Monday, November 2, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 5

சத்யனும் அரவிந்தனும் மான்சியைத் தேடித்தேடி களைத்துப்போனார்கள், சத்யன் சரியாக சாப்பிடக்கூட இல்லை,, மழிக்கப்படாத தாடையும், களைந்து கிடந்த தலை கிராப்பும், அவன் சோகத்தை இன்னும் கூடுதலாக எடுத்து காட்டியது
வீட்டில் உள்ளவர்கள் அவன் தோற்றத்தைப் பார்த்து பயந்து என்னாச்சு? என்று துருவ ஆரம்பித்தனர்,,

“ என் பாதுகாப்பில் இருந்த குற்றவாளி ஒருத்தன் தப்பிச்சுட்டான்,, அவனை தேடிக் கண்டு பிடிக்கும் வரை இப்படித்தான்.......” என்று சத்யன் பொய் கூறி சமாளித்தாலும், அதுவும் உண்மைதான், மான்சி குற்றவாளி தான், சத்யனின் இதயத்தை திருடிய குற்றவாளி...

தங்கையின் திருமணம் ஒருபுறம் , மான்சியை காணவில்லை என்பது மறுபுறம் என்று இரு பிரச்சனைகளும் நாளுக்குநாள் வளர்ந்து அவனை நொருக்கியது, பாக்யாவின் திருமணத்திற்கு முதல்நாள் இரவு அனுசுயாவுடன் நிச்சயதார்த்தம் என்ற இடி அவன் தலையில் தினமும் விழுந்தது... வெவ்வேறு வார்த்தைகளில்,, வெவ்வேறு ஆட்கள் மூலமாக, என யாராவது அதை ஞாபகப்படுத்தி அவன் இதயத்தை வதைத்தார்கள்



உண்மையை சொன்னால் பாக்யாவின் திருமணம் நின்றுவிடும் என்று ஒரே அஸ்திரம் அவனை முன்னேறவிடாமல் செய்தது,, அடுத்து என்ன? என்ன? என்ற குழப்பத்திலேயே சத்யன் பசி தூக்கம் மறந்தான்

முடிந்தவரை சிறையில் இரவு பணி மட்டுமே தருமாறு கேட்டுக்கொண்டு, பகலில் தங்கையின் திருமணத்திற்காக பணத்துக்கு ஏற்பாடு செய்வது, இடைப்பட்ட நேரத்தில் மான்சியை தேடுவது என தனது அன்றாட அலுவல்களை மாற்றிக்கொண்டான்

மான்சி விஷயத்தில் ஒரு நிம்மதி என்னவென்றால், அவள் நிச்சயம் உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டாள், தன் குழந்தைக்காக உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை சத்யனுக்கு பலமாக இருந்தது,

நாட்கள் வாரங்களாக சத்யனின் பதட்டம் அதிகமானது, அவளுக்கு இது டெலிவரி ஆகும் நேரம் என்பதால் சத்யன் ஒரு மருத்துவமனையைக்கூட விடாமல் தேடினான், பழைய பதிலே எல்லா இடங்களிலும் கிடைத்தது, இரவுநேரங்களில் அவள் நினைவில் தன் தலையணையை ஈமாக்கினான், ஒரு நாளைக்கு ஆயிரம் முறை “ மான்சி எனக்கு கிடைப்பாளா?” என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு தன் காதலுக்கு நீர் வார்த்தான்

மான்சி காணமல் போன மூன்றாவது வாரம், சிறையில் சத்யனுக்கு இரவு பணி கொடுக்கப்படவில்லை, பகல்நேர பணியில் ஒரு கைதியின் தாயார் இறந்துவிட ஈமச்சடங்குகளை செய்வதற்காக அந்த கைதியை பரோலில் அழைத்துச்செல்லும்படி சத்யனுக்கும் மற்றொரு கான்ஸ்டபிளுக்கும் உத்தரவு வந்தது,, சத்யன் தன்னால் முடியாது லீவு வேண்டும் என்று எவ்வளவோ கெஞ்சியும் அவனுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது

அன்று மான்சியை தேடவேண்டும் என்ற எண்ணத்தில் மண்விழுந்ததை நினைத்து வேதனையுடன் வேறுவழியின்றி அந்த கைதியை அழைத்துக்கொண்டு வேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இருந்த ஒடுக்கத்தூரை அடுத்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்துக்கு கிளம்பினான் சத்யன்

பஸ்ஸில் பயணம் செய்து ஒடுக்கத்தூர் வந்து இறங்கி, அங்கிருந்து மினிபஸ்ஸில் பயணம் செய்து அந்த கிராமத்திற்கு வந்தபோது, அந்த கைதியின் வரவிற்காக அவன் தாயாரின் உடல் காத்திருந்தது,, கைதியைப் பார்த்ததும் அவனது குடும்பத்தினர் கதறி அழ சத்யன் அமைதியாக கைதியின் கைவிலங்கை கழட்டினான்

கைதி தனது தாயின் உடல்மீது விழுந்து அழுதான், உறவினர்கள் அவனை சமாதானம் செய்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர், சத்யனும், மற்றொரு கான்ஸ்டபிளும் பக்கத்து வீட்டு திண்ணையில் அமர்ந்து கைதியை தன் கண் பார்வையை விட்டு நகராதபடி பார்த்துக்கொண்டனர்

சடங்குகள் முடிந்து சவ ஊர்வலம் தொடங்கியது, கைதி நெருப்பு சட்டியுடன் முன்னால் போக அவனை சற்று தள்ளியிருந்து பின் தொடர்ந்தார்கள் இவர்கள்,, அந்த தாயின் உடலுக்கு நெருப்பு மூட்டியதும் அனைவரும் வீட்டுக்கு வர கைதியின் கையில் மறுபடியும் விலங்கை பூட்டினான் சத்யன்


வீட்டிலிருந்து வெளியே வரும்போது மறுபடியும் உறவினர்கள் அழ, அவர்களை சமாதானம் செய்துவிட்டு திரும்பிய கைதியின் நெற்றியை தாழ்ந்திருந்த வாசற்படி பதம்பார்க்க கையின் நெற்றியிலிருந்து உடனடியாக ரத்தத்துளிகள் எட்டிப்பார்த்தது, அனைவரும் பதட்டத்துடன் கூடிவிட்டனர்

சத்யன் கூட்டத்தினரை விலக்கி கைதியை அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்றனர், நெற்றியில் பிளந்த இடத்தில் உடனடியாக இரண்டு தையல் போட்டு ரத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, உடனே அழைத்துச்செல்ல வேண்டாம் சிறிதுநேரம் ஓய்வெடுக்கட்டும் என்று டாக்டர் சொல்ல, கைதி அங்கிருந்த பெஞ்சில் படுக்கவைக்கப்பட்டு குளுகோஸ் ஏற்றினார்கள்

சத்யன் ஜெயிலருக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டு, கைதியின் அருகே ஒரு சேரில் அமர்ந்தான், மற்றொரு கான்ஸ்டபிள் சிகரெட் புகைப்பதற்காக ஒதுங்கினார்

சத்யன் அமைதியாக கண்மூடி சேரில் சாய்ந்து அமர்ந்தான், அப்போது பக்கத்தில் இருந்த மருத்துவர் அறையில் இரண்டு பெண்கள் பேசுவது சத்யனின் செவிகளுக்கு வந்தது

“ டாக்டர் இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு தனியா வந்து டெலிவரிக்கு அட்மிட் ஆச்சே, குழந்தை பிறந்து பத்து நாள் ஆச்சு இன்னும் இங்கேருந்து போகலை, ஏதாவது கேட்டா தேம்பித் தேம்பி அழுவுது, புருஷன் வேற இல்லையாம்,, துணைக்கும் யாருமில்லேன்னு அழுவுது, நாம என்ன டாக்டர் செய்யமுடியும், இன்னிக்கு மூனு டெலிவரி கேஸ் வந்திருக்கு, படுக்க வைக்க பெட் இல்லை, இப்போ இந்த பொண்ண என்ன பண்றது?” என்று செவிலியர் பேசும் குரலும் ,, அதை தொடர்ந்து

“ நானும் அந்த பொண்ணை விசாரிச்சேன் ராணி, எனக்கு யாருமில்ல ஏதாவது அனாதை விடுதியில கொண்டு போய் சேர்த்துடுங்கம்மான்னு அழறா, நான் எனக்கு தெரிஞ்சவங்க சிலர் கிட்ட உதவி கேட்டுருக்கேன், ஏதாவது காப்பகத்தில் இடம் கிடைச்சா அனுப்பிடலாம், அதுவரைக்கும் இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும், அந்த பொண்ணை கீழே பாய் போட்டு படுக்க வை ராணி” என்ற மருத்துவரின் குரலும் கேட்க

கண்மூடி அந்த உரையாடலை கேட்ட சத்யனுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி எழுந்தான், அவசரமாக மருத்துவர் அறையின் கதவைதட்டி பதிலுக்கு காத்திராமல் உள்ளே நுழைந்து “ மேடம் நீங்க இப்போ ஒரு பொண்ணைப் பத்தி பேசினீங்களே அந்த பொண்ணோட பேர் என்ன?” என்று பதட்டத்துடன் கேட்க..

அவனது பதட்டம் அவர்களையும் தொற்றிக்கொள்ள “ அந்தப் பொண்ணு பேரு மான்சி சார், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்து டெலிவரிக்கு அட்மிட் ஆச்சு, நீங்க ஏன் சார் கேட்குறீங்க, அந்த பொண்ணும் ஏதாவது குற்றவாளியா?” என்று அந்த பெண் மருத்துவர் கேட்க

சத்யன் எதுவுமே சொல்லவில்லை , மான்சி கிடைச்சுட்டா என்ற செய்தியை இன்னும் நம்பமுடியாமல் நின்றிருந்தான், சந்தோஷத்தில் அவன் கண்கள் கரகரவென நீரை சுரக்க “ அவ குற்றவாளி இல்ல...... என்னோட உயிர்” என்ற ஒரு வார்த்தை மட்டுமே அவனிடமிருந்து வந்தது

அவன் சொன்ன வார்த்தையும், அவன் கண்களில் வழிந்த நீரும், அவன் யார் என்பதை மருத்துவருக்கு உணர்த்த. அவரும் சந்தோஷமாகி “ ராணி மொதல்ல சாரை மான்சிகிட்ட கூட்டிட்டுப் போ” என்று உத்தரவிட..

ராணி என்ற அந்த செவிலியர் சந்தோஷச் சிரிப்புடன் “ வாங்க சார் ” என்று கூறிவிட்டு முன்னால் போக... தனது வாழ்வின் விடிவெள்ளியை பார்க்கப்போகும் சந்தோஷத்தில் சத்யன் உற்சாகமே உருவமாக பின்னால் போனான்

பிரசவ வார்டின் கதவை திறந்த செவிலியர் சத்யனை மட்டும் உள்ளே அனுமதித்து “ அதோ அந்த ரெண்டாவது பெட்ல இருக்கா பாருங்க சார்” என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டார்


அந்த அறையில் எதிரும் புதிருமாக நான்கு படுக்கைகளே இருக்க.... நான்கிலுமே பிரசவித்த பெண்கள் படுத்திருந்தார்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் அருகில் அவளது உறவினர் ஒருவர் உதவிக்காக அமர்ந்திருக்க.... மான்சியின் அருகில் மட்டும் யாருமில்லாமல் இருந்தது

சத்யன் தனது ஷூவை கழட்டி வெளியே விட்டுவிட்டு மெதுவாக நடந்து மான்சியின் கட்டிலில் அருகே போய் நின்றான், மான்சி கண்மூடி படுத்திருந்தாள், வாரப்படாத கூந்தல் களைந்து கிடந்தது, நெற்றியில் பொட்டில்லாமல் வெறுமையாக இருந்தது, உப்பியிருந்த வயிற்று சுமை வெளிவந்து அவளுக்கு மறுபுறம் ஒரு பழைய துணிக்குள் சுரண்டிருந்தது, ஏற்கனவே மெலிந்த அவள் தேகம் மேலும் மெலிந்திருந்தது

அவனது போலீஸ் உடையைப் பார்த்து அங்கிருந்த பெண் தான் அமர்ந்திருந்த சேரை எடுத்து அவனருகேப் போட்டு “ உட்காருங்க சார் ” என்றான்
சத்யன் அந்த சேரை மான்சியின் கட்டிலருகே இழுத்துப் போட்டு அமர்ந்து அவள் முகத்தையேப் பார்த்தான், சேர் இழுபடும் சத்தத்தில் கண்விழித்த மான்சி எதிரில் இருந்த சத்யனைப் பார்த்ததும் முதலில் திகைத்து விழித்தாள் பிறகு அவளின் சோர்ந்து விழிகள் பலதரப்பட்ட உணர்ச்சிகளை காட்டியது

அவள் விழிகள் சொன்ன அத்தனை உணர்வுகளுக்கும் அடிப்படையாக இறுதியாக பொலபொலவென கண்ணீர் கொட்ட, அதுவரை பேச்சின்றி இருந்த சத்யன் அவசரமாக கைநீட்டி அவள் கண்ணீரைத் துடைத்தான்,

துடைத்த அவன் கையைப் பற்றிக்கொண்டு மேலும் அழுதவளைப் பார்த்து. “ என்னை மறந்துட்டியே மான்சி?” என்றான் சத்யன், முதன்முறையாக அவளை ஒருமையில் அழைக்க அவனுக்கு எது உரிமை தந்தது என்று தெரியவில்லை? இத்தனை நாட்களாக கண்ணீருடன் அவளுக்காக காத்திருந்த உரிமையோ?
அவன் அப்படி கேட்டதும் மான்சி தனது தலையை இடமும் வலமுமாக ஆட்டி மறுத்தாள்,, எதை மறுக்கிறாள்? எதை அவனுக்கு உணர்த்துகிறாள்? அவனை மறந்துவிடவில்லை என்பதையா?

இப்போது சத்யனின் கண்களிலும் நீர், அவன் கண்கள் கலங்குவதைப் பார்த்து “ அழாதீங்க சார்” என்றாள் மான்சி, அவள் உதடுகள்தான் அவனை சார் என்றது, ஆனால் கைகள் பற்றியிருந்த சத்யனின் கையை விடவேயில்லை, மேலும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டது, அவள் கைகள் நடுங்கியது,

சத்யன் நடுங்கிய அவள் கையின் மீது தனது மற்றொரு கையை வைத்து அழுத்திக்கொண்டு “ ஏன் என்னை விட்டுட்டு வந்த மான்சி?” என்று முதலில் கேட்ட கேள்வியை வார்த்தைகளை மாற்றி கேட்டான்

கண்மூடி மவுனம் காத்தவள், பிறகு கண்களை திறக்காமல், ஒட்டிக்கிடந்த உதடுகளை மட்டும் பிரித்து “ அரவிந்தோட அத்தை என்னையும் வயித்துல இருந்த பாப்பாவையும் ரொம்ப கேவலமா பேசினாங்க,, என்னால தாங்க முடியலை, செத்துப் போகனும்னு தான் வந்தேன், அப்புறம் வயித்துல இருந்த குழந்தையை நெனைச்சுக்கிட்டு எங்கப் போறதுன்னு தெரியாம ஒரு பஸ்ல ஏறிட்டேன், பாதி வழியிலேயே வயித்தை வலிக்கிற மாதிரி இருந்துச்சு உடனே பஸ்ஸை நிறுத்தி இந்த ஊர்ல இறங்கிட்டேன், அப்புறம் இந்த ஊர் ஆளுங்க இந்த ஆஸ்பத்ரிக்கு கூட்டி வந்து விட்டுட்டுப் போய்ட்டாங்க, வந்து மூனுநாள் கழிச்சு குழந்தை பிறந்துச்சு, இப்போது இந்த குழந்தையோட எங்கப் போறதுன்னு தெரியாம இங்கேயே இருக்கேன்” என்று மான்சி கூறியதும்தான் சத்யனுக்கு குழந்தையின் ஞாபகம் வந்தது




மான்சியின் கைகளை விட்டுவிட்டு ஆர்வத்துடன் எழுந்து மான்சிக்கு அந்த பக்கம் இருந்த குழந்தையைப் பார்த்து “ என்ன குழந்தை மான்சி?” என்று கேட்டான்
மான்சி எழுந்து அமர்ந்து பக்கத்தில் இருந்த குழந்தையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு “ ஆண் குழந்தை சார் ” என்றாள், அவள் குரலில் சிறு சந்தோஷம்

மறுபடியும் சேரில் அமர்ந்த சத்யன் அவளிடம் இருகைகளையும் நீட்டி “ என்கிட்ட தர்றியா?” என்று கேட்க

மான்சி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடி குழந்தையை ஜாக்கிரதையாக அவன் கையில் வைத்தாள்

தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தான், மான்சியை உரித்துக்கொண்டு பிறந்திருந்தது குழந்தை, அடர்த்தியாக சுருள் சுருளாக தலைமுடி, மான்சியைப் போலவே மஞ்சள் கலந்த வெண்மை நிறம், கன்னங்கள் இரண்டு சிவந்திருந்தன, அழகான நேர் நாசி, சிவந்து குவிந்த உதடுகள், குழந்தையை நழுவவிட்டு விடுவோமோ என்ற பயத்தில் நெஞ்சோடு அணைத்துக்கொண்ட சத்யன், இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி தன் முகத்தருகே கொண்டு சென்று நெற்றியில் முத்தமிட்டு “ அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தினயாடா செல்லம்?” என்று சத்யன் கேட்க.... அவன் முத்தமிட்ட போது அவனுடைய முரட்டு போலீஸ் மீசை குத்தியதில் குழந்தை அழ ஆரம்பித்தான்

குழந்தை அழுததும் சத்யன் திகைத்தாலும்.. மான்சியைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புடன் “ முத்தம் குடுத்தேன்ல மீசை குத்திருச்சுப் போலருக்கு, அதான் அழுவுறான்” என்றான்

மான்சியும் அப்போதுதான் புதிதாக அவன் மீசையை பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு “ இருக்கும்” என்று கூறிவிட்டு அழும் குழந்தையை வாங்க கையை நீட்டினாள்.

சத்யன் ஜாக்கிரதையாக குழந்தையை அவள் கையில் வைத்துவிட்டு “ மான்சி நான் பரோலில் வந்த ஒரு அக்யூஸ்ட்டுக்கு பாதுகாப்புக்காக வந்தேன், இப்போ உன்னைய என்கூட கூட்டிட்டுப் போக முடியாது, நான் போய் கைதியை ஹேன்டவர் பண்ணிட்டு உடனே ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு வர்றேன், நீ ரெடியா இரு நாம டாக்ஸில போயிடலாம்” என்று சொல்ல

குழந்தையை மடியில் போட்டு தட்டியவள் “ டாக்டரம்மா கிட்ட உதவி கேட்டேன், அவங்க என்னையும் குழந்தையையும் ஒரு காப்பகத்தில் சேர்க்கிறதா சொல்லிருக்காங்க, அதனால நீங்க திரும்ப வரவேண்டாம், நான் காப்பகத்துலயே தங்கிக்கிறேன்” என்று உறுதியாக கூறினாள்

சத்யன் எதுவுமே பேசாமல் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருக்க, அவன் பார்வையை தாங்கமுடியாமல் தலைகுனிந்த மான்சி “ நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பலை,, காப்பகத்துலயே இருந்துக்குறேன்” என்று மெல்லிய குரலில் மான்சி மறுபடியும் சொல்ல



“ அந்த யாருக்கும்ல நானும் ஒருத்தனா மான்சி?” என்ற சத்யனின் வார்த்தைகளில் கடுமை ஏறியிருந்தது

மான்சி எதுவும் பேசாமல் ஜன்னல் பக்கமாக திரும்பி விழியில் வழிந்த நீரை விரலால் சுண்டினாள்

சேரில் இருந்து எழுந்த சத்யன் “ நான் போய்ட்டு இன்னும் நாலு மணிநேரத்தில் திரும்ப வருவேன் குழந்தையோட தயாரா இரு, நீ இல்லாம நான் இங்கேருந்து போகமாட்டேன் ” என்று அழுத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே போனவன் மறுபடியும் உள்ளே வந்து அவள் முன்பு குனிந்து தனது வலது கையை நீட்டி “ என்கூட வருவே தானே மான்சி?” என்று கவலையுடன் கேட்டான்


No comments:

Post a Comment