Thursday, November 5, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 13



முதலில் தடுமாறிய மான்சி, பிறகு ஒரு முடிவுடன் நிமிர்ந்து “ என்னை யாருன்னு கேட்க்கிறீங்க சரி, ஆனா யாருன்னே தெரியாதை என்னைப் பத்தி எப்படி அவ்வளவு கேவலமா உங்க மகன் கிட்ட பேசினீங்க? ” என்று மெல்லிய குரலில் ஆனால் கூர்மையாக கேட்டாள்

இலகுவாக நின்றிருந்த மூர்த்தியிடம் திடீரென ஒரு விரைப்பு வர “ நீ.................” என்று நிறுத்த...

“ நான் மான்சி,, இன்னும் கொஞ்ச நாள்ல திருமதி மான்சி சத்யன் ஆகப் போறவ ” என்று மான்சி தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அவரை நேராகப் பார்த்து சொன்னாள்

முகத்தில் திகைப்புடன் அவளை ஏறிட்ட மூர்த்தி “ இப்போ இங்க எதுக்காக வந்திருக்க” என்று கொஞ்சம் கோபமாக கேட்டார்



அவருடைய கோபம் தன்னை ஒன்றும் பண்ணாது என்பதுபோல் தலைநிமிர்ந்து நின்ற மான்சி “ நியாயம் கேட்க வந்திருக்கேன், யாருன்னே தெரியாத ஒருத்தரைப் பத்தி எப்படி இப்படிப்பட்டவதான் அவள்ன்னு உங்களால முடிவு பண்ண முடிஞ்சது? என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? சரி என்னை... விடுங்க இப்போதைக்கு நான் யாரோ...... ஆனா உங்க மகன் அவரை உங்களுக்கு தெரியாதா? நம்ம புள்ள இந்த மாதிரி பண்ணுவானான்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லாத அளவுக்கு அவர் எப்பையாவது நடந்திருக்காறா? அவரைப் போய் இவ்வளவு கேவலமா பேசிட்டீங்களே?” என்று மான்சி குரலை உயர்த்தி சரமாரியாக அவரை கேள்விகள் கேட்க

அந்த கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நின்றார் மூர்த்தி, நேற்று மகன் விட்ட அறையில் கொஞ்சம் தெளிந்திருந்தவர் இப்போது மான்சியின் கேள்வியில் இன்னும் கொஞ்சம் தெளிந்தார், அவள் கேள்விகள் மனதில் வண்டாய் குடைந்தது, தப்பானவளா இருந்தா இப்படி நேருக்கு நேரா கேள்வி கேட்க மாட்டா, கண்ணைப் பார்த்து நேராக பேசவும் மாட்டாள், என்று அவரது அனுபவ அறிவு சொன்னது,, இருந்தாலும் சின்னப் பொண்ணுகிட்ட விட்டுக்கொடுக்க மனமின்றி “ என்னை சமாதானம் பண்ணச்சொல்லி அவன் அனுப்புனானா?” என்று நக்கலாக கேட்டார்

கோபத்தில் மான்சி முகம் இன்னும் சிவந்து போக , “ இன்னும் உங்க மகனை சீப்பாதான் நினைக்கிறீங்களா? நான் உங்களைப் பார்க்க போறேன்னு தெரிஞ்சிருந்தா நேத்து உங்களுக்கு நடந்தது இன்னிக்கு எனக்கு நடந்திருக்கும், வேனாம் இன்னொருமுறை அவரை மட்டம் தட்டி பேசாதீங்க,,என்று மான்சி சொல்ல..

தன் மகனுக்காக இவ்வளவு பரிந்துகொண்டு வரும் மான்சியை ஆச்சரியமாகப் பார்த்தார் மூர்த்தி

" என்ன அப்படி பார்க்கிறீங்க,, என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவ்வளவு ஆசை மனசுல இருந்தும் தன்னோட குடும்ப சூழ்நிலையை மனசுல நினைச்சு வேதனையோட ஒதுங்கி வாழுறவருக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானா?” என்று தனது அடுத்த கேள்வி கணைகளை தொடுத்தாள் மான்சி

இப்போது நிமிர்ந்த மூர்த்தி “ இப்போ என்ன சொல்ல வர்ற? நீ கன்னிப் பொண்ணு மாதிரியும் அவன் உன் காதலன்ங்கற மாதிரியும் பேசுற?” என்று குரலில் எள்ளலுடன் மூர்த்தி பேசவும்

அவ்வளவு நேரம் நிமிர்ந்து பேசிய மான்சியின் கண்கள் குளமாக சட்டென்று தலைகுனிந்து “ நான் கன்னிப்பொண்ணு இல்லைதான்” என்று குரலில் கண்ணீர் கலந்து கூறியவள் உடனே நிமிர்ந்து “ ஆனா மனசால உங்க மகனைத் தவிர வேற யாரையுமே தீண்டாத பத்தினி நான்” என்றாள்

மூர்த்தி இப்போது ஏளனமாக அவள் கையில் இருந்த குழந்தையைப் பார்க்க..

அவர் மனதில் ஓடுவது புரிந்து “ என்ன யாரையும் தொடாத பத்தினின்னு சொல்லிட்டு கையில குழந்தையோட இருக்காளேன்னு பார்க்கிறீங்களா? மொதல்ல என்னைப் பத்தி சொல்றேன், அப்புறம் நான் பத்தினியா பரத்தையான்னு நீங்க முடிவு பண்ணிக்கங்க” என்றவள் கையில் இருந்த குழந்தையை மார்போடு அனைத்து

“ நான் வடநாட்டுல கூலிவேலை செய்துக்கிட்டு இருந்தேன், அங்க முகுந்தன் மேஸ்திரியா வேலைக்கு இருந்தார், நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி சினிமால நடிச்சா நிறைய பணம் வரும்னு ஆசை காட்டி என்னோட பதினாறாவது வயசுல சென்னைக்கு கூட்டிட்டு வந்தார், ஆனா இங்க வந்ததும் எனக்கு சினிமா பிடிக்கலை, அழகைவிட மானத்தை வித்து தாராளமா இருந்தாத்தான் சினிமால இடம்னு தெரிஞ்சதும் பிடிவாதமா மறுத்துட்டேன், முகுந்தனும் வேற வழியில்லாம என்னை கூட்டிகிட்டு ராணிப்பேட்டை வந்தார்,

“ கல்யாணம் ஆகாதா எங்களுக்கு யாருமே வீடு தரலை, சரி வேற வழியில்லாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு பண்ணிகிட்டோம், ஆனா அதுக்கப்பறம் முகுந்தன் என்னை விட்டுட்டு போய்ட்டார் எப்பையாவது தான் வருவாரு, அவரு திருந்துவருன்னு நம்பிக்கையில நானும் காத்திருந்தேன் நாலு வருஷத்துல நாங்க வாழ்ந்ததை எண்ணி சொல்லலாம், அப்புறம் கஞ்சா கடத்திட்டு ஜெயிலுக்குப் போயிட்டார், அப்பதான் என் வயித்துல இந்த குழந்தை உருவாச்சு, குழந்தைக்கு அப்பான்னு அவர் இருந்தா போதும்னு வாரத்திற்கு ரெண்டு முறை ஜெயிலுக்குப் போய் அவரைப் பார்த்துட்டு வருவேன்” என்று மான்சி சொல்லும்போதே இடைமறித்த மூர்த்தி

“ அப்போ முகுந்தனைப் பார்க்கத்தான் நீ அடிக்கடி சிறைக்கு போனியா? ” என்று மூர்த்தி யோசனையுடன் புருவத்தை சுருக்கியபடி கேட்க

“ ஆமாம் அவரை பார்க்கத்தான் வாரத்துல ரெண்டு முறை போவேன், அப்பல்லாம் உங்க மகனை யாருன்னே எனக்கு தெரியாது, அப்புறம் ஒருநாள் முகுந்தன் இறந்துட்டாருன்னு ஒருநாள் முழுக்க நான் ஜெயில்ல காத்திருந்தப்ப தான் உங்க மகன் எனக்கு உதவிக்கு வந்தார், அப்புறம் என் வாழ்க்கையில நடந்த எந்தவொரு சம்பவமும் அவரில்லாம நடக்கலை, அவர் மேல உள்ள காதலை மறைச்சு அவர் நல்லபடி கல்யாணம் பண்ணி வாழனும்னு தான் நான் யார்கிட்டயும் சொல்லாம நிறைமாச வயித்தோட ஊரைவிட்டே போனேன், ஆனா விதி அவரை எனக்கு பிரசவம் ஆகியிருந்த ஆஸ்பத்திரிக்கே அனுப்பி எங்களை சேர்த்து வச்சிருச்சு” என்ற மான்சி அடக்கமாட்டாமல் மகனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட...

மூர்த்திக்கு அவள் அழுவதை பார்க்க சங்கடமாக இருந்தது “ என்னம்மா இந்த மாதிரி இடத்துல நின்னு அழுதுகிட்டு..... யாராவதுப் பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று சங்கடமான குரலில் மெதுவாக சொன்னார்

மான்சி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தோளில் இருந்த குழந்தையின் டவலால் கண்ணீரை துடைத்துவிட்டு விறைப்புடன் நிமிர்ந்து “ இதோபாருங்க, நானும் உங்க மகனும் உயிரா விரும்புறோம், உங்க மகன் இல்லேன்னா நான் இல்லைன்னு டயலாக் பேச விரும்பலை நான்.......ஆனா நான் இல்லைன்னா உங்க மகன் அடுத்த நிமிஷம் உயிரோடவே இருக்கமாட்டார்,, அதை மட்டும் உறுதியா சொல்ல என்னால முடியும்,, என் தரப்பை நான் சொல்லிட்டேன், இனிமே நான் உத்தமியா வேசியான்னு உங்க மனசாட்சியை கேட்டு தெரிஞ்சுக்கங்க, நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு தனது ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பியவள் மறுபடியும் நின்று திரும்பி மூர்த்தியின் அருகே வந்தாள்

“ உங்க மனைவிகிட்ட சொல்லுங்க.... உங்களை உங்க மகன் அடிச்சதுக்கு அவங்களுக்கு எவ்வளவு கோபம் வந்ததோ..... அதைவிட பலமடங்கு அவரை அவங்க அடிச்சதுக்கு எனக்கு வந்ததுன்னு” என்றவள் குமுறிவந்த கண்ணீரை உதட்டைக் கடித்து அடக்கியபடி விம்மலும் விக்கலுமாக் “ இனிமே அடிப்பாங்களா அவங்க, கன்னத்துல விரலெல்லாம் பதிஞ்சு சிவந்து போய்,, அவரு எவ்வளவு அழுதாரு தெரியுமா?” என்று மான்சி குமுறியபடி கேட்க


மூர்த்தி அமைதியாக நின்றிருந்தார், மான்சியின் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பில் குளித்து சுத்தமாக வெளி வந்தவை என்று அவருக்குப் புரிந்தது, சத்யனை அடித்ததற்காக அவளின் குமுறலைப் பார்த்து அவருக்கு சிரிப்பு கூட வந்தது, பல்லை கடித்து அடக்கிக்கொண்டார், அவ மகனை அவ அடிச்சா, அதுக்கு அவனே பேசாம போயிட்டான் இவளுக்கு என்னா ரோஷம் வருதுடா யப்பா, இரும்மா இரு என் பொண்டாட்டி கிட்டயே போய் சொல்றேன்’ என்று மனதுக்குள் எண்ணமிட்டார்,, மான்சியின் பேச்சில் தனது மனைவி சாந்தியின் சாயலை கவனித்தார், எல்லாப் பொண்ணுகளுமே புருஷனுக்கு ஒன்னுனனா கொதிச்சுப் போயிடுவாங்க போலருக்கே என்று அவரையும் அறியாமல் அவர் மனம் சத்யனையும் மான்சியையும் ஜோடி சேர்த்தது.

மான்சி விடுவிடுவென்று நடந்து அலுவலகத்தை விட்டு வெளியேப் போக, மூர்த்தி அவள் பின்னாலேயே ஓடி அவளை தடுத்து நிறுத்தி “ இங்கே ஆட்டோ அவ்வளவு சீக்கிரமா கிடைக்காது, குழந்தையை வச்சிக்கிட்டு எங்கபோய் வெயில்ல அலைவ.. நீ போய் உள்ள உட்காரு நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்” என்றவர் மான்சி மறுக்கும் முன் வெளியே போயிருந்தார்

மான்சி யோசனையுடன் உள்ளே வந்து ஒரு மர நிழலில் மறைவாக அமர்ந்து அவ்வளவு நேரம் குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்ததை எண்ணி முந்தானையால் தோளை மூடி குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்

சற்றுநேரத்தில் மூர்த்தி ஆட்டோவுடன் வர குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறிவிட்டு “ நன்றிங்க” என்று மூர்த்தியைப் பார்த்து சொல்ல...

“ ம்ம்” என்றவர் சற்று குனிந்து ஆட்டோ டிரைவரிடம் கையசைத்து விட்டு “ பாரும்மா நீ யாருன்னு எனக்கு தெரியாது, எவனோ ஒருத்தன் சொன்னான்னு நான் உன்னை தவறா பேசினது தப்புதான் அதுக்காக மன்னிச்சிடு, ஆனா என் மகனை பேசினதுக்கோ, என் பொண்டாட்டி அவனை அடிச்சதுக்கோ நாங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை, ஏன்னா அவன் செஞ்சது தப்புதான், புரிஞ்சுதா?” என்று கூறிவிட்டு டிரைவரிடம் தலையசைக்க ஆட்டோ கிளம்பியது

போகும் ஆட்டோவையேப் பார்த்துவிட்டு, ஆட்டோ போக்குவரத்தில் கலந்ததும் திரும்பி தனது அலுவலகத்தை நோக்கி நடந்தார், அவர் மனம் முழுவதும் மான்சியின் வார்த்தைகள் மாற்றி மாற்றி வாள் சண்டையிட்டன, மான்சி நிறைய சாந்தியை ஞாபகப்படுத்தினாள்,, யப்பா என்னாமா கேள்வி கேட்கிறா? என்றபடி அலுவலகத்தில் சென்று அமர்ந்தவருக்கு அதற்கு மேல் வேலை ஓடவில்லை, காலையில் அழுதழுது வீங்கிய முகத்துடன் இருந்த மனைவியின் ஞாபகம் ஒருபுறமும் மான்சியை சந்தித்ததில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமும் அவரை வேலையில் கவனமில்லாமல் செய்தது

மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தார், பனிரெண்டரை ஆகியிருந்தது, ஒரு பேப்பரை எடுத்து அரைநாள் விடுப்பு எழுதி ப்யூனிடம் கொடுத்து மேலதிகாரியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்தார், அலுவலகத்திற்கு அடுத்த தெருவில் இருந்த டாஸ்மார்க் கடையை நோக்கி அவர் கால்கள் விரைந்தன

கடையை நெருங்கி ஒரு நூறுரூபாயை கொடுத்து “ MC ஒரு குவாட்டர் குடுப்பா” என்று வாங்கிக்கொண்டு இரண்டு வாட்டர் பாக்கெட்டும், ஒரு வறுத்த வேர்கடலை பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு கடையின் பின்புறம் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் டம்ளரில் ஒன்றை எடுத்து வைத்து பாட்டிலின் மூடியை திருகியவர் பிறகு ஏதோ நினைத்து பாட்டிலை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேர்கடலை மட்டும் பிரித்து வாயில் கொட்டிக்கொண்டு நடந்தார்

பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து கேட்டை திறந்து உள்ளே போனார், கதவு ஒருக்களித்து மூடியிருக்க வீட்டில் சாந்தி மட்டும் சமையலறையில் வேலையாக இருந்தாள், மூர்த்தி அறைக்குள் போய் கைலி மாத்திக்கொண்டு பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தார்..




சாந்தி அவரை ஆச்சர்யமாக பார்த்து “ என்ன இந்த நேரத்துல வந்துருக்கீங்க?” என்று கேட்க.

ஹாலில் அமர்ந்து டிவியை ஆன் செய்தவர் “ மனசு சரியில்லை சாந்தி, வேலையில கவனமே போகலை அதான் அரைநாள் லீவு குடுத்துட்டு வந்துட்டேன்” என்றார் மூர்த்தி

மூர்த்தி இந்த மாதிரி தெளிவாக பேசி வெகுநாட்கள் ஆகிவிட்டதால் சாந்தி பரபரப்பானாள் “ உடம்புக்கு ஒன்னும் இல்லை? நல்லாத்தானே இருக்கீங்க? ” என்று அவரை நெருங்கி கேட்க

மனைவியின் பதட்டம் உணர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்து “ நான் நல்லாத்தா இருக்கேன் சாந்தி, ஆமா பாகியும் அருணும் எங்க?” என்று கேட்க

“ அருண் தூரத்தில் இருக்குற சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை வைக்க காலையிலயே கிளம்பி போனான், பாகி நான் கோயிலுக்கு போயிட்டு வந்ததும் யாரோ பிரண்டை பார்க்கப் போறேன்னு அவசரமா கிளம்பி போய்ட்டா” என்று பதில் சொன்னவள் மறுபடியும் சமையலறைக்குள் போய் விட

‘ அருணுக்கு எந்த சொந்தக்காரங்களை தெரியும் என்று யோசனையுடன் மூர்த்தி அமர்ந்திருந்தார், சத்யனும் அருணும் சேர்ந்துதான் பத்திரிக்கை வைக்க போயிருப்பார்கள் என்று அவருக்கு தெளிவாகப் புரிந்தது,

எழுந்து சமையலறைக்கு போய் மனைவியின் பின்னால் நின்றவர் “ என்ன சமையல் முடிஞ்சுதா சாந்தி?” என்றார்

சமையலறை வரை வந்த மூர்த்தியை ஆச்சர்யமாக பார்த்த சாந்தி “ முடிச்சுட்டேன்ங்க, உங்களுக்கு மட்டும் ரெண்டு ஆம்லேட் போட்டு தர்றேன் சாப்பிடுறீங்களா?” என்று ஏக்கமாக கேட்டாள், மூர்த்தி வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டு வருஷக்கணக்கில் ஆகிறது, இரவு உணவு கூட ரொம்ப ஓவராகி வந்தால் அப்படியே படுத்துவிடுவார், காலையில் மகள் கையால் சாப்பிடும் டிபனோடு சரி...

மனைவியின் ஏக்கத்தை அவள் கண்களில் படித்தவர் “ ஆம்லேட்லாம் வேனாம் இருக்குறதை போடு சாப்பிடுறேன், ஆனா அதுக்கு முன்னாடி உன் கூட கொஞ்சம் பேசனும் வா” என்று சாந்தியின் தோளில் கைவைத்து வெளியே அழைக்க..

சாந்தியின் உடல் கூசி சிலிர்த்தது, கூச்சத்துடன் நெளிந்து “ கையை எடுங்க வர்றேன்” என்றாள்

ஏதோ கேட்க வாய் திறந்தவர் கேட்காமலேயே சாந்தியின் கூச்சத்தை மதித்து கையை எடுத்துக்கொண்டார், ஹாலுக்கு வந்து அமர்ந்தவர் முன்பு சாந்தியும் அமர்ந்தாள்

மூர்த்தி சற்றுநேரம் மனைவியின் முகத்தையே பார்த்திருந்தார், சாந்தி மூர்த்திக்கு அத்தை மகள், மூர்த்தி வசதியானவர் இல்லை அதனால் வேண்டாம் என்று சொன்ன குடும்பத்தாரிடம் உண்ணாவிரதம் இருந்து போராடி அவரை பிடிவாதமாக திருமணம் செய்துகொண்டவள் சாந்தி, மூர்த்தியின் மீது சாந்தி வைத்திருக்கும் அன்பு வித்தியாசமானது, அவர் எது செய்தாலும் அதில் ஒரு நியாயத்தை கண்டுபிடிக்கும் கண்மூடித்தனமான அன்பு,, மூர்த்தி செத்துப்போ என்றால் உடனடியாக உயிரைவிடக் கூடியவள், மூர்த்தியும் அப்படித்தான் எவ்வளவு குடித்தாலும் சாந்தியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் நினைக்காதவர்,, அந்தளவுக்கு உயிருக்கு உயிராக இருந்த தாம்பத்யம் எந்த இடத்தில் சறுக்கியது என்று யோசித்தார்..

தன் முகத்தையே பார்த்தவரைப் அதிசயமாக பார்த்து “ ஏதோ பேசனும்னு சொன்னீங்க?” என்று ஞாபகப்படுத்தினாள் ,

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு டிவியின் சத்தத்தை குறைத்துவிட்டு சாந்தியின் கையைப்பிடித்து “ சாந்தி நேத்து எதுக்கு சத்யனை அடிச்ச” என்று கேட்டார்

சத்யனைப் பற்றிப்பேசியதுமே சாந்தியின் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த மென்மை தொலைந்து போக கடுமையான முகத்தோடு “ அவன் உங்களை கைநீட்டினதால அடிச்சேன், அவனுக்கு இந்த குடும்பத்தையே தாங்குறோம்ங்கற திமிரு, அதனாலதான் உங்களையே கைநீட்டிட்டான் ” என்று பொரிந்து தள்ளினாள்


சாந்தியின் கையை அழுத்தமாகப் பற்றிய மூர்த்தி “ பொறுமையா பேசு சாந்தி, நான் பேசினதும் தப்புதானே, எவனோ ஒருத்தன் சொன்னான்ங்கறதுக்காக போதையில வந்து பெத்து புள்ளைய கேவலமா பேசினது தப்புதான், அதான் அவனுக்கு கோபம் வந்திருச்சு, ஆனா அதுக்கா நீ அவ்வளவு வலுவா அடிச்சிருக்கக் கூடாது சாந்தி, கன்னத்துல உன் விரலெல்லாம் பதிஞ்சு போச்சாம்” என்று மூர்த்தி வருத்தமாக கூற

சாந்தி அவரை கூர்மையாகப் பார்த்து “ யார் சொன்னது? ” என்றாள்

மூர்த்தி சாந்தியின் கோபத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ எல்லாம் உன்னோட...............” என்று முடிக்காமல் நிறுத்தி பிறகு பக்கென்று சிரித்துவிட்டு “ உன்னோட மருமகதான் சொன்னா” என்றார்

சாந்தி முகம் உடனே நெருப்பு துண்டென மாற “ ச்சீ” என்று கோபமாக அங்கிருந்து எழுந்தாள் ...

அவள் கையைப்பிடித்து இழுத்து தன்னருகே அமர்த்திய மூர்த்தி “ என்ன ச்சீ,, இதோபார் சாந்தி இதையெல்லாம் இனிமே நாம நினைச்சாலும் மாத்த முடியாது, சத்யனுக்கு அவதான்னு ஏற்கனவே முடிவாயிருக்கு” என்று பொறுமையாக மனைவிக்கு சொன்னார்

“ ஏங்க அந்தப் பொண்ணைப் பத்தி நேத்து அவ்வளவு கேவலமா நீங்க தானே பேசினீங்க, இப்போ நீங்களே இப்படி சொல்றீங்களே?” என்றாள் வருத்தமாக..

“ ஆமா நான்தான் சொன்னேன்.. எனக்கு சொன்ன பொறம்போக்கு அந்த மாதிரி சொன்னான்” என்று கோபமாக கத்தியவர், சட்டென்று அடங்கி “ சாந்தி நேத்து காலையில வேலைக்குப் போனதுமே சிறையில இருக்குற குடிநீர் பைப் கனெக்ஷன் எல்லாம் ரிப்பேரா இருக்கு ஆளுங்களை கூட்டிட்டுப் போய் சரி பண்ணச்சொல்லி ஆர்டிஓ சொன்னாரு, நானும் ஆறு பேரை கூட்டிக்கிட்டு போனேன், அங்க சமையல் செய்ற இடத்துல இருந்த பைப்பை ரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கும்போது கூட இருந்த போலீஸ்காரன் ஒருத்தன் கிட்ட என் மகனும் இங்கதான் போலீஸா இருக்கான்னு சொல்லி பேரைச் சொன்னேன், அப்புறம் அவன்தான் நேத்து நான் கேட்டதையெல்லாம் நக்கலா சொன்னான், எனக்கு வந்த கோபத்துல எல்லாத்தையும் அப்படியேப் போட்டுட்டு கடைக்குப் போய் சரக்கடிச்சுட்டு வந்தேன், நானும் கேவலமா பேசினேன் அவனும் கோபத்துல அடிச்சிட்டான், ஆனா தப்பு நம்ம மேலதான் சாந்தி எவன் சொன்னாலும் நம்ம புள்ளையப் பத்தி நமக்கு தெரியவேண்டாமா? அவனை அவ்வளவு கேவலமாப் பேசினது தப்புதான்,, சரி அது முடிஞ்சு போச்சு இனிமே நடக்கப்போறத பத்தி பேசலாம்” என்று மூர்த்தி நிதானமாக கூறினார்

“ இப்ப மட்டும் எப்படி அவ நல்லவன்னு தெரிஞ்சது,, நீங்க வேற யார்க்கிட்டயாவது விசாரிச்சீங்களா?” என்று சாந்தி கேட்க

சாந்தியை நெருங்கி அமர்ந்த மூர்த்தி “ இல்ல சாந்தி யாரையும் விசாரிக்கனும அவசியமில்லை, அந்த பொண்ணோட வார்த்தைகள்ல உண்மையிருக்கு” என்று மூர்த்தி தெளிவாக சொல்ல

“ அப்போ அவ சொன்னதை நீங்க நம்புறீங்க?” என்று மறுபடியும் கோபமானாள் சாந்தி

“ ஆமா முழுசா நம்புறேன்” என்று மூர்த்தி சொன்னதும் வேகமாக விலகியவளை மறுபடியும் இழுத்து தன்னருகே அமர்த்தி நகரவிடாமல் கைகளால் சாந்தியின் தோளைச் சுற்றி வளைத்து “ நான் சொல்றதை முழுசா கேளு, அப்புறமா எழுந்து ஓடுவ,, அந்த பொண்ணு வார்த்தையில பொய்யில்லை சாந்தி, ஒவ்வொரு வார்த்தையிலும் சத்யன் மேல வச்சிருக்குற அன்புதான் தெரிஞ்சது, அவ கெட்டவளா இருந்திருந்தா, அவளுக்காக சத்யன் என்னை அடிச்சிட்டான் தெரிஞ்சதும் மேலும் சத்யனை தூண்டிவிட்டு இன்னும் நம்ம வீட்டுக்குள்ள கலவரத்தை உண்டு பண்ணியிருக்கலாம், ஆனா அவளே தைரியமா வந்து நேர்ல பேசினாப் பாரு அதுதான் அவளை யாருன்னு நிரூபிச்சது, அவ பேசும்போது அன்னிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க நீ உன் வீட்டுல பேசுனியே? அதேமாதிரி இருந்துச்சி, அவளோட ஒவ்வொரு வார்த்தையிலயும் நான் உன்னைத்தான்ப் பார்த்தேன் சாந்தி, அதனாலதான் சொல்றேன் அவ நல்ல பொண்ணு, சத்யனை நல்லபடியா கவனிச்சுக்குவா” என்ற மூர்த்தி இன்னும் மான்சி தன்னைப்பற்றி சொன்ன அத்தனை விஷயங்களையும் சொல்ல சொல்ல சாந்தியின் முகத்தில் இருந்த கோபம் மாறினாலும்...


“ அதுக்காக ஒரு விதவையை எப்படிங்க சத்யனுக்கு கல்யாணம் பண்றது?” என்று சலித்துக்கொண்டாள்

மனைவியின் முகத்தை கூர்மையுடன் ஏறிட்டவர் “ ஏன் சாந்தி நெருப்புன்னா வாய் சுட்டுடப் போறதில்ல, அதனால சொல்றேன், நாமலும் ஒரு பொண்ணு வச்சிருக்கோம் நாளைக்கு அவளுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா மறுபடியும் ஒரு வாழ்க்கை அமைச்சு குடுக்க மாட்டோமா? இல்ல உன்னை எனக்கு தராம வேற எவனுக்காவது உன் அப்பா கல்யாணம் பண்ணி குடுத்துட்டு நீ இப்படிஒரு நிலைமையில வந்து நின்னா நான்தான் விட்டுடுவேனா? என்னைப் போலத்தானடி என் மகனும் இருப்பான்?” என்று மூர்த்தி சிரிப்புடன் சொல்லவும்

“ நீங்க என்ன சொன்னாலும் அவன் உங்களை அடிச்சதுக்கு இனிமே இந்த வீட்டுக்குள்ளயே நுழையக் கூடாது” என்று மறுபடியும் முருங்கைமரம் ஏறினாள் சாந்தி

“அட இதை சொல்ல மறந்துட்டேனே, சத்யன் என்னை அடிச்சதுக்கு உனக்கு எவ்வளவு கோபம் வந்ததோ அதைவிட பலமடங்கு அவனை நீ அடிச்சதுக்கு அந்த பொண்ணுக்கு வந்ததாம், உன்கிட்ட ஞாபகமா சொல்லச்சொன்னா” என்றார் மூர்த்தி குறும்பாக

“ ஓ இதுவேறயா? கோபம் வந்து என்னத்த கிழிப்பாளாம், நான் அடிச்சதும் என் புள்ளையே அமைதியா வெளிய போயிருச்சு.. இவ என்னை என்னப் பண்ணுவாளாம்? அதையும்தான் பார்க்கலாம்” என்று கோபத்தோடு சாந்தி கூறிவிட்டு வேகமாக அவரைவிட்டு விலகி எழுந்தவளை மூர்த்தி இழுத்த வேகத்தில் அவர் நெஞ்சிலேயே விழுந்தாள்

அவளை வளைத்து தன்னோடு அணைத்துக்கொண்டு “ விடுடி பாவம் அந்த பொண்ணு இந்த வேகாத வெயில்ல பச்சைக்குழந்தையை தூக்கிகிட்டு கண்ணீரோட வந்து நின்னப்ப எனக்கே அய்யோன்னு இருந்திச்சு, பாவம் அவ சத்யனை ரொம்பவே நேசிக்கிறாப் போலருக்கு, ஆனா நான் உன்னை விட்டு குடுக்கலை, உன்னை பேசினதுக்கு வேனும்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆனா என் மகனை திட்டினதுக்கோ அடிச்சதுக்கோ நாங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்கனும்னு அவசியமில்லைன்னு சொல்லித்தான் அனுப்பினேன்” என்று மூர்த்தி சொல்ல...

“ ம்ம்” என்ற சாந்தி தன் உடலில் அலைந்த மூர்த்தியின் விரல்களை மெதுவாக விலக்கி “ என.........க்...கு.. வேலை....யிருக்கு” என்று திக்கித்திணறி தடுமாறியபடி எழுந்திருக்க முயன்றவளை

மீண்டும் தன் கையணைப்பில் இறுத்தி கூந்தலில் இருந்த மல்லிகையை நுகர்ந்தபடி “ அதான் எல்லாம் முடிஞ்சுதுன்னு சொன்னியே?” என்றார் மூர்த்தி கிசுகிசுப்பாக

அவரின் மூச்சுக்காற்று தன் காதோரம் படுவதால் சிலிர்த்தபடி “ இதென்ன...... புது..சா இப்படியெல்லாம், ம்ஹூம் பசங்க வந்துருவாங்க விடுங்க” என்று திமிறி விடுபட முயன்றவளை தன் கைக்குள் அடக்கியபடி

“ எது புதுசு சாந்தி, கொஞ்சநாளா மறந்து போனது இப்போ வேனும்னு தோனுது, பசங்க இவ்வளவு சீக்கிரமா வரமாட்டாங்க, அப்படியே வந்தாலும் கதவு தாழ்ப் போட்டுதான் இருக்கு” என்ற மூர்த்தி முகத்தால் வருடியே சாந்தியின் முந்தானையை விலக்கினார் 


முந்தானை விலகியதும் சுதாரித்து சட்டென்று விலகிய சாந்தி “ ம்ஹூம் சாயங்காலம் அம்மன் கோவிலுக்குப் போகனும்” என்று கூறிவிட்டு எழுந்திருக்க

உணர்ச்சிகள் கொந்தளிக்கும் போது விலகி எழுந்த மனைவியை எண்ணி ஆத்திரம் மேலிட “ ஆமாடி நீ இப்படி கோயில் கோயிலா சுத்து, நான் டாஸ்மார்க் கடையா பார்த்து போய் குடும்பம் நடத்துறேன்” என்றவர் எழுந்து சாந்திக்கு நேராக நின்று “ ஏன்டி உனக்கு என்ன வயசாச்சு? நாற்பத்தஞ்சு இருக்குமா? எனக்கு வயசு நாற்பத்தொன்பது, ஆனா நீயும் நானும் சேர்ந்து எத்தனை வருஷமாச்சு? இந்த வீடு கட்டும்போது விட்டுப்போன உறவு, கிட்டத்தட்ட பத்து வருஷம் ஆகப்போகுது, அப்புறம் என்னைக்காவது ஒருநாள்னு இருந்துச்சு, வீட்டுக்காக வாங்குன கடனை அடைக்க கஷ்டப்பட்டதால வேனாம்னு தவிர்த்த? அதுக்கப்புறம் புள்ளைக பெருசாயிட்டாங்கன்னு வேனாம்னு சொன்ன? அப்புறம் கொஞ்சம் குடிச்ச நான் பெரிய குடிகாரனானேன், அதோட சுத்தமா நின்னுபோச்சு, ஏன்டி நான் குடிகாரன் ஆனதே உன்னாலதான், புருஷன் குடிக்கக்கூடாதுன்னு கோயில் கோயிலா சுத்துனியே.. ஒருநாளாவது எனக்குப் பிடிச்ச மாதிரி நடந்து என்னை திருத்தி உன் கைக்குள்ள வச்சுக்கனும்னு நெனைச்சியா?, என்னாலயும் அந்த பழக்கத்திலேருந்து வெளிய வர முடியலை, பசங்க பசங்கன்னு சொல்றியே பசங்க இருக்குற வீட்டுல எல்லாம் எவனும் பொண்டாட்டிக் கூட படுக்குறதே இல்லையா? ஏன் உன் அப்பன் நம்ம சத்யன் பொறந்தப்ப அவனும் ஒரு பொண்ணை பெத்துக்கிட்டானே? அம்பது வயசு எதுவுமே வேனாம்னு ஒதுக்குற வயசாடி?” என்று கொதிப்புடன் உரக்க கத்தியவர் சாந்தியை நெருங்கி அவள் தோள்களைப் பற்றி “ ஏன்டி என்னைய அவ்வளவு காதலிச்சு போராடி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப ஏன்டி இப்படி ஒதுங்கிப் போய்ட்ட?” என்று வருத்தமாக கேட்க

அவர் கேட்ட கேள்விகள் அத்தனையும் உண்மை, சாந்தியின் கண்களில் கண்ணீர் வழிய “ எனக்கு அந்த வாசனையே புடிக்கலை, அதோட நீங்க கிட்ட வந்தா எனக்கு அருவருப்பா இருந்துச்சு, மொதல்ல உங்ககிட்ட நிறையமுறை சொன்னேன் நீங்க அதை சட்டையே பண்ணலை, அதான் கோயில், பசங்கன்னு சாக்கு சொல்லி நானே ஒதுங்கிட்டேன்” என்று குரல் கம்ம சாந்தி கூறியதம் சாந்தியின் தோள்களில் இருந்த மூர்த்தியின் கைகள் தானாக தளர்ந்து விழுந்தன

சாந்தி கண்ணீருடன் கிச்சனுக்குள் நுழைய, மூர்த்தி இயலாமையுடன் தனது உடைகளை கழட்டிப் போட்ட அறைக்குள் சென்றார்...

கிச்சனில் நின்று சிறிதுநேரம் அழுதாள் சாந்தி ‘ நாம் ஒத்துழைத்திருந்தால் இவரை திருத்தியிருக்கலாமோ? என்ற பெரும் கேள்வி அவளை குடைந்தது,, பிறகு முகத்தை கழுவி மூர்த்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வெளியே வந்து ஹாலின் ஒரு ஓரம் வைத்துவிட்டு மூர்த்தியை கானாமல் தேடி அறைக்குள் போய்ப் பார்த்தாள், அங்கு மூர்த்தி இல்லை, எங்கே போனார் என்ற யோசனையுடன் தேடிக்கொண்டே தோட்டத்திற்கு போனவள் அப்படியே நின்றுவிட்டாள்



துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து வாங்கி வந்த பாட்டிலை திறந்து டம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தார் மூர்த்தி,,

அவ்வளவு நேரம் அவர் அருகாமையில் இருந்த இனிமைப் பட்டென்று வடிந்து போக, நெஞ்சை அடைக்கும் துக்கத்துடன் அவரை நெருங்கியவள் டம்ளரை கையில் எடுத்தவரின் கையைப் பற்றி “இவ்வளவு நடந்த பிறகும் இனிமே இந்த கருமம் வேணாம் நீ தான் வேனும் சாந்தின்னு உங்களால சொல்ல முடியலையே ஏங்க?” என்று கண்களில் வழியும் கண்ணீருடன் கேட்க

அவள் பற்றியிருந்த கைகள் லேசாக நடுங்க சாந்தியின் முகத்தை ஏறிட்டவர், கலங்கிய கண்களுடன் “ என்னால இதை அவ்வளவு சீக்கிரம் விடமுடியாது சாந்தி பத்து வருஷப் பழக்கம், கொஞ்ச கொஞ்சமா........ ” என்றார் அவர் குரலிலும் அளவிட முடியாத வருத்தம், இத்தனை நாட்களாக அவர் சொல்லாத வார்த்தை இது... 



No comments:

Post a Comment