Wednesday, November 4, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 12

“ வயித்துல குழந்தையோட புருஷனை இழந்து ஆஸ்பத்திரியில ஒத்தையில நின்னயாமே? அய்யோ அப்போ எனக்குத் தெரியாம போச்சே? தெரிஞ்சிருந்தா உன்னைய விட்டு ஒரு நிமிஷம் கூட விலகியிருக்க மாட்டேனே? நெனைச்சுப் பார்க்கவே என் வயிறு கலங்குதே? எப்படியம்மா எல்லாத்தையும் தாங்கின? ” என்று ரமாவின் குரல் கதறலாக ஒலிக்க..

மறந்திருந்த அன்றைய நினைவுகள் மான்சியின் கண்முன் படமாக விரிய, கண்முன் அரங்கேறிய அன்றைய கொடூரங்கள் அத்தனையும் அடுத்தடுத்து ஞாபகத்திற்கு வந்து மான்சியின் உடல் நடுங்க ரமாவின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்

மான்சியின் நினைவுகளை கிளறிவிட்டு விட்டோம் என்று ரமாவுக்குப் புரிய, மான்சியை தன் தோளில் சாய்த்து அணைத்து “ எல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டேனா மான்சி? என்னை மன்னிச்சிடும்மா” என்று முதுகைத் தடவி ஆறுதல் படுத்தினாள்



ரமாவின் முதுகில் தனது கண்ணீரை வடியவிட்ட மான்சி அவளிடமிருந்து விலகி “ எங்களை புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி அக்கா” என்று கண்ணீருடன் கூற

“ நன்றி நான்தான் உங்களுக்கு சொல்லனும், புருஷன் உயிரோட இருக்கும்போதே கண்டவனோட உறவு வச்சுக்கிற பெண்களுக்கு மத்தியில.. புருஷன் இறந்த பிறகும் மனசுல இருக்குற காதலை மறைச்சு சத்யனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு விலகிப் போன உன்னை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு மான்சி,, அதே மாதிரி பொண்டாட்டியை பக்கத்துல வச்சிக்கிட்டே அடுத்தவன் பொண்டாட்டியை ரசிக்கிற இந்த காலத்தில், ஒரு விதவையைப் பார்த்தா அவளோட உணர்வுகளை தூண்டி வைப்பாட்டியா வச்சுக்க நினைக்கும் ஆண்களுக்கு மத்தியில்,, தன்னோட காதல்தான் உசத்தின்னு அதுலயே உறுதியா நின்னு உன்னை கண்டுபிடிச்சு இங்க கொண்டு வந்துட்டு, தங்கச்சி கல்யாணமா? நீயான்னு? இரவும் பகலும் தவிக்கிறானே என் தம்பி சத்யன் அவனைப் போல ஆம்பளை எவன் இருக்கான் இந்த உலகத்துல,, எப்படி வேனும்னாலும் வாழலாம்னு நினைக்கிற உலகத்தில், குடும்ப உறவுகளுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கி வாழுற உங்களை நெனைச்சா எனக்கு கண்ணீர் தான் வருது” என்று நீண்டதொரு ஆறுதல் மொழிகளை கூறிய ரமா மான்சியின் கைகளைப் பற்றி முகம் முழுவதும் கண்ணீர் கலந்த சிரிப்புடன்

“ இன்னிக்கு நானு அவரு அரவிந்தன் மூனுபேரும் அந்த பொண்ணு அனுசுயாவைப் போய் பார்க்கப் போறோம், அவ மதியம் பணிரெண்டு மணிக்கு தையல் கிளாஸ் போவாளாம் அப்போ போய் அவகிட்ட பேசப்போறோம், அப்புறம் ஒருநாள் நானும் என் வீட்டுக்காரும் மட்டும் போய் சத்யன் வீட்டுல பேசப்போறோம், இனிமே உன் வாழ்க்கையில சோகமே கிடையாது மான்சி, சத்யனோட சந்தோஷமா நிறைவா வாழப்போற, நாங்க இருக்குற வரைக்கும் எந்த கவலையும் இல்லாம ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க” என்ற கூறியவள் கீழேயிருந்து துரை அழைப்பு வந்ததும் “ கூப்பிடுறார் போலருக்கு நான் போறேன்” என்று உற்ச்சாகமாக கீழே ஓடினாள் 

ரமாவிடம் இந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்காத மான்சி திகைப்புடன் அமர்ந்திருந்தாள், சற்றுநேரத்தில் குழந்தையின் அழுகுரல் அவளை இவ்வுலகுக்கு அழைத்து வர, ‘ தான் இன்று செய்ய வேண்டிய வேலைகள் ஞாபகத்திற்கு வர, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் கிடத்தியவள் அவசரமாக வேறு புடவைக்கு மாறி, குழந்தைகளுக்கு தேவையானவற்றை ஹேண்ட்பேக்கில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு மகனை கையில் ஏந்தி வெளியே வந்து குழந்தையை ஒரு கையால் அணைத்துக்கொண்டு மறுகையால் கதவை பூட்டிவிட்டு கீழே வந்து ரமாவின் வீட்டு கதவை தட்டினாள்

கதவை திறந்த ரமா மான்சி வெளியே புறப்பட தயாராக இருப்பதைப் பார்த்து “ என்ன மான்சி எங்க கிளம்பிட்ட? குழந்தைக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா? ” என்று பதட்டமாக கேட்க..

“ குழந்தைக்கு ஒன்னுமில்ல அக்கா, நான் வேற வேலையா வெளியப்போறேன்” என்று மான்சி சொல்லும்போதே ரமாவின் பின்னால் இருந்து வந்த துரை “ இந்த வெயில்ல குழந்தையை தூக்கிகிட்டு எங்கப்போற?” என்று கேட்டுவிட்டு மான்சியை கூர்மையுடன் பார்க்க

மான்சி தலைகுனிந்து சிறிது யோசித்துவிட்டு “ அவரோட அப்பாவைப் பார்க்க வேலூர் மாநகராட்சிக்குப் போறேன்” என்றாள்

ரமா வியப்பில் விழிகள் விரிய அப்படியே நிற்க... துரையின் முகத்திலும் குரலிலும் எந்த மாற்றமும் இன்றி “ அவரை நீ போய் பார்த்து என்னப் பண்ணப் போற?” என்று கேட்டார்

“ அவருக்காக நீங்கல்லாம் இவ்வளவு செய்யும் போது இது அத்தனைக்கும் காரணமான நான் எதுவுமே செய்யாம இருக்கமுடியலை, அதுவுமில்லாம அவர் குற்றம் சொன்னது என்னோட மானத்தை, அதனால நான்தான் அவரைப் போய் பார்க்கனும், என் தரப்பை நான்தான் எடுத்து சொல்லனும்” என்று மான்சி தீர்மானமாக சொன்னாள்

“ அவர் ஏற்கனவே குடிகாரர், நீவேற அவரைத் தேடிப் போய் ஏதாவது அசிங்கமா பேசிட்டா என்னப் பண்றது?” என்று ரமா வருத்தமாக கேட்க..

“ இல்லக்கா அவருக்கு என் வயசுல ஒரு மக இருக்கா,, அதனால என்னை கேவலமா பேசமாட்டார்” என்று மான்சி தன் தரப்பில் உறதியாக இருக்க....

“ சரி கொஞ்சம் இரு இதோ வர்றேன்” என்று உள்ளே போன துரை சற்றுநேரத்தில் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்து “ வாம்மா உன்னை ஆட்டோ பிடிச்சு ஏத்திட்டு வர்றேன்” என்று மான்சியுடன் வெளியே வந்தார்..


“ ஏங்க அவதான் சொல்றான்னா நீங்களும் அவகூட சேர்ந்துகிட்டீங்களே? எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க?” என்று ரமா அவர் பின்னோடு ஒடி வந்தாள்

திரும்பி நின்று அவளை முறைத்த துரை “ என்னடி பயம்? சத்யன் அவரு வளர்த்த புள்ளை தானே? அப்போ அவரு மட்டும் எப்படி தப்பான ஆளா இருக்க முடியும்? எந்த பொறம்போக்கு அவருகிட்ட ஏடாகூடமா போட்டு கொடுத்தானோ? அவரை மான்சி போய் பார்ப்பதுதான் சரி” என்றவர் மான்சியிடம் திரும்பி “ நீ வாம்மா போகலாம்” என்று கேட்டை திறந்துகொண்டு வெளியேப் போக மான்சி அவர் பின்னோடு போனாள்

தெருவில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் “ ஏம்பா இவங்களை குடிநீர் வடிகால் வாரியம் ஆபிஸ் வாசலில் இறக்கிவிட்டுடு” என்று கூறிவிட்டு பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை எடுத்து டிரைவரிடம் கொடுத்துவிட்டு “ மான்சி என்னோட நம்பர் உன்கிட்ட இருக்குல்ல? எதுவானாலும் எனக்கு உடனே போன் பண்ணு” என்றார்

“ சரிண்ணா” என்று தலையசைத்தவள் “ அண்ணா அவருக்கிட்ட இப்ப சொல்லவேனாம், போய் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி அவர்கிட்ட சொல்லிக்கலாம்” என்று மெல்லிய குரலில் கூறினாள்

“ சரிம்மா நான் சொல்லலை” என்று கூறி ஆட்டோவை அனுப்பி வைத்தார்
மான்சி என்னதான் தைரியமாக கிளம்பிவிட்டாலும் உள்ளுக்குள் உதைப்பாகவே இருந்தது, எடுத்த எடுப்பிலேயே தன்னை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன பண்ணுவது? என்ற குழப்பத்திலேயே மான்சி வேலூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலக வாசலில் போய் ஆட்டோவில் இறங்கினாள்

ஆட்டோ போனதும் சிறிது தடுமாற்றத்துடனேயே அலுவலகம் உள்ளே நுழைந்த மான்சி, எங்கே விசாரிப்பது என்று தேடினாள்,, கையில் குழந்தையுடன் அவள் தேடுவதை கண்டு ஒருவர் அருகில் வந்து “ கம்ப்ளைண்ட் கொடுக்கனும்னா லெப்ட் சைடுல இருக்குற கவுண்டரில் குடுங்க,, புது கனெக்ஷனுக்கு எழுதி குடுக்கனும்னா அதோ அந்த ஆபிஸ் உள்ள போய் எழுதி குடுங்க” என்று மான்சிக்கு தேவையில்லாத தகவலை சொல்ல,,

மான்சி சிறு தயக்கத்திற்குப் பிறகு “ இல்ல சார் நான் அந்த வேலையா வரலை,, எனக்கு ஒருத்தரைப் பார்க்கனும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

“ யாரைம்மா பார்க்கனும்?” என்று அந்த நபர் கேட்க

“ பெயர் மூர்த்தி, வயசு ஐம்பதுக்குள்ள இருக்கும், அவரு மகன் வேலூர் சிறையில கான்ஸ்டபிளா இருக்கார்” என்று தகவல் சொல்ல

“ ஓ நம்ம மூர்த்தி அண்ணே, அவரு இங்கதான் எங்கயாவது இருப்பாரு இரும்மா அனுப்புறேன்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட .. மான்சி குழந்தையுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள்..


சற்றுநேரத்தில் தூரத்தில் சத்யனின் சாயலில் ஒருவர் வருவதைப்பார்த்து அவர்தான் மூர்த்தி என்று சரியாக யூகித்த மான்சி அவசரமாக குழந்தையுடன் எழுந்து நின்றாள்

கைகளை ஒரு வேஸ்ட் துணியில் துடைத்தவாறு வந்த மூர்த்தி யோசனையுடன் மான்சியைப் பார்த்து “ யாரும்மா நீ? என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கேட்க

சத்யனைவிட சில அங்குலங்களே உயரம் குறைவு, அடர்த்தியான தலை கிராப்பில் கத்தை கத்தையாக நரைகள், ஜம்பதை அறுபதாக காட்டும் போதையால் ஏற்ப்பட்ட முதிர்ச்சி, ஆனால் பார்வை மட்டும் சத்யனைப் போலவே மற்றவர் மனதை துளைத்து அதில் இருப்பவற்றை வெளிக்கொணரும் கூர்மையான பார்வை,

முதலில் தடுமாறிய மான்சி, பிறகு ஒரு முடிவுடன் நிமிர்ந்து “ என்னை யாருன்னு கேட்க்கிறீங்க சரி, ஆனா யாருன்னே தெரியாதை என்னைப் பத்தி எப்படி அவ்வளவு கேவலமா உங்க மகன் கிட்ட பேசினீங்க? ” என்று மெல்லிய குரலில் ஆனால் கூர்மையாக கேட்டாள்

இலகுவாக நின்றிருந்த மூர்த்தியிடம் திடீரென ஒரு விரைப்பு வர “ நீ.................” என்று நிறுத்த...

“ நான் மான்சி,, இன்னும் கொஞ்ச நாள்ல திருமதி மான்சி சத்யன் ஆகப் போறவ ” என்று மான்சி தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அவரை நேராகப் பார்த்து சொன்னாள்




அரவிந்தன் சரியாக பதினோரு மணிக்கு துரையின் வீட்டை அடைந்தான், மாடிக்குப் போய் மான்சியைப் பார்க்காமல் துரையின் வீட்டுக்குள் நுழைந்தான், திரும்பி வந்ததும் மான்சியைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான், நேரமாகிவிட்டதால் துரையும் ரமாவும் உடனடியாக வீட்டைப் பூட்டிக்கொண்டு அவனுடன் ஆட்டோவில் கிளம்பினார்கள்,

ஆட்டோவில் போகும்போது “ அரவிந்தா மான்சி சத்யனோட அப்பாவைத் தேடி போயிருக்கா” என்று ரமா கவலையுடன் கூற..

“ என்னாது?” என்று அதிர்ச்சியுடன் அரவிந்தன் குரல் கொடுக்க..

துரை அவன் கையைப் பற்றி “ ஏன்டா இப்படி கத்துற ” என்று அதட்டிவிட்டு மான்சி சொன்ன விவரங்களையும் அரவிந்தனிடம் சொல்லி “ அவ போறதுதான் கரெக்ட் அரவிந்த்,, இதுல பயப்பட ஒன்னுமில்ல, பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்று துரை நிதானமாக கூற

மான்சி தனியாக போனது அரவிந்தனுக்கு கவலையாக இருந்தது, ஆனால் துரை சொல்வதும் சரிதான் என்றது அவன் மனம், ஏதாவது ஒரு வழியில் சத்யனின் பிரச்சனைகள் தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்தான்

ஆட்டோவை அனுசுயா வீடு இருக்கும் தெருவுக்கு ஆரம்பத்தில் மெயின் ரோட்டின் சந்திப்பில் நிறுத்தி இறங்கினார்கள்,

மணி பனிரெண்டு ஆனதும் அந்த வழியாக அனுசுயா வர முதலில் அரவிந்தன் தான் அவள் எதிரில் போய் நின்று “ வணக்கங்க,, என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்

அவனைப் பார்த்ததுமே சினேகமாக புன்னகைத்த அனுசுயா “ ம்ம் ஞாபகம் இருக்கு அன்னிக்கு பாக்யாவோட அண்ணன் கூட வந்தீங்களே அவருதான நீங்க” என்றாள்

“ ஆமாங்க சத்யனோட பிரண்ட் நான், என் பேரு அரவிந்தன்” என்றவன் சற்று தள்ளி நின்றிருந்த துரை, ரமாவை காட்டி “ அவர் துரை,, சத்யன் கூட ஒர்க் பண்றவர், அவங்க அவரோட ஒய்ப் ரமா , உங்களைப் பார்க்கனும்னு வந்திருக்காங்க” என்று அரவிந்தன் அவர்களை அறிமுகம் செய்ய... இருவரும் அனுசுயாவின் அருகில் வந்தனர்.

“ வணக்கம் அனுசுயா ,, நானும் சத்யனோட நண்பன்தான் உங்ககிட்ட சத்யனைப் பத்தி ஒரு முக்கியமான பேசனும்னு வந்திருக்கோம் ” என்று துரை கூறியதும் அனுசுயா அவரை யோசனையுடன் பார்த்தாள்

“ என்கிட்ட என்ன பேசனும்?” என்றாள் கேள்வியாக....


அன்று காலை மனசுக்குக் குழப்பமாக இருக்கிறது என்று சாந்தி குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு கிளம்பினாள், இரவெல்லாம் அழுத பாக்யா காலையில் சற்று சோம்பலாகவே எழுந்து சமையலறையில் இட்லி தயார் செய்துகொண்டிருக்க அம்மா இல்லை என்பதை உருதி செய்துகொண்ட அருண் மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தான்

“ என்னடா அருண் பசிக்குதா? ஸாரிடா லேட்டாயிருச்சு, ஒரு பத்து நிமிஷம் வெயிட்ப் பண்ணு ரெடியாயிடும்” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு சமையலை கவனிக்க.

அவள் பக்கத்தில் நின்று சட்னிக்கு வைத்திருந்த கடலையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு “ பாகி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்?” என்றான்
இட்லி தட்டுகளை கொப்பரைக்குள் வைத்துக்கொண்டே “ சொல்லு அருண்” என்றாள் பாக்யா

அருண் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு மறுபடியும் வந்து “ பாகி நேத்திக்கு நைட் அண்ணன் கிட்ட போன்ல பேசினேன்” என்று கூற...

அவன் பக்கம் திரும்பிய பாக்யா “ என்னடா சொல்லுச்சு அண்ணன்?, நைட்டு சாப்பிட்டாராவாம்? எங்க இருக்காராம்?” என்று ஆர்வத்துடன் கேள்விகளை அடுக்கினாள்

அருண் தன் அண்ணனிடம் போனில் பேசிய விவரங்களை ஒன்றுவிடாமல் பாக்யாவிடம் கூறினான் “ அண்ணன் அவங்களை ரொம்ப லவ் பண்றாரு பாகி,, அண்ணன் சொல்றதைப் பார்த்தா அவங்க நல்லவங்களாத்தான் தெரியுறாங்க,, அண்ணன் நம்மகிட்ட சொல்லாம மறைச்சதுக்கு காரணம் உன் கல்யாணம் நின்னு போயிடுமோன்ற பயத்துல தான் பாகி, இது தெரியாம அப்பாகிட்ட எவனோ தப்பு தப்பா போட்டு குடுத்திருக்கான், அவரும் அதை கேட்டுட்டு இங்கவந்து கலாட்டா பண்ணிட்டாரு” என்று அருண் கோபமாக சொல்ல..

“ எனக்கும் அதுதான்டா தோனுச்சு, எவனோ அப்பா கிட்ட நல்லா போட்டு குடுத்திருக்கான், நம்ம அண்ணன் அப்படியெல்லாம் கேவலமா நடந்துக்கிறவர் இல்லையேடா” என்று பாகி சொல்லவும்...

“ ஆமாம் பாகி, அண்ணன் என்கிட்ட ரொம்ப சொன்னாரு, ஏன் விதவையை கல்யாணம் பண்ணிகிட்டா என்ன தப்பு? மத்தவங்களுக்கு நடந்தா அதை ஆகா ஓகோன்னு பாராட்டுறோம் இல்லையா? அதே நம்ம வீட்டுல நடந்தா தப்பா? இந்த விஷயத்தில் நான் அண்ணன் பக்கம்தான் பாகி” என்றான் அருண்

பாக்யா அமைதியாக சமையலை கவனித்தாள், மனம் மட்டும் அண்ணனைப் பற்றியே நினைத்தது, பாக்யாவுக்கு சத்யனைப் பற்றி நன்றாக தெரியும், எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் இந்த பொண்ணுகிட்ட இவ்வளவு காதலோட இருக்காருன்னா அது அந்த பொண்ணோட உயர்வான குணத்திற்காகத்தான் இருக்கும், என்று மனதில் எண்ணமிட்டபடி அருணுக்கு இட்லி சாப்பிட வைத்து அவனை அனுப்பிவிட்டு தோட்டத்தில் இருந்த கிணற்றடியில் வந்து அமர்ந்தாள்

இந்த குடும்பத்துக்காகவே வாழ்ந்த அண்ணனின் ஒரே ஆசை அந்த பொண்ணுதான் எனும்போது அதுக்கு தடையா இருக்கிறது என்னோட கல்யாணம் தானா? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள் பாக்யா, அவளுக்கு உள்ளுக்குள் குறுகுறுத்தது, என் அண்ணனின் காதலுக்காக நான் என்ன செய்யப்போறேன்? மறுபடியும் மறுபடியும் இந்த கேள்விகளே அவள் மண்டையை குடைய ஒரு முடிவுடன் எழுந்து வீட்டுக்குள் போய் தனது அலமாரியில் துணிகளுக்கு கீழே இருந்த ராமச்சந்திரனின் போட்டோவை எடுத்து சில நிமிடங்கள் பார்த்துவிட்டு அந்த போட்டோவைத் திருப்பி அதன் பின்னால் இருந்த ராமச்சந்திரனின் நம்பருக்கு தனது மொபைலில் இருந்து கால் செய்தாள் 


இரண்டு ரிங்குகளுக்குப் பிறகு எடுத்த ராமச்சந்திரன் “ ஹலோ ராம் ஸ்பீக்கிங்” என்றான்

பாக்யாவுக்கு என்ன சொல்வது என்று உதைப்பாக இருந்தது, இந்த நம்பரை போட்டோவின் பினனால் எழுதி போன் செய்யுமாறு நிச்சயதார்த்தத்தின் போது யாரும் கவனிக்காத போது ராமச்சந்திரன் கொடுத்தது அவன் கொடுத்து இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட அவனுக்கு போன் செய்ததில்லை பாக்யா, இன்றுதான் முதல்முறையாக போன் செய்துவிட்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்துடன் நின்றிருந்தாள்

“ ஹலோ யாருங்க கால் பண்ணிட்டு பேசாம இருக்குறது?” என்று எரிச்சலாக ராமு பேச..

இதற்கு மேல் மவுனம் கைகொடுக்காது என்று புரிய “ நான் பாக்யலக்ஷ்மி பேசுறேன்” என்றாள் திக்கித்திணறி,....

எதிர்முனையில் ஒரு நீண்ட மவுனத்திற்குப் பிறகு ஒரு பெருமூச்சுடன் “ இப்பத்தான் போன் பண்ண மனசு வந்ததா?” என்று வருத்தமாக கேட்டான் ராமு..

பாக்யா அவனிடம் பேச்சை வளர்க்க மனமில்லாமல் உடனடியாக பேசிவிட முடிவு செய்து “ ஆமாம் இப்போதான் போன் பண்ணவேண்டிய அவசியம் வந்தது,, நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க, எனக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலை... என்னால என் வீட்டுல இதை சொல்ல முடியலை, அதனால தயவுசெய்து நீங்களே ஏதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க ப்ளீஸ்” என்று எங்கும் தயங்கி நிறுத்தாமல் பட்டென்று சொல்லி முடித்தாள் பாக்யலக்ஷ்மி

பாக்யாவின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஆளுக்கொருப் பக்கமாக அலைந்து திரிந்து கொண்டிருக்க, இவளாக ஒரு முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டு இருந்தாள்





“ ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

“ ரொம்ப புதுமையாக இருக்குது

“ நாலுபேரு நடவிலே

“ நூலு ஒருத்தன் கையிலே”

“ அல்லும்பகலும் அண்ணன் வாழ்ந்தான் தங்கச்சிக்காக,,

“ அந்த உள்ளம் இப்போ கல்லாய்ப் போனது தன் கட்சிக்காக,,

“ மாலையொன்று தொடுத்து வைத்தாள் மன்னனுக்காக..

“ அதை வீதியிலே விட்டெறிந்தாள் அண்ணனுக்காக...

“ ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

“ ரொம்ப புதுமையாக இருக்குது...

“ நாலுபேரு நடவிலே..

“ நூலு ஒருத்தன் கையிலே..

“ இலவுகாத்த கிள்ளைப் போல இத்தனை காலம்..

“ இந்த வஞ்சிமகள் வரைந்ததெல்லாம் தண்ணீர் கோலம்..

“ காதலெனும் பாத்திரத்தில் தேனெடுத்தானே...

“ வெறும் கௌவரவத்தின் ஆத்திரத்தால் போர் துடைத்தானே..

“ ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

“ ரொம்ப புதுமையாக இருக்குது..

“ நாலுபேரு நடவிலே...

“ நூலு ஒருத்தன் கையிலே..

“ நான்கு கிளிகள் காதல் வலையில் விழுந்தது ஏனோ?

“ இதில் ஒருவர் பாவம் மற்றவர் தலையில் விடிந்தது ஏனோ?

“ ஆகமொத்தம் விதி வரைந்த நாடகம் தானே?

“ இதில் ஆளுக்கொருப் பாத்திரத்தில் நடித்திடத் தானே?

“ ஒரு பொம்மலாட்டம் நடக்குது..

“ ரொம்ப புதுமையாக இருக்குது...

“ நாலுபேரு நடவிலே...

“ நூலு ஒருத்தன் கையிலே..


No comments:

Post a Comment