Friday, November 6, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 16

கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்க, பாக்யா ராமுவிடமிருந்து போன் வரும்போதெல்லாம் அனுசுயா சத்யன் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டேன் என்ற செய்தியை சொல்வானா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள், ராமுவோ அதைத்தவிர மற்ற எல்லாம் பேசினான், அவன் காதலை செல்போன் மூலமாகவே அவளுக்கு உணர்த்தினான், அவன் அவ்வளவு ஆர்வமாக பேசும்போது இதைப்பற்றி கேட்டு அவனை திசைதிருப்ப மனமின்றி பாக்யாவும் தன் காதலை சின்னச்சின்ன வார்த்தைகள், செல்லச் சினுங்கல்கள், பொய்யான கோபங்கள் என பலவகையில் அவனுக்கு உணர்த்தினாள்

அவனிடம் பேசி முடித்தவுடன்தான் யோசிப்பாள், நிச்சயத்தை நிறுத்தச்சொல்லி ராமுவை சென்று சந்திக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக கல்யாணத்தை நிறுத்த சொல்லி போய்விட்டு இப்போ காதலெனும் அவஸ்தையில் மாட்டிக்கொண்டதை எண்ணி சங்கடப்படுவாள்



அத்தோடு தனது அப்பாவின் மாற்றங்களும் அவளை மேலும் சந்தோஷப்படுத்தியது, கல்யாண வேலைகள் அனைத்தையும் அவரும் சேர்ந்து செய்தாது அவளுக்கு நிம்மதியாக இருந்தது, இப்போதைய அவளது பிரார்த்தனை எல்லாம், சத்யன் மான்சி இணையவேண்டும் என்பது மட்டுமே. ஆனால் இப்போது பாக்யா ராமுவை இழக்கவும் தயாராக இல்லை...

ஒருநாள் கையில் ஸ்வீட் பாக்ஸுடன் வீட்டுக்கே வந்தான் ராமு, சாந்திக்கு மருமகனைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, அவசரமாக மூர்த்திக்கு போன் செய்து தகவல் சொல்ல. அவர் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிவந்து மருமகனை உபசரித்தார்,

அன்று மதிய உணவை பாக்யாவின் வீட்டிலேயே சாப்பிட்ட ராமுவிடம் மூர்த்தி மெதுவாக பேச்சு கொடுத்தார் “ மாப்ளே உங்க வீட்டுல கல்யாண வேலையெல்லாம் எந்த லெவல்ல இருக்கு? எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சுட்டீங்களா?” என்று கேட்க

“ ம்ம் ஓரளவுக்கு எல்லாருக்கும் வச்சிட்டோம் மாமா, இன்னும் உள்ளூர்ல கொஞ்ச பேருக்கு வைக்கனும், அவ்வளவுதான் ” என்றான் ராமு

பெரும் தயக்கத்துடன் மூர்த்தி சாந்தியைப் பார்க்க, சாந்தி சொல்லாதீங்க என்று ஜாடை செய்தாள், “ ஒரு நிமிஷம் இதோ வர்றேன் மாப்ளே” என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்று “ ஏன்டி இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மறைக்க முடியும், கல்யாணம் நெருங்குது சாந்தி” என்று கோபமாக கேட்க...

கண்ணில் நீருடன் “ஏங்க எவளோ ஒருத்திக்காக ஏன் என் மகளோட கல்யாணம் நிக்கனும்? நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” என்று சாந்தி சொல்ல..
மனைவியின் தோளை அணைத்து தன் பக்கம் திருப்பிய மூர்த்தி “ சாந்தி நீ பாக்யாவுக்கு மட்டும் அம்மாவா இருந்து யோசிக்கிற, சத்யனும் நம்ம மகன் தான்டி, அவன் மனசுக்கு பிடிச்சவளோட வாழ வைக்க வேண்டியது நம்ம கடமை தானே, அதோட நீ ஒரு அம்மாவா இல்லாம ஒரு பொண்ணா இருந்து மான்சியோட நிலைமையை யோசிச்சுப் பாரு, நம்மப் பொண்ணு கல்யாணம் நின்னாகூட இன்னொரு மாப்பிள்ளையை தேடி அவளுக்கு கல்யாணம் பண்ணலாம்,, ஆனா அந்த விதவைப் பொண்ணுக்கு சத்யனைத் தவிர யாருமே வாழ்க்கை தரமுடியாது” என்று சாந்திக்கு புரியும்படி எடுத்துச் சொன்னார் மூர்த்தி

“ இப்ப என்ன பண்ண போறீங்க?, மாப்ள கிட்ட அந்த பொண்ணைப் பத்தி சொலலப் போறீங்களா? அவர் தங்கச்சி நிச்சயத்தை நிறுத்த ஒத்துக்குவாரா?” என்று கலவரத்துடன் சாந்தி கேட்க...

“ ஆமாம் சொல்லதான் போறேன், மாப்பிள்ளை கிட்ட பேசும்போது நல்ல மாதிரி தான் தெரியுறாரு, நிலைமையை புரிஞ்சுக்குவாரு, அமைதியா இரு நான் பேசிக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்தார்..

அதுவரை ராமுவிடம் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்த பாக்யா அப்பா வரவும் அறைக்குள் போய்விட்டாள் ,


ராமுவுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்த மூர்த்தி “ மாப்ள உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றார்..

“ சொல்லுங்க மாமா?” என்று பணிவுடன் ராமு சொல்ல..
ஒருநிமிடம் மகளின் அறையைப் பார்த்தவர் பிறகு “ மாப்ள சத்யனுக்கும் உங்க தங்கச்சிக்கும் நடக்கயிருக்குற நிச்சயத்தில் ஒரு சிக்கல், நம்ம சத்யன் ஒரு பொண்ணை விரும்புறான், சரி பொண்ணு கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாக்கூட நாங்க தட்டிகழிச்சிருவோம், ஆனா அந்த பொண்ணு ரொம்ப நல்லவ, சத்யனுக்கு ஏத்த பொண்ணு, அதான் என்ன செய்றதுன்னு குழம்பி போயிருக்கோம், சத்யனும் எங்க பாகி கல்யாணம் நின்னுடுமோன்னு எங்ககிட்ட தன்னோட காதல் விஷயத்தை சொல்லாம மறைச்சுட்டான், இப்படிப்பட்ட புள்ளையோட மனசை புரிஞ்சு நாங்க நடந்துக்கலைன்னா எப்படி மாப்ள? இப்போ என்ன பண்றதுன்னு புரியாமத்தான் உங்ககிட்ட ஆலோசனை கேட்கிறோம்” என்று தங்களின் நிலைமையை தெளிவாக சொன்னாலும், மான்சி ஒரு விதவை, ஒரு குழந்தைக்கு தாய் என்பதை சொல்லவில்லை

மருமகனே ஆனாலும் மான்சியின் முற்காலத்தைப் பற்றி பேசக்கூடாது அது தன் குடும்பத்துக்குள் மட்டும் விவாதிக்கப்பட வேண்டியது என்று முடிவு செய்ததால் ராமுவிடம் மான்சியைப் பற்றி வேறு எதுவும் சொல்லவில்லை

சற்றுநேரம் யோசனையாக இருந்த ராமு “ எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் மாமா... பாக்யா சொல்லிருக்கா... அண்ணனோட வாழ்க்கையை அழிச்சு எனக்கு கல்யாணம் வேனாம்னு சொல்லி என்னை கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டா... உங்க மகன் சத்யன் எப்படியோ? அப்படித்தான் நானும்... பாக்யாவை உயிரா விரும்புறேன், அதனால கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு பாக்யாகிட்ட சொல்லிட்டேன், நிச்சயத்தை நிறுத்த என்னால் ஆன முயற்சியை செய்துகிட்டு தான் இருக்கேன், சமயம்தான் சரியா அமைய மாட்டேங்குது, இன்னைக்கு காலையில என் அப்பா கல்யாண பத்திரிகை வைக்க பெங்களூர்க்கு போயிருக்கார், நாளை மறுநாள் வர்றாரு, வந்ததும் முடிவா பேசிடனும்னு முடிவு பண்ணிருக்கேன், நீங்க பயப்படாம ஆகவேண்டியதை பாருங்க, நான் உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்று ராமு கூறியதும், மூர்த்தி நன்றியோடு கைகூப்பினார்

“ அட என்ன மாமா இதுக்கெல்லாம் எமோஷன் ஆயிக்கிட்டு, விருப்பமில்லாத கல்யாணம் நடந்தா என் தங்கச்சி வாழ்க்கையும் தான் நாசமாப் போயிரும், அதனால இதை கண்டிப்பா செய்தே ஆகனும்” என்றவன் பாக்யாவின் அறையைப் பார்த்துக்கொண்டே “ சரி நான் கிளம்புறேன் மாமா” என்று சொன்னதும் பாக்யா வெளியே வர ராமுவின் முகம் பளிச்சிட கிளம்புறேன் பாக்யா” என்றான்
பாக்யா தலைகுனிந்த வாறே தலையசைத்து விடைகொடுக்க, மூர்த்தி வாசல்வரை வந்து மருமகனை வழியனுப்பினார்,

மறுபடியும் அவர் உள்ளே வரும்போது சாந்தி மகளின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்தாள், மூர்த்தி மகளை நெருங்கி “ நீ மாப்ள கிட்ட முன்னாடியே விஷயத்தை சொல்லிட்டயா பாகி” என்று கேட்க..

பாக்யா மவுனமாக தலையசைத்தாள்.. பிறகு “ அந்த பொண்ணு இல்லாம அண்ணன் இருக்கமாட்டார்ப்பா, ரெண்டுபேரும் ரொம்ப லவ் பண்றாங்க, அந்த பொண்ணு என்னைவிட மூனு வயசு சின்னப் பொண்ணு.. ரொம்ப பாவம்ப்பா, அதான் என் கல்யாணம் நின்னாக்கூட பரவாயில்லைன்னு இவரைப் பார்த்து சொன்னேன், நிச்சயமா ஏதாவது செய்வார்பா” என்று பாக்யா சொல்ல, சாந்தி மகளை அணைத்துக்கொண்டாள் ..

“ அண்ணன் தங்கச்சிக்காக காதலை மறைச்சு அமைதியா இருக்குறதும், தங்கச்சி அண்ணனுக்காக தன்னோட கல்யாணத்தை நிறுத்துறதும், ம்ம் உங்களையெல்லாம் பிள்ளைகளா பெத்ததுக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா, கடைசிகாலம் வரைக்கும் இப்படியே ஒத்துமையா இருந்தீங்கன்னா போதும்” என்ற மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டு பாக்யாவின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்


சத்யன் இரவில் டியூட்டிக்கு செல்வதும், பகலில் கல்யாண வேலையாக வெளியே சுற்றுவதுமாக இருந்தான், மான்சியின் காதலான பேச்சுக்களும் அவள் அணைத்துக்கொண்டு அவனுக்கு கொடுக்கும் முத்தங்களும் மட்டுமே தன்னை வாழவைப்பது போல் உணர்ந்தான்,

அனுசுயாவிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் அணைவரும் தவித்துப்போயிருக்கும் வேலையில் கதிரவனின் சிரிப்பு மட்டுமே எல்லோருக்கும் ஆறுதல் என்றானது, மூன்றாவது மாதம் என்பதால் முகம் பார்த்து சிரித்த கதிரவனை விட்டுவிட்டு வேலைக்கு போகக்கூட மனம் வரவில்லை சத்யனுக்கு, அவனுடைய உலகமே மான்சியும் கதிரவனும்தான் என்பதுபோல் ஆனான் சத்யன்

அன்று பக்கத்து ஊர்களுக்கு பத்திரிகை வைக்கலாம் என்று காலையிலேயே கிளம்பியவன், அருணை வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டு, சத்யன் தனது பைக்கில் விரிஞ்சிபுரம் நோக்கி கிளம்பினான், தூரத்து உறவினர் ஒருவரின் முகவரியை கண்டுபிடித்து அவர் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு சத்யன் உள்ளே நுழையவும் மூர்த்தி பத்திரிகை வைத்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது

அப்பாவைப் பார்த்ததும் சத்யன் தயக்கமாக வாசலிலேயே நிற்க்க... மூர்த்தி வாசலைத்தாண்டி வெளியே சென்றபடி “ நான் குடுத்துட்டேன் வா” என்றுவிட்டு விறுவிறுவென தெருவில் நடந்தார்

சத்யன் அவர் பின்னாலேயே வேகமாக பைக்கை தள்ளிக்கொண்டு சென்று “ அப்பா வண்டில ஏறுங்க போகலாம்” என்று கூப்பிட்டான்

“ வேனாம்பா நான் எப்படி வந்தனோ அதேமாதிரி பஸ்லயே போய்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு நடக்க.......

சத்யன் விடவில்லை அவர் பின்னாலேயே வண்டியை தள்ளிக்கொண்டு ஓடினான், “ அப்பா உட்காருங்க ப்ளீஸ்” என்று சத்யன் கெஞ்ச...

அந்த வழியாக போன பாதசாரி ஒருவர் “ ஏம்பா புள்ளதான் அப்புடி கெஞ்சுதே, ஏறி உட்காந்து போயேன்பா” என்று மூர்த்திக்கு அறிவுரை சொல்லிவிட்டு போனார்..

மூர்த்தி மகனைப் பார்த்து முறைத்துவிட்டு அப்படியே நிற்க்க, சத்யன் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான், மூர்த்தி விறைப்புடனேயே சத்யன் பின்னால் ஏறி அமர்ந்தார்

பைக் பைபாஸ் சாலையில் திரும்பியதும் வேகத்தை குறைத்து மெதுவாக செலுத்திய சத்யன் பக்கவாட்டில் திரும்பி “ அப்பா ஸாரிப்பா” என்றான்

மூர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாக வர,, “ அப்பா நான் அன்னிக்கு அவசரப்பட்டது தப்புதான் மன்னிச்சிடுங்க” என்று சற்று விளக்கமாக மன்னிப்பு கேட்க...

சற்று நேரம் கழித்து “ ம்ம்” என்றார் மூர்த்தி

கொஞ்சதூரம் போனதும், “ இன்னும் நாலஞ்சு பேருக்குதான் பத்திரிகை வைக்கனும்ப்பா, இன்னிக்கே அதையெல்லாம் முடிச்சிடலாம்னு வந்தேன்... ரெண்டுபேரும் சேர்ந்தே போய் வச்சிட்டு வந்துடலாமா?” என்று சத்யன் அனுமதி கேட்க....

“ ம் போகலாம்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் மூர்த்தி...

வண்டியின் வேகத்தை இன்னும் குறைத்து “ அப்பா இன்னும் என்மேல கோபமா? நான் மனசறிஞ்சு மன்னிப்பு கேட்கிறேன்ப்பா.. அந்த சமயத்துல எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியலை, அடிச்சதுக்கு அப்புறமா தான் அய்யய்யோ இப்படி பண்ணிட்டமேன்னு வேதனையோட உங்களை தூக்கிவிட வந்தேன், அதுக்குள்ள அம்மா என்னை அறைஞ்ச வெளிய போக சொல்லிட்டாங்க, அன்னிலேருந்து தினமும் நடந்ததை நினைச்சு வேதனைப்படாத நாளில்லைபா ” என்று சத்யன் தன்னிலை விளக்கம் கொடுக்க...




சற்றுநேர மவுனத்திற்கு பிறகு, அவன் தோளில் கைவைத்து “ நான் அதை எப்பவோ மறந்துட்டேன்டா, நான் விசாரிக்காம அப்படி பேசியிருக்க கூடாது,, சிறையில இருக்குற அந்த சமையல் ரூம் இன்சார்ஜ் தான்டா ‘ அந்த பொண்ணு வாரத்துக்கு ரெண்டு வாட்டி வந்து போவா, அவளுக்கு ஜெயில்ல இருக்கிற அத்தனைபேரும் பழக்கம், இப்போ உன் மகன்தான் அவளை நிரந்தரமா வீடு பார்த்து வச்சுகிட்டான்னு சொன்னான், அதான் எனக்கு பயங்கர ஆத்திரம் வந்திருச்சு, அதோட தண்ணியும் சேர்ந்ததும் கண்மண்ணு தெரியாம பேசிட்டேன், நீ அடிச்சதுக்கு அப்புறம்தான் என்ன பேசினோம்னே உறைச்சது ” என்று மூர்த்தி வருத்தமாக சொல்ல...

உடனே சத்யனின் முகம் கனலானது “ அவன் வேலைதானா இவ்வளவும்,, ராஸ்கல் ஜெயில் சமையலறையில அவன் செய்த சில் தப்பை நான் ஜெயிலர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணேன்னு என்னைப்பத்தி உங்ககிட்ட இப்படி சொல்லிருக்கான்பா” என்று சத்யன் வேதனையுடன் சொன்னான்

“ அவன் சொன்னாக்கூட எனக்கு எங்கடா போச்சு புத்தி, நம்ம மகன் அந்த மாதிரி செய்வானான்னு யோசிக்கனும்ல, யோசிக்காம பேசினது தப்புதான் சத்யா” என்றார் மகனிடம் மன்னிப்பு கோரும் குரலில்

தன் தோளில் இருந்த அவர் கைமேல் தனது கையை வைத்த சத்யன் “ சரி விடுங்கப்பா இனிமே அதைப்பத்தி பேசவேண்டாம்” என்று சத்யன் ஆறுதலாய் சொன்னான்..

“ இருந்தாலும் உன்மேல எனக்கு இன்னும் கோபம் குறையலைடா” என்று மூர்த்தி கோபமாக கூற...... “ ஏன்பா” என்றான் சத்யன் பரிதாபமாக

“ பின்ன என்னடா... போலீஸ் உத்யோகம் பார்க்குற. ஒரு நாளைக்கு எவ்வளவு பிரச்சனைகளை பார்க்கிற, ஆனா உன் விஷயத்துல நீ இவ்வளவு அலட்சியமா இருந்தது ரொம்ப தப்பு, ஒன்னு அந்த பொண்ணை நேரா நம்ம வீட்டுக்கு கூட்டிவந்திருக்கனும். இல்லையா மொதல்லயே எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிருக்கனும், நீ மொதல்லயே இதை செய்திருந்தா இப்போ இவ்வளவு நெருக்கடி வந்திருக்காது, இன்னும் கல்யாணத்துக்கு ஐஞ்சு நாள்தான் இருக்கு, என்னாகுமோன்னு இந்த பயம் தேவையாடா?” என்று மூர்த்தி கோபமாக சொல்ல,,

“ இல்லப்பா பாகியோட கல்யாணம் நின்னுடுமோன்னு தான்........” என்று சத்யன் குற்றவுணர்வுடன் கூற...

“ இப்ப மட்டும் நிக்காதா என்ன? நீ சொல்லாம எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்?” என்றார் மூர்த்தி

சத்யன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க... “ சரி விடு சத்யா.. நேத்து முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார், அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்த ஏற்பாடு பண்ண சொல்லிருக்கேன், அவங்க அப்பா பெங்களூர் போயிருக்காராம், வந்ததும் சொல்லி ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்” என்று மூர்த்தி சொன்னதும்

சத்யன் வண்டியை முற்றிலும் நிறுத்தியே விட்டான் பின்புறமாக திரும்பி உதடுகள் துடிக்க “ அப்பா” என்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டான்..
மகன் கையை அழுத்திய மூர்த்தி “ உனக்காக இல்லேன்னாலும் அந்த பொண்ணுக்காக செய்துதான் ஆகனும் சத்யா, என்னை எனக்கே உணர்த்திட்டுப் போனவடா அவ, ரொம்ப நல்ல பொண்ணு சத்யா” என மான்சியைப் பற்றி மூர்த்தி கூறியதும் ,

சத்யன் முகத்தில் பெருமை கலந்த புன்னகை “ ஆமாப்பா ரொம்ப நல்லவ, அவளோட குணம்தான் என்னை அவகிட்ட ஈர்த்ததே” என்றான்

“ இன்னொரு விஷயம் சத்யா, நான் மாப்ள கிட்ட விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட பாகி சொல்லிட்டாலாம்... அதுவும் எப்படி சொல்லிருக்கா தெரியுமா. ‘ எங்க அண்ணனோட வாழ்க்கையை அழிச்சிட்டு எனக்கு கல்யாணம் வேனாம், இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ராமுவைப் பார்த்து சொல்லிருக்கா. சத்யா” என்று மூர்த்தி சொன்ன அடுத்த நிமிடம் சத்யனுக்கு கண்கள் கலங்கிவிட்டது,


மகனின் நிலை புரிந்த மூர்த்தி, “ நமக்கு சொத்து சொகம் இல்லாடியும் கூட இந்த மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க பாசம் போதும்டா” என்றார் கரகரத்த குரலில்

“ ஆனா அம்மாப்பா...?” என்று சத்யன் கவலையோடு நிறுத்த..

மூர்த்தியின் முகமும் மாறியது “ அம்மா ம்ஹ்ம்.... சத்யா எனக்குத் தெரிஞ்சு அம்மாக்கு உன்மேலயோ மான்சி மேலயோ எந்த கோபமும் இல்லை, ஆனா உங்களை ஏத்துக்கிட்ட பாகியோட கல்யாணம் நின்னு போயிடுமோன்னு பயப்படுறான்னு நெனைக்கிறேன் சத்யா, மத்தபடி உங்களை ஏத்துக்கிறதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எதைவச்சு சொல்றேன்னா..... இப்பல்லாம் நான் அருண் பாகி மூனுபேரும் மான்சி கதிரவனைப் பத்தி பேசி சிரிச்சா உன் அம்மா கோபப்படுறதே இல்லை சத்யா, அதனால பாகி கல்யாணம் முடியிற வரைக்கும் நீ வெயிட் பண்ணிதான் ஆகனும்” என்றார்

அதன்பின் இருவரும் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசியபடி மேலும் சிலருக்கு பத்திரிகை வைத்துவிட்டு இறுதியாக துரையின் வீட்டுக்கு வந்தனர், துரைக்கு அப்பாவின் கையால் பத்திரிகை கொடுத்தால்தான் மரியாதை என்று சத்யன் கருதியதால் மூர்த்தியும் ஒத்துக்கொண்டு சத்யனுடன் வந்தார்

மாலை ஆறு மணி ஆகிவிட துரை வீட்டில் தான் இருந்தார், அப்பா மகன் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை, ரமா காபி எடுத்துவரும் படி கூறிவிட்டு மூர்த்தியின் கையைப் பிடித்து சோபாவில் அமர்த்தினார்..

வரும் வழியில் வாங்கிவந்த வாழைப்பழம் வெற்றிலைபாக்கு தேங்காய் என எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து அதன்மேல் பத்திரிகையை வைத்து மூர்த்தி,, துரை தம்பதிகளிடம் கொடுக்க, துரை தனக்கு மூர்த்தி கொடுத்த மரியாதையில் ரொம்பவே மகிழ்ந்து போனார்,

காபி குடித்து முடித்ததும் மூர்த்தி “ கிளம்புறேன் துரை கல்யாணத்துக்கு நேரா மண்டபத்துக்கு வராம, முன்னாடியே வீட்டுக்கு வந்து பாக்யாவோட எல்லாரும் போகனும்னு கேட்டுக்கிறேன்” என்று சொல்ல..

“ அய்யோ அதை நீங்க சொல்லனுமா... நாங்க வீட்டுக்குத்தான் வருவோம்” என்று ரமா கூறியதும் ..

“ ஏன் சத்யா, உன்னோட ப்ரண்ட் அரவிந்தன் வீடு எங்க இருக்கு இப்ப போய் பத்திரிக்கை குடுத்துடலாமா?” என்று சத்யனைப் பார்த்து மூர்த்தி கேட்க...

“ இல்லப்பா நேத்து நானும் அருணும் அரவிந்தன் வீட்டுக்குப் போய் அவன் அம்மாகிட்ட குடுத்துட்டோம்” என்றான் சத்யன்

“ அப்ப சரி நான் கிளம்புறேன்” என்று வாசலை நோக்கி நடந்தார்
புன்னகையோடு மூர்த்தி கிளம்ப “ என்ன மூர்த்தி சார்.. மருமகளையும் பேரனையும் பார்க்காமலேயே கிளம்புறீங்க” என்று துரை கேட்க...

வாசல்வரை சென்றவர் நின்று திரும்பி “ மருமகளையும் பேரனையும் பார்க்க எனக்கு ஆசையாத்தான் இருக்கு துரை, ஆனா என் பொண்டாட்டியோட வார்த்தைக்கு நான் மரியாதை குடுக்கனுமே, எப்போ அவளே வந்து மருமகளை கூப்பிட வர்றாளோ அப்ப நானும் வர்றேன் துரை” என்று மூர்த்தி கூறியதும் சத்யன், துரையும் அதை ஒத்துக்கொள்வது போல் தலையசைத்தார்

மூர்த்தி வெளியே வந்ததும், சத்யன் “ பைக்லயே வாங்கப்பா ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடிச்சு ஏத்தி விடுறேன்” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய மூர்த்தி பின்னால் அமர்ந்து கொண்டான்

ஆட்டோ ஸ்டாண்ட் போகும் வரை அமைதியாக இருந்த மூர்த்தி, அங்கே பைக்கை விட்டு இறங்கியதும் மகனின் கையைப்பிடித்துக்கொண்டு “ இன்னைக்கு எத்தனை வாட்டி நீ அப்பா அப்பான்னு கூப்பிட்ட சத்யா, நீ என்னை அப்பான்னு கூப்பிட்டே ரொம்ப நாளாச்சுடா, இத்தனை நாளா நீ வர்ற நேரம் நான் விழுந்து கிடப்பேன், நீ கிளம்புறதுக்கு முன்னாடி நான் கிளம்பிருவேன், இனிமே அப்படியிருக்காது சத்யா” என்று குரல் தழுதழுக்க கூறினார்



“ எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்பா, இடையில் நீங்க ரொம்ப குடிக்க ஆரம்பிச்சதும் தான் மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு, இப்போ குடிக்கிறதில்லைன்னு அருண் சொன்னான், மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா” என்றான் சத்யன்

“ ம்ம், இனிமேல் மாறமாட்டேன்னு நினைக்கிறேன், ஏன்னா வரப்போற மருமக மதிக்கனும்ல” என்றவர் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டு “ சத்யா பாகிக்கு இன்னும் நாலு பவுன் வளையல் மட்டும் பாக்கி இருக்கு, என்னோட ஆபிஸ்ல லோன் கேட்டேன், ஆனா அடுத்த மாசம்தான் கிடைக்கும் போலருக்கு, தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது கடன்தான் வாங்கி சமாளிக்கனும், எப்படியும் ஒரு லட்சம் தேவைப்படும்” என்று கவலையுடன் மூர்த்தி சொல்ல..

“ ஆமாப்பா, நானும் அதான் யோசிச்சேன், துரை சார் ஏதாவது வேனும்னா கேளுடான்னு முன்னாடியே சொல்லிருந்தாரு, நான்தான் சங்கடப்பட்டு கேட்கலை, இப்போ அவர்கிட்ட தான் கேட்கனும் வேற வழியில்லை” என்று சத்யன் கூறினான்

“ சரி சத்யா பார்த்து ஏதாவது ஏற்பாடு பண்ணு, என் ஆபிஸ்ல லோன் பணம் வந்ததும் குடுத்துடலாம்” என்று கூறிவிட்டு மூர்த்தி கிளம்பினார்

“ உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

“ ஒரு கதை என்றும் முடியலாம்...

“ முடிவிலும் ஒன்று தொடரலாம்...

“ இனியெல்லாம் சுகமே..


No comments:

Post a Comment