Thursday, November 19, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 2

அடுத்த நாள் காலை வழக்கம் போல் கிளாஸ் அட்டென்ட் செய்ய சென்றாள் அபர்ணா.


"டியர் ஸ்டுடண்ட்ஸ், உங்களோட ப்ராஜெக்ட் லெட்டர்ஸ் எல்லாம் வந்துடுச்சு. ஒவ்வொருத்தரா வந்து வாங்கிக்கங்க" என்று ப்ரொபசர் சொல்ல, பெயர் அழைக்கப்பட்டவர்கள் சென்று பெற்று கொண்டனர்.


அபர்ணா பெயர் அழைக்கப்பட்டது. லெட்டரை வாங்கி கொண்ட அபர்ணா, கம்பனி பெயர் பார்க்க, 'அமெரிக்கன் ரெமேடீஸ்'பெயரில் லெட்டர் இருக்க, சந்தோஷம் தாங்கவில்லை.


"கவிதா, நான் அப்ளை பண்ணின மூணு கம்பனில இந்த கம்பனில இருந்து வந்தது எனக்கு சந்தோசம் தாண்டி."

"டியர் ஸ்டுடண்ட்ஸ்", ப்ரொபசர் தொடர்ந்தார்.

"எல்லோரும் பிப்ரவரி முதல் வாரத்தில் அங்கே போய் சேர வேண்டும். ஜுன் முதல் வாரத்தில் திரும்ப ப்ராஜெக்ட் ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டும். ஓகே வா?" என்று கேட்க, கிளாஸ்ஸில் இருந்த அபர்ணா, கவிதா உள்ளிட்ட அனைவரும் தலை அசைத்தனர்.

'இன்னும் பத்து நாள் தான் இங்கே கிளாஸ் இருக்கு, அப்புறம் நமக்கு கொண்டாட்டம் தான். ஹையா' என்று குதிக்காத குறையாக சந்தோசத்தில் மூழ்கினாள்.

வெளியே வந்த போது வழக்கம் போல ஐந்து மணி, காலேஜ் காண்டீன் போய் பஜ்ஜி வாங்கி விட்டு அங்கே இருந்த சேரில் உட்கார்ந்து தோழிகள் இருவரும் பேசி கொண்டு இருக்க, அப்போது உள்ளே நுழைந்த பிரதீப் அபர்ணாவை பார்த்து முகம் மலர்ந்தான்.

கவிதா, அபர்ணாவை பார்த்து கிசுகிசுத்தாள், "இங்கே பாருடி உன்னோட ஆளு, உன்னை பார்த்து ஜொள்ளு விடுறான். இந்த இடமே கொஞ்சம் சில்லுனு ஆன மாதிரி இல்லை"

எரிச்சலானாள் அபர்ணா. "நீ பேசாம இருடி. ஏற்கனவே அவன் தொல்லை தாங்க முடியலை. எனக்குதான் ஆண்கள்னாலே பிடிக்காதே, அப்புறம் எதுக்கு இந்த விஷ பரீட்சை எல்லாம்"

பிரதீப் அபர்ணா அருகில் வந்து அவளை பார்த்து சம்பந்தம் இல்லாமல் சிரித்தான். "அபர்ணா, உங்ககிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும். நான் வெளியில ஆல மரத்துக்கு அடியில வெயிட் பண்ணுறேன். ப்ளீஸ் கட்டாயம் வாங்க" சொல்லி விட்டு பதிலுக்கு காத்து இராமல் சென்று விட்டான்.

"அபர்ணா, வாழ்த்துக்கள்டி, அவன் கட்டாயம் லவ் லெட்டர் கொடுப்பான் இல்லாட்டி, ஐ லவ் யூ சொல்லுவான் பாரு"

"சும்மா இருடி, எப்போ பார்த்தாலும் கிண்டல் பண்ணிட்டு. அவனை பார்த்தாலே எரிச்சலா வருது. ஏதோ பழகினவன்னு பார்க்கிறேன். லவ்வு கிவ்வுன்னு உளறினான்னா அதே இடத்தில அவனை பளார்னு அறைஞ்சுடுவேன்" விருட்டென்று எழுந்து சென்றாள்.


முகம் வேர்க்க ஆல மரத்தின் அடியில் பிரதீப் நிற்க அவனை கூர்ந்து கவனித்தாள். 'பையன் நல்லா வாட்டசாட்டமா தான் இருக்கான். ஆனால் என்ன இவனை பார்த்தா எனக்கு மனசில ஒரு பீலிங் வர மாட்டேங்குது. என்ன தான் சொல்றான்னு பார்க்கலாம்.'

அவளை பார்த்தவுடன் டென்சனாய் இருந்த பிரதீப் முகத்தில் புன்னகை. "ஹாய் அபர்ணா, உங்க கிட்ட பர்சனலா ஒரு விஷயம் பேசணும். என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க".

"பிரதீப், நீங்க மதுரையின் பெரிய தொழில் அதிபர்களில் ஒருத்தரான ராமச்சந்திரனோட ஒரே தவ புதல்வன். எம்ஏ இரண்டாம் ஆண்டு பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லோருக்கும் உங்களை பிடிக்கும் " என்று சொல்லி விட்டு புன்னகை செய்தாள்.

பிரதீப் முகத்தில் நிம்மதி. "தாங்க்ஸ் அபர்ணா, என்னை பற்றி நல்ல விதமா சொன்னதுக்கு. அப்புறம் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்".
"சொல்லுங்க பிரதீப்."சுற்று முற்றும் பார்த்து விட்டு, தனது பான்ட் பாக்கெட்டில் இருந்து அந்த மடிக்கப்பட்ட பேப்பரை எடுத்தான்.

"என்ன இது பிரதீப்", மெதுவாக முகத்தில் கோபம் படர கேட்டாள்.

"அபர்ணா, இது வந்து... என்னோட மனசை திறந்து காண்பிச்சு இருக்கேன். படிச்சுட்டு நாளைக்கு பதில் சொன்னா போதும்."

கடிதத்தை அவளிடம் தந்து விட, வாங்கி கொண்டு விறுவிறுவென்று ஹாஸ்டலை நோக்கி சென்று விட்டாள்.

தனது நோட்டுக்குள் கடிதத்தை மறைத்து விட்டு ரூமுக்குள் நுழைய அங்கே கவிதா அவளுக்காக ஆவலோடு காத்து இருந்தாள்.

"என்னடி, அபு என்ன சொல்றான் உன்னோட காதல் மன்னன், பிரதீப்".
"லெட்டர் கொடுத்துருக்காண்டி.""அப்படியா, கொடுடி படிச்சு பார்க்கிறேன்."

நோட்டை திறந்து லெட்டரை எடுத்து கொடுக்க கவிதா பிரித்து படிக்க தொடங்கினாள்.




தினமும் இரவு எனது கனவுக்குள் வந்து தூக்கத்தை கெடுக்கும் கனவுக் கன்னி அபர்ணாவுக்கு,

உன் காலடியில் கிடந்தது பணிவிடை செய்ய துடிக்கும் பிரதீப் எழுதி கொள்வது.

கண்ணே அபர்ணா, நீ இல்லாமல் என் வாழ்க்கை சூனியமாகும். என்னை திருமணம் செய்து கொண்டால் நான் உன்னைநல்லபடியாக பார்த்து கொள்வேன்.

இப்படிக்கு,
உன் காதலில் விழுந்து கிடக்கும் பிரதீப்.

"என்னடி இப்படி காமெடியா இருக்கு. லூசா இருப்பானோ."

"பாவம்டி அவனுக்கு உன் மேல லவ் பைத்தியம்னு நினைக்கிறேன். பிடிச்சா லவ் பண்ணு தப்பு இல்லை".
முகத்தில் கோபம் வெடிக்க, "இல்லைடி இவை விட கூடாது. நாளைக்கு காலைல முதல்ல ப்ரின்சி கிட்ட புகார் செய்யணும்".
"வேணாம் அபர்ணா, பாவம் அவனோட வாழ்க்கை பாழாயிடும்."

"நீ பேசாம இரு கவிதா, அவனோட பணக்கார திமிர்ல இப்படி காதல் கடிதம் எழுதுறான். இனிமே அவன் யாருக்கும் லவ் லெட்டர் எழுத கூடாது" பல்லை நறநறவென்று கடித்தாள்.

'என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அவளோட பிடிவாதம் ஊர் அறிஞ்சது. சரி காலை எழுந்தவுடன் பேசி கொள்ளலாம்'என்று நினைத்து உறங்க சென்று விட்டாள் கவிதா.

காலை தோழிகள் இருவரும் குளித்து விட்டு ரெடி ஆக, கவிதா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"அபர்ணா, அந்த லெட்டரை அவன் கிட்ட திருப்பி கொடுக்கதானே போற", என்று கேட்க, "இல்லடி, இதை ப்ரின்சிகிட்டதான் கொடுக்க போறேன்".
அவளை சமாதானபடுத்த முயற்சி செய்தாலும், அபர்ணா கவிதா பேச்சை கேட்காமல் ப்ரின்சியிடம் புகார் செய்ய, பிரதீப் அவன் அப்பாவை அழைத்து வர சொல்லி ப்ரின்சி உத்தரவிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ப்ரின்சி ரூமில் அபர்ணா, பிரதீப், அவன் அப்பா ராமச்சந்திரன்.


"சொல்லுங்க பிரின்சிபல், எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டு விட்டீங்க".

"உட்காருங்க ராமச்சந்திரன். உங்க மகனை பற்றி ஒரு புகார் வந்து இருக்கு. இந்த பெண் தான் கொடுத்து இருக்காங்க"அபர்ணாவை கை காண்பித்தார்.

"என்ன, என் மகனை பத்தியா. அவன் நல்ல பையனாச்சே. சரி, என்ன விஷயம் சொல்லுங்க."

"இந்த லெட்டரை படிங்க உங்களுக்கு புரியும்."

படித்து பார்த்து விட்டு முகம் கோபத்தில் சிவக்க, லெட்டரை சுருட்டி பிரதீப் முகத்தில் எறிந்து விட்டு, அவன் சட்டையை பிடித்து பளார் பளாரென்று அடிக்க ஆரம்பித்தார்.

"ஏன்டா, அம்மா இல்லையேன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படியா பண்ணுவே. உன்னை பார்க்கவே எனக்கு அவமானமா இருக்கு"

தொடர்ந்து அவனை அடித்து கொண்டே இருக்க, வேறு வழி இல்லாமல் ப்ரின்சி ஓடி வந்து தடுக்க வேண்டியதாயிற்று.

"சார், இனிமே இவன் இங்கே படிக்க வேண்டாம் டிசி கொடுங்க. இவனை பெத்ததுக்கு நான் இவனுக்கு சோறு போடுறேன்.ஆனால் இனிமே எக்காரணத்தையும் முன்னிட்டு இனிமே அவன் வீட்டை விட்டு வெளியே வர மாட்டான். அம்மா அபர்ணா,இவன் சார்பில நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்குறேன். வாடா வெளியே".

அவனை முதுகில் கை வைத்து ப்ரின்சி ரூமை விட்டு வெளியே தள்ளி கொண்டே அவன் அப்பா ராமச்சந்திரன் வெளியே வந்தார். வாசலுக்கு வெளியே இருந்த பல மாணவர்கள் தன்னையே கேவலமாக பார்ப்பது போல் இருக்க பிரதீப் கூனி குறுகி போனான்.

"அப்பா வேணாம்பா, என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவமானமா இருக்கும்பா. ப்ளீஸ்பா" என்று கெஞ்ச,

"டேய் அதல்லாம் மானம் வெட்கம் உள்ளவங்களுக்கு. உனக்குதான் எதுவும் கிடையாதே. இருந்தா கூட படிக்கிற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுப்பியா" என்று சத்தம் போட, அவனுக்கு எல்லோரும் அவனை கேவலமாக பார்ப்பது போல் உணர்வு.

ப்ரின்சி ரூமில் இருந்த வெளியே வந்த அபர்ணாவுக்கு, 'நாம் செய்தது தவறோ. கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணி இருக்கலாமோ' என்று சிந்தித்தாள்.

பின்னால் வந்த ப்ரின்சி "சரிம்மா, நீ புகார் கொடுக்கணுமா" என்று கேட்க, "இல்லை சார் வேணாம்" என்று சொல்லி விட்டு கிளாஸ் அட்டென்ட் செய்ய சென்று விட்டாள்.

அடுத்த சில நாட்கள் பிரதீப் காலேஜ் வரவில்லை. அவனோட அப்பா வந்து டிசி வாங்கி விட்டு போய் விட்டதாக கவிதா சொன்னாள்.

இந்த விஷயத்தை கேட்டவுடன் அபர்ணா மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் சில நாட்களில் மறந்து விட்டது.


ஒரு வாரம் வேகமாக ஓடி செல்ல, ஜாஸ்மின் சொல்லி இருந்த நாளும் வந்தது.

தினமும் தனது செல்போனில் செக் செய்து கொண்டு இருந்ததால் ஜாஸ்மின் லாக் ஆன் செய்தவுடன் சந்தோசமாக சாட்டை ஆரம்பித்தாள்.

"வாங்க மேடம் ஒரு வாரமா உங்களை காணாம தவிச்சு போயிட்டேன். உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்ல வேண்டி இருக்கு."

"சொல்லுங்க, அபர்ணா. என்ன ஏதாவது காலேஜ்ல பரபரப்பான விஷயமா?"

"ஆமா எப்படி கண்டுபிடிச்சிங்க."

"அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நீங்க காலேஜ்ல படிக்கிறதால நான் கொஞ்சம் கெஸ் பண்ணினேன்."

"பரவாயில்லை நல்லாத்தான் கெஸ் பண்ணுறீங்க.சரி சொல்லுறேன்.ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு விஷயம் நடந்தது" என்று சொல்லி பிரதீப் சம்பவத்தை விவரித்தாள்.

பதில் வரவில்லை. சில நிமிடங்கள் மெளனமாக இருந்த அபர்ணா, "ஹலோ இருக்கிங்களா" என்று கேட்க, மெதுவாக,'இருக்கேன்' என்று பதில் வந்தது.

"அபர்ணா, நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே."

"சொல்லுங்க, ஜாஸ்மின்"

"நீங்க பண்ணினது தப்பு. அந்த பிரதீப் உங்களை பிடிச்சு இருக்குன்னு லெட்டர் கொடுத்து இருக்கான். அவன் உங்ககிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணலை. உங்களுக்கு அவனை பிடிக்கலைனா, பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியதுதானே. நீங்க பிரின்சிபல்கிட்ட புகார் கொடுத்தது தவறு."

அபர்ணா பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

"ஹாய் அபர்ணா, நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன், நான் வேணாம் சாட்ல இருந்து வெளியே போகட்டுமா."

"நோ நோ. நான் நீங்க சொன்னதை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். அப்போ எனக்கு நான் பண்ணினது தப்பா தோணலை. இப்போ நீங்க சொன்ன பிறகு தான் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுது. சாரி, இப்போ நான் என்ன பண்ணுறது. அவன் கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா."


"வேணாம் விட்டுடுங்க. இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காம பார்த்துக்கங்க."

"ஆமாம் உங்களுக்கு ஏன் அவனை பிடிக்கலை."

"எனக்கு ஆண்கள்னாலே கொஞ்சம் அலர்ஜி. அதுனால தான். என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன் முடியவில்லை. சாரி. ஆமா, நீங்க பெண் தானே."

சில நொடிகள் மௌனம். "ஆமாம்" என்று பதில் வர, அப்படி என்று திருப்தியானாள் அபர்ணா.

"ஜாஸ்மின், நீங்க ஒரு வாரமா எங்கே போனீங்க. சாரி நான் கேக்கலாமில."

"நோ ப்ரோப்லம். என்னோட பண்ணைல இருக்கிற ஈமு, முயல் விற்க வேண்டிய விஷயமா தமிழ்நாடு விவசாய வளர்ச்சி கழகத்தை பார்க்க சென்னை போய் இருந்தேன். இப்போ தான் வந்தேன்."

"அப்படியா, நீங்க சொந்த பண்ணை வச்சு இருக்கீங்களா?"

"ஆமாம், அதில ஈமு, முயல் மற்றும் நிறைய பறவைகள் வளர்க்கிறேன். வீட்டில சோலார் பானேல் போட்டு இருக்கேன்.மொத்ததில என்னோட பண்ணை மற்றும் வீடு கிரீன் ஹவுஸ் அப்படின்னு சொல்லலாம்."

"அடுத்த கதை ஆரம்பிச்சிட்டீங்க"

"ஆமாம், இது ஒரு சரித்திர கதை. ஒரு ஐந்து வாரம் வரும். குங்குமத்தில் கேட்டு இருக்காங்க."

"என் கிட்ட கொஞ்சம் எழுதின வரைக்கும் ஷேர் பண்ண முடியுமா."

"இப்போதான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். மீதி நாளை மறுநாள் எழுதனும்".

"நாளைக்கு எழுத கூடாதா".

"நாளைக்கு வாய்ப்பு இல்லை. கோவிலுக்கு போகணும்."

"ஓ அப்படியா, என்ன திடீர்னு."




"என்னோட பிறந்த நாள்."

"அப்படியா, அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எனக்கும் சேர்த்து சாமிகிட்ட வேண்டிக்கங்க".

"கட்டாயம், சரி, அப்புறம் பார்க்கலாம். பை பை."

"பை, பை."

அருகில் இருந்த கவிதா, "என்னடி நான் சொன்னப்போ கேட்க மாட்டேன்னு சொன்ன. இப்போ ஜாஸ்மின் சொன்னப்போ மட்டும் உன்னோட தவறை ஒத்துக்கிட்ட".

"அவங்க சொன்னா எல்லாம் சரியா தாண்டி இருக்கும்".

கவிதா சிரிக்க ஆரம்பித்தாள்.

"அப்படி என்னடி அவங்க மேல ஒரு நம்பிக்கை. சாட்ல பேச ஆரம்பிச்சு ஒரு பத்து நாள் இருக்குமா. இதல்லாம் கொஞ்சம் ஓவர்டி."

அபர்ணா பதிலுக்கு புன்முறுவலோடு, "கவிதா ஒருத்தரை பற்றி நல்லா தெரிஞ்சுக்க, நம்பிக்கை வர இத்தனைநாள் ஆகணும்னு கணக்கு இல்லை. எனக்கு அவங்களோட அப்ரோச் பிடிச்சு இருக்கு. அவங்களோட எண்ணங்கள் பிடிச்சு இருக்கு.ஒரு வேளை எனக்கு அவங்களை பிடிக்கலைனா எப்போ வேணும்னாலும் சாட்டை கட் செய்யலாம். இதுல ரிஸ்க் வேற இல்லை.என்ன நான் சொல்றது சரிதானே"

"சரிடி, நேரமாகுது. டின்னரை முடிச்சுட்டு படுக்கலாம்".

இருவரும் தூங்க, இரவு பனிரெண்டு மணிக்கு அலாரம் அடித்தது. உடனே எழுந்து அணைத்து விட்டு தனது லாப்டாப்பை திறந்து மெயிலை திறந்து தொடர்ச்சியாக பத்து மெயில் அனுப்பினாள். எல்லாமே விதவிதமான பிறந்த நாள் வாழ்த்து மெயில் மற்றும் க்ரீடிங்க்ஸ். திரும்ப சிஸ்டம் ஆப் செய்து விட்டு படுத்து விட்டாள்.

காலை ஆறு மணிக்கு முகத்தில் சூர்ய வெளிச்சம் சுள்ளென்று அடிக்க பதறி எழுந்து தனது மொபைல் போனில் மெயில் செக் செய்ய, காலை ஐந்து மணிக்கு ஜாஸ்மின் பதில் வந்து இருந்தது.

"நன்றி அபர்ணா. இதுவரை நான் பல பிறந்த நாள் வந்து போனாலும், இதை ஒரு ஸ்பெஷல் என்று தான் சொல்ல வேண்டும். இது வரை யாரும் எனக்கு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வாழ்த்தியது இல்லை. நீங்க அனுப்பிய அனைத்து க்ரீடிங்க்ஸ்-ம் எனக்கு நிறைய பிடிச்சு இருந்தது. மொத்தத்தில் உங்களோட அன்பில் நான் கண்கலங்கி நிற்கிறேன்."

இதை படித்த அபர்ணா கண்களும் கலங்கி விட்டன.

அதற்குள் கவிதா புரண்டு படுக்க, போனை தனது தலையனைக்கு அடியில் வைத்து திரும்ப படுத்து கொண்டாள்.ஆனால் தூக்கம் வரவில்லை. மனது துள்ளி ஆட்டம் போட்டது.

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெதுவாக எழுந்து கடிகாரத்தை பார்க்க ஒன்பது மணி, 'ஐயோ ரொம்ப நேரம் ஆகி போச்சே' என்று எழுந்து கவிதாவை தேட, காணவில்லை.

'எங்க போய் இருப்பா' என்று யோசித்தபடி, திரும்பி பார்க்க பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் கவிதா.

"என்னடி ராத்திரி முழுக்க தூங்கலை போல இருக்கு,"

"இல்லையே நல்லா தூங்கினேனே."

"பொய் சொல்லாதே. அலாரம் சத்தம் கேட்டு நான் முழிச்சுட்டேன். யாருக்கு மெயில் அனுப்பினே. அந்த ஜாஸ்மினுக்கு தானே. வேனாம்டி அந்த ஜாஸ்மின் யாருன்னு நமக்கு சரியா தெரியாது. ரிஸ்க் எடுக்காதே. அது மட்டும் இல்லை, பழகின சில நாட்களிலே நீ அவங்களை நம்புறதும் சரியில்லை."

"நீதாண்டி சொன்னே அவங்க நல்ல மாதிரின்னு. இப்போ மாத்தி சொல்ற."

"உண்மைதாண்டி. எனக்கு என்னமோ அந்த ஜாஸ்மின் ஒரு புரியாத புதிரா இருக்கிற மாதிரி தெரியுது. கொஞ்சம் ஜாலியா இருக்கும்போது, ஜாக்ரதையாவும் இருக்க பழகிக்கோ."

மாலையில் மீண்டும் சாட்டில் ஜாஸ்மின் வர, அபர்ணா உற்சாகமா சாட் செய்ய தொடங்கினாள்.

"ஹாய், ஜாஸ்மின். எந்த கோவிலுக்கு போனீங்க".

"எனக்கு பிடிச்ச முருகன் கோயிலுக்குத்தான்."

"அப்படியா, வேற இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்".

"வீட்டில வேலைக்கார அம்மா சமைச்சு இருந்தாங்க. அவங்களோட சாப்பிட்டு விட்டு, பிறகு சிவானந்தம் ஆஸ்ரமம் போய் அங்கே உள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு, மற்றும் உடைகள் வாங்கி கொடுத்தேன்."

"அப்படியா. மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு நல்ல மனசு, அது போலவே வாழ்கையும் அமைய வாழ்த்துக்கள்.அப்புறம் இன்னும் ஒரு முக்கியமான விஷயம், இன்னும் இரண்டு நாட்களில் ப்ராஜெக்ட் விஷயமாக நான் சென்னை போகிறேன். அங்கே நாலு மாசம் ப்ராஜெக்ட் இருக்கு."

"அப்படியா, எப்படி சென்னைல தங்க போறீங்க. உங்க அப்பா வீட்டிலா.?"

"இல்லை, என்னோட பாட்டி கூட வராங்க. அதனால வீடு பிடிச்சு தங்க வேண்டியது தான்."

"நல்ல யோசனை. ஒரு நிமிஷம் இருங்க", வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை. அடுத்த சில நொடிகள் சாட் மெளனமாக இருந்தது. அபர்ணா காத்து கொண்டு இருந்தாள்.

"ஒண்ணும் இல்லை, வீட்டு வேலைக்கார அம்மா வந்தாங்க. என்னை வாழ்த்தினாங்க."




"அப்படியா, என்ன சொல்லி வாழ்த்தினாங்க"

"ராசா, உன்னோட நிறைந்த மனசுக்கு நீ சீக்கிரம் கல்யாணம் செஞ்சு மனைவியோட நெடுங்காலம் வாழணும்னு வாழ்த்தினாங்க".

"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க".

"இல்லை பாட்டி, எனக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லை."

"அப்படியா சார், உங்க நிஜ பேர் என்ன.?"

இந்த கேள்வி வந்ததும் மிரண்டு போனான். திரும்ப தான் டைப் செய்த சாட்டை படித்தபோது புரிந்தது, "ஷிட்".

"என்ன சார் பதிலையே காணம். என்ன வாயடைச்சு போய் நிக்கிறீங்க. ஜாஸ்மின், உங்களை பற்றி நான் உயர்வாக நினைச்சேன். உங்கள எண்ணங்களை பற்றி பெருமைப்பட்டேன், கடைசில நீங்களும் ஒரு சராசரி ஆண்தான்னு நிரூபிச்சிடிங்க. இப்படி இன்டர்நெட்ல பொய் சொல்லி என்னை மாதிரி உலகம் தெரியாத பெண்ணை ஏமாத்துறீங்களே. இது உங்களுக்கே அசிங்கமா படலையா. உங்களோட பிறந்த நாளுக்கு ராத்திரி அலாரம் வச்சு வாழ்த்து சொன்னேனே அந்த தூய அன்புக்கு நீங்க தர்ற பரிசு இதுதானா.?"

"அபர்ணா, வெயிட் பண்ணுங்க. நான் விளக்கமா சொல்றேன். அட்லீஸ்ட் உங்க போன் நம்பரை சொல்லுங்க. என்னோட எண்ணத்தில எந்த தவறும் இல்லை."

"குட் பாய் பார் எவர்". அபர்ணா லாக் அவுட் செய்து வெளியே வந்து விட்டாள்.

லாப் டாப்பை மூடி வைத்து விட்டு, இரு கைகளையும் அதன் மேல் வைத்து தனது முகத்தை பதித்து அழ ஆரம்பித்தாள்.

கவிதா பதறி போய், "என்னடி ஆச்சு ஏன் அழறே."

"கவிதா நீ சொன்னது மாதிரியே அந்த ஜாஸ்மின் ஆம்பளை தாண்டி, என்னை ஏமாத்திட்டான்."

"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா. பரவாயில்லை, இப்போவாது தெரிஞ்சுதே."

"இன்னொரு விஷயம் கவி, அவன் என்னோட போன் நம்பர் கேட்டான்."

"அய்யய்யோ கொடுத்துட்டியா."

"இல்லைடி, நான் வெளியே வந்துட்டேன். இனிமே அந்த மெயில் ஐ டி உபயோகிக்க மாட்டேன்."



No comments:

Post a Comment