Friday, November 20, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 3

மார்ச் 2012

காலை எழுந்ததில் இருந்து ரவிக்கு கை,கால் ஓடவில்லை.

'ரகு மும்பை அவசரமாக வர சொல்லி போன் செய்து இருக்கான். என்ன காரணம்னு கேட்டால் சொல்ல மாட்டேங்கிறான். மீறி கேட்டா, டேய் நல்ல விஷயம் தான். ஏன் நான் சொன்னா கிளம்பி வர மாட்டியா? என்று எதிர் கேள்வி கேட்டு வாயை கட்டி போட்டு விட்டான். ட்ரெயின்ல வரேன் சொல்லியும் கேக்காம மதுரை மும்பை பிளைட் டிக்கெட் வேற மெயில்ல அனுப்பிச்சு இருக்கான்.ஒண்ணும் புரிய மாட்டேங்கிறது' என்று கையை பிசைந்து கொண்டான்.

'இப்போவே கிளம்பினா தான் மும்பை பிளைட்டை பிடிக்க முடியும். வேலைக்கார அம்மா ரங்கநாயகி இன்னும் வரலையே' என்று யோசித்து கொண்டு இருந்த வேளையில், வாசல் காலிங் பெல் சத்தம் கேட்டது.



'அப்பாடி வந்துட்டாங்க', கதவை திறந்து, "அம்மா இங்கே பாருங்க, நான் மும்பை போய் வரதுக்கு எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் ஆகும். அடிக்கடி வீட்டு நம்பருக்கு கூப்பிடுவேன். வேலையை முடிக்காம போய்டாதிங்க. அப்புறம், நம்மரவுடி ராதோருக்கு பால் கலந்த சாதம், பெடிக்ரீ, அடிக்கடி மட்டன் இதெல்லாம் மறக்காம போடணும். டேய் ராதோர்" என்று கூப்பிட அவன் வளர்க்கும் அந்த செல்ல பக் டாக் ஓடி வந்தது.

முன்னங்காலை தூக்கி ரவிக்கு ஹாண்ட் ஷேக் கொடுக்க, பிடித்து தடவி கொடுத்தான். "டேய் ராதோர் கண்ணா, ரங்கநாயகி அம்மாவை படுத்த கூடாது சரியா?" என்று கேட்க, ஏதோ புரிந்த மாதிரி தலை அசைத்தது.ரவி முகத்தில் நிம்மதி.

தனது பச்சை நிற ட்ராலியில் பத்து நாட்களுக்கு தேவையான துணிகளை அடுக்கி விட்டு, தனது லாப்டாப் பேக்கை எடுத்து டிக்கெட் பிரிண்ட்டை உள்ளே வைத்து விட்டு, தனது போனை எடுத்து டிராவல் கணேசனை கூப்பிட அவர் போன் எடுத்தார்.

"என்ன அண்ணாச்சி, வண்டி அனுப்பி வைக்க சொல்லி இருந்தேன். இன்னும் வரலையே."

"இல்லையே நான் அனுப்பி ஒரு மணி நேரம் ஆச்சே, தம்பி அவன் வர்ற வழில தான் இருப்பான். ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க."

"சரி அண்ணாச்சி, இன்னும் நேரமானா பிளைட் போய்ட போகுது".
"ஹி ஹி" என்று சிரித்த கணேசன் அண்ணாச்சி போனை வைத்தார்.

திரும்ப கூப்பிட அவசியம் இல்லாமல் டிராவல்ஸ் இண்டிகா கார் வந்து நிற்க, "ரங்கநாயகி அம்மா நான் கிளம்புறேன். டேய் ரவுடி ஒழுங்கா இருக்கணும் சரியா?" என்று சத்தம் போட, பதிலுக்கு ராதோர் "வள்" என்று குலைத்து பதில் சொன்னான்.

அதற்குள் டிரைவர் பேக்கை கார் டிக்கியில் வைக்க, பின் சீட்டில் அமர்ந்து லாப் டாப்பை திறந்தான். கார் அடுத்த சில நிமிடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை ஏர்போர்ட் நோக்கி விரைந்தது. கண்களை மூடி உறங்க தொடங்கினான் ரவி.

கொஞ்ச நேரத்தில்கிர்ரென்று செல்போன் அடிக்க பதறி போய் போனை எடுத்தான். ரகு அடுத்த முனையில்.ஆன் செய்து பேச தொடங்கினான்.

"ரகு, இன்னும் கொஞ்ச நேரத்தில பிளைட்ல எறிடுவேண்டா. எனக்கு மும்பை இதுதான் முதல் தடவ, என்னை ஏர்போர்ட்ல பிக் அப் செய்ய முடியுமா?"

"சரிடா, தாங்க்ஸ்". போனை வைத்து விட்டு, "டிரைவர் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்"

"சார், இன்னும் கால் மணி நேரத்தில ஏர்போர்ட் வந்துடும்."

மதிய நேரம் என்பதால் சாலையில் வாகனங்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

"சார், ஏர்போர்ட் வந்தாச்சு."

இறங்கிய ரவி கையில் இருந்த ரெண்டாயிரத்து ஐநூறு கொடுக்க, டிரைவர் "நன்றி" சொல்லி விட்டு கிளம்பி சென்றான்.

டிக்கெட் வாங்கி விட்டு ப்ளைட்டில் ஏற, ஜெட் ஏர்வேஸ் அவனை இனிதே வரவேற்றது.

முதல் முறை பயணம் என்பதால் காதில் பஞ்சை அடைத்து கொண்டு உட்கார்ந்து இருக்க, பக்கத்தில் இருந்த நபர் அவனை புழுவைப் போல பார்த்தார்.

அவரின் அலட்சிய பார்வையை கண்டு அசடு வழிந்து விட்டு, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, பேக்கில் இருந்த பிரிவோம் சந்திப்போம் புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.இதற்கு முன்னால் பல தடவை படித்து இருந்தாலும், என்னமோ தெரியவில்லை திரும்ப படிக்க வேண்டும் போல இருக்கிறது, மனதுக்குள் சிரித்து கொண்டே மதுமிதாவை படிக்க ஆரம்பித்தான்.

"சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வெல்கம்ஸ் யூ" என்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விமான பணிப்பெண் அறிவுப்பு வழங்க, ரவியை பதட்டம் தொற்றி கொண்டது.மேலே வைத்து இருந்த லாப்டாப் பேக்கை எடுத்து 'பிரிவோம் சந்திப்போம்' புக்கை வைத்து விட்டு, பேக்கை தனது தோளில் மாட்டி கொண்டான்.

ஒவ்வொரு பயணிகளாக இறங்க, பின்னால் ரவியும் இறங்கி அரைவல் இடத்துக்கு தனது பேக்கை எடுத்து வெளியே வந்து,ரகுவை கூப்பிடலாம் என்று நினைத்து போனை அழுத்த, அவன் தோளில் யாரோ தட்ட திரும்பி பார்த்தால் ரகு.

"டேய் ரகு, வந்துட்டியா" கட்டி பிடித்து கொள்ள, ரவியின் பேக்கை வாங்கி கொண்டு, "டேய் ரவி பார்க்கிங்ல கார் இருக்கு. என் கூட வர்றியா. இல்லை இங்கே வெயிட் பண்ணினா, காரை எடுத்து வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிவேன். உன் வசதி எப்படி".

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானும் உன் கூட வரேன்" என்று சொல்லி விட்டு, தோளில் கை போட்டு பேசி கொண்டே நண்பர்கள் இருவரும் பார்கிங் இடது வந்தனர்


தனது ஹோண்டா சிட்டி காரை ரகு எடுக்க, முன் சீட்டில் ஏறி உட்கார்ந்து ரவிதன்நண்பனோடு பேச ஆரம்பித்தான்.'

"என்னடா எப்படி உன்னோட வாழ்க்கை போகுது. வயசு முப்பத்தி ஏழு ஆச்சு, சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே. என்னை எடுத்துக்கோ, எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது வயசில பையன் இருக்கான்."

"ரகு, என்னோட நிலைமை உனக்கு புரியும். இருந்தும் ஏன்டா இந்த மாதிரி பேசுற. இந்த காலத்தில சின்ன பசங்களுக்கே நல்ல பொண்ணு கிடைக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு அரைகிழவன் வயசாயிடுச்சு. இனிமே இப்படியே காலத்தை கடத்தி போக வேண்டியதுதான்". குரல் கரகரக்க பேசியவனை ரகு தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்தான்.

"ஆமா ரகு என்ன திடீர்ன்னு வர சொன்ன. காரணம் ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிற."

"நீ முதல்ல பேசாதே. என் தங்கை நிச்சயதார்த்தத்துக்கு போன மாசம் வர சொன்னேன் ஏன் வரலை".

"இல்லைடா ஒரு சின்ன ஆக்சிடென்ட். அதனால தான் நகர முடியலை".

"இன்னும் ரெண்டு நாளில என் தங்கையோட கல்யாணம். நான் பேங்க்ல ஒரு வாரம் லீவ் போட்டு இருக்கேன். நீ கல்யாணம் அட்டென்ட் பண்ணிட்டு என் கூட மும்பை சுத்தி பார்க்க போறே. சரியா."

"ஏன்டா, இதுதான் விஷயமா. சொல்லி இருந்தா நான் சந்தோஷமா வந்து இருப்பேன்ல".
தலையில் செல்லமாக தட்டிய ரகு, "ஆமா, இவர் சொன்ன உடனே வந்துடுவாரு பாரு. போடா, நீதான் அந்த ஊரை விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்ட. எத்தனை நாள்தான் நீ பழசையே நினைச்சுகிட்டு இருப்பே. இப்படியே இருந்தா பைத்தியம் பிடிச்சுடும்.அதனாலதான் நான் வந்தனா கிட்ட பேசி இந்த பிளான் போட்டேன்."

"சரிடா" என்று சிரித்தபடி, "இப்போ வந்தனா வீட்டில தான இருக்கா?"

"ஆமாண்டா, ரவி அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாருன்னு என்னைய காலைல இருந்து தூங்க கூட விடாம படாதபாடுபடுத்தி அனுப்பி வச்சுட்டா."

இடையே போன் வர யார் என்று எடுத்து பார்த்தான். "சொல்லுங்க கருணாகரன் சார். கட்டாயம் நாம சந்திக்கலாம்" என்று சொல்லி விட்டு, ரகு யார் என்று புருவத்தை உயர்த்தி கேட்க, "இவர் மும்பை போலிஸ்அசிஸ்டென்ட் கமிசனர் கருணாகரன். என்னோட ரசிகர்.இமெயில் மூலம் பழக்கம். நான் மும்பை வரேன்னு நேத்து சொல்லி இருந்தேன். அது தான் கூப்பிடுறார்".

அதற்குள் வண்டி மாதுங்கா உள்ளே நுழைய, அடுத்த சில நிமிடங்களில் ஸ்கை ப்ளூ அபார்ட்மென்ட் உள்ளே நுழைந்தது.வண்டியை நிறுத்தி விட்டு ரவி பேக்கை எடுத்து கொண்டு ரகு செல்ல, பின்னே லாப்டாப்புடன் ரவி.


வீட்டுக்குள் வந்தவனை வந்தனா "ரவி அண்ணா வந்துட்டிங்களா. ஏண்ணா முதல்ல வரலை. உங்களோட நான் பேச மாட்டேன்",என்று செல்லமாக கோபித்து கொள்ள, அசடு வழிந்தான் ரவி.

"அம்மா யாரு வந்துருக்காங்க பாரு"என்று உள்ளே குரல் கொடுத்து கொண்டே சென்றாள்.

ரகு அம்மாவை கண்டவுடன் காலில் விழுந்து வணங்க, பதறிப் போய் "என்ன தம்பி கால்ல எல்லாம் போய் விழுந்துட்டு", "டேய் ரகு, ரவியை பார்த்து எப்படி பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்குறதுன்னு கத்துக்கோடா" என்று கிண்டல் செய்ய, சிரித்து கொண்டே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான் ரவி.

உள்ளே கலகல சிரிப்பொலி. என்னவென்று யோசித்து கொண்டே ரகுவை பார்க்க, "ஒண்ணும் இல்லைடா. எல்லோரும் வந்தனாவோட கல்லூரி தோழிகள்."

உள்ளே இருந்து வெளி வந்த வந்தனா, "அண்ணா நீ அபர்ணாவை அவளோட வீட்டில விட்டுட்டு வந்துடு, அவளோட அப்பா போன் பண்ணினாரு. அவர் வர லேட் ஆகும்னு".
அபர்ணா பேரை கேட்டவுடன் ரவி முகம் மாறி போனது. உள்ளே இருந்து சிரித்து கொண்டே பேசி வந்த அந்த பெண்ணை பார்த்தான். வட இந்திய பெண்ணை போன்ற சாயல். வந்தவள் ரகுவுடன் ஏதோ ஹிந்தியில் பேசியபடி வர, புரியாமல் பார்த்தான் ரவி.

"ரவி இந்த பொண்ணு பேரு அபர்ணா. அபர்ணா சுக்லா. வந்தனாவோட கல்லூரி தோழி"என்று ரவியிடம் சொல்லி விட்டு,அந்த பெண்ணிடம், "இது என் நண்பன் ரவிச்சந்திரன். வந்தனா கல்யாணத்துக்கு வந்து இருக்கான்" என்று ஆங்கிலத்தில் சொல்ல,"ப்ரனாம் பையா" என்று வணக்கம் சொல்லி விட்டு, பதிலுக்கு புன்னகைத்தாள்.

"நான் அபர்ணாவை வீட்ல விட்டுட்டு வந்துடுறேன். நீ அதுக்குள் கெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடு. அம்மா இவனுக்கு கொஞ்சம் காபி கொடு. டேய் இது உன்னோட வீடு மாதிரி.கூச்சமில்லாம ரிலாக்ஸ்ஸா இரு."ரகு கிளம்பி செல்ல, வீட்டை சுற்றி பார்த்தான். அது ஒரு 4 பெட் ரூம் அபார்ட்மென்ட். தனி அறைக்கு சென்று லாப் டாப் பை ஓபன் செய்து அன்றைய நிகழ்வுகளை, டைப் செய்து விட்டு, கூகிள் மெயில் ஓபன் செய்ய, புது மெயில் எதுவும் வரவில்லை. மனதில் ஒரு வெறுமை பரவியது.

அதற்குள் வெளியே சென்று திரும்பி வந்த ரகு மனைவி ராகினி,மகன் சுரேஷ் இருவரை பார்த்தவுடன் சந்தோசமாக பேசி கொண்டு இருந்தான் ரவி.

இரண்டு நாட்களில் திருமணம் நடந்தேற ரகு பிஸி ஆனதால், கல்யாண பந்தியை கவனிக்கும் பொறுப்பு ரவி தலையில்.


இரண்டாவது வரிசையில் இருந்த அந்த அழகு மயிலை கண்டு அசந்து போனான். அந்த பெண் பெயர் அபர்ணா ரெட்டி என்றும்,வந்தனா கிளாஸ்மேட் சிரிஷாவின் அக்கா என்றும், அவள் டாக்டர் ஆக இருப்பது தெரிய வந்தது. அந்த பெண் நல்ல தமிழில் பேச, "இவள் தான் அந்த அபர்ணாவாக இருக்க வேண்டும். ஆனால் அந்த அபர்ணா கல்லூரியில் படிப்பதாக சொன்னாளே"குழம்பி போனான்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் கலகலவென்று இருந்த வீடு வெறிச்சோடி போனது போல இருந்தது.

ரகு அம்மா, அப்பா இருவரும் ரகு மனைவி ராகினி, பையன் உடன்மாப்பிள்ளையின் சொந்த ஊரான, சென்னை சென்று வந்தனாவை விட்டு வரலாம் என்று கிளம்ப, ரகு ரவியுடன் தங்கி விட்டான்.

இருவரும், ரகு நண்பன் முரளிவீட்டுக்கு சென்று மொட்டை மாடியில் தண்ணீர் அடித்து கொண்டே பேசினர்.

கொஞ்ச நேரத்தில் முரளி பேச ஆரம்பித்தான். "ரவி மச்சான்என்னடா பண்ணிட்டு இருக்க".
"நான், ஈமு பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. கூடவே முயல் பண்ணை, காய்கறி பண்ணை வச்சு இருக்கேன்.நல்லபடியா போய்கிட்டு இருன்னு".
"அப்படின்னா, படையப்பா ரஜினி மாதிரி சீக்கிரமே முன்னுக்கு வந்துடுவன்னு சொல்லு. ஆமா உன்னோட குடும்பத்தை பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை. உனக்கு எத்தனை குழந்தைடா."

"டேய் சும்மா இருடா. அவன் கல்யாணமே பண்ணிக்கலை" என்று ரகு பதில் சொல்ல

"என்னது. உண்மையா. ஏண்டா ரகு, இவன் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை. ஆள் வாட்டசாட்டமா தான் இருக்கான்.ஏன் ஒரு பொண்ணு கூட மாட்டலையா?".
"அதல்லாம் ஒண்ணும் இல்லை.நீ முதல்ல வாயை மூடுடா" பல்லை கடித்து கொண்டே ரகு சொல்ல

"டேய் ரகு என்னை தடுக்காதேடா. ரவி நீ சொல்லு கண்ணு, உனக்கு ஏன் கல்யாணம் ஆகலை. காதல் தோல்வியா? இல்லை உன் கல்யாணத்தில பொண்ணு கோவிச்சுக்கிட்டு ஓடி போய்ட்டாளா?"

ரவி கண்கள் கலங்கி இருக்க, "இதெல்லாம் காரணம் இல்லை. ரெண்டு பேரை அருவாளால வெட்டி கொன்னுட்டேன். அதனால பத்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு ஒரு வருஷம் முன்னால தான் வெளில வந்தேன்."

முரளி கைகள் நடுங்க, "டேய் இவன் உண்மையா சொல்றானா, இல்லை மிரட்டி பாக்குறானா".
அவன் தோளை தட்டி கொடுத்தபடி ரகு, "டேய் அவன் சொல்றது உண்மைதான். அது ஒரு பெரிய கதைடா. நீ கேட்டா அழுதுடுவே".
தலை குனிந்தபடி அமர்ந்து இருந்த ரவி கண்களில் கண்ணீர் பெருகி ஓடி கொண்டு இருந்தது.




"சாரிடா ரவி நான் ஏதோ தெரியாம பேசி உன்னோட பழைய ஞாபகத்தை கிளறிட்டேன். சாரி" என்று குளறியபடி சொல்ல,பரவாயில்லை என்று தலை ஆட்டியபடி, "ரகு நாம கிளம்பலாம். எனக்கு மனசே சரியில்லை."

வெளியே வந்த நண்பர்கள் இருவரும் எங்கே செல்லலாம் என்று யோசிக்க, காரை கிளப்பி மெதுவாக உருட்டி கொண்டு சென்றான் ரகு. கொஞ்ச நேரத்தில் இருவரும் ரயில்வே லைனை ஒட்டிய ரோட்டில் செல்ல, ரகு அருகில் இருந்த நண்பனிடம் டேய் ரவி,அங்கே பாரு என்று காண்பிக்க,அங்கே இரண்டு பெண்கள்.

"இதுதாண்டா காமத்திபுரா. உனக்கு மனசு கஷ்டமா இருக்குன்னு சொன்னியே ஒரு தடவை போயிட்டு வரியா."

"கடுப்பை கிளப்பாதே. முதல்ல வண்டியை வேகமா விடு"
வண்டியை நிப்பாட்டி விட்டு "டேய் ரவி, சொன்னா கேளு நாம ரெண்டு பேரும் போகலாம். உனக்கு பிடிச்சா ஒரு தடவை போயிட்டு வந்துடு."

தரதரவென்று ரவி சொல்ல சொல்ல கேட்காமல் இழுத்து சென்றான்.

ஏற்கனவே குடியின் ஆதிக்கத்தில் இருந்ததால் 'சொன்ன பேச்சை கேட்க மாட்டான் இந்த ரகு' என்று வேதனைப்பட்டு கொண்டேவேறு வழி இல்லாமல் சென்றான் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு மொழி பேசும் பெண்கள் இருக்க, மூன்றாவது வீதிக்கு இருவரும் வந்தனர்.

"இந்த வீதிலதான் தமிழ் பேசும் பொண்ணுங்க இருக்காங்க" என்று சொல்லி கொண்டே அந்த வீதியில் இருந்த ரெண்டாவது வீட்டுக்குள் நுழைய அங்கே ஐம்பது மதிக்க தக்க திருநங்கை, 'யார் வேண்டும்' என்பது போல பார்க்க, ரகு சிரித்து கொண்டே, "ரஹீம்பாய் தான் உங்க அட்ரஸ் கொடுத்தாரு" என்று சொல்ல, "ஆங், சொல்லுங்க தம்பி என்ன வேணும், எந்த மாதிரி பொண்ணு வேணும்" என்று கேட்க, ரகு விழித்தான்.

"ஓ, முதல் தடவையா அதுதான் இப்படி முழிக்கிறீங்க".

"ஏய் எல்லோரும் இங்கே வாங்கடி" என்று சத்தம் போட, உள்ளே இருந்து பத்து பெண்கள் வேகமாக ஓடி வந்து வரிசையாக நின்றனர். இதை எல்லாம் ரவி வேடிக்கை பார்க்க, "என்ன தம்பி ரொம்ப தான் யோசிக்கிற" என்று சிரித்தபடி, "ஏய் காமினி இங்கே வாடி, இந்த தம்பியை கூட்டி போ" என்று ரவியை அவள் மீது தள்ளி விட அந்த பெண் மெதுவாக அணைத்து கொண்டு உள்ளே இருந்த ரூமுக்கு கொண்டு சென்றாள்.

உள்ளே ரூமில் காமினி, பாவாடை ப்லௌசுடன் நிற்க படுக்கையில் உட்கார்ந்து இருந்தான் ரவி."என்னய்யா எல்லாத்தையும் நானே எடுத்துடட்டுமா இல்லை. நீயே ஒவ்வொன்னா கழட்டுறியா".

தலையை இரண்டு கைகளால் தாங்கி பிடிச்சு அமர்ந்து இருந்த ரவி, "வேணாம் காமினி,ப்ளீஸ்" என்று சொல்ல, அவள் முகத்தில் ஆச்சர்யம். "என்னய்யா உனக்கு பிடிக்கலையா."

"இல்லை காமினி, எனக்கு இதில விருப்பம் இல்லை. என்னை மன்னிச்சுடு. உனக்கு வேணும்னா பைசா கொடுத்துடுறேன்"என்று சொல்ல, "சரிய்யா, ஒண்ணு வேணாம் செய்யலாம், இன்னைக்கு பூரா என்னை புரட்டி எடுத்துட்டானுங்க. உடம்பு முழுக்க வலி, அதனால நான் வேணாம் ஒரு மணி நேரம் படுத்துக்குறேன். அப்புறமா நீ போகலாம்" என்று சொல்ல தலையாட்டினான்.


சந்தோசத்தில் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டுகட்டிலில் ஏறி படுத்து கொண்டு,சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றாள்.

கட்டில் ஓரத்தில் அமர்ந்து இருந்த ரவி என்ன செய்வது என்று யோசித்தபடி யோசனையில் ஆழ்ந்து போக, அவன் காதில் யாரோ முனகும் ஓசை கேட்டது.கூர்ந்து கேட்டான்.

"அம்மா, அம்மா, முடியலையே".

எங்கே சத்தம் வருகிறது என்று மெதுவாக வெளியே வர, அது அடுத்த பூட்டி இருந்த அறையில் இருந்து வந்தது.

அந்த அறை பூட்டி இருந்த போதிலும் பூட்டு போடப்படவில்லை. சுலபமாக திறந்து கொண்டு உள்ளே நுழைய இருட்டு.தனது செல்போனில் இருந்த டார்ச்சை அழுத்த உள்ளே அவன் பார்த்த காட்சி அவனை அதிர வைத்தது.

அங்கே ஒரு பெண் முகம், கை கால் முழுக்க அடிபட்டு ரத்தம் ஒழுக முனகி கொண்டு இருந்தாள்.

என்ன செய்தது என்று அறியாமல் பதறி போன ரவி அருகில் இருந்த மண்குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் விசிறி அடிக்க, அந்த பெண் கஷ்டப்பட்டு கண் விழித்து ரவியை பார்த்து அரண்டு போய் கத்த வாய் திறக்க, அவள் வாயை பொத்தினான்.

"இந்த பாரும்மா, நான் வெளி ஆள். உன்னோட முனகல் சத்தம் கேட்டு இங்கே வந்தேன். இப்போ சத்தம் போட்டா நான் வசமா மாடிக்குவேன். என்ன வேணும் சொல்லு, என்னால முடிஞ்ச உதவி செய்கிறேன்."

அந்த பெண் முகத்தில் நிம்மதி பரவ, தனது கையை அவள் வாயில் இருந்து எடுத்தான். அவளை இப்போது கூர்ந்து கவனிக்க முடிந்தது. அந்த பெண்ணிற்கு வயது இருபது இருபத்தி இரண்டு இருக்கும்.களையான தோற்றம்.

"சீக்கிரம் சொல்லும்மா" என்று சொல்ல, "சார், என்னை என்னோட காதலன் இங்கே வித்துட்டான். என்னைஇவங்க ரெண்டு நாளா அடிச்சு கொடுமை படுத்துறாங்க. நான் என் உயிர் இருக்கும்வரை இந்த தொழில்ல ஈடுபட மாட்டேன்னு சொல்லிட்டேன்".

அவளுக்கு பேச முடியாமல் மூச்சு இரைத்தது. "என்னை காப்பாத்துங்க ப்ளீஸ். உங்களை மனித உருவில் வந்த தெய்வமா நினைச்சு கேக்குறேன். ப்ளீஸ்" என்று விம்மலுடன் அழுதாள்.

ரவி மனம் கலங்கியது. 'இந்த மாதிரி கொடுமைகள் நடப்பதை படித்து இருந்தாலும், நேரில் பார்ப்பது இது தான் முதல் முறை.என்ன கொடுமை இது' என்று மனம் வெம்பி போனான்.

யோசிக்க நேரமில்லை என்பதை உணர்ந்து, "நீ கவலைப்படாதே. உன் மானத்தை எப்படியாவது காப்பாத்துவேன்" என்று சொல்லி விட்டு, அந்த ரூம் கதவை மூடி விட்டு காமினி இருக்கும் அறைக்கு வந்தான்.

என்ன செய்வது என்று குழம்பி போன அவனுக்கு அசிஸ்ட்டென்ட் கமிசனர் கருணாகரன் திரும்ப நினைவுக்கு வர அழைத்து பேசினான்.


"சார் நான் தான் ரவி. உங்களோட அவசர உதவி தேவை" என்று பேச ஆரம்பித்தான். அவன் முடித்தபோது, அவர் பதில் சொன்னார்.

"கவலைபடாதிங்க ரவி, நான் உடனே கட்டாயம் ஹெல்ப் பண்ணுறேன்."

ஒரு மணி நேரம் முடிய, காமினியை எழுப்பினான். இருவரும் கிளம்பி கீழே வர, திருநங்கை அவனை பார்த்து ஒரு மாதிரி சிரித்து "என்ன தம்பி இப்போ திருப்தியா", என்று கேட்க தலை அசைத்து விட்டு கையில் இருந்த மூவாயிரம் கொடுத்து விட்டு வெளியே வர, திடீரென்று போலிஸ் விசில் கேட்டது.

பதட்டமான திருநங்கை "எல்லோரும் ஒடுங்க"என்று சொல்ல, அதற்குள் உள்ளே போலிஸ் படை வந்தது.
உள்ளே நுழைந்த கருத்த மேனி, ஆறடி உயரத்துடன் இருந்த போலிஸ் அதிகாரி, "இங்கே ரவி யாரு" என்று கேட்க, ரவி முன்னே வந்தான்.

"நான்தான் கருணாகரன். வாங்க" என்று அவனை அழைத்து, மூடி கிடந்த அந்த ரூமை திறந்து, உள்ளே இருந்த அந்த இளம் பெண்ணை, விடுவித்து, முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவள் கண் விழித்தாள்.

ரவியை அடையாளம் கண்டு கொள்ள அந்த பெண் முகத்தில் நிம்மதி. கருணாகரன் அர்த்தத்தோடு பார்க்க, ரவிக்கு புரிந்தது.ஏசி கருணாகரன் திருநங்கையுடன் பேசினார்.
"இங்கே பாரு, இந்த பொண்ணை விட்டுடு. கட்டாயப்படுதுறது பெரிய குற்றம். இதுக்கு மேல நீ தகராறு பண்ணினா,உன்கிட்ட இருக்கிற எல்லா பொண்ணுங்களையும் அரெஸ்ட் பண்ணி உள்ளே வைக்க வேண்டி இருக்கும். உன் வசதி எப்படி".

தன் கண் முன்னே வரும் வருமானத்தை இழக்க விரும்பாத அந்த திருநங்கை. "சரி ஏசி இந்த பெண்ணை நான் ரிலீஸ் பண்ணிடுறேன்".

"சரி" என்று தலை அசைத்து, "என்னம்மா உன்னை ஹோம்ல விட சொல்லிடட்டுமா", இல்லைனா இந்த ரவியோட போய்டுரியா".

ரவி இடைமறித்து "வேணாம் சார், ஹோம்ல போனா, போட்டோ எல்லாம் போட்டு இந்த பெண்ணை சீரழிச்சு விடுவார்கள்.ஹாஸ்பிடல் கூட்டி போய் முதல் உதவி செய்து விட்டுஅந்த பெண்ணோட குடும்பத்தோட சேர்ந்து வைக்கிறேன்"

கருணாகரன், "என்னம்மா உனக்கு ஓகேதானே" என்று கேட்க அந்த பெண் "சரி" என்று தலை அசைத்தாள்.

"சரி உன்னோட பெயர் என்ன"என்று ரவி கேட்க"அபர்ணா."

"என்னடா இன்னொரு அபர்ணா" என்று சலித்து கொண்டான் ரவி.


பதினொரு மணி அளவில் அந்த பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் அட்மிட் செய்ய, அடுத்த நாள் காலை டிஸ்சார்ஜ் செய்து ரகு வீட்டுக்கு அழைத்து வந்தான் ரவி.

"நான் வீட்டில பேசட்டா" என்று ரவிகேட்க, வெறித்த பார்வையுடன் இருந்த அபர்ணா, "இல்லை சார், பேச வேண்டாம். நேர்ல போய் அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாதான் என் வேதனை தீரும்."

"ஏற்கனவே நீங்க என்னோட மானத்தை, உயிரை காப்பாத்தி இருக்கீங்க. இப்போ இன்னும் ஒரு உதவி கேட்கலாமான்னு தெரியலை.ஆனால் எனக்கு உங்களை விட்டா வேற யாரையும் தெரியாது."

மெல்ல சிரித்த ரவி, "அதனால என்ன. மனுஷனா இருந்து ஒரு உதவி கூட செய்ய முடியலைனா, அதை விட அசிங்கம் வேற எதுவும் இல்லை. கவலைபடாதிங்க, வீட்டுக்கு உடனே கிளம்பலாம்".


"ரகு, ப்ளைட்ல நாங்க ரெண்டு பேரும் கிளம்பறோம். அவங்க வீட்டில விட்டுட்டு நான் கிளம்புறேன்."

ரகு யோசித்தான். 'ரவி சொல்வது தான் சரியான யோசனை. அதுமட்டும் இல்லை. ஒரு பெண்ணை வீட்டில் தனியாக தங்கி கொள்ள சொன்னால் அந்த பெண்ணுக்கும் பிரச்சனைதான்.'

"சரிடா ரவி நீ சொல்றது நல்ல யோசனை."அன்றைய விமானத்தில் சென்னை வழியாக ரவிச்சந்திரன், அபர்ணாவுடன் திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்தான்.

'டாக்ஸியில் கிளம்பி சீக்கிரம் வீட்டுக்கு போய் விடலாம்' என்று ரவி சொல்ல தலையாட்டினாள்.டாக்ஸி கிளம்பி தில்லை நகர் நோக்கி நகர, அதுவரை தைர்யமாக இருந்த அபர்ணா அழ தொடங்கினாள்.

முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த ரவி, "அபர்ணா அழாதீங்க ப்ளீஸ். உங்களை கண்ட்ரோல் பண்ணிக்குங்க. நீங்க பெரிய பிரச்சனைல இருந்து தப்பி வந்து இருக்கீங்க. இனிமே எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுக்கலாம்.தைர்யமா இருங்க."



ரவியின் ஆறுதல் வார்த்தைகள் அபர்ணா மனதுக்கு கொஞ்சம் நிம்மதி தர கண்களை துடைத்து கொண்டு, திருச்சி மாநகரத்தை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள்.

டாக்ஸி இரவு மணி எட்டுக்கு வீட்டு வாசலை வந்து நிற்க, மெதுவாக இறங்கினாள். ரவியும் கூட இறங்கி டாக்ஸியை அனுப்பி வைத்து அவளுடன் வாசலுக்கு வந்து, கதவு உள்ளே பூட்டு இருந்ததால் காலிங் பெல்லை அழுத்தினான்.ஒரு நிமிடம் மெளனமாக கழிய திரும்ப காலிங் பெல்லை அழுத்தினான்.



No comments:

Post a Comment