Saturday, November 21, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 5

"இடையே அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று தடவை சென்று பார்த்து வந்தேன். தனியே அழைத்து பேசியபோது'எல்லாம் நல்லபடியாக போயிட்டு இருக்கு அண்ணா' என்றாள்". 

"என்னம்மா ரொம்ப இளைச்சு போய் இருக்கியே"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லைனா. கொஞ்சம் டயட்ல இருக்கேன்."

"கண்ணுக்கு கீழே என்னம்மா ஏதோ அடிபட்ட மாதிரி இருக்கு."

"அதல்லாம் ஒண்ணும் இல்லைனா. சமைக்கும்போது எண்ணை பட்டுடுச்சு".

"அய்யயோ, என்ன ஆச்சு. வா நம்ம டாக்டர்கிட்ட போகலாம்."

"அதல்லாம் ஒண்ணும் இல்லைண்ணா. எல்லாம் சரியா போய்டும்".

'எனக்கு மனதில் பல சந்தேகங்கள். அவள் உதடுகள் பொய் சொல்லலாம், ஆனால் கண்கள் பொய் சொல்லாது'.

"என்னோட புதிய செல்போனை அவளிடம் கொடுத்து 'அவசரம்னா நீ கட்டாயம் போன் செய்யணும் சரியா?'."சரிண்ணா'சிரிக்க முயன்று தோற்றாள்.

"தொடர்ந்த ஒரு வாரம் கழித்து அந்த போன் வந்தது" ரவி குரல் நடுங்க தொடர்ந்தான்.

"ஹலோ, நான் ரவிசந்திரன். நீங்க"
........"என்ன போலிஸா, என்ன விஷயம் சொல்லுங்க சார்."
........"என்ன ஆக்சிடென்ட்டா. என்ன, காஸ் வெடிச்சுடுச்சா?"
........"ஐயோ, ஐயோ, மல்லி"



"அம்மா"

"என்னடா ஆச்சு தம்பி, எதுக்குடா இப்படி அழற". 

"அம்மா, நம்ம மல்லி, மல்லிகா..."

"சொல்லுடா, என்ன ஆச்சுடா நம்ம குழந்தைக்கு".

"அவள் வீட்டில சமைக்கும்போது காஸ் வெடிச்சு ஆபத்தான நிலைல பெரியாஸ்பதிரில சேர்த்து இருக்காங்களாம். நாம உடனே கிளம்பலாம்மா".

'என்ன செய்வது' என்று தெரியாமல் விழித்த ரவிக்கு ரகு நினைவில் வந்தான்.

போனில் ரகுவை பிடிக்க, விஷயம் அறிந்த ரகு, 
"டேய் ரவி நீ முதல்ல டாக்ஸி பிடிச்சு இங்கே வா. நானும் கூட வரேன்"

அடுத்த எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு கோவை ராமநாதபுரம் அடைந்தனர்.

வீட்டு வாசலில் இருந்த கொட்டகை, வெளியே போடப்பட்டு இருந்த சேர்கள் பல விஷயங்களை சொன்னது.

"அம்மா எனக்கு பயமா இருக்கும்மா. மல்லிக்கு ஒண்ணும் ஆகி இருக்காதில்ல"."ஒண்ணும் ஆகி இருக்காதுடா" கண்ணீரை துடைத்து கொண்டே காந்திமதி சொல்ல ரகு முன்னே செல்ல பின்னே மற்ற இருவரும் விரைந்தனர்.

உள்ளே மல்லிகா பனி பெட்டியில் வைத்து இருக்க, உடல் முழுக்க கருகி போனது போல இருந்தது.

அருகில் வாயை பொத்தி அழுத நிலையில் மாப்பிள்ளை பிரசன்னா, அருகில் அவன் அம்மா. மாமனார் கீழே உட்கார்ந்து சோகமாக இருந்தார்.

ரவிக்கு இதயமே வெடித்து விடுவது போல் இருந்தது. 
'பூமி இரண்டாக பிளந்து தன்னை உள்ளே வாங்கி கொள்ள கூடாதா'என்று நொந்து போனான்.

அழுது அழுது அவன் கண்கள், உதடுகள் உலர்ந்து போனது. அம்மா வேறு மூர்ச்சை போட்டு விழ, ரகு தாங்கி பிடித்து உள்ளே இருந்த படுக்கை அறைக்கு அழைத்து சென்றான்.


கண்களை துடைத்து கொண்டு, பிரசன்னா அருகில் வந்தான். "மச்சான், மல்லிகா எப்போ பார்த்தாலும் உங்க பெயரை தான் சொல்லிட்டே இருப்பா. இன்னைக்கு வேலைசெய்யும்போது காஸ் சிலிண்டர் சரியா க்ளோஸ் பண்ணாம இருந்துருக்கு. அதை கவனிக்காம தீக்குச்சி எடுத்து கொளுத்தி இருக்கா, காஸ் சிலிண்டர் வெடிச்சுடுச்சு. அவள் ஒரு நல்ல மனைவியா மட்டும் இல்லை, எங்க அம்மா அப்பாவுக்கு நல்ல மகளாவும் இருந்தா.சரி ரவி, போலிஸ் வேற விசாரணைக்கு வந்து எல்லாம் விசாரிச்சாங்க. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சு போச்சு.ரொம்ப நேரம் வச்சு இருக்க முடியாது."

ரவிக்கு புரிந்தது. இன்னும் தாமதித்தால் சரி வராது என்று உணர்ந்து "சரி மாப்பிள்ளை உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க".

தகனம் முடித்து ஆண்கள் எல்லாரும் திரும்பி வந்து குளித்து விட்டு, உள்ளே வந்து உட்கார்ந்து இருந்தனர். 

அம்மா உள்ளே இருந்த ரூமில் சென்று பேசி கொண்டு இருந்தான்.ரவிக்கு ஒரே நாளில் பத்து வயது ஏறியது போல உணர்வு.அங்கே இருந்த டேபிளில் மேல் இருந்த செல்போனை பார்த்தான்.

மல்லிகாவுக்கு பரிசாக கொடுத்த மொபைல் போன் அது. எடுத்து பார்த்து கண் கலங்கினான்.உள்ளே ஒவ்வொன்றாக பார்க்க, அவன் போட்டோ, அம்மா போட்டோ,எல்லாம் இருக்க, அவன் மனம் 'மல்லிகா மல்லிகா' என்று அரற்றியது.உள்ளே வீடியோ பட்டனை அழுத்த, அதில் மல்லிகா பேச்சு குரல், தொடர்ந்து பிரசன்னா ,அவன் அம்மா குரல்.

"என்னடி, உன்னோட அண்ணன் தான் உன் மேல உயிரே வச்சு இருக்கான்.வீட்டை அடகு வச்சு ஒரு பத்து லட்ச ரூபாய் கொடுக்க சொல்லு. என் பையன் பிசினஸ் பண்ணட்டும்" இது மல்லிகா மாமியார் குரல்.

"மாட்டேன். என்னோட அண்ணன் என் கல்யாணத்துக்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கி இருக்கான். அதுக்கு வீட்டை அடகு வச்சுதான் கட்டி இருக்கான். நான் அவன் கிட்ட கேட்க மாட்டேன்".

"டேய் பிரசன்னா, உன் பொண்டாட்டி ரொம்ப பேசுறா. அவளை நல்லா அடிச்சு உதைடா. அப்பத்தான் அவள் சொன்ன பேச்சை கேட்பா".

தொடர்ந்து அடி விழும் சத்தம்.தொடர்ந்து மல்லிகாவின் அழுகுரல். 

பின்னாலே மல்லிகா மாமியார் குரல். "டேய் பிரசன்னா. இவ சொன்ன பேச்சை கேக்கலைனா கொளுத்து விட்டு ஆக்சிடென்ட்ன்னு சொல்லிடலாம். உனக்கு வேணும்னா ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சுடலாம்".

ரவிக்கு ரத்தம் கொதித்தது, கண்கள் சிவந்தன. என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து போனது.


"பாவிங்க இவனுங்கதான் நம்ம குழந்தையை கொளுத்தி இருப்பானுங்க, ரவி, இவங்களை விட கூடாதுடா" என்று அம்மா கதற, மீண்டும் தன் நினைவுக்கு வந்தான் ரவி.

"டேய் பிரசன்னா எங்கடா நீ" என்று கத்தி கொண்டே உள்ளே தேடிசெல்ல பிரசன்னாவை காணவில்லை. அவன் அம்மாவையும் காணவில்லை.

உள்ளே சமையல் அறைக்கு செல்ல, அது கரிபடிந்து இருக்க, அதை கண்ட ரவி மனம் கதற ஆரம்பித்தது. 

"ரவி கூப்பிட்டிங்களா" என்று பிரசன்னா குரல் பின்னால் கேட்க, சடாரென்று திரும்பினான் ரவி. 

கண்களில் பொறி பறக்க ரவியை கண்ட பிரசன்னா மனம் பதறி, 
"என்ன ரவி என்ன பிரச்சனை"

"என்னடா, நீயும் உன் அம்மாவும் சேர்ந்து திட்டம் போட்டு என் தங்கையை கொலை செஞ்சுட்டு நடிக்கிறியா.?"

தடுமாறி போன பிரசன்னா, "ரவி உளறாதே. நாங்க ஒண்ணும் பண்ணலை. உன் தங்கைதான் புரியாம ஏதோ பண்ணிட்டா"என்று குளற,

அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் ரவி. அவனை கீழே தள்ளி இரண்டு கன்னங்களில் திரும்பி திரும்பி அடித்தான். 

அவனை தள்ளி விட்டு பிரசன்னா ஓட, சுற்றும் முற்றும் பார்த்த ரவி கண்ணில் பட்டது புதியதாய் வாங்கி இருந்த அந்த அருவாள். 

எடுத்து கொண்டு துரத்த தொடங்கினான். வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த பிரசன்னா வழியில் இருந்த கல்லில் கால் பட்டு தடுமாறி விழ, அருவாளை வைத்து பிரசன்னா கழுத்தில் ஒரே இழுப்பாய் இழுக்க, கை கால் வெட்டி இழுக்க பரிதாபமாய் 
உயிர் விட்டான். 

"பிரசன்னா" என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஓடி வந்த அவன் அம்மாவை கண்டவுடன் அருவாளை எடுத்து அவளை துரத்தி வெட்டி விட்டு உயிர் துடிக்க அவள் சாவதை பார்த்து "மல்லிகா" என்று கதறி அழுதான்.

"மல்லிகா" என்று நரம்பு புடைக்க கத்தியபடி கதறி அழுத ரவியை பார்த்து மிரண்டு போனாள் அபர்ணா.


அபர்ணா பதறினாள். "ரவி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்".
"அபர்ணா இன்னைக்கு நினைச்சா கூட மல்லிகா கரிக்கட்டையா கிடந்தது என் கண் முன்னால நிக்குது". கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே தொடர்ந்தான் ரவி.

கொலை நடந்ததை தொடர்ந்து போலிஸ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள். வழக்கு ஆறு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. நீதிபதி தீர்ப்பு வழங்கும் முன் ரவியிடம் கேட்டார்.

"ரவி நீங்க கொலை செஞ்சதை நினைச்சு வருத்தபடுறீங்களா".

"சார் ஒரு மனுஷனா நான் வருத்தப்படுறேன். அதே நேரத்தில் சஹோதரனா நான் பெருமைப்படுகிறேன்."

நீதிபதி அவனை பார்த்து தலை அசைத்து விட்டு தீர்ப்பு வழங்கினார். அதுஇரட்டை கொலைக்கான பதினாலு வருட கடுங்காவல் தண்டனை.

"தம்பி, மல்லிகாவும் போய்ட்டா, நீயும் ஜெயிலுக்கு போனா இந்த வயசான காலத்தில என் கூட யாருடா இருக்கா" என்று காந்திமதி அம்மா கதறி அழுததை கண்டால் கல் மனமும் கரைந்து விடும்.

ரகு கேட்டு கொண்ட போதும் அவருக்கு மகனை விட்டு மும்பைக்கு போக விருப்பமில்லை. அதற்குள் கருணை மனுவின் அடிப்படையில் பாளையம்கோட்டை சிறைக்கு ரவி மாற்றபட்டான்.

மன உளைச்சலில் தவித்த அந்த தாய் மனது, அடுத்த இரண்டாவது வருடத்தில் உயிர் விட்டது.

அழுது அழுது கண்ணீர் வற்றி போன ரவியின் மனது மரத்து போனது. உயிர் விடலாம் என்று தற்கொலை முயற்சி செய்த போது ஜெயிலர் பரமசிவம் காப்பாற்றி, "தம்பி இந்த உயிர் ஆண்டவன் தந்தது.எப்படி பிறப்பு உங்கள் கையில் இல்லையோ அதுபோல் இறப்பும் உங்க கைல இல்லை. இனிமேலும் இந்த மாதிரி முட்டாள்தனமா முயற்சி செய்வதை விட்டு வாழ முயற்சி செய்யுங்க.நிறைய படிங்க, கதை கவிதை எழுதுங்க. மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்வு கிடைக்கும்".

அவர் சொன்ன அறிவுரைகள் ரவி மனதை பெருமளவில் மாற்றின. ஏற்கனவே எம்ஏ எகனாமிக்ஸ் படித்து இருந்த அவன்,மேலும் மூன்று எம் ஏ முடித்தான். சிறுகதைகள், கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தான்.சில பிரசுரம் ஆன போதிலும், பெரும்பாலானவை திரும்பி வந்தன.

ஒரு நாள் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் இருந்து அவனுக்கு திரும்பி வந்த கதையுடன் இருந்த மறுப்பு கடிதத்தில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் எழுதி இருந்தார்.

"ரவி உங்களோட கதையில் உணர்ச்சி கொந்தளிப்பு, சமூகத்தின் மீது வெறுப்பு எல்லாம் இருக்கு. அதை ஏன் நீங்க மாற்றி எழுத கூடாது. குறை சொல்வதற்கு பதில், தீர்வு கொடுங்க. சமூக பிரச்சனை மட்டும் இல்லாம எல்லாவற்றையும் எழுதுங்க. நான் ஆதரவு கொடுக்கிறேன். ஒரு நல்ல எழுத்தாளரான நீங்க மிக சிறந்த எழுத்தாளரா உருவெடுக்கணும். இதுதான் என்னோட விருப்பம். என்னோட போன் நம்பர் கீழே உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம்."




திரும்ப திரும்ப படித்து பார்த்த ரவி அவர் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்று உணர்ந்தான்.


'சமூகத்தை குறை சொல்லும் முன், தான் என்ன நல்லது சமூகத்துக்கு செய்தோம்' என்று நினைத்து பார்த்தான். இனிமேலாவது நம்மை மாற்றி கொள்ளலாம் என்று முடிவு செய்தான். தனது அன்பு தங்கை மல்லிகா புனைப்பெயரில் கதை எழுத தொடங்கினான். கொஞ்ச கொஞ்சமாக கவனிக்கப்படும் எழுத்தாளர் என்ற நிலை அடைந்தான்.

நன்னடத்தை காரணமாக அவனது தண்டனை காலம் குறைக்கப்பட்டு பத்து ஆண்டுகளில் வெளி வந்த போது ஜெயிலர் பரமசிவம் கொடுத்து இருந்த முகவரிகளில் சிலரை சென்று பார்த்தான்.அவனது ஜெயில் பின்னணியை அறிந்தவர்கள் அவன் திறமைக்கு ஏற்ற வேலை கொடுக்கவில்லை. சிலர் அவனுக்கு வேலை கொடுக்க பயந்தனர்.

அதற்குள் ரகு மும்பையில் இருந்து ரவியை பார்க்க ஜெயில் வந்தான். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட ரவியை தேடி அவன் சொந்த ஊரான அகஸ்தியர்பட்டி சென்றான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இரு நண்பர்களும் சந்தித்த போது மௌனமே மொழியாகி போனது.

"ஏன்டா ரவி, ஜெயில்லே இருந்து வந்த உடனே என்னை கூப்பிடனும்னு தோணலை பார்த்தியா. அந்த அளவுக்கு நான் உனக்கு மூன்றாம் மனுஷனா போயிட்டேன். அப்படிதானே".
"இல்லைடா ரகு. நீ என்னோட நண்பனா இருந்தாலும் ஒரு குடும்பத்தலைவன். மனைவி குழந்தைன்னு இருக்கிற உன்னை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் என்ன செய்வது உன்னை விட்டால் எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுடா".

நண்பனை கட்டி அணைத்து கொண்டான் ரகு.வீடு கடனில் இருந்ததால் அதை விற்று விட்டு கடனை அடைத்தார்கள்.நிலத்தையும் விற்று விட்டு கிடைத்த பணத்தில் கோவில்பட்டி செல்லும் வழியில் இருந்த வறண்ட நூறு ஏக்கர் நிலத்தை வாங்கினான் ரவி.

"ஏண்டா ரவி, செழிப்பான நிலத்தை வித்துட்டு இங்கே வந்து ஏண்டா வாங்கின. இதை செழிப்பா மாத்த பல வருஷம் ஆகுமே."

"டேய் ரகு, எனக்கு தனிமையில் இருந்தா அடிக்கடி மல்லிகா, அம்மா ஞாபகம் வருது. இந்த மாதிரி நிலத்தை மாற்ற நான் இரவு பகலா உழைக்க போறேன். அந்த கடுமையான உழைப்பில் என்னை மறக்க போறேன்".
சொன்ன மாதிரியேஒரு வருடத்தில் அதை பொன் விளையும் பூமியாக மாற்றினான் ரவி. தனது ரசனைக்கேற்ற வீட்டையும் பண்ணைக்கு நடுவில் கட்டினான்.இதற்கு இடையே கதை எழுதும் பணி தொடர்ந்தது.

அவன் மெயிலுக்கு நிறைய வாசகர்கள் அஞ்சல் அனுப்புவது வழக்கம். அப்படி இருக்கும்போது அவனுக்கு அபர்ணா என்ற பெண்ணிடம் இருந்து மெயில் வந்தது.

அபர்ணா ஒரு கணம் மூச்சு விட மறந்து அவனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.


புன் சிரிப்புடன் தொடர்ந்தான் ரவி.

"அபர்ணா நான் பெண் என்று நினைத்து எனக்கு மெயில் அனுப்புவது வழக்கம்.அவராகவே என்னை பெண் என்று கற்பனை செய்து கொள்ள, சரி நாமும் கொஞ்சம் விளையாடலாம் என்று விட்டு விட்டேன். ஒரு நாள் நான் ஆண் என்ற உண்மை தெரிந்து போக,என்னை திட்டி விட்டு மெயில் இணைப்பை துண்டித்து விட்டார்."

ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி விட்டு அபர்ணாவை பார்த்தான்.

"நீங்க தான் அந்த அபர்ணான்னு நான் நினைக்கிறேன். சரியா."

"ஆமாம். நான்தான் அந்த அபர்ணா."

"அப்படின்னா, நீங்க காலேஜ்ல படிக்கணுமே. எப்படி மும்பை போனீங்க. என்ன நடந்தது. கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா?".

"அது ஒரு பெரிய கதை. விபரமா சொல்றேன்".

"உங்களோட சண்டை போட்ட உடனே எனக்கு யாரை கண்டாலும் வெறுப்பா இருந்தது. என்னோட வெறுப்பு குறைய சில நாட்கள் ஆனது. அதற்குள் எனக்கு ப்ராஜெக்ட்டில் கலந்து கொள்ள சொல்லி கடிதம் வந்தது".

"அம்மா ஏற்கனவே சொன்னபடி கூட வந்து சென்னை கேகே நகரில் இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட் வாடகை பிடித்து என்னையும், என்னோட பாட்டியையும் தங்க வைத்து விட்டு வந்தார்கள். வார கடைசியில் நாங்க திருச்சி போவோம், இல்லைனா அம்மா எங்களை பார்க்க வருவாங்க.

நான் அமெரிக்கன் ரிமேடீஸ் செல்ல ஆரம்பித்து ஒரு வாரம் ஆனது. ஒரு நாள்.

தனது டேபிளில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்த அபர்ணாவை பியூன் ஜெனரல் மானேஜர் ராஜரத்தினம் அழைப்பதாக சொல்ல, அபர்ணா அவர் அறைக்கு சென்றான்.கதவை தட்டி அபர்ணா உள்ளே நுழைய, அங்கே ராஜரத்தினம் இருக்க, அவர் எதிரேஒரு இருபத்து எட்டு வயது மதிக்கதக்க இளைஞன் சேரில் உட்கார்ந்து இருந்தான்.

"வாங்க மிஸ் அபர்ணா. இவர்தான் ஆனந்த். உங்களோட புதிய பாஸ்".


கேள்விகுறியோடு அபர்ணா பார்க்க, "சாரி அபர்ணா, உங்களோட பழைய பாஸ் வேற கம்பனிக்கு போய்ட்டார்".


"ஆனந்த், இவங்க அபர்ணா. நம்ம கம்பனில ப்ராஜெக்ட் ட்ரைனி. நாலு மாசம் இங்கே வேலைல இருப்பாங்க. கம்பனி வேலை பார்ப்பதால ஸ்டைபண்ட் உண்டு. கூடவே ப்ராஜெக்ட்டும் செய்றாங்க. நாம அவங்க ப்ராஜெக்ட் சம்மந்தமா உதவி செய்கிறோம்."

ஆனந்த், அபர்ணாவை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.


"சரி அபர்ணா, நீங்க போங்க. நான் சார்கிட்ட பேசிட்டு வரேன்" என்று ஆனந்த் சொல்ல, தலை அசைத்து விட்டு சென்றாள்.

"என்ன சார், இந்த பொண்ணு எப்படி. நல்லா வேலை பார்ப்பாளா".

"சேர்ந்து ஒரு வாரம் தான் ஆச்சு. வேலைல சின்சியராதான் இருக்கா. போக போக தெரியும்".

"சரிங்க சார் பார்க்கலாம்" என்று தலை அசைத்து ஆனந்த் வெளியே வந்தான்.

ஆனந்த் இதற்கு முன் வேலை பார்த்தது Glaxo கம்பனியில். அங்கே வேலை செய்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சி செய்தான் என்று கம்பனி அவனை கட்டாய ராஜினாமா செய்ய சொல்லிவிட்டது. நல்ல வேளை ஜெனரல் மானேஜர் அவன் அப்பாவுக்கு தெரிந்தவர் ஆதலால் சீக்கிரம் புதிய வேலைக்கு வந்து விட்டான்.

உதட்டை நாக்கால் தடவி கொண்டான். 'அபர்ணா குட்டி சூப்பராதான் இருக்கா. எப்படியும் நாலு மாச டைம் இருக்கு.மடக்கிடலாம்'.

இதை எதுவும் அறியாமல் அபர்ணா அவள் வேலையை கவனமாக செய்து கொண்டு இருந்தாள்.
தனது செல் போன் அடிக்க யார் என்று எடுத்தாள். அழைப்பது கவிதா."என்னடி கவிதா இந்த நேரத்தில. எப்போவும் ராத்திரி தானே கூப்பிடுவே". கவிதாவுக்கு மதுரைலே ப்ராஜெக்ட் கிடைத்து விட்டதால் தோழிகள் தினமும் இரவு பேசி கொள்வது வழக்கம்.

"அபர்ணா, பிரதீப், அவன்தாண்டி உனக்கு லவ் லெட்டர் கொடுத்தானே. அவனை கூட அவங்க அப்பா அடிச்சு கூட்டி போனாரே. அவனுக்கு மன நிலை பாதிக்கப்பட்டு இருக்காம்".

"என்னடி சொல்ற உண்மையா".

"ஆமாண்டி, அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து தான் பேசுறேன். நீதான் சின்ன விஷயத்தைபெருசாக்கினே. அவனோட அப்பா அதை ஒரு மான பிரச்சனையா எடுத்துகிட்டு அவனை போட்டு எல்லார் முன்னாலயும் அவமானபடுத்திட்டார். பாவம் அவன் எப்போ பார்த்தாலும் உன் பெயர் சொல்லிதான் புலம்பிகிட்டு இருக்கான்."

அபர்ணா மனம் கனத்து போனது. 'கவிதா சொல்வதும் உண்மைதான். கொஞ்சம் மென்மையாக சொல்லி இருக்கலாம். பிரதீப் தவறாக எதுவும் செய்யவில்லை. என்ன செய்வது. நடந்ததை இனிமேல் யார் மாற்ற முடியும்'.

"சாரிடி, என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை. நான் காலேஜ் வரும்போது அவனை கட்டாயம் வந்து பார்க்கிறேன்".

போனை வைத்த அபர்ணாவுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. மனம் பிரதீப்பை நினைத்து கவலை கொண்டது.

தனது இருக்கையில் அமர்ந்த ஆனந்த், அபர்ணாவை கவனித்தான். சிறிது நேரத்துக்கு முன் தெரிந்த உற்சாகம் காணாமல் போய்இருந்தது. முகத்தில் சோகக்கோடுகள். 'என்னவென்று விசாரிக்கலாம்' என்று நினைத்து அவளை நெருங்கினான்.

"மிஸ் அபர்ணா. என்ன அப்செட் ஆன மாதிரி இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா. நான் ஹெல்ப் பண்ணலாமா?."

"இல்லை சார், ஒண்ணும் இல்லை. கொஞ்சம் பர்சனல் ப்ரோப்லம். பரவாயில்லை சமாளிச்சுக்குவேன்.நன்றி."

ஆனந்த் இவளை விட்டு பிடிக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான்.

அடுத்த சில நாட்களில் அவனுக்கு அபர்ணாவை பற்றி பல விஷயங்கள் தெரிந்து போனது. தினமும் மதியம் லஞ்ச் சாப்பிடும்போது ஆபீஸ்பாண்ட்ரியில் அவளோடு பேசி தெரிந்து கொண்டான்.தன்னை நல்லவனாக காட்டி கொள்ள நினைத்த அவன் முயற்சிகள் ஓரளவு வெற்றி தர தொடங்கியது.

ஒரு நாள்."என்ன ஆனந்த். நீங்க ஏன் சோகமா இருக்கீங்க.?"

"அபர்ணா, என்னை வீட்டில கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பெல் பண்ணுறாங்க."

சிரித்தபடி அபர்ணா, "ஏன் பண்ணிக்க வேண்டியதுதானே".



"நோ அபர்ணா. எனக்கு யாரோ ஒரு தெரியாத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கலை.என்னோட டேஸ்ட் அவளுக்கு பிடிக்கணும், அவளோட பழக்க வழக்கங்கள் எனக்கு பிடிக்கணும். அது எப்படிங்க தெரியாத ஒரு பெண்ணும் பையனும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவாங்க"

"சரி ஆனந்த், அப்படின்னா, நீங்களே ஒரு நல்ல பெண்ணை பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே".
"நல்ல பொண்ணு இருக்காங்க. ஆனால் அவங்களுக்கு என்னை பிடிக்குமான்னு தெரியலை".
"உங்களை பிடிக்காத பொண்ணு இருக்காங்களா என்ன?. யாரு அது.?" சாப்பிட்டு முடித்து விட்டு ஸ்பூனை கழுவி கொண்டே கேட்க,"நீங்க தான் அபர்ணா அந்த பொண்ணு. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா.?"

அபர்ணா முகம் கோபத்தில் சிவந்தது. "ஆனந்த், நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. இந்த மாதிரி காதல்னு சொல்லிட்டு என் கிட்ட பேச வராதீங்க".
விருட்டென்று எழுந்து வேகமாக அவள் இடத்தில் சென்று அமர்ந்தாள்.






No comments:

Post a Comment