Saturday, November 21, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 6

அடுத்த சில நாட்கள் ஆனந்த் பேச செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவனோடு சாப்பிட உட்கார்வதும் இல்லை. இந்த செய்கைகள் ஆனந்தின் ஈகோவை தாக்கி விட்டன. எப்படியாவது இவளை தன்வசப்படுத்த வேண்டும், இவளை நாசபடுத்த வேண்டும் என்ற வெறி அவன் மனதிற்குள் புகுந்தது.கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று நினைத்தான்.

அடுத்த நாள் ஆனந்த் ஆபீஸ் வரவில்லை.ஏன் வரவில்லை என்று அபர்ணாவுக்கு தெரியவில்லை. ஆனந்த் செல் நம்பர் இருந்தாலும் கூப்பிட யோசித்தாள். சரி அடுத்த நாள் பேசி கொள்ளலாம் என்று மறந்து விட்டாள்.

அடுத்த நாளும் ஆனந்த் ஆபீஸ் வரவில்லை.பதினோரு மணி அளவில் அவளுக்கு ஆனந்திடம் இருந்து போன் வந்தது.

"அபர்ணா போன் வச்சுடாதே. நான் சாக போறேன். நீ என்னை ஐ லவ் யூ சொல்லலைனா நான் விஷத்தை குடிச்சு உயிர் விட்டுடுவேன்."



பதறி போனாள் அபர்ணா.'ஏற்கனவே பிரதீப் வேறு பைத்தியமாக இருக்கிறான். இவன் வேறு தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது. ஐயோ இதை எப்படி தடுப்பது'.

"ஆனந்த், அவசரபடாதிங்க. நீங்க எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் உடனே கிளம்பி வரேன்".
"வேணாம் அபர்ணா, நீ என்னை காப்பாத்த முயற்சி செய்ற. வேணாம். நான் சாக போறேன். போனை வச்சுடுறேன்".
"வேணாம் ஆனந்த். இப்போ என்ன சொல்லணும். ஐ லவ் யூ தானே. நான் சொல்லி தொலைக்கிறேன். ஐ லவ் யூ. ப்ளீஸ் தற்கொலை பண்ணிக்காதீங்க" கதறி அழ ஆரம்பித்தாள்.

"தாங்க்ஸ் அபர்ணா கண்ணு. என் வீட்டு அட்ரஸ் தரேன் நீ வர்றியா".
யோசிக்கவே இல்லை அபர்ணா. "உடனே வரேன் ஆனந்த்".

அவளுக்கு ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வெறி.உடனே கிளம்பி சென்றாள்.

அங்கே ஆனந்த் வீட்டில் யாரும் இல்லை. கதவை அபர்ணா தட்ட திறந்து கொண்டது.உள்ளே நுழைந்த அபர்ணா, படுக்கை அறை நோக்கி நகர அங்கே ஆனந்த் லுங்கியில், கையில் ஏதோ மருந்து பாட்டில். விஷமாக இருக்க வேண்டும் என்று யூகித்த அபர்ணா,அதை வேகமாக தட்டி விட்டு, "ஆனந்த் ப்ளீஸ் தப்பா எதுவும் முடிவு எடுக்காதிங்க.அதுதான் உங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேனே."

ஆனந்த் முகத்தில் தோன்றிய வெற்றி சிரிப்பை அடக்கி கொண்டான். "அபர்ணா சத்தியமா தானே சொல்ற" கையை நீட்ட, "ஆமாம்" என்று சொல்லி கையில் சத்தியம் செய்தாள்.

"அப்படின்னா நீ உயிரா மதிக்கிற அம்மா மேல சத்தியமா சொல்லு", அபர்ணாவுக்கு தூக்கி வாரி போட்டது

"நீ சொல்லலைனா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்".
"சரி, அம்மா மேல சத்தியமா உங்களை நான் காதலிக்கிறேன்" கண்கள் கலங்கி கண்ணீர் இறங்கியது.

"அந்த ராஸ்கல் என்னை பொய்யா காதலிச்சான்னு எனக்கு தெரியாம போச்சு. நானும் ஏமாந்து போனேன். எங்க காதல் அடுத்த சில நாட்களில் வேகமாக வளர்ந்தது.

அப்போ லீவுக்காக நான் திருச்சிக்கு வந்து இருந்தேன். எனக்கு ஆனந்த் கிட்ட இருந்து போன்."

"அபர்ணா, எங்கே இருக்க".

"திருச்சில இருக்கேன் ஆனந்த். வீட்ல இருக்கேன்" குரலை தாழ்த்தி கொண்டு அபர்ணா பேச,

"வெளியே வா அபர்ணா. நான் உன் கிட்ட அவசரமா பேசணும்".

"சொல்லுங்க ஆனந்த், வீட்டு வாசலுக்கு வெளியே, வந்துட்டேன்".

"அபர்ணா நீ உடனே கிளம்பி சென்னைக்கு வா."

"என்ன ஆனந்த், திடீர்னு கூப்பிட்டா நான் எப்படி வர்றது.என்ன விஷயம் இப்படி அவசரப்படுத்துறீங்க".

யோசித்தான் ஆனந்த். "அபர்ணா நான் ஒரு சிக்கல்ல மாட்டி இருக்கேன். என்ன சொல்லியும் கேட்காமல் வீட்ல ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. நான் காதலிக்கிறத சொன்னா, அதல்லாம் இனக்கவர்ச்சி அப்படின்னு சொல்லி உன்னை கட் பண்ண சொல்லிட்டாங்க. எனக்கு மனசு வரலை. என்னோட பிரெண்ட் மும்பைல இருக்கான்.அவன்கிட்ட பேசி இருக்கேன். நாம ரெண்டு பேரும் கிளம்பி மும்பை போறோம், கல்யாணம் முடிச்சுட்டு வீட்டுக்கு சொல்றோம், அப்புறமா சென்னை வரோம். சரியா"

அபர்ணா குழம்பி போனாள். "ஆனந்த் நான் வேணும்னா எங்க அம்மா கிட்ட பேசி பார்க்கட்டுமா".

"முட்டாள்தனமா பேசாதே. ஒரு வேளை உன்னோட அம்மா இதுக்கு ஒத்துக்கலைனா, என்ன ஆகும் யோசிச்சு பாரு".

அபர்ணா யோசித்தாள், 'ஆனந்த் சொல்வது கூட சரி தான். ஒரு வேளை அம்மா ஒத்துக்கவில்லை என்றால் வீட்டிலே பூட்டி வைத்து விடுவார்கள்'.

"ஓகே ஆனந்த். இப்போ நான் என்ன பண்ணுறது".

"அபர்ணா, நமக்கு மும்பைல கொஞ்ச நாள் தங்கி இருக்கணும். வரும்போது கொஞ்சம் பணம், உன்னோட நூறு பவுன் நகைகளை தூக்கிட்டு வந்துடு. நம்ம கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாளில நான் உனக்கு இருநூறு பவுன் செஞ்சு போடுறேன்.சரியாடா கண்ணு" என்று கொஞ்ச, 'சரி' என்றாள் அபர்ணா.


இரவு ட்ரெயினில் வழக்கம்போல் சென்னை கிளம்பி சென்று ஆபீஸ் செல்வது போல கிளம்பி சென்னை ஏர்போர்ட் போய்விட்டாள். அங்கே ஆனந்த் டிக்கெட் உடன் காத்து இருக்க, அபர்ணா பிளைட்டில் அமர்ந்தாள்.

மதியம் சாப்பிட்டு விட்டு தாராவி அருகில் இருந்த அந்த பழைய மேன்ஷனுக்கு அவளை அழைத்து சென்றான் ஆனந்த்.

அந்த இடமும் அதை சுற்றி இருந்த சுற்று புறமும் அபர்ணாவுக்கு அருவெறுப்பை தர, "என்ன ஆனந்த் வேற இடம் கிடைக்கலையா".

"சாரி அபர்ணா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. பிரெண்ட் வெளியே போய்ட்டான். ராத்திரி தான் வருவான். நாம வெயிட் பண்ணலாம்."

அபர்ணா, ஆனந்த் அருகில் வந்து நிற்க அவன் மூச்சு காற்று அபர்ணா கழுத்தில் பட்டது. அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட முயல, அவனை எட்டி தள்ளினாள்.சுவற்றில் முட்டி மோதி தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தான்.

"சாரி ஆனந்த். ப்ளீஸ் புரிஞ்சுக்க. எப்படியும் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம். என் கழுத்தில தாலி கட்டும் வரை பொறுத்து இருங்க".
ஆனந்த் முகத்தில் கோபமும் ஏமாற்றமும் மாறி மாறி வந்தது."சரி அபர்ணா, உன் கைல இருக்கிற நகை பணம் எல்லாம் கொடு நான் உள்ளே பத்திரமா வைக்கிறேன்" வாங்கி கொண்டு உள்ளே இருந்த பீரோவில் வைத்து பூட்டி சாவியை பாக்கெட்டில் வைத்து கொண்டான்.

"அபர்ணா நான் நம்ம ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கி வர்றேன், நீ கதவை பூட்டிக்கோ. நான் கதவை நாலு தடவை தட்டுவேன்.அப்புறம் திறந்தா போதும். சரியா"என்று கேட்க அபர்ணா, முகத்தில் கலவரமாக தலையாட்டினாள்.

ஒரு மணி நேரம் கழித்து கதவை நாலு தடவை தட்டும் ஓசை. கதவை திறந்தாள்.

"ரவி இப்போ நினைச்சாலும் என் உடம்பு எல்லாம் நடுங்குது. வாசலில நாலு பேரு.ரௌடிங்க. 'யாரு நீங்க'ன்னு கேட்டேன்".
"உன்னை ஆனந்த் அஞ்சு லட்சத்துக்கு வித்துட்டான். நீ இப்போ காமத்திபுரா கிளம்பனும்னு சொன்னாங்க. எனக்கு அவங்க சொல்றது புரியலை. அது என்ன இடம்னு கேட்டேன்.முன்னாலஇருந்தவன் தன்னோட கறை படிந்த வாயை திறந்து தே...இருக்கிற இடம்னு சொல்லி, நடுவிரலை காண்பித்து அசிங்கமா செய்கை செஞ்சான்"அபர்ணா அழ ஆரம்பித்தாள்.

"ப்ளீஸ் அழாதே அபர்ணா. சொல்ல வேணாம்னு தோனுச்சுனா சொல்லாத".

"இல்லை ரவி நான் யாராவது ஒருத்தர் கிட்ட என்னோட கஷ்டத்தை சொல்லி அழணும்ன்னு தோணுது. என் அம்மா என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால தான் உங்க கிட்ட சொல்லி அழறேன். என்னை தடுக்காதிங்க ப்ளீஸ்."




ரவி ஒன்றும் சொல்லவில்லை, அபர்ணா தொடர்ந்தாள்."உள்ளே வந்த எல்லோரும் என் மேல கை வைக்க பார்த்தாங்க, எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம நான் தவிச்சப்போ, உள்ளே வந்த ஆனந்தை பார்த்தவுடன் எனக்கு சந்தோஷம், 'ஆனந்த் என்னை காப்பாத்துங்க'ன்னு கத்தினேன்."

"அதுக்கு ஆனந்த் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா,"

"'டேய் இன்னும் என்னடா இவளை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க. சீக்கிரம் தூக்கிட்டு போங்கடா. கன்னி பொண்ணு எத்தனை பேர் வேணா தாங்குவான்'னு சொன்னான்".

"நான் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, என் வாயில் துணியை அடைத்து அந்த நாலு பேரும் என்னை காரில் கடத்தி சென்றனர்.நான் விபசாரத்தில் ஈடுபட மாட்டேன்னு சொன்னதால அடி உதை கிடைச்சது. அவங்க கொடுத்த சாப்பாடு, தண்ணீர் எதுவும் எடுத்துக்கலை. ஏதாவது தூக்கமருந்து கலந்து இருந்தா என்ன பண்ணுறதுன்னு. ஆண்டவா என்னை காப்பத்துன்னு நான் கதறி அழுதேன். ஆண்டவன் அவனால நேர்ல வர முடியாட்டினாலும் தன்னோட பிரதிநிதியை அனுப்பி காப்பாத்துவான்னு சொல்லுவாங்க. அதே மாதிரி நீங்க வந்து என்னை காப்பாத்துனீங்க. அதுக்கு அப்புறம் நடந்தது உங்களுக்கு நல்லா தெரியும்".
பெருமூச்சொரிந்தான் ரவி. "என்னோட கஷ்டம்தான் பெருசுன்னு நினைச்சேன். உன்னோட கதையை கேட்ட பின்னே, எனக்கு வந்தது சாதாரணம் துன்பம் மாதிரி தோணுது".

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்கலங்கி பிறகு கண்களை துடைத்து கொண்டு சிரிக்க முயற்சி செய்தனர்.

"அபர்ணா உன் கிட்ட ஒண்ணு கேட்கணும். எப்படி அந்த மாதிரி ஒரு பொறுக்கிட்ட போய் மாட்டின".
சோகமாக சிரித்தாள். "என்ன சொல்றதுன்னு தெரியலை. பொதுவா பொண்ணுங்களுக்கு யார் நல்லவன், யார் கெட்டவன்னு சொல்ற அலாரம் மனசிலஇருக்கும். என்னால பிரதீப் பைத்தியம் ஆனது எனக்கு ஒரு மன உறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.அதனால ஒருவேளை ஆனந்த் தற்கொலை பண்ணிட்டா என்ன பண்ணுறதுன்னு பயத்தில அப்படி நான் நடந்துட்டேன். அந்த நேரத்தில அந்த அலாரம் ஆப் ஆய்டுசுன்னு நினைக்கிறேன்"என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

"அபர்ணா இது என்ன கொடுமை பார்த்தியா. உன்னோட நகையை பிடிங்கிட்டு விடுவான்னு பார்த்தா, அவன் உன்னையும் இப்படி வித்துட்டானே. அவன் மட்டும் என் கைல மாட்டினா சட்னி தான்."


"ரவி, வேணாம். ஏற்கனவே பத்து வருஷத்தை தொலைச்சுட்டு நிக்கிறீங்க. இன்னும் வேண்டாம்."

ரவி முகம் மாறி போனது. "சரி அபர்ணா"என்று சொல்லி விட்டு தனது பெட்ரூம் போய் விட்டான்.

"அய்யய்யோ, தப்பா பேசிட்டேன் போல இருக்கு". நாக்கை கடித்து கொண்டாள். 'பாவம் நல்ல மனுஷன்'.

கதவை மெதுவாக தட்ட. தனது பெட்ரூம் கதவை திறந்தான். கண்கள் ஈரமாகி இருந்தன.

"ரவி நீங்க அழுதீங்களா"

ரவி பதில் பேசாமல் தலை ஆட்டினான்.

'என்ன மனுஷன் இந்த ஆள். மென்மையான மனது. இவன் இரண்டு கொலை செய்து இருப்பான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்'.

கொஞ்சம் பேச்சை மாற்றலாம் என்று முடிவு செய்து, "ரவி உங்களோட கதைகள் எல்லாமே சமூக சிந்தனை சார்ந்தது.எல்லா கதைகளிலும் ஒரு தீர்வு கொடுத்து இருக்கீங்க. இருந்தாலும் உங்களோட கதைகளில் ஒரு குறை இருக்கு.என்னன்னு தெரியுமா?"

"என்ன" என்பது போல் ரவி கேள்விக்குறியோடு பார்க்க, குறும்போடு சிரித்து கொண்டே "நீங்க காதலை பற்றி எதுவும் எழுதினதே இல்லை".

ரவிக்கு புரிந்தது. "நீ சொல்றது உண்மைதான் அபர்ணா. ஒரு காதல் கதை எழுதணும்னா அதை பற்றி அனுபவம் வேண்டும் இல்லைனா பீலிங்க்ஸ் இருக்கணும்.எனக்கு இந்த ரெண்டுமே இல்லை.உனக்கு தான் ஏற்கனவே ஒரு காதல் அனுபவம் இருக்கே".

அபர்ணா குரல் தழுதழுக்க, "ரவி எனக்கு வந்தது காதல் அல்ல. ஒரு பரிதாபம். ஒரு வேளை ஆனந்த் செத்து போய்டுவானென்னு. அது நாம தெரு ஓரத்தில பார்க்கிற பிச்சைக்காரி மேல வர்ற மாதிரியான ஒரு பரிதாபம். அது காதலே கிடையாது.இப்போ எனக்கு அது தெளிவா புரியுது".

குரலில் உற்சாகத்தை வரவழைத்து கொண்டு, "ஏன் நீங்க யாரையும் லவ் பண்ணலையா"."இல்லை, நான் யாரையும் காதலிக்கிறதாவோ, கல்யாணம் செஞ்சுக்கிறதாகவோ இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்."

"ஏன் ரவி, என்ன பிரச்சனை".

"பத்து வருஷம் ஜெயில்ல போயாச்சு. இனிமே எந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்குவா.அப்படிவே வந்தாலும்,இங்கே இருக்கிற இந்த பண்ணை வீடு, சொத்துக்காக வந்தா உண்டு".


அவனை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தாள். 'வயது முப்பது மதிக்கத்தக்க தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்து உருக்கேறி இருக்கும் தேகம். இது வயது பிரச்சனை அல்ல, மனது சம்மந்தப்பட்ட பிரச்சனை' என்று அவளுக்கு புரிந்தது. 'விட்டு பிடிக்கணும். ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க்கனும்'.

"என்ன அபர்ணா சிந்தனைல ஆழ்ந்துட்டபோல இருக்கு.என்ன அம்மா ஞாபகம் வந்துருச்சா".


சுதாரித்து கொண்டு, "ஆமா அம்மா ஞாபகம் தான். என்ன இருந்தாலும் அவங்களுக்கு என் மேல கட்டாயம் கோவம் இருக்கும்.என்ன செய்றது. அம்மாகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல ஆசை படுகிறேன். ஆனா அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்குமான்னு தெரியலை".
"கவலைப்படாதே அபர்ணா. ஒரு நாள் உன்னோட அம்மாவுக்கு எல்லாம் புரியும். அப்போ உன்னை கட்டாயம் மன்னிப்பாங்க.உன் கிட்ட இன்னொரு விஷயம் கேக்கணும். உனக்கு இங்கே இருக்கிறது கம்போர்டபிலா இருக்கா, இல்லை ஹாஸ்டல தங்கிக்க ஏற்பாடு பண்ணட்டுமா".

அவன் கண்களை துளைத்து விடுவது போல பார்த்தாள்.

"நான் உங்க கிட்ட ஹாஸ்டல் போகனும்னு கேட்டேனா".
"இல்லை".
"இல்ல, உங்களுக்கு நான் இங்கே இருக்கிறது பிடிக்கலையா".
"நோ நோ" அவசரமாக மறுத்தான்.

"பக்கத்துக்கு வீடு, எதிர்த்த வீடு இவங்க கேட்டாங்களா."

"இல்லை யாராவது பார்த்து கேட்டா, நீ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு.உனக்கு தானே கஷ்டம்".
"ரவி ஒண்ணு புரிஞ்சுக்கங்க. இந்த விஷயத்தில கவலைப்பட வேண்டியது நானும், நீங்களும்தான். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கும்னு நினைக்கிறேன்.உங்க கற்பு பத்திரமா இருக்கும்.நான் அதுக்கு கியாரண்டி.போதுமா".

ரவி கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தான். "ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் விட்டு சிரிக்கிறேன்"




"ரவி உங்க போனை கொடுக்க முடியுமா. இந்த டென்சன்ல கவிதா கிட்ட பேச மறந்துட்டேன்".

ரவி போனை கொடுக்க, கவிதா நம்பர் அடித்தாள்.

"அபர்ணா, என்னடி பேசுறது நீதானா. நம்பவே முடியலைடி. உன்னோட நம்பர் கிடைக்கலைன்னு உன்னோட வீட்டுக்கு போன் பண்ணினா உங்க அம்மா என் கூட பேச கூட இல்லை. கட் பண்ணிட்டாங்க. என்னடி ஆச்சு"

நடந்ததை அபர்ணா சுருக்கமா சொல்ல, கவிதா ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனாள்.
"என்னடி இந்த ஒரு வாரத்தில இவ்வளவு நடந்து இருக்கா. நம்பவே முடியலை.நான் உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனால் வழிதான் தெரியலை. பரவாயில்லை நீயே கூப்பிட்டுட்டே."

"என்னடி விஷயம்."

"அதுதாண்டி, பிரதீப், அவனுக்கு பைத்தியம் முத்தி போச்சாம். நான் அவனை திரும்ப பார்க்க போகும்போது அவன் அப்பாசொல்லி அழுதார். உன் பெயர் சொல்லிகிட்டே திரியிறான். நீ ஒரு தடவை வந்து பார்த்தா நல்லது. ப்ளீஸ்டி."

"சரி நான் திரும்ப கூப்பிடுறேன்."

போனை வைத்து விட்டு சிந்தனையில் இருந்த அபர்ணா, ரவி குரல் கேட்டு நினைவுக்கு திரும்பினாள்.
"என்ன அபர்ணா, ஏதாவது பிரச்சனையா".

"ஆமா ரவி. அங்கே பிரதீப்புக்கு கொஞ்சம் மன நிலை சரியில்லை. இப்போ நான் போனாதான் கொஞ்சமாவது முன்னேற்றம் தெரியுமாம்."

"இதுல என்ன யோசிக்க இருக்கு. நீ உடனே கிளம்பு. என்னோட காரை வேணா எடுத்து போ".

அபர்ணா தயங்க, "ரவி நீங்க என் கூட வர முடியுமா?"

சில நொடி யோசித்த ரவி, "நோ ப்ரோப்லம் அபர்ணா நான் வரேன். ரெண்டு பேருமே போகலாம்" என்று சொல்ல, இருவரும் அடுத்த சில மணி நேரத்தில் காரில் மதுரை நோக்கி கிளம்பினர்.



No comments:

Post a Comment