Tuesday, November 3, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 8

ஆளாளுக்கு மாற்றி மாற்றி முருகனின் அத்தனைப் பெயர்களையும் சொன்னார்கள், இறுதியாக சத்யன் “ கதிரவன்னு வைக்கலாம்” என்று சொல்ல ம் இந்தப் பேரு நல்லாருக்கு இதையே வச்சிடலாம்” என்றாள்

குழந்தைக்கு பெயர் வைத்து தொட்டிலில் போட்டுவிட்டு, சற்றுநேரத்தில் அனைவரும் கீழே சாப்பிட வந்தனர் “ நான் இப்பதான் வீட்டுல சாப்பிட்டு வந்தேன், நீங்க எல்லாரும் சாப்பிடுங்க” என்று சத்யன் சொல்ல...

டைனிங் டேபிளில் அமர்ந்த மான்சி பட்டென்று எழுந்துகொண்டு “ அக்கா காலையில காபியும் பிரட்டும் சாப்பிட்டதே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அதனால நான் பிறகு சாப்பிடுறேன் ஸாரி அக்கா” என்று கூறிவிட்டு ஹாலுக்கு வந்துவிட்டாள்

ரமா, அரவிந்தனையும் வற்புறுத்தி சாப்பிட அமர வைத்து மூவரும் சாப்பிட, மான்சி குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிக்குப் போனாள், அவள் பின்னாலேயே போன சத்யன் வீட்டுக்குள் நுழைந்ததும் “ ஏன் சாப்பிடாம வந்த” என்று வருத்தமாக கேட்க..

புதிதாய் கட்டியிருந்த புடவை தொட்டிலில் குழந்தையை படுக்கவைத்து மெதுவாக ஆட்டியபடி “ அதான் பசியில்லன்னு சொன்னேனே” என்றாள்..



“ இல்ல இது பொய், பசி இல்லாதவ ஏன் டைனிங் சேர்ல உட்கார்ந்த? சாப்பிடனும்னு உட்கார்ந்துட்டு ஏன் எழுந்து வந்த, நான் சாப்பாடு வேனாம்னு சொன்னதால தானே?” என்று சத்யன் கேட்க

மான்சி மவுனமாக நின்றிருநதாள், ‘ நீங்க வேனாம்னு சொன்னதாலதான் நானும் சாப்பிடலைன்னு சொல்லு மான்சி’ என்று சத்யன் மனது அடித்துக்கொண்டது... ஆனால் மான்சி வாயைத் திறந்தாளில்லை..

சற்றுநேரம் பொறுத்து சத்யன் மான்சியை நெருங்கி பின்புறமாக அவளை தீண்டாமல் நின்று குனிந்து காதருகே “ நான் கீழே போய் அக்காகிட்ட சாப்பாடு கேட்டு வாங்கிட்டு வர்றேன் ரெண்டு பேரும் சாப்பிடலாமா?” என்று கிசுகிசுப்பாக கேட்டதும்.. அவ்வளவு நேரம் மவுனமாக நின்ற மான்சி “ ம்ம்” என்றாள் உடனடியாக...

அவளைப் பின்புறமாக அணைக்கத் துடித்த கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சூடான பெருமூச்சை அவள் பிடரியில் படுமாறு விட்டு அவளை தொடாமலேயே சிலிர்க்க வைத்துவிட்டு “ இரு எடுத்துட்டு வர்றேன்” என்று கீழே ஓடினான்,

அவர்கள் மூவரும் சாப்பிட்டு முடித்திருக்க, “ அக்கா ஒரு தட்டுல டிபன் வச்சு குடுங்க நானும் மான்சியும் மேலேயே சாப்பிட்டுக்குறோம்” என்று சத்யன் சங்கடமாக நெளிந்துகொண்டு கேட்க..

ஹாலில் அமர்ந்து அரவிந்தனுடன் பேசிக்கொண்டிருந்த துரை “ ஏன்டி ரமா நான்தான் அப்பவே சொன்னேனே... இவன் போய் சமாதானம் பண்ணி சாப்பிட வைப்பான்னு,, நீதான் அதெல்லாம் இல்லைன்னு சொன்ன, இப்பப்பாரு வந்து நிக்கிறான்” என்று வாய்விட்டு சத்தமாக சிரித்தபடி சத்யனை நக்கல் செய்தார்

“ அய்யோ கல்யாணம் ஆன புதுசுல நீங்க அடிச்ச கூத்துக்கு இவன் எவ்வளவோ தேவலை, சத்யா நீ எடுப்போப்பா அவரு அப்படித்தான்,, அவரு கதையை சொன்னா முறுக்கிவிட்ட மீசை கவுந்துரும்” என்று கணவனுக்கு பதிலடி கொடுத்தவாறு சத்யனிடம் காலை உணவை ஒரு பாத்திரத்தில் போட்டு கொடுத்தாள் ரமா ..

சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்த சத்யன் “ அதான் கொஞ்சம் முந்தி பார்த்தேனே தேங்காய் துருவ ஓடுனதை, இவரு என்னை சொல்ல வந்துட்டாரு என்றபடி சத்யன் மாடிக்கு போனான்

குழந்தை தூங்கிவிட மான்சி பாயை விரித்து அதில் அமர்ந்து, எதிரே எரிந்துகொண்டிருந்த பூஜை விளக்கையேப் பார்த்தாள், அதன் ஒளி மான்சியின் முகத்தில் பட்டு சிதறியது,

சத்யன் இட்லி அடங்கிய பாத்திரத்தை அவள் எதிரில் வைத்துவிட்டு பாத்ரூம் போய் கைகழுவிவிட்டு வந்தான், மான்சி தட்டை வைத்து அதில் முதலில் இனிப்பான கேசரியை வைத்துவிட்டு “ ஒரு தட்டுதான் இருக்கு மொதல்ல நீங்க சாப்பிடுங்க, பிறகு நான் சாப்பிடுறேன்” என்றாள்

அவளை கூர்ந்து பார்த்த சத்யன் “ இல்ல ரெண்டு பேருமே சேர்ந்து சாப்பிடலாம்” என்று தட்டை இருவருக்கும் நடுவே வைத்தான், மான்சி ஏதோ மறுத்து சொல்ல வாயெடுக்க “ ம்ஹூம் எதுவும் பேசாத சாப்பிடு மான்சி” என்று சத்யன் அவளை உரிமையோடு அதட்டினான்

அதன்பிறகு மான்சி எதுவும் சொல்லாமல் இட்லியை கிள்ளியெடுக்க... “ ம்ஹூம் மொதல்ல ஸ்வீட் சாப்பிடு” என்றான் சத்யன்

அதன்பின் அங்கே பாத்திரங்கள் நகர்த்தும் ஒலியைத் தவிர வேறு சத்தமில்லாமல் இருவரும் சாப்பிட்டனர், முடியும் தருவாயில் “ இன்னிக்கு பால் காச்சுறதா சொன்னதும் நீங்க இங்கதான் சாப்பிடுவீங்கன்னு நான் நேத்து நைட்டுல இருந்து நெனைச்சுக்கிட்டே இருந்தேன், இப்போ நீங்க வேனாம்னு சொன்னதும் மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் சாப்பாடு வேனாம்னு சொன்னேன், என்னை தப்பா நெனைக்க வேண்டாம்” என்று மான்சி மெல்லிய குரலில் உண்மையை ஒத்துக்கொள்ள...

தட்டில் கைகழுவிய சத்யன் “ நீ வேனாம்னு சொல்லும்போதே இப்படித்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும்,, இனிமேல் இங்கே வரும்போது சாப்பாட்டு நேரமா இருந்தா சாப்பிடாம வந்துர்றேன்” என்றான் சத்யன் அன்பாக

பாத்திரங்களை எடுத்து அடுக்கிக்கொண்டு “ மான்சி நானும் அரவிந்தனும் உன் பழைய வீட்டுக்குப் போய் அங்க இருக்குற சாமானையெல்லாம் எடுத்துட்டு வர்றோம், அதுபோக பத்தலைன்னா மற்ற பொருளெல்லாம் வாங்கிக்கலாம், நான் வர்ற வரைக்கும் நல்லா தூங்கு ” என்று கூறிவிட்டு கீழே போய்விட்டான்

சத்யனும் அரவிந்தனும் மான்சி குடியிருந்த வீட்டுக்கு போனபோது, அந்த வீடு வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்க, மான்சியின் பொருட்கள் அனைத்தும் மின்மோட்டார் இருந்த அறையில் மூட்டையாக கட்டிப் போடப்பட்டிருந்தது, அரவிந்தன் அந்த மூட்டைகளை பிரித்து, முகுந்தனை ஞாபகப்படுத்தும் பொருட்களை கவனமாக அங்கேயே விட்டுவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டான், ஒரு ஆட்டோ பிடித்து பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பும்போது அந்த வீட்டு ஓனர் வந்து மூன்றாயிரம் ரூபாயை கொடுத்து “ அந்த பொண்ணு கொடுத்த அட்வான்ஸ், அப்புறம் இதுக்கும் மறுபடியும் வரப் போறீங்க, நீங்க வேற போலீஸ்காரரா இருக்கீங்க” என்று சொல்ல ,, சத்யன் அவரை முறைத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டான்


ஆட்டோவில் அரவிந்தன் பொருட்களோடு வந்தான், கொண்டு வந்த பொருட்களை வீட்டில் அடுக்கினார்கள், அத்தனையும் மான்சியின் உழைப்பில் வாங்கிய பொருட்கள், அதுவே ஒரு குடும்பம் நடத்த போதுமானது, குழந்தைக்கு தேவையான பொருட்களை மட்டும் சத்யனிடம் ரமா எழுதி கொடுக்க, அவன் போய் வாங்கி வந்தான்

அன்று முழுவதும் ரமா வீட்டிலேயே சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நாளையிலிருந்து மாடியில் சமையல் செய்துகொள்ளுமாறு ரமா கூறியதும், அரவிந்தன் சமையலுக்கு தேவையானப் பொருட்களை ரமாவிடம் கேட்டுக்கொண்டு போய் வாங்கி வந்தான்,

மதியம் மணி இரண்டுக்கெல்லாம் அந்த சிறு வீடு ஒரு குடும்பத்துக்கு தேவையான பொருட்களுடன் குடித்தனம் நடத்த தயாராக இருந்தது,
இடையே சத்யன் கல்யாண பத்திரிகை வாங்கிச் சென்று பிரஸ்க்கு போய் கொடுத்துவிட்டு வரும்போது சமையல்க்காரனையும் பார்த்துவிட்டு வந்தான், மாலை நான்கு மணிக்கு உதவிக்கு துரையை அழைத்துக்கொண்டு பேங்க் மானேஜரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான்,

மாலை ஆறுமணி வாக்கில் அரவிந்தன் அனைவரிடமும் விடைபெற்று அவனுடைய வீட்டுக்கு கிளம்பினான்

அன்று இரவு டியூட்டிக்கு கிளம்ப சத்யன் தயாராகி அங்கேயே குளித்துவிட்டு தனது யூனிபார்மை போட்டுக்கொண்டு, காலையிலிருந்து அலைச்சலால் கசங்கிய உடைகளை கவரில் போட ..“ அழுக்கு துணியை ஏன் கையோட எடுத்துட்டு போறீங்க அது இங்கேயே இருக்கட்டும்” என்று அவன் பதில் சொல்லும் முன் அவனிடமிருந்து வாங்கி பாத்ரூமிற்குள் போட்டுவிட்டு வந்தாள் மான்சி

அவளை கூர்மையாக பார்த்தாலும் வேறு எதுவும் சொல்லாமல், தலையசைத்துவிட்டு கிளம்பினான் சத்யன், கீழே வந்து ரமாவிடம் சொல்லிவிட்டு சத்யன் புறப்பட துரைக்கும் இரவு ட்யூட்டி என்பதால் அவனுடனேயே கிளம்பினார்

ரமா தன் கணவனை வாசல் வரை வந்து வழியனுப்பி கையசைக்க, அதை பார்த்த சத்யனின் கண்கள் சட்டென்று மாடியைப் பார்த்தது, மான்சி நிலவின் ஒலியில் தங்கத்தால் செய்த சிற்பம் போல நின்றுகொண்டு அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்

சத்யன் அவள் அழகை ரசித்தபடி மெதுவாக தலையசைத்து போய்ட்டு வர்றேன் என்று சொல்ல, அவளும் தலையசைத்து பிறகு கையசைத்து விடைகொடுத்தாள்

பைக்கில் கிளம்பிய சத்யனுக்கு எதையோ சாதித்த உணர்வு, சந்தோஷத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவனாக சிறைச்சாலையை நோக்கி கிளம்பினான், அடுத்த வரும் நாட்களில் தன் வாழ்க்கையில் ஏற்படப்போகும் சம்பவங்களின் தீவிரம் புரியாமலேயே போய்க்கொண்டிருந்தான்







" அழகான பொருட்களெல்லாம் உன்னை

" நினைவுபடுத்துகின்றன, உன்னை

" நினைவுபடுத்துகிற எல்லாமே

" அழகாகத்தான் இருக்கின்றன. .

" எல்லோரையும் பர்க்க ஒரு பார்வையென்றும்

" என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்

" வைத்திருக்கிறாய்.

''நீ ரொம்ப அழகானவள"' என்று

" நண்பர்கள் சொல்வதெல்லாம்

" உண்மையா பொய்யா என்று

" உன் முகத்தை பார்த்து

" உறுதி செய்து கொள்கிற நேரம்கூட

" உன்னை நான் பார்த்ததில்லை.

" பார்க்கவிட்டால்தானெ

" உன் கண்கள்

( தபுசங்கர் கவிதைகள்) 

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு துரை சத்யன் இருவருக்குமே ஒரே நேரத்தில் டியூட்டி டைம் முடிய, இருவரும் ஒன்றாக வீட்டுக்கு கிளம்பினார்கள், முதல்நாள் இரவு துரை தனது பைக்கில் வராமல் சத்யனின் பைக்கிலேயே வந்துவிட்டதால் “ உங்கள வீட்டுல விட்டுட்டு அப்புறமா என் வீட்டுக்குப் போறேன் அண்ணா ” என்று சத்யன் சொன்னதும் சரியென்று சத்யன் வண்டியில் ஏறிக்கொண்டார் துரை

அவரை வீட்டு வாசலில் இறக்கி விட்டு “ நான் கிளம்புறேண்ணே” என்று சத்யன் பைக்கைத் திருப்பினான்

“ ஏன் சத்யா கிளம்பிட்ட? இவ்வளவு தூரம் வந்த மான்சியையும் குழந்தையையும்ப் பார்த்துட்டுப் போறதுதானே?” என்று துரை கேட்க..

“ இல்லண்ணே இந்த நேரத்தில் தூங்குறவங்களை ஏன் எழுப்பனும், மதியம் பதினொரு மணிவாக்கில் வர்றேன்” என்றான் சத்யன்

ரமா வந்து கதவை திறந்து காத்திருக்க “ சரி சத்யா நீ கெளம்பு” என்றுவிட்டு துரை வீட்டுக்குள்ப் போய் கதவை மூடினார்

சத்யன் தனது பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன் பைக் கண்ணாடியில் பின்புறமாக பார்க்க, துரைவீட்டு மாடியில் மான்சி நிற்பது விடிந்துவரும் காலை வெளிச்சத்தில் தெரிய, சத்யன் உடனே வண்டியை ஆப் செய்துவிட்டு திரும்பி மாடியைப் பார்த்தான்

மான்சி தான் நின்றிருந்தாள், சத்யன் அவளைப்பார்த்ததும் ‘ போய்ட்டு வாங்க’ என்பது போல் தலையசைக்க, சத்யன் போகவில்லை.. வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு இறங்கி வீட்டின் பக்கவாட்டில் இருந்த மாடிப்படியில் ஏறி மான்சியின் அருகில் போய் நின்றான்,

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டு இருக்க, கீழ் வானில் சூரியன் தனது பூமிக்காதலியை தழுவும் ஆசையில்.. மோகத்தால் உடலெல்லாம் சிவந்துபோய் ஆவேசமாக புறப்பட்டு வந்துக் கொண்டிருந்தான், சூரியனின் சிவந்த கதிர்கள்ப் பட்டு பூமி சிவந்ததோ இல்லையோ? மான்சி முற்றிலும் சிவந்து போயிருந்தாள்,
அவளின் பக்கவாட்டில் அடித்தச் சூரியச் சிவப்பு அவளின் ஒருபக்கத்தை தங்கப் பாலமாகவும், மறுபக்கத்தை மெல்லிய இருட்டில் பளிச்சிடும் வெள்ளிப் பாலமாகவும் மாற்றியிருக்க, அப்படியொரு சூழ்நிலையில் மான்சி அற்புத அழகியாக ஜொலித்துக்கொண்டிருந்தாள்

சத்யன் அவளை பார்வையால் விழுங்கி தனது காதல் பசியை போக்க முயன்று தோற்றுப்போய், மூட்டிய நெருப்பில் கொட்டிய நெய்யாக அந்தபசி மேலும் கொளுந்துவிட்டு உள்ளுக்குள் எரிய “ என்ன மான்சி தூங்கலையா? இந்த நேரத்துல இங்கவந்து நிக்கிற?” என்று மெல்லிய குரலில் கேட்டான்

அவன் பார்வை தன்னை முழுசாக விழுங்கிவிட்டதை உணர்ந்து அதிலிருந்து வேளியே வரமுடியாமல் தவிப்புடன் திரும்பி வெளியேப் பார்த்து “ குழந்தை அழுதான், பால் குடுக்க எழுந்தேன் அப்ப பைக் சத்தம் கேட்டதால வந்தேன்” என்று மான்சி மெல்லியகுரலில் திணறியபடி பேச...

சத்யன் அமைதியாக அவளையேப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க... தன்னுடைய பதிலுக்கு அவனிடமிருந்து எந்த ஒப்புதலும் இல்லாது போக மான்சி திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்
சத்யன் உதட்டில் தவழ்ந்த சிரிப்புடன், மார்புக்கு குறுக்கே கைக்கட்டி நம்பமாட்டேன் என்ற பார்வையுடன் நின்றிருந்தான்

அவன் சிரிப்பும் குறும்பு பார்வையும் அந்த சூரியனைவிட அதிகமாக மான்சியை சிவக்க வைக்க, தனது வெட்கத்தை அவனிடம் மறைத்து தலைகுனிந்து “ நீங்க போனதும் ரமா அக்கா கூட கொஞ்சநேரம் பேசிகிட்டு இருந்தேன், அப்போ அவங்க நாலு மணிக்கு ட்யூட்டி முடியும், துரை சார் வண்டி எடுத்து போகாததால நீங்கதான் அவரை கொண்டு வந்துவிடுவீங்கன்னு’ சொன்னாங்க அதான் நாலு மணியிலிருந்தே நின்னுக்கிட்டு இருக்கேன்” என்று மான்சி உண்மையை கூறியதும் ..

அப்பவும் சத்யனிடமிருந்து பதில் எதுவும் இல்லை, மான்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. சத்யன் உதட்டில் இருந்த சிரிப்பு அழகானபுன்னகையாக மாறியிருக்க.. கண்களில் வழிந்த குறும்பு காதலாக மாறியிருந்தது, அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் “ வீட்டுல பால் இருக்கு காபி போடவா?” என்றாள் மான்சி

“ ம்ம் போடேன் மான்சி” என்றான் சத்யன் அடுத்த நிமிடம் சிட்டாகப் பறந்து வீட்டுக்குள்ப் போனாள் மான்சி.. போனவளையே பார்த்தபடி நின்றிருந்த சத்யனால் அவளின் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ள முடிந்தது, எந்த சூழ்நிலையிலும் இவளுக்கு அவப்பெயரோ காயமோ ஏற்படாத வண்ணம் காக்க வேண்டியது தனது கடமை என்று சத்யனுக்குப் புரிந்தது,

ஆனால் வீட்டுக்கும் இங்கேயும் உள்ள தூரம் சத்யனை சங்கடப்படுத்தியது, வேலைக்கு போகவேண்டும், கல்யாண வேலைகளை கவனிக்கவேண்டும், மான்சி குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும், இவை அத்தனைக்கும் தனக்கு இருபதுநான்கு மணிநேரம் போதுமா? என்ற கேள்வியால் சஞ்சலப்பட்டபடி சத்யன் காபி குடிக்க வீட்டுக்குள் போனான்

அப்போதுதான் கியாஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தவள் சத்யனைப் பார்த்து புன்னகைத்து “ இதோ போட்டுட்டேன்” என்றாள்

“ ம்ம் பரவாயில்லை” என்றவன் பாயில் படுத்திருந்த குழந்தையின் அருகே இவ்வளவு நேரமாக மான்சி படுத்திருந்த இடத்தில் சரிந்து படுத்தவன், தூங்கும் குழந்தையை வருடியபடி கண்களை மூட அடுத்த நொடியே அவன் நினைவுகள் காற்றில் பறக்க உடனடியாக தூங்கிவிட்டான்

இரண்டுநாட்களாக சரியான உறக்கமின்றி இரவு பகலாக அலைந்ததும், இரவுநேர டியூட்டியும், குளுமையான அந்த தென்னங்கீற்று வீடும், ஃபேன் காற்றும் அவனை உடனடியாக தூக்கத்திற்கு அழைத்துச்சென்றது

காபியை ஆற்றியபடி வந்த மான்சி சத்யன் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து திகைப்புடன் அப்படியே நின்றாள், அவனது அலைச்சலை இரண்டு நாட்களாக பார்த்தவள் என்பதால்.. சத்யனை நினைத்து அவளுக்கு கண்கள் கலங்கியது, கையில் இருந்த காபி டம்ளரை சமையல் மேடையில் வைத்துவிட்டு, சத்யன் அருகே வந்து நின்றாள்



எழுப்பலாமா என்று யோசித்தவள், உடனே அந்த முடிவை மாற்றிக்கொண்டாள், ம்ஹூம் என்ன நடந்தாலும் சரி... எந்த வேலை தாமதமானாலும் சரி அவன் நன்றாக உறங்கட்டும்’ என்று நினைத்தவள், அவன் காலடிக்கு வந்து மண்டியிட்டு அமர்ந்து அவனுக்கு துளியும் தெரியாமல் மெதுவாக ஷூவை கழட்டினாள், அவற்றை ஓரமாக வைத்துவிட்டு கொஞ்சம் மேல்நோக்கி நகர்ந்து கழுத்தை இறுக்கிப்பிடித்த சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை விடுவித்தாள், ஒரு கை குழந்தையின் மீது இருக்க, புன்னகையுடன் அந்த கையை நகர்த்தி அவன் வயிற்றில் வைத்தாள்,

பிறகு சற்று நகர்ந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு இத்தனை நாளாக நேரில்ப் பார்த்து ரசிக்கமுடியாத சத்யனின் அழகை அவன் தன்னை மறந்து தூங்கும் இந்த நேரத்தில் ரசிக்க கடவுள் தனக்குக் கொடுத்த வாய்ப்பாக கருதி கண்கொட்டாமல் அவனைப் பார்த்தாள்

No comments:

Post a Comment