Friday, November 6, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 17

அரவிந்தனுக்கு கம்பெனியில் அன்று வேலையே ஓடவில்லை, ‘இன்னும் திருமணத்திற்கு ஐஞ்சு நாள்தான் இருக்கு இந்த அனுசுயா இன்னும் போன் பண்ணவே இல்லையே, ச்சே என் நம்பரை அவகிட்ட குடுத்ததுக்கு பதிலா அவ நம்பரை நான் வாங்ககிட்டு வந்திருக்கனும்’ என்று யோசித்தபடி முதல் ஷிப்ட் வேலை முடிந்து வெளியே வந்து தனது பைக்கை எடுக்கும்போது அவனது போன் அடித்தது

ஆர்வமின்றி மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்தான், புதிய நம்பராக இருந்தது, மனதில் பொறித்தட்ட ஆன் செய்து “ ஹலோ” என்றான்

கொஞ்சநேர மவுனத்திற்குப் பிறகு “ நீங்க அரவிந்தா?” என்ற பெண் குரல் கேட்டதுமே அது அனுசுயாவின் குரல் என்பதை அரவிந்தன் கண்டுகொண்டான்



“ சொல்லுங்க அனுசுயா, நான் அரவிந்தன் தான்” என்றான் உற்சாகமாக..

“ ம் உடனே என் குரலை கண்டுபிடிச்சிட்டீங்களே” என்றவள் சற்று கழித்து “ உங்ககூட பேசனும் வர முடியுமா?” என்றாள்

அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அரவிந்தனை யோசிக்க வைத்தது, சென்ற இரண்டு முறை பேசியபோது அவள் குரலில் ஒரு நிமிர்வு இருக்கும், இப்போது அந்த நிமிர்வு இல்லை, வேறு ஏதோவொன்று, அது என்ன? என்று யோசித்தபடியே “ கண்டிப்பா வர்றேங்க, எங்க வரனும்னு மட்டும் சொல்லுங்க இன்னும் கொஞ்சநேரத்தில் அங்க இருப்பேன்” என்றான் உற்சாகமாக

கொஞ்சம் யோசித்து “ அன்னைக்கு பார்த்தீங்களே அந்த பார்க்குக்கு வந்துடுங்ககளேன், நான் சரியா ரெண்டு மணிக்கு அங்க இருக்கேன், ஆனா யார்கிட்டயும் தகவல் சொல்லாம வாங்க” என்று அனுசுயா சொல்ல..

“ ம் சரிங்க உடனே வர்றேங்க ” என்று அரவிந்தன் சொன்னதும் ‘ சரிங்க நான் வச்சிர்றேன்” என்று வைத்துவிட்டாள் அனுசுயா

அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற எதிர்ப்பை மீறிய பயத்துடனேயே பைக்கை எடுத்துக்கொண்டு அனுசுயா வீட்டின் அருகே இருக்கும் பூங்காவை நோக்கி விரட்டினான்

சரியாக ஒன்று ஐம்பதுக்கெல்லாம் பூங்காவில் இருந்தான் அரவிந்தன், அனுசுயா இன்னும் வரவில்லை, ஒரு மரநிழலில் அமர்ந்தவன் அவள் நம்பருக்கு போன் செய்யலாமா என்று யோசிக்கும் போதே அனுசுயா பூங்காவினுள் நுழைந்தாள்
அவன் இருக்கும் இடத்தை கண்டுகொண்டு நேராக அவன் எதிர்ல் வந்து அமர்ந்தவள் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி “ என்ன வந்து ரொம்ப நேரமாச்சா” என்று கேட்க..

அவள் நெற்றியை துடைத்தபோது நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறியிருக்க அதை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பியபடி “ பதினைஞ்சு நிமிஷம் ஆச்சுங்க” என்றான்

“ ஓ....” என்றவள் அவன் கண்களைப் பார்த்து “ என் நிச்சயதார்த்தம் நிக்கிறதுல அவங்களை விட நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போலருக்கு” என்றாள் கேலியாக

அரவிந்தனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது , வருத்தத்துடன் அவளைப் பார்த்து “ அப்படியெல்லாம் இல்லீங்க,, உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கு சத்யன் இல்லேன்னா ஆயிரம் மாப்பிள்ளைகள் வருவாங்க, ஆனா மான்சிக்கு சத்யனை விட்டா யாருமில்லைங்க, அதான்...” என்றான்

அமைதியாக அவன் முகத்தையேப் பார்த்தவள் “ ஆனா எனக்கு இருபத்தஞ்சு வயசு வரைக்கும் நீங்க சொன்ன ஆயிரத்துல ஒருத்தன் கூட என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வரலைங்க” என்றாள் விரக்த்தியாக..

இதற்கு அரவிந்தனிடம் பதிலில்லை, இவளுக்கு என்ன குறைச்சல்னு இவ்வளவு விரக்த்தியா பேசுறா என்று எரிச்சல்தான் வந்தது. என்ன கலர்தான் கொஞ்சம் கம்மி, ஆனா கறுப்பும் அழகான நிறம்தானே, இவளோட கண்ணைப் பார்த்து கூடவா யாருக்கும் பிடிக்காம போகும், என்று அவளை ஆராய்ந்தது அரவிந்தனின் மனம்.

அரவிந்தன் எதுவும் பேசாமல் இருக்கவும் அனுசுயாவே ஒரு சன்னமான பெருமூச்சுடன் ஆரம்பித்தாள் “ இதோப்பாருங்க அரவிந்தன், நானும் என் வீட்டில் பேச எவ்வளவோ ட்ரைப் பண்ணேன், என்னால முடியலை, எல்லாரும் ஆளுக்கொரு பக்கமா பிஸியா இருக்காங்க, என் அப்பாகிட்ட சொல்லலாம்னு ரெண்டு முறை ட்ரைப் பண்ணினேன் என்னால அவர்கிட்ட பேச முடியலை, அதுவுமில்லாம என் நிச்சயத்தோட என் அண்ணன் கல்யாணத்தையும் நிறுத்திடுவாரோன்னு எனக்கு பயமாயிருக்கு, அதனால என்னால இந்த நிமிஷம் வரை பேசவே முடியலை” என்று அனுசுயா வரண்ட குரலில் சொல்லிக்கொண்டே போக...

“ என்னங்க இது இப்படி சொல்லிட்டீங்க, உங்களைத்தானே நம்பியிருந்தோம்” என்று அரவிந்தன் பதட்டமாக..

அவனை நோக்கி அமைதியாக இருக்கும்படி கையசைத்த அனுசுயா “ கொஞ்சம் என்னை பேசவிடுங்க” என்றாள்..

“ ம் சொல்லுங்க” என்று அமைதியானான் அரவிந்தன்

“ இது சரிப்பட்டு வராதுன்னு நான் வேற ஒரு யோசனை பண்ணிருக்கேன், ஆனா அதுக்கு உங்களோட ஒத்துழைப்பும் வேனும்” என்றவள் அவனை நேராகப் பார்க்க..

“ என் ஒத்துழைப்பா? சொல்லுங்க எதுவாயிருந்தாலும் செய்றேன்” என்றான் ஆர்வத்துடன்

அதன்பின் அனுசுயாவிடம் நீண்டதொரு அமைதி, தரையில் இருந்த புற்களை பிடுங்கி அதை நாலாக எட்டா கிள்ளியெறிந்தாள்,,

அவளின் அமைதியான பதட்டமே பிரச்சனை பெரிது என்று அரவிந்தனுக்கு உணர்த்த “ எதுவாயிருந்தாலும் சொல்லுங்க, உள்ளயே வச்சுகிட்டு மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க, என்னன்னு சொன்னா நாம ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவு பண்ணலாம்” என்று ஆறுதலாக சொன்னான்

ஒரு முடிவுடன் நிமிர்ந்தவள் “ நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?” என்று கேட்க

அரவிந்தன் திக்கென்று அதிர்ந்தான், இதென்ன சம்மந்தமில்லாமல் இப்படியொரு கேள்வி என்று மனம் குழம்பியபடி “ ஏங்க உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது, இந்த மூஞ்சிய யாராச்சும் லவ் பண்ணுவாங்களா? நான் வேலை செய்ற கம்பெனியில என் டிப்பார்ட்மெண்ட்ல எவ்வளவோ பொண்ணுங்க வேலை செய்றாங்க, நானும் நல்ல பொண்ணுன்னு என் மனசுக்கு தோனுற பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்ல நினைப்பேன் .. ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே அதுக என்னை அண்ணான்னு கூப்பிட்டுருங்க, இப்படியே எனக்கு மனசு வெறுத்து போச்சுங்க, அதனால இப்பல்லாம் அவங்க அண்ணான்னு சொல்றதுக்கு முன்னாடியே நான் தங்கச்சின்னு சொல்லிர்றேன், எனக்குன்னு ஒரு பொண்ணு நிச்சயமா கிடைப்பான்னு நம்பிகையில காலத்தை ஓட்டுறேன், நீங்க என்னடான்னா யாரையாவது லவ் பண்றியான்னு கேட்கிறீங்க” என்று தனது வருத்தத்தை கேலிபோல் சொன்னான்

அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்த அனுசுயா அவ்வளவு நேரமாக இருந்த இறுக்கம் மாறி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்...

அரவிந்தன் அவள் சிரிப்பதைப் பார்த்து அசந்து போனான், சிரிக்கும் அவளையே வியப்புடன் பார்த்தவனைப் பார்த்து சிரிப்பை அடக்கியபடி, “ என்ன அப்படி பார்க்கிறீங்க” என்று கேட்க

“ இல்லங்க நீங்க சிரிச்சா இவ்வளவு அழகா இருக்கே? அப்புறம் ஏன் அடிக்கடி சிரிக்க மாட்டேங்கறீங்க?” என்று கேட்டே விட்டான்

அவன் சொன்னதுமே அவள் பார்வை தாழ்ந்தது ..” சரி நாம பேச வந்ததையே மறந்துட்டோம்” என்றாள்... அவள் குரலே வெகுவாக மாறிப்போயிருந்தது 


“ ம்ம் பேசுங்க” என்றான் அரவிந்தன் கலைந்திருந்த அவள் நெற்றிப்பொட்டைப் பார்த்தபடி...

“ உங்க வீட்டுல யார் யார் இருக்கீங்க?” என்று கேட்டாள்

“ நான் என் அம்மா மட்டும் தான்,, அப்பா இறந்து பலவருஷம் ஆச்சு” என்றான் அரவிந்த்

“ நான் உங்களை இதெல்லாம் கேட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்ற அனுசுயா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து “ நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? ” என்று மெதுவாக ஆனால் உறுதியான குரலில் கேட்க ..

“ என்னது நானா?” என்ற அரவிந்தன் அதற்குமேல் பேச வாய்வராமல் திகைப்புடன் அவளையேப் பார்த்தான்...

“ ஆமாம் நீங்கதான்.. உங்க பிரண்டுக்காக என்னை தியாகம் பண்ண சொல்ற நீங்க... ஏன் உங்க பிரண்டுக்காக இந்த தியாகத்தை பண்ணக்கூடாது?... வேற வழியில்லைங்க... எங்க வீட்டுல என் பேச்சு எடுபடாது, இன்னும் கல்யாணத்துக்கு அஞ்சு நாள்தான் இருக்கு, இந்த சூழ்நிலையில நான் யார்கூடயாவது ஓடிப்போனா மட்டும் தான் என்னோட நிச்சயதார்த்தம் மட்டும் நின்னு என் அண்ணனோட கல்யாணம் மட்டும் நடக்கும், அப்படியிருக்க இப்பபோய் நான் யாரையும் தேடிபிடிச்சு காதலிச்சு இன்னும் அஞ்சு நாளுக்குள்ள ஓடிப்போகவும் முடியாது, தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில நீங்க ஒருத்தர்தான் இதை செய்யமுடியும், அதனாலதான் உங்களை கேட்கிறேன், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? உங்க ப்ரண்டுக்காக? ” என்று கூறிவிட்டு அவன் முகத்தை கூர்மையுடன் பார்த்தாள்,

அரவிந்தனிடம் முன்பிருந்த பதட்டம் தணிந்திருந்தது, அவள் சொன்னவகைகளை மனம் கிரகித்து அதிலிருக்கும் சாதக பாதகங்களை அலசிப் பார்த்தது, ஆனாலும் அனுசுயா சொன்ன சில வார்த்தைகள் அவனுக்குப் பிடிக்கவில்லை, இவ்வளவு நேரமாக அவளைப் பார்த்த பவ்யமான பார்வையை தவிர்த்து விட்டு அவளைவிட கூர்மையாக துளைப்பது போல் பார்த்து “ நீங்க சொன்ன எல்லாம் சரி... ஆனா இதுல தியாகம்ங்குற வார்த்தை எங்கிருந்து வந்தது, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறதால நான் தியாகியா? அப்படி ஒன்னும் மோசமான குறைகள் எதுவும் உங்களுக்கு இருக்கிறதா தெரியலையே?” என்று அரவிந்தன் கொஞ்சம் கோபமாக பேச

அனுசுயா தலைகுனிந்து “ இல்ல உங்களுக்கு வர்ற மனைவியை எப்படியெல்லாம் கற்பனை பண்ணிருப்பீங்க, அப்படியிருக்க என்னை கல்யாணம் பண்றது ஒருவகை தியாகம் தான” என்று அனுசுயா மெல்லிய குரலில் கூறினாள்

“ தயவுசெய்து இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதீங்க,, எனக்கென்னவோ நீங்கதான் என்னை கல்யாணம் பண்ணிக்க எடுத்த முடிவை தியாகமா நினைக்கிறீர்களோ?” என்றான் குத்தலாக..

சட்டென்று நிமிர்ந்த “ ச்சேச்சே அப்படியெல்லாம் இல்லைங்க, ஏன் இப்படி நெனைக்கிறீங்க?” என்று அரவிந்தனை சமாதானம் செய்ய பணிவாக பேசினாள் அனுசுயா

“ பின்ன எதுக்கு தியாகம் அது இதுன்னு சொல்ற, இன்னொருத்தரை சேர்த்து வைக்க நாம கல்யாணம் பண்ணிக்கனும்னு விதி இருந்தா அதை மாத்தவும் முடியாது,, அதுக்காக நாம ரெண்டுபேரும் பிடிக்காம தியாகம் பண்ணவும் வேண்டாம், அப்புறம் ரெண்டுபேர் வாழ்க்கையும் நரகம்தான்... இப்ப நான் கேட்கிறேன் சொல்லு? , என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான்

அவன் பட்டென்று ஒருமைக்கு தாவியதை மனதிற்குள் குறித்தபடி “ மொதல்ல நீங்க சொல்லுங்க?” என்றாள்

“ இல்ல லேடிஸ் பர்ஸ்ட், நீ சொல்லு, என்னை வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணயா?.. இல்ல என்னை பிடிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தியா? எனக்கு உண்மை வேனும் அனுசுயா? ஏன்னா இது நம்மளோட வாழ்க்கை... ம் சொல்லு?” என்றான் அரவிந்தன் பிடிவாதமாக




“ எனக்கு பிடிச்சதால தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு அரவிந்தனை நிமிர்ந்து பார்த்தாள் .. அவன் இவளை நம்பாத பார்வைப் பார்க்க..

“ இதோப்பாருங்க அன்னிக்கு நீங்க உங்க பிரண்டுக்காகவும் அந்த பொண்ணுக்காகவும் அவ்வளவு பேசினீங்களே, நான் வீட்டுக்குப் போயும் அதையே நினைச்சிகிட்டு இருந்தேன், சும்மா பேசி பழகினப் பொண்ணுக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்குற நீங்க உங்க சொந்த மனைவியை எப்படி வச்சுக்குவீங்கன்னு யோசிச்சேன், உங்களுக்கு வரப்போற மனைவி ரொம்ப குடுத்து வச்சவன்னு கொஞ்சம் பொறாமை கூட வந்தது, அப்புறமா என் வீட்டுல சொல்ல முடியாம தவிச்சப்ப இந்த யோசனை வந்ததும் எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது நீங்கதான், அப்பவும் நீங்களும் யாரையாவது காதலிப்பீங்களோன்னு ரொம்ப பயமாவே இருந்துச்சு, இங்க வர்றதுக்கு முன்னாடிக்கூட நீங்க இந்த ஏற்ப்பாட்டுக்கு சம்மதிக்கனும்னு விநாயகரை வேண்டிக்கிட்டு தான் வந்தேன்” என்று படபடவென சொல்லி முடித்த அனுசுயா வெட்கமாக தலைகுனிந்து “ இன்னும் நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறீங்க” என்றாள்

அவள் பேசப் பேச விண்ணில் பறந்த அரவிந்தன் இறங்கி வர சற்று நேரம் பிடித்தது “ போதும்,, இனி எதுவும் சொல்லவேண்டாம், நான் இங்க வரும்போது உன் குரல்ல ஏதோ வித்தியாசம் தெரியுதுன்னு யோசிச்சிகிட்டே வந்தேன், ஆனா அது நேசத்தால் வந்த பயம்னு இப்பதான் புரியுது... ம்ஹும் உனக்கு நான்தான் எழுதிட்டான் போலருக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தான்...

“ அப்போ உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கா?’ என்று ஆச்சர்யமாக கேட்க

ஆச்சர்யத்தில் விரிந்த அவள் கண்களைப் பார்த்து “ நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? உங்க வீட்டுல யார் யார்னு? கேட்ட நீ.... நான் என்ன வேலை செய்றேன்? எவ்வளவு சம்பளம்? சொந்த வீடா? வாடகை வீடான்னு? கேட்கலைப் பாரு அப்பவே எனக்கு உன்னைப் பிடிச்சி போச்சு... ஆனா நான் என்னைப் பத்தி சொல்லிர்றேன், வயசு இருபத்தேழு ஆகுது, பிகாம் படிச்சிருக்கேன், பிரைவேட் ஷு கம்பெனியில் ஒரு டிபார்ட்மெண்ட்க்கு சூப்பர்வைசரா இருக்கேன் , எட்டு வருஷ சர்வீஸ், பதினோராயிரம் சம்பளம், வீடு சின்னதா இருந்தாலும் சொந்த வீடு, இவ்வளவு தான் நான் ” என்று அரவிந்தன் சொன்னதும்

அமைதியாக இருந்த அனுசுயா, பிறகு “ நீங்க ஒன்னும் என்னை பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ண சம்மதிக்கலையே?” என்று குரலில் வேதனையோடு கேட்க...

எட்டி அவள் கையைப் பற்றிய அரவிந்த் “ இல்ல அனுசுயா, ஆரம்பத்தில் இருந்தே நீ அய்யோ போச்சேன்னு மூக்கை சிந்தாம ஒரு நிமிர்வோட பேசின பாரு? அதைப் பார்த்து நான் பிரம்மிச்சுருக்கேன், இப்போ நீ கேட்டதும் நானான்னு ஆச்சரியமா இருந்ததே தவிர, என்னடா இப்படி கேட்கிறாளேன்னு சங்கடமா இல்லை, என்ன போதுமா?” என்று சந்தோஷம் குரலில் வழியவழிய கேட்டான் அரவிந்த்

“ ம்” என்று அனுசுயா தலையசைக்க..

“ சரி இப்ப சொல்லு, எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம், எங்க பண்ணிக்கலாம்” என்று அரவிந்தன் குறும்பாக கேட்க..
அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த அனுசுயா “ நாளைக்கே பண்ணிக்கனும், இல்லேன்னா நம்ம கல்யாணமும் சிக்கலாயிடும் ” என்று கூற..

“ என்னது நாளைக்கேவா?” என்று திகைத்தான் அரவிந்த்.

“ ஆமாம் நாளைக்கு தான், என்னோட அப்பா பெங்களூர் போயிருக்கார், அவர் திரும்பி வரும்போது நான் உங்க மனைவியா இருந்தாத்தான் சரியா இருக்கும், அதேபோல யாருக்குமே நம்ம கல்யாணம் பத்தி தெரியக்கூடாது, ஏன்னா சத்யன் மான்சியை சேர்த்து வைக்கத்தான் நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னு பரிதாபப்பட்டு தடுக்க நினைப்பாங்க, இல்லேன்னா எப்படியாவது என் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிரும், அதனால ரகசியமா கல்யாணம் பண்ணிகிட்டு அதுக்கப்புறம் எல்லாருக்கும் தகவல் சொல்லலாம்,

" அப்புறம் நாம காதலிச்சு கல்யாணம் பண்ணதாத்தான் என் வீட்டுக்கு தெரியனும், இல்லேன்னா சத்யனுக்காக தியாகம் பண்ணிட்டேன்னு நினைச்சு.... ஒன்னு என் அண்ணன் கல்யாணத்தை நிறுத்தப் பார்ப்பாங்க, இல்ல கல்யாணம் ஆனதும் உன் அண்ணனானல தான் என் பொண்ணு ஓடிப் போனான்னு பாக்யாவை கொடுமை பண்ணுவாங்க, அதனாலதான் சொல்றேன் நான் உங்களை உயிருக்குயிரா காதலிச்சு ஓடிப்போன மாதிரி இருக்கனும் அப்பதான் நம்ம மக இப்படி பண்ணிட்டாளேன்னு குற்றவுணர்ச்சிலயே பாக்யாவை நல்லா பார்த்துக்குவாங்க, கொஞ்சநாளைக்கு தான் அப்புறம் எல்லாம் சரியாயிடும்” என்று அனுசுயா தெளிவாக தனது ப்ளானை சொல்ல..


அரவிந்தன் அவளை பிரமிப்புடன் பார்த்தான், இவ்வளவு தெளிவா யோசிச்சு முடிவெடுத்திருக்காளே? என்று பெருமையாகக்கூட இருந்தது “ எல்லாம் சரிங்க மேடம் கல்யாணம் எங்க அதையும் சொல்லிட்டீங்கன்னா காலையில நான் வர வசதியா இருக்கும்” என்று கேலியாக கேட்டான்

“ என்ன கிண்டலா, நானே நாலு நாளா சோறு தண்ணி இல்லாம இவ்வளவு யோசிச்சு முடிவு பண்ணிருக்கேன், நீங்க கிண்டலாப் பண்றீங்க?” என்று பொய்யாய் கோபித்தாள் அனுசுயா

பற்றியிருந்த அவள் கையை தன் நெஞ்சில் வைத்து “ ச்சேச்சே கிண்டல் இல்லைம்மா, உண்மையாவே உன்னோட தெளிவான சிந்தனையை நெனைச்சு எனக்கு பெருமையா இருக்கு, சொல்லு எங்க கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்டான்..

அவன் பேச்சில் சமாதானம் அடைந்தவள் “ ரத்னகிரி முருகன் கோயில்ல பண்ணிக்கலாம், நாளைக்கு வெள்ளிக்கிழமை , காலையில் நான் ஆறு மணிக்கெல்லாம் குளிச்சுட்டு கோயிலுக்குப் போறதா நான் கிளம்பி பழைய பஸ்ஸ்டாண்ட் வர்றேன், நீங்களும் வந்துருங்க, சரியா ஆறரைக்கு எனக்கு போன் பண்ணி எங்க இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அப்புறமா ரெண்டு பேரும் ஜாயிண் பண்ணிக்கலாம், ஆனா யாருக்குமே தெரியவேண்டாம், உங்க பிரண்ட் சத்யனுக்கு கூட தெரியவேண்டாம்” என்று அனுசுயா சொல்லிவிட்டு தனது வாட்சில் மணி பார்த்துவிட்டு “ என்னோட தையல் க்ளாஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போற நேரம், நான் கிளம்புறேன்” என்று அவசரமாக எழுந்தாள் ,

அரவிந்தனும் எழுந்துகொண்டு “ சரி அனுசுயா, முடிவு எல்லாம் நீ பண்ணாலும் அதை கரெக்டா நான் செயல்படுத்தி காட்டுறேன், கல்யாணத்துக்கு என்னென்ன தேவைன்னு எல்லாத்தையும் வாங்கி வச்சிர்றேன், எதுக்கும் நைட்டு யாருமில்லாதப்ப எனக்கு ஒரு போன் பண்ணு” என்றான்

“ சரி நான் கிளம்புறேன்” என்று அனுசுயா முன்னால் நடக்க.. அவள் கையைப்பிடித்து நிறுத்திய அரவிந்தன் வெகுநேரமாக அவன் கண்களை உறுத்திய கலைந்து போன அவள் நெற்றிப்பொட்டை எடுத்து சரியான இடத்தில் வைத்துவிட்டு “ வியர்வையில் பொட்டு நகர்ந்து இருந்தது, இப்போ சரியாயிருக்கு” என்றான்

அவன் முகத்தையே சில விநாடிகள் பார்த்த அனுசுயா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு " என்னை சரியா புரிஞ்சிகிட்டதுக்கு தாங்க்ஸ்" என்று உணர்ச்சியுடன் சொல்ல

பற்றியிருந்த கைகளை வருடியபடி " நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போற காதலர்கள் நன்றி சொல்லிக்குவாங்களா என்ன?" என்று கேலிபோல் கோபமாக கேட்டான்

" சரி சரி தாங்க்ஸை வாபஸ் வாங்கிக்கிறேன், இப்போ கையை விட்டீங்கன்னா நான் வீட்டுக்குப் போவேன், இல்லேன்னா உங்க வருங்கால மாமியார் என்னைத் தேடுவாங்க" என்று அனுசுயா இலகுவாக புன்னகைத்த படி சொன்னதும்,,

மனமேயில்லாமல் கையை விட்டான் அரவிந்தன், அடுத்த நிமிடம் சிரித்தபடி அனுசுயா வேகமாக போய்விட, அரவிந்தன் தனது பைக்கை நோக்கி நடந்தான்

ஏதோ நினைவு வந்தார்ப்போல் நின்று திரும்பி வெயிலை ஆங்காங்கே அமர்ந்திருந்த காதலர்களைப் பார்த்தான், அன்று துரையிடம் சொன்னது ஞாபகம் வர உடனே சிரித்துவிட்டான் " அய்யோ வெயில்ல் உட்கார்ந்திருக்காங்களே?' என்று அவன் மனம் பரிதாபப்பட்டது





" தினமும் கண்ணாடி முகம்பார்த்து..
" எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறேனா..
" என்றுப் பார்த்துக்கொள்கிறேன்!

" யாரேனும் ஒருமுறை அழைத்தால்...
" உடனே திரும்பி பார்த்துவிடுகிறேன்!

" வீதியில் நடக்கும் போது..
" காற்றுடன் உரையாடுகிறேன்!

" தனிமையில் மௌனம் கொள்ளும் நான்...
" யார் வந்தாலும் பேசிவிடுகிறேன்!

" என்னருகில் யாருமில்லாத இரவில்..
" நிலவை துணைக்கு அழைக்கிறேன்!

" பசிக்கும்போது உண்ணாமல்...
" உணவில்லாத போது உண்ண அமர்கிறேன்!

" தினமும் உடையை தேர்வு செய்ய...
" நிமிடங்களை செலவிடுகிறேன்!

" இந்த மாற்றங்கள் அனைத்திற்க்கும் காரணம்...
" அன்று நான் பார்த்துத் தொலைத்த..
" ஒப்பனையற்ற உன் முகமும்...
" கபடற்ற உனது சிரிப்பும் தான்! 


No comments:

Post a Comment