Monday, November 23, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 8

"ஏன் அபர்ணா, உனக்கு இந்த சிரமம். நான் எழுந்து ஹாலுக்கு வர மாட்டேனா?".

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உங்களால முடியலை. ஏன் நான் செய்றது உங்களுக்கு பிடிக்கலையா"அன்போடு அதட்ட 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை' என்று வேகமாக தலை ஆட்டினான்.

"வாயை திறங்க ரவி."

"பரவாயில்லை கைல கொடு".

"புரியாம பேசாதிங்க. ரசம் சாதத்தை எப்படி கைல கொடுக்க முடியும். பேசாம வாய் திறங்க".அவனை கட்டாயபடுத்தி ஒரு குழந்தைக்கு ஊட்டுவது போல ரசம் சாதம் கொடுக்க வாங்கி விழுங்கினான்.


'நல்ல பசி பாவம், வேக வேகமா சாதம் உள்ளே போகுது'பரிதாபப்பட்டபடி கொடுத்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு கண்களை துடைக்க, "என்ன ரவி என்ன ஆச்சு.""ஒண்ணும் இல்லை. உன்னை பார்த்தால் அம்மா நினைவு வந்துருச்சு".ஒரு கணம் விக்கி போன அபர்ணா பேச்சை மாற்றினாள்.

"நீங்கதான் இந்த அம்மா வேணாம்னு சொல்லிட்டிங்களே" சொல்லி விட்டு பதில் எதிர்பார்க்காமல் திரும்ப சென்று விட்டாள்.

'இது பொய்க்கோபம்' என்று புரிந்தாலும், பேசாமல் படுக்கையில் சரிந்து படுத்தான்.தானும் கொஞ்சம் சாப்பிட்டு நைட் டிரஸ் மாறி கொண்டு ரவி ரூமுக்கு வந்தாள்.
கண்ணை மூடி இருந்த ரவியை பார்த்தபடி அருகில் இருந்த சேரில் அமர்ந்தபடி சிந்திக்க தொடங்கினாள். இப்படியே விட்டு விட்டால் சொன்ன பேச்சை கேட்க மாட்டான். ஏதாவது அதிரடியாக செய்தால் தான் திருந்துவான்.கையில் இருந்த குமுதம் புத்தகத்தை புரட்டியபடி அடிக்கடி அவன் முகம் பார்த்து கொண்டு இருந்தாள்.
அன்று இரவு ரவிக்கு காய்ச்சல் அதிகமாகி போனதால் தவித்து போனாள். அடிக்கடி வீட்டில் இருந்த தெர்மாமீட்டரில் டெம்பரேச்சர் பார்த்து கவலைப்பட்டாள். ஈர துணியை நெற்றி மீது வைத்து இரவு முழுக்க மாற்றியதில் ஓரளவு குறைந்தது.

காலை டாக்டருக்கு போன் செய்ய அவரும் கிளம்பி வந்து மாற்று மருந்து கொடுத்து விட்டு சென்றார்.தொடர்ந்த மருந்து காரணமாக ஓரளவு டெம்பரேச்சர் குறைந்தது. இதற்கிடையே காய்ச்சலில் ரவி தவித்ததை கண்டு கண் கலங்கி போய் விட்டாள்.

மாலை கண் விழித்த ரவி சுற்று முற்றும் பார்த்தான்.

இப்போது காய்ச்சல் முழுக்க விட்டது என்றாலும், உடல் வலி மட்டும் கொஞ்சம் இருந்தது. அருகில் இருந்த சேரில் கண்மூடி உறங்கி கொண்டு இருந்தாள்

அபர்ணா.'பாவம் இரவு முழுக்க என்னால் இவளுக்கு தொல்லை. ஆனால் ஒரு தாயை போல கனிவோடு, அதே சமயம் கண்டிப்போடு கவனித்து கொண்டாள். இவளுக்கு நான் தாய், எனக்கு இவள் தாய்.'மெதுவாக எழுந்து பாத்ரூம் செல்லலாம் என்று நடக்க சத்தம் கேட்டு விழித்தாள்.

"என்ன ரவி, பாத்ரூம் போகணுமா. என்னை கூப்பிட்டால் எழுந்துரிக்க மாட்டேனா", என்று கேட்டு கொண்டே, அவன் கையை இழுத்து தோள் மீது போட்டு, அழைத்து சென்றாள்.உள்ளே ரவி செல்ல, வாசலில் அவனுக்காக காத்து இருந்தாள். ஈர துண்டை எடுத்து வெளியே வந்த ரவியின் முகம், கழுத்து என்று துடைத்து விட, "என்ன அபர்ணா இதெல்லாம் பண்ணிட்டு" என்று சிணுங்க, "சத்தம் போடாம நான் சொல்றதை கேட்கணும்" என்று நாக்கை துருத்தி மிரட்டினாள்.

பெட்டில் உட்கார்ந்து இருந்த ரவியை பார்த்து, "இங்கே பாருங்க ரவி. இனிமே தள்ளி போடுவது சரியில்லை" என்று ஆரம்பிக்க,"என்னது" என்றான் ரவி.

"நம்ம கல்யாணம் தான்".
"கல்யாணமா?" என்று கேள்வி எழுப்ப, கோபமாய் எழுந்த அபர்ணா வேகமாக ரூமை விட்டு வெளியே சென்றாள்.

திரும்பி வந்தவள் கையில் கைப்பை, அதில் இருந்த தாலியை எடுத்து, "நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க. முதல்ல இதை என் கழுத்தில கட்டுங்க".
"வேணாம் அபர்ணா சொன்னா கேளு."

"சரி ரவி, உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு உங்க தங்கை மல்லிகா மேல சத்தியம் பண்ணுங்க.அதுக்கு அப்புறம் நான் உங்களை கட்டாயபடுத்த மாட்டேன்."

"மாட்டேன். முடியாது."

"அப்படின்னா. உண்மைய ஒத்துக்கங்க. உங்களுக்கு என்னை பிடிக்கும்னு."தலைகுனிந்தான் ரவி. அவன் கையில் தாலியை திணித்து, "இந்தாங்க நல்ல காரியத்தை தள்ளி போட கூடாது. நான் தாலி கட்டாம கூட உங்களோட குடும்பம் நடத்த ரெடி.ஆனால் நாளைக்கு நமக்கு பிறக்க போற குழந்தைகள் கஷ்டபட கூடாது."


அபர்ணா திரும்பி தன் கூந்தலை ஒதுக்கி கழுத்தை காட்ட, அதற்கு மேல் தாமதிக்க விரும்பவில்லை.

அபர்ணாவின் அதிரடி அன்பில் கலங்கிய ரவி, தாலியை கட்ட, அபர்ணா திரும்பி அவன் உதட்டில் முத்தம் இட்டு, "ரவி இனிமே உங்களுக்கு லைசென்ஸ் கிடைச்சாச்சு புகுந்து விளையாடுங்க"என்று கிண்டலோடு சொல்ல, அவளை கட்டி அணைத்து மார்பில் முகம் புதைத்து கொண்டான்.

சிறு குழந்தை தாயன்பை தேடுவது போல அவளின் மார்பில் நிம்மதியை தேடினான்.

அபர்ணா ரவி காதில் கிசுகிசுத்தாள். "நாம கொஞ்சம் வெளியே போய் காற்று வாங்கி வரலாமா".

அவள் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இருந்தான்.

இருவரும் வெளியே மெல்ல நடந்து மாலை சுகமான காற்றை வாங்கி பேசி கொண்டு இருந்தனர்.

"ரவி நீங்க எப்போலே இருந்து என்னை காதலிக்க ஆரம்பிச்சிங்க".
"எனக்கு சரியா தெரியலை அபர்ணா. ஆனால் உன்னை பார்த்த முதல் என் மனசில உன்னோட நினைவு தான்.முதல்ல காமத்திபுராவில உன்னை கண்டவுடன் என் மனம் கலங்கிபோனது.அந்த கள்ளம கபடு இல்லாத முகத்தை பார்த்தவுடன் என் மனசை யாரோ பிடித்து பிசைவது போல உணர்வு. தொடர்ந்து உன்னோட பழைய சம்பவங்களை கேட்டவுடன் என் மனது கதறி அழுதது. உன்னை அணைத்து ஆறுதல் சொல்ல என் மனது துடித்தது. ஆனால் என்னை கட்டுபடுத்தி கொண்டேன்."

"நீ பிரதீப்பை பார்க்க போனபோது என் மனதில் பொறாமை எட்டி பார்த்தது. கடந்த ஒரு வாரம் நீ அங்கே இருந்தபோது மன உளைச்சல் அதிகமாகி உடல் நலம் சரி இல்லாமல் போனது.உன்னை பார்த்த பின்னே என் மனம் குதியாட்டம் போட்டது."

சிரித்தாள் அபர்ணா. "உங்களோட நல்ல குணம் எல்லாமே எனக்கு பிடிச்சு போச்சு. முக்கியமா நீங்க உங்களோட தங்கை மேல வச்சு இருந்த பாசம் என்னை பிரமிக்க வைத்து விட்டது. யாரும் இல்லாம நீங்க தவிக்கிறது, என் மனதை பிழிந்தது. என்னை காப்பாற்றியது, தவறாக நடந்து கொள்ள பல வாய்ப்பு இருந்தும் என்னோடு கண்ணியமாக நடந்து கொண்டது."

"நீங்க என்னை காதலிக்கிறீங்கன்னு எனக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது. நீங்க அந்த வட்டத்தில் இருந்து வெளிவர தயங்குனீங்க.அதனாலதான் நான் கொஞ்சம் அதிரடியா நடக்க வேண்டியதாகி விட்டது".
இருவரும் சிரித்து கொண்டே உள்ளே சென்றனர்.இரவு சாப்பாடு முடிந்த பின்னே ரவி "உங்களுக்கு நான் எந்த டிரஸ் போட்டா பிடிக்கும்"




"எனக்கு உன்னோட பர்த்டே டிரஸ்தான் பிடிக்கும்".

"பர்த்டே டிரஸ்ஸா" என்று யோசித்து முகம் சிவந்தாள்.

"என்ன குறும்பா", அவன் மீசையை பிடித்து இழுக்க, "ஆ" என்று கத்தினான் ரவி.

அவன் கையை இழுத்து தனது இடுப்பில் வைத்து இறுக்கி கொண்டாள். அவளின் வெண்ணை போன்ற வளவளப்பான இடுப்பில் கை வழுக்கி கொண்டு போனது.ரவி அவளை இழுத்து இதழோடு இதழ் பதிக்க அபர்ணா சிலிர்த்து போனாள்.பதிலுக்கு அவன் இதழ்களை கவ்வி கொண்டு உதட்டு கவிதை எழுதினாள்.

"அபர்ணா இன்னைக்கு தான் நாம் முதலிரவு கொண்டாடணும்னு அவசியம் இல்லை. நம்ம உறவு இயற்கையாக,இருவருக்கும் பிடித்த மாதிரி நடந்தா போதும்" என்று சொல்ல, "இவன் என் மனதை புரிந்து கொண்ட கணவன்" என்று பெருமையோடு கட்டி கொண்டாள்.இரவு முழுக்க இருவரும் கட்டி கொண்டு உறங்கினர்.
காலை குளித்து விட்டு இருவரும் சாப்பிட உட்கார, வாசல் கதவு தட்டும் சத்தம். "அபர்ணா யார்னு பாரேன்".

கதவை திறந்த அபர்ணா அசந்து நின்றாள். வாசலில் நிர்மலா

"அம்மா நீங்களா"

"அபர்ணா அம்மாவை உள்ளே கூப்பிட மாட்டியா."

"வாங்க அம்மா", அழைத்து கொண்டே உள்ளே சென்ற அபர்ணா, "ரவி என்னோட அம்மா. அங்கே திருச்சில பார்த்து இருப்பிங்க".

"அம்மா போன தடவை இவரை அறிமுகபடுத்த முடியலை. இவர் ரவிச்சந்திரன். ஜாஸ்மின் அப்படிங்கிற பெயரில கதைகள் எழுதி வரார்".

"எனக்கு தெரியும் அபர்ணா", சேரில் இருந்து எழுந்த ரவியை பார்த்து "மாப்பிள்ளை நீங்க முதல்ல உட்காருங்க".

ரவி ஆச்சர்யத்தில் "இது எப்படி உங்களுக்கு". "தம்பி, என் பொண்ணு கழுத்தில தாலி பார்த்தேன். அதனால நீங்க தான் மாப்பிள்ளையயா இருக்கணும்னு நினைச்சேன்."

"அம்மா, இவரை ஒரு தடவை தானே சந்திச்ச."

"இல்லை அபு, இவர் திரும்ப நம்ம வீட்டுக்கு வந்தார்".


"நடந்த விஷயத்தை சொல்லி என்னோட மனசை மாற்றி விட்டார். நான் உன் மேல கண்டிப்பு காட்டிய அளவு அன்பை காட்ட தவறிட்டேன். அதுதான் உன்னை தவறான பாதைல போக வச்சுடுச்சு. நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அபர்ணா உனக்கு இந்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை எங்கே தேடினாலும் கிடைக்காது."

"நீங்க ரெண்டு பேரும் திருச்சி கிளம்பி வந்தீங்கன்னா, அங்கே ஒரு சிம்பிளா ரிசப்சன் வச்சு உங்களை எல்லாருக்கும் அறிமுகபடுத்தி வச்சுடுவேன். அவசரம் இல்லை. அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து சொல்லுறேன். ரெண்டு பேரும் கிளம்பி வரணும்". என்று சொல்ல இருவரும் தலை ஆட்டினர்.

சாப்பிட்டு விட்டு, நிர்மலா அடுத்த பஸ்ஸில் கிளம்பி செல்ல, ரவி அபர்ணா இருவருக்கும் நெஞ்சம் நிறைய மகிழ்ச்சி.

"ரவி நீங்க அடுத்த கதை என்ன கதை எழுத போறீங்க".

"சந்தேகம் இல்லாம நம்மளோட காதல்கதை தான்".

"டைட்டில் என்ன?",

"முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது".

"உண்மையா சொல்றீங்க"

"உண்மைதான்"

இருவரும் சிரிக்க, அங்கே காதலர்கள் தம்பதிகளாய் புதிய வாழ்வை ஆரம்பித்தனர்.




முற்றும்



1 comment:

  1. உண்மையாகவே அழகான காதல் கதை.அந்தரங்கமான விடயங்களை அசிங்கமா வர்ணிக்காம மனதை இதமாக வருடிச்சென்ற கதை

    ReplyDelete