வாய்ப்பட்ட மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதும்.. அப்பா விட்டுவிட்டுப் போன கடமைகளை செய்யவுமே நேரம் சரியாக இருந்தது,, சிறுவயதிலேயே நிறைய வாழ்க்கை அனுபவங்களை பெற்றான்

சத்யனின் மகள் சிவாத்மிகா. தன் தாயைப்போல் அமைதியும் அழகும் ஒன்றாய் நிறைந்தவள்... அவள் மட்டும்தான் சத்யனின் சந்தோஷம்.. விவசாய வேலை தேங்காய் எண்ணை ஆலையில் ரைஸ்மில் இவற்றில் வேலை இல்லாத நேரங்களில் மகளைத் தூக்கிக்கொண்டு அக்காவின் வீட்டுக்குப் போய்விடுவான்...



சொர்ணா முடிந்தவரைக்கும் சத்யனுக்கு மனைவியாக இருந்து அவன் தாபத்தை ஓரளவு குறைத்தாள்,, அவர்களின் தாம்பத்யம் ஓகோவென்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நடந்தது.. தனக்கொரு மகன் இல்லையே என்ற வருத்தம் மனைவியை பாதிக்காதவாறு மிகவும் கவனமாக இருந்தான் சத்யன்

ஆனால் தன் கணவனுக்கு ஒரு ஆண் வாரிசை தரமுடியவில்லையே என்ற ஏக்கம் சொர்ணாவை நாளுக்குநாள் உருக்கியது,, ஒருநாள் உறவு முடிந்த இரவில் “ நம்ம குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்றவளை சத்யன் முறைத்த முறைப்பில் பயந்துபோய் அத்தோடு அந்த பேச்சை விட்டுவிட்டாள் சொர்ணா..

இவர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அழகாக வளர்ந்தாள் சிவாத்மிகா... மகள் பத்தாம் வகுப்பு போகும்போது சொர்ணா உடல் நலிந்து படுக்கையில் விழுந்தாள்.. அன்று பதினெட்டு வயதில் சத்யனுக்கு ஏற்ப்பட்ட அதேநிலை இன்று அவன் மகளுக்கு பதினைந்தாவது வயதில் ஏற்ப்பட்டது,,

சொர்ணா தனக்கு மரணம் சம்பவிக்கும் முன் மகளின் திருமணத்தை பார்க்கவேண்டும் என்று சத்யனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர்விட,, தன்னுடன் பதினாறு வருடங்கள் வாழ்ந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மவுனமாக தலையசைத்தான் சத்யன்,, 


No comments:

Post a Comment