Tuesday, November 3, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 9

அவனது போலீஸ் கட்டிங் தலைமுடியைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது, தலையின் பின்புறங்கள் ஒட்ட வெட்டப்பட்டு. தலையின் உச்சியில் அடர்த்தியான முடியிருந்தது. ஆனால் நெற்றியில் வழியும் அளவுக்கு இல்லை. அவனின் நேர்நாசியைப் பார்த்தவள் தனது ஆள்காட்டிவிரலால் எட்டி கூர்மையான அதன் நுனியைத் தொட்டாள், உடனே சிலிர்ப்புடன் தனது கைகளை எடுத்துக்கொண்டாள், சத்யன் குழந்தையை முத்தமிடும் போதெல்லாம் அழுவதற்கு காரணமான மீசையைப் பார்த்தவளுக்கு குறுகுறுவென்று இருந்தது, இப்படி கத்தையாக மீசையை வச்சிக்கிட்டு முத்தம் குடுத்தா குத்ததான் செய்யும், ஆனா இந்த மீசையில் ஒரு முடியை குறைத்தாலும் இவரோட கம்பீரம் குறைந்துவிடும், அதனால இப்படியேதான் இருக்கனும் எப்பவுமே, தடித்து கறுத்த உதடுகளுக்கு வந்த மான்சியின் பார்வை வெகுநேரம் அங்கேயே நிலைத்தது, நேற்று காலை சத்யன் சிரித்தது ஞாபகம் வந்தது, எவ்வளவு அழகான கம்பீரமான சிரிப்பு,



சிலநாட்களாக அவனின் ஒவ்வொரு அசைவும் அவளுக்குள் பெரும் கனவுகளை விதைத்திருந்தது, அவள் உதடுகள் ஓசையின்றி அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தது, இந்த காக்கி உடைக்குள் இருக்கும் ஒரு நேசமிக்க மனிதனை அவள் மட்டுமே அறிவாள், அவனை சந்தித்த நாளிலிருந்து அவளுக்கென்று அவன் துடித்த துடிப்புகள் அவளிடம் ஆயிரம் கதை சொன்னாலும் அதையெல்லாம் ஏற்க தனக்கு தகுதியில்லை என்ற ஒரே காரணத்தால் மவுனமாகவே இருந்தாள்,

அவளைப்பொருத்தவரை சத்யன் ஒரு மகான், அவனுக்கு பூஜை செய்ய ஏற்ற மலர் தானல்ல என்ற எண்ணம் அவளுக்குள் விழுந்திருந்தது, முகுந்தனுடனான வாழ்க்கையில் காதலின் அரிச்சுவடியை கூட கண்டில்லாத மான்சிக்கு சத்யன் அவனுடைய காதலை ஒவ்வொரு செயலிலும் காட்டினான்,

அவனால் சலனப்பட்ட முதல் நிமிடத்தை நினைத்துப் பார்த்தாள், சுடுகாட்டில் இவளை ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு சரசரவென தனது சட்டையை கழட்டிவிட்டு குழாயடியில் அமர்ந்து குளித்து புது வேட்டியை இடுப்பில் முடிந்து முகுந்தனுக்கு கொல்லி வைத்த அந்த தருணத்தில் தான் சத்யனின் மனதை ஓரளவு மான்சி கணித்தாள்

அவன் பார்த்த பார்வை சொன்னது அவன் காதலை, ஆனால் அது அப்போது மான்சிக்கு புரியவில்லை, அரவிந்தன் வீட்டில் இருந்த நாட்களில் தனிமையில் யோசித்தபோது ஆரம்பத்தில் இருந்தே சத்யனின் நடவடிக்கைகளில் அவனது காதலை ஒரு சதவிகிதமாவது உணர்த்தாமல் இருந்ததில்லை, அவனுடைய காதலை ஏற்க தனக்கு தகுதியில்லை என்ற ஒரே காரணத்தால் தான், சத்யன் போனில் பேசினால் கூட ஓரிரு வார்த்தைகளோடு அவனை தவிர்த்தாள்

சத்யனுக்கு தங்கத்தட்டு வைத்து அதில் எச்சில் பண்டத்தை பரிமாற அவள் தயாரில்லை, அவனுடைய கவுரமான அந்தஸ்தை ஒரு கைதியின் மனைவி என்ற அவப்பெயரோடு நாசம் செய்ய அவள் விரும்பவில்லை, அவனின் அன்பு இவளை அசைத்து உயிர்கொடுக்க... தனக்குள் துளிர்விட்ட காதலை உள்ளுக்குள் போட்டு மூடி அதன்மேல் கனமான தனது மவுனத்தை தூக்கி வைத்தாள்,

அரவிந்தனின் வீட்டைவிட்டு கிளம்பும்போது கூட சத்யன் தனக்காக அலைந்து திரிவானோ என்ற அவன் மீது உள்ள அன்பால் பலமுறை யோசித்துதான் இனியும் அவனுக்கு தான் பாரமாகாமல் அவன் நல்லதொரு வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு முடிவாக கிளம்பினாள்

ஆனால் அதன்பிறகு அவள் அழாத நாளில்லை சத்யனை நினைத்து, பிள்ளை பெறும் நிமிஷத்தில் கூட அவனை மனதில் வைத்துதான் வைராக்கியத்தோடு மகனைப் பெற்றாள், மறுபடியும் சத்யனைப் பார்த்தபோது கூட தன் காதலை புதைக்கவே நினைத்தாள், அவனுடன் கிளம்பும் கடைசி நிமிடம் வரை இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துப் போனாள்

காரில் வரும்போது சத்யன் ரமாவிடம் பொய் சொன்னதாக சொன்னபோது, அது ஏன் பொய்யாய்ப் போனது என்றுதான் கண்ணீர் விட்டாள், காதலுக்காக ஏங்கிய காலம் போய் அந்த காதல் நல்லவன் ஒருவனிடம் கிடைத்தபோது அதை ஏற்க முடியாமல் போன தனது நிலையை எண்ணி எண்ணி எவ்வளவோ முறை மனம் நொந்திருக்கிறாள்

அப்படிப்பட்டவளை நேற்று சத்யன் பேங்குக்கு போனதும் அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் அவளை உலுக்கி அவள் மவுனத்தை தகர்த்து உள்ளேயிருந்த காதலை வெளிக்கொணர்ந்தது,

அவளை காணாமல் சத்யன் தேடும்போது அழுதானாமே? இதை அரவிந்தன் சொல்லும்போது மட்டுமல்ல இப்போது நினைத்தாலும் மான்சிக்குள் திடீரென்று ஒரு கர்வம் வந்து அமர்ந்தது, என் அழகை மட்டும் பார்க்காமல் என் மனதை நேசிக்கவும் ஒருவன் இருக்கிறான் என்ற கர்வம் அவளை நிமிர வைத்தது

அவள் இல்லாத நாட்களில் சத்யன் எப்படியிருந்தான் என்று அரவிந்தன் சொல்ல சொல்ல மான்சிக்கு சத்யன் மீது பரிதாபப்பட்டு அழுகை வரவில்லை, மாறாக... ‘ நான் போனால் இப்படியா இருக்குறது, நிச்சயமா ஒருநாள் என்னைத் தேடி வருவான்னு தைரியமா இருக்க வேனாம், ச்சே அழுதாறாமே, இவரெல்லாம் ஒரு போலீஸூ’ என்று பொய்யான கோபத்தோடு மெய்யான காதல்தான் வந்தது,
அவ்வளவு நாட்களாக மனதுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை போய், சத்யன் மீதான காதல் மனதை முழுமையாக ஆக்கிரமிக்க, அவனைத் தேடி விழித்திருந்தது இதயம், முதல் நாள் இரவு ரமா சொன்னதை வைத்து, நாலு மணிக்கு சத்யன் வருவான் என்று மூன்று மணியிருந்து விழித்திருந்து, அவனின் வண்டி சத்தம் கேட்டதும் ஓடிவந்து நின்றிருந்தாள்

ஆனால் சத்யன் துரையை இறக்கிவிட்டு பைக்கைத் திருப்பியதும், தன்னைப் பார்க்காமல் போறானே என்று அவள் மனம் கசங்கிய அதேநேரத்தில் சத்யனின் பார்வை அவளைத் தீண்ட, உடனே முகத்தோடு அவள் மனமும் மலர்ந்தது

இப்போது கூட

நானாய்த்தான் கண்டறிந்தேன்

காதல் வேதனையில்

கசங்கும் உன் இதயத்தை.

நீயாகக் காதலைச் சொன்னால்

நான் சேமித்து வைத்த கற்பு

சிந்தியா போயிருக்கும்?

உண்டென்றால்

உண்டென்பேன்

இல்லையென்றால்

இல்லையென்பேன்

இப்போதும் கூட

உனக்குள் ஊடுவும் காதலை

ஒளிக்கவே பார்க்கிறாய்

உன் காதலறிந்த கணத்தில்

என் பூமி பூக்களால்

பூத்து குலுங்கியது

என் இதய நந்தவனத்தில்

வெள்ளையாய்ப் பூத்த

ரோஜாக்கள் எல்லாம்

வண்ணம் மாறின

காதல் செய்யும் மாயங்கள்

எனக்குள்ளும் நிகழ்வதை

நீ அறிவாயா?
மான்சி சத்யனை விட்டு தன் பார்வையை அகற்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள், சத்யனும் படுத்த நிலையில் இருந்து இம்மிகூட அசையாமல் அப்படியே கிடந்தான், அவனின் களைப்பை அவன் விடும் சுவாசத்தில் கூட கண்டாள் மான்சி

இத்தனை நாட்களாக தான் பட்ட கஷ்டமெல்லாம் இப்படி ஒரு புதையல் தனக்கு கிடைப்பதற்காகத் தானோ? என்று எண்ணமிட்டாள்,, ஆனாலும் இருவரும் வெளிப்படையாக காதலைச் சொல்லி ஒன்றாய் கலக்கும் காலம் இன்னும் வரவில்லை என்று மான்சிக்கு புரிந்தது,

முதலில் இவர் தங்கையின் திருமணம் நடக்கவேண்டும், பொண்ணுக்கு அண்ணன் ஒரு கைதியின் விதவை மனைவியோடு வாழ்கிறான் என்று வெளியேத் தெரிந்தால் அடுத்த நிமிடமே அந்தப் பெண்ணின் கல்யாணம் நின்றுபோகும் என்று மான்சிக்கும் தெரியும், அதனாலேயே தன் காதலை இன்னும் கொஞ்சநாளைக்கு உள்ளுக்குள் பூட்டி வைக்க நினைத்தாள், தனது மனம் சத்யனுக்கு தெரிந்தால் அடுத்த விநாடி அவனின் நடவடிக்களே அவனை எல்லோருக்கும் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் வழக்கம் போல முடிந்தவரை மவுனத்தின் போர்வையில் தனது காதலை வளர்க்க முடிவு செய்தாள் மான்சி

பொழுது விடிந்ததற்கான அறிகுறியாக தெருவில் சந்தடிகள் தெரிய, நேற்று அரவிந்தன் வாங்கிவந்து மாட்டிய கடிகாரத்தில் மணிப் பார்த்தாள் மான்சி, மணி 6 – 10 ஆகியிருந்தது, எழுந்து ஏதாவது வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை சத்யனின் அருகாமை தடுக்க அப்படியே அமர்ந்திருந்தாள்

அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரமா “ என்ன மான்சி விடியக்காலம் வந்தவன் வீட்டுக்குப் போகலையா? பைக்கு நடுரோட்டுல நிக்குதேன்னுப் பார்க்க வந்தேன்” என்று கேட்க

“ இல்லக்கா நைட்டு வீட்டுக்குத்தான் கெளம்புனாரு, நான்தான் காபி போடுறேன்னு சொன்னேன், சரின்னு வந்து படுத்தாரு, நான் காபிப் போட்டுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டார், ரொம்ப டயர்டா இருக்காரு போல, எழுப்ப மனசில்லாம அப்படியே உட்கார்ந்திருக்கேன்” என்று சத்யனின் தூக்கம் கலையாத வாறு மெல்லிய குரலில் சொன்னாள்

“ அவன் வந்ததிலிருந்து இப்படியேவா உட்கார்ந்திருக்க? “ என்று ஆச்சர்யப்பட்டவள் “ சரி நான் அவரை எழுப்பி வண்டியை எடுத்து ஓரம் விடச் சொல்றேன்” என்றபடி ரமா போய்விட்டாள்

அப்போது புரண்டு கவிழ்ந்துப் படுத்த சத்யன் கண்களை மூடிக்கொண்டே “ அப்ப இருந்து இப்படியேத்தான் உட்கார்ந்திருக்கியா? ” என்று ரகசியமாக கேட்க

அடப்பாவி முழிச்சிருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு தான் இருந்தானா? என்று திகைத்த மான்சி அப்போதுதான் அவனுக்கு வெகு அருகில் தான் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து அவசரமாய் எழுந்திருக்க முயன்றவளை சத்யனின் வலதுகை அவளது இடதுகையை இழுத்து அமர்த்தியது “ சொல்லு மான்சி இங்கயேத்தான் உட்கார்ந்திருந்தயா?” என்றான் மறுபடியும், சத்யன் இன்னும் கவிழ்ந்தே இருந்தான் 



அவன் கைகளில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்று தோற்றபடி “ ஆமாம்,, கையை விடுங்க” என்றாள் மாட்டிக்கொண்ட வெட்கத்துடன்

சத்யன் அவள் கையை இழுத்து தன் நெஞ்சுக்கு அடியில் வைத்துக்கொண்டு அதன்மேல் படுத்துக்கொண்டான், கை அவன் மார்புக்கு கீழே மாட்டிக்கொள்ள தவிப்புடன் நெளிந்தவாறு “ அய்யோ யாராவது வரப்போறாங்க கையை விடுங்க” என்று மான்சி கெஞ்ச.. சத்யன் கையை விடவில்லை

அவளின் கெஞ்சல் சத்யன் காதில் விழவில்லை என்றாலும், அவள் மகன் காதில் விழுந்துவிட்டது போல, அவ்வளவு நேரம் சத்யனின் அருகாமையில் சுகமாக உறங்கியவன், அவன் விழித்ததும் இவனும் விழித்துக்கொண்டான்,

குழந்தை அழுததும் தான் அவள் கையை விட்டான் சத்யன், மான்சி உடனே எழுந்து குழந்தையை தூக்கிக்கொண்டு சத்யனுக்கு மறுபுறம் திரும்பி அமர்ந்து அழு் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்,

சத்யன் சிரிப்புடன் எழுந்து அமர்ந்து புடவை மூடிய அவள் முதுகைப் பார்த்துவிட்டு, பிறகு எழுந்து பாத்ரூமுக்குப் போனான், முகம் கழுவிட்டு வெளியே வந்தவன் “ ஷூவை நீ கழட்டி வச்ச?” என்று கேட்க..

குழந்தை இன்னொரு பக்க மார்புக்கு மாற்றியபடி தலையை மட்டும் அசைத்தாள் மான்சி, அப்போது பால்காரம்மா மாடிக்கு வந்து “ தம்பி தினமும் வடிக்கையா பால் தூத்த சொல்லி ரமாம்மா சொல்லிச்சு” என்று கூற..

சத்யன் ஒரு பாத்திரத்தில் பாலை வாங்கி கியாஸை பற்ற வைத்து பாலை அதில் வைத்துவிட்டு “ சர்ட் பட்டனை யாரு கழட்டி விட்டது?” என்று குறும்பு குரலில் மின்ன கேட்டான்

வெட்டுக்கென்று திரும்பி அவனை முறைத்த மான்சி “ ம் இதுக்கெல்லாம் வெளியூர்ல இருந்தா ஆள் கூட்டிட்டு வரமுடியும்?, நான்தான் கழுத்தை பிடிக்குதேன்னு கழட்டி விட்டேன்” என்றாள்

“ ம்ம், உனக்கு இப்படியெல்லாம் பேசக்கூடத் தெரியுமா?” என்று சத்யன் கேலி பேச

“ பின்ன நான் என்ன ஊமையா?” என்ற மான்சி பால் குடித்த குழந்தையை தோளில் போட்டு முதுகை தடவிக் கொடுத்து தொட்டிலில் போட்டுவிட்டு , பாத்ரூமுக்கு போய் வருவதற்குள் சத்யன் காபி போட்டு வைத்திருந்தான்

அவள் வந்ததும் ஒரு டம்ளரை அவளிடம் நீட்டிவிட்டு, அங்கிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தவன் “ குடிச்சுப் பார்த்து காபி எப்படியிருக்குன்னு சொல்லு மான்சி ?” என்றான்

“ ம்க்கும் நான் போட்ட காபியை நீங்க குடிக்காம தூங்குவீங்க, நீங்க போட்டதை மட்டும் நான் குடிக்கனுமா?” என்று மான்சி பொய்யான கோபத்தோடு சொல்ல

“ நான்தான் அலுப்புல தூங்கிட்டேன், நீ எழுப்பி குடுக்கவேண்டியது தானே? இப்போ இந்த காபியை குடிக்கலைன்னா அப்புறம் நான் குடிக்க வைக்க வேண்டியிருக்கும், எப்புடி வசதி? ” என்று சத்யன் கேலியாக சொன்னதும்.. மான்சி மெல்லிய புன்னகையுடன் காபியை பருகினாள்
“ எப்படி ஐயாவோட காபி டேஸ்ட்?” என்று சத்யன் கேட்க

அவன் கேலிக்கு ஏதாவது பதில் கொடுக்க வேண்டுமே என்ற வேகத்தில் “ ம்ம் நல்லாத்தான் இருக்கு... ஐயாவுக்கு வரப்போற அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க” என்று மான்சி சொல்ல...

கடைசித் துளிகளை உறிஞ்சிக்கொண்டிருந்த சத்யன் அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து “ என்ன சொன்ன?” என்று கோபமாக கேட்க...

“ ம் உங்களுக்கு வரப் போற பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொன்னேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக..

சட்டென்று வந்து ஒட்டிக்கொண்ட கோபத்தோடு “ சரி நான் கிளம்புறேன்” என்று எழுந்தவன் வேகமாக தனது ஷூவை மாட்டினான்..

தனது வார்த்தை அவனை சீண்டி விட்டுவிட்டது என்று மான்சி புரிந்து கொண்டு, அவனை சமாதானம் செய்யும் நோக்கில் அவனை நெருங்கி “ கதிருக்கு தடுப்பூசி போடனும் எங்க போடுறதுன்னு விசாரிச்சு சொல்றீங்களா?” என்று கேட்க..

“ ம்ம்” என்றுபடி ஷூ லேசை இழுத்து கட்டினான்

ஓகோ சாருக்கு இவ்வளவு கோபம் வருமா? என்று எண்ணிக்கொண்டு “ ஏதாவது அவசரம்னு உங்ககூட பேசனும்னா என்ன பண்றது? ” என்று மான்சி மெதுவாக கேட்டாள்

ஷூவை போட்டுக்கொண்டு நிமிர்ந்தவன் “ அரவிந்தனை சாதரணமா ஒரு மொபைலும் அதுக்கு ஒரு சிமும் வாங்கிப்போட்டு உன்கிட்ட குடுக்கச் சொல்லி பணம் குடுத்திருக்கேன், இன்னிக்கு வாங்கிட்டு வருவான் பாரு வாங்கி வச்சுக்க” என்றான் வேறெங்கோ பார்த்தபடி

அவனின் திடீர் பாராமுகம் அவளுக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது, “ இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு முகத்தை திருப்புறீங்க” என்று மான்சி வருத்தமாக கேட்டாள்

அவளின் வருத்தம் சத்யனின் கோபத்தை கொஞ்சம் தனிக்க “ பின்ன என்னன்னவோ சொல்ற உனக்குதான் பேசத் தெரியுமா? இனிமே அதுமாதிரி சொல்லாத?” என்று சத்யன் அவள் வருத்தத்துக்கு சமாதானம் சொன்னான்

“ ம்ம், சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்” என்றவள்

“ விளையாட்டுக்கு கூட என்னை இன்னொருத்திக் கூட சம்மந்தப்படுத்தி பேசாதே” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு “ சரி நேரமாச்சு நான் வீட்டுக்கு கெளம்புறேன்” என்று படிகளில் இறங்கினான்

காலையில் இருந்த சந்தோஷம் நிமிடத்தில் காணாமல் போய் ஒரு இறுக்கம் வந்து சூழ்ந்து கொள்ள, மான்சி கலங்கிய கண்களுடன் அவன் போவதையேப் பார்த்தாள்
கடைசி படியில் போய் நின்று திரும்பிய சத்யன் “ ஈவினிங் ஆறு மணிக்கு வர்றேன், இங்கேயே சாப்பிட்டு இப்படியே டியூட்டிக்கு கெளம்புறேன், ஏதாவது சிம்பிளா சாப்பாடு செய்து வை மான்சி” என்று சத்யன் கூறியதும்..

சற்றுமுன் இருந்த தவிப்பு காணாமல் போக, சந்தோஷத்துடன் வேகமாய் தலையாட்டினாள் மான்சி

அதன்பிறகு சத்யன் தினமும் மாலை ஆறு மணிக்கு வந்து மான்சியுடன் சாப்பிட்டுவிட்டு துரையுடன் வேலைக்கு போவதும், அதிகாலை வந்து மூன்று மணிநேரம் தூங்கிவிட்டு பிறகு காபி குடித்துவிட்டு வீட்டுக்குப் போவதும் வாடிக்கையானது, இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது தேவை என்றாள் போனில் பேசிக்கொண்டார்கள்

இந்த நாட்களில் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவாகியிருந்தது, சத்யன் சகஜமாக தொட்டுப் பேசினான், மான்சியும் உரிமையோடு பேசினாள், அவனுக்கு அருகில் இருந்து சாப்பாடு பரிமாறுவாள் சில நாட்களில் அவன் கழட்டிப் போட்ட துணிகளை துவைத்து வைத்தாள்,. ‘ குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆகலை அதுக்குள்ள துணியெல்லாம் ஏன் துவைக்கிற’ என்று சத்யன் திட்டினால்.... “ ம் நார்மல் டெலிவரி தானே. சின்னச்சின்ன வேலைகள் செய்யலாம், என்று அவனை சமாதானம் செய்வாள்

இருவருக்குள்ளும் நெருக்கம் இருந்தாலும் . “ இது ஈர சுவர் தொடாதே விழுந்துவிடும்” என்ற அறிவிப்பைப் போல இருவருக்குள்ளும் ஒரு பயம் இருந்தது, பாகியின் கல்யாணமும் அனுசுயாவின் பிரச்சினை ஒரு முடிவுக்கு வராத வரை மான்சியிடம் இன்னும் உரிமையோடு நெருங்க சத்யன் பயந்தான்
அவன் தங்கையின் திருமணம் ஒருபுறமிருக்க, கணவனை இழந்து இன்னும் மூன்று மாதம் கூட முழுதாக ஆகாத நிலையில் சத்யனுக்கு இன்னும் அதிகப்படியான இடம் கொடுத்தால் அது அவன் மனதில் தன்னை தாழ்த்தி விடுமோ என்ற பயம் மான்சிக்கு,, இப்படி இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் மிக நேர்த்தியாக நடந்தது,

பிரிண்டிங் கொடுத்திருந்த பத்திரிகைகள் வந்துவிட,, வீட்டில் மவுனத்தோடு தான் போட்ட பொய் வேஷத்தை கலைத்து உண்மையை சொல்ல தனக்கான அவகாசம் முடிந்துவிட்டதை உணர்ந்த சத்யன் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு ஒரு முடிவோடு மணமகன் ராமசந்திரன் வீட்டுக்கு கிளம்பினான்

அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்தன் வந்துவிட, அவனையும் உடன் அழைத்துக்கொண்டான், சத்யனின் முகவாட்டத்தைப் பார்த்து “ என்னாச்சு சத்யா? ஏதாவது பிரச்சனையா?” என்றான் அரவிந்தன்

பைக்கை ஓட்டியபடி “ பிரச்சனை..... ம்ம் பிரச்சனை தான் அரவிந்த்.. என் வாழ்க்கையை நிர்ணயிக்கும் நேரம் வந்திருச்சு” என்று சத்யன் புதிர் போட......

“ என்ன சொல்ற சத்யா?” என்று குழப்பத்தோடு அரவிந்தன் கேட்க..
சத்யன் பாக்யாவின்யின் திருமணத்தில் இருக்கும் குழப்பத்தை விளக்கமாக கூறினான்,, மான்சியை தான் நெருங்க முடியாமல் தவிக்கும் நிலையை சொன்னான், அனுசுயாவுடன் தனக்கு இரவு நிச்சயதார்த்தம் முடிந்தால் மட்டுமே அதிகாலை பாக்யாவிற்கு திருமணம் நடக்கும் என்ற இக்கட்டான தனது நிலையை கலங்கிய குரலில் சொன்னான், மான்சியின் மீது உள்ள காதலா? தங்கையின் திருமணமா? என்ற தனது குழப்பத்தைச் சொன்னான்

அத்தனையையும் கேட்ட அரவிந்தன் “ என்ன சத்யா இது? என்கிட்ட நீ மொதல்லயே ஏன் சொல்லலை” என்று வருத்தத்துடன் கேட்டான்

“ எனக்கே இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கவே பயந்துபோய் அந்த ஞாபகம் வரும்போதெல்லாம் மான்சியையும் குழந்தையையும் மனசுல நெனைச்சு மனசை தேத்திக்குவேன், இதை யார்கிட்ட போய் சொல்றதுன்னுதான் சொல்லலை அரவிந்த்” என்ற சத்யன் சோகத்துடன் கூறினான்

“ சரி வருத்தப்படாத, நிச்சயம் ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு வழி பண்ணுவார், ஆனா ஒன்னு சத்யா... மான்சியோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம், நீயும் மான்சியும் பிரியுறதை நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்று அரவிந்தன் உறுதியாக கூறினான்
பேசிக்கொண்டே வந்ததில் ராமச்சந்திரன் வீடும் வந்துவிட்டது, சத்யன் உள்ளத்தில் குமுறலோடு இறங்கி சென்று காலிங் பெல்லை அழுத்த, உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை, மறுபடியும் அரவிந்தன் காலிங்பெல்லை அழுத்த “ இதோ வர்றேன்” என்ற ஒரு பெண்ணின் குரலைத் தொடர்ந்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது

கதவைத் திறந்தது ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளம்பெண், கொஞ்சம் சதை பிடித்தால் அழகாக இருப்பாளோ எனும்படி சற்று ஒல்லியாக... கறுப்புக்கும் செந்நிறத்திற்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட பிரவுன் நிறத்தில் இருந்தாள், நிறம் குறைவு என்றாலும் முகம் கலையாகத்தான் இருந்தது,

அவளுக்கு சத்யனை அடையாளம் தெரிந்தது “ உள்ள வாங்க வீட்டுல எல்லாரும் வெளியப் போயிருக்காங்க” என்றாள்

உள்ளே இருந்த சோபாவில் அமர்ந்தனர் சத்யனும் அரவிந்தனும், “ பத்திரிகை வந்துருச்சு கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று சத்யன் “ நீங்க...........” என்று அவளைப்பார்த்து யோசனையோடு இழுக்க...

“ நான் அனுசுயா,, அண்ணாவோட நிச்சயத்துல என்னைப் பார்த்ததில்லையா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் அனுசுயா

சத்யனுக்கு சங்கடமாக இருந்தது, பாக்யாவிடமிருந்த போட்டோவிலாவது பார்த்து இருக்கலாம் என்று எண்ணியவாறு “ ஸாரிங்க நான் கவனிக்கலை” என்றான் ஒருமாதிரியான குரலில்

“ போட்டோ அனுப்பினாங்களே அதைக்கூட பார்க்கலையா?” என்று மறுபடியும் கேட்டாள் அனுசுயா

சத்யனுக்கு மேலும் சங்கடமாக “ ஸாரிங்க வேலை அதிகம், அதான் பார்க்கமுடியலை” என்றான்

“ ஓ........” என்று கூறிவிட்டு அமைதியானவள், புருவம் சுருக்கி எதையோ யோசித்தவள் சற்றுநேரம் கழித்து “ ஏதாவது குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்

“ இல்ல வேனாங்க, இதை வாங்கிகிட்டீங்கன்னா நாங்க கிளம்புவோம்” என்றான் சத்யன், அவன் ராமசந்திரனை எதிர்பார்த்து வந்தான், அவனிடம் பேசி தனது நிலைமையை புரியவைக்கலாம் என்று எண்ணினான், ஆனால் அனுசுயாவிடம் என்ன பேசுவது எப்படி புரியவைப்பது என்று புரியாமல் பார்சலை அவளிடம் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டான்

இவ்வளவு நேரத்திற்கும் அந்த இடத்தில் அரவிந்தன் வெறும் பார்வையாளன் மட்டுமே, சத்யன் எழுந்ததும் அரவிந்தனும் எழுந்து “ வர்றேங்க” என்றுகூறிவிட்டு சத்யனோடு வெளியே வந்தான்

பைக்கில் ஏறி கிளம்பியதும் சற்றுதூரம் கடந்த பிறகு “ என்ன சத்யா அந்த பொண்ணுதான் தனியா இருந்ததே இப்போ சொல்லியிருக்கலாமே?” என்று அரவிந்தன் சிறு கோபத்தோடு சொல்ல

“ இல்ல அரவிந்த்.. நான் அவளோட போட்டோவை பார்க்கலைன்னு சொன்னதுக்கே அந்த பொண்ணு முகம் ஒருமாதிரியா ஆயிருச்சு, இப்போ நான் எல்லாத்தையும் சொன்னா அவ அழகா இல்லாததால நான் பிடிக்கலைன்னு சொன்ன மாதிரி ஆயிடும், அப்புறம் பிரச்சனை மேலும் சிக்கலாயிடக் கூடாது அரவிந்த்” என்று சத்யன் கூற

“ அப்போ என்னதான் செய்யப் போற, இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்று அரவிந்தன் கோபமாக கூறினான்

“ அதான் புரியலை அரவிந்தா... யார் மனசும் நோகாமல் எல்லாமே நடக்கனும்னு நான் நெனைக்கிறேன், ஆனா முடியுமான்னு தான் தெரியலை” என்றான் சத்யன்

“ எனக்கு நம்பிக்கையில்லை சத்யா, கலகம் பிறந்தா தான் நியாயம் பிறக்கும்னு சொல்றேன்” என்று உறுதியாக கூறினான் அரவிந்தான்

இருவரும் குழப்பத்துடனேயே வீடு வந்து சேர்ந்தார்கள், அரவிந்தன் வீட்டுக்குள் வந்து தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு கிளம்பினான், சத்யன் வீட்டுக்கு அரவிந்தன் நல்ல அறிமுகமானவனாகி இருந்தான்

அன்று மாலை வேலை முடிந்து வந்த அரவிந்தன் நேராக மான்சியைத்தான்ப் பார்க்க வந்தான் , கல்யாணம் நெருங்கி வரும் போது மான்சிக்கு உண்மை தெரியாமல் இருந்தால் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிடும் என்ற எண்ணத்தில் தான் அரவிந்தன் சத்யனுக்கு கூட சொல்லாமல் மான்சியைப் பார்க்க வந்திருந்தான்

மான்சியிடம் அரவிந்தன் உண்மையை சொல்ல வந்த அதேவேளையில் சத்யன் வீட்டில் மிகப்பெரிய பூகம்பமே வெடித்திருந்தது

அன்று அளவோடு குடித்துவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்த மூர்த்தி, உள்ளே நுழைந்ததும் மனைவி சாந்தியைப் பார்த்து " என்னடி சாந்தி என் பிள்ளை உத்தமன், நல்லவன், ஒழுக்கசீலன், அவனை மாதிரி ஒரு பிள்ளை யாருக்குமோ பிறக்காதுன்னு சொன்னியே? உன் மகனோட லட்சனத்தை என்கிட்ட கேளு நான் விலாவாரியா சொல்றேன்" என்று ஏளனத்துடன் ஆரம்பித்த மூர்த்தி , உள்ளேயிருந்து வந்து திகைப்புடன் நின்றிருந்த சத்யனைப் பார்த்து

" ஏன்டா அசிங்கம் புடிச்சவனே போயும் போயும் இன்னொருத்தன் பொண்டாட்டி தானா உனக்கு கிடைச்சா? அதுவும் ஒரு கைதியோட பொண்டாட்டியைப் போய் வச்சிருக்கியேடா உனக்கு கேவலமா இல்லையா?" என்று ஆத்திரத்துடன் வார்த்தையை கொட்டியவரின் பார்வை பாக்யாவிடம் திரும்பியது ..

" அன்னிக்கு ஒருநாள் கல்யாண வேலையெல்லாம் எப்படிப் போகுதுன்னு நான் கேட்டதுக்கு.. நீ என்ன சொன்ன என் அண்ணன் எல்லாத்தையும் பார்த்துக்குவாரு நீங்க உங்க வேலைப்பாருங்கன்னு சொன்னேல்ல...... இப்போ உன் அண்ணன் என்ன வேலை செய்றான் தெரியுமா? உன் கல்யாண வேலையை இல்லை,, ஒரு கைதியோட பொண்டாட்டியை வீடு பார்த்து குடி வச்சு குடுபமே நடத்துறான்,இனிமேல் உன் கல்யாணம் அதோகதிதான், உனக்கு பார்த்த மாப்பிள்ளையோட தங்கச்சியை இவன் கல்யாணம் பண்ணப் போறதில்லை, அதனால உனக்கும் கல்யாணம் நடக்கப் போறதில்லை" என்று ஆக்ரோஷமாய் மூர்த்தி கத்த..

அதுவரை அமைதியாக இருந்த சத்யன் " அப்பா என் உயிரை கொடுத்தாவது என் தங்கச்சி கல்யாணத்தை நடத்த எனக்குத் தெரியும், நீங்க உங்க வேலையைப் பாருங்க" என்று கோபத்தை அடக்கிக்கொண்டு சத்யன் கூற..



மான்சிப் பற்றி மூர்த்தி கூறிய ஒன்றைக்கூட சத்யன் மறுக்கவில்லை என்றதும், மூர்த்தி சொன்னது உண்மைதான் என்று அந்த குடும்பத்தினருக்குப் புரிய.. சாந்தி திகைப்புடன் " சத்யா அப்பா சொன்னது உண்மையாடா?" என்று தேய்ந்துபோன குரலில் கேட்க..

சத்யன் தன் தாயின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்தான்

" அவனை ஏன்டி கேட்கிற, என்னை கேளு சொல்றேன், அந்த பொண்ணு சரியான ஓடுகாலியாம், அந்த ஜெயில்ல ஏற்கனவே எத்தனைபேருக்கு பொண்டாட்டியா இருந்தாளோ தெரியலை, கடைசில உன் மகன் கொண்டு வந்து வீடு பார்த்து வச்சிருக்கான்" என்று தான் அரையும் குறையுமாக கேள்விப்பட்டதை அங்கேப் போட்டு உடைத்துக்கொண்டிருக்க

மான்சியைப் பற்றிய கேவலமாக பேசியது தன்னுடைய தகப்பனே ஆனாலும் சத்யன் கொதித்துப்போனான், " ஏய் யாரைப்பத்தி என்ன சொல்ற " என்று கத்தியபடி ஆக்ரோஷமாக தன் தகப்பன் மீது பாய்ந்த சத்யன், அவர் கையை முறுக்கி கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட அதை சற்றும் எதிர்பார்க்காத மூர்த்தி அந்த ஹாலின் ஒரு மூலையில் போய் சுருண்டு விழுந்தார் 

No comments:

Post a Comment