Monday, November 16, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 26

அரவிந்தன் சத்யன் பிரச்சனையை மறந்தான் “ என்னப் பண்ணுவேனா? அடுத்த முறை மாமியார் வீட்டுக்குப் போகும்போது மறக்காம என் வீட்டுல எலிப்பொறியை எடுத்துட்டுப் போகப் போறேன்” என்று அவன் உடல்வாகுக்கு சற்று அதிகமாகவே கர்ஜித்தான், சத்யனின் கோபமெல்லாம் இப்போது அரவிந்தனுக்கு ஏறியிருந்தது

“ விடுடா மாமனாரைப் பத்தி பேசினாலே இப்படி டென்ஷன் ஆகுற” என்று சத்யன் சமாதானம் செய்யவேண்டிய நிலையில் அரவிந்தன் இருந்தான்,, ஆனால் அவனை சமாதானம் செய்ய சத்யனுக்கு எந்த சட்னி சாம்பார் மேட்டரும் தேவைப்படவில்லை



ஒருவழியாக கொஞ்சம் இலகுவான மனதுடன் படுத்து எழுந்த சத்யனுக்கு, காலையில் கீழே வந்து மான்சியைப் பார்த்ததும் அவள் சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வர, கூடவே கடுமையும் வந்தது,

யாருக்கோ கல்யாணம் என்பதுபோல் அலட்சியமாக இருந்தவனை மூர்த்தியின் கடுமையான அதட்டல்கள் கொஞ்சம் நேர்ப்படுத்தியது, சாந்தியும் தன் பங்கிற்கு மவுனமாக சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டாள்,

சற்றுநேரத்தில் துரையும் ரமாவும் தங்கள் பிள்ளைகளுடன் வந்தனர், அழுதழுது வீங்கிய மான்சியின் முகத்தை ஏதேதோ ஒப்பனைகள் செய்து பட்டுப்புடவை கட்டி மணப்பெண்ணாக தயார் செய்தார்கள்..

இதெல்லாம் வேண்டாம் என்று முரண்டிய சத்யனை ஒருவாரு சமாளித்து பட்டுவேட்டி சட்டையை உடுத்திக்கொள்ள வைத்தனர் ராமுவும் அரவிந்தனும்..
மூர்த்தியும் துரையும் முன்னாலேயே போய் திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும் என்று பைக்கில் போய்விட்டனர்...

கொஞ்ச நேரத்தில் ராமுவின் அப்பா அம்மாவும், மற்றொரு ஆட்டோவில் அரவிந்தனின் அம்மாவும் வந்து சேர்ந்தனர், வீடு சோகத்தை மறந்து கல்யாணம் களைகட்ட ஆரம்பித்தது

ராமு ஏற்பாடு செய்திருந்த வேன் வந்ததும் அனைவரும் ஏறி வேனில் அமர சத்யன் மான்சியின் அருகில் அமர மறுத்து கதிரவனை மடியில் வைத்துக்கொண்டு தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டான்
மான்சி மன்னிப்பை வேண்டி பார்க்கும் போதெல்லாம் அவன் முகம் உணர்ச்சியற்று எங்கோ வெறித்தது, மான்சிக்குத்தான் பாவம் கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது

வேன் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அடைந்தபோது அங்கே எல்லாம் தயாராக இருக்க, உடனே சத்யனும் மான்சியும் அக்னியின் முன்பு உட்கார வைக்கப்பட்டு, திருமண மந்திரங்களை ஐயர் சொல்ல இருவரும் திருப்பி சொன்னார்கள்,
அனைத்து சம்பிரதாயங்களும் மறையாக நடந்தேறிய பின் மூர்த்தியும் சாந்தியும் தாலியை எடுத்துக் கொடுக்க சத்யன் மான்சியின் முகத்தை பார்க்காமலேயே கழுத்தில் கட்டினான்,

மூர்த்தி சாந்தி ஆசிர்வாதம் செய்தபின், ராமுவின் பெற்றோர் மற்றும் அரவிந்தனின் அம்மா காலில் விழுந்து கும்பிட்டனர் மணமக்கள், பின்னர் துரை ரமா தம்பதிகளின் காலில் விழுந்தனர், பிறகு மான்சி மட்டும் அரவிந்தன் அனுசுயா காலிலும், ராமு பாக்யா வின் காலிலும் விழுந்து கும்பிட, அரவிந்தன் நெகிழ்ந்து போய் மனதார ஆசிர்வதித்தான்

பிறகு எல்லோரும் கோட்டைக்கு எதிர்ப் புறம் இருந்த ஹோட்டலில் எல்லோருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்தார் மூர்த்தி, சத்யன் அருகில் மான்சி அமர்ந்திருந்தாலும் அவளைத் திரும்பியும் பார்க்காமல், தன் இலையில் இருந்த கேசரியை விரலால் தொட்டு மடியில் இருந்த மகன் வாயில் வைத்தபடி தன் கவனத்தை தன் இலையிலேயே வைத்திருந்தான் சத்யன்,

சத்யன் மான்சி இருவரின் திருமணம் அமைதியாகவும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடும், அருமையான உணவுடனும் முடிந்தது...


மான்சியின் ஆசைப்படி கழுத்தில் நிறைந்த பொன் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியுடன் அழகுப் பதுமையாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள், எல்லோரும் அவளிடம் புதிதாய் மிளிர்ந்த லக்ஷ்மிகரத்தை அழகை அதிசயமாக பார்த்து ரசித்தார்கள், ஆனால் ரசிக்க வேண்டியவனின் பாராமுகம் அவளை உள்ளுக்குள் உருக்கியது

எல்லோரும் வீட்டுக்கு வந்து மணமக்களை விட்டுவிட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினார்கள், அனுசுயா அரவிந்த மட்டும் இரவு கிளம்புகிறோம் என்றுகூறிவிட்டு அங்கேயே இருந்தார்கள்

திருமணம் இனிதாக முடிந்தாலும், சத்யன் மான்சியின் ஒதுக்கம் அனைவரின் உற்சாகத்தையும் குறைத்தது, மகனிடம் சாந்தி செய்த சமாதானங்கள் எடுபடவில்லை, அம்மாவின் வாதத்தை சத்யன் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை தனது மவுனத்தையே அம்மாவுக்கு பதிலாக தந்தான்
அன்று இரவு மான்சியை தயார் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே அனுசுயா மான்சிக்கு தலைவாரிப் பின்னலிட.. எட்டு மணிக்கே சாந்தியை சாப்பாடு போடச்சொல்லி சாப்பிட்டுவிட்டு வேகமாக படுக்கையறைக்குள் நுழைந்து தனது படுக்கையை சுருட்டி எடுத்துக்கொண்டு அதே வேகத்தில் வெளியே வந்து மாடிக்குப் போனான்...

சாந்தி கவலையுடன் மூர்த்தியைப் பார்க்க, மூர்த்தி அரவிந்தனைப் பார்த்தார், அரவிந்தன் தலையசைத்து விட்டு மாடிக்குப் போனான்,, அங்கே சத்யன் பாயை விரித்து தலையணையில் கவிழ்ந்திருந்தான்...

அரவிந்தன் அவன் அருகில் போய் அமர்ந்து தோளில் கைவைத்து “ என்ன சத்யா இப்படி நடந்துக்குற, அம்மாவும் அப்பாவும் ரொம்ப மனசு சங்கடப்படுறாங்கடா” என்று வருத்தப்பட்டான்,

நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்த சத்யன் “ அரவிந்தா நீயாவது என் மனசை புரிஞ்சுக்கடா, எனக்கு இப்போ மான்சி மேல கோபம் இல்ல, அதேசமயம் ஆசையும் இல்லை, என்னிக்கு அவ சொன்ன வார்த்தைகள் ஜீரணமாகி, அதை என் மனசு பக்குவமா ஏத்துக்குதோ அன்னிக்குத்தான் அவளைத் தொடுவேன், அதுவரைக்கும் நான் இங்கே அவ அங்கே தான், எல்லாரும் அவளை முறையோடு ஏத்துக்கிற மாதிரி கல்யாணம் முடிஞ்சதோட உங்க கடமை முடிஞ்சது, இதுக்கு மேல என் மனசு சரியாகி நான் கீழப் போய்ப் படுக்குறது என்னோட இஷ்டம், தயவுசெஞ்சு என்னை வற்புறுத்தாதடா” என்று சத்யன் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான்...

கொஞ்சநேரம் அமர்ந்திருந்த அரவிந்தன் சத்யன் பிடிவாதக்காரன் என்று புரிந்துகொண்டு எழுந்து கீழே வந்தான், மூர்த்தியிடம் சத்யன் கூறியவற்றை சொல்லிவிட்டு அமைதியாக நின்றான்,, மூர்த்திக்கும் ஒன்றும் புரியாமல் நின்றார், வளர்ந்தபிள்ளையிடம் இதற்கு மேல் இதைப்பற்றி பேசவும் முடியாது, வற்புறுத்தவும் முடியாது என்று அவருக்குத் தெரியும், அவனாக காலப்போக்கில் மனமாறி மான்சியுடன் இணைவான் என்பதைத்தவிர வேறென்ன செய்யமுடியும் என்று எண்ணினார்...

அப்போது அறைக்குள் இருந்து வெளியே வந்த மான்சி “ அண்ணா அவர் மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, இதுக்குமேல யாரும் இதைப்பற்றி பேசி அவர் மனசை கஷ்டப்படுத்த வேண்டாம், நேரமாச்சு நீ அண்ணியை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பு” என்று உறுதியான குரலில் கூற...

அரவிந்தன் மனசே இல்லாமல் மனைவியுடன் வீட்டுக்கு கிளம்பினான்,, வீட்டுக்குப் போனதும் ராமுவுக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறினான்..

“ மாப்ள நீங்க கவலையேப் படாதீங்க, இப்படித்தான் செய்வான்னு எனக்கு தெரியும் அதான் நானும் பாக்யாவும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணிருக்கோம், ஆனா அதை சரியா பிளான் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன், எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க எல்லாத்தையும் பிளான் பண்ணிர்றேன் ” என்று ராமு உற்சாகமாக கூறினான்


சரியென்று கூறிவிட்டு போனை வைத்த அரவிந்தன் “ உன் அண்ணன் சத்யன் மான்சியை சேர்த்து வைக்க ஏதோ பிளான் பண்ணிருக்கான். என்னன்னு இன்னும் ரெண்டு நாள்ல சொல்றானாம், அதுவரைக்கும் வெயிட் பண்ணலாம்” என்று அனுசுயாவிடம் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தான்,

அடுத்த இரண்டு நாளும் எந்த மாற்றமும் இன்றி போனது, சத்யன் லீவு முடிந்து வேலைக்கு கிளம்பிவிட்டான், ஆனால் வேண்டுமென்றே இரவு டியூட்டி கேட்டு வாங்கிக்கொண்டான், அதிகாலையில் வந்தால் ஹாலின் ஒரு மூலையில் படுத்துவிட்டு பத்து மணிவாக்கில் எழுந்து குளித்து யாரையும் கேட்காமல் அவனே சமையலறையில் சென்று சாப்பாடு போட்டு சாப்பிட்டு விட்டு வெளியே எங்காவது கிளம்பி போய்விட்டு மதியம்தான் வருவான்

மான்சியைப் பார்க்கக்கூடாது என்பதற்காக அல்ல இந்த ஏற்பாடு ,, அவளைப் பார்ப்பதால் ஏற்ப்படும் தவிப்புகளுக்கு அவனே போட்டுக்கொண்ட திரை,, இந்த சிலநாட்களில் பன்மடங்காக கூடிப்போன மான்சியின் அழகு அவனை அடிக்கடி திரும்பிப்பார்க்க வைத்தது, அந்த சங்கு கழுத்தில் வேறு எந்த நகையும் இல்லாமல் வெறும் மஞ்சள் கயிறு மட்டும் இருக்க, மஞ்சள் பூசி குளித்து, வகிட்டிலும் புருவ மத்தியிலும் குங்குமம் வைத்து, லூசாக பின்னிய கூந்தலில் பூவைத்து அவள் வளைய வரும் அழகு எங்கே அவனை வீழ்த்திவிடுமோ என்று பயந்தான் ஆனால் எவ்வளவு தான் மனம் தளர்ந்தாலும், மான்சி சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்தி மனதை கடினப்படுத்திக்கொண்டான்..

இரண்டு நாள் முடிந்து மூன்றாவது நாள் மாலை சத்யன் டியூட்டிக்கு கிளம்பும்முன் வீட்டுக்கு வந்தனர் ராமு,.. அரவிந்தன் தம்பதிகள்,
மான்சியிடம் நலம் விசாரித்துவிட்டு சத்யனிடம் வந்த ராமு “ மச்சான் நானும் பாக்யாவும் ஊட்டிக்கு ஹனிமூன் போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம், மாப்ளகிட்ட விஷயத்தை சொன்னதும் அவரும் அனுசுயாவும் கூட வர்றேன்னு சொல்லிருக்கார், அப்புறம்தான் நீங்களும் புது கல்யாண ஜோடி தான சரி போறது போறோம மூனு ஜோடியா போகலாம்னு உங்களை கேட்காம எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்” என்று சொன்னதும்

உடனே பதட்டமான சத்யன் “ இல்ல இல்ல நாங்க வரலை நீங்க மட்டும் போய்ட்டு வாங்க எனக்கு லீவு கிடைக்காது” என்று உறுதியாக மறுத்தான் சத்யன்

முன்னால் வந்த அரவிந்தன் “ அதெல்லாம் லீவுக்கு துரை அண்ணே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார், நீ கிளம்புற வழியப்பாரு” என்று அதட்டினான்..

“ வரமுடியாது அரவிந்தா.. என்னை வற்புறுத்தாதீங்க” என்று கடுமையாக சத்யன் கூற...

“ அப்போ நாங்களும் போகலை,, உங்க தங்கச்சி ஆசைப்பட்டுச்சேன்னு தான் ஏற்பாடு பண்ணேன், இப்போ எல்லாத்தையும் கேன்சல் பண்ணிர்றோம்” என்று ராமு சோகமாக சொல்ல.. பாக்யா வந்து சத்யன் கையைப் பற்றிக்கொண்டு “ அண்ணா அவர் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டார்,, எனக்காக வர்றேன்னு சொல்லுண்ணா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள், விட்டால் அழுதுவிடுவாள் போல் இருந்தது

சத்யன் தர்மசங்கடத்துடன் தடுமாறியபடி “ குழந்தைக்கு குளிர் ஆகாது பாகி, நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்றான்

அங்கே வந்த சாந்தி “ குழந்தை எங்க உங்ககூட வரப்போறான், ஏற்கனவே அவன் பால் புட்டில பால் குடிக்க ஆரம்பிச்சுட்டான், அதனால அவனை நான் பார்த்துக்கிறேன், நீயும் மான்சியும் மட்டும் இவங்க கூட கிளம்புங்க” என்றாள் அதிகாரமாக

இதைகேட்ட மான்சி அமைதியா நின்றிருக்க, சத்யனோ “ அதெல்லாம் கதிர் இல்லாம நான் போகமாட்டேன்” என்று பிடிவாதம் செய்தான்




“ ஏன்டா மூனு பிள்ளை பெத்து வளர்த்தவளுக்கு என் பேரனை வளர்க்கத் தெரியாதா? நீ கிளம்பு நான் கதிரை பார்த்துக்கிறேன் ” என்றவள் அதற்கு மேல் உன்னிடம் பேச்சில்லை என்பதுபோல் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள் சாந்தி
சத்யன் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றிருக்க,, ராமு அவன் கையைப் பற்றி “ சரி மச்சான் நாலுநாளைக்கு டவேரா கார் ஏற்பாடு பண்ணிருக்கேன், நாளைக்கு விடியகாலை ரெண்டு மணிக்கு இங்கேருந்து கிளம்புறோம், ஒன்பது மணிக்குள்ள ஊட்டிக்கு போயிடலாம், ரெடியா இருங்க” என்று கூற...

“ கார் புக் பண்ணா எக்கச்சக்கமா பணம் ஆகுமே, அப்பாகிட்ட பண்ம் இருக்கான்னு கேட்கிறேன்” என்று சத்யன் தடுமாறினான் ..

“ பணத்தைப் பத்தி கவலைப் படாத சத்யா, என் மாமனார் அவரு சைசுக்கு ஒரு லாக்கர் வச்சிருக்காரே, அவர் தூங்கும் போது அதை உடைக்க சொல்லி என் மச்சானுக்கு சூப்பர் ஐடியா குடுத்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு அரவிந்தன் சிரிக்க

“ அதெல்லாம் இல்லை சத்யா அனுசுயா கல்யாணத்துக்கு வச்சிருந்த பணம் நகை எல்லாத்தையும் எங்கம்மா எங்கப்பாகிட்ட கேட்டு வாங்கி மாப்பிள்ளை கிட்ட குடுத்துட்டாங்க, அதனால மொத்த ஸ்பான்ஸரும் அரவிந்த் மாப்பிள்ளையோடது, மொத்தத்துல எங்கப்பாவோட கஜானாவை காலி பண்ணிட்டோம்” என்று சொல்லிவிட்டு ராமுவும் அரவிந்தன் சிரிப்பில் சேர்ந்து கொண்டான்

ஊட்டிக்கு கிளம்பும் நாளில் சத்யன் டியூட்டிக்கு போகவில்லை, தனக்கு வேண்டிய உடைகளை தனியாக ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டான், குளிருக்கு ஒரு சால்வையும் எடுத்து வைத்துக்கொண்டான், அவனுக்கு இந்த ஊட்டி பயணத்தில் விருப்பமில்லை என்றாலும் வீட்டு மருமகனை எதிர்த்து பேச மனமின்றி அமைதியாக கிளம்பினான்,, கார் வரும்வரை கதிரை பிரிய மனசில்லாமல் அவன் நெஞ்சில் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான்
கார் வந்து நின்றதும் மான்சி தன் உடைகள் அடங்கிய பையுடன் வெளியே வந்து சத்யன் கையில் இருந்த மகனை கண்ணீருடன் பார்த்தபடி வந்து காரில் ஏறினாள், சத்யன் கதிரவனை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு “ குழந்தை பத்திரம்பா” என்றுவிட்டு நகர்ந்தவனை தடுத்த மூர்த்தி ...

தனியாக வராண்டாவின் ஓரமாக அழைத்துச்சென்றவர் காம்பவுண்ட் மேல் சாய்ந்து வெட்டவெளியை வெறித்தவாறு “ சத்யா எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணு, மகன்கிட்ட சொல்லக்கூடாது தான், ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையில் சொல்லித்தான் ஆகனும், இதுபோல ஒரு நிலைமை பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கும் வந்துச்சு சத்யா, அந்த சமயத்துல உன் அம்மாவும் விட்டுக்கொடுக்கலை, நானும் இறங்கி வரலை, அதனாலேயே நான் குடிகாரனாகி என்னோட பத்து வருஷ தாம்பத்தியத்தையே தொலைச்சிட்டேன் சத்யா, அதுக்கப்புறம் இவ்வளவு நாள் கழிச்சு மான்சி வந்து என்னை ஆபிஸ்ல பார்த்த பிறகுதான் என் தவறையே உணர்ந்து உங்கம்மா கிட்ட மனசு விட்டு பேசி இழந்த வாழ்க்கை மறுபடியும் மீட்டேன்,

" இப்போ அதே நிலைமைதான் உனக்கும் ஆனா உங்க விஷயத்துல மான்சி இறங்கி வந்துட்டா, நீ இன்னும் பிடிவாதமா இருக்க, அவ நம்ம பாக்யாவைவிட சின்னப் பொண்ணுடா.. எல்லோரையும் போல வாழனும்ங்கிற ஆர்வத்தில் ஏதோ பேசிட்டா, நீ அதை மறந்து அவளை ஏத்துக்கணும் சத்யா,, இந்த பயணம் உன் மனசுல மாற்றத்தை உண்டு பண்ணும்னு நெனைக்கிறேன், புரிஞ்சு நடந்துக்கடா, வாழவேண்டிய வயசுல வாழ்க்கையை வீணாக்கிடாதே ” என்று அவர் சொல்ல... சத்யன் அமைதியாக நின்றிருந்தான்


“ என்ன பேசி முடிச்சாச்சா? நேரமாச்சு கிளம்புடா ” என்றபடி பின்னால் அரவிந்தனின் குரல் கேட்க, அப்பா மகன் இருவரும் கலைந்து நகர்ந்தனர்,,
சத்யன் “ சரிப்பா நான் கெளம்புறேன்” என்று காரை நோக்கிப் போக..

“ கொஞ்சம் இருடா நைனாகிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசிட்டு வர்றேன்” என்ற மூர்த்தி பக்கம் திரும்பிய அரவிந்தன் “ யப்பா ஆளுங்க யாருமில்லை நீங்கபாட்டுக்கு கொழந்தையை கவனிக்காம, அவனுக்கு புதுசா சித்தப்பாவோ அத்தையோ ரெடி பண்ற வேலையில எறங்கிடாதீங்க, ஜாக்கிரதை ஆமா” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து சற்று நகர்ந்து நின்றுகொண்டான் ..

அரவிந்தன் சொன்னதன் அர்த்தம் மூர்த்திக்கு புரிய சிலநிமிடங்கள் ஆனது, ஆனால் சத்யனுக்குப் புரிந்துவிட்டது “ அடப்பாவி இவரு அப்பாடா” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு...

“ அப்பாதான், ஆனா குழந்தை பெத்துகுறதுல நம்மகூட போட்டிக்கு வந்துட்டாருன்னா என்னப் பண்றது” என்று அரவிந்தன் மறுபடியும் தெளிவாக நக்கல் செய்ய.. இப்போது மூர்த்திக்கும் தெளிவாக புரிந்தது “ டேய்.....” என்றபடி அரவிந்தனை துரத்த ... அவன் ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டான் ..

அங்கே காரில் இருந்த மான்சிக்கு ரகசியமாக ஏதோ காதில் சொல்லிகொண்டு இருந்த சாந்தி “ என்ன அரவிந்தா அப்பா எதுக்கு உன்னை அடிக்க வர்றாரு? ” என்று கேட்க..

பின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அரவிந்தன் “ ம்... நைனாகிட்ட முக்கியமான விஷயம் சொல்லிருக்கேன்.. நீங்களும் அதை கேட்டு பாளோப் பண்ணுங்க” என்றான்

சாந்தி நிமிர்ந்து “ அரவிந்தன் என்னங்க சொன்னான்?” என்று மூர்த்தியிடம் கேட்டாள்...

கோபமா கூச்சமா என்று தெரியவில்லை முகம் ஒரு மாதிரி ஆகிவிட “ ம் சொன்னான் உசுரு கோழிக்கு மசுரு புடுங்க சொல்லி” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு “ ஏய் நீ மொதல்ல நகருடி அவங்க கிளம்பட்டும்” என்றார் ..

இதையெல்லாம் கேட்ட சத்யனுக்கு சிரிப்பு தாங்கவில்லை, மனம்விட்டு சிரித்தவனைப் பார்த்து கண்கலங்கினாள் மான்சி, அவன் சிரிப்பதைப் பார்த்து நான்கு நாட்களாகிவிட்டதே

சத்யன் காரில் ஏறி அமர்ந்ததும் அருண் ஓடி வந்து ஸ்னாக்ஸ் அடங்கிய பையை கொடுத்துவிட்டு “ அண்ணா அண்ணி, பெஸ்ட் ஆப் லக்” என்றான் ..

கார் கிளம்பியதும் வெளியே தலையை நீட்டிய அரவிந்தன் “ கவலைப்படாதே அருண் இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல நீயும் ஹனிமூன் போவ, அப்போ உன்கூட அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு போலாம்டா” என்று சத்தம் போட்டு சொல்ல...

“ டேய் நீ போய்ட்டு இங்கதான வரனும் அப்ப பேசிக்கிறேன்”என்று சிரித்தபடி எச்சரிக்கை செய்தார் மூர்த்தி...

கார் ஈரோடு அவினாசி வழியாக மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து குன்னூர் சென்றது, அதிகாலை நேரம் என்பதால் யாரும் அதிகம் பேசாமல் உறங்கியபடி வந்தனர், அரவிந்தன் டிரைவர் அருகேயுள்ள சீட்டில் அமர்ந்து கொள்ள, அடுத்த இருக்கையில் அனுசுயா மான்சி சத்யன் மூவரும், பின் இருக்கையில் ராமுவும் பாக்யாவும் அமர்ந்திருந்தனர்,

அனுசுயா ஜன்னல் கண்ணாடியை ஏற்றிவிட்டு அதில் சாய்ந்தபடி தூங்கிக்கொண்டு வர, மான்சி சத்யன் அருகில் அமர்ந்து தூங்கமுடியாமல் தவித்தாள், தூங்கினாள் எங்கே சத்யன் மீது சாய்ந்து அவன் முறைத்துக்கொள் வானோ என்ற பயம், ஆனால் வண்டி அவினாசியை நெருங்கும் போது மான்சியின் கட்டுப்பாடு தொலைந்துவிட, தூங்கி விழ ஆரம்பித்தாள், சற்றுநேரம் அமைதியாக வந்த சத்யன் பிறகு சற்று சரிந்து அமர்ந்து அவள் தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டான் 


கார் குன்னூர் சென்றதும் காரை ஓரங்கட்டி இறங்கி பல் விலக்கி முகம் கழுவிட்டு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர், மறுபடியும் காரில் கிளம்பி வெலிங்டனை அடுத்து அரவங்காடு போகும் வழியில் ஒரு கிளைச் சாலையில் இருந்தது ராமு புக் செய்திருந்த காட்டேஜ், சுற்றிலும் தோட்டமும் நடுவில் வீடும் என்று அழகாக இருந்தது, வீடு போர்ச்சுகீசிய கட்டிடம் போல் இருந்தது

ராமு காரிலிருந்து இறங்கி ஒரு கவரை வாட்ச்மேனிடம் கொடுத்ததும் பிரித்து படித்துவிட்டு கேட்டை திறந்து விட்டார், காரை பார்க் செய்துவிட்டு இறங்கி உள்ளே போனார்கள், நடுவே வட்டவடிவ ஹாலும் அதைச்சுற்றிலும் அறைகள் இருந்தது, மூன்று மாஸ்டர் பெட்ரூம்களும் ஒரு கிச்சன் அதை ஒட்டி ஒரு டைனிங் ஹால் என்று வீடு அழகாக சுத்தமாக இருந்தது, அரவிந்தன் நான்கு நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் வாங்கி வந்திருந்ததால் அவற்றை காரிலிருந்து எடுத்துச்சென்று சமையலறையில் வைத்தான், கிச்சனில் சமையலுக்கு தேவையான அத்தனைப் பொருட்களும் இருந்தன,

சிறிதுநேரம் எல்லோரும் அவரவர் அறைகளில் போய் ஓய்வெடுக்க, சத்யன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான், பிறகு என்ன நினைத்தானோ தனியாக நின்றிருந்த மான்சியை நெருங்கி அவள் பேக்கை எடுத்துக்கொண்டு “ வா” என்றுவிட்டு உள்ளே போனான்
அந்த ஒருவார்த்தை போதும் என்பதுபோல் அவனுடைய செல்ல நாய்க்குட்டியைப் போல் அவன் பின்னால் போனாள் மான்சி,

அறைக்குள் பையை வைத்த சத்யன் அங்கிருந்த பாத்ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளேப் போய்விட, மான்சி பைகளை அங்கிருந்த ஷெல்பில் வைத்துவிட்டு அயர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள், இந்த நான்கு நாட்களும் சத்யனுடன் இந்த அறைக்குள் வாழப்போகும் வாழ்க்கை அவளுக்கு கேள்விக்குறியாகவே இருந்தது...

பாத்ரூமிலிருந்து வந்தவன், அங்கிருந்த திவானில் படுத்துக்கொண்டு “ நீ கட்டில்ல படுத்துக்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சமையல் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு திவானின் மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்...
ஐந்து நாட்களுக்குப் பிறகு பேசும் முதல் வார்த்தை... “ சரிங்க” என்றவள் உற்சாகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு பாத்ரூமுக்குள் போனாள்..

அதன்பின் பணிரெண்டு மணிக்கு எழுந்து மதிய உணவை தயார் செய்து சுடச்சுட சாப்பிட்டுவிட்டு அனைவரும் சுற்றிப்பார்க்க கிளம்பினர், இன்று மதியமாகிவிட்டதால் நாளைக்கு தொட்டபெட்டா போகலாம் என்று முடிவு செய்து அருகிலிருந்த அவலாஞ்சி நீர்தேக்கம் செல்லலாம் என்று முடிவு செய்தனர்

திரும்பி வர மாலை ஆகிவிடும் என்பதால் எல்லோரும் ஆளுக்கொரு சால்வையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள், சத்யன் சால்வை வைத்திருந்தான், ஆனால் கவனமின்றி கிளம்பிய மான்சி அன்றாடம் உடுத்தும் உடைகளைத் தவிர வேறு எதுவும் எடுத்து வரவில்லை,

அதை கவனித்த அனுசுயா உள்ளே போக அவள் பின்னால் ஓடிய அரவிந்தன் “ ஏய் அனு எங்கப் போற” என்று தடுத்தான்

“ இல்லங்க மான்சிக்கு சால்வையில்லை, நான் இன்னொன்று எடுத்துட்டு வந்திருக்கேன் அதை எடுத்துட்டு வந்து குடுக்கலாம்னு ரூமுக்குப் போறேன்” என்றாள்..

“ அடிக் கிறுக்குப்பய மவளே நாங்க போட்ட பிளானை கெடுத்துடுவ போலருக்கே?” என்று தலையிலடித்துக்கொண்டவன்... “ ஏய் மான்சிகிட்ட இ்ல்லேன்னா என்ன அதான் சத்யன் வச்சிருக்கான்ல, இதோப்பாரு அனு இங்கருந்து கிளம்புற வரைக்கும் மான்சியை கண்டுக்கவே கண்டுக்காத, நீ என்கூடவேதான் இருக்கனும், நாம அடிக்கிற கொட்டத்துல பய பொண்டாட்டியைத் தேடி ஓடனும்” என்று அரவிந்தன் சொன்னதும்...

“ ஓ நீ அப்படி வர்றீங்களா?” என்று ஆச்சர்யத்துடன் கூவியவளை.. “ நான் எப்படியும் வரலை, உன்கூட கார்லதான் வரப்போறேன் வா ” என்று அவள் கையைப் பிடித்து தள்ளிக்கொண்டு காருக்குப் போனான் போனான்...

அரவிந்தனின் கணக்கு பொய்க்கவில்லை,, மணி நான்கை நெருங்கும் போதே மான்சி முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொள்ள, அவளை சங்கடமாகப் பார்த்தபடி சால்வையால் தன்னை மூடிக்கொண்டான் சத்யன், ராமு பாக்யாவின் இடுப்பில் கைப்போட்டு சுற்றி வளைத்துக்கொண்டு நின்றபடி நீர்நிலையை வேடிக்கைப் பார்க்க, அரவிந்தனோ ஒரு படி மேலேபோய் அனுசுயாவின் தோளில் கைப்போட்டு அணைத்துக்கொண்டு பார்த்தான்,

மலைமகளின் அருகாமையும் மயக்கும் மலர்களின் வாசனையும் மயங்கிவரும் மாலைப் பொழுதும், உடலுக்கு இதமான குளிரும் மான்சியை ஒருவித மோனநிலைக்குத் தள்ள. ஒரு இடத்தில் அமர்ந்து காலைக்கட்டிக் கொண்டு விழிகள் வியப்பில் விரிய கைகளை முட்டியில் ஊன்றி, உள்ளங்கையில் தாடையை வைத்துக்கொண்டு நீர்தேக்கத்தை ரசித்தாள்

சத்யன் மான்சிக்கு சற்று தள்ளி அமர்ந்தான், அந்த சூழல் அவன் மனதையும் மயக்கியிருந்தது, அதைவிட அழகே அழகை ரசிக்கும் அந்த அழகான காட்சி இன்னும் அதிகமாக மயக்கியது, நீரை ஒருமுறை பார்த்தான் என்றால் மான்சியை பலமுறை திரும்பி பார்த்தான்...

சற்று தொலைவில் அனுவை அணைத்திருந்த அரவிந்தனின் நெருக்கம் அதிகமாக இருந்தது, அதற்கு மறுபுரம், ராமு பாக்யாவின் இடுப்பில் இருந்த கை தோளுக்கு மாறியிருக்க, ராமுவின் மீது பாதி சரிந்த நிலையில் பாக்யா இருந்தாள்... அவர்கள் மட்டுமில்லை நிறைய ஜோடிகள் தங்களை மறந்து நின்றிருந்தனர்....



எதற்கோ பார்வைத் திருப்பிய மான்சி அவர்களைப் பார்த்துவிட்டு சங்கடமாக பார்வையைத் திருப்ப இந்தபக்கம் சத்யனை தன்னையே பார்ப்பதை பார்த்துவிட்டாள், அடுத்த நிமிடம் கன்னங்களில் சிவப்பேற சட்டென்று தலைகவிழ்ந்தாள்..

தன்னை கண்டுகொண்டாளே என்று ரோஷத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டான் சத்யன்,

நீரின் மேல் பரப்பில் ஏதோ பெயர் தெரியாத பறவைகள் நீரில் பட்டென்று இறங்கி மீனை கொத்திக்கொண்டு உடனே மேலெழும்பி பறந்தன, இருவரும் எழுந்து நீரின் அருகே சென்று ஆளுக்கொரு பக்கமாக நின்றிருந்தனர்,

தண்ணீருக்கு அருகில் வந்தது குளிர் முதுகுத்தண்டில் ஏறியதும் மான்சி புடவையை இழுத்து இன்னும் இறுக்கினாள், அவளைத் திரும்பிப் பார்த்து சத்யன் சிலவிநாடிகள் கழித்து சால்வையை விரித்து அவளைப்பார்த்து வாவென்று தலையசைத்தான், மான்சி மெல்ல மெல்ல அடியெடுத்து அவனருகில் சென்று நிற்க சத்யன் சால்வையின் ஒரு பகுதியை அவளை மீது சுற்றினான்,

இருவரின் உடல்களும் உரசிக்கொள்ளும் இடைவெளி இருந்தாலும், உரசாமலேயே மிதமான சூடு ஏறியது இருவருக்கும், அமைதி அமைதி எங்கும் அமைதி, 



No comments:

Post a Comment