Monday, November 2, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 4

அரவிந்தன் சத்யனிடம் அவன் டீசர்ட்டை கொடுக்க, வாங்கி அணிந்துகொண்டு வேட்டியை உருவி அங்கேயே போட்டுவிட்டு வெளியே வந்தான் சத்யன், சுடுகாட்டின் காம்பவுண்ட் சுவற்றில் சாய்ந்த மான்சி சோர்ந்துபோய் தொய்ந்து நின்றிருந்தாள், அவளின் கர்ப்பிணி வயிறு இருபத்துநாலு மணிநேரமாக உணவின்றி சுருண்டு இறங்கியிருந்தது, அங்காங்கே விழுந்து இருந்ததால் புடவை திட்டுத்திட்டாக அழுக்கும் கறையும் இருந்தது,

சத்யன் அருகே வந்த அரவிந்தன் “ சார் மான்சி இருக்குற வீட்டு ஓனர் இவ்வளவு சொன்னபிறகு மான்சியை அங்க தனியா விட வேண்டாம், என் வீட்டுல நானும் என் அம்மாவும் மட்டும் தான், மான்சியை நான் எப்பவுமே என் கூடப்பிறந்த தங்கச்சியாதான் நெனைப்பேன், அதனால பிரசவம் ஆகிற வரைக்கும் என் வீட்டுலயே தங்க வச்சுக்கிறேன், அப்புறமா ஏதாவது வீடு பார்த்து குடி வைக்கலாம் சார்” என்று சத்யன் மனதில் ஓடிய குழப்பத்துக்கு சுலபமாக தீர்வு சொன்னான்



சத்யன் உணர்ச்சி மேலீட்டால் அரவிந்தன் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான், “ நல்ல யோசனை அரவிந்த், மொதல்ல ஒரு ஆட்டோவுல மான்சி வீட்டுக்குப்போய் அவங்களுக்கு தேவையான துணிகளை எடுத்துகிட்டு அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு போகலாம்” என்று சத்யன் கூற.. அரவிந்தன் அதுதான் சரி என்றான்,,

மான்சியின் துணைக்கு ஒரு பெண்ணும் அரவிந்தனும் மட்டும் இருக்க, மிச்ச நபர்கள் சுடுகாட்டோடு கலைந்தார்கள், அரவிந்தன் ஒரு ஆட்டோ அழைத்து வர அனைவரும் மான்சியின் வீட்டுக்கு போனார்கள் சிறுசிறு வீடுகள் நிறைந்த காம்பவுண்ட் அது,

சத்யனும் மான்சியும் ஆட்டோவிலேயே அமர்ந்திருக்க.. அரவிந்தனும் அந்த பெண்ணும் மான்சிக்கு தேவையான துணிகளை பெட்டியோடு எடுத்து வந்தனர்,, ஹவுஸ் ஓனரின் அடக்குமுறைக்கு பயந்து அங்கிருந்த யாருமே ஆட்டோவில் இருந்த மான்சியை பார்க்கவில்லை

மறுபடியும் ஆட்டோ கிளம்பி அரவிந்தன் வீடு நோக்கி செல்ல, இரவாகிவிட்டதால் ஏதாவது உணவு வாங்கிக்கொண்டு போய் விடலாம் என்று ஒரு ஹோட்டலில் நிறுத்தி உணவு வாங்கிக்கொண்டு வந்தான் சத்யன்,

ஆட்டோ அரவிந்தன் வீட்டில் நின்று மான்சியுடன் இவர்கள் உள்ளே போன போது அரவிந்தன் அம்மா டிவி சீரியலில் வந்த வில்லனை அசிங்கமாக திட்டிக்கொண்டு இருந்தாள், அரவிந்தன் அவன் அம்மாவை எழுப்பி மான்சியின் நிலைமையை விளக்கமாகச் சொல்லி “ கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்மா, அதுக்கு வேற யாரும் இல்லைம்மா” என்று கெஞ்சுதலாக கூற

மான்சியை ஏற இறங்க பார்த்த அந்த பெண் “ இருக்குற வரைக்கும் சாப்பாட்டுக்கு தங்குறதுக்கு எல்லாம் காசு குடுத்துடு” என்று வியாபாரம் பேசினாள்

“ அதெல்லாம் குடுத்துடுவாங்க அம்மா, கொஞ்ச நாளைக்கு தான் பார்த்துக்கங்க ப்ளீஸ்மா” என்று சத்யன் கெஞ்ச..

“ சரி சரி இருக்கட்டும், மொதல்ல போய் குளிக்க சொல்லுடா அரவிந்தா ” என்று கூறிவிட்டு மறுபடியும் டிவியில் ஆழ்ந்தாள்

சத்யன் அரவிந்தனிடம் பார்வையால் கெஞ்ச, அவன் தன் நெஞ்சில் கைவைத்து ‘ நான் பார்த்துக்குறேன்’ என்று ஜாடை செய்தான், அரவிந்தன் குளியலறையை காட்ட அவர்களுடன் வந்த பெண் மான்சியை அழைத்துச்சென்று குளிக்கவைத்து உடை மாற்றி அழைத்து வந்தாள், அவளுடன் பொம்மை போல் வந்த மான்சியைப் பார்த்து சத்யனுக்கு உள்ளம் நொந்தது


மான்சியை அமரவைத்து வாங்கிவந்த இட்லியை சாப்பிடுமாறு சத்யன் சொல்ல மான்சி அமைதியாக வெறித்தபடி அமர்ந்திருந்தாள்,

“ இதோபாருங்க மான்சி நீங்க முழுசா ஒருநாள் முழுக்க சாப்பிடலை, அது உங்க வயித்துல இருக்குற குழந்தைக்கு எவ்வளவு ஆபத்துன்னு புரியுதா? ஏற்கனவே ஒரு இழப்பை ஜீரணிக்க முடியாத நீங்க மற்றொரு இழப்பை ஏத்துக்குவீங்களா? முடியாது தானே? தயவுசெஞ்சு சாப்பிடுங்க மான்சி” என்று சத்யன் சொல்லிகொண்டு இருக்கும்போதே அங்கு வந்த அரவிந்தன் அம்மா

“ இங்கபாரு பொண்ணு இந்த மாதிரியெல்லாம் பண்ணா இந்த வூட்டுல நீ இருக்க வேனாம், சோறு தின்ன உன்கிட்ட என்னால மல்லடிக்க முடியாது, ஒழுங்கா சாப்பிட்டுகிட்டு இருக்கறதானா இரு, இல்லேன்னா இவங்க கூடவே கிளம்பு” என்று கறாராக கூற...

கண்ணீருடன் தலையசைத்த மான்சி “ இல்லம்மா இதோ சாப்பிடுறேன்” என்று அவசரமாக இட்லிகளை விழுங்கினாள்

நிம்மதியுடன் எழுந்த சத்யன் “ மான்சி நான் கிளம்புறேன், நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு வருத்தமாக அவளை பார்க்க,,

அவள் பதிலுக்கு கைகூப்பி “ நீங்க செய்த உதவிகளுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னா போதாது” என்று கூறிவிட்டு தன் கண்ணீரை அவனுக்கு காணிக்கையாக்கினாள்

சத்யன் எதவும் கூறவில்லை, அரவிந்தனை தலையசைத்து வெளியே அழைத்துக்கொண்டு போனான் “ அரவிந்தா மான்சியை கொஞ்சம் கவனமா பார்த்துக்க, அவங்க இங்க இருக்குற வரைக்கும் மாசாமாசம் நான் சாப்பாட்டுக்கு பணம் குடுக்குறேன்” என்றவன், தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில் தனது செல் நம்பரை எழுதி “ இது என் போன் நம்பர், எதுவாயிருந்தாலும், எந்த நேரமாயிருந்தாலும் எனக்கு கால் பண்ணு, ஏன்னா நான் அடிக்கடி உன் வீட்டுக்கு வந்தா உங்கம்மா மான்சியை பத்தி தவறா நினைக்க வாய்ப்பு இருக்கு, அதனால உன் போன் காலை தினமும் எதிர் பார்ப்பேன் அரவிந்த்” என்று கூற..

“ நீங்க கவலைப்படாம போங்க சார் நான் பார்த்துக்கிறேன்,, தினமும் போன் பண்ணி மான்சி பத்தி தகவல் சொல்றேன்” என்று ஆறுதலாக கூறிய அரவிந்தன் தனது செல் நம்பரை சத்யனுக்கு கொடுத்தான்

சத்யன் மான்சியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் போது இரவு மணி ஒன்பதாகியிருந்தது, ஒரு ஆட்டோவில் மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து பார்க்கிங்கில் இருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்,

வீட்டுக்கு வரும்வரை வழி நெடுகிலும் மான்சியை தவிர வேறு எந்த எண்ணமும் அவன் மனதில் இல்லை, தினமும் வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடுவாளா? அந்தம்மாவை பார்த்தாலே ஒருமாதிரியா இருக்காங்க, அவங்க வீட்டுல மான்சிக்கு சரியான பாதுகாப்பு கிடைக்குமா? என்ற இரண்டு கேள்விகள் சத்யனின் மனதை குடைந்தது


நேற்று இதேநேரம் வரை சரிவர யாரென்று தெரியாத ஒரு பெண் இப்போது தன் நினைவுகளால் அவன் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, இருபத்துநான்கு மணிநேரத்தில் அவன் வாழ்வில் நடந்தவைகளை எண்ணி வியப்பாக இருந்தது,, அவளின் பாதுகாப்பு மட்டுமே உலகின் தலையாய விஷயமாக பட்டது, அது அவளுக்கு முழுமையாக கிடைக்கும் வரை தன்னால் நிம்மதியாக இருக்கமுடியாது என்றுணர்ந்தான்
வீட்டுக்கு வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு வழக்கம் போல வாசலில் கிடந்த மூர்த்தியை தாண்டி வீட்டுக்குள் நுழைந்து நேராக குளிக்கப் போனான்,

குளித்துவிட்டு வந்தவன் சிறைச்சாலைக்கு போன் செய்து ‘ தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அன்று இரவு பணிக்கு விடுமுறை சொன்னான்

“ என்னாச்சு அண்ணா காலையிலேருந்து வீட்டுக்கே வரலை” என்று பாக்யா கேட்க..

“ ஜெயில்ல ஒரு டெத் ஆயிருச்சும்மா அதான் வரமுடியலை, பசிக்குது சாப்பாடு வை பாகி” என்று கூறிவிட்டு உணவுக்காக தரையில் அமர்ந்துவிட,, பாக்யா வேறு எதுவும் கேட்காமல் சாப்பாடு எடுத்துவர ஓடினாள்

அன்று பிரதோஷம் என்று கோவிலுக்கு போய்விட்டு வந்த அம்மா சாந்திக்கும் அதே பதிலை சொல்லிவிட்டு, அமைதியாக சாப்பிட்டான், அவனுக்கு இருந்த அகோர பசியில் உணவு நிமிடத்தில் காலியானது

சாப்பிட்டுவிட்டு தட்டிலேயே கைகழுவிவிட்டு “ அம்மா ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒற்றை படுக்கையறையில் இருந்த கட்டிலில் விழுந்தான் சத்யன்

கண்களை மூடியதும் கண்ணுக்குள் மான்சி வந்தாள், அழுதாள், கெஞ்சினாள், மறுபடியும் அவனிடம் நன்றி சொன்னாள், அவளின் நினைவுகளுடனேயே தூங்கிப்போனான்

காலையில் அவன் எழுந்தபோது மணி ஏழாகியிருக்க, எழுந்ததும் அரவிந்தனுக்கு தான் போன் செய்தான், எதிர்முனையில் அரவிந்த் எடுத்ததும் “ அரவிந்த் மான்சி எப்படியிருக்காங்க? ,, நைட் நல்லா தூங்கினாங்களா? காலையில ஏதாவது குடிச்சாங்களா?” என்று சத்யன் அக்கரை மிகுதியால் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க

“ மான்சி நல்லாருக்கா சார், கொஞ்சநேரம் அழுதா, அப்புறம் நல்லா தூங்கிட்டா, இப்போ காபி குடுத்தேன் குடிச்சா, நான் காய்கறி வாங்க கடைக்கு வந்திருக்கேன், வீட்டுக்குப் போய் கால் பண்ணி மான்சிகிட்ட குடுக்குறேன் பேசுங்க ” என்று கூறிவிட்டு அரவிந்த் போன் காலை கட் செய்தான்

சத்யன் எழுந்து பல் விலக்கிவிட்டு வரவும் பாக்யா காபி எடுத்துவந்து கொடுக்க, சத்யன் காபி குடித்துக்கொண்டே வெளி வராண்டாவின் பக்கவாட்டில் இருந்த படிகளில் ஏறி மாடிக்கு சென்றான்

அப்போது அரவிந்தனிடம் இருந்து போன்கால் வர உடனே செல்லை ஆன் செய்த சத்யன் “ சொல்லு அரவிந்த்?” என்றான் 


சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ நான் மான்சி” என்றது மான்சியின் தேன் குரல்

சத்யன் ஒருநிமிடம் கண்மூடித் திறந்தான் பின்னர் “ எப்படியிருக்கீங்க மான்சி?” என்றான்

“ ம் நல்லாருக்கேன், நீங்க எப்படியிருக்கீங்க? ” என்றாள்
நீங்க எப்படியிருக்கீங்க என்று மான்சி கேட்டதும் சத்யனின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது “ நல்லாருக்கேன் மான்சி,, நடந்ததை மறந்து வேளைக்கு சரியா சாப்பிடுங்க,, நல்லா தூங்குங்க” என்று சத்யன் சொல்லச் சொல்ல அவளிடமிருந்து ம்ம் என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் சிலவிநாடிகள் இருவருமே மவுனம் காக்க “ சரி வச்சுரட்டுமா?” என்று மவுனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மான்சி

சத்யனும் வேறு வழியின்றி “ ம் சரி,, ஜாக்கிரதையா இருங்க மான்சி” என்று சத்யன் கூறிய அடுத்த நிமிடம் ‘ ம்ம்’ என்ற மான்சியின் பதிலுடன் இணைப்பு நின்றுபோனது

சத்யன் சிறிதுநேரம் தனது போனைப் பார்த்துவிட்டு, பிறகு கீழே வந்தான் ..
அதன்பிறகு சத்யன் எப்போது போன் செய்தாலும் வீட்டுக்கு வெளியில் இருப்பதாக அரவிந்தன் தான் பேசினான், ஒரிரு முறை வீட்டில் இருந்தபோது மான்சியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அப்போதெல்லாம் வழக்கம் போல ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேச்சை முடித்துக்கொண்டாள் மான்சி



ஒருமுறை நேரம் கிடைத்தபோது சத்யன் அரவிந்தன் வீட்டுக்குப் போய் மான்சியை பார்த்துவிட்டு வந்தான்,, முன்பிருந்த மான்சிக்கு மாற்றமேயல்லாமல் அப்படியே இருந்தாள், தரையைப்பார்த்தபடி இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினாள், சத்யனும் அரவிந்தன் அம்மாவுக்கு பயந்து அமைதியாக வந்துவிட்டான்

சத்யனுக்கும் பாக்யாவின் திருமண வேலைகளும் உத்யோகம் சம்மந்தமான நெருக்கடிகளுமாக மான்சியை மறுபடியும் சந்திக்க முடியாமல் போனது, போனில் தவறாமல் அரவிந்தனிடம் மான்சியைப் பற்றி விசாரித்தான், அவளிடம் பேசும் சிலநிமிடங்கள் அவனுக்கு கிடைத்த வரமாக எண்ணினான்

பாக்யாவுக்கும் ராமசந்திரனுக்கும் அடுத்த மூன்று மாதம் கழித்து கல்யாணத்துக்கு தேதி வைத்தார்கள், இதில் சத்யனுக்கு சந்தோஷம் தான் என்றாலும், திருமணத்திற்கு முதல்நாள் இரவு சத்யனுக்கும் அனுசுயாவுக்கும் நிச்சயதார்த்தம் செய்வது என்று மற்றொரு சொய்தியை சொல்லி சத்யனின் தலையில் இடியை இறக்கினார்கள்,

சத்யன் தன் மனதில் என்ன இருக்கிறது என்று தெளிவாகப் புரியாமல் தவித்து குழம்பினான், அவன் மறுத்து சொன்னால் அடுத்த நிமிடமே பாக்யாவின் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில் தனக்குள் துளிர்விட்ட காதலை உள்ளுக்குள் புதைத்தான், அதோடு மான்சியின் ஒதுக்கமும் அவனை சரியான முடிவுக்கு வரமுடியாமல் குழப்பியது

தோளில் குடும்ப பாரத்தையும், நெஞ்சில் ஒருதலையாய் பூத்திருந்த காதல் வேதனையையும் சுமந்து கொண்டு பொய்யாய் சிரித்து வளைய வந்தான், மனம் மான்சி மான்சி என்று கூக்குரலிட்டு கதற... அந்த சத்தம் வெளியே கேட்காமல் இருக்க சத்யன் பெரிதும் போராடவேண்டியிருந்தது


அவனுடைய துன்பத்திற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மேலும் ஒரு சம்பவம் அவனை உயிரோடு உலுக்கி எடுத்தது

முகுந்தன் இறந்து இருபது நாட்கள் ஆன நிலையில் ஒருநாள், அதிகாலை அரவிந்தனிடமிருந்து போன் வர தூக்க கலக்கத்தில் ஆன் செய்து “ சொல்லு அரவிந்த்?” என்றான்

எதிர்முனையில் அரவிந்தனின் குரல் கண்ணீருடன் “ சத்யா சார் நேத்து சாயங்காலத்துல இருந்து மான்சியை காணோம் சார்” என்று கூற

பட்டென்று தூக்கம் கலைய துடித்து நிமிர்ந்த சத்யன் “ என்ன சொல்ற அரவிந்த்? என்ன நடந்தது? எங்க போனாங்க?” என்ற சத்யனின் குரலில் அளவுகடந்த பதட்டம்

“ நேத்து சாயங்காலம் எங்க அத்தை ஒருத்தங்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, அவங்க என்னையும் மான்சியையும் சம்மந்தப்படுத்தி ஏதோ அசிங்கமா பேசிட்டாங்க, நான் அவங்களை நல்லா திட்டிட்டு வெளிய போயிட்டேன், திரும்ப வந்து பார்த்தப்ப மான்சியை வீட்டுல காணோம், துணியெல்லாம் எடுத்துகிட்டு எங்கயோ போயிருச்சு, நானும் நேத்து நைட்லேருந்து எங்க கூட வேலை செய்ற எல்லார் வீட்டுலேயும் தேடிட்டேன் சார் யார் வீட்டுக்கும் போகலை, கடைசியா வேற வழியில்லாம இப்போ உங்களுக்கு போன் பண்றேன்” என்று நடந்தவற்றை படபடவென்று அரவிந்த் சொல்ல

சத்யன் யாரோ தன் உயிரையே உருவி நெருப்பில் போட்டது போல் துடித்துப்போனான், எங்கே போனாள் மான்சி? “ சரி நீ அங்கேயே இரு, நான் இதோ வர்றேன்” என்றவன் முகத்தை கழுவிக்கொண்டு சட்டை பேன்ட்டை மாட்டிக்கொண்டு பாக்யா கொடுத்த காபியை கூட குடிக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்

அரவிந்தன் இருக்கும் தெருவின் அருகில் போகும்போதே அங்கே இருந்த அரவிந்தனைப் பார்த்து கையசைக்க, உடனே வந்து பைக்கில் ஏறிக்கொண்டான்,

“ ஏன் நைட்டே எனக்கு தகவல் சொல்லலை?” என்று சத்யன் கோபமாக கேட்க

“ சார் எங்ககூட வேலை செய்தவங்க யார் வீட்டுக்காவது போயிருப்பான்னு நெனைச்சேன் சார், அதனாலதான் சொல்லலை” என்றான் வருத்தமாக
இருவரும் மெயின்ரோடு வந்து எங்குபோய் தேடுவது என்று புரியாமல் குழம்பி நின்றார்கள்,, பிறகு ஒரு முடிவுடன் புறப்பட்டு பெண்கள் விடுதிகள், அனாதை ஆசிரமங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், என வேலூரில் இருக்கும் அத்தனை இடங்களிலும் மான்சியை தேடினார்கள், எங்கும் அவள் இல்லை

இரவு பதினோரு மணிக்கு சோர்வுடன் வீடு திரும்பிய சத்யன் பாக்யா கொடுத்த உணவை அரைகுறையாக சாப்பிட்டு விட்டு எதைப்பற்றியும் பேசாமல் போய் படுத்துவிட்டான், படுத்தானே தவிர உறங்கவில்லை, நாளை மான்சியை எந்த இடத்தில் தேடுவது என்று யோசித்தபடி படுத்திருந்தான்,

,ஒருவேளை வேறு ஏதாவது தவறான முடிவுக்கு போயிருப்பாளோ என்று அவனது போலீஸ் மூளை சில விபரீதமான எண்ணங்களை விதைக்க, மனதில் பயத்துடன் இரவு முழுவதும் மான்சியைப் பற்றிய சிந்தனையிலேயே கழித்தான்

மறுநாள் காலை தனது யூனிபார்மை அணிந்து கொண்டு அவன் டிப்பார்ட்மெண்ட் உதவியுடன் மருத்துவமனைகள், தாய்சேய் நலவிடுதிகள் என ஒரு ரவுண்டு தேடிப் பார்த்தான், அரவிந்தனை வேலூரின் சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தேடச் சொன்னான் , எங்குமே மான்சி இல்லை என்றதும் மனதை பயம் கவ்வியது, கடைசியாக மனதை கல்லாக்கிக்கொண்டு இரண்டு நாட்களாக தற்கொலை செய்துகொண்டவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் என அனைத்து மரணப் பட்டியலையும் அலசினான், அதில் மான்சியின் வயதை ஒத்து யாருமே இல்லை என்றதும் நிம்மதியாக மூச்சுவிட்டு, மறுபடியும் தேட ஆரம்பித்தார்கள்

இம்முறை கோயில்கள் மண்டபங்கள் என்று இருவரும் சுற்றித் திரிந்தனர், மான்சியைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றதும், சத்யன் முற்றிலும் தளர்ந்து போனான்

தான் அணிந்திருக்கும் யூனிபார்முக்கும் கண்ணீருக்கு சம்மந்தமில்லை என்று தெரிந்தும் சத்யனின் கண்கள் கண்ணீரை வழியவிட்டது மான்சிக்காக, அந்த கம்பீர ஆணின் கண்ணீர் அவன் உள்ளத்தில் இருப்பதை அப்பட்டமாக வெளியே காட்ட,, அரவிந்தனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் , இந்த உன்னதமான காதலை அனுபவிக்க மான்சி கிடைக்க வேண்டுமே என்று கவலையாகவும் இருந்தது



" என் காதல் பறவையே,,

" எனக்குள் உன் சிறகடிப்பு கேட்டபோதே...

" நான் நின்றிருக்க வேண்டும்!

" துரத்தும் உறவுகளுக்கு பயந்து ஓடினேன்....

" இப்போது உன் சிறகுகள் அடித்துக்கொள்ளும் ...

" சத்தம் எங்கோ கேட்கிறது,,

" எங்கு என்று புரியாமல்,,

" ஓசை வரும் திசையெல்லாம் ஓடுகிறேன்!

" பனி மூடிய காட்டில்,,

" என் வெண்புறாவை தேடுகிறேன்..

" கிடைக்குமா?

***********************************************

" இரவெல்லாம் கனவுகளின் பிடியில் நான்!

" கண்விழித்தால் என் கனவுகளுக்கு உருவம் கிடைக்கும்!

" ஆனால் விழித்துப் பார்க்கத்தான் தயங்குகிறேன்!

" எது என்னைத் தடுக்கிறது என்று எனக்கே புரியவில்லை!

" ஒன்றுமட்டும் புரிகிறது மிகத்தெளிவாக...

" நான் விரும்புகிறேன் அவளை என்று! 


No comments:

Post a Comment