Friday, November 20, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 4

இப்போது கதவு திடுமென்று திறக்கப்படும் ஓசை.யாரென்று ஆவலோடு அபர்ணா பார்க்க, அவள் அம்மா நிர்மலா தேவி.

"அம்மா" என்று ஓடி சென்று கட்டி அணைத்து கொள்ள முயற்சி செய்ய விலகினாள் நிர்மலா.

"நீ யார், உனக்கு என்ன வேண்டும்".


"அம்மா என்னம்மா, எதுக்கும்மா இப்படி ஒதுக்குறீங்க. நான் சொல்றதை கேளுங்க அம்மா."

"நீ எதையும் பேச வேண்டாம். உன்னை மாதிரி ஒரு பெண்ணை பெத்தேன் பாரு என்னை சொல்லணும்.நீஒரு ஓடுகாலி என் முன்னாலே நிற்க கூடாது.வெளியே போ"

சத்தம் கேட்டு தாத்தா ஓடி வந்து, "நிர்மலா, குழந்தையை வாசல்ல வச்சு பேசாதே. உள்ளே வர சொல்லு.என்ன இருந்தாலும் அவள் நம்ம வீட்டு பொண்ணு. என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு விசாரிக்கலாம். அதை விட்டு நீ இப்படி பண்ணுறது சரி இல்லை."



"அப்பா, நீங்க முதல்ல தலை இடாதிங்க. இது எனக்கும் அவளுக்கு உள்ள பிரச்சனை."அபர்ணா வாயடைத்து போனாள்.

"என்னடிபாக்கிற.உன் அப்பன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போன போது கூட உனக்காக வாழ்ந்தேனே, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போ."

"அம்மா நான் எங்கம்மா போவேன்."

"அதுதான் ஒரு ஆளை கூட்டி வந்துருக்கியே இவன் கூட போக வேண்டியது தானே. ஏண்டி உனக்கு கல்யாணம் வேணுன்மு சொன்னா நான் பண்ணி வைக்க மாட்டேனா. போயும் போயும் இவன்தான் கிடைச்சானா.?"

"இல்லை அம்மா ...." என்று பதில் சொல்ல வந்த அபர்ணா சொல்வதை கேட்காமல் கதவை சாத்தி விட்டாள்.

தலையில் கைவைத்தபடி அருகில் இருந்த படியில் அமர்ந்தாள் அபர்ணா.
கண்களில் கண்ணீர் வழிய உட்கார்ந்து இருந்த அபர்ணாவை பார்க்க ரவிக்கு பாவமாக இருந்தது.

"ஹலோ அபர்ணா, அபர்ணா" என்று கூப்பிட, மெல்ல சுயநினைவுக்கு வந்தாள்.

"அபர்ணா, உங்களோட வேற சொந்தக்காரங்க யாராவது இருந்தா சொல்லுங்க, அவங்க வீட்டுக்கு போகலாம்."

கண்ணீருடன் 'இல்லை' என்று தலை அசைத்தாள்.

"சரி பிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களா".

"இல்லை, எனக்கு க்ளோஸ் பிரெண்ட்ஸ் ரெண்டு பேருதான். ரெண்டு பேரும் சென்னைல இருக்காங்க."

"ஓகே, அப்படின்னாஉங்க அப்பாகிட்ட பேச வேண்டியதுதானே".

அபர்ணா முகத்தில் சிரிப்பு திரும்ப வந்தது.
ரவி தனது செல் போனை கொடுக்க, அப்பா செல் எண்ணை அடித்தாள்.எடுத்து, "ஹலோ, யார் பேசுறது".

"அப்பா நான்தான்பா அபர்ணா பேசுறேன். அம்மா என்னை வீட்டில சேர்க்க மாட்டேன்னு சொல்றாங்க. நான் உங்க கூடவே வரட்டுமா.?"

"இல்லை அபர்ணா, நிர்மலா எல்லா விஷயமும் சொன்னா. முதல்ல நீ வீட்டை விட்டு வந்தது பெரிய தப்பு. இங்கே நீ வர முடியாது, சித்தி ஒத்துக்க மாட்டா. பணம் வேணும்ணா சொல்லு, அனுப்பி வைக்கிறேன். அடிக்கடி எனக்கு போன் பண்ணாதே"போனை கட் செய்ய,அபர்ணா செய்வதறியாமல் திகைத்தாள்.

பக்கத்தில் இருந்த ரவிக்கு எல்லாம் புரிந்தது. ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விட வேண்டியதுதான் என்று நினைத்து கொண்டே, அபர்ணா 'இனிமே என்ன பண்ணுறது'.அபர்ணா கண்ணில் கண்ணீர் வற்றி போனது.
"ரவி சார் இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல.இப்போதைக்கு எனக்கு உங்களை தவிர யாரையும் தெரியாது. உங்க வீட்டுக்கு என்னை கூட்டி போக முடியுமா?". "அபர்ணா, என்னோட வீடு இருக்கும் இடம் திருநெல்வேலி. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, போகலாம்."

அபர்ணா ரவி முகம் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த கனிவு, அன்பு, அக்கறை அவளை நெகிழ வைத்தது. தன்னை அறியாமல் தலை அசைக்க, இருவரும் பஸ் ஸ்டாண்ட் சென்றனர்.

இருவரையும் சுமந்து கொண்டு அந்த நள்ளிரவு நேரத்தில் தமிழக விரைவு பேருந்து இருட்டை கிழித்து கொண்டு திருநெல்வேலியை நோக்கி பறந்தது.


காலை ஐந்து மணி அளவில் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர, ரவி அபர்ணாவை தூக்கத்தில் இருந்து எழுப்ப, தூக்கம் இன்னும் முழுக்க கலையாமல் கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள்.

அருகில் நின்று கொண்டு இருந்த ரவியை பார்த்தவுடன், ரவி "அபர்ணா நாம இங்கே இறங்கி நாம டாக்ஸில போடலாம்.கோவில்பட்டி போற ரூட்ல பத்தாவது கிலோமீட்டர்ல லெப்ட் சைடு திரும்பி உள்ளே ரெண்டு கிலோ மீட்டர் போனா நம்ம தோட்டம் வரும். போகலாமா?" என்று கேட்க, தூக்க கலக்கத்தில் தலை அசைத்தாள்.

பஸ் ஸ்டாண்டில் காத்து இருந்த அண்ணாச்சியின் இண்டிகா காரில் அபர்ணா பின் சீட்டில் ஏறி கொள்ள, ரவி முன் சீட்டில் ஏறி கொண்டான்.

இன்னும் விடிந்தும் விடியாத இரவு, விடி வெள்ளி மட்டுமே வானத்தில் தெரிய கார் கண்ணாடி வழியாக அபர்ணா தூரத்தில் தெரிந்த வறண்ட நிலங்களை பார்த்து கொண்டே வந்தாள். பதினைந்தாவது நிமிடத்தில் வண்டி உள்ளே திரும்ப, ரவி சொன்னது போல் இரண்டாவது கிலோ மீட்டரில் தார் ரோட்டில் இருந்து மண் ரோடு பிரிந்து செல்ல, பரந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருக்க, அசந்து போனாள். வழி எங்கும் காய்ந்த நிலங்களையே கண்டு வந்த அபர்ணாவுக்கு அது ஒரு இனிமையான அனுபமாக இருந்தது.

உள்ளே ஒரு கிரௌண்ட் நிலத்தில் கட்டப்பட்டு இருந்த அந்த மாடி வீட்டை பார்த்த உடனே அவளுக்கு பிடித்து போனது.கண்ணை உறுத்தாத இளம் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்த அந்த வீட்டை கார் நெருங்கியுடன் முதலில் ரவி இறங்கினான். பின்னாலே அபர்ணா.

அபர்ணா அடிபட்ட இடங்களில் கட்டு போடப்பட்டு இருந்தாலும், வலி அதிகம் இல்லை என்பதை உணர்ந்தாள்.

ரவி பணத்தை கொடுத்து டாக்ஸியை அனுப்பி விட்டு, கதவை திறக்க, உள்ளே இருந்து பக் டாக் ஓடி வந்து ரவியிடம் அடைக்கலம் புகுந்து அவன் முகத்தை நக்க ஆரம்பித்தது. "டேய் ரவுடி ஏண்டா மூஞ்சை நக்குற. இது பேட் ஹாபிட்". அதன்இரண்டு கைகளையும் பிடித்து ராத்தோரை அபர்ணாவுக்கு அறிமுகபடுத்தி வைத்தான்.

"ஆமா,அதென்ன ரவுடி ராதோர்ன்னு பேரு."

"இவன் வந்து ஆறு மாசம் ஆகுது. என்னை தவிர யார்கிட்டயும் அடங்க மாட்டான். அதனால இவனை நான் செல்லமா ரவுடி ராதோர்ன்னு கூப்பிடுவேன்".
உள்ளே நுழைந்து, ஹாலை ஒட்டி இருந்த அறையை காண்பித்து, "அபர்ணா நீங்க அந்த ரூம்ல படுத்துக்கங்க". என்று சொல்லி ரூமை காண்பிக்க, தனது கைப்பையில் இருந்த நைட்டியை எடுத்து கொண்டு ரூமுக்குள் இருந்த அட்டாச்டு பாத்ரூமில் உடை மாற்றி கொண்டு வந்தாள்.புதிய படுக்கை, பெட் சீட், எல்லாம் கலை உணர்வோடுசீராக அமைந்து இருக்க, அசந்து போனாள்.

'எங்கே ரவியோட குடும்பத்தை காணோம்', என்று யோசித்தபடி, 'ஒருவேளை ஏதாவது வெளி ஊருக்கு போய் இருப்பாங்க. வந்த உடனே பேசலாம்' என்று நினைத்தபடி, இருக்க, கதவை தட்டும் சத்தம். "திறந்து தான் இருக்கு உள்ளே வாங்க ரவி"


"அபர்ணா, கதவை உள்ளே தாழ்பாள்போட்டிட்டு தூங்குங்க"சொல்லி விட்டு ரவி நகர, அவன் அக்கறை, கரிசனம் அவளுக்கு நிம்மதியை கொடுத்தது.

காலை பத்து மணி, முகத்தில் சுள்ளென்று அடித்த வெயில் அவளை தட்டி எழுப்ப, அபர்ணா எழுந்து தனது இரு கைகளை தேய்த்து கொண்டு முகத்தில் வைத்து விழித்தாள்.சுற்று முற்றும் பார்க்க, அந்த அறையில் இருந்த டேபிள், டேபிள் லாம்ப்,சுவற்றில் இருந்த படங்கள், அனைத்தும் ஒரு ஒழுங்குடன் இருந்தன.எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்த உடன் கதவை திறந்து வெளியே வந்தாள்.

இரவு சரியாக பார்க்காத ஹால் கண்ணில் பட, அந்த பரந்து விரிந்த ஹால், மர நாற்காலிகள், ஊஞ்சல், ஓரத்தில் இருந்த டிவி, அருகில் இருந்த டேபிளில் அமர்ந்து எழுதி கொண்டு இருந்த ரவி கண்ணில் பட்டான்.

"ரவி சார்" என்று அழைத்தபடி அருகில் சென்ற அபர்ணாவை கண்ட உடன் நோட்டை மூடி வைத்து விட்டு"வாங்க அபர்ணா,உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். முதல்ல இந்த அருகம்புல் ஜூஸ் குடிங்க" என்று சொன்ன உடன் "என்ன அருகம்புல்லா" என்று முகத்தை சுழித்தாள்.

"வெறும் வயிற்றில் இதை குடிச்சால் ரத்தம் ஓட்டம் நல்லா இருக்கும், அது மட்டும் இல்லை புத்தி சுறுசுறுப்பாக இருக்கும்"."சரி" என்று வெறுப்போடு வாங்கி முகத்தை சுரூக்கி கொண்டு குடிக்க, சிரிக்க ஆரம்பித்தான் ரவி.

"நல்ல விஷயங்கள் எல்லாமே இப்படிதான் ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்".

"நாம ஒரு அரை மணி நேரம் கழிச்சு சாப்பிடலாம். முதல்ல உங்களுக்கு நான் வீட்டை சுற்றி காண்பிக்கிறேன்."

"நாம இருக்கிற இடம் ஹால். அதை ஒட்டி இருக்கிறது இரண்டு பெட்ரூம்வித் பாத்ரூம், கடைசில இருப்பது சமையல் அறை, எதிரே பூஜை ரூம். மாடிப்படிகள் பூஜை ரூமை ஒட்டி இருக்கு.வாங்க அபர்ணா மாடிக்கு போகலாம்."

"இது லைப்ரரி ரூம். இது ஜிம். இது ஹோம் தியேட்டர். இது பால்கனி."

"எல்லாமே கலை உணர்வோட கட்டி இருக்கீங்க. ஆமா ஒரு விஷயம் கேக்கனும்னு நினைச்சேன். உங்க மனைவி, குழந்தை எல்லாம் எங்கே. வெளியூர் போய் இருக்காங்களா?"

"அது ஒரு பெரிய கதை. இங்கே உட்கார்ந்து பேச முடியாது. கீழே போகலாம்" என்று ரவி சொல்ல குழம்பி போனாள்."ஒருவேளை ரெண்டு பேருக்கும் இடைல சண்டை வந்து பிரிஞ்சு இருப்பாங்களோ. ச்சே ச்சே இருக்காது. இவரை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி இருக்குது"என்று நினைத்து கொண்டே ரவியை தொடர்ந்து கீழே வந்தாள்.

அதற்குள் ரங்கநாயகி அம்மாள் வீட்டு வேலையாக வந்து சேர, அபர்ணாவை பார்த்து ஆச்சர்யபட்டாள்.




"ரவி தம்பி, யார் இந்த பொண்ணு" என்று ஆரம்பிக்க, ரவி இடை மறித்து, "அபர்ணா இவங்க நம்ம வீட்டு வேலை பார்க்கிறவங்க. பல வருஷமா தெரியும். பேரு ரங்கநாயகி அம்மா".

"அம்மா, இந்த பொண்ணு பேரு அபர்ணா. இவங்க எனக்கு தெரிஞ்சவங்க. ஒரு பிரச்சனைல மாட்டிட்டாங்க. அது தீரும் வரை இங்கே இருப்பாங்க. சரியா", என்று சொல்ல அந்த அம்மா, அபர்ணாவை வாயை திறந்து பார்த்து கொண்டே "சரிப்பா"என்று உள்ளே போய் விட்டாள்.

"அபர்ணா, இந்த அம்மா நல்ல மாதிரி. என்ன வாய் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால இவங்க கிட்ட பேசும்போது கொஞ்சம் ஜாக்ரதையா பேசுங்க".

அபர்ணா புரிந்து கொண்டு தலை ஆட்ட, டேபிள் இருந்த பூப்போல இட்லி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மற்றும் சாம்பார் மணக்க நல்ல பசியோடு இருந்த அபர்ணா வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். அருகில் மெதுவாக சாப்பிட்டு கொண்டு இருந்த ரவி "பாத்து பாத்து மெதுவா சாப்பிடுங்க" என்று மெல்லிய கிண்டல் கலந்து சொல்ல, சரியென்று தலை அசைத்தாலும், வேகமாக சாப்பிட்டு முடித்தாள்.

"சாதாரணமா வீட்டில நாலு இட்லிக்கு மேல சாப்பிட மாட்டேன். ஆனா, இந்த மல்லிகை பூப்போல இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் அருமையா இருக்கு. அதனால ஏழு இட்லி உள்ளே போய்டுச்சு. அப்பாடி"."ஆமா இதை எல்லாம் எந்த கடைல இருந்து வாங்கி வந்தீங்க."

"கடைல....சரிதான். இது எல்லாம் நான் செஞ்சது."

ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள். "என்ன நீங்க செஞ்சதா. நம்பவே முடியலை".சிரித்து கொண்டே, "இதுக்கே வாய் பிளந்தா எப்படி. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு, வாங்க போகலாம்".

கை கழுவி கொண்டு இருவரும் வெளியே வர, அந்த சூர்ய வெளிச்சத்தில் பச்சை நிற வயல், காய்கறி தோட்டங்கள் பளபளத்தன.எங்கு நோக்கிலும் பசுமை.

"இது எவ்வளவு ஏரியா இருக்கும்."

"நீங்களே கெஸ் பண்ணுங்க".

"ஒரு அம்பது ஏக்கர்".

"இல்லை நூறு ஏக்கர்."


"உண்மையா, அது எப்படி, உங்க லேன்ட் மட்டும் பசுமையா இருக்கு. மத்த இடம் எல்லாம், வெட்ட வெளியா இருக்கு. அது மட்டும் இல்லை தண்ணீர் கிடைப்பதுக்கான இடத்தையும் காணம். எப்படி நீங்க மேனேஜ் பண்ணுறீங்க".

"அது ஒண்ணும் பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை. இந்த ஏரியா ஒரு ட்ரைலேன்ட். ஒரு ஏக்கர் ஐம்பதாயிரம் போகுது.நான் ஒரு வருஷத்துக்கு முன்னால வாங்கி, இதை செம்மை படுத்தி, சொட்டு நீர் பாசனம், சோலார் பவர் மூலமா நிறைய மாறுதல் கொண்டு வந்து இருக்கேன். இந்த வீட்டு மேல இருக்கிற சோலார் பேனல் போட எனக்கு நாலு லட்சம் செலவாச்சு.எனக்கு அடுத்த ஐம்பது வருசத்துக்கு கரண்ட் பிரச்சனை கிடையாது. தமிழ்நாடு தினமும் பத்து மணி நேர பவர் கட்ல தவிக்கும் போது, எனக்கு மட்டும் எப்போதும் கரண்ட் உண்டு" என்று சொல்லி சிரிக்க, கூடவே சிரித்தாள்.

"இன்னும் இங்கேயே நின்னா வெயில்லதலை உருகிடும் வாங்க வீட்டுக்குள்ளே போகலாம்."

அதற்குள் வீட்டு வேலைமுடித்து விட்டு எதிரே ரங்கநாயகி அம்மாள் வர, அபர்ணா அவளை பார்த்து சிநேகமாக சிரித்தாள்.

"சரி கண்ணு நான் நாளைக்கு வரேன்" என்று ரவியிடம் சொல்லி விட்டு சென்றாள்.

"ஆமா உங்களோட ரவுடி எங்கே".

"அவன் இங்கே தான் திரிஞ்சுகிட்டு இருப்பான்" என்று சொல்லியபடி, "வாங்க அபர்ணா நாம மாடிக்கு போகலாம்". முன் கதவை தாழ்பாள் போட்டு விட்டு படி ஏறினான்.

கூடவே வந்த அபர்ணா, "நான் ஒண்ணு சொல்லணும். எனக்கு உங்களை விட வயசு கம்மி, என்னை நீங்க மரியாதையா கூப்பிட வேணாம்.ப்ளீஸ்".யோசித்த ரவி, "ஓகே, ஆனா ஒரு கண்டிசன். என்னை சார்ன்னு கூப்பிட கூடாது.அப்பதான் நீங்க சொன்னதை கேட்பேன்"

"சரி ஓகே, ரவி உங்களோட லைப்ரரியை நான் சரியா பார்க்கல. எனக்கு புக்ஸ் படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.பனிரெண்டாவது படிக்கும்போது சாண்டில்யனோட கடல் புறா, யவன ராணி, என்டமூரியோட துளசி தளம், சுஜாதாவோட கதைகள், பாலகுமாரன் கதைகள் எல்லாம் படிச்சு இருக்கேன். வேற ஏதாவது புக்ஸ் உங்ககிட்ட இருக்குமா?" என்று தயக்கத்தோடு கேட்க, "அபர்ணா உள்ளே வந்து பாரு" என்றான் ரவி.

சுவற்றில் பதித்து இருந்த அலமாரியில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
முதலில் கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன், காண்டேகர், டாக்டர் மு வ, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா,எண்டமூரி, இந்திரா சௌந்தர் ராஜன் போன்ற எழுத்தாளர்கள் புத்தகம் இருக்க அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.எல்லா புத்தகங்களையும் ஓடி ஓடி சென்று தொட்டு பார்த்து சின்ன குழந்தை போல் குதித்தாள்.


"என்னால நம்பவே முடியலை. ஒரு இருநூறு புக் இருக்குமா?"

"இல்லை ஆயிரத்துக்கும் மேல. உள்ளே அடுத்த வரிசையில் கூட புத்தகங்கள் இருக்கு" என்று அலமாரியின் உள்ளே காண்பிக்க, அபர்ணா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

"ஹையா, வாஸந்தி, லக்ஷ்மி, ரமணி சந்திரன், சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், இவங்க கதைகள் கூட இருக்கு. நீங்க பெரிய ஆள்தான்" என்று பாராட்ட, தலை குனிந்து, "தங்கள் சித்தம் என் பாக்கியம்" என்று ஏற்று கொண்டான்.

எல்லா எழுத்தாளர்கள் பெயரையும் கண்ட அவள் முகம் எதையோ தேடி ஏமாந்து போனது.

"என்ன அபர்ணா முகம் வாடி போச்சு."

"எல்லா எழுத்தாளருமே இருக்காங்க, ஆனால் எனக்கு பிடிச்ச ஜாஸ்மின் மட்டும் இல்லை".ரவிக்கு ஒரு நொடி இதயம் நின்றது போல் இருந்தது.
'ஒரு வேளை இவள் தான் அந்த அபர்ணாவாக இருக்க கூடும். கேட்கலாமா, கேட்டு பிரச்சனை வந்தால் என்ன செய்வது'என்று தடுமாறினான்.

ஒரு வழியாக சமாளித்து கொண்டு, "அபர்ணா, ஜாஸ்மின் கதைகள் அங்கே இல்லே,இன்னொரு இடத்தில இருக்கு, கீழே வாங்க கூட்டி போறேன்".மனம் குழம்பினாள். 'ஜாஸ்மின் இரண்டுவருஷமாக அவள் படித்து வரும் எழுத்தாளர். இந்த பெரிய எழுத்தாளர் வரிசையில் அவர் புத்தகத்தை வைக்க அருகதை இல்லையா. அவர் ஒரு அருமையான எழுத்தாளர் ஆயிற்றே.ஒரு வேளை ரவிக்கு பிடிக்காதோ'என்று யோசித்து குழம்பினாள்.

கீழே தனது ரூமுக்கு சென்ற ரவி, "உள்ளே வா அபர்ணா. இது என்னோட பெட்ரூம், இங்கே தான் இருக்கு.ஸ்டடி டேபிள் அருகில் இருந்த சைடு அலமாரியில் இருந்து நிறைய நோட்டுகளை அள்ளி எடுத்து, "இதுதான் நீ கேட்ட ஜாஸ்மின் எழுதிய கதைகள். என்ன நீ படிச்சது, ஜாஸ்மின் எழுதி அச்சில் வந்தது. ஆனால் இந்த கதைகள் ஜாஸ்மின் கைப்பட எழுதியது".

ஒவ்வொரு நோட்டையும் பார்த்து நெகிழ்ந்து போன அவள் "அப்படின்னா, ஜாஸ்மின் பெயர்ல கதை எழுதியது."

"நான்தான்."

"அப்படின்னா, ஜாஸ்மின் உங்க மனைவியா".


"இல்லை என்னோட தங்கை".

"தங்கையா",

"ஆமா, அவள் பேர் மல்லிகா. அதனால நான் ஜாஸ்மின்கிற புனை பெயர்ல கதை எழுதி வரேன்".

"அப்படின்னா அவங்க எங்கே".

கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, "அவள் என் உயிர்.யாருமே போக முடியாத இடத்துக்கு போய்ட்டா, பாவி நான் மட்டும் உயிரோட இருக்கேன்."

கண்ணீரை துடைத்து கொண்டே, "நான் விபரமா சொல்றேன். உட்கார் அபர்ணா."

2000 மார்ச் - அகஸ்தியர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்

"ரவி எங்கடா இருக்கே"அம்மா காந்திமதி குரல்.

"அம்மா இங்கேதாம்மா மல்லிகா ரூம்ல இருக்கேன்".

"அங்கே என்னடா பண்ணிட்டு இருக்க"

"அவளோட ரெகார்ட் நோட்லே வரைஞ்சுகிட்டு இருக்கேன்".

"அவ என்னடா பண்ணுறா". பேசி கொண்டே மல்லிகா பெட்ரூம் வந்தாள் காந்திமதி.

"அம்மா கத்தாதே தூங்கிகிட்டு இருக்கா."

"ரவி அவ வேற வீட்டுக்கு வாழ போற பொண்ணு. ரொம்ப செல்லம் கொடுத்தா நமக்குதாண்டா கஷ்டம்".

"அம்மா நீதாம்மா சொல்ற, புகுந்த வீட்டில அவளுக்கு வேலை அதிகமா இருக்கும்னு. அதனாலதான் அவளுக்கு முடிஞ்ச அளவுக்கு வேலை கொடுக்க வேணாம்னு பார்க்கிறேன்.அது மட்டும் இல்லம்மா. என்னோட தங்கச்சி எனக்கு உசத்தி."

"சரிடா, நீ பேசினது போதும். இங்கே பாரு" என்று கைகாட்ட, தூங்காமல் கண் விழித்து அண்ணன் சொன்னதை கேட்டு கொண்டு இருந்த மல்லிகா கண் கலங்கி, 'அண்ணா' என்று கட்டி கொண்டாள்.


"டேய் போதும்டா, இதை எல்லாம் நாங்க பாசமலர்ல பாத்துட்டோம்" என்று கிண்டல் செய்து மல்லிகா தோளில் தட்டி,"முதல்ல சீக்கிரம் எந்துரிச்சு பழகுடி".

"போம்மா, நீ எப்ப பார்த்தாலும் இப்படிதான். அண்ணா நீ சொல்லு நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கட்டுமா?".

"நீ தூங்குடா தங்கம். அம்மாவை நான் பார்த்துக்குறேன்".

வெளியே வந்த ரவி அம்மாவை பார்த்து "என்னம்மா" என்று கேட்க, தனது புடவை தலைப்பால் கண்களை துடைத்த காந்திமதி, "உங்க ரெண்டு பேரோட பாசத்தை பார்த்தா எனக்கே கண்ணுபட்டுடும் போல இருக்குடா. நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து திருஷ்டி சுத்தி போடணும்."

"அதெல்லாம் சரிம்மா, நீ என்னமோ என் கிட்ட தனியா பேசனும்னு சொன்னியே அம்மா".

"அதுதாண்டா உன் தங்கைக்கு ஒரு சம்பந்தம் வந்து இருக்கு. புரோக்கர் கொண்டு வந்து இருக்கார்".

"என்னம்மா அவளோட கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம். வயசு இருபது தானே ஆகுது. காலேஜ் முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கே. அவ இந்த படிப்பை முடிச்சு மேல படிக்கட்டுமே."

"வேணாம்டா, நம்ம தேவர் பரம்பரைல பொண்ணுங்க ரொம்ப படிச்சது இல்லைடா. அது மட்டும் இல்லை. இன்னும் மேல படிக்க வச்சா நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்."

'அம்மா சொல்வது சரிதான்' என்று யோசித்தான். 'அப்பா இரண்டு வருஷத்துக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனதில் இருந்து தனது பொறுப்புகள் அதிகமாகி போய் விட்டன.தங்களுக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டதில் வருட வருமானம் ஐந்து லட்சம் வந்த போதிலும் சோம்பி இருக்காமல் வேலைக்கு சென்று வருகிறான்.

இப்போது ஆக்சிஸ் பேங்க் திருநெல்வேலி ப்ராஞ்சில் அசிஸ்டன்ட் மேனேஜர் உத்தியோகம். இருப்பது ஆபரேஷன் டிபார்ட்மென்டில்.ஏற்கனவே இருக்கும் பத்து லட்ச ரூபாய் சேமிப்பில் கல்யாணம் முடித்து விடலாம். அம்மா ஏற்கனவே சேமித்த அறுபது பவுன் நகை வேற இருக்கு.மேலும் கடன் வாங்க சொந்த வீடு வேற இருக்கு. அடகு வைக்கலாம்'

"என்னடா யோசிக்கிற. நான் சொல்றது சரிதானே."

"சரிம்மா. ஆனா எதுக்கும் மல்லியை ஒரு வார்த்தை கேட்கலாமே."

"நாம சொன்ன அந்த பொண்ணு கேக்க போகுது. அது சின்ன பொண்ணு தானே. ஊர் உலகம் தெரியாது. நாமதான் எடுத்து சொல்லணும்."

"சரிம்மா நீ சொல்றது கூட சரிதான். எதுக்கும் நல்ல மாப்பிள்ளை வந்தா யோசிக்கலாம்."


"நீ சரி சொன்னதே எனக்கு போதும்டா. நம்ம கல்யாண புரோக்கர் கிருஷ்ணமூர்த்தி கிட்ட சொல்லி வச்சா போதும் சீக்கிரம் நல்ல மாப்பிள்ளையை கொண்டு வந்துடுவாருடா".ரவி ஒன்றும் பதில் பேசவில்லை.

"அண்ணா" என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்ப்பதற்குள் அவன் கழுத்தை கட்டி தொங்க, "ஏண்டி எருமை அவனை விடு.இன்னமும் சின்ன குழந்தை மாதிரி நடந்துக்காதே".

"அண்ணா இங்கே பாருண்ணா இந்த அம்மாவை. எப்போ பார்த்தாலும்"

"அம்மா விடும்மா" என்று சிணுங்க, "சரிம்மா என்ன இருந்தாலும் அவள் என்னோட குட்டி தங்கையாச்சே" என்று சமாதானம் செய்தான் ரவி.

"மல்லி இங்கே வாடா. இப்படியா தூங்குறது. என்னதான் சண்டேனாலும் ஒரு பத்து மணிக்கு எழுந்து விடனும். இப்போ நேரத்தை பார்த்தியா", என்று கடிகாரத்தை காண்பிக்க அது பனிரெண்டு முப்பது என்று காண்பித்தது.

"சாரிண்ணா கொஞ்சம் நேரமாயடுச்சு".

"சரி நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா, அம்மா சிக்கன் குழம்பு, மட்டன் பொரியல், மீன் வறுவல் செஞ்சு வச்சுருக்கா. நாம மூக்கு பிடிக்க திங்கலாம். சரியா, அம்மாவை கண்டுக்காத. நான் பார்த்துக்கிறேன்."

"ஓகேண்ணா" என்று சொல்லி "என் செல்ல அண்ணா" என்று கன்னத்தை கிள்ளியபடி ஓட, "என்ன இவ இப்படி கிள்ளி வைக்கிறா. முதல்ல நகம் வெட்ட சொல்லணும்" என்று சொன்ன ரவியை பார்த்தாள் அவன் அம்மா.

"நீயாச்சு, உன் தங்கையாச்சு. எக்கேடோ கேட்டு போங்க" என்று பொய் கோபத்தோடு "சீக்கிரம் ரெண்டு பேரும் சாப்பிடவாங்க" என்று சொல்லி விட்டு சென்றாள்.

சாப்பிட்டு விட்டு மாலை முகவரி சினிமாவுக்கு மூவரும் சென்று விட்டு வந்தனர்.

காலை எட்டு மணி பஸ்ஸில் மல்லிகா பாளையம்கோட்டை சாராடக்கர் கல்லுரி செல்ல, ஒரு மணி நேரம் கழித்து தனது பைக்கில் திருநெல்வேலி கிளம்பினான்.

நாற்பது கிலோ மீட்டர் பயணம் இருந்தாலும், பைக்கில் செல்வதில் பல நன்மைகள் இருப்பதால் அம்மா சொன்னபோதும் பஸ்ஸில் போகாமல் பைக்கில் போய் வருவது வழக்கம். போகும் வழியில்பசுமையான வயல்கள், தோட்டம், தாமிரபரணி ஆறு எல்லாமே மனதுக்கு ஒரு குளிர்ச்சி தருவது மறுக்க முடியாத உண்மையும் கூட.

பேங்க் சேர்ந்தபோது மணி ஒன்பது முப்பது. உள்ளே நுழைய அவனுக்கு முன்னதாக ரகு உட்கார்ந்து இருக்க மனதளவில் வெறுத்து போனான்.
'இந்த ரகு சுத்த மோசம். எப்போ பார்த்தாலும் எனக்கு முன்னாலே வந்து பேங்க்ல உட்கார்ந்து இருக்கான்'.


"டேய் ரகு, நீ பண்ணுறது சரி இல்லை".

ரகு திரும்பி பார்த்து, 'என்னடா இன்னைக்கும் நான் முதல்ல வந்துட்டேன்னு உனக்கு கோவமா இருக்கா" என்று சொல்லி விட்டு உரக்க சிரிக்க, அவன் கழுத்தில் கை வைத்து அழுத்தி, "டேய் உன்னை கொலை பண்ணிடுவேன். எப்போ பார்த்தாலும் எனக்கு முன்னாலே வர்றியே ஒரு வேளை நீ ரூமுக்கு போறது இல்லையோ."

"அதல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு ரூம் இருக்கிறது பக்கத்தில, நீ வர்றதோ நாற்பது கிலோ மீட்டருக்கு தள்ளி. அதனால உனக்கு முன்னால நான் வந்துடுறேன்."

"ரகு, ஒரு முக்கியமான விஷயம். என்னோட தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்."

"மல்லிகாவுக்கா. டேய் அவ சின்ன பொண்ணுடா."

"டேய் நான் கூட அப்படிதான் நினைச்சேன். அவளுக்கும் இருவது வயசு ஆச்சு. அம்மா சீக்கிரம் முடிக்கணும்னு ஆசைப்படுறாங்க. அப்பா போனதில இருந்து அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லா போயிடுது. டாக்டர் வேற அம்மாவுக்கு பி பீ, மற்றும் இதயம் ரொம்ப பலவீனமா இருக்குன்னு சொல்றாரு. சீக்கிரம் கல்யாணம் முடிச்சு, பேர பிள்ளையை பார்த்தாதான் அவங்களுக்கு நிம்மதி."

"எனக்கு புரியுதுடா. நான் வேணாம் அப்பா கிட்ட சொல்லி வைக்கட்டா".

சிரிக்க ஆரம்பித்தான் ரவி "ஏண்டா உன்னோட அப்பா, அம்மா, தங்கை எல்லாம் இருக்கிறது மும்பைல. நீ இங்கே இருக்கிற. அப்பாவுக்கு எப்படி தெரியும்."

"நீ பேசாம இருடா. அப்பாவுக்கு நிறைய பேரை தெரியும். சொல்லி வைக்கலாம். நல்ல மாப்பிள்ளை வந்தா நமக்கு கூட நல்லது தானே".யோசித்து பார்த்தான் ரவி.

"ரகு நீ சொல்றது கூட நல்ல யோசனை தான். சொல்லி வை".

"சார் உங்களை பிராஞ்ச் ஹெட்" கூப்பிடுறார். என்று ஆபீஸ் பியூன் கூப்பிட "சரிடா, டைகர் தியாகு கூப்பிடுது நான் வரேன் அப்புறம் பேசலாம்" என்று சொல்லி விட்டு உள்ளே வேகமாக சென்றான்.

அடுத்த சில நாட்களில் மல்லிகா கல்லூரி முடிய, லீவ் ஆரம்பித்தது.

வீட்டில் பேச்சை ஆரம்பித்தாள்.
"அம்மா நான் மேல் படிப்பு படிக்கலாம்லு பாக்கிறேன். வெறும் பி எஸ் சி படிச்சா மதிப்பு இல்லை அதனாலதான். என்ன அண்ணா நான் சொல்றது உண்மை தானே."

ரவி பதில் சொல்வதற்குள் அம்மா காந்திமதி "இங்கே பாரு தங்கம். நீ படிச்சது போதும். நானும் அண்ணனும் சேர்ந்து உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறோம்."


"அண்ணா அம்மா ஏதேதோ சொல்றா. உண்மையா" மல்லிகா கண்கள் கலங்கி இருந்தன.

'என்ன இந்த அம்மா, புரியாம இப்படி போட்டு உடைச்சுட்டா. மெதுவா பக்குவமா சொல்லலாம்னு இருந்தேன்' என்று ஒரு நிமிடம் மனதுக்குள் நொந்த ரவி சமாளித்து கொண்டு, "மல்லி ஒண்ணும் இல்லைடா. நீ மேல்படிப்பு படிக்கலாம். ஆனால் ஒரு வேளை நல்ல மாப்பிள்ளை கெடைச்சா கல்யாணம் பண்ணிட்டே படிக்கலாம்."

மல்லிகா கண்களில் கண்ணீர் தளும்பி நிற்க."டேய் அழாத. உனக்கு அண்ணா மேல நம்பிக்கை இருக்கில்ல". குரலில் அன்பு வழிய கேட்க, "சரிண்ணா உனக்காக நான் ஒத்துக்குறேன். ஆனால் ஒரு கண்டிசன்."

"அப்பாடி ஒத்துகொண்டாளே" என்று பெருமூச்சு விட்ட ரவி, மல்லிகா சொன்ன அடுத்த வார்த்தை கேட்டு 'என்ன' என்று கேள்வி குறியோடு பார்த்தான்.

"மாப்பிள்ளை உனக்கு பிடிச்சா போதும் அண்ணா. நான் பார்க்கணும்னு கட்டாயம் இல்லை. நீ யாரை காண்பிச்சாலும் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். எனக்கு என் அண்ணன் மேல நம்பிக்கை இருக்கு."

அவளை கட்டி கொண்டு "மல்லி என் மேல நீ வச்சுருக்க நம்பிக்கை நான் எப்போதும் காப்பாத்துவேன்டா".

இருவர் கண்களில் கண்ணீர் வழிய, அம்மா இருவரையும் ஒரு சேர அணைத்து, "உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு" என்றாள்.

புரோக்கர் கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்த புது மாப்பிள்ளை போட்டோவை பார்த்து காந்திமதி அம்மாவுக்கு பிடித்து போனது. யார் என்று சோதித்த போது தூரத்து சொந்தம் என்று தெரிந்தது.

"ரவி இவங்க எனக்கு தெரிஞ்சவங்கதான்.இப்போ கோயம்பத்தூர்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன். மாப்பிள்ளையோட பெரியம்மா கூட இங்கே கல்லிடைகுறுச்சி தான். அவங்க நல்ல மாதிரிடா. யோசிக்க வேண்டாம் சீக்கிரம் முடிச்சிடலாம்".



"அபர்ணா இன்னைக்கு நினைச்சா கூட அது ஒரு கனவு மாதிரி தெரியுது. அடுத்த ரெண்டாவது மாசம் கல்யாணம் முடிஞ்சுது. மாப்பிள்ளை பேரு பிரசன்னா. வேலை பார்க்கிறது கோவைல எல்ஜி எகிப்மென்ட்ல."

"அழாத மல்லிகா. எங்கே போக போற. இங்கே இருக்கிற கோயம்பத்தூர் தான. ராத்திரி பஸ்ல ஏறினா காலைல அண்ணன் உன்னை பார்க்க வந்துடுவான். சரியா, என்ன. இங்கேபாரும்மா. உன்னால அண்ணன் கூட அழுதுட்டு இருக்கான் பாரு"அம்மா ஆறுதல் சொல்ல மல்லிகா அருகில் இந்த தூணில் சாய்ந்து கண்கலங்க தன்னையே பார்த்து கொண்டுறிந்த ரவியை கண்டு "அண்ணா" என்று விம்மினாள்.

அருகில் வந்த ரவி, "அழாதே மல்லிகா. மாப்பிள்ளை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். நீ நம்ம வீட்ல செல்லமா வளர்ந்த பொண்ணு. அங்கே வீட்டு பிரச்சனை எல்லாம் வந்தா நீ கொஞ்சம் அனுசரிச்சு போகணும். சரியா" அவள் கண்களை துடைத்தபடி ரவி சொல்ல தலை ஆட்டினாள் மல்லிகா.


No comments:

Post a Comment