Saturday, November 28, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 11

தன் மடியில் கிடந்த மான்சியின் முகத்தையேப் பார்த்த சத்யன் “ மாமா மதுரைக்குப் போய் பெரிய ஆஸ்பத்திரியில பார்க்கலாமா?” என்று கலவரத்துடன் சொன்னதும்...

பின்னால் திரும்பி சத்யனைப் பார்த்த தர்மன் “ இல்ல வேண்டாம் மாப்ள,, மதுரைவரை போறது நல்லதில்லை... மான்சி வேற இரு உயிரா இருக்கு.. நம்ம தேனியிலேயே பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் இருக்கு.. அதனால இங்கயே பார்த்துக்கலாம்.. அதோட காயம் தோள்ல தானே? அவ்வளவாக ஆபத்து இருக்காது.. மான்சி பலகீனமா இருக்குறதால தான் மயக்கம் வந்துருச்சு ” என்று சத்யனுக்கு சொல்வது போல தனக்கும் ஆறுதல் சொல்லிகொண்டார்

சத்யன் மடியில் இருந்த மான்சியின் முகத்தை எடுத்து தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு “ ஏன் இப்படி பண்ணா மாமா? இவ இல்லேன்னா நானும் இல்லேன்னு இவளுக்குப் புரியாமப் போச்சே மாமா” என்று தொண்டையடைக்க சத்யன் கதறுவதை கேட்ட தர்மன் என்ன சொல்வது என்று புரியாமல் அவரும் உடைந்தார்



இருவரின் கதறலும் தேவனை உலுக்கியது “ வேனாம் மாமா அழாதீங்க... மான்சிக்கு ஒன்னும் இல்லை” என்று சத்யனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தர்மனிடம் திரும்பி “ ஏன்பா மாமாவுக்கு ஆறுதல் சொல்லாம நீங்களும் சேர்ந்து அழுவுறீங்களே” என்று அப்பாவை கடிந்துகொண்ட தேவனின் கண்களிலும் கண்ணீர்... அதன்பின் காரை செலுத்திய தேவனின் வேகம் அதிகமானது...
தேனியில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமணையின் வாசலில் கார் நின்றபோது.. தர்மன் காரில் வரும்போது ஏற்கனவே தகவல் சொல்லியிருந்ததால் அவர்களது குடும்ப டாக்டர் தயாராக மருத்துவமனையின் ரிசப்ஷனில் நின்றிருந்தார்..

சத்யனும் தேவனின் மான்சியை மெதுவாக காரிலிருந்து இறக்கி தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் கிடத்தினார்கள் ... மருத்துவமனையின் ஊழியர்கள் சத்யனையும் தேவனையும் விலக்கித் தள்ளிவிட்டு ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு ஓடினார்கள்.. சத்யன் தேவன் இருவரும் பின்னால் ஓடினர் ..

தர்மனை குடும்ப டாக்டர் தனியாக அழைத்துச்சென்று “ என்ன தர்மலிங்கம்.. போலீஸ்க்கு தகவல் சொல்லிடலாமா?” என்று கேட்க....

தர்மன் யோசனையுடன் தாடையை தேய்த்துவிட்டு “ வெட்டுனது என் மகன்.. வெட்டுப்பட்டது என் மகள்... ஆனாலும் இதுக்கு என்னால எந்த சமாதாமும் சொல்லமுடியாது தயாளன்... என் மருமகன் தான் இதுக்கு பதில் சொல்லனும்... மொதல்ல என் மகளை காப்பாத்துற வழிய பாருங்க,” என்று சொல்லிவிட்டு மகளை அழைத்துச்சென்ற வழியில் உள்ளே போனார் டாக்டரும் அவரைப்பின் தொடர்ந்து சென்றார்..

ஆப்ரேஷன் தியேட்டர் கதவு மூடியிருக்க அதன் வாசலில் தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறிய சத்யனை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தேவனும் உடன் சேர்ந்து அழுதுகொண்டிருந்தான்
பதட்டமாய் அவர்களை நெருங்கிய தர்மன்,, தன் மகன் தோளில் கைவைத்து “ ஏன்டா அவன்தான் அழுதா.. நீ அவனை சமாதானம் பண்றத விட்டுட்டு கூட சேர்ந்து அழுவுறயேடா? ” வரும்போது மகன் தனக்கு சொன்னதையே இப்போது அவனுக்கு சொன்னார்..

“ இல்லப்பா.. நம்ம மான்சி சின்னப்புள்ளல பென்சில் சீவும்போது அவ விரல்ல பிளேடு பட்டாலே மாமா தாங்கமாட்டாரு,, ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு ஓடுவார்.. இப்போ பாருங்கப்பா எவ்வளவு ரத்தம்னு.. என்னால இதைப் பார்க்க முடியலைப்பா” என்று கதறிய தேவன் சத்யனின் வேட்டியைப் பிரித்து காட்டினான்

சத்யன் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை, அவன் மனம்போன போக்கில் எதைஎதையோ நினைத்து அழுதுகொண்டிருந்தான்.. சிலநேரம் வெறிப்பிடித்தவன் போல் முகத்தில் அறைந்துகொண்டு “ என்னாலதான் எல்லாம் என்னாலதான்” என்று கதறினான்


தர்மனும் தேவனும் அவனை சமதானம் செய்யமுடியாமல் தவித்தனர்... ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தயாளன்.. சற்று நேரத்தில் வெளியே வந்து தரையில் அமர்ந்திருந்த சத்யனை எழுப்பி சேரில் உட்கார வைத்துவிட்டு “ சத்யன் மான்சிக்கு பலத்த காயம் இல்லை... நான் சொல்றதை நம்புங்க சத்யன்... வெட்டு வெறும் சதைப்பகுதியில் தான் ஆழமா விழுந்திருக்கு... உள் சதையில் சில தையல்களும் வெளிப்புறம் சில தையல்களும் போட வேண்டியிருக்கும்.. மான்சி கர்ப்பிணி என்பதால் நாங்க ரொம்ப ஜாக்கிரதையா செயல்பட வேண்டியிருக்கு சத்யன்... அதேசமயம் ரத்தம் நிறைய வேஸ்ட்டாயிருக்கு அதனால் ரெண்டு யூனிட் அளவுக்கு ரத்தம் தேவைப்படும்” என்று சத்யனை சமாதானப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்தினார்.

அதன்பின் டாக்டர் மறுபடியும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் போய்விட்டார்
சத்யனுக்கு அவர் சொன்னது காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.. அவன் சிந்தனைகளை மொத்தம் சிதறடித்துவிட்டு ஒருத்தி உள்ளே படுத்துகிடடந்தாள்... தனக்காக அவள் வந்து விழுந்து காயத்தை ஏற்றுக்கொண்டதை சத்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை... அய்யோ எவ்வளவு ரத்தம் ... என் கண்ணம்மாவால் இதை தாங்க முடியுமா? எனக்காக உயிரைக்கொடுக்கும் அளவுக்கு அவளுக்கு நான் என்னப் பண்ணேன்? சேரில் இருந்து எழுந்த சத்யன் சுற்றில் கைகளால் குத்திக்கொண்டு “ என்னால இதை தாங்கவே முடியலையே மாமா?” என்று மறுபடியும் கலக்கத்துடன் கதறினான்..

தர்மன் இரண்டே எட்டில் அவனை அடைந்து சத்யனை தோளோடு அணைத்துக்கொண்டார் “ வேனாம் மாப்ளே நீயே இப்படி கலங்கினா அப்புறம் எங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருடா இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்லடா இன்னும் கொஞ்சநேரத்தில் மாமா மாமான்னு கத்தி உன்னை கூப்பிடப் போறா பாரு” என்று தர்மன் ஆறுதல் சொல்லும்போதே ....

ராமைய்யாவுடன் பஞ்சவர்ணமும் மீனாவும் கத்திக்கொண்டே ஓடிவர அவர்களைப் பார்த்ததும் சத்யன் தன் அம்மாவை விடுத்து அக்காவிடம் ஓடி அவள் கால்களில் விழுந்து காலைப்பிடித்துக் கொண்டு “ எல்லாம் என்னாலதான் அக்கா.... பூ மாதிரி வாழவேண்டியவளை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேனே? அவளுக்கு எதுனான்னா நான் அவளுக்கு முன்ன போயிடுவேன் அக்கா” என்று கத்தினான் ...

மீனா அப்படியே மடிந்து தரையில் அமர்ந்து தம்பியின் தோளைப் பிடித்து தூக்க.. தேவன் ஓடிவந்து மீனாவுக்கு உதவினான்.. சத்யனை சுவற்றில் சாய்த்து உட்கார வைத்துவிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு “ டேய் தம்பி இப்ப அவளுக்கு என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கத்துற.. இப்போ அவ உன் பொண்டாட்டிடா ரொம்ப தைரியசாலி... நீ இப்படி அழுவுறதைப் பார்த்தா உன்மேலயே கோபப்படுவா.. அதனால அழாம நிமிர்ந்து உட்காருலே தம்பி” என்று தன்நிலை மறந்து தம்பியை தேற்றுவதற்கு முனைந்தாள்... மீனாவுக்கு தன் மகள் மறந்து போனாள்.. அவள்ப்பட்ட காயத்துக்காக கதறும் தம்பி மட்டுமே ஞாபகத்தில் இருந்தான்

சத்யன் முன்பு தங்களது துயரத்தை காட்டினால் அவன் மேலும் உடைந்து போய்விடுவான் என்று எல்லோருக்கும் தெரியும்,, அதனால் எல்லோரும் இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டனர்...

பஞ்சவர்ணம் மகன் முகத்தைப் பார்க்கவே அஞ்சியவர் போல ஒரு மூளையில் அமர்ந்து முந்தானையை வாயில் அடைத்து அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார்.... மீனா தம்பியின் கையைப் பற்றிக்கொண்டு அவனைவிட்டு அங்குலம் கூட நகராமல் அவனைத் தேற்றிக்கொண்டிருந்தாள்,, குமுறலை அடக்கியபடி மருமகனைப் பார்த்து அடிக்கடி குலுங்கும் தர்மனின் கையைப் பற்றி தேறுதல் சொல்லிகொண்டு இருந்தார் ராமைய்யா.. தேவன் மட்டும் மருத்துவமனை ஊழியர்கள் வந்து கொடுக்கும் சீட்டை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான்

அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் மருத்துவர் “ மான்சியோட குரூப் ரத்தம் யாருக்கு இருக்கோ அவங்க உடனே லேபுக்கு போங்க,, எங்ககிட்ட இருந்த ஒரு யூனிட் பிளட் ஏத்திட்டோம், இன்னும் தேவைப்படுது, அதனால குயிக்கா லேபுக்கு போங்க” என்று சொல்ல...

தேவன் அந்த டாக்டரை நெருங்கி “ எனக்கும் மான்சிக்கும் ஒரே ப்ளட் குரூப் தான் மேடம்” என்றதும் “ அப்போ சீக்கிரமா லேப்புக்கு போய் பிளட் டெஸ்டுக்கு குடுங்க சார்” என்று சொல்லிவிட்டு சத்யன் பக்கம் திரும்பி “ யாராவது இவருக்கு வேற டிரஸ் குடுங்களேன்... இப்படியே உட்கார வச்சு வேடிக்கைப் பார்க்குறீங்களே? ” என்று அதட்டிவிட்டு மறுபடியும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் போய்விட்டாள்..




தர்மன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து ராமைய்யாவிடம் கொடுத்து “ பக்கத்துல ஏதாவது கடையில ஒரு கைலியும் சட்டையும் வாங்கிட்டு வாங்க ராமு” என்றார்..

அவர் கொடுத்த பணத்தை மறுத்து “ என்கிட்ட இருக்குங்க. இதோ போய் வாங்கிட்டு வர்றேன்” என்று வெளியே ஓடினார்...

இவர்களெல்லாம் அல்லாது அந்த மருத்துவமனையின் வராண்டாவில் அமர்ந்தபடி இன்னொரு ஜீவனும் தங்கைக்காக கதறிக்கொண்டிருந்தது.... ஆப்ரேஷன் தியேட்டர் செல்லும் வராண்டாவின் மறு திருப்பத்தில் அமர்ந்து அழுதவனை யாருமே கண்டுகொள்ள வில்லை... அதே வழியில் நூறு முறை போய் வந்த தேவன் அவனை ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை.. அழுதழுது கண்ணீர் வற்றி அந்த வராண்டாவிலேயே சுருண்டு விட்டான் வீரேன்

ராமைய்யா வாங்கி வந்த உடைகளை மாற்றிக்கொள்ள மறுத்த சத்யனை வலுக்கட்டாயமாக பாத்ரூம் அழைத்துச்சென்று உடை மாற்றி அழைத்து வந்தனர் தர்மனும் ராமைய்யாவும்... வந்து மறுபடியும் மீனாவின் அருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டான் .. சிறு குழந்தை போல் ஆகிவிட்ட தம்பியைப் பார்த்துக் குமுறினாள் மீனா... வீரேன் மீது பயங்கர ஆத்திரம் வந்தது... “ இவனைப் பெறாமலேயே இருந்திருக்கலாமே?” என்று கலங்கினாள்

சற்றுநேரத்தில் மறுபடியும் வெளியே வந்த அந்த லேடி டாக்டர்... தர்மனிடம் வந்து “ சார்.. மான்சிக்கு ஆப்ரேஷன் முடிஞ்சுது.. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. இன்னும் நினைவு திரும்பலை... கர்ப்பிணி என்பதால்... ட்ரக்ஸ் எதையும் ஹெவி டோஸ் குடுக்க முடியாது... அதனால அவங்களை இரண்டு நாள் ஐசியூவில் வச்சிருக்கனும்... அவங்க வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்றனுமே” என்று சொல்லி முடிக்கவும்

அமர்ந்திருந்த சத்யன் சரேலென எழுந்து அந்த டாக்டர் முன்பு கைகூப்பி “ அய்யோ எனக்கு என் மான்சி மட்டும் போதும்.. குழந்தை வேனும்னு அவசியமில்லை” என்று சொல்லும்போதே பஞ்சவர்ணமும் எழுந்து வந்து “ ஆமா தாயி எங்களுக்கு எங்க பேத்தி மட்டும் போதும்... அவ பழையபடி எழுந்து நடமாடினா போதும்... குழந்தை என்னாம்மா குழந்தை... அவளே எங்க எல்லாருக்கும் குழந்தைதான் ” என்று கண்ணீருடன் சொன்னார்..

தர்மன் தன் மாமியாரை ஆச்சர்யமாக பார்த்தார்.. அன்று தங்கள் வீட்டு வாரிசுக்காக எல்லோர் காலிலும் விழுந்தவர்... இன்று எங்களுக்கு வாரிசு வேண்டாம்.. என் பேத்திதான் வேண்டும் என்று சொல்வது அவர் மனசுக்கு இதமாக இருந்தது..

டாக்டர் சத்யனிடம் திரும்பி “ நீங்க சுலபமாக சொல்லிடுவீங்க சார்... எங்களுக்கு இரண்டு உயிருமே முக்கியம்... ஆனா நீங்க பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை சார்... உங்க மனைவியின் ஆரோக்கியம் கூடிய விரையில் மீண்டு விடும் கவலைப்படாதீங்க... அப்புறம் ஒரு விஷயம் ஐசியூவில் விசிட்டர்ஸ் யாருக்கும் அனுமதியில்லை.. அதனால நீங்க எல்லாம் ரிசப்ஷனில் ஒரு ரூம் கேட்டு அங்க தங்கிக்கங்க...” என்றுவிட்டு வெளியே போகும் வழியில் வேகமாக நடந்தாள்..

டாக்டர் என்றதும் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல அதிகாரத் தோரணையில் இருப்பவர்கள் மத்தியில் இந்த இளம்பெண் ரொம்ப வித்தியாசமாக இருந்தாள்,,மனிதாபிமானத்தோடு ... மனித மனவுணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதல் வழங்கிவிட்டு சென்றாள்

அந்த பெண் டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டர் வராண்டாவில் திரும்பும் போது.. வேகமாக அவள் முன் எழுந்து நின்ற வீரேன் “ மேடம் என் தங்கச்சிக்கு இப்போ எப்படியிருக்கு” என்று கண்ணீருடன் கேட்டான்..

அவ்வளவு உயரமான ஆண் கண்ணீருடன் தன் எதிரில் நின்றதும் ஒருகணம் தடுமாறியவள் பிறகு “ ஆப்ரேஷன் முடிஞ்சதுங்க.. இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரலை.. இப்போ ஐசியூவுக்கு மாத்தப் போறாங்க அதுக்கு முன்னாடி கொஞ்சநேரம் அவங்களைப் எல்லாரும் பார்க்கலாம் ” என்று கூறினாள்..


ஐசியூ என்ற வார்த்தையே வீரேனுக்கு கிலியை ஏற்ப்படுத்த... என்ன செய்கிறோம் என்று புரியாமல் டாக்டரின் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டு “ அய்யோ ஐசியூவுக்கு கொண்டு போற அளவுக்கு என் தங்கச்சி நிலைமை ரொம்ப மோசமா இருக்கா? தயவுசெஞ்சு அவளை பழைய மாதிரி ஆக்கிடுங்க மேடம்” என்று அவள் கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு அழுதான்..

டாக்டர் வாழ்க்கையில் அன்றாடம் இதுபோல் உணர்ச்சிவசப்படுபவர்களை நிறைய சந்தித்திருந்தாலும்... இவ்வளவு கம்பீரமான ஒருவனிடம் கையைக் கொடுத்துவிட்டு நிற்க சங்கடமாக இருந்தது.. “ இதோ பாருங்க சார் அவங்க நல்லாருக்காங்க.. வயித்துல இருக்குற குழந்தையை காப்பாற்றதான் இப்போ ஐசியூல இருக்கப் போறாங்க.. நீங்க கவலைப்படாதீங்க” என்றபடி மெதுவாக அவனிடமிருந்து தனது கையை விடுவித்துக்கொண்டாள் ..

குழந்தைக்கு ஆபத்து என்றதும் வீரேனின் முகம் மேலும் கலவரமானதும் “ ஹலோ ஹலோ சார் குழந்தையும் இப்போ நல்லாருக்கு.. சும்மா ஒரு பாதுகாப்புக்காக தான் ஐசியூ ” என்று மறுபடியும் சொல்லிவிட்டு தனது ரெஸ்ட் ரூம் நோக்கி போனாள்..

ரெஸ்ட் ரூமுக்குள் போனவள் மனதில் ஒரேயொரு கேள்வி “ இவன் மட்டும் ஏன் தனியா உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கான்?”....

ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வந்த ஒரு ஊழியர் மான்சி கட்டியிருந்த பட்டுப்புடவை மற்ற உடைகளையும் சுருட்டி எடுத்து வந்து தர... அதை கையில் வாங்கியதும் அவ்வளவு நேரம் சத்யனுக்காக தன்னை அடக்கிக்கொண்டிருந்த மீனா முற்றிலும் உடைந்து போனாள்.... அந்த பச்சைப் பட்டுப்புடவை முழுவதும் மான்சியின் ரத்தத்தில் தன்னை நனைத்துக்கொண்டிருந்தது...

“ அய்யோ என் மகளே... நான் குடுத்த பாலெல்லாம் உதிரமா போயிருச்சேடி மகளே” என்ற நீண்ட ஓலத்துடன் மயங்கி சரிந்தவளை தர்மன் தாங்கி தரையில் கிடத்தினார்

சத்யன் அக்காவின் கையிலிருந்த புடவையை வாங்கி தன் முகத்தை மூடிக்கொண்டு தரையில் கவிழ்ந்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தன் கதறலை தொடர்ந்தான் சத்யன்... தர்மன் ஒன்றுமே புரியாமல் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட... ராமைய்யா மட்டும் சத்யனை சமாதானம் செய்ய தனி ஆளாக போராடிக்கொண்டிருந்தார்...

ஆப்ரேஷன் தியேட்டர் வெளி அறைக்கு மான்சியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு.. பச்சை உடையணிந்த பெண் ஊழியர் ஒருவர் கதவைத்திறந்து “ ஒரு ஒருத்தரா உள்ள வந்து பேஷன்ட்டைப் பார்த்துட்டுப் போங்க” என்று அழைத்துவிட்டு நகர்ந்து வழிவிட்டு நின்றார்....
மான்சியைப் பார்க்கலாம் என்றதும் சத்யன் முகத்தில் பயங்கர கலவரம்... எழுந்து கால்களை சுவற்றில் சாய்ந்துகொண்டு அவள் புடவையை நெஞ்சில் அழுத்தியபடி “ ம்ஹூம் நான் பார்க்க மாட்டேன்... இந்த கோலத்துல நான் அவளைப்பார்க்க மாட்டேன்” என்று கூறிவிட்டு பிடிவாதமாக கண்களை மூடிக்கொண்டான்...

தன் அப்பாவின் மரணம்... தன் முதல் மனைவி சொர்ணாவின் மரணம்... அதுமட்டுமல்லாது எத்தனையோ குடும்ப பிரச்சனைகளை தாங்கி நிமிர்ந்த சத்யன் ... இன்று மான்சிக்காக ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்தான்... சிறு குழந்தைபோல் பயந்து நடுங்கினான்... தோளில் விழுந்த காயம் ஆழமில்லை என்று அறிவு சொன்னாலும் அவன் மனது அதை ஏற்க்கவில்லை.. ரத்தம் வழிய வழிய தன் காதல் மனைவியை கையில் ஏந்தியது மட்டுமே ஞாபகத்தில் வந்து அவனை பயமுறுத்தியது... மான்சியை மறுபடியும் பார்க்கவே பயந்தான்...

ரத்தம் கொடுத்துவிட்டு வந்த தேவன்... சோர்வுடன் சத்யன் அருகில் அமர்ந்து “ மாமா மான்சிக்கு ஒரு ஆபத்தும் இல்லை... அப்படி மோசமான நிலைமையாக இருந்திருந்தா இன்னேரம் மதுரைக்கு கொண்டு போக சொல்லிருப்பாங்க... அதனால பயப்படாம வந்து அவளைப் பாருங்க மாமா.. உங்க குரல் கேட்டு அவ மயக்கம் தெளியட்டும் ” என்று கெஞ்சி அவனை எழுப்பி மான்சி இந்த ஸ்ட்ரெச்சர் அருகே அழைத்துச்சென்றான்..


மான்சி பச்சைநிற துணியால் கழுத்துவரை மூடப்பட்டிருநதாள்... தலைமுடியை பிரித்து பச்சைத் துணியால் சுற்றியிருந்தார்கள்.. வலது தோளில் காயம் என்பதால். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வைத்திருந்தார்கள்... அவள் மீதும் பக்கத்திலும் நிறைய மருத்துவ உபகரணங்கள்... மூக்கோடு வாயையும் சேர்த்து கவ்வியிருந்த நைலான் கப் சுருங்கி விரிந்து அவள் சுவாசத்தை உறுதி செய்தது... இரண்டு கைகளிலும் ப்ளட்டும் சலைனும் ஏறிக்கொண்டு இருந்தது...

தேவனின் தோளில் சாய்ந்தபடி வந்த சத்யன் மெல்ல திரும்பி மான்சியைப் பார்த்தான்... பின்னர் தேவினிடமிருந்து நகர்ந்து மான்சி அருகில் வந்து அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான்... “ மான்சி நான் மாமா வந்திருக்கேன் பாருடி? ” என்று மெல்லிய குரலில் உருக்கமாக வேண்டினான்...

குனிந்து சலைன் ஏறிய கைவிரல்களில் முத்தமிட்டான்... மறுபடியும் தலைப்பக்கம் வந்து “ என்னைப் பாறேன் மான்சி?... நீ ஏன் வந்து விழுந்த மான்சி.. நீ எப்படி இந்த வலியெல்லாம் தாங்குவ மான்சி?.. உனக்கு ஒன்னுன்னா என்னால கூடத்தான் தாங்கமுடியுமான்னு யோசிச்சியாடி நீ? நான் அப்புறம் உயிரோட இருப்பேனான்னு உனக்கு தோனவே இல்லையா மான்சி? நீ தானடி என் உலகமே? உனக்குப் பிறகு எனக்கு எதுவுமே இல்லேன்னு உனக்கு ஏன்டி தெரியாமப் போச்சு? ” என்று அவள் காதருகே சத்யன் உருக்கமாக பேச.... அவன் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் சொல்லமுடியாத ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் மான்சி

தேவன் சுவர்ப் பக்கமாக திரும்பி நின்று முகத்தை மூடிக்கொண்டு இதயம் வெடித்து குமுறினான்... சத்யனின் துயரத்தை அவனால் பார்க்கமுடியவில்லை...

அப்போது உள்ளிருந்து வந்த குடும்ப டாக்டர் சத்யனை அணைத்தார்ப் போல் சற்றுத்தள்ளி நகர்த்தி வந்து “ சத்யன்.... மான்சிக்கு எதுவும் இல்லை... நீங்க தைரியமா இருந்தாத்தான் மத்தவங்க தைரியமா இருப்பாங்க.. நீங்க மான்சிகிட்ட தைரியமான வார்த்தைகளை யூஸ் பண்ணுங்க சத்யன்.. அதுதான் அவங்க மயக்கத்தை தெளியவைக்கும் மருந்து ” என்றவர் தேவனைப் பார்த்து ஜாடை செய்து சத்யனை வெளியே அழைத்துப் போகச்சொன்னார்

தேவன் சத்யனை தன் தோளோடு அணைத்துக்கொண்டு வெளியே வந்தான்... மற்றவர்கள் ஒவ்வொருவராக உள்ளேபோய் மான்சி பார்த்துவிட்டு குமுறிய இதயத்தை அடக்கியபடி வெளியே வந்தனர்... தர்மன் மீனாவை தூக்கி கையைப்பிடித்துக் கொண்டு அழைத்துப்போய் மான்சியை காட்டிவிட்டு அழைத்து வந்தார்..

மான்சி ஐசியூ நோக்கி ஸ்ட்ரெச்சரில் எடுத்துச்செல்லப்பட்டாள்..
வெளியே வந்த மீனா தன் தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு... “ என்னால என் மவளை இப்படி பார்க்க முடியலைடா தம்பி?” என்று குலுங்க..

விரக்த்தியுடன் சுவற்றில் சாய்ந்த சத்யன் “ அவ பைத்தியம் அக்கா.... பெரிசா எனக்காக உயிரைக்கொடுத்து காப்பாத்துற மாதிரி வந்து விழுந்தாளே? அவ நகத்துல ஒரு கீரல் விழுந்தா கூட என்னால தாங்க முடியாதுன்னு அவளுக்குப் புரியாமப் போச்சே அக்கா?.. அவளை நான் புரிஞ்சிகிட்ட அளவுக்கு அவ என்னை புரிஞ்சுக்கலைப் பாருக்கா?” என்று கண்ணில் வழியும் நீரை துடைக்க மனமின்றி கண்மூடி பேசிக்கொண்டே போனான்...

அப்போது அவன் கால்களை யாரோ பற்றுவது போல் இருக்க கண்ணை திறந்து பார்த்தான்.. வீரேன் தான் சத்யன் கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தான் ...

சத்யன் கால்களைப் பற்றிக்கொண்டு அவன் கால் பெருவிரலை தன் தலையில் தாங்கி “ மாமா என் தங்கச்சி மேல நீங்க வச்சிருக்கிற அன்பை புரிஞ்சுக்காம.. அவ வாழ்க்கையை கெடுத்துட்டீங்கன்னு தப்பா நெனைச்சு இந்த மாதிரிப் பண்ணிட்டேன் மாமா.. தயவுசெஞ்சு இந்த பாவியை மன்னிச்சிடுங்க மாமா” என்று தன் கண்ணீரால் சத்யன் கால்களை கழுவினான் வீரேன் ...

சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக கண்களை மூடிக்கொண்டான்.. அவன் உயிரையே வதை செய்தவனை மன்னிக்கும் மனபக்குவம் சத்யனுக்கு இன்னும் வரவில்லை.. அதேசமயத்தில் சொந்த அக்கா மகனை தண்டிக்கவும் சத்யனுக்கு மனம் வரவில்லை.. அதனால் எதுவும் பதில் கூறாமல் கண்களை மூடிக்கொண்டான்

சத்யன் வீரேனை ஏதாவது சொல்வான் என்று எதிர்ப் பார்த்த தர்மன்... அவன் அமைதியாக கண்மூடியதும்... சத்யன் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு தன் மகனின் சட்டையை கொத்தாகப் பற்றி தூக்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து “ செய்றதையெல்லாம் செய்துட்டு இப்போ மன்னிப்புன்னு ஒரே வார்த்தையில பூசி மொழுகப் பார்க்கிறயா... உன்னை இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கமே நான் பார்க்கக்கூடாது.. பார்த்தான் சத்யனுக்கு குடுக்கலைன்னாலும் நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்து காலத்துக்கும் வெளியே வரமுடியாதபடி பண்ணிருவேன்.. நாயே போடா வெளியே” என்று வீரேனை இழுத்து வெளியேத் தள்ள...


மனமும் உடலும் ரொம்பவே பலகீனமாக இருந்த வீரேன் அவர் தள்ளிய வேகத்தில் சுழன்று சுவற்றில் மோதி கீழே விழுந்தான்... அப்போதுதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்த அந்த பெண் டாக்டர் தன் கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தை கண்டு திகைத்துப் போய்.. வீரேன் அருகே ஓடி அவனை தூக்கிப் பார்க்க.. சுவற்றில் மோதியதில் நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது

“ அய்யோ...” என்று தனது வெள்ளை கர்சீப்பை வைத்து வீரேன் நெற்றியில் வைத்து அழுத்தியவள் தர்மனை சீற்றத்துடன்ப் பார்த்து “ சார் இது ஆஸ்பிட்டல்.. உங்க வீடு கிடையாது... இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடந்துக்குவீங்க?” என்று கோபமாய் கேட்டுவிட்டு “ சார் நீங்க எழுந்திருங்க.. உடனே பர்ஸ்ட்டெய்ட் பண்ணனும்.. ப்ளட் நிறைய வேஸ்ட் ஆகுது” என்று கவலையுடன் வீரேனை எழுப்ப முயன்றாள்...

வீரேன் நெற்றியில் வழிந்த ரத்தத்தைப் பார்த்து பெற்ற வயிறு குலுங்க வேகமாய் வந்த மீனாவை தடுத்து இழுத்த தர்மன் “ அவன்கிட்டப் போன.. அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன்.. வாடிப் போகலாம் ” என்று மனைவியை தரதரவென்று இழுத்துக்கொண்டு அங்கிருந்து மருத்துவமனை வளாகத்துக்கு சென்றார்..

அவர் பின்னாலேயே தேவன் சத்யனை அழைத்துக்கொண்டு போக.. சத்யன் எதையுமே உணராத மோனநிலையில் இருப்பவன் போல் நடந்தான்.. ராமைய்யா பஞ்சவர்ணத்தை கூட்டிக்கொண்டு வந்தார்.. வீரேனை கடக்கும்போது அவனருகே அமர்ந்த பஞ்சவர்ணம் “ அடப்பாவி மக்கா... ஏன்டா இந்த கொடுமையெல்லாம் நான் பார்க்கனுமா? உன் வெறிக்கு என் பேத்தி தானா கிடைச்சா?” என்று கண்ணீரும் ஆதங்கமுமாக கேட்க..

“ என்னை நீயாவது மன்னிச்சிட்டேன் சொல்லு அம்மாச்சி?” என்று அழுதான் வீரேன்... அவர்களும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட...

நிமிடத்தில் அனாதையான வீரேன் நெற்றியில் வழிந்த ரத்தத்தை தன் கர்சீப்பால் அழுத்தியபடி திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள் அந்த லேடி டாக்டர்... “ ப்ளீஸ் எழுந்திருங்க சார்... பர்ஸ்டெய்ட் பண்ணனும்” என்று வீரேனை தூக்க முயன்றவள் கையை உதறிவிட்டு “ நீங்க விடுங்க.. நான் இப்படியே சாவுறேன்” என்று அப்படியே அமர்ந்து கொண்டான் வீரேன்...

அப்போது அந்தபக்கமாக வந்த மருத்துவமனையின் ஆண் ஊழியர் ஒருவரை உதவிக்கு அழைத்து வீரேனை வலுக்கட்டாயமாக தூக்கி பர்ஸ்டெய்ட் ரூமுக்கு அழைத்துச்சென்று காயத்தை சுத்தப்படுத்தி இரண்டு தையல்ப் போட்டுவிட்டு பிளாஸ்டர் போட்டாள் அந்த பெண்

அந்த ஊழியரிடம் காபி வாங்கிவரச் சொல்லி அதை மயக்கமாகப் படுத்திருந்த வீரேனிடம் கொடுத்து “ சார் இந்த காபியை கொஞ்சம் கூடிங்க.. ஓரளவுக்கு தைரியம் வரும்” என்று வற்புறுத்தி குடிக்க வைத்தாள்...

காபியை குடித்து முடித்ததும் “ மேடம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க? ” என்று கேட்ட வீரேனிடம் “ கேளுங்க சார் முடிஞ்சா செய்றேன்” என்றாள் அந்த பெண்..

“ நான் என் தங்கச்சிய பார்க்கனும்” என்றான்... சிறிதுநேர யோசனைக்குப் பிறகு “ இப்போ நீங்க மான்சியைப் பார்க்கறது நல்லதில்லை... ஏன்னா இப்போ இங்கிருந்து போனவங்க எல்லாரும் ஐசியூ வாசலில் தான் உட்கார்ந்திருப்பாங்க.. நீங்க போனா மறுபடியும் பிரச்சனை தான் வரும்.. அதனால் நீங்க ஆஸ்பிட்டல் வெளிய இருக்கிற கார்டன்ல வெயிட்ப் பண்ணுங்க.. எனக்கு இந்த வாரம் முழுக்க ஐசியூல தான் நைட் டியூட்டி.. நீங்க ஒரு ஒன்பது மணி வாக்கில் ஐசியூ வந்தீங்கன்னா நானே உங்களை கூட்டிட்டுப் போய் உங்க தங்கச்சியை காட்டுறேன், அதுவரைக்கும் காத்திருங்க சார் ” என்று அன்பாக கூறவும்...

வீரேனுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது... “ சரிங்க ஒன்பது மணிக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து ஆஸ்பிட்டல் கார்டனை நோக்கி நடந்தான்...போகும் வீரேனையை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பெண் டாக்டர்...

மனைவிக்காக கதறித் துடிக்கும் சத்யன் அவள் கண்முன் வந்து போனான்.... மகளுக்காக மகனை அடித்துவிரட்டிய தர்மன் ஞாபகத்திற்கு வந்தார்.. தங்கைக்காக ரத்தம் கொடுத்துவிட்டு தன் மச்சானை தோளில் தாங்கி நிற்கும் தேவன்... இதோ தங்கைக்காக தகப்பனிடம் அடிவாங்கி காயமடைந்த வீரேன்... தாங்கள் கண்ணீரைக் கொட்டினால் எங்கே ஆண்கள் உடைந்துபோய் விடுவார்களோ என்று முந்தானையை வாயில் அடைத்துக்கொண்டு கண்ணீரை கட்டுப்படுத்தும் இரண்டு பெண்கள்... இப்படி இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தப் பாசத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு காயம்பட்டு கிடக்கும் மான்சியின் மீது பொறாமை கூட வந்தது டாக்டர் ருத்ரா ஜோயல்க்கு

இதுபோன்ற எதையுமே அறியாத அனாதை ஆசிரமத்து ஆதரவற்ற பறவை இவள்... ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது அலுவலை கவனிக்கப் போனாள் ருத்ரா ஜோயல்


ஐசியூவின் வாசலில் ஆளுக்கொரு பக்கமாய் சுருண்டு கிடந்தனர்... மதிய உணவின் நினைவு மறந்து போனது எல்லோருக்கும்.. இரவு நெருங்கும் போது ராமைய்யாவை அழைத்த தர்மன் “ அதான் பயமில்லைன்னு சொல்லிட்டாங்களே ராமு... நீங்க அத்தைய கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க... மான்சிக்கு மயக்கம் தெளிஞ்சதும் என்னேரமா இருந்தாலும் நான் போன் பண்ணி தகவல் சொல்றேன்.” என்றவர் மறுபடியும் யோசித்து “ ராமய்யா நாளைக்கு செல்வியை இங்க கூட்டிட்டு வந்து விடுங்க.. கொஞ்சம் உதவியா இருப்பா... செல்வி வந்ததும் நானும் மீனாவும் வீட்டுக்கு வந்துர்றோம்.. செல்வியும் தேவனும் சத்யன் கூட இருக்கட்டும்.. நீங்க அத்தை கூட இருந்து இருக்குற வேலையை கவனிங்க ” என்று சொன்னதும் ..

“ சரிங்கய்யா அப்படியே செய்றேன்” என்றவர் பஞ்சவர்ணத்திடம் விஷயத்தை சொல்லி அவரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு கிளம்பினார்...
மகளுக்கு ரத்தம் கொடுத்த மகன் சாப்பிடாமல் இருப்பதை எண்ணி வருந்தி கேன்டீனில் இருந்து பழரசம் வாங்கி வந்து அவனை குடிக்க வைத்தார்.. மாமா இன்னும் பச்சைத்தண்ணீர் கூட குடிக்கவில்லையே என்று எண்ணியபடி இரண்டு மிடறு மட்டும் குடித்துவிட்டு மறுத்தான் தேவன்...

இரவு ஏழு மணிவாக்கில் டியூட்டிக்கு வந்த டாக்டர் ருத்ரா ஜோயல்.. இவர்களைப் பார்த்து.. யாருமே சாப்பிடவில்லை போல என்று யூகித்தாள்... அப்போதுதான் கார்டனில் இருக்கும் வீரேனின் ஞாபகமும் வந்தது... பாவம் அவனும் கூட எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று அவள் மனம் பரிதாபப்பட்டது
இவர்களை இப்படியே விட்டால் பட்டிக்கிடந்தே இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக மாறிவிடுவார்கள் என்று தோன்றியது,, என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வார்டுக்குள் சென்று,, டியூட்டி டாக்டருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று நாப்த்தலின் தெளிக்கப்பட்ட பச்சை உடையை அணிந்துகொண்டு வெளியே வந்து மான்சி இருக்கும் பகுதிக்கு சென்றாள்



அந்த மருத்துவமனை புதிது என்பதாலும்.. பெரிய வியாதிகளுக்கு பக்கத்தில் உள்ள பெருநகரான மதுரைக்குப் போய் விடுவதால் இன்னும் பிரபலமாகவில்லை என்பதாலும் ஐசியூவில் நோயாளிகள் அதிகம் இல்லை.. இரண்டு வரிசையாக மொத்தம் பத்து படுக்கைகள் இருக்க.. ஒவ்வொரு படுக்கைக்கும் நடுவே மரத் தடுப்புகள் இருந்தன.. வயதான ஒரு நீரழிவு நோயாளி... விபத்தில் உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர்... கருப்பை கட்டி அகற்றப்பட்ட ஒரு பெண் .. என்று மான்யோட சேர்த்து மொத்தமே நான்கு நோயாளிகள் தான் இருந்தனர்

ஜோயல் மான்சி இருந்த தடுப்புக்குள் நுழைந்தாள்.... தண்ணீர்ப் பட்டு கலைந்துபோன ரவிவர்மன் ஓவியம் போல் ஒருக்களித்து கட்டிலில் கிடந்தவளை சில நிமிடங்கள் உற்று நோக்கிவிட்டு.. பிறகு கட்டிலின் கால்பகுதியில் மாட்டப்பட்டிருந்த மான்சியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து வாசித்தாள்... மான்சி தலைமாட்டிற்க்கு வந்து கையைப்பிடித்து பல்ஸ் செக்ப் பண்ணி குறித்துக்கொண்டு.. ஸ்டெதாஸ்கோப்பை மான்சியின் இதயத்தில் வைத்து துடிப்பை பரிசோதித்தாள்.. வயிற்றையை மென்மையாக அழுத்தி வயிற்றுக் கருவின் துடிப்பை கணித்தாள்... ஒருக்களித்து படுத்திருந்ததால் மேலே இருந்த துணியை விலக்கி உதிரப்போக்கு ஏதேனும் உள்ளதா என்று சோதித்தறிந்தாள்.. எல்லாம் நார்மலாக இருந்தது..

சீக்கிரமே நினைவு வரும் வாய்ப்பு இருந்தால் ஒரு சேரை இழுத்து மான்சியின் அருகேப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு அவள் கன்னத்தில் மெல்ல தட்டி “ மான்சி கொஞ்சம் கண்விழிச்சு பாரும்மா.. உனக்கு என்ன பண்ணுதுன்னு சொல்லு மான்சி.. மான்சி” என்று மெல்லிய குரலில் மான்சி அழைத்துக்கொண்டே இருந்தாள்

கிட்டத்தட்ட பத்து நிமிடம் கழித்து மான்சியின் கருவிழிகள் உருளுவது மூடிய இமைகளுக்குள் தெரிந்தது,, ஜோயலின் முகம் பளிச்சிட “ மான்சி,.. இங்கப் பாருங்க மான்சி.. உனக்கு என்னப் பண்ணுதுன்னு சொல்லும்மா?” என்று மறுபடியும் அழைத்தாள்.. மான்சியின் மூடிய விழிகள் அலைப்புறுதலுடன் சுழன்றது.. ஆனால் விழிக்கவில்லை..



No comments:

Post a Comment