Saturday, November 7, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 18

அனுசுயாவை பார்த்துவிட்டு திரும்பிய அரவிந்தன் பைக்கை அவன் செலுத்தினானா? இல்லை பைக் அவனை செலுத்தியதா என்று தெரியவில்லை, அவன் எண்ணங்கள் முழுவதையுமே அனுசுயாவின் சிரிப்பு ஆக்ரமித்திருந்தது, என்ன அழகான சிரிப்பு மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொண்டு தனக்குத்தானே புன்னகைத்துக்கொண்டான்,

டிராபிக்கில் நின்றுகொண்டு சிரித்தவனை டிராபிக் போலீஸ்காரர் “ என்னாப்பா பிகரோட ஞாபகமா? ஆனா வூட்ல போய் சிரி கண்ணு? இப்படி ரோட்ல சிரிச்சேன்னா ஊரே உன்னைப்பார்த்து சிரிக்கும்” என்று எச்சரித்து அனுப்பினார்


அதன்பின் அரவிந்தன் சிரிக்கவில்லை, அடக்கிக்கொண்டான், ஆனால் கல்யாணத்துக்கு என்ன தேவை என்று தெரியவில்லை, தாலியும் மாலையும் இருந்தால் போதுமா? என்று குழம்பினான்

யாரிடமாவது யோசனை கேட்கலாம் என்று நினைத்தால் , யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டாளே? யாரிடம் கேட்பது, பைக்கை ஓரம் நிறுத்திவிட்டு யோசித்தான், சத்யன் மான்சி இவர்கள் யாரையுமே அறியாத நண்பன் ஒருவன் இருந்தான், அவன் வீடு இருக்கும் தெருவில்தான் இருக்கிறான்,
அரவிந்தன் உடனே அவனுக்குப் போன் செய்தான், அவன் எடுத்ததும் “ என்னடா அரவிந்தா?” என்று கேட்க..

“ டேய் மோகன் ஒரு அவசரம்டா, உன்னோட ஹெல்ப் வேனும், கொஞ்சம் வரியாடா மச்சான்?” என்று அரவிந்தன் சொன்னதும்..

“ கொஞ்சம் என்னடா... முழுசாவே வர்றேன்.. எங்க வரனும்னு சொல்லுடா?” என்றான் மோகன்

அரவிந்தன் தான் இருக்கும் இடம் சொல்லி “ பஸ்ல வந்துரு மச்சி, என்னோட பைக்லயே போகலாம்” என்று சொல்லிவிட்டு செல்லை அணைத்து வைத்தான்.
மோகன் வருவதற்குள் பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் அவன் அக்கவுண்டில் இருந்த முப்பதாயிரத்து சொச்சம் பணத்தில், சொச்சம் மட்டும் விட்டுவிட்டு முப்பதாயிரம் எடுத்துக்கொண்டான், என்னென்ன வாங்கனும்? எவ்வளவு பணம் ஆகும்? இந்த பணம் போதுமா? என்று யோசித்தவன் தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்துவிட்டு, ‘ பணம் பத்தலைன்னா இதை வித்துட வேண்டியதுதான்’ என்று எண்ணிக்கொண்டான்

45 நிமிடம் கழித்து மோகன் வந்து சேர்ந்தான், அவன் வந்ததுமே அரவிந்தன் தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய, மோகன் பின்னால் ஏறிக்கொண்டான்,

“ என்னடா மச்சான் அவசரம்னு சொன்ன? இப்போ அமைதியா வர்ற?” என்று மோகன் கேட்டதும்,

பைக்கை ஒதுக்குப்புறமாக நிறுத்திய அரவிந்த் “ ஆமாம் மோகன் அவசரம் தான், அவசரமா ஒரு கல்யாணம் பண்ண என்னென்ன வாங்கனும்டா, எனக்கு தெரியலை மச்சான், நீதான் நம்ம சுரேஷ்க்கும் அவன் லவ்வருக்கும் கல்யாணம் பண்ணி வச்சயே, அதனால உனக்கு தெரியும்னு வரச்சொன்னேன்” என்று அரவிந்தன் சொல்ல..

திகைப்புடன் “ யாருக்குடா மச்சான் கல்யாணம்?” என்றான் மோகன்

“ மச்சி இப்போ விளக்கமா சொல்ல நேரமில்லை, அதனால சுருக்கமா சொல்றேன் கேட்டுக்க.... நான் ஒரு பொண்ணை லவ் பண்ணேன், அந்த பொண்ணுக்கும் என்மேல ரொம்ப லவ், இப்போ திடீர்னு அவளுக்கு வேற இடத்துல நிச்சயம் பண்ணப்போறாங்கடா, இப்பதான் சொன்னா... அதனால அவசரமா நாளைக்கே நாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை, வேற வழியே இல்லாமதான் இந்த முடிவுக்கு வந்தோம் மோகன், இப்போ என்னென்ன வாங்கனும்னு சொன்னேனா வாங்கி வச்சுட்டு நாளைக்கு விடிய காலை எழுந்து ரத்னகிரி முருகன் கோயிலுக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கனும், இதுக்குமேல என்னை துருவித்துருவி கேட்காதடா மச்சான்” என்று அரவிந்தன் முடித்ததும்..


“ அட இவ்வளவு தானா... ஒரு தாலி, ரெண்டு மாலை, தங்கச்சிக்கு ஒரு சேலை, உனக்கு வேட்டி சட்டை, அவ்வளவுதான் மச்சி,, வா மச்சான் வாங்கலாம்” என்று சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்துகொண்டான் மோகன்

அதன்பின் மோகன் உதவியுடன் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டான், அனுசுயாவுக்கு பட்டுப்புடவை எடுத்துவிட்டு ரெடிமேட் ரவிக்கை எடுக்க கடைக்காரப் பெண் அளவு கேட்க.. அரவிந்தன் திருதிருவென விழித்தான்

“ சார் அவங்க இன்னர்வேர் அளவு சொன்னா அதுக்கு அடுத்த சைஸ் ப்ளவுஸ் கொடுப்போம்” என்றாள் கடை ஊழியை..

அரவிந்தன் விழிப்பதைப் பார்த்து “ ஏன்டா மச்சி காதலிக்க ஆரம்பிச்சதும் இதைத்தான்டா மொதல்ல தெரிஞ்சுக்கனும்.. என்னடா நீ லவ் பண்ற லட்சனம்... சரி சரி சிஸ்டருக்கு போனைப் போட்டு கேளுடா” என்று மோகன் சலித்துக்கொள்ள..

என்னது இதை எப்படி கேட்பது என்று குழம்பிய அரவிந்தன் ‘ப்ளீஸ் கால்’ என்று அனுசுயாவுக்கு மெசேஜ் செய்துவிட்டு காத்திருக்க, நான்கு நிமிடம் கழித்து அவளிடமிருந்து கால் வந்தது

அரவிந்தன் எடுத்தவுடனேயே “ என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று பதட்டமாக அனுசுயா மெல்லிய குரலில் கேட்க...

“ பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல,, கல்யாணத்துக்கு பட்டுப்புடவை எல்லாம் வாங்கினேன் உனக்கு ப்ளவுஸ் வாங்கனும்... அளவுத் தெரியலை அதான் கால் பண்ணச் சொன்னேன், நான் கால் பண்ணா யாராவது எடுத்துடுவாங்கன்னு மெசேஜ் பண்ணேன்” என்றான் .. அவனுக்குப் பயம் .. எங்கே நம்மை மிஸ்டு கால் பார்ட்டி என்று நினைத்துவிடுவாளோ என்று...........

கொஞ்ச நேரம் கழித்து “ சேல்ஸ்வுமன் இருந்தா அவங்ககிட்ட குடுங்க அளவு அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்” என்று அனுசுயா சொன்னதும்..
ஏன் என்கிட்ட சொன்னா என்னவாம் என்ற புகைச்சலுடன் “ ம் குடுக்கிறேன்” என்று கடை ஊழியையிடம் கொடுத்தான்

அந்தப் பெண்ணிடம் அளவு சொன்னதும் மறுபடியும் மொபைல் அரவிந்தன் கைக்கு வர “ திடீர்னு செலவு... ஏதாவது சாதா புடவை எடுக்கவேண்டியது தானே? உங்ககிட்ட போதுமான பணம் இருக்கா?” என்று அனுசுயா கவலையாக கரிசனத்துடன் கேட்க

“ ம்ம் இருக்கும்மா. என் அக்கவுண்ட்ல முப்பதாயிரம் எடுத்தேன், அரைபவுன் தாலி, அப்புறம் உனக்கு புடவை எனக்கு வேட்டி சட்டை.. எல்லாம் போக இன்னும் பத்தாயிரம் இருக்கு.. நீ கவலைப்படாதே” என்றவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் சற்று மறைவாய்ப் போய் “ வரும்போது எதையுமே எடுத்துட்டு வராத, ஒரு பேப்பர்ல நீ என்ன நினைக்கிறயோ அதை எழுதி வச்சிட்டு வா, உன் வீட்டுல நீ என்னானேன்னு தவிக்க கூடாதில்லையா? ” என்று அரவிந்தன் சொல்லிவிட்டு செல்லை அணைத்துவிட்டு மோகன் அருகே வந்தான்

“ என்னடா மச்சான் இப்பவே அம்மனிக் கிட்ட கணக்கெல்லாம் சொல்ற?” என்ற மோகனின் கேலியை சந்தோஷமாக எதிர்கொண்டபடி ஜவுளிக்கடையில் இருந்து வெளியே வந்தான்

அதன்பிறகு எல்லாவற்றையும் வாங்கி ஒரே பையில் வைத்துக்கொண்டனர்... மாலைகள் மட்டும் கோயில் அருகில் வாங்கிக்கொள்ளலாம் என்று மோகன் சொல்ல, சரியென்றான் அரவிந்தன்

எல்லாவற்றையும் மோகன் தனது அறையிலேயே வைத்து கொள்வதாக சொல்லிவிட்டு “ நீ வீட்டுக்கு எடுத்துட்டுப் போனா, உன் அம்மா என்ன ஏதுன்னு கேள்வி கேட்பாங்க,, அதனால என்கிட்டயே எல்லாத்தையும் வச்சுக்கிறேன்,, நீ காலையில எனக்கு கால் பண்ணுடா மச்சான், நான் ரெடியாகி வந்துர்றேன்” என்றான்


சரியென்று அரவிந்தன் வீட்டுக்கு வந்தவன், தன் அம்மாவுக்கு தன் முக மாற்றம் தெரியாமல் இருக்க ரொம்பவே சிரமப்பட்டான்,, உடனே ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவன் அம்மா பிறகு சமாதானமாகி விடுவாள் என்று அரவிந்தனுக்கு தெரியும், ஏனென்றால் அனுசுயா அவர்களின் தகுதிக்கு மீறிய இடம்தான், அதனால் சாப்பிட்டுவிட்டு நம்பிக்கையுடன் படுத்தான்

படுத்தவனுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது, அனுசுயாவின் தெளிவான சிந்தனைகள் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு படிகளாக இருக்கும் என்று நம்பினான், சத்யன் மான்சியை சேர்த்து வைக்கப் போய் தனக்கொரு வாழ்க்கை அமையும் என்று கனவிலும் எதிர்பார்க்க வில்லை அரவிந்தன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததால் உறக்கமும் சுகமாக வந்தது

மறுநாள் காலை அவன் செல்போனில் வைத்த அலாரம் ஒலித்து அவனை எழுப்ப, எழுந்து மணி பார்த்தான், 5- 30 ஆகியிருந்தது , உடனே எழுந்து பரபரப்புடன் குளித்து ரெடியாகி மோகனுக்கு கால் செய்ய,, அவன் தயாராக இருப்பதாக கூறினான்

இருவரும் போகும் வழியில் பைக்கை நிறுத்தி அனுசுயாவுக்கு கால் செய்தான் அரவிந்தன் “ நான் வந்துருவேன், வெயிட் பண்ணுங்க” என்ற ஒரு வார்த்தையுடன் இணைப்பை துண்டித்துவிட்டாள்.. பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் போலிருக்கு என்று நினைத்தபடி அரவிந்தன் கோயிலுக்கு கிளம்பினான்,

வழியில் ஒரு பூக்கடையில் மாலைகள் வாங்கிக்கொண்டு ரத்னகிரி மலைக்குச் சென்றபோது, அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் கூட்டமிருந்தது, கூட்டத்தில் அரவிந்தன் அனுசுயாவை தேட, மோகன் திருமணத்தை நடத்தி வைக்க ஐயரைத் தேடிச் சென்றான்

அனுசுயாவை காணாமல் மனதில் ஏற்ப்பட்ட கலவரத்துடன் அவளுக்கு போன் செய்தான், அவள் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வர, அரவிந்தனின் பதட்டம் அதிகமானது, மறுபடியும் முயற்ச்சித்தான், அதே பதில்தான் வந்தது

வீட்டில் இருப்பவர்களிடம் மாட்டிக்கொண்டாளா? என்று கவலையுடன் எண்ணும் போதே, அவன் தோளில் ஒரு கை மென்மையாக பதிய, அரவிந்தன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்,

அனுசுயா தான் நின்றிருந்தாள், ஒற்றைப் புருவம் மட்டும் உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்தபடி, தலைக்கு குளித்த கூந்தலை இரண்டு காதோரம் கொஞ்சம் முடியெடுத்து சேர்த்து கிளிப் போட்டு மீதி கூந்தலை விரித்துவிட்டு அழகிய லாவண்டர் நிறத்தில் காட்டன் புடவையும், அதற்க்கு மேட்ச்சாக குட்டை கைவைத்த ரவிக்கையும், காதிலும் கழுத்திலும் எளிமையான நகைகள். முகம் எந்தவித ஒப்பனையும் இன்றி லேசாக மஞ்சள் பூசி நெற்றியில் சிவப்பு பொட்டுடன், அப்போது தான் மலர்ந்த புது மலர்போல இருந்தது, வகிட்டில் இருந்து வழிந்த ஒரு துளி வியர்வை நெற்றியில் வழிந்து மூக்கின் நுனியில் தேங்கி பிறகு அவள் மார்பில் விழுந்து சிதறியது,

அரவிந்தனுக்கு வந்த வேகத்தில் அவளை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது, சற்றுநேரத்தில் துடிக்க வைத்துவிட்டாளே என்று பொய் கோபத்தோடு அவளைப் பார்த்து “ உன் மொபைல் ஆப் பண்ணிருக்கு” என்றான்




அவன் கண்கள் தன்னை காதலோடு வருடியதை கவனித்த அனுசுயாவின் முகம் வெட்கத்தால் சிவக்க, வீட்டுல இருக்கும்போது நீங்க மறுபடியும் போன் பண்ணிடப் போறீங்கன்னு ஆப் பண்ணி வச்சேன், வர்ற அவசரத்தில் மறுபடியும் ஆன் செய்ய மறந்துட்டேன்” என்றாள் மன்னிப்பு கேட்கும் குரலில்..

அப்போது அவர்களை நெருங்கிய மோகன் “ டேய் மச்சான் ஐயர் கிட்ட சொல்லி மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணிட்டேன், நீங்க ரெண்டுபேரும் அதோ அந்த கடைக்கு உள்ள போய் டிரஸ் மாத்திக்கிட்டு வாங்க, கடையில லேடிஸ் தான் இருக்காங்க, நான் சொல்லிட்டேன் நீங்க போய் குயிக்கா மாத்திக்கிட்டு வாங்க” என்று படபடப்புடன் சொல்ல

அரவிந்தன் மோகனை அனுசுயாவுக்கு அறிமுகம் செய்தான், பிறகு இருவரும் உடை மாற்றி வர மோகன் சொன்ன கடைக்குள் போனார்கள், அரவிந்தன் ஓரமாக அனுசுயாவுக்கு காவல் இருக்க, அனுசுயா சுவர் பக்கம் திரும்பி தனது உடைகளை மாற்றிக்கொண்டாள், அதன்பின் அரவிந்தனும் உடை மாற்றி வந்தான்

இருவரும் கடைக்காரப் பெண்மணிக்கு நன்றிசொல்லிவிட்டு வெளியே வந்தனர், மோகன் முன்னே செல்ல, இருவரும் அவன் பின்னால் போனார்கள்,

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு அனுசுயாவின் கையைப் பற்றி நிறுத்திய அரவிந்தன் “ உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்றான் ..

இந்த சமயத்தில் என்ன சொல்லப் போகிறானோ என்ற குழப்பத்தோடு “ ம் சொல்லுங்க” என்றாள்..

சில நொடிகள் அவள் முகத்தையேப் பார்த்தவன் “ நேத்து உன்னைப் பார்த்துட்டு வந்தபிறகு என் ஞாபகத்தில் சத்யனோ மான்சியோ இல்லை அனுசுயா, அவங்களுக்காக நாம கல்யாணம் பண்ணிக்கிறோம் என்கிற என்மே என் மனசுல சுத்தமா இல்லை, இப்ப உன்னை காணோம்னு தவிச்சப்ப கூட, அய்யோ உன்னை இழந்துடுவேனோன்னு பயம்தான் வந்ததே தவிர, சத்யன் மான்சி சேரமுடியாதேன்னு தோனவில்லை, நான் உன்னை உண்மையாகவே விரும்புறேன் அனும்மா” என்று அரவிந்தன் தொண்டை கரகரக்க கூறியதும் ..

அனுசுயாவின் முகம் பட்டென்று மலர்ந்தது, அவன் கைகளை பிடித்துக்கொண்டு “ நானும்தான் ஒரு கடமைக்காகன்னு இல்லாம, உண்மையாவே உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போற சந்தோஷத்தோட தான் கிளம்பி வந்தேன்” என்றாள்

இவர்களை காணாமல் மறுபடியும் திரும்பி வந்த மோகன் “ அடடா உங்க ரொமான்ஸ இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வச்சுக்க கூடாதா? இப்போ நேரமாச்சு வாங்கப்பா” என்று டென்ஷனானான்

இருவரும் மோகனுடன் கோயிலுக்குள் போனதும் கையிலிருந்த மாலையை இருவரிடமும் கொடுத்த மோகன் “ முருகன் சன்னிதானத்தில் கல்யாணம் பண்றதா இருந்தா முன்பதிவு பண்ணனுமாம்டா மச்சான், அதனால ஓரமா இருக்குற விநாயகர் சிலை முன்னாடி மாலை மாத்தி தாலி கட்டிக்கங்க, வேற வழியில்லை எல்லாம் தெய்வம் தான்” என்றான்

இருவருக்கும் இது தெரியும் என்பதால் எதுவும் சொல்லால் தலையசைத்து விட்டு மாலைகளைப் போட்டுக்கொண்டனர், அப்போது ஐயர் ஒருவர் வந்து அவர்களின் பெயரைக் கேட்டு மோகன் கொடுத்த அர்ச்சனை பொருட்களை வாங்கி அர்ச்சனை செய்துவிட்டு சுவாமியின் காலடியில் இருந்த தாலியை எடுத்து கற்பூர தீப தட்டில் வைத்து அரவிந்தனிடம் கொடுக்க.....

அரவிந்தன் தாலியை கையிலெடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு பிறகு அனுசுயாவின முகத்தைப் பார்க்க,

அனுசுயா புன்னகையுடன் கழுத்தை சற்று முன்னால் நீட்டினாள்,

“ கட்டுடா மச்சி” என்று மோகன் உற்ச்சாகப் படுத்தினான்.

ஐயர் மாங்கல்ய தாரண திருமந்திரத்தை கூறினார்

அரவிந்தன் முகமெல்லாம் சந்தோஷம் பூவாய் மலர அனுசுயாவின் கழுத்தில் கட்டினான், பிறகு ஐயர் சொன்னபடி இருவரும் இடம் மாறி நின்று மாலை மாற்றிக்கொண்டனர், மோகன் அரவிந்தன் கைகளைப் பற்றி குலுக்கி வாழ்த்து சொன்னான்.


கோவிலுக்கு வந்திருந்த ஏராளமானோர் இவர்களின் எளிமையான திருமணத்தை நின்று ரசித்துவிட்டு போக.. ஒரு சிலர் கையில் வைத்திருந்த பூவை உதிர்த்து அவரகள் மீது போட்டு வாழ்த்திவிட்டு போனார்கள்

அரவிந்தன் கூச்சத்துடன் சிரித்து அனுசுயாவின் விரல்களில் தன் விரல்களை கோர்த்துக்கொண்டான், மூவரும் கோயிலை விட்டு வெளியே வந்து சிறிதுநேரம் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்தனர்,

அரவிந்தன் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட நிம்மதி, அனுசுயாவின் விரல்களை விடவேயில்லை, அனுசுயாவின் விழிகள் தாழ்ந்திருந்தாலும் அதில் வழியும் காதலை அரவிந்தன் கண்டுகொண்டான். அவள் விரல்களை மென்மையாக அழுத்தி தன் காதலையும் தெரிவித்தான்

“ என் இதயத்தின் இடுக்குகளில்...

“ எல்லாம் உன் நினைவுகள்..

“ அவற்றை சேமிக்க எனக்கு ...

“ ஒரு இதயம் போதவில்லை அன்பே!


இவர்களை தனியாக விட்டுவிட்டு ஒதுங்கியிருந்த மோகன் நேரமாவதை உணர்ந்து எழுந்து அவர்கள் அருகே வந்து “ அரவிந்தா கிளம்பலாமா?” என்று கேட்டதும் சரியென்று தலையசைத்து இருவரும் எழுந்துகொண்டனர்

மூவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்
அரவிந்தன் அனுசுயாவை அமர்த்திக்கொண்டு பைக்கில் கிளம்ப, மோகன் பஸ்ஸில் வருவதாக தெரிவித்தான்

அரவிந்தன் பின்னால் அமர்ந்து அவன் தோளில் கைவைத்துபடி வந்த அனுசுயா “ இப்போ உங்க பிரண்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்லி வீட்டுக்கு வரச்சொல்லுங்க” என்றாள்

திரும்பிப் பார்த்து புன்னகைத்த அரவிந்தன் ஓரமாக தனது பைக்கை நிறுத்திவிட்டு சத்யனுக்கு போன் செய்தான், கொஞ்சநேரத்தில் மான்சிதான் எடுத்து “ அவர் தூங்குறார் சொல்லு அண்ணா?” என்றாள்..

இரவு டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்து தூங்குகிறான் போல என்று நினைத்த அரவிந்தன் “ பரவாயில்லை எழுப்பி குடும்மா, கொஞ்சம் அர்ஜண்டா பேசனும் ” என்றான்

“ சரிண்ணா” என்ற மான்சியின் குரலுக்குப் பிறகு அவள் சத்யனை எழுப்பும் குரலும் அதன்பின் “ என்ன அரவிந்தா” என்ற சத்யன் குரலும் கேட்டது

ஒரு நிமிடம் மனைவியைப் பார்த்து சிரித்துவிட்டு பிறகு “ ஒன்னுமில்ல சத்யா.. நீயும் மான்சியும் உடனே என் வீட்டுக்கு கிளம்பி வரனும், ஒரு முக்கியமான விஷயம் சத்யா” என்று கூற..

“ என்னடா அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?” என்று சத்யன் பதட்டமாக கேட்டான்..

“ அதெல்லாம் அம்மா நல்லாதான் இருக்காங்க சத்யா,, இதுவேற” என்றவன் ஒரு நிமிடம் தாமதித்து “ சத்யா எனக்கு கல்யாணம் ஆயிருச்சுடா,, இன்னிக்கு காலையில ரத்னகிரி கோயில்ல” என்று சொன்ன மறுவிநாடி..

“ என்னடா சொல்ற நிஜமாவா?” என்ற சத்யனின் அதிர்ச்சியில் அரவிந்தனின் காதுகள் அதிர்ந்தன... 


“ ம்ம் நிஜம்தான், பொண்ணு யாருன்னு கேளுடா?” என்றான் அரவிந்தன் உற்சாகமாக,

“ யாருடா?” என்று திகைப்புடன் சத்யன் கேட்க...

“ ராமோட தங்கை அனுசுயாவைத்தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் சத்யா,, அதுவும் ஒரே நாள்ல ரெண்டுபேரும் எக்கச்சக்கமா லவ்ப் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்றான் அரவிந்தன்

“ அரவிந்தா.......” என்ற சத்யனின் குரல் திகைப்பையும் மீறி தழுதழுத்தது

“ சரிடா வளவளன்னு கேள்வி கேட்காம சீக்கிரமா வீட்டுக்கு வா, என் அம்மாவை சமாதானம் பண்ண உன்னைத்தான் நம்பியிருக்கேன்” என்றவன் உடனே இணைப்பை துண்டித்து விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்..

அரவிந்தன் தனது வீட்டை அடைந்து போது, அவன் அம்மா தெருவில் போன காய்கறி வண்டியில் காய்கறி வாங்கிக்கொண்டிருக்க, அரவிந்தன் பைக்கிலிருந்து இறங்கி அனுசுயாவின் கையைப் பற்றிக்கொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றான்,

முதலில் கவனிக்காத அரவிந்தன் அம்மா, பக்கத்தில் இருந்த பெண் கையை சீண்டி ஜாடை காட்டியதும் என்னவென்று நிமிர்ந்து மாலையும் கழுத்துமாக வந்து நின்ற அரவிந்தன் அனுசுயாவைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டாள்

ஆனால் நிமிடநேரத்தில் சுதாரித்துக்கொண்டு “ அடப்பாவி யாருடா இவ?” என்று கத்த.. உடனடியாக கூட்டம் சேர்ந்தது அங்கே,

இதையெல்லாம் எதிர்பார்த்து தான் வந்ததால், இருவரும் பற்றிய கையை விடாமல் அப்படியே நின்றார்கள், அரவிந்தன் மட்டும் தன் அம்மா அழுவதை கண்டு சங்கடத்துடன் “ அம்மா இப்போ என்ன நடந்து போச்சுன்னு தெருவுல உட்கார்ந்து அழுவுற, இவளை நான் காதலிச்சேன், வேற இடத்துல இவளுக்கு நிச்சயம் பண்றதால அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு, உன்கிட்ட சொன்னா நீ ஒத்துக்க மாட்டேன்னு தான் சொல்லலைம்மா ” என்று மன்னிப்பு கோரும் குரலில் கெஞ்சினான்

எதற்கும் சமாதானம் ஆகாமல் வாசற்படியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளை ஒரு பெண் வந்து இழுத்து எழுப்பி “ யக்கா என்னா இது பெரிய மனுஷி நீயே இப்படி பண்ணலாமா? புள்ளை ஏதோ ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிகிச்சு, ஆசிர்வாதம் பண்ணி வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போக்கா.. தெருவே வேடிக்கைப் பார்க்குது பாரு உள்ள போக்கா ” என்று ஆறுதல் கூறிவிட்டு அரவிந்தன் பக்கம் திரும்பி “ கொஞ்சம் இரு தம்பி இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு அந்த பெண்ணே அரவிந்தன் அம்மாவை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள்

சற்றுநேரத்தில் கையில் ஆரத்தி தட்டுடன் வந்த பெண் இருவருக்கும் சுற்றிவிட்டு, நீரைத் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து “ வலது காலை எடுத்து வச்சு உள்ள போம்மா” என்றாள் அனுசுயாவைப் பார்த்து

அரவிந்தன் அனுசுயாவின் கையைப் பற்றிக்கொண்டு உள்ளே போக, பஸ்ஸில் வந்த மோகனும் வந்து சேர்ந்தான், அரவிந்தனின் அம்மா மூலையில் அமர்ந்து மூக்கை சிந்திக்கொண்டு இருக்க, ஆரத்தி சுற்றிய அந்த பெண்ணே கிச்சனுக்குள் நுழைந்து பாலை காய்ச்சி எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தாள்..

அழுதபடி இருந்தாலும் அரவிந்தனின் அம்மா அடிக்கடி மருமகளை திரும்பி பார்த்துக்கொண்டாள், “ உன் மருமக நல்லாதான் இருக்கா, கர்ப்பக்கிரகத்து சிலை மாதிரி” என்று அந்த பெண் வந்து காதில் கிசுகிசுத்துவிட்டு போனாள்

அடுத்து என்ன செய்வது என்று புரியாமலேயே அணைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, வெளியே பைக் நிற்க்கும் சத்தமும் அதைத்தொடர்ந்து துரை மற்றும் சத்யன் குரலும் கேட்க அரவிந்தனின் அம்மா மறுபடியும் மூக்கை சிந்த ஆரம்பித்தார்


முதலில் துரை அவருக்கு அடுத்து சத்யன், அப்புறம் ரமா, பிறகு குழந்தையுடன் மான்சி ,, துரை வந்ததுமே அரவிந்தன் முதுகில் தட்டி “ ஏன்டா வெளக்கெண்ண எங்களை எல்லாம் பார்த்தா கேனையன் மாதிரி தெரியுதா? ஒரு வார்த்தை கூட தகவல் சொல்லாம எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருக்க? உனக்கு ரொம்பதான்டா தைரியம்” என்று கோபமாக திட்டினாலும் அதில் அவருடைய அன்பே தெரிந்தது

சத்யன் அரவிந்தனை ஒரு முறை முறைத்துவிட்டு உள் அறையில் இருந்த அவன் அம்மாவை சமாதானம் செய்யும் வேலையில் ஈடுபட்டான், ரமாவும் அவனுக்கு உதவியாகப் போனாள்

அதன்பிறகு ஆளாலுக்கு அரவிந்தனை கேள்வி கேட்க, அவன் அசடு வழிவதைப் பார்த்து அனுசுயா சிரித்தாள்,

மான்சி குழந்தையை சத்யனிடம் கொடுத்துவிட்டு அனுசுவின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பற்றிக்கொண்டு கலங்கிய கண்களுடன் “ எல்லாம் என்னால தானே? என்னை மன்னிச்சிடுங்க அண்ணி” என்று மெதுவாக சொல்ல,,

“ அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை, நாங்க உண்மையாவே ஒருத்தரையொருத்தர் விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், உங்களை சேர்த்து வைக்கனும்னு நெனைச்சது ஒரு சாக்கு தானே தவிர, அது இல்லேன்னாலும் நானும் இவரும் இணைஞ்சிருப்போம்” என்று தெளிவாக சொன்னவள் மான்சியின் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு தனது ஆதரவை தெரிவித்தாள் ..

மான்சி உடனே இயல்பாகி “ அடடா எங்க அண்ணனுக்கு லவ் பண்ணக்கூட தெரியுமா?” என்று கூறிவிட்டு சிரிக்க... அதற்க்கும் அசடு வழிய சிரித்தான் அரவிந்தன்

நமக்காகத்தான் இருவரும் இப்படியொரு முடிவெடுத்தார்களோ என்று கலங்கிய சத்யனுக்கு அவர்கள் இருவரின் பார்வையில் இருந்த காதலும், பார்வை பறிமாற்றங்களும் அவர்களின் காதலை உணர்த்த, மனம் குற்றவுணர்வு இன்றி இலகுவானது

ரமாவும் மான்சியும் அனைவருக்கும் மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர், சத்யனும் துரையும் அரவிந்தன் அம்மாவை இன்னும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்..

மருமகள் தங்களது தகுதியை மீறிய நல்ல இடம்தான் என்று தெரிந்ததும் அரவிந்தன் அம்மா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டார்



மான்சியும் ரமாவும் சமையலை முடித்துவிட்டு அனுசுயாவை தனியே அழைத்துச்சென்று “ மத்திக்க ஏதாவது டிரஸ் கொண்டு வந்தியாம்மா?” என்று ரமா கேட்க..

“ இல்லக்கா, இவர் எதுவுமே எடுத்துட்டு வரவேண்டாம்னு சொல்லிட்டாரு, அதான் வெறும் லட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு வந்துட்டேன்” என்றாள் அனுசுயா

“ சரி அப்ப நாம ரெண்டுபேரும் ஆட்டோவில் போய் அனுசுயாவுக்கு மாத்திக்க ரெண்டு செட் டிரஸ் வாங்கிட்டு வந்துடலாம்” என்று ரமா மான்சியிடம் கேட்க, சரியென்று தலையசைத்த மான்சி குழந்தைக்கு பால் கொடுத்து, அவனை சத்யனிடம் கொடுத்துவிட்டு ரமாவுடன் ஆட்டோவில் போய் மூன்று செட்டாக உடை வாங்கி வந்தனர்

மதிய உணவு முடிந்ததும், அரவிந்தன் அம்மா ஏதோ பொருட்கள் வாங்கி வரச்சொல்ல, துரையும் சத்யனும் போய் வாங்கி வந்தனர், வேறென்ன புது பாயும் தலையணைகளும் தான்,

அனுசுயா மடியில் கதிரவனை வைத்துக்கொண்டு கொஞ்ச, கதிரவனை கொஞ்சும் சாக்கில் தனது புது மனைவியை தீண்டிப் பார்த்தான் அரவிந்தன்


No comments:

Post a Comment