Monday, November 16, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 25

சாந்தி கீழே கிடந்த மான்சியைக் கூடத் தூக்கவில்லை, திகைப்புடன் அறையைவிட்டு வெளியே வந்து அங்கே கவலையுடன் நின்றிருந்த மூர்த்தியின் கையைப் பற்றிக்கொண்டு “ என்னங்க இப்படி” என்றவள் அதற்குமேல் சொல்லமுடியாமல் விம்மினாள் ...

மனைவியின் கையை ஆறுதலாக பற்றிய மூர்த்தி “ என்னப் பண்றதுன்னு எனக்கும் புரியலை சாந்தி, இவங்க இப்படி இருந்திருப்பாங்கன்னு நானும் எதிர்பார்க்கலை, ஏற்கனேவே சேர்ந்து வாழுறாங்க தான மொதுவா நல்லநாள் பார்த்து முகூர்த்தம் வச்சு கல்யாணம் பண்ணலாம்னு நெனைச்சேன், இப்படின்னு தெரிஞ்சிருந்தா பாக்யா கல்யாணத்தப்பவே இவங்களுக்கும் பண்ணிருப்பேன், இப்போ ஒன்னுமே புரியலையே சாந்தி” என்றார் வேதனையுடன்...

ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அருண் வேகமாக எழுந்து வந்து “என்னப்பா புரியலைன்னு சொல்றீங்க, நல்ல நாளாவது மணணாவது மொதல்ல அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா, ரெண்டுபேரும் ரொம்ப பாவம்ப்பா” என்ற அருணின் குரலும் தழுதழுத்தது, அவனுக்கும் புரியும் வயசு தானே....



அருண் அதட்டியப் பிறகு கொஞ்சம் நிதானப்பட்ட மூர்த்தி “ அருண் நீ துரைக்கு போன் பண்ணி டியூட்டில இருக்காரா? வீட்டுல இருக்காரான்னு கேளு?” என்றார்

அப்போது தொட்டிலில் உறங்கிய குழந்தை விழித்துக்கொண்டு அழ, சாந்தி பேரனை தூக்கிக்கொண்டு மான்சி இருந்த அறைக்குள் நுழைந்து கீழே கிடந்தவள் அருகே அமர்ந்து “ மான்சி குழந்தை அழறான் பாரு.... எழுந்து உட்கார்ந்து பால் குடும்மா?” என்று அன்பாக சொல்ல...

அழும் குழந்தையின் குரல் மான்சியை எழுப்பி உட்கார வைத்தது, குழந்தையை வாங்கி மடியில் கிடத்தி பால் கொடுத்த மான்சிக்கு சற்றுமுன் அங்கே சத்யன் விளையாடிய விளையாட்டு ஞாபகம் வர, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்
“ ஸ் மான்சி குழந்தைக்கு பசியாத்தும் போது அழக்கூடாதும்மா,, இப்போ என்ன ஆகிபோச்சுன்னு இப்படி அழற? நாங்கல்லாம் இருக்கோம்ல, சீக்கிரமே நல்லது நடக்கும் மான்சி நீ கவலைப்படாதே?” என்று பலவகையில் ஆறுதல் படுத்தினாள்
துரையிடம் பேசிவிட்டு போனை வைத்த மூர்த்தி அறைக்கு வெளியே இருந்து சாந்தியை அழைத்தார், சாந்தி வெளியே வந்ததும் ..

“ சாந்தி துரைக்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன், அவரு சத்யன் கிட்ட பேசுறேன்னு சொன்னார்” என்றவர் முகத்தில் நிம்மதியுடன் “அப்புறம் இதுக்குமேல கல்யாணத்தை தள்ளி போடுறது சரியில்லைன்னு சொன்னாரு சாந்தி , கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்ல அவருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களாம், நாளைக்கே கல்யாணம் பண்ற மாதிரி ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு, நம்மளை கல்யாணத்துக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக்கிட்டு ரெடியாக சொன்னார், நீ என்ன சொல்ற சாந்தி? ” என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மனைவியின் பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தார்

“ நான் என்னங்க சொல்லப் போறேன், ஆனா நாளைக்கே எப்படி முடியும்ங்க?” என்று குழப்பமாக கேட்டாள் ...

“ அம்மா ஏன் நீங்க வேற குழப்புறீங்க? எல்லாம் முடியும்,, நீங்க பாக்யாவோட மொய் பணத்தை எடுத்துட்டு வாங்க, அப்பாவும் நானும் அரவிந்த் அண்ணனுக்கு போன் பண்ணி வரச்சொல்லி கல்யாணத்துக்கு தேவையானதை வாங்கிட்டு வர்றோம், நீங்க இங்கயே இருந்து அண்ணியைப் பார்த்துக்கங்க, அண்ணன் வந்தா எதுவும் கேட்டு சங்கடப்படுத்தாதீங்க” என்று அருண் நிலைமைக்கேற்ப பேசியதும் ..


 சரி அருண் கொஞ்சம் இரு பணத்தை எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே ஓடினாள்..

அருண் தன் மொபைலில் இருந்து அரவிந்தனுக்கு போன் செய்தான்,....
அன்றுதான் தன் மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டுக்குப் போயிருந்தான் அரவிந்தன் “ என்ன அருண்?” என்றவனிடம் ... “ அண்ணா ஒரு முக்கியமான விஷயம், விஷயம் என்னன்னு அப்பா சொல்லுவாங், நீங்க உடனே பழைய பஸ்ஸ்டாண்ட் கிட்ட வாங்கண்ணா” என்ற அருண் மூர்த்தியிடம் போனை கொடுக்க...

மூர்த்தி போனை வாங்கிக்கொண்டு வெளி வராண்டாவுக்கு வந்து சேரில் அமர்ந்து எல்லாவற்றையும் விபரமாக சொல்லி, துரை நாளைக்கே திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையும் சொன்னார்,

அரவிந்தன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான், சத்யன் மான்சியை அடித்துவிட்டான் என்ற செய்தி அவனை வேதனைப்படுத்தியது, அதேசமயம் மான்சி கேட்ட வார்த்தைகளும் அவனை கவலைகொள்ள செய்தது, இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது, கல்யாணம் பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? என்று குழம்பினான், ஆனால் இவர்களை இணைக்க இதைத்தவிர வேறு வழியுமில்லை

“ அப்பா எங்களுக்கெல்லாம் அவங்க எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரியும், ரெண்டு பேரும் ஒரு யோகி மாதிரி இருந்தாங்க, இவங்க ஒன்னா சேரனும்னு தான் நாங்க எல்லாரும் இவ்வளவு கஷ்ட்டப்பட்டோம், ஆனா இப்போ இப்படி ஆயிருச்சு,, நீங்க சொல்ற மாதிரி ராம் கல்யாணத்தோடயே இவங்களுக்கும் பண்ணியிருக்கலாம், சரி பரவாயில்லை நாளைக்கே ஏற்பாடு பண்ணலாம், நீங்க சீக்கிரமா கிளம்பி வாங்க, நானும் வர்றேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தான்

சாந்தி கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு அப்பாவும் மகனும் உடனடியாக கிளம்ப, சாந்தி மறுபடியும் மருமகளை சமாதானம் செய்ய அறைக்குள் போனாள்
ஆட்டோவில் போகும்போது சத்யனின் செல்லுக்கு அருண் கால் செய்ய சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது, அருண் கவலையுடன் “ அப்பா அண்ணன் போனை ஆப் பண்ணி வச்சிருக்குப்பா” என்றான் கவலையுடன்,,

மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை, எதையாவது பேசி தெளிந்த மனசை மறுபடியும் குழப்பிக்கொள்ள தயாராக இல்லை அவர் ..
அப்போது ராமுவிடம் இருந்து போன் வர, அருண் “ அப்பா மாமா போன் பண்றார்” என்று மூர்த்தியிடம் கொடுத்தான்...

மூர்த்தி ஆன் செய்து “ சொல்லுங்க மாப்பிள்ளை நல்லாருக்கீங்களா?” என்று கேட்க..

ராமு எடுத்த எடுப்பில் “ என்ன மாமா இது, இப்பதான் எல்லாம் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா இருந்துச்சு, அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே, எனக்கு இப்பதான் மாப்ள கால் பண்ணி சொன்னாரு, அதை கேட்டுட்டு பாகி அழுவுது மாமா ” என்றான் கவலையுடன்

“ இதுவும் நல்லதுக்குத்தான் மாப்ள, துரை நாளைக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொன்னாரு, அதான் எல்லாத்தையும் வாங்க பண்ண கடைக்குப் போறோம்” என்று மூர்த்தி சொல்ல...

“ சரி மாமா நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நானும் பாக்யாவும் வர்றோம்” என்றான் ராமு

“ இல்ல மாப்ள கடைக்குப் போய்ட்டு நேரா உங்க வீட்டுக்கு வர்றோம், வந்து உங்க அப்பாகிட்ட சத்யன் கல்யாணத்தை முறையா சொன்ன பிறகு, நீங்க பாக்யாவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாங்க.. அதான் முறை மாப்ள ” என்றதும் சரியென்று போனை வைத்தான் ராமு

இவர்கள் ஆட்டோ போய் நிற்கவும் அரவிந்தன் பைக்கில் வரவும் சரியாக இருந்தது, அவனுடன் அனுசுயாவும் வந்திருந்தாள், இருவரும் கவலையுடன் மூர்த்தியிடம் விசாரித்து விட்டு, அருணிடம் பைக்கை கொடுத்துவிட்டு ஒரு ஆட்டோவில் கிளம்பி கடைக்கு போனார்கள்.. அனுசுயாவின் யோசனைப்படியும் சாந்தியிடம் போன் செய்து கேட்டுக்கொண்டும் எல்லாப் பொருட்களும் வாங்கினார்கள்,

வாங்கியப் பொருட்களை எடுத்துக்கொண்டு அனுசுயாவும் அரவிந்தனும் ஆட்டோவில் சத்யன் வீட்டுக்கு கிளம்ப, அரவிந்தன் பைக்கில் அருணும் மூர்த்தியும் சம்மந்தி வீட்டுக்கு கல்யாணத் தகவல் சொல்ல கிளம்பினார்கள்
வீட்டுக்கு வந்த அனுசுயாவும் அரவிந்தனும் அறை வாங்கி வீங்கிய கன்னமும், அழுதழுது சிவந்த கண்களுமாக மான்சியைப் பார்த்து கலங்கிப் போனார்கள்,

அவர்களைப் பார்த்ததும் கழிவிரக்கம் மேலிட “ அண்ணா நான் தப்பு பண்ணிட்டேனே அண்ணா” என்று அரவிந்தன் கையைப்பிடித்துக் கொண்டு மான்சி கதற, அரவிந்தன் தன் கண்களில் வழிந்த நீரை துடைக்க வழியின்றி மான்சியின் கையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான்...

சற்றுநேரத்தில் மூர்த்தியும் அருணும் வந்துவிட, அவர்களுடனேயே ராமுவும் பாக்யாவும் வந்தனர், வந்தவுடனேயே பாக்யாவும் தனது கண்ணீர் படலத்தை ஆரம்பிக்க.. “ சும்மா சும்மா எல்லாரும் அழுதுகிட்டே இருக்காதீங்க, கல்யாண வீடு மாதிரி கலகலப்பா இருங்க” என்று மூர்த்தி அதட்டியதும் தான் அங்கே கண்ணீர் ஓய்ந்தது...

எல்லோருக்கும் உணவு தயார் செய்து, சாப்பிட்டு முடிக்கும் வரை சத்யன் வீட்டுக்கு வரவேயில்லை, அவர் வராமல் சாப்பிடமாட்டேன் என்றவளை சாந்தியும் மூர்த்தியும் வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்...

எல்லோரும் சத்யனை காணாமல் தவித்துப் போயிருக்க.. அப்போது துரையிடமிருந்து போன் வந்தது, மூர்த்தி அவசரமாக ஆன் செய்ததும் “ மூர்த்தி சார் சத்யன் இங்கதான் என் வீட்டுக்கு வந்திருந்தான், ரொம்ப வேதனையா இருந்ததால என்னை கடைக்குப் போகலாம் வான்னு கூப்பிட்டான், நான் போகலைன்னா அவன் மட்டும் குடிச்சிட்டு ஏதாவது ஆயிடப்போகுதுன்னு நானும் கூடப் போனேன், ஆனா என்ன நெனைச்சானோ மொத்தத்தையும் எனக்கு குடுத்துட்டு அவன் ஒரு பீர் மட்டும் குடிச்சிட்டு வீட்டு போறேன்னு கிளம்பிட்டான், இப்போ அங்கதான் வருவான், எதுவும் பேசாம சாப்பிட குடுத்து படுக்க வைங்க, காலையில நானும் ரமாவும் கிளம்பி வர்றோம்” என்று இடைவெளி விடாமல் பேசிவிட்டு மூர்த்தியின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தார், அவர் குரலிலேயே குடித்திருப்பது தெரிந்தது ..

எப்போதாவது உடன் வேலை செய்பவர்கள் திருமண விசேஷங்களில் மட்டும்தான் சத்யன் குடிப்பது வழக்கம், அதுவும் அளவோடு வெறும் பீர் மட்டுமே, இன்று அது அதிகமாகாமல் அதே அளவோடு வருவது மூர்த்தியின் மனதுக்கு நிம்மதியாக இருந்தது, துக்கம் என்று அதிகமாக குடிக்காமல் மனக்கட்டுப் பாட்டுடன் வரும் மகனை நினைத்துப் பெருமையாக இருந்தது

“ சத்யன் வீட்டுக்குத்தான் வர்றானாம், எல்லாரும் போய் படுங்க, நான் அவன் வந்தா பேசிக்கிறேன், காலையில முகூர்த்தம், எல்லாரும் சீக்கிரமா எழுந்திருக்கனும் ” என்று மூர்த்தி சொன்னதும் பெண்கள் அனைவரும் ஹாலில் படுத்துக்கொள்ள, ஆண்கள் எல்லோரும் வழக்கம் போல மாடிக்குப் போய் படுத்துக் கொண்டனர்

மூர்த்தி மட்டும் சாப்பிடாமல் மகனுக்காக வாசலில் அமர்ந்திருந்தார், சற்றுநேரத்தில் சத்யன் பைக் வந்து நிற்க்க, இறங்கி வீட்டுக்குள் வராமல் தலைகுனிந்து “ அப்பா நான் மேல போய் தூங்குறேன்” என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்...




மூர்த்தி எதுவும் சொல்லவில்லை அவன் பின்னாலேயே ஏறிப் போனார், சத்யன் அங்கே படுத்திருந்த அரவிந்தன் ராமு அருண் மூவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மாடியில் இருந்த வாட்டர் டேங்க் குழாயைத் திறந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு அங்கே கொடியில் கிடந்த டவலால் முகத்தை துடைத்துக்கொண்டு “ எப்ப வந்தீங்க மாப்ள? நீ எப்ப வந்த அரவிந்தா?” என்று அவர்களின் முகத்தைப் பார்க்காமல் கேட்டுவிட்டு அருண் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டான்

ராம் “ ஈவினிங் வந்தோம் மச்சான்” என்றான்...

“ மதியம் வந்தோம்” என்ற அரவிந்தன் முறைப்புடன் திரும்பிக்கொண்டான்...

மூர்த்தி மகன் அருகே வந்து அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ சத்யா சாப்பிட்டு படுப்பா மதியமும் சாப்பிடவே இல்லையாமே” என்று கவலையுடன் அழைத்தார்

கவிழ்ந்து படுத்து “ இல்லப்பா வேனாம் பசியில்லை” என்று மறுத்தான் சத்யன்

“ நீ வருவேன்னு நானும் சாப்பிடலை சத்யா?” என்று மூர்த்தி சொன்னதும் சத்யன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..

“ அருண் கீழ போய் எனக்கும் அண்ணனுக்கும் சாப்பாடு எடுத்துட்டு வா, இங்கயே சாப்பிட்டுக்கிறோம்” என்று மூர்த்தி சொன்ன அடுத்த நிமிடம் அருண் எழுந்து கீழே ஓடினான்

அவன் போனதும் சத்யன் பக்கம் திரும்பிய மூர்த்தி “ சத்யா இது வேணாம்பா, இப்படித்தான் நானும் ஒரு சின்னப் பிரச்சனைக்காக ஆரம்பிச்சேன் கடைசில அது என் பத்து வருஷ வாழ்க்கையை முழுங்கிடுச்சு, மனசுல கஷ்டம்னு இதைத் தொட்டா பிறகு மீண்டு வரவே முடியாது சத்யா, இது வேண்டவே வேண்டாம்பா” என்று வேதனையுடன் கூறி விட்டு மகனின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டார்

சத்யன் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு “ இனிமே இப்படி நடக்காதுப்பா, பிரச்சனை தீர்வு இது இல்லைன்னு எனக்குத் தெரியும், அதனால்தான் பாதில எழுந்து வந்துட்டேன்,, ஆனா அப்பா என்னால அவ சொன்னதை தாங்கவே முடியலைப்பா, நான் அவளை ரொம்ப லவ் பண்ணேன்” என்றவன் அதற்க்கு மேல் பேசமுடியாமல் உடல் குலுங்க கண்ணீர் விட...

அரவிந்தனுக்கு அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை, எழுந்து சத்யன் வேகமாக அருகில் வந்து அவனை எழுப்பி அமர வைத்து தன் தோளோடு அணைத்துக்கொண்டான் “ என்ன சத்யா இது சின்னப்பசங்க மாதிரி சண்டைப் போட்டுகிட்டு ஆளுக்கொருப் பக்கம் அழுதுகிட்டு இருக்கீங்க, மான்சி ஏதோ தெரியாம பேசிட்டா சத்யா, அந்த வார்த்தையை சொல்லிட்டு அவ அழுவுறதை பார்க்க முடியலைடா” என்று ஏதேதோ சொல்லி சத்யனை சமாதானம் செய்ய முயன்றான்.. ராமுவும் அவனுடன் சேர்ந்து கொண்டான்

கண்களை துடைத்துக்கொண்டு அரவிந்தனை விட்டு விலகி அமர்ந்த சத்யன் “ யார் என்ன சொன்னாலும் என் மனசு சமாதானம் ஆகாது அரவிந்தா,, நான் அவகிட்ட அப்படியொரு வார்த்தையை எதிர்ப்பார்க்கலை” என்றவன் உடலில் ஒரு நிமிர்வுடன் “ சரி இதோட இதைப்பத்தி யாரும் எதுவும் பேசவேண்டாம், இது அவளும் நானும் சம்மந்தப்பட்ட பிரச்சனை, என்னிக்கு தீருதோ தீரட்டும், அதுவரைக்கும் யாரும் இது விஷயமா என்கிட்ட பேசாதீங்க” என்று குரலில் உறுதியுடன் கூறினான்..

சத்யன் இப்படி சொன்னப்பிறகு என்ன பேசுவது என்று மூவரும் அமைதியானார்கள், அருண் எடுத்து வந்து வைத்த உணவை சாப்பிட மறுத்த சத்யனை, நானும் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் செய்து மூர்த்தி அவனை சாப்பிட வைத்தார்...

சாப்பிட்டு முடித்தவுடன் “ சத்யா மனசைப் போட்டு குழப்பிக்காம படுத்து தூங்கு நாளைக்கு காலையில ஜலகண்டேஸ்வரர் கோயில்ல உனக்கும் மான்சிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கோம், அதனால சீக்கிரமா எழுந்திருக்கனும்” என்று மூர்த்தி சொன்னதும்..

சீற்றத்துடன் நிமிர்ந்த சத்யன் “ அப்பா இப்போ என் மனசு சரியில்லை அதனால கல்யாணமும் தேவையில்லை இன்னும் கொஞ்சநாள் போகட்டும்” என்று கடுமையான குரலில் கூற..


மூர்த்தி அவனைவிட கடுமையாக குரலை உயர்த்தி “ இன்னும் கொஞ்சநாள் கழிச்சுன்னா எப்படா பண்றது? கையில ஒரு குழந்தையோட கழுத்துல தாலி இல்லாம எத்தனை நாளைக்கு ஒரு பொண்ணை வீட்டுல வச்சிருக்க முடியும், அக்கம்பக்கம் கேட்கிறவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் ஆயிடுச்சுன்னு பொய் சொல்லி சமாளிச்சி கிட்டு இருக்கோம், இதுக்கு மேல தள்ளிப் போட முடியாது, நாளைக்கு கல்யாணம்னு நான் முடிவு பண்ணது பண்ணதுதான், உங்க ரெண்டு பேர் சண்டையை கல்யாணத்துக்குப் பிறகு வச்சுக்கங்க” என்று கடுமையாக எச்சரித்து விட்டு கீழே போய்விட்டார்..

மூர்த்தியின் கடுமை சத்யனை அடக்கியது, சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டான்,

அரவிந்தன் ராமுவின் பக்கம் திரும்பி “ மச்சான் தூங்கிட்டியா?” என்று கேட்க...

“ இல்ல மாப்ள” என்று ராமு குரல் கொடுத்தான்

“ தூக்கம் வரலை, சித்தப்பு தான் கீழ போயிடுச்சே ஒரு தம்மு இருந்தா குடு மச்சான் ஊதித்தள்ளலாம்” என்றபடி எழுந்தவன் “ ங்கொய்யால இவனுங்க புருஷன் பொண்டாட்டி சண்டையில நம்மளை எல்லாம் பிரிச்சு மொட்டை மாடியில படுக்க வச்சு காய விட்டுட்டானுங்க” என்று சலிப்புடன் கூறிவிட்டு ராமுவிடம் வந்தான்

அவன் சூழ்நிலையை இலகுவாக்கத்தான் அப்படி கூறினான் என்று சத்யனுக்குத் தெரியும் அரவிந்தன் சலித்துக்கொண்டதில் அருணுக்கு சிரிப்பு தாங்கவில்லை, தலையணையில் முகத்தை கவிழ்த்துக்கொண்டு குலுங்கி சிரிக்க, அவன் அருகே படுத்திருந்த சத்யனின் முகத்திலும் புன்னகையின் சுவடுகள்...

இதே வேறொரு சூழ்நிலையாக இருந்தால் “ உங்களை யாருடா தனியா வந்து படுக்கச் சொன்னது, போ போய் பொண்டாட்டியை கூட்டி வந்து வாட்டர் டேங்க் மேல இடமிருக்கு போய் படுத்துக்கடா” என்று பதிலுக்கு சத்யனும் வாரியிருப்பான், ஆனால் இப்போது அவனால் மனம்விட்டு சிரிக்க கூட முடியாமல் இருந்தான்

ராமு தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அரவிந்தனிடம் ஒன்று கொடுத்துவிட்டு தனக்கொன்று எடுத்துக்கொண்டு “ மச்சான் உனக்கு வேனுமா ” என்று கேட்க...

சத்யனுக்கும் இப்போது தேவைதான், ஆனால் தம்பி அருகில் இருக்கிறானே என்று தயங்கினான், என்ன நினைத்தானோ அருண் எழுந்து சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு “ அண்ணா கீழ போய் வச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்

சத்யன் எழுந்து ராமுவிடம் போய் சிகரெட்டை வாங்கி அரவிந்தன் சிகரெட்டில் பற்ற வைத்துக்கொண்டு கைப்பிடி சுவற்றில் ஏறி அமர்ந்து புகைக்க ஆரம்பிக்க.. மற்ற இருவரும் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தனர், வானம் தெளிவாக இருந்தாலும் கருமையைப் பூசிக்கொண்டு இருந்தது சத்யனின் மனதைப்போல

“ சத்யா இந்த பொண்ணுங்களே இப்படித்தான், எதை எப்ப பேசனும்னு தெரியாம ஏடாகூடமா எதையாவது சொல்லிட்டு இப்படி அவங்களும் அழுது நம்மளையும் அழ வச்சிருவாங்க, ஆனா பார்க்கப் போன நயாபைசா பிரயோஜனம் இல்லாத விஷயமா இருக்கும், கொஞ்சநேரம் கண்ணை மூடிக்கிட்டு யோசிச்சோம்னா எல்லாமே தெளிவாயிடும் ஆனா நம்ம பயலுகளுக்கு தான் யோசிக்கிறதே பிடிக்காதே, பொண்டாட்டி கூட சண்டை வந்த உடனே டாஸ்மார்க் போகவேண்டியது, அப்புறம் அதே போதையோட நடந்ததையே நெனைச்சு நெனைச்சு பிரச்சனையை பெருசாக்குறது, இதெல்லாம் தேவையாடா, யாராவது ஒருத்தர் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனா பிரச்சனை சால்வாயிடம்ல ” என்று அரவிந்தன் நீளமாக பேசிக்கொண்டே போக, சத்யன் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அப்படியே அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான்



“ என்னடா நான் இவ்வளவு பேசுறேன் நீ எதுவுமே பேசலை,, பொண்ணுங்க மென்மையானவங்கடா நம்ம கோபத்தை தாங்கமாட்டாங்க ,, நாமதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகனும், இப்போ நேத்து மதியம் கூட எங்க வீட்டுல ஒரு சம்பவம், அனு இட்லிக்கு தேங்காய் சட்னி செய்தா, எனக்கு தேங்காய் சட்னியேப் பிடிக்காது, ஏன் இதைப் பண்ணன்னு கேட்டேன், எனக்கு தேங்காய்ச் சட்னி ரொம்ப பிடிக்கும்னு சொன்னா, அதோட நான் எதுவும் பேசலை நானும் அதையே போட்டுகிட்டு சாப்பிட்டேன், இதுபோல விட்டுக்கொடுத்து போயிட்டா பிரச்சனையே வராதுடா” என்று அரவிந்தன் சொல்லிகொண்டு இருக்கும் போதே சத்யன் அவனை தீயாய் முறைக்க..

‘ ச்சே சத்யன் பிரச்சனை பெரிசு இதுக்கு தேங்காய்ச் சட்னியை உதாரணம் சொன்னது தப்போ?, இன்னும் கொஞ்சம் பெரிசா யோசிச்சு சொல்லிருக்கனுமோ? என்று எண்ணி அரவிந்தன் அசடு வழியும் போதே, “ ஆமாம் மச்சான், மாப்ள சொல்றதும் சரிதான் ” என்று ராமு சொல்ல...

‘ அடச்சே, இவனே என்னை கொல்ற மாதிரி வெறில இருக்கான், இதுல இவன் வேற எதுக்கெடுத்தாலும் ஆமாம் சாமி போட்டுகிட்டு’ என நினைத்த அரவிந்தன் ராமுவைப் பார்த்து “ ஏன் மச்சான் எப்படி இந்த மாதிரி யாரு என்ன சொன்னாலும் ஆமாம் ஆமாம்னு தலையாட்டுறீங்க, இதுக்குன்னு எங்கயாவது ட்ரைனிங் குடுக்குறாங்களா? சொல்லுங்க, நானும் சத்யனும் நாலு நாளைக்கு போய்ட்டு வர்றோம்” என்று ராமுவை நக்கல் செய்யவும், மறுபடியும் சத்யன் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகையின் தடம் தெரிந்தது..

“ ஸ் யப்பா, இவனை சிரிக்க வைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு, ராமு மச்சான், நீங்க பாக்யா சொல்றதுக்கு மட்டும்தான் தலையாட்டு வீங்கன்னு தெரியும், சும்மா ஒரு காமெடிக்காக சொன்னேன் நீங்க கோவிச்சுக்காதீங்க” என்று மறுபடியும் வேறு மாதிரி ராமுவை நக்கல் செய்தான் அரவிந்தன்...

“ அடேயப்பா குச்சி மாதிரி இருந்துகிட்டு எல்லாரையும் இந்த வாங்க வாங்குறீங்க, எங்கப்பா கூட சொன்னாரு, பென்சில் மாதிரி இருந்துக்கிட்டு நீங்க ரொம்ப பேசுறதா..” என்று ராமு பதிலுக்கு சொன்னதுதான் தாமதம்..



சுவற்றில் இருந்து குதித்து இறங்கிய அரவிந்தன் “ என் உடம்பைப் பத்தி பேசுற யோக்கியதை உங்க பரம்பரைக்கே இல்ல மச்சான், அதுவும் உங்கப்பா பேசினார்னு வைங்க, அப்புறம் அவ்வளவு தான்” என்று பயங்கர டென்ஷன் ஆனான் ..

மாமனாரைப் பற்றி பேசினாலே அரவிந்தனுக்கு ஆகாது என்று சத்யனுக்குத் தெரியும்... தன் விரலிடுக்கில் இருந்த சிகரெட்டின் கடைசி தம்மை இழுத்து அதன் தலையை சுவற்றில் நசுக்கி விரலால் சுண்டி எறிந்துவிட்டு “ உன் மாமனார் பேசினா என்னடாப் பண்ணுவ” என்று கேட்டான் நிதானமாக 


No comments:

Post a Comment