Thursday, November 19, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 1

பரந்து விரிந்து கிடக்கும் பாளையங் கோட்டை மத்திய சிறைச்சாலை

காலை எட்டு மணி. பாளையங் கோட்டை நகரம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த நேரம். வேக வேகமாக சீருடையில் பள்ளி செல்லும் மாணவ மாணவியர். பேருந்துகள் அவசரமாக பறக்கின்றன. நாம் கொஞ்சம் சிறைச்சாலைக்குள் சென்று என்ன நடக்கிறது என்று கவனிப்போமா.

ஜெயிலர் பரமசிவம் உள்ளே நுழைந்து தனது இருக்கையில் அமர்கிறார். கண் முன்னே சுவரில் மாட்டி இருக்கும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பார்த்து வணங்கி விட்டு, தனது மேஜையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் படம், நெல்லையப்பர், காந்திமதி இவர்களை வணங்கி விட்டு சில நிமிடங்கள் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்கிறார். நாம் சுற்றுமுற்றும் பார்க்கிறோம். கொஞ்சம் பழைய கட்டிடம் தான் என்றாலும், இன்னும் வலுவாக இருக்கிறது. 

கண் விழித்த பரமசிவம் இன்று ஜெயிலில் இருந்து வெளியாகும் குற்றவாளிகள் பட்டியலை எடுத்து பார்க்கிறார்.

"ஓ இன்னைக்கு நாலு பேர் விடுதலை செய்யணும். தினமும் ஒருத்தர் பெயர் வந்தாலே பெரிய விஷயம். ஆனால் குடியரசு தினம் வருவதனால் இந்த நாலு பேரோட தண்டனை காலம் குறைக்கப்பட்டு வெளியே போறாங்க. சரி இவங்க யாருன்னு பார்க்கலாம்" என்று யோசித்தவாறே அவர்களின் கோப்புகளை எடுத்து நோட்டமிடுகிறார். 

"இவன் மலையாண்டி, அடிக்கடி திருட்டு வழக்கில மாட்டி ஜெயிலுக்கு வர்றவன். ரெண்டாவது ராஜவேலு இவன் பொண்ணை ரேப் பண்ணி குற்றம் அனுபவித்தவன், மூணாவது ராமசாமி பிராடு செஞ்சு கம்பனில புகார் கொடுத்து உள்ளே பல மாதங்கள் இருந்தவன். நாலாவது யாரு?

ரவி சந்திரன், ஆ, இந்த தம்பியா. அப்பாடி இப்போவாது இந்த அரசாங்கத்துக்கு மனசு வந்துச்சே. என்னமோ தெரியலை இந்த பையன் முகத்தை பார்த்தாலே மனசுக்கு ஒரு நிம்மதி. என்னோட ஜெயிலர் வாழ்க்கைலே இந்த மாதிரி பசங்களை பார்க்கும்போது மனசை பிழிஞ்ச மாதிரி இருக்குது. பரவாயில்லை இப்போவாது ரிலீஸ் பன்னுராங்களே. முதல்ல இந்த பையனை பார்ப்பான்."

ஜெயில் செல்நம்பர் 32

கம்பிகளை தனது லத்தியால்தட்ட முதுகு காட்டி அமர்ந்து இருந்த அந்த வாலிபன் சத்தம் கேட்டு எழுந்து வந்தான்.

அகன்ற நெற்றி, நெருக்கமான புருவங்கள், கூரிய கண்கள், கரு கரு மீசை, மொத்தத்தில் ஒரு பாங்க் மானேஜர் போன்ற தோற்றம், அந்த ஜெயிலுக்கு சம்பந்தம் இல்லாத தோற்றம்.

"ரவிச்சந்திரா உனக்கு இன்னைக்கு விடுதலை நாள். நீயும் ஜெயிலுக்கு வந்து பத்து வருஷ்ம் ஆச்சு. இனிமேயாவது உன்னோட உணர்ச்சிகளை அடக்க பழகிக்கோ."

பதில் பேசாமல் தலை அசைத்த அந்த வாலிபன், முகத்தில் சாந்தம் பரவ "சரிங்க சார். நீங்க சொல்றது எல்லாமே எனக்கு புரிஞ்சது. இனிமே நான் ஒழுங்கா நடந்துக்குவேன்."

கதவை திறக்க, வெளியே வந்து பரமசிவத்தை தொடர்ந்து செல்ல, அங்கே அவர் அறையில் ஏற்கனவே தயாராய் இருந்த உடைகள், படிப்பு சான்றிதழ்கள் இருக்க, அவற்றை பெற்று கொண்டுஅவர் கொடுத்த ஜெயில் வேலைக்கான ஊதியத்தை பெற்று கொண்டு நன்றி சொன்னான்.

வெளியே வந்த ரவி சந்திரன் தனது கடிகாரத்தை பார்க்க மணி ஒன்பது. 'இனிமேல் எங்கே செல்வது' என்று யோசித்தான்




ஜனவரி, 2012

"அபர்ணா, அபர்ணா என்னடி பண்ணிட்டு இருக்க. இப்போவே மணி மதியம்மூணு ஆச்சு. நாலு மணி பஸ்ல கிளம்பினாதான் நீ எட்டு மணிக்குள்ள ஹாஸ்டல் போக முடியும்."

"என்னம்மா தூங்க விடாம தொல்லை பண்ணிட்டு இருக்கே. தாத்தா நீங்களாவது அம்மாவுக்கு சொல்ல கூடாதா?"

"நிர்மலா, அபர்ணா கொஞ்ச நேரம் தூங்கட்டுமே. நான் வேணாம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு கார்ல போய் ட்ராப் பண்ணிட்டு வர்றேன்."

"வேண்டாம்ப்பா இப்படியே விட்டா சோம்பேறி ஆகி போய்டுவா. கல்யாணம் ஆகி போறவீட்டில அவளோட மாமியார் என்னைதான் குறை சொல்லுவா.எந்திரிடி".

கோபத்தோடு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருந்த நிர்மலா தேவிக்கு வயது நாற்பத்தி ஐந்து இருக்கும்.ஒல்லியான தேகம். இளமை காலத்தில் பெரிய அழகியாக இருந்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது

சோம்பலோடு அழகாக கைகளை உயர்த்தி உடலை நெரித்தபடி எழுந்த அபர்ணாவுக்கு , அம்மாவை போல தோற்றம். பேரழகி என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு தடவை பார்த்தால் இன்னொரு முறை பார்க்க தூண்டும் அழகு. நீண்ட கைகள்.கருகருவென்று வளர்ந்த கூந்தல். ஆழ்ந்த நீல நிற கண்கள்.

அபர்ணாவேகமாக ஓடி சென்று பாத்ரூமில் ஒளிந்து கொள்ள, "அபு சீக்கிரம் கிளம்புடி" என்று கத்தியபடி பாத்ரூம் கதவை தட்டினாள்.

சில நிமிடங்களில் வெளியே வந்த அபர்ணா, அடுத்த பத்து நிமிடத்தில் ரெடி ஆகதாத்தா, "என்னம்மா கார் எடுக்கட்டுமா?" என்று கேட்க, "வேணாம் தாத்தா, அந்த 2000 மாடல் மாருதி 800 காரை எடுத்து நீங்க போறதுக்குள்ள நான் நடந்தே பஸ் ஸ்டாண்ட் போய்டுவேன்."

"ஹி ஹி" என்று அசடு வழிந்த தாத்தா "சரிம்மா, உனக்கு ஆட்டோ பிடிச்சு வரேன்" என்று சொல்ல, அடுத்த இரண்டு நிமிடத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ.

தில்லை நகரில் இருந்து கிளம்பி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வர பத்து நிமிடங்கள் ஆனது. வெளியே வந்த மதுரை செல்லும் பஸ்சை கை காட்டி நிறுத்தி, ஏறி கொண்டு இரண்டாவது வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அபர்ணா.

பஸ் டிக்கெட் எடுத்துசுற்று முற்றும் பார்த்த அபர்ணா, பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருப்பதை கண்டு தனது பர்சை எடுத்து டிக்கெட் உள்ளே வைக்க அருகில் இருந்தது அவளின் அம்மா போட்டோ. அதை பார்த்த அவள் அம்மாவை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.


அப்பா, அம்மா அந்த காலத்திலே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்துக்கு பிறகு கருத்து வேறுபாடு அதிகம் ஆனதால் இருவரும் பிரிந்த போது, அபர்ணாவுக்கு வயது ஐந்து. பின்னால் அப்பா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து சென்னையில் செட்டில் ஆகி விட்டாலும், மாதம் ஒரு முறை தனது மகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.'

'இப்போது அம்மா வேலை பார்த்து வருவது திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அட்மினிஸ்ட்றெடிவ் ஆபீசர் உத்தியோகம். அபர்ணா படிப்பது மதுரை அமெரிக்கன் கல்லூரியில். M Sc - Biochemistryஇரண்டாம் ஆண்டு.

சின்ன வயதில் விவாகரத்து ஆன போதும், வேறு யாரையும் திருமணம் செய்ய மனம் விரும்பாததாலும், மகளுக்காகவும் நிர்மலா மறுமணம் செய்து கொள்ளவில்லை.

அடிக்கடி அம்மா செய்யும் அறிவுரைகள் வேப்பங்காயாக கசந்தாலும் தன் மீது அம்மா வைத்து இருக்கும் பாசத்தில் பொய் இல்லை என்பதை அபர்ணா அறிவாள்.இருப்பது தில்லை நகர் சொந்த வீட்டில் அம்மா, தாத்தா, பாட்டியுடன்.

கொஞ்சம் கொஞ்சமாக வெயில் குறைய கண்ணயர்ந்தாள்.
"மதுர மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு. எல்லோரும் இறங்குங்க", என்ற கண்டக்டர் குரல் கேட்டு கண்விழித்தாள்.வானம் இருட்ட தொடங்கிய நேரம். கீழே இறங்கி அடுத்த பஸ் மாறி ஹாஸ்டல் வந்தபோது மணி ஏழரை.

தனது ரூமுக்கு வந்தவளை அங்கே காத்து இருந்த அவள் ரூம் மேட் கவிதா பார்த்து "என்னடி அபர்ணா, சாப்பிட போகலாமா?" என்று கேட்க "இல்லைடி நான் பஸ் ஸ்டாண்ட்ல சாப்பிட்டு வந்துட்டேன். நீ வேணாம் போய் சாப்பிட்டு வா."

"உனக்காக காத்து இருந்தேன் பாரு என்னைய சொல்லணும்."

"சாரிடி என்னோட புஜ்ஜூ குட்டி"என்று கெஞ்ச, 'சரி' என்று தலை அசைத்து விட்டு வெளியேறினாள்.

கையில் இருந்த ஆனந்த விகடன் பத்திரிக்கையை எடுத்து தனது கண்களை ஓட விட்டாள். சில பக்கங்கள் புரட்டிய பின் கண்கள் குறிப்பிட்ட பக்கத்தில் நிற்க முகம் மலர்ந்தது.

அதற்குள் திரும்பி வந்த கவிதா "என்னடி, புதையலை கண்ட மாதிரி முகத்தில சிரிப்பு".

"இங்கே பாருடி", ஆனந்த விகடன் பத்திரிக்கையை காண்பித்து, "எனக்கு பிடித்த எழுத்தாளர் ஜாஸ்மின் எழுதின கதை வந்து இருக்கு. வார வாரம் ஏதாவது புதுசா எழுதிகிட்டே இருக்காங்க. இந்த வாரம் கிராமத்தில நடக்கிற பெண் சிசு படுகொலை பற்றி எழுதி இருக்காங்க பாரேன். அதிலும் முக்கியமா இந்த வரிகள் எனக்கு பிடிச்சு இருக்கு. படிக்கிறேன் கேளு."


'உலக அளவில பார்த்தால் நம்ம நாட்டிலதான் தெய்வங்கள், ஆறுகள், ஏன் நம்ம நாட்டை கூட பெண் பெயர்களால் அழைக்கிறோம். அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரா அதிகமா கொடுமை நடக்கிறதும் இந்த நாட்டுலதான். பெண் சிசு கொலை என்கிற இந்த சமூக கொடுமைகளை ஒழிக்க ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து போராடனும். அப்போதான் இதை ஒழிக்க முடியும்'.

"ஜாஸ்மின் மேடம் சூப்பர்டி. எனக்கு இவங்களோட சமூக அக்கறை கலந்த எழுத்து பிடிச்சு இருக்கு."

புத்தகத்தை வாங்கி விட்டு பார்த்த கவிதா, "ஏய் அபு இங்கே பார்த்தியா. அவங்களோட மெயில் ஐடி இருக்கு


உனக்கு அவங்களை பாராட்ட தோணினாலோ இல்லை ஏதாவது சந்தேகம் வந்தா அவங்க கிட்ட கேட்கலாம்."

"ஆமாண்டி, நான் சரியா கவனிக்கலை."

அதற்குள் செல்போன் ஒலிக்கும் ஓசை. எடுத்து பார்க்க, அப்பா என்று வந்தது.

"சொல்லுங்க அப்பா"
...."இப்போதான் ஹாஸ்டல் வந்தேன்."
...."தம்பி, சித்தி எல்லோரும் நல்லா இருக்காங்களா?"
...."அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரும் நல்லா இருக்காங்க. எப்போ அப்பா என்ன பாக்க வர போறீங்க. ?"
..... "அடுத்த மாசம் தானா, சரிப்பா", முகம் சுருங்கி போக போனை வைத்தாள்.

அருகில் இருந்த கவிதா "என்னடி, முகம் வாடி போச்சு. அப்பா என்ன சொல்றாரு."

கண் கலங்க, "அப்பாவை பார்த்து பல நாட்கள் ஆகி போச்சுடி.என்ன தான் அம்மா கூட இருந்தாலும் அப்பா இல்லாதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு."

"என்னடி இதுக்கு போய் கண்கலங்கலாமா?"

"உனக்கு அப்பா இல்லாம இருந்தா தாண்டி இந்த சோகம் புரியும்."


அடுத்த சில நிமிடங்கள் தோழிகளுக்கு இடையே மௌனம்.


தனது மடியில் லாப்டாப்பை வைத்து அதில் தனது ஜிமெயில்லை ஓபன் செய்ய, அதில் அவளது பள்ளி தோழிகளின் மெயில் வந்து இருந்தது. படித்து விட்டு, ஜாஸ்மினுக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்ப, அடுத்த நிமிடத்தில் பதில் வந்து விழுந்தது.


"ஹாய், அபர்ணா, உங்களுக்கு என்னோட கதைகள் பற்றி சந்தேகங்கள் இருந்தா, சாட்ல வாங்க விளக்கி சொல்லுறேன்."

சந்தோசமானாள், சாட்டை ஓபன் செய்ய, ஜாஸ்மின் ஆன் லைனில் இருக்க, சாட் செய்ய ஆரம்பித்தாள்.

"ஜாஸ்மின் மேடம், நீங்க எத்தனை வருசமா கதை எழுதுறீங்க, உங்களுக்கு பிடிச்ச கதை எது, நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?"என்று கேள்வி கணைகளை எடுத்து வீச, ஜாஸ்மின் திணறி போனார்.

"அபர்ணா, நீங்க இப்படி வேகமா சாட் பண்ணினால் என்னால பதில் சொல்லல முடியாது. கொஞ்சம் மெதுவா" என்று சொல்ல,"ஹா ஹா ஹா" என்று சிரிப்பை உதிர்த்து, தொடர ஆரம்பித்தாள்.

"ஜாஸ்மின் மேடம் எனக்கு அம்மா மட்டும்தான். அம்மா எப்போ பார்த்தாலும் எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லிட்டே இருக்காங்க. எனக்கு பிடிக்கலை. நீங்களே சொல்லுங்க, இந்த வயசில என்ஜாய் பண்ணாம எந்த வயசில செய்றது".
"அபர்ணா, உங்க அம்மாவை பற்றி சொல்லுங்க, உங்க அப்பா எதற்காக பிரிஞ்சு போனார்" என்று கேள்விகளை கேட்டு, பதில் கிடைத்த பின், "நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே."

"சொல்லுங்க மேடம்"

"உங்க அம்மா தன்னோட வாழ்க்கைல ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நினைத்து பயந்து போய் இருக்காங்க. அதனால யாரை பார்த்தாலும் அவங்களுக்கு பயமா இருக்கு. உங்களை அந்த மாதிரி எந்த பிரச்சனைளையும் மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க. அவங்களோட நிலைமைல நான் இருந்தா, நானும் அதையே தான் செய்வேன்.

இன்னொன்னு யோசிச்சு பாருங்க. உங்க அப்பா மறுமணம் செய்து கொண்டார். ஆனால் உங்க அம்மா செய்து கொள்ளாமல் உங்களுக்காக தானே வாழ்ந்து கொண்டு இருக்காங்க. இதை நினைச்சு பாருங்க, உங்க அம்மா உங்க மேல வைச்சு இருக்கிற அந்த அபரிதமான அன்பு புரியும்."
வாயடைத்து போய் நின்றாள், அபர்ணா.


"நீங்க சொல்றது உண்மைதான் ஜாஸ்மின் மேடம், இ லவ் மை மதர் சோ மச்". என்று சொல்லி விட்டு, "சரி உங்களை பற்றி சொல்லுங்க ஜாஸ்மின் மேடம்".

"என்னை பத்தி சொல்வதற்கு பெருசா எதுவும் இல்லை.எனக்கு கதை எழுதுவது பிடிச்ச பொழுது போக்கு.நான் நாலு எம் ஏ படிச்சு இருக்கேன்."

"அப்படியா, அது என்ன நாலு எம் ஏ."

"எம் ஏ தமிழ், இங்கிலீஷ், வரலாறு, பொலிடிகல் சயின்ஸ்."

"யம்மாடியோ, நீங்க பெரிய ஆளுதான் மேடம்."

"இன்டர்நெட் சாட்ல ரொம்ப கவனமா இருங்க. இன்னொரு முக்கியமான விஷயம் அபர்ணா, எக்காரணத்தை முன்னிட்டும் உங்களோட காண்டாக்ட் நம்பர், மற்றும் போட்டோவை தெரியாதவங்ககிட்ட கொடுக்காதிங்க. அவங்க மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு இருக்கு."

அபர்ணா, அந்த வரிகளில் தெரிந்த உண்மையான அக்கறையை உணர்ந்தாள்.

"எனக்கு ஏதோ போன் கால் வருது அபர்ணா, நான் அப்புறம் சாட்ல வரேன் பை" என்று சொல்ல, சாட் முடிந்து போனது.

அபர்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

ஜாஸ்மின் மேடம் அக்கறையோடு சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை என்று உணர்ந்தாள்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு ஆரம்பித்த கிளாஸ் முடிந்தபோது ஒரு மணி.
வெளியே வந்தபோது, "ஹாய் அபர்ணா" என்ற குரல்.

"ஹாய் பிரதீப், எப்படிடா இருக்க."

"நான் நல்லா இருக்கேன். ஆமா, பொங்கல் லீவ்ல ஊருக்கு போயிட்டு இப்போதான் வந்தியா."

"ஆமாண்டா. ஆமா நீ இங்கே என்ன பண்ணுற. உன்னோட கிளாஸ் அடுத்த ப்ளாக்ல தானே இருக்கு."




"உன்னை பார்க்கதான் வந்தேன்" என்று அசடு வழிய

"டேய் எனக்கு கெட்ட கோவம் வரும். ஒரு பிரெண்ட்டா உன் கிட்ட பழகினா நீ இப்படி ஜொள்ளு விட்டா நான் உன்கிட்ட பேச மாட்டேன்", முகத்தை அபர்ணா திருப்பி கொள்ள

பதறி போன பிரதீப் "சாரி அபர்ணா, நாம எப்போதும் போல பிரெண்ட்ஸ் தான். என் கூட பேசாமல் இருக்காதே, ப்ளீஸ்"என்று கை நீட்ட, சரி என்று சமாதானமாகி கை குலுக்கினாள் அபர்ணா.

மதியம் செமினார் மற்றும் ப்ரேசென்டேசன் முடிய ஐந்து மணி ஆகி விட்டது.

அவள் செல்போனிலே லாக் இன் செய்து மெயில் செக் செய்ய, ஜாஸ்மின் இடமிருந்து மெயில் வந்து இருந்தது.

"ஹாய் அபர்ணா, உன்னோட மெயில் பார்த்தேன்.நான் அடுத்த மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். வந்தவுடன் சாட்டில் பேசலாம். சாரி என்னால நேத்து திரும்ப சாட்ல வர முடியலை".

"சரி அதனால என்ன, நோ ப்ரோப்லம்" என்று பதில் அனுப்பி விட்டு வைத்தாள்.

அம்மாவுக்கு போன் செய்ய, "சொல்லுடி என்ன பண்ணிட்டு இருக்க?"

"அம்மா, எனக்கு ப்ராஜெக்ட் செய்ய அடுத்த மாசம் சென்னை போக வேண்டி இருக்கும். எங்கேம்மா ஸ்டே பண்ணுறது."

நிர்மலா பதில் சொல்லாமல் யோசிக்க"அம்மா நான் வேணாம் அப்பா வீட்டில தங்கட்டுமா?"இந்த கேள்வி வந்தது தான் தாமதம்,

நிர்மலா கோபத்தில் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

"ஆமாண்டி, நீ பிறந்து அஞ்சு வயசு இருக்கும்போதே என்னையும், உன்னையும் வேணாம்னு சொல்லிட்டு போனவன்தான் உன்னோட அப்பன். அப்படிப்பட்டவனை எதுக்கு நீ போய் பார்க்கிற. எல்லாம் என்னோட தலை எழுத்து. என்னதான் பாசமா வளர்த்தாலும் அப்பன்னாலே பொண்ணுகளுக்கு ஒரு வீக்னெஸ்தான்" என்று குரல் கரகரக்க,


"சாரிம்மா, அப்படின்னா நான் எங்கே ஸ்டே பண்ணுறது".

"நான் இங்கே திருச்சில Project பார்க்கிறேன். சென்னைலதான் பண்ணி ஆகணும்னா, பாட்டியை உன் கூட அனுப்புறேன்.நீங்க வீடு எடுத்து தங்கிட்டு உன்னோட ப்ராஜெக்ட் முடிஞ்ச பின்னே வரலாம். அது சரி ப்ராஜெக்ட் எவ்வளவு மாசம்".

"நாலு மாசம்".

"சரி, நான் செக் பண்ணிட்டு கூப்பிடுறேன்".

அடுத்த மூன்று நாட்களும் வழக்கம் போல் நகர, நாலாவது நாள் ஜிமெயில் ஓபன் செய்து சாட் செய்ய காத்து இருந்தாள்.நாள் முழுக்க காத்து இருந்தும், ஆன் லைனில் ஜாஸ்மின் வரவில்லை.

அவளுக்கு சொல்ல முடியாத அளவிற்கு கோபம்.
ஆறாவது நாள் சாட்டில் ஜாஸ்மின் வர பொரிந்து தள்ளினாள்.
"ஜாஸ்மின், உங்களுக்கு பொறுப்பு இருக்கா. சொன்னா சொன்ன பேச்சை காப்பாத்தணும். இல்லைனா இப்படி தப்பா கமிட்மென்ட் கொடுக்கறீங்க."

கொஞ்ச நேரம் பதில் இல்லை. பொறுமை இழந்த அபர்ணா, "ஹேய் என்ன ஆச்சு, பதில காணோம்".

ஒவ்வொரு வார்த்தையாக பதில் வர அதிர்ந்து போனாள்.
"எனக்கு மூணு நாள் முன்னால சின்ன ஆக்சிடென்ட் ஆச்சு. கால் ரெண்டையும் நகர்த்த முடியலை.இன்னைக்கு தான் கொஞ்சம் பரவாயில்லை. அதனால தான் மூணு நாளா என்னால சாட் செய்ய வர முடியவில்லை."

"பாவம் வீட்டு வேலை செய்யும்போது அடிபட்டு இருக்கும். நாமதான் தேவை இல்லாம அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்து கொள்கிறோமோ?" என்று அவள் மனதுக்கு தோன்ற, 'சாரி' என்று சொல்ல, 'பரவாயில்லை' என்று பதில் வந்தது.

"மேடம் உங்களோட அடுத்த கதை என்ன?" என்று கேட்க,

"இன்னும் நான் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதுவும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கதையாக இருக்கும்."


"மேடம் உங்களுக்கு பிடிச்ச மற்ற விருப்பங்கள் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"எனக்கு திரைப்பட பாடல்கள் ரொம்ப பிடிக்கும். பி சுசிலா பாடல்கள் நிறைய பிடிக்கும். ஆண் பாடகர்களில் பி பி ஸ்ரீனிவாஸ், SPB பாலு, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் இவங்க பாடல்கள் பிடிக்கும்."

"என்ன மேடம், உங்களுக்கு பழைய பாடல்கள்தான் பிடிக்கும் போல இருக்கு. பழமையான ஆளா இருக்கீங்க ஆனால் உங்க கதைகளில் புதுமையான போக்கு இருக்கு. உங்க போக்கே எனக்கு பிடிபடலை."

"ஹ ஹ ஹா" என்று சாட்டில் பதில் வந்தது.

"அபர்ணா, எனக்கு இன்னும் ஒரு வாரம் வெளி ஊர் செல்லும் வேலை இருப்பதால் சாட் செய்ய முடியாது. நான் வந்தவுடனே சாட் மெசெஜ் அனுப்பிறேன், சரியா"என்று கேட்க 'ஓகே' என்று பதில் சொன்னாள்
அபர்ணா.

சாட்டில் இருந்து ஜாஸ்மின் லாக் அவுட் செய்ய, அபர்ணாவும் வெளியே வந்தாள்.



கவிதா பக்கத்தில் இருந்து சாட்டை கவனித்து "என்னடி, அப்படியே ஜாஸ்மின் மேடம்கிட்ட மூழ்கி போய்ட்ட போல இருக்கு".

"ஆமாண்டி, அவங்க கூட பேசினா நேரம் போறதே தெரியலை. அவங்களோட கதைகள் மற்றும் விருப்பங்களை கேட்டால்,அவங்க வயசு ஐம்பதுக்கு மேல இருக்கும்னு நினைக்கிறேன்".

"நீ சொல்றது கூட சரிதான் எனக்குப்படுது அபர்ணா.அவங்க சிந்தனைல இருக்கிற தெளிவு, அக்கறை, அன்பு, கோபப்படாத குணம் எல்லாமே ஒரு நல்ல தாயோட குணங்களாக தான் எனக்கு தெரியுது. அவங்க சொல்றதை அப்படியே கேட்டு நட,நல்லதே நடக்கும்".



No comments:

Post a Comment