Thursday, November 12, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 22

வீட்டுக்குப் போன ராமு தன் அம்மாவிடம் “என் கல்யாணம் நிக்கக்கூடாதுன்னு அனுசுயா இந்த மாதிரி செய்துருக்காம்மா, ஆனா மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்ம்மா, நானே நேர்ல பார்த்து பேசினேன் ” உண்மையைச் சொல்லி அம்மாவை சமாதானம் செய்தான்..

மகளின் தியாகத்தை நினைத்து உள்ளம் கசிந்தது அந்த தாய்க்கு, மகளுடன் பேசவேண்டும் என்று சொல்ல...

சத்யன் வீட்டில் அரவிந்தனையும் அனுசுயாவையும் எல்லோரும் கிண்டல் செய்து சிரித்தது ஞாபகம்வர “ இல்லம்மா சாப்பிட்டு தூங்கியிருப்பாங்க, காலையில பேசுங்க” என்று சொல்ல...

ராமுவின் அம்மாவுக்கும் மகள் புதிதாக கல்யாணம் செய்துகொண்டவள் என்ற ஞாபகம் வந்து அமைதியானார்,,

அனுசுயாவின் திருமண சம்மந்தமாக அப்பாவிடம் என்ன சொல்லவேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தன் தாயாருக்கு சொல்லிக் கொடுத்தான்


மகன் சொன்னதற்க்கெள்ளாம் தலையசைத்த அம்மா “ ஆமாம்பா இன்னும் எத்தனை காலத்துக்கு அந்த மனுஷனுக்கு பயந்து பயந்து சாகுறது, இனிமே துணிஞ்சு பேசப்போறேன், எனக்கு என் மகன் மகள் வாழ்க்கை தான் முக்கியம், வர்ற மருமகளும் நம்மலை மதிக்கனும்ல” என்று ஆதங்கத்துடன் அம்மா சொல்ல ராமு தலையசைத்துவிட்டு உடை மாற்றுவதற்காக தனது அறைக்குள் போனான்

போனவன் உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்து தனது செல்லை எடுத்து பாக்யாவுக்கு கால் செய்தான், உடனடியாக அவளிடம் நடந்தவற்றை சொல்லவேண்டும்,

எதிர்முனையில் பாக்யாவின் குரல் கேட்டதும் “ பாகி.” என்று ஆர்வத்துடன் அழைத்தான்...

“ ம்ம்” என்றவள் “ ஏன் ரெண்டு நாளா போனே பண்ணலை” என்றவளின் குரல் தழுதழுத்தது..

நேற்று முழுவதும் அனுசுயாவைப் பற்றிய கவலையில் பாக்யாவுக்கு போன் செய்யவில்லை,, ஆனால் இப்போது பாக்யாவின் குரல் அழுவதுபோல் இருக்கவும் ராமுவுக்கு மனசுக்குள் வலித்தது, பாக்யா எதிரில் இருந்தால் கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது,

“ இல்லடா இங்க நம்ம வீட்டுல ஒரு பிரச்சனை, அதான் உனக்கு கால் பண்ணமுடியலை” என்று ராமு வருத்தமாக சொன்னதும்,

“ அய்யோ என்னங்க ஆச்சு” என்று பதட்டமானாள் பாக்யா..
ராமு அனுசுயா காணமல் போனதில் ஆரம்பித்து இப்போது அவன் அம்மாவிடம் பேசியது வரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கோர்வையாக சொன்னான்,

“ அய்யா அரவிந்த் அண்ணாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா, அந்த அண்ணன் ரொம்ப நல்லவர்” என்று உற்சாகத்துடன் அவள் கத்தியதில் ராமுவின் காதுகள் கொய்ங்ங்ங் என்றது

பிரச்சனை தீர்ந்ததில் அவளுடைய சந்தோஷத்தை புரிந்துகொள்ள முடிந்தது ராமுவால், அதன்பின் அவளுடன் நிறைய பேசினான், “நாளை துணிகள் எடுக்க போறோம் உனக்கு என்ன வாங்கி வைக்க?” என்று கேட்டான்..

“உங்களுக்கு பிடிச்சதை” வாங்குங்க என்றாள் காதலோடு,

இருவருக்கும் சந்தோஷம், அந்த சந்தோஷத்தை இருவரும் தங்களைப்பற்றி விஷயங்களை பறிமாறிக் கொள்வதில் காட்டினார்கள்..

ஒருகட்டத்தில் அடுத்து என்ன பேசுவது என்று இருவரும் அமைதியாக “ பாகி.?’ என்று ராமு உருக...

“ என்னங்க?” எதிர்முனையில் பாக்யா போன் வழியாகவே வந்துவிடுவது போல் கரைந்தாள்

“ இல்ல இவ்வளவு சந்தோஷமான நியூஸ் சொல்லிருக்கேன், அதுக்கு பரிசா எனக்கு எதுவும் கிடையாதா?” என்று ராமு முனுமுனுப்பாக கேட்க..

“ என்......ன .. என்ன வேனும்?” என்று பாக்யா தடுமாறினாள்..

“ ஒரேயொரு முத்தம்?, நல்லா அழுத்தமா? ப்ளீஸ் பாகி?” என்றான் கெஞ்சலாக...

“ ம்ஹூம் அதெல்லாம் கிடையாது.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா தான்” என்று சினுஙகினாள் பாக்யா...

“ ப்ளீஸ் பாகி, ஒன்னே ஒன்னு மட்டும், நான் என்ன நேர்லயா கேட்டேன், போன்ல தானே, இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாகி ப்ளீஸ்” என்று குரலில் காதல் வழிய வழிய கெஞ்சினான் ராமு

“ அதெல்லாம் முடியாது, எனக்கு இதெல்லாம் பிடிக்கலை, கல்யாணம் முடியட்டும் நேர்லயே தர்றேன், நான் வச்சிர்றேன் ” என்று வைத்தேவிட்டாள் பாக்யா

ராமு ஏமாற்றத்துடன் போனையப் பார்த்தான், ம்ஹும் இன்னும் மூனு நாள் தானே அதுக்கப்புறம் குடுத்துதான ஆகனும் என்று மனசைத் தேற்றிக்கொண்டு உடை மாற்றிக்கொள்ள எழுந்தான்

அங்கே பாக்யாவோ சமையலறைக்கு ஓடிச்சென்று தன் அம்மாவை கட்டிக்கொண்டு “ அம்மா எல்லா பிரச்சனையும் தீர்ந்தது, அவரோட தங்கை அனுசுயா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், நம்ம சத்யா அண்ணாவோட பிரண்ட் அரவிந்த் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” என்று சத்தமிட்டு கத்தியவள் மறுபடியும் சாந்தியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்

மகள் சொன்னதை நம்பமுடியாமல் திகைப்புடன் “ என்னடி சொல்ற?’ என்று சாந்தி கேட்க..“ ஆமாம் அம்மா, இப்பதான் அவரு போன் பண்ணாரு” என்றவள் ராமு தனக்கு சொன்ன விவரங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அம்மாவிடம் சொன்னாள்

வெளியேப் போய்விட்டு அப்போது தான் வந்த மூர்த்தி பாக்யா சொன்னவற்றை எல்லாம் கேட்டுவிட்டு “ சத்யனுக்காக அரவிந்தன் இவ்வளவு பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை பாக்யா, நட்புன்னா இப்படத்தான் இருக்கனும்” என்றார்..

சாந்தி நடந்தவற்றை ஜீரணிக்க முடியாமல் அமைதியாக சமையலை கவனிக்க, பாக்யா இவ்வளவு நாள் கழித்து தனது அண்ணனுக்கு போன செய்யவேண்டும் என்று வெளியே தோட்டத்திற்குப் போனாள்

மனைவியின் அருகே வந்து தோளில் கைவைத்து தன்பக்கமாக திருப்பிய மூர்த்தி “ சத்யனோட மனசை புரிஞ்சுக்கிட்டு அவன் கூட இருக்குற எல்லாரும் அவனுக்காக பாடு படுறாங்க, ஆனா அவனை பெத்தவ நீ இவ்வளவு சுயநலா இருக்கியே சாந்தி, பெத்த பிள்ளைக்கிட்ட கௌரவம் பார்த்து என்னத்த சாதிக்கப் போறோம், மொதல்ல உன் பிடிவாதத்தால என்னோட பத்து வருஷ தாம்பத்தியமே வீணாப் போச்சு, இப்போ சத்யன் விஷயத்துலயும் அதையே செய்தேன்னா இழப்பு நமக்குத்தான், நல்ல மகன், அருமையான மருமகள், அழகான ஒரு பேரன்னு இழப்பு நமக்குத்தான், அதனால நீ உன் பிடிவாதத்தை கைவிடனும் சாந்தி” என்றவர் சாந்தியை தனியே விட்டுவிட்டு வெளியே போய்விட்டார்,

சாந்தி கண்களில் கண்ணீரும் குமுறும் நெஞ்சமுமாக மகனை எண்ணி வருந்தினாள், இவ்வளவு நாளைக்கு ஒரு போனாவது பண்ணி என்கூட பேசனும்னு தோனுச்சா அவனுக்கு, நான் பெத்த அவனுக்கே இவ்வளவு கர்வம் இருந்தா அவனை பெத்த எனக்கு எவ்வளவு கர்வமிருக்கும், இருக்கட்டும் இன்னும் மூனுநாள் கழிச்சு கல்யாணத்துல வச்சு அவனை நல்ல கேள்வி கேட்கிறேன், என்று ஆத்திரத்துடன் எண்ணிக்கொண்டாள்


எல்லோரும் எதிர்பார்த்த அந்த மூன்றாவது நாளும் வந்தது, பொழுது விடிந்தால் கல்யாணம், அணைவரும் திருமண மண்டபத்தில் ஆளுக்கொரு வேலையாக சுற்றிக்கொண்டு இருந்தனர்,

அரவிந்தனும் அனுசுயாவும் திருமண மண்டபத்திற்கே நேரடியாக வந்துவிட்டனர், பெண் அழைப்பிற்காக பாக்யா அமர்ந்திருந்த கோயிலுக்கு சென்று மனைவியை விட்டுவிட்டு கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்டான் அரவிந்தன்,

அனுசுயாவின் செயலால் சாந்தியின் மனதில் அவள் மீது நல்ல மரியாதை ஏற்பட்டதால், அனுசுயாவுக்கு அங்கே அனைவரிடமும் விஐபி அந்தஸ்துதான்,, ராமுவும் அவசரமாய் கோவிலுக்கு ஓடி வந்து தங்கையை விசாரிக்கும் சாக்கில் பொற்த்தாரகையாக அமர்ந்திருந்த தனது எதிர்காலத்தை ஓரப்பார்வையால் ரசித்துவிட்டு போனான்

அனுசுயாவின் அம்மா கணவருக்கு தெரியாமல் மகளையும் மருமகனையும் பார்த்து பேசிவிட்டு கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்தாள்.

அரவிந்தன் இன்னும் மண்டபத்திற்கு வராத தன் கோபக்கார மாமனாரை நினைத்து ஏதாவது பிரச்சனை செய்வாறோ? பயந்தபடி பார்த்திருத்தான்,

கல்யாணப் பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாய் மண்டபத்திற்குள் வந்ததும் சாந்தியின் கண்கள் பல நாட்களாக காணாத மகனைத் தேடியது, அவன் மண்டபத்தில் இருப்பதே தெரியவில்லை என்றதும், அருணை அழைத்து “ எங்கடா உன் அண்ணனை காணோம்?” என்று கேட்டாள்

“ காலையிலேருந்து இங்கதான்மா எல்லா வேலையையும் கவனிச்சுக்கிட்டு இருந்துச்சு, இப்பதான் அப்பா வந்து , மாப்பிள்ளைக்கு குடை வாங்கனும்னு சொன்னதும் கடைக்கு போயிருக்காரு” என்று தகவல் சொல்லிவிட்டு யாரோ அழைத்தார்கள் என்று ஓடினான்

மாப்பிள்ளைக்கு காசியாத்திரை செல்ல குடை வாங்க வேண்டும் என்று கடைக்கு வந்தவன், காலையிலிருந்து கலங்கிய கண்களும், சோகமான முகத்தோடும் இருந்த மான்சியின் ஞாபகம் வந்து வீட்டுக்கு ஓடி வந்தான்,

அறைக் கதவை திறந்து சத்யன் உள்ளே நுழைந்ததுமே ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டு நெஞ்சில் விழுந்து குமுறியவளை கண்டு, சத்யனுக்கு கண்கலங்கியது

“ அழாத கண்ணம்மா, உன்னை அழைச்சிட்டுப் போகனும்னு எனக்கும் ஆசைதான், ஆனா என் அம்மா வந்து உன்னை அழைக்காம நான் கூட்டிட்டுப் போகமாட்டேன் மான்சி, அதுதான் உனக்கு நான் தர்ற மரியாதை” என்று சத்யன் சொல்ல..

அவன் சட்டையில் தன் கண்ணீரை துடைத்தவள் “ எனக்கும் அது புரியுது, ஆனா எல்லாரும் அங்க இருக்கும்போது நான் மட்டும் இங்க தனியா இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க அதான் அழுதுட்டேன்” என்று கலங்கி நின்ற காதலனை சமாதானம் செய்தாள்..

“ சரி எனக்கு மொதல்ல சாப்பாடு போடு மதியமும் சாப்பிடலை, ரொம்ப பசிக்குது” என்று அவளை விலக்கி விட்டு, சத்யன் கைகழுவ போனான், அவனுக்குத் தெரியும் இவனுடன் சாப்பிடவில்லை என்றால் மான்சி பட்டினியாகத் தான் இருப்பாள் என்று அதனால்தான் பசிக்கிறது என்றுகூறி அவனும் சாப்பிட அமர்ந்தான்

சத்யன் அவசரமாக சாப்பிட்டு, அவளையும் சாப்பிட வைத்துவிட்டு, சிறிதுநேரம் அவள் மனதை மாற்றும் வண்ணம் சிரித்து பேசிவிட்டு கிளம்பினான்,

குடையை வாங்கிக்கொண்டு மண்டபத்திற்குள் சத்யன் நுழைந்தபோது, மாப்பிள்ளை அழைப்பிற்காக ராமு தயாராக இருந்தான், மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வரும்போது மாப்பிள்ளைக்கு பாத பூஜை செய்து கால்விரலில் மெட்டி மாட்ட குடைபிடிக்கும் சம்பிரதாயத்துக்காக சத்யனை தயாராக இருக்கும் படி சொன்னார்கள் உறவினர்கள்




காலையில் இருந்து வேலை சரியாக இருந்ததால், கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக இருந்த சத்யன் “ டேய் அருண் , என்னோட டிரஸ் நல்லாவே இல்லை, நீ போய் மச்சான் முறையை செய்டா” என்று தம்பியை அழைத்து சொல்ல... பின்னாலிருந்து அதை கேட்டுக்கொண்டிருந்த சாந்தியின் கண்கள் கலங்கியது

சாதரணமாகவே உடையில் அழுக்கு படாமல் இருக்கும் மகன்... இன்று தங்கையின் கல்யாணத்துக்காக ஓடியாடி வேலை செய்வது அவளுக்கு பெருமையாக இருந்தது,

“இல்லண்ணா மூத்தவன் நீதான் செய்யனும்னு சொல்றாங்க, உனக்கு எடுத்த புது டிரஸை எடுத்துட்டு வந்திருக்கேன் அதை போட்டுகிட்டு போய் செய்ண்ணா” என்று அருண் பதில் சொல்ல..

“ இல்லடா எனக்கு மனசே சரியில்லை, நாம எல்லாரும் இங்க இருக்கோம் உன் அண்ணி மட்டும் தனியா அங்க அழுதுகிட்டு இருக்கா, அவளுக்கு பாக்யா கல்யாணத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆசை, ஆனா அவளை நான் இங்க வந்தா அவளுக்கு என்ன மரியாதை கிடைக்கும்னு எனக்குத் தெரியும், அதான் வீட்டுக்குப் உன் அண்ணிய சமாதானம் பண்ணி சாப்பிட வச்சிட்டு வர்றேன், என்று சத்யன் வருத்தமாக கூறினான்,,

அருண் அண்ணனின் கையைப் பற்றிக்கொண்டு அமைதியாக இருக்க, அவர்களுக்குப் பின்னால் நின்ற சாந்தி கண்ணீரை அடக்கமுடியாமல் மணமகள் அறைக்குள் ஓடினாள்

அம்மா அழுதுகொண்டே வருவதைப் பார்த்ததும் பாக்யாவும், அவளுக்கு துணையாக இருந்த ரமா அனுசுயா மூவரும் பதறிப் போனார்கள், பாக்யா அம்மாவின் கையைப்பிடித்து “ என்னாச்சும்மா, ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க..

எதுவுமில்லை என்று தலையசைத்தாள் சாந்தி... “ பின்ன ஏன்மா அழுதீங்க?” என்று மறுபடியும் பாக்யா கேட்க...

முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டு விருட்டென்று நிமிர்ந்தவள் “ நானா அவளை கூட்டிட்டு வரவேண்டாம்னு சொன்னேன்?,, இவன் வந்த மாதிரி அவளையும் கூட்டிட்டு வரவேண்டியது தானே?” என்று தலையுமில்லாது வாலுமில்லாது சாந்தி சொன்னதும்..

மூவரும் குழப்பத்துடன் “ யாரு? யாரை கூட்டிட்டு வரலேன்னு நீங்க அழுவுறீங்க?” என்று மூவருமே ஏககாலத்தில் கேட்க..

சிறிது தயக்கத்திற்கு பிறகு “ ம் வேற யாரு என்னை அழ வைக்கப் போறாங்க, எல்லாம் உன் அண்ணனும்” என்றவள் சிறிது தயக்கத்தோடு “ அண்ணியும் தான்.... இவன் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டான் போலருக்கு, அந்த பொண்ணு அங்க அழுதுகிட்டு இருக்காளாம்” என்று மூக்கை உறிஞ்சியபடி சொல்ல..

“ உங்களுக்கு யாருமா சொன்னது?” என் ரமா கேட்டாள்

“ அருணும் சத்யானும் வெளிய பேசிகிட்டு இருந்ததை கேட்டேன், ஏம்மா நீயே சொல்லு? நான் என்ன புள்ள குட்டி பெறாத பாவியா? கூட்டிட்டு வந்தா அப்படியா அவளை துரத்தி விட்டுடுவேன்” என்று ரமாவிடம் கேட்டுவிட்டு மறுபடியும் மூக்கை உறிஞ்சினாள் சாந்தி

ரமா சிறிதுநேரம் அவள் முகத்தையேப் பார்த்துவிட்டு “ நீங்க விரட்ட மாட்டீங்க தான், ஆனா உங்க மருமகளுக்கான மரியாதையை நீங்கதான் கொடுத்து அழைச்சிகிட்டு வரனும், எங்கவீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வந்தப்ப, சத்யனோட அப்பாவை மருமகளைப் பார்த்துட்டு போங்கன்னு சொன்னதுக்கு ‘ என் மனைவியும் நானும் சேர்ந்து வந்துதான் மருமகளையும் பேரனையும் பார்க்கனும், அதுதான் என் பொண்டாட்டிக்கு நான் தர்ற மரியாதைன்னு சொல்லிட்டு போனார்,, அவரோட மகன் சத்யன் அவன் மட்டும் எப்படியிருப்பான்? அவன் பொண்டாட்டிக்கு தகுந்த மரியாதை இருந்தாத்தானே கூட்டி வருவான்?” என்று ரமா கேட்டதும் அமைதியாக தலை குனிந்தாள் சாந்தி..


பாக்யா முன்னால் வந்து தன் கைகளில் இருந்த வளையலை கழட்டி அம்மாவின் கையில் வைத்து “ இந்த வளையல் எப்படி வந்ததுன்னு நெனைக்கிறீங்க? அண்ணன் கடன் வாங்கி வளையல் வாங்கலம்மா? அண்ணன் படுற கஷ்டத்தைப் பார்த்து அண்ணி அவங்க சிறுகச்சிறுக சேர்த்து வச்சிருந்த பணத்துல அண்ணனுக்கே தெரியாம வாங்கிட்டு வந்துட்டு அப்புறமா அண்ணன் கிட்ட சொல்லிருக்காங்க, எனக்கே இப்போ ரமா அக்கா சொல்லித்தான் தெரியும், அண்ணி ரொம்ப நல்லவங்கம்மா” என்று பாக்யா அழ ஆரம்பிக்க அனுசுயா அவளை அணைத்து சமாதானம் செய்தாள்

இதெல்லாம் உண்மையா என்பதுபோல் ரமாவைப் பார்த்தாள் சாந்தி,, ரமா இதுதான் சந்தர்ப்பம் என்று சாந்தியின் கையைப் பற்றிக்கொண்டு, அன்று வளையல் பற்றி உண்மை தெரிந்தபோது சத்யன் மான்சிக்குள் நடந்த உரையாடல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு “ என் நாத்தனாருக்கு நான் வாங்கக்கூடாதான்னு அந்த பொண்ணு அழுதப்ப நானும் அழுதுட்டேன்மா” என்று கண்கலங்கினாள்

“ ஆமாம் அத்தை நானும் அப்ப அங்கதான் இருந்தேன், ஏன் அத்தை நான் யாரோ ஒருத்தி,, உங்க பிள்ளையும் மான்சியும் ஒன்னா சேரனும்னு ஒருநாள்ல முன்னப்பின்ன தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டேன், ஆனா ஒரு அம்மா நீங்க ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க? மான்சி விதவை, ஒரு குழந்தைக்கு அம்மா அப்படிங்கற காரணத்தாலா?” என்று அனுசுயா கேட்க...

“ அய்யோ நான் அப்படியெல்லாம் நினைக்கலையே” என்றாள் சாந்தி

“ அப்படின்னா வேற என்ன காரணம், நம்ம புள்ள போலீஸ்க்காரன் அவனுக்கு சீர் செய்ய மான்சிக்கு யாரு இருக்கா? என்னதான் இருந்தாலும் அவ ஒரு அனாதை தானேன்னு நெனைக்கிறீங்களா அத்தை?, அப்படியொரு நினைப்பு இருந்தா நான் இப்ப சொல்றதை கேட்டுக்கங்க.. மான்சி என் புருஷனுக்கு தங்கை, எனக்கு நாத்தனார், உங்களுக்கு என்ன சீர் வேனுமோ காலம் பூராவும் அவளுக்கு செய்ய நாங்க தயாரா இருக்கோம்,” என்று காரமாக கூறினாள் அனுசுயா

சாந்தி முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள், சத்யனின் கசங்கிய உடையும், சோர்ந்த முகமும் அவள் நெஞ்சில் வந்து வாட்டியது, திடீரென “ அய்யோ நான் அப்படியெல்லாம் நினைக்கலையே,, என் மகனை கைநீட்டி அடிச்சிட்டு, எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவன் கூட பேசுறதுன்னு தான் பிடிவாதத்தில் இருந்தேன் மத்தபடி நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி வேற எந்த எண்ணமும் என் மனசுல இல்லை” என்ற சாந்தி முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டு “ ரமா என் பிள்ளை முகத்தைஎன்னால கண்கொண்டு பார்க்க முடியலை, அவளை அங்க விட்டுட்டு இவன் தங்கச்சிக்கு கல்யாணம் நல்ல துணி கூட போட்டுக்காம இருக்கான், என் புள்ளைய இந்த மாதிரி பார்க்க என்னால முடியாது, அம்மாடி ரமா என்கூட கொஞ்சம் வர்றியாம்மா போய் என் மருமகளை கூட்டிட்டு வந்துடலாம்?” என்று கைநீட்டி ரமாவிடம் கேட்க..

அந்த தாயின் யாசகம் ரமாவுக்கு கண்ணீரே வரவழைத்துவிட்டது, “ இதுக்காதானம்மா நாங்க எல்லாரும் இவ்வளவு கஷ்ட்டப்பட்டோம்” என்றவள் சாந்தியின் கையைப் பற்றி “ வாங்கம்மா போகலாம்” என்றாள்

“ அய்யோ கொஞ்சம் இருங்க அப்பாவையும் வரச்சொல்றேன், அவரையும் கூட்டிப் போங்க” என்று பாக்யா சொன்னதும்.. “ மாமா டைனிங் ஹால்ல இருந்தார், நான் போய் அவரை கூட்டிட்டு வர்றேன்” என்று அனுசுயா வெளியே ஓட...

அவளை தடுத்த சாந்தி “ அனுசுயா உன் மாமாவை வரச்சொல்லிட்டு, நீ உன் அண்ணன்கிட்டப் போய் விஷயத்தை சொல்லி மாப்பிள்ளை அழைப்பை கொஞ்சம் தாமதப்படுத்த சொல்லி சொல்லு, எந்நேரமா இருந்தாலும் என் மூத்த பிள்ளைதான் மாப்பிள்ளைக்கு முறை செய்யனும்” என்று உறுதியாக கூறியதும் அனுசுயா சாந்தியை கட்டியணைத்து “ தாங்க்ஸ் அத்தை” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்


சற்றுநேரத்தில் அறைக்குள் வந்த மூர்த்தி “ என்ன சாந்தி ஏதோ அவசரமா வரச் சொன்னேன்னு அனுசுயா சொல்லுச்சு” என்று மனைவியின் அழுத முகத்தைப் பார்த்து குழம்பியபடி கேட்டார்

கணவனைப் பார்த்ததும் சாந்தியின் அழுகை அதிகமாக, அவர் நெஞ்சில் விழுந்து கேவ ஆரம்பித்தாள்

அழும் மனைவியின் முதுகை வருடியபடி “ என்ன சாந்தி என்னாச்சு?” என்று கலவரத்துடன் கேட்டவருக்கு .. ரமா நடந்தவற்றை எடுத்துச்செல்ல “ ஏய் லுசு இதுக்கு ஏன்டி அழுவுற? நம்ம மருமகளை கூப்பிடத்தான போறோம்” என்று சாந்தியை சந்தோஷத்தில் இன்னும் சேர்த்து அணைத்துக்கொண்டார்

“ அய்யோ அப்பா நேரமாச்சு, உங்க ஆறுதலை அப்புறமா வச்சுக்கங்க, இப்ப வாங்க போகலாம், மாப்பிள்ளை அழைப்பு வேற நிக்கிது” என்று ரமா அவசரப்படுத்த, மூவரும் கல்யாண உபயோகத்திற்காக புக் செய்திருந்த வாடகை காரில் கிளம்பினார்கள் மான்சியை அழைத்து வர…

மான்சியை அழைத்து வர நாங்கள் போவது யாருக்கும் தெரியவேண்டாம் என்று பாக்யா அனுசுயா இருவருக்கும் உத்தரவிடப்பட்டதால், அவர்கள் வாயை மூடிக்கொண்டு சந்தோஷமான தவிப்புடன் அமர்ந்திருந்தனர்,

துரையின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு, மூவரும் மாடிப் படிகளில் ஏறும்போது சாந்தி தடுமாற்றத்துடன் மூர்த்தியின் கையைப்பற்றிக்கொண்டு மெதுவாக மேலேறினாள்

முதலில் போன ரமா மூடியிருந்த கதவைத்தட்ட, சற்றுநேரத்தில் மான்சி வந்து கதவைத் திறந்தாள், மான்சியைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் உடன் வந்தவர்களை மறந்து “ என்ன மான்சி என்னாச்சு” என்று பதட்டமாக கேட்க..
ரமாவைப் பார்த்ததும் மான்சிக்கு அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் குமுறிக்கொண்டு விக்கலும் விம்மலுமாக வெளியே வர ரமாவை அணைத்துக்கொண்டு கதறினாள்

“ என்ன மான்சி இது சின்னப்புள்ளையாட்டம் அழுதுகிட்டு, என்னாச்சு? சத்யன் எதுனா திட்டுனானா?” என்று ரமா கேட்க

ரமாவின் தோளில்மீது சாய்ந்திருந்த “ இல்லக்கா அவர் எதுவுமே திட்டலை, என்னாலதான் அவருக்கு எவ்வளவு கஷ்டம், இன்னிக்கு அவர் தங்கச்சிக்கு கல்யாணம், ஆனா அவர் நல்லதா டிரஸ் பண்ணிக்கலை, சரியா சாப்பிடலை, தாடியோட பார்க்கவே என் மனசு பொறுக்கலை அக்கா, எல்லாம் என்னாலதானே, நானும் எங்கயாவது அனாதை மாதிரி செத்து போயிருக்கலாம், இவருகூட வந்து இவரோட நிம்மதியையும் கெடுத்துட்டேன், எவ்வளவு ஸ்மார்ட்டா இருந்தவர், இன்னிக்கு இந்த மாதிரி,, என்னால அவரை அந்த மாதிரிப் பார்க்க முடியலை அக்கா ” என்று மான்சி கதறியபடி சொல்ல...

மூர்த்தியும் சாந்தியும் அவள் அழுகை சத்தம் கேட்டு உள்ளே வராமல் வெளியே சுவற்றோரம் நின்று அத்தனையும் கேட்டனர், மான்சியின் கதறல் சாந்தியின் நெஞ்சை இரண்டாக பிளந்த ரத்தத்தை வடியவிட்டது,

மூர்த்தியின் கையை கெடடியாக பற்றிக்கொண்டவளிடம் “ நான் சொல்லலை உன் மாதிரியேதான் உன் மருமகளும்னு,, நீயும் உன் மகன் இப்படி இருக்கானேன்னு அழற, அவளும் சத்யனை நெனைச்சு தான் அழறா, ரெண்டுபேருக்கும் ஒரே சிந்தனை தான்” என்று மெல்லிய குரலில் மூர்த்தி தன் மனைவியிடம் சொல்ல..

சாந்தி கண்ணீருடன் தலையசைத்து அவர் சொன்னதை ஒத்துக்கொண்ட அதேவேளை உள்ளே ரமா மான்சியின் தோள்களை பற்றி உலுக்கி “ ஏய் ஏன்மா இப்படி பேசுற, உன்னை கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போகமுடியலையேன்ற வருத்ததுல அந்த மாதிரி இருக்கான், நீ கல்யாணத்துக்கு வந்துட்டா நல்லாயிடுவான் மான்சி, அதான் உன்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்” என்று கூறி ஆறுதல்படுத்த..


“ இல்லக்கா, அவரோட அப்பாவும் அம்மாவும் வந்து கூப்பிடாம என்னை கூட்டிப்போக அவர் விரும்பலை” என்று சொல்லிவிட்டு மான்சி குலுங்கி கண்ணீர் விட..

“ அடி பைத்தியக்காரி உன்னை கூப்பிட நான் மட்டும் வரலை, இதோபார் உன் மாமியார் மாமனாரும் வந்திருக்காங்க” என்று ரமா சந்தோஷமாகச் சொல்லி முடித்த அடுத்த நிமிடம் மூர்த்தி மனைவியின் கையைப்பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்..

ரமா சொன்னதும் திக்கென்று நிமிர்ந்த மான்சி, மூர்த்தியை ஏற்கனவே சந்தித்திருந்தாலும், சாந்தியை பார்ப்பது இதுதான் முதல்முறை, முதலில் என்ன பேசுவது என்ன செய்வது என்று புரியாமல் மான்சி தவிப்புடன் நிற்க்க, ரமா அவள் கையை சீண்டி “ ரெண்டு பேர் கால்லயும் விழு மான்சி” என்று கிசுகிசுப்பாக சொன்னாள்..

சட்டென்று திகைப்பில் இருந்து வெளியே வந்த மான்சி அவள் மட்டும் விழவில்லை, ஓடிச்சென்று தொட்டிலில் உறங்கிய கதிரை தூக்கிக்கொண்டு வந்து, மூர்த்தி சாந்தி இருவரின் காலடியிலும் போட்டுவிட்டு இவளும் விழுந்தாள்..

மூன்று மாதமே ஆன சிறிய குழந்தையை தன் காலடியில் போட்டதும் சாந்தி விதிர்த்துப் போனாள், “ அய்யோ குழந்தையைப் போய் போடுறாளே?” என்று பதறிப்போய் குனிந்து குழந்தையை கையிலெடுத்துக்கொண்டு மான்சியை மற்றொரு கையால் தூக்கிவிட, ரமாவும் உதவிக்கு வந்து மான்சியை தூக்கி நிறுத்த, மான்சி சாந்தியைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு “ அத்தை என்னை ஒதுக்கி வச்சிறாதீங்க?” என்று கண்ணீருடன் வேண்ட...

குழந்தையை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு திரும்பிய சாந்தி மருமகளை இழுத்து மார்போடு அணைத்து “ ச்சீ என்ன பேச்சு பேசுற, இனிமேல் நீதான் என் குடும்பத்தில் எல்லாம், உன்னை ஒதுக்கிட்டு எந்த நல்லது கெட்டதும் நடக்காது, மொதல்ல கெளம்பு உன் நாத்தனார் கல்யாணத்துக்கு” என்று கூறவும்..

மான்சி நம்பமுடியாமல் அதிசயமாகப் பார்க்க ... மூர்த்தி அவளைப்பார்த்து சிரித்து “ ஆபிஸ் வரைக்கும் வந்து நியாயம் கேட்கத் தெரியுது, இப்போ என்னமோ வாயடைச்சுப் போய் நிக்கிற, ம்ம் கெளம்பு” என்று அவரும் உத்தரவிட..

மான்சிக்கு அப்போதுதான் அவர் ஞாபகம் வந்தது போல “ நான் ஏதாவது தவறா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க மாமா” என்று கூறி அவர் காலிலும் விழுந்தாள்..



அதன்பின் அங்கே கண்ணீரும் சிரிப்பும் போட்டிபோட்டுக் கொண்டு பெண்கள் முகத்தில் தாண்டவமாட “ நேரமாச்சு கிளம்புங்கம்மா” என்று பேரனை கையில் வைத்துக்கொண்டு மூர்த்தி உத்தரவிட்டதும்,

பாக்யாவின் கல்யாணத்திற்கு என்று சத்யன் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு, சத்யனின் உடைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு, குழந்தைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சந்தோஷத்தை மொத்த குத்தகைக்கு எடுத்தவள் போல் கிளம்பி வெளியே வந்தாள் மான்சி

சாந்திக்கு மான்சியைப் பார்க்க பார்க்க சந்தோஷம் பிடிபடவில்லை, எந்த நகைநட்டும் இல்லாம மெல்லிய சரிகையிட்ட எளிமையான பட்டுப்புடவையிலேயே இப்படி இருக்காளே இவளுக்கு எல்லாத்தையும் போட்டா கோயில்ல இருக்கும் விக்ரகம் மாதிரி இருப்பாளோ? சாந்தி இவ்வளவு அழகுடன் ஒரு பெண்ணைப் பார்ப்பது இதுதான் முதல்முறை, சத்யனுக்கும் மான்சிக்கும் மனசுக்குள்ளேயே ஜோடிப்பொருத்தம் பார்த்து அவர்களின் பொருத்தத்தில் வியந்துபோனாள்

எல்லோரும் காரில் கிளம்பி மண்டபத்திற்கு வந்தது இறங்கினார்கள், மூர்த்தி பேரனைத் தூக்கிக் கொள்ள, சாந்தி மான்சியின் கையைப்பற்றிக்கொண்டு மணமகள் அறைக்குள் போனார்கள்,

மான்சியைப் பார்த்ததும் பாக்யா எகிறி குதிக்காதது தான் பாக்கி, “அண்ணி” என்று கத்தியபடி மான்சியை இறுக்கி அணைத்துக்கொண்டாள்,



No comments:

Post a Comment