Monday, November 2, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 6



அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த மான்சி கண்ணீருடன் தலையசைத்து அவனது கையில் தனது நடுங்கும் கையை வைத்து உறுதியளிக்க... சத்யன் அப்படியே அவள் கையே எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ தாங்க்ஸ் மான்சி” என்றான் உணர்ச்சியில் கரகரத்த குரலில்...

சிறிதுநேரம் அங்கே மவுனம் ஆட்சி செய்ய இருவரின் விழிகளும் நேருக்குநேர் சந்தித்து புரியாத பாஷையில் பேசிக்கொண்டன, சத்யன் அவள் கையை தன் நெஞ்சிலிருந்து விலக்கி குழந்தையின் மீது மென்மையாக வைத்துவிட்டு குனிந்து அந்த கையில் தனது கன்னத்தைப் பதித்தபடி குழந்தைக்கு முத்தமிட்டு நிமிர்ந்தான், பிறகு பார்வையாலேயே அவளிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தான்

அந்த கைதிக்கு இரண்டாவது பாட்டில் குளுகோஸ் முடியும் தருவாயில் இருக்க... சத்யன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்து “ மேடம் நான் இப்போ மான்சியை கூட்டிட்டுப் போக முடியாது, கைதியை ஜெயிலர்கிட்ட ஒப்படைச்சிட்டு ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு வர்றேன், அதுக்கு எப்படியும் நாலுமணி நேரம் ஆகும், அதுவரைக்கும் மான்சியையும் குழந்தையையும் பார்த்துக்கங்க” என்று வேண்டி கேட்க..

“ கண்டிப்பா கவனமா பார்த்துக்கிறோம் சத்யன்,, நீங்க போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்று புன்னகையுடன் கூறினார் அந்த மருத்துவர்

இன்னொரு கான்ஸ்டபிள் ஊர்சுற்றிவிட்டு வந்துவிட சத்யன் கைதியுடன் கிளம்பினான்,

இரண்டு பஸ்கள் மாறி சிறைச்சாலைக்கு வந்த சத்யனுக்கு வழியெல்லாம் பெரும் குழப்பம் ‘ என்கூட கிளம்பி வர தயாரா இரு என்று மான்சியிடம் வீம்பாக பேசிவிட்டு வந்தாச்சு, ஆனால் அவளை எங்கே அழைத்து வருவது, மான்சியுடன் வீட்டுக்குப் போனால் அடுத்த நிமிடம் பாகியின் திருமணம் நின்று குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கே கேரண்டி இல்லாமல் போய்விடும், வேறு யார் வீட்டுக்கு போவது, மீண்டும் அரவிந்தன் வீடு சரி வராது?,, சிறு குழந்தையுடன் ஹோட்டலிலும் தங்கவைக்க முடியாது? என்ன செய்யலாம் என்ற குழப்பத்துடனேயே கைதியை ஒப்படைத்துவிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே வந்தான்

உடன் வேலை செய்பவர்களிடம் உதவி கேட்கலாம் என்றால் எல்லோரும் காவலர்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள், அங்கே யார் வீட்டிலும் மான்சியை கொண்டு வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது, வெளியே வீடு எடுத்து குடியிருப்பது சத்யன் குடும்பம் மட்டும் தான், அதுகூட மூர்த்திக்கு பயந்துதான், யோசனையுடன் சிறை வளாகத்தில் நடந்தவன் எதிரே கான்ஸ்டபிள் துரைராஜ் வந்தார் ,, துரை சத்யனைவிட எட்டு வருடங்கள் சீனியர் காவலர், அவரைப் பார்த்ததும் தான் சத்யனுக்கு ஞாபகம் வந்தது அவர் காவலர்கள் குடியிருப்பில் இல்லை என்று,,... தனது தகப்பனார் கட்டிய வீட்டை பிரிய மனமின்றி சொந்த வீட்டிலேயே வசிப்பவர், சத்யன் மீது அன்பும் அக்கரையும் கொண்ட நல்ல மனிதர்,

சத்யனை கடந்துபோன துரை சற்று நின்று “ என்னா சத்யா, கைதியை பரோல்ல கூட்டிட்டுப் போக இன்னிக்கு நீ மாட்டிக்கிட்டப் போலருக்கு,, போன ஊர் ஏதோ கிராமமாமே ரொம்ப அலைச்சலா சத்யா?” என்று குரலில் அக்கரையுடன் கேட்க...

“ ஆமாண்ணே ரெண்டு பஸ் மாறி போனோம்” என்றவன் சற்று தயங்கி நின்று “ அண்ணே உங்ககிட்ட ஒரு உதவி கேட்கனும் என்று தயங்கித்தயங்கி கேட்டான்

அங்கிருந்து கிளம்ப நினைத்தவர் மறுபடியும் நின்று “ என்ன சத்யா தங்கச்சி கல்யாணத்துக்கு ஏதாவது உதவி வேனுமா?” என்று கேட்க

“ இல்லண்ணே இது வேற, எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்திக்கு கொஞ்சநாள் தங்க இடம் வேனும், அவளுக்கு யாருமே இல்லை, இப்பதான் குழந்தைப் பிறந்திருக்கு அதனால வேற எங்கயும் தங்க வைக்க முடியாது, உங்களுக்கு தெரிஞ்ச இடம் எங்கயாவது சொல்லிவிடுங்கண்ணே” என்று சத்யன் மெல்லிய குரலில் சொல்ல...

துரை இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகத்தில் இருந்த அதிர்ச்சியே சொன்னது “ என்னடா பொண்ணா? யாரு அது? குழந்தை.................?” என்று துரை முடிக்காமல் நிறுத்தினார்...

சத்யன் தன் ஷூவைப் பார்த்தபடி “ அண்ணே நம்ம ஏழாவது ப்ளாக்ல போன மாசம் முகுந்தன்னு ஒருத்தன் செத்துட்டான்ல அவனோட ஒய்ப் தான்ண்ணே இந்த பொண்ணு, குழந்தை முகுந்தனோடது,, பாவம் அவன் செத்ததும் ஆதரவில்லாம இருந்துச்சு முகுந்தனை அடக்கம் பண்ண நான்தான் எல்லா ஹெல்ப்பும் பண்ணேன், இப்போ பச்சை குழந்தையோட ஆதரவில்லாம நிக்கிது, என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியாது, வேற யார்கிட்டயும் உதவி கேட்க முடியலை, நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் ப்ளீஸ்ண்ணே” என்று சத்யன் கெஞ்சலாக பேச....

அவனை கூர்ந்துப் பார்த்த துரை “ சரி சத்யா உதவி பண்ணலாம்,, ஆனா அவளுக்காக நீ ஏன் இவ்வளவு கெஞ்சுற, எத்தனையோ கைதிகள் சாவுறான், எத்தனையோ பொண்ணுங்க நிர்க்கதியா நிக்குது, அதுல இவ மட்டும் என்ன இவ்வளவு முக்கியம்?” என்று கேள்வி என்ற பெயரில் சத்யனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்

கம்பீரமாக கருப்பண்ணசாமி போல நின்ற அவர் முன்பு சத்யன் டீனேஜ் பையனைப் போல நெளிந்தபடி “ ஆமாம்ண்ணே இவ எனக்கு ரொம்ப முக்கியம்தான்,, இவ மட்டும்........ வேற எதுவும் கேட்காதீங்கண்ணே” என்றான் சங்கடமாக

சிறிதுநேரம் அவனையே அமைதியாகப் பார்த்த துரை “ எனக்குத் தெரிஞ்ச வேற யார் வீட்டுலயும் அந்த பொண்ணை தங்க வைக்கமுடியாது, அப்புறம் உன் அக்கா என்னை வெளக்குமாத்தால அடிப்பா,, என் வீட்டுலயே மொட்டை மாடில தென்னங்கீத்துப் போட்டு ஒரு ரூம் இருக்கு அங்க வேனா தங்க வைக்கலாம், ஆனா உன் அக்காகிட்ட நீதான் பேசனும்” என்று துரை சொல்லி முடிக்கவும்

சத்யன் அவர் கைகளைப் பற்றிக்கொண்டான் “ அண்ணே ரொம்ப நன்றிண்ணே, அக்காகிட்ட நான் வந்து பேசுறேன், இன்னும் கொஞ்சநேரத்துல அவளைக் கூப்பிட வர்றேன்னு சொல்லிருக்கேன், சீக்கிரமா அக்காகிட்ட பேசி பர்மிஷன் வாங்கலாம்ண்ணே” என்று சத்யன் அவரை அவசரப்படுத்த

“ இருடா போய் ஒன்னவர் பர்மிஷன் போட்டுட்டு வர்றேன்” என்று சிரித்தபடி அலுவலக அறைக்குப் போனார் துரை

சற்றுநேரத்தில் வெளியே வந்தவர் “ வா உன் பைக்லயே போகலாம்” என்று பார்க்கிங் ஏறியாவுக்கு நடந்தார்

சத்யன் பைக்கை ஓட்ட பின்னால் அமர்ந்த துரை “ சத்யா நடந்ததை நீ முழுசா சொன்னாதான் நான் உங்கக்கா கிட்ட பேசமுடியும்” என்று துரை கேட்க

பைக்கை மெதுவாக செலுத்திய சத்யன் மான்சியை சந்தித்த முதல் நாளில் இருந்து, முகுந்தன் இருந்தது, அவன் உடலுக்கு சத்யன் கொல்லி வைத்தது, அரவிந்தன் வீட்டில் மான்சியை தங்கவைத்தது, அங்கிருந்து மான்சி காணாமல் போனது, அவளைத் ஊர் ஊராக அலைந்தது, சற்றுமுன் அந்த கிராமத்து மருத்துவமனையில் மான்சியை கண்டுபிடித்தது வரை அனைத்தையும் விவரமாக சொன்னான்...

எல்லாவற்றையும் கேட்ட துரை, “ சரி சத்யா, அந்த பொண்ணோட மனசுல என்ன இருக்குன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்க

“ இல்லண்ணே உதவி செய்த நல்லவனாத்தான் என்னை நினைக்கிறா, ஆனா போகப்போக என் மனசை அவளுக்குப் புரிய வச்சிடுவேன், அவளும் புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான்

“ ஆனா நமக்கு வேற சிக்கல் ஒன்னு இருக்கு சத்யா,, அந்த பொண்ணு ஒரு கைதியோட பொண்டாட்டின்னு தெரிஞ்சா உன் அக்கா என்னையும் சேர்த்து வெளிய துரத்திடுவா,, அவளை உன் காதலியாத்தான் வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போகமுடியும், இதுக்கு வேனா ஏதாவது பொய்ய சொல்லி சமாளிக்கலாம், அதாவது அந்த குழந்தையும் உன்னோடதுன்னு தான் நாம சொல்லனும், நீ என்ன சொல்ற சத்யா?” என்று துரை கேட்க...

சத்யன் எந்தவித யோசனையும் இன்றி “ சரி அப்படியே சொல்லலாம்ண்ணே” என்றான்

பைக் துரை வீட்டு வாசலில் போய் நிற்க, இருவரும் இறங்கி வீட்டுக்குள் போனதும் ஹாலில் அமர்ந்து தன் மகளுக்கும் மகனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த துரையின் மனைவி ரமா இருவரையும் பார்த்து வேகமாக எழுந்து “ அடடா சத்யனா வா வா, பார்த்து ரொம்ப நாளாச்சு, அம்மா தங்கச்சி தம்பி எல்லாம் நல்லாருக்காங்களா?” என்று அன்புடன் விசாரிக்க

சோபாவில் அமர்ந்து துரையின் ஆறு வயது மகள் சோனியாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “ எல்லாரும் நல்லாருக்காங்க அக்கா, தங்கச்சிக்கு இன்னும் மூனு மாசத்துல கல்யாணம் வச்சுருக்கோம் ” என்று சத்யன் புன்னகையுடன் சொன்னான்


சத்யன் பக்கத்தில் வந்து அமர்ந்த துரை “ ரமா விசாரிப்பு எல்லாம் பிறகு வச்சுக்கலாம், இப்போ அர்ஜண்டா ஒரு உதவி கேட்டு நம்மகிட்ட வந்திருக்கான், நீதான் உதவி செய்யனும்” என்று நேரடியாக கூறினார் துரை

எதிர் சோபாவில் அமர்ந்த ரமா “ என்னங்க என்ன விஷயம், சத்யனுக்கு உதவாம வேற யாருக்கு உதவப்போறேன்” என்றவள் சத்யன் பக்கம் திரும்பி “சொல்லு சத்யா என்ன விஷயம்” என்று கேட்க

சத்யன் தயக்கமாக துரையைப் பார்க்க,, “ சரி நானே சொல்றேன்” என்ற துரை மனைவியிடம் திரும்பி “ ரமா சத்யா மான்சின்னு ஒரு பொண்ணை விரும்புறான்,, அந்த பொண்ணுக்கு யாருமில்லை, தங்கியிருந்த சொந்தக்காரங்க வீட்டுல இருந்து வெளிய அனுப்பிட்டாங்களாம், இப்போ கல்யாணம் பண்ணிகிட்டு வீட்டுக்கு கூட்டிட்டுப் போகவும் முடியாது, அப்புறம் அவன் தங்கச்சி கல்யாணம் சிக்கலாயிடும் , அதனால அந்த பொண்ணு தங்க இடமில்லாம நம்மகிட்ட உதவி கேட்டு வந்திருக்கான், நானும் நம்ம வீட்டு மாடியில இருக்குற ரூமை உன்னை கேட்டுகிட்டு குடுக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன் ” என்று துரை கூறியதும்

“ அதுக்கென்னங்க அவங்க எவ்வளவு நாளைக்கு தங்கனுமோ தங்கட்டும், நான் என்ன சொல்லப்போறேன், சத்யன் என் தம்பி மாதிரி ” என்று ரமா புன்னைகையுடன் சம்மதம் கூற

“ ம்ம் எல்லாம் சரி ஆனா உன் தம்பி ஏடாகூடமா இன்னொரு வேலையும் செய்திருக்கான்” என்று துரை இழுக்க

“ என்ன ? என்ன பண்ணிட்டாப்ல?” என்று ரமா அவசரமாக கேட்க

“ ஏய் பசங்களா ரெண்டுபேரும் வெளியப் போய் கொஞ்ச நேரம் விளையாடுங்க” என்று மகனையும் மகளையும் வெளியே அனுப்பிவிட்டு “ ம் ரெண்டுபேரும் ரொம்ப அவசரமா கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்துக்கிட்டாங்க, இப்போ குழந்தை பிறந்து பத்துநாள் ஆச்சாம், எனக்கே இப்பதான் தெரியும், அதனாலதான் உங்ககிட்ட கேட்டுதான் எந்த முடிவும் சொல்வேனு சொல்லி கூட்டிட்டு வந்தேன் ” என்று துரை பொய்யை சரளமாக சொல்ல, சத்யன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்

திகைப்பில் வாய் பிளந்த ரமா சத்யனைப் பார்த்து “ அடப்பாவி நீ இவ்வளவு பெரிய திருடனா? பார்க்க எவ்வளவு அப்பாவி மாதிரி இருக்கடா?” என்று கேட்க

சத்யன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு “ ஸாரிக்கா, இதுக்காக வீடு இல்லேன்னு சொல்லிராதீங்க, பாக்யா கல்யாணம் முடிஞ்சதும் நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம் அக்கா” என்று கெஞ்சினான்

சிறிதுநேரம் அமைதியாக யோசித்த ரமா பிறகு “ சரி சத்யா எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு, நீ போய் அவளை கூட்டிட்டு வா, நான் மாடிக்கு போய் ரூமை சுத்தம் பண்ணி வைக்கிறேன்” என்று முழுமனதுடன் சம்மதம் கூற ..

சந்தோஷத்தில் வேகமாக எழுந்த சத்யன் ரமாவைப் பார்த்து கைகூப்பி “ ரொம்ப நன்றி அக்கா, எனனிக்குமே இந்த உதவியை மறக்கமாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க சொன்னான்

“ ச்சேச்சே என்ன சத்யா இதுக்குப் போய் கண்ணு கலங்கிகிட்டு, நீ எனக்கு தம்பி மாதிரி” என்று கூறிவிட்டு அவளும் கண்கலங்கினாள்

“ சரி சரி போதும், நேரமாச்சு குழந்தையை வேற தூக்கிட்டு வரனும், சீக்கிரமா கிளம்பு சத்யா” என்று சத்யனை தள்ளிக்கொண்டு வெளியே வந்த துரை “ டேய் மாப்ள நாம பொய் சொன்னா போதாது, அந்த பொண்ணு நம்மலை காட்டிக் குடுத்துடாம இருக்கனும், அதனால கார்ல வரும்போதே அந்த பொண்ணுகிட்ட எல்லாத்தையும் சொல்லி இங்க வந்து அதுக்கு தகுந்தா மாதிரி நடந்துக்கனும்னு சொல்லி கூட்டிட்டு வா, இல்லேன்னா நாம ரெண்டு பேர் கதியும் அரோகரா தான், உன் அக்காவோட மறுபக்கத்தை நீ பார்த்ததில்லையே, ம்ஹும் ஜாக்கிரதை” என்று துரை எச்சரிக்கை செய்ய,, சத்யன் மனசுக்குள் இருந்த குழப்பத்தை மறைத்து வேகமாக தலையசைத்தான்




துரையின் வீட்டிலேயே பைக்கை நிறுத்திவிட்டு, அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த டிராவல்ஸ் ஒன்றில் ஒரு இன்டிகா காரை வாடகைக்கு எடுத்துக்கொடுத்து சத்யனை அனுப்பி வைத்தார் துரை

சத்யனுக்குள் மீண்டும் குழப்ப மேகம் சூழ்ந்தது, மான்சியிடம் இதை எப்படி சொல்வது, இன்னும் அவ மனசே முழுசா தெரியாதப்ப, குழந்தையை கூட என்னுடையது என்று அவளை சொல்ல வைக்க முடியுமா? அதிலும் அவள் காப்பகத்தில் தங்குகிறேன் என்று சொன்னப்பிறகு, வீம்பா தடுத்து கூட்டிட்டுப் போய் இந்த மாதிரி பொய் சொல்ல சொன்னா ஒத்துக்குவாளா? அல்லது சரிதான் போடா என்று முரண்டுவாளா?, என்ற சிந்தனையுடனேயே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்

மான்சி தயாராக இருந்தாள், வேறு புடவைக்கு மாறி, தலைவாரி பின்னலிட்டு , தனது மற்ற உடைகளை பெட்டியில் மடித்து வைத்துக்கொண்டு, குழந்தையை புதிதாக ஒரு டவலில் சுற்றி மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், நிலவு நேரத்து வெள்ளை ரோஜாவை போல் பளிச்சென்று இருந்தாள்

அவள் அப்படி தயாராக இருந்தது சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது,, சத்யன் கதவருகிலேயே நின்று அவளை சிறிதுநேரம் ரசித்தான், பிறகு உள்ளே வந்து அவள் பெட்டியை எடுத்துக்கொண்டு, அவளை நோக்கி கையை நீட்டி “ வா மான்சி போகலாம்” என்றான்

மான்சி அவனைப் பார்த்து புன்னகைத்தாளே தவிர கையைப் பற்றவில்லை, குழந்தை தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவனுடன் வெளியே வந்தாள்,

இருவரும் மருத்துவர் அறைக்கு வந்தபோது அவரே எழுந்து வந்து அவர்களை வரவேற்று “ என்னோட ட்யூட்டி டைம் முடிஞ்சுபோச்சு, நீங்க வருவீங்கன்னு சொன்னதால்தான் வெயிட் பண்ணேன்” என்றவர் மான்சியிடம் ஒரு கவரை கொடுத்து “ இது பிரசவமான பெண்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகை பத்தாயிரம் ரூபாய் இருக்கு, இதை செலவுக்கு வச்சுக்க மான்சி” என்றார்

மான்சி பணத்தை வாங்கி சத்யனிடம் கொடுக்க, அவன் அதை அவள் பெட்டியில் வைததான், இருவரும் மருத்துமனையில் இருந்து விடைபெற்று காரில் வந்து ஏறினர்

மான்சிக்கு பக்கத்தில் அமர்ந்த சத்யன், குழந்தையை அவளிடமிருந்து வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டான், ஒரு ரோஜா குவியலை மடியில் தாங்கிய உணர்வு சத்யனுக்கு

கார் வேலூரை நோக்கி புறப்பட்டது,, துரையின் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு மான்சியிடம் நிலைமையை சொல்லிவிட வேண்டுமே என்ற பதட்டம் சத்யனுக்கு, குழம்பி தவித்து இறுதியாக கார் டிரைவரை பார்த்து “ டிரைவர் காரை கொஞ்சம் ஓரமா நிறுத்திட்டு நீங கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு வாங்க, நான் இவங்ககிட்ட பர்ஸனலா பேசனும் ப்ளீஸ் ” என்று சொன்னான் சத்யன்

“ ஓகே சார்” என்ற டிரைவர் காரை சாலையின் ஓரம் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு “ நான் போய் டீ குடிச்சிட்டு வர்றேன், நீங்க பேசிகிட்டு இருங்க சார்” என்று கூறிவிட்டு இறங்கி போனான்

டிரைவர் போனதும் மான்சி குழப்பத்துடன் சத்யனைப் பார்த்து “ நாம இப்போ எங்க போறம்?” என்றாள்

அவளே ஆரம்பித்ததும் சற்று தைரியமான சத்யன் “ என் வீட்டுக்கு இப்ப போகமுடியாது மான்சி, என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு அதனாலதான், என்கூட வேலை செய்ற துரை அண்ணன் வீட்டு மாடியில ஒரு ரூம் இருக்கு, அங்க உனக்கு தங்க ஏற்பாடு பண்ணிருக்கேன்” என்றான் சத்யன்

“ ஓ பரவாயில்லை, நல்லவேளை இடம் கிடைச்சதே போதும்,, குழந்தை கொஞ்சம் பெரிசானதும் நான் ஏதாவது வேலைக்கு போயி சமாளிச்சுக்கிறேன்” என்று மான்சி கூறியதும் ..

“ இல்ல......... மான்சி துரை அண்ணன் வீட்டுல தங்குறதுல ஒரு சின்ன சிக்கல்.” என்று சத்யன் தயங்க...

“ என்ன சிக்கல்? வாடகை அதிகமா?” என்று கவலையுடன் கேட்டாள் மான்சி

“ ச்சேச்சே அவங்க வாடகையெல்லாம் கேட்கலை,, என்றவன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு அவளை நேராகப் பார்த்து “ மான்சி நீ ஒரு கைதியோட மனைவின்னு தெரிஞ்சா துரையோட மனைவி தங்க இடம் கொடுக்கமாட்டாங்கன்னு நானும் துரையும் ஒரு பொய் சொல்லிருக்கோம் ” என்றான் சத்யன்

“ என்ன பொய்? ” கேள்வியுடன் மான்சியின் பார்வையும் சத்யனை துளைத்தது .

மடியில் இருந்த குழந்தையின் கைவிரல்களை மென்மையாக பற்றி வருடியபடி “ அதுவந்து............ நீயும் நானும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்னு சொல்லிட்டோம், அதுமட்டுமல்ல இவன் என் மகன்னு, எனக்கும் உனக்கும் பிறந்தவன்னு சொல்லிருக்கோம், என் தங்கச்சிக்கு கல்யாணம் என்பதால், உன்னை இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னும், அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொல்லிட்டேன், அப்புறமா தான் அந்தக்கா வீடு தரவே சம்மதிச்சாங்க” என்று மொத்தத்தையும் சொன்னவன் அவளைப் பார்த்து

“ மான்சி உன்னை கேட்காம நானா சொன்னது தப்புதான், ஆனா நமக்கு வேற வழியில்லை, இந்த ராத்திரியில சின்ன குழந்தையோட எங்கயும் வீடு தேடி அலைய முடியாது, அதோடில்லாம அந்தக்கா ரொம்ப நல்லவங்க, உனக்கும் அங்கதான் பாதுகாப்பா இருக்கும் , அதான் துணிஞ்சு இந்த பொய்யை சொன்னேன், ஸாரி மான்சி ” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்காக அவள் முகத்தையேப் பார்த்தான் சத்யன்


மான்சி பதில் சொல்லவில்லை, காருக்குள் இருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் விழிகள் குளமானது தெளிவாக தெரிந்தது, சற்றுநேரத்தில் அவளிடமிருந்து மெல்லிய விசும்பல் கேட்க, சத்யன் பதறினான் “ மான்சி ஸாரி மான்சி, தப்புதான், வேற வழியில்லாம தான் அப்படி சொன்னேன்” என்று கெஞ்சினான்

சற்றுநேரத்தில் தானாகவே சமாதானம் ஆகி முந்தானையால் கண்ணீரை துடைத்த மான்சி “ டிரைவரைக் கூப்பிட்டு வண்டியை எடுக்க சொல்லுங்க நேரமாகுது” என்றாள்

அவள் வார்த்தையில் உற்சாகமான சத்யன் “ மான்சி” என்று அழைத்து அவள் கையை எட்டி பிடித்தான்.

மெதுவாக அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டவள் “ கிளம்பலாம்” என்றாள்

அவள் கையை உருவிக்கொண்டது ஏமாற்றமாக இருந்தாலும், சரியென்று தலையசைத்து டிரைவரை கூப்பிட திரும்பியவன், மறுபடியும் ஏதோ ஞாபகம் வந்து மான்சியின் பக்கம் திரும்பி “ மான்சி நாங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி நீயும் நடந்துக்கனும், எஙகளை காட்டிக் குடுத்திடாதே” என்றான் மெதுவாக

அதற்கு மான்சியிடம் எந்த பதிலும் இல்லை, சிறிதுநேரம் அவள் முகத்தையே பார்த்திருந்துவிட்டு சத்யன் டிரைவரை அழைத்து வண்டியை எடுக்க சொன்னான்

கார் துரை வீட்டுக்கு வெளியே சென்று நின்றபோது இரவு பதினோரு மணியாகியிருந்தது, தெருவில் சந்தடிகள் அடங்கியிருக்க சத்யன் மான்சியுடன் இறங்கினான் , சத்யன் மான்சியின் பெட்டியுடன் முன்னால் போக, மான்சி குழந்தையை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் போனாள்

“ ரெண்டுபேரும் அங்கயே நில்லுங்க” என்று வாசலோடு நிறுத்திய ரமா ஆரத்தித் தட்டுடன் வெளியே வந்து மான்சியைப் பார்த்து புன்னகையுடன் “ எங்க சத்யனோட முதல் வாரிசை பெத்து எடுத்துக்கிட்டு வந்திருக்க ஆரத்தி சுத்தாம உள்ள எப்படி கூட்டிட்டுப் போறது” என்று கூறிவிட்டு சத்யன் பக்கம் திரும்பி “ நீ ஏன்டா தம்பி தள்ளி நிக்கிற... வந்து பொண்டாட்டி புள்ளையோட சேர்ந்து நில்லு, மூனு பேருக்கும் சேர்த்தே திருஷ்டி எடுக்கிறேன்” என்று அன்பாக பேசி சத்யன் மான்சி இருவருக்கும் முதல் சத்தியசோதனையை வைத்தாள் ரமா

மான்சி சத்யனைப் பார்த்து பகபகவென விழிக்க, சத்யன் மான்சியைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புடன் “ நான் சொன்னேன்ல அக்கா ரொம்ப நல்லவங்கன்னு” என்று சம்மந்தமில்லாமல் கூறியபடி மான்சியின் அருகில் வந்து நின்றுகொண்டான்

துரை ரமாவுக்குப் பின்னால் நின்று இவர்களின் தவிப்பைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க, சத்யன் அவரைப் பார்த்து பொய்யாய் முறைத்தான்

ஆரத்தி சுற்றி அந்த நீரை தொட்டு திலகமில்லாத மான்சியின் நெற்றியில் வைத்த பிறகு கீழே ஊற்றிவிட்டு அவர்களை உள்ளே அழைத்துப்போய் சோபாவில் அமர வைத்த ரமா தயாராக இருந்த காபியை எடுத்துவந்து கொடுத்துவிட்டு, மான்சியிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டு “ பையன் அம்மா ஜாடை போலருக்கு” என்றுவிட்டு மான்சியைப் பார்த்து “ அடுத்தது எங்க சத்யன் ஜாடையில் ஒரு பொண்ணு பொத்து குடுத்துடு மான்சி” என்று கூறிவிட்டு சிரித்தாள்

மான்சி தலை சட்டென்று கவிழ்ந்தது,, சத்யன் சங்கடமாக நெளிந்தான், ஆனால் மனசுக்குள் கற்பனை ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியது

“ இன்னிக்கு இங்கயே படுத்துக்கட்டும் சத்யா, நாளைக்கு காலையில நல்லநேரம் பார்த்து மாடிக்குப் போய் பால் காய்ச்சிட்டு, அப்புறம் அங்கயே இருக்கட்டும்” என்று ரமா சொன்னதும், சத்யன் மான்சியைப் பார்க்க அவள் சரியென்று தலையசைத்தாள்



எழுந்துகொண்ட சத்யன் “ அக்கா நான் வீட்டுக்கு கிளம்புறேன், நாளைக்கு காலையில சீக்கிரமாவே வர்றேன், காலையில மொதல் வேலையா , மான்சி மொதல்ல குடியிருந்த ரூம்ல இருக்குற சாமானெல்லாம் அப்படியேதான் இருக்கு, அதையெல்லாம் நாளைக்கு எடுத்துட்டு வந்துர்றேன், அப்புறமா இன்னும் என்ன தேவையோ அதை வாங்கிக்கலாம்” என்றவன் மான்சியிடம் திரும்பி “ மான்சி நான் வீட்டுக்கு கிளம்புறேன், நீ தைரியமா இரு அக்காவும் துரை சாரும் ரொம்ப நல்லவங்க, நீ எதுக்காகவும் சங்கடப்படாத, நல்லா தூங்கு” என்று அன்பாக கூற

மான்சி அவனைப்பார்த்து தலையசைத்து “ நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துருங்க” என்றாள் மெல்லிய குரலில்

சத்யன் உதட்டில் தவழ்ந்த சிரிப்புடன் “ ம்ம் சீக்கிரமே வர்றேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்

பைக்கை எடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கிப் பறந்தவன் முகத்தில் இரவுநேர ஈரக்காற்று வந்து மோதியதும் உடல் சிலிர்த்தது.. மான்சியை முதன்முறையாக தொட்டபோது ஏற்பட்ட சிலிர்ப்பை அந்த ஈரக்காற்றும் ஏற்படுத்தியது 



No comments:

Post a Comment