Saturday, July 4, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 1

ஆதவனின் கண்கள் பூமி காதலியை பிரியப் போவதை எண்ணி சோகமாய் சிவந்து போயிருந்த பொன்மாலைப்பொழுது! கோடை மழையில் குளித்து, புத்துணர்வுடன் இருந்த மரங்கள் தென்றலில் தலை துவட்டிக் கொண்டிருந்தன

மலர்களின் முகவரி தேடி வண்ணத்துப் பூச்சி ஒன்று அலைபாய்ந்தபடி அங்கும்மிங்கும் பறந்து கொண்டிருந்தது. சிறகு விரித்த பறவை இனங்களுடன்,நெல் கதிர்கள் சுமந்த வயலுமாய் எங்கும் பரவித்தெரிய, அவற்றிற்கு சுற்றிலும் மதில் சுவராய் தென்னை மரங்களின் அணிவகுப்பு

சுத்தமான காற்றும், அமைதியான அந்தி மாலையும், சுற்றிலும் தெரிந்த பச்சை பட்டு விரிப்பும், பச்சை நெற்கதிர்களின் வாசனையும் ஆளை மயக்க, எப்எம்ல் பாட்டுக் கேட்டுக்கொண்டு கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த சத்யனுக்கு சுகமான தூக்கம் வந்து கண்களை அழுத்த, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த உறக்கத்தை தழுவியவனை அவன் அம்மா தனலட்சுமியின் குரல் உலுக்கி எழுப்பியது


திடுக்கென்று விழித்து எழுந்தவன், “என்னம்மா” என்றான்

“ என்னா சத்யா இப்படி தூங்குற, அங்க மோட்டு கயினியில மடை மாறாம கயினில தண்ணி ரொம்புது, அப்புறமா நாளைக்கு எப்புடிடா களை பறிக்கறது, சேத்துல காலு புதைய போகுதுன்னு எவளும் களைபறிக்க வரப்போறதில்லை ” என்று கோபக் குரலில் அதட்ட

“ அய்யோ கொஞ்சம் அசந்துட்டேன்ம்மா, இதோ போய் கிழ் கயினிக்கு தண்ணிய வடியவிட்டுர்றேன்” என்ற சத்யன் பரபரப்பாக சிறிய வரப்பில் லாவகமாக ஓடினான்

தனம் ஓடும் தன் மகனையே பார்த்தாள், எவ்வளவு படிச்ச புள்ள இப்படி வந்து கஷ்டப்படுறானே, இன்னும் நல்ல படிப்பு படிச்சிருந்தா என் புள்ளயும் நல்ல வேலைக்கு போயிருப்பான், இவன் படிச்ச படிப்புக்கு எங்கயும் வேலை கிடைக்கலையே, எல்லாத்துக்கும் நேரம் கைகூடி வரனும், என்று நினைத்தவள் கலங்கிய கண்களை தனது சேலைத் தலைப்பில் துடைத்துக்கொண்டு மோட்டார் ரூமில் இருந்து சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்து ஒரு பெரிய மூங்கில் கூடையில் போட்டு தலையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்

குனிந்து சத்யன் மண்வெட்டியால் சேற்றை அள்ளி மடையை அடைத்துவிட்டு, கழனியின் மறுபக்கம் போய் கீழ் கழனிக்கு மடையை திறந்துவிட, மேல் கழனியில் தண்ணீர் வடிய ஆரம்பித்தது

நல்லவேளை அம்மா வந்து சொல்லலைன்னா இந்த தண்ணீ வடிய ஒரு வாரம் ஆகும், என நினைத்தபடி, மண்வெட்டியையும் தன் கால்களையும் மடை நீரி கழுவிவிட்டு வரப்பில் ஏறி நின்று சுற்றிலும் பார்த்தான்,

அவன் அம்மா தொலைவில் போவது தெரிந்தது, திரும்பி எதிர் திசையில் பார்த்தான் சத்யன், தூரத்தில் இவன் அத்தை மகள் கௌசல்யா தலையில் புல் கட்டுடன், கையில் ஆட்டை பிடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்

கௌசல்யா சத்யனின் அத்தை மகள், சத்யன் பெரியப்பாவின் மகன் சரவணனை மணந்து அதே ஊரில் வசிப்பவள், நல்லவள் ஆனால் ரொம்ப குறும்புக்காரி, சத்யனின் கழனியை தாண்டித்தான் சரவணன் கழனிக்கு போகவேண்டும்,

சத்யன் கழனி வரப்பு வழியாகா வந்த கௌசல்யா புல்லுக்கட்டை வரப்பில் போட்டுவிட்டு கால்வாயில் இறங்கி முகத்தை கழுவிக்கொண்டே “என்னா மாமா இப்புட்டு நேரம் இங்கே இருக்க, கதிரறுப்பு கூட எதுவும் இல்லையே ” என்று நிமிராமல் கேட்க


“ நெல் கதிர் பால் புடிக்கிற நேரத்தில் பயிரை எலி வெட்டுது மதினி, அதான் இன்னிக்கு நைட்டு வரப்பை சுத்தி கரண்ட் வைக்கலாம்னு இருக்கோம், அப்பா மதுரைக்கு போய் கட்டு கம்பி வாங்கிட்டு வரப்போயிருக்காரு, குச்சி வெட்டி வரப்ப சுத்தி நடனும், நிறைய வேலையிருக்கு மதினி” என்ற சத்யன் அவள் முகத்தை பார்க்காமல் மண்வெட்டியின் பிடியை சரி செய்தபடி பேசினான்

முகம் கழுவி நிமிர்ந்த கௌசல்யா அவனை ஏறஇறங்க பார்த்து “ ஏன் மாமா இந்த சினிமா நடிகருங்க எல்லாம் சிக்ஸ்சுபேக்னு சொல்றாங்களே அது இதுவா மாமா,” என்று எட்டி அவனின் புஜத்தில் இருந்த திரண்ட சதை பகுதியை தொட்டாள்

அவள் தொட்டவுடன் துள்ளி விலகிய சத்யன் “ தொடாம பேசு மதினி, சும்மா இருக்கமாட்டியா எங்கண்ணனை கூப்பிடவா மதினி அவரு காட்டுவாறு சிக்ஸ்பேக், செவன் பேக் எல்லாம்” என்ற சத்யன் “ மதினி மொதல்ல ஆட்டை புடிச்சு கட்டிட்டு பேசுங்க பயிருல இறங்கிற போகுது” என்றான்

“ ஓய் மாமா இந்த கயினியில எங்க வேனா என் ஆடு மேய புல் ரைட்சு இருக்கு தெரியுமா” என்று கௌசல்யா அதிகாரமாக சொல்ல

“ ம்ம் இருக்கும் இருக்கும் இதோ எங்கண்ணனை கூப்புடுறேன் அவரு சொல்லுவாரு உன் ஆடு எங்க மேயனும்னு, மொதல்ல வீட்டுக்கு போய் சோறு பொங்குற வேலையை பாரு, அப்புறம் மனுஷன் வந்து முதுகு தோளை உறிச்சுட போறாரு” என சத்யன் நக்கல் பேச

“ ஏன் மாமா என்னை விரட்டுற உங்கப்பாரு வர்ற வரைக்கும் உனக்கு துணைக்கு இருக்கேனே, நீ வயசு புள்ள மாமா இருட்டிப் போச்சு வேற, தனியா இருக்க வேனாம், அதனால நான் கொஞ்ச நாழி பேசிகிட்டு இருக்கேன்” என்ற கௌசல்யா வரப்பில் உட்காரா

“ அட்ராசக்கை எனக்கு நீ துணையா, இந்தாலா மொத நீ கெளம்பு, என்னை எந்த பிசாசு வந்து பிடிச்சாலும் பரவாயில்லை” என சத்யன் கடுப்பாக கூற

“ ஆமா நீங்க சொல்லுவீங்க நாளைக்கு என் தங்கச்சி வந்து அதக் காணோம் இது குறையுதுன்னு என்கிட்ட வந்து கேட்டா நான் என்னத்த பதில் சொல்லுவேன்” என்று கௌசல்யா கைகளை ஆட்டி அசைத்து பேச

சத்யனுக்கு சிரிப்பு வந்தது “ அது யாரு மதினி உங்க தங்கச்சி” என்றான் வாய்க் கொள்ளா சிரிப்புடன்

“ ம் ஒன்னு தெரியாத பச்சப்புள்ள எல்லாம் வரப்போற உங்க பொண்டாட்டியைத்தான் சொன்னேன், ஏன் மாமா நீ இருக்கிற அழகுக்கும் ஒசரத்துக்கும் இந்த சுத்துப்பட்டுல எங்கயும் பொண்ணு கிடைக்காதாமே உங்காத்தா, அதான் என் அயித்தக்காரி ஊரெல்லாம் பீத்திகிட்டு திரியிறா, என் புருஷனை விடவா நீ அழகு, என் புருஷன்தான் இந்த ஜில்லாவுலயே அழகு” என்று அவள் நீட்டி முழக்க

இவளைவிட்டால் விடியவிடிய பேசிக்கொண்டே இருப்பாள் என்பதை உணர்ந்த “ஆமாம் எங்கண்ணன் தான் இந்த ஜில்லாவுலயே அழகு நான் ஒத்துக்கிறேன், இப்போ எனக்கு குச்சி வெட்டி வைக்கிற வேலை இருக்கு, அப்புறம் உன் மாமன் வந்து இம்புட்டு நேரமா என்ன பண்ணேன்னு கத்துவாரு, நான் போறேன்” என்று சத்யன் அவளை சுற்றிக்கொண்டு வரப்பை தாண்டி போனான்

“ அய்ய ஆம்பளைப் புள்ள இப்படி பயந்துகிட்டு ஓடுறியே” என ஏளனம் பேசியவாறு கௌசல்யா புல்லுக்கட்டை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆட்டை கையில் பிடித்தவாறு கிளம்பினாள்

மோட்டார் ரூம் அருகில் வந்த சத்யன் திரும்பி கௌசல்யாவை பார்த்தான், யப்பா எவ்வளவு வாய் பேசுறா, எப்புடித்தான் எங்கண்ணங்காரன் வச்சு சமாளிக்கிறானோ கடவுளே, என்று நினைத்தவாறு சிரித்தபடி தரையில் குத்தங்காலிட்டு அமர்ந்து கீழே கிடந்த வேப்பங்குச்சிகளை ஒருஅடி நீளத்துக்கு துண்டு போட ஆரம்பித்தான்

சிறிதுநேரத்தில் கும்மிருட்டு கவிழ ஆரம்பிக்க, சில்வண்டுகளின் ரீங்காரம் காதை துளைத்தது, சத்யன் எழுந்து மோட்டார் ரூமுக்குள் போய் லைட் போட்டுவிட்டு, மறுபடியும் வந்து குச்சிகளை துண்டு போட்டான்'




பின்னால் சிறு வட்டமாக டார்ச்சின் ஓளியும் சருகுகள் மிதிபடும் ஓசையும் கேட்க, சத்யன் திரும்பி பார்த்தான், அவன் அப்பா துரைராஜ்தான் வந்துகொண்டு இருந்தார், சத்யன் துண்டு போட்ட குச்சிகளை எல்லாம் சேர்த்து கட்டாக கட்டிக்கொண்டு எழுந்தான்

அவனருகே வந்த துரை சத்யனின் வயதான தோற்றத்தை போல இருந்தார், அதே கம்பீரம் உயரம் என கச்சிதமாக இருந்தார், ஆனால் உழைப்பின் முதுமை முகத்தில் சற்று அதிகமாக சுருக்கங்களை ஏற்படுத்தியிருந்தது

“ என்னாடா மவனே குச்சி ரெடியாடுச்சா, நீ போய் வரப்ப சுத்திலும் நட்டு வச்சுட்டு வா நான் கம்பியை பிரிச்சு வைக்கிறேன்” என்றவர் டார்ச்சை அவனிடம் நீட்ட, சத்யன் அதை வாங்கிக்கொண்டு வரப்பை நோக்கி போனான்

வரப்பை சுற்றிலும் ஐந்தடிக்கு ஒரு குச்சி வீதம் அழுத்தி நட்டான், சுற்றிலும் நட்டு முடிக்க கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆனது, சத்யன் முடிக்கவும், அவன் அப்பா கம்பியுடன் வரவும் சரியாக இருந்தது

“ சத்யா நீ இந்த பக்கமா இருந்து வா நான் அந்த பக்கம் இருந்து வர்றேன், இந்த எல்லனை கூட ஒத்தாசைக்கு வரச்சொன்னேன், இதோ வர்றேன்னுட்டு போனான் பொறவு பார்த்தா சாக்னா கடையில இருந்து தள்ளாடிக்கிட்டு வர்றான், காலையில் விழுந்த எலியை எல்லாம் அள்ளிகிட்டு போக வருவான்ல்ல அப்ப பேசிக்கிறேன் அவனை ” என்று சலிப்புடன் கம்பியோடு துரை குனிய

“ அப்பா நீங்க போய் செட்டுல உட்காருங்க நான் இதை பார்த்துக்கிறேன்” என்ற சத்யன் அவர் கையில் இருந்த கம்பியை வாங்கினான்

“ வேனாம்டா மவனே நீ மட்டும் பார்த்தா நாழியாகும் நானும் செய்யறேன் சுருக்கா முடியும்” என்றவரை தடுத்து அவரை அனுப்பிவிட்டு சத்யன் பரபரவென்று கம்பியை குச்சிகளில் சுற்ற ஆரம்பித்தான்

கம்பியை சுற்றிவிட்டு அதன் முனையை காப்பர் வயரில் முறுக்கி அதை உயரமான தொரட்டி கொம்பில் மாட்டி மேலே போகும் மெயின் மின் வயரில் மாட்டிவிட்டு, தொட்டியில் இருந்த தண்ணீரில் முகம் கைகால் கழுவிவிட்டு பம்புசெட் ரூமுக்கு வந்தான்

கட்டிலில் உட்கார்ந்திருந்த துரை எழுந்து சாப்பாடு இருந்த இரண்டு வெங்கல தூக்குசட்டியை எடுத்து வந்து வைத்துவிட்டு, உள்ளே போய் இரண்டு பெரிய தேக்கு இலைகளை எடுத்து வந்தார், இலைகளை கழுவிவிட்டு சத்யன் எதிரில் வைத்துவிட்டு தானும் அமர்ந்தார்

சத்யன் தூக்குசட்டியில் இருந்த சோற்றை அள்ளி இரண்டு இலையிலும் வைத்துவிட்டு இன்னோரு தூக்கில் இருந்த குழம்பை சோற்றில் ஊற்றினான், “ என்னாப்பா கருணைக்கிழங்கு புளிக்கொழம்பு போல வாசனை தூக்குது, என்றபடி அவசரஅவசரமாக பிசைந்து உருட்டி வாயில் போட்டான்

“என்னடா மவனே ரொம்ப பசியா இருந்தியோ, மெதுவா சாப்புடு கண்ணு பொறக்கேற போகுது” என்று கரிசனமாக கூறிய துரை தான் சாப்பிடுவதை விட்டுவிட்டு உள்ளே இருந்து சொம்பை எடுத்துவந்து தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு எடுத்து வந்தார்

அவர் வருவதற்குள் சத்யன் இலை காலியாக இருந்தது, துரை அவசரமாக குனிந்து அவன் இலையில் மறுபடியும் சாப்பாட்டை அள்ளிவைத்து குழம்பை ஊற்றினார்,

சத்யன் சோற்றை பிசைந்தபடி “ மதியானம் அம்மா கொண்டு வந்த சாப்பாடு ஆட்டுக்கார முனியன் இங்கயே திரிஞ்சான், சரின்னு அவனுக்கு பாதி சாப்பாட்டை கொடுத்துட்டு மீதியை தான் நான் சாப்புட்டேன், அதான் அப்பா அதிகமா பசியெடுத்துருச்சு, நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு சத்யன் சாப்பாட்டை ஒரு கை பார்த்தான்

துரைக்கு தன் மகனை பார்த்து கண்கலங்கியது, எப்புட்டு படிச்சாலும் எந்த கர்வமும் இல்லாம முகம் சுழிக்காம தன்னுடைய வேலைகளை இழுத்துப்போட்டு செய்யும் தன் மகனை எண்ணி துரைக்கு பெருமையாக இருந்தது. தன் அப்பாவின் பெயரை மகனுக்கு வைத்ததால் பெயர் சொல்லியே சத்யனை அழைக்க மாட்டார் துரை, எப்பவுமே மகனே என்றுதான் அழைப்பார்

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்திரங்களை கழுவிவிட்டு கயிற்றுக்கட்டிலில் ஆளுக்கொரு மூளையாக உட்கார்ந்தனர், இன்று விடியவிடிய கண்விழிக்க வேண்டியதில்லை, இன்னும் நான்கு மணிநேரம் மின்சாரம் இருக்கும் அதுவரை கண்விழித்தால் போதும், அதன் பிறகு வயரை எடுத்துவிட்டு தூங்கலாம் என சத்யன் எண்ணிக்கொண்டு இருந்தான்

“ மவனே இன்னிக்கு மதுரையில நம்ம சேர்மனோட மருமகனை பார்த்தேன், அதான்ய்யா நம்ம மாயத்தேவர் திருமங்கலத்தில் பொண்ணு குடுத்தாரே அந்த புள்ளயோட புருஷன் தான் ரொம்ப நல்ல பய நம்ம ஊர்ல எல்லாரையும் பத்தி விசாரிச்சான், அவன்கிட்ட உனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணச்சொல்லி சொன்னேன்டா மவனே,

" உனக்கு காரு ஓட்டத் தெரியும்னு சொன்னேன், உடனே அவரு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு மதுரையில் அவருக்கு பெரிய ஜவுளிக்கடைக்காரங்க வீட்டில் காரு ஓட்ட ஆளு வேனும்னு சொன்னாங்களாம் அங்க கேட்டுட்டு நாளைக்கு சேர்மன் வீட்டுக்கு போன் பண்றேன்னு சொல்லிருக்காரு கண்ணு, நீ என்னா சொல்ற” என்று மகன் முகத்தை பார்த்தார் துரை

சத்யன் எதுவும் கூறாமல் அமைதியாக தலை குனிந்தபடியே இருக்க, அவனுடைய மனநிலை அறிந்து “ உன் மனசு எனக்கு புரியுதுடா மவனே, ஆனாக்க இந்த மூணு ஏக்கர் வயக்காட்டை நம்பிகிட்டு ரெண்டு ஆம்பளைங்களும் வீட்டுல இருந்தா வேலையாகாதுடா கண்ணு, ஏற்கனவே உன் தங்கச்சி ஒருத்தியை கட்டிக்கொடுக்கவே பெரிய போராட்டமா இருந்துச்சு,

" இப்போ இன்னோரு புள்ளயும் கல்யாணத்துக்கு ரெடியா நிக்குது, நீ எங்கயாவது வேலைக்கு போனாதான்டா மவனே நல்லது, இந்தா நீ வெறும் குழம்ப ஊத்தி சாப்புடுற ஒரு கூட்டு பொறியல் கூட இல்லை, இதை பார்க்கறப்போ நம்ம புள்ளக்கி நல்ல சாப்பாடு கூட போட முடியலையேன்னு மனசு கலங்குதுடா மவனே, நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லு கண்ணு” என்று துரை வேண்டுதலாக சத்யனிடம் கூறினார்

சத்யன் மனதுக்குள் வேதனையாக இருந்தது, எம்ஏ தமிழ் இலக்கியம் படித்துவிட்டு அதற்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை, ஆனால் பொழுதுபோக்காக நன்பர்களுடன் கற்றுக்கொண்ட டிரைவிங்க்கு உடனே வேலை கிடைக்கிறது

ஆனால் அப்பா சொல்வதும் நியாயம்தான் இப்போதெல்லாம் விவசாயத் தொழில் அத்தனைக்கும் இயந்திரங்கள் வந்தபிறகு ஆட்களின் தேவை ரொம்பவே குறைந்துபோய், நிறைய பேர் திருப்பூரில் இருக்கும் பனியன் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு போய்விட ஊர் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டு வருவது சத்யன் அறிந்த ஒன்றே, ஒருசில வயதானவர்கள் மட்டுமே ஊரில் இருந்துகொண்டு வயக்காட்டையும் ஆடு மாடுகளையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்,

பிறகு சத்யன் ஒரு முடிவுடன் நிமிர்ந்து “சரிப்பா நாளைக்கு சேர்மன் வீட்டுல போய் என்ன சொல்லாருன்னு பார்த்துகிட்டு வாங்க நான் வேலைக்கு போறேன், அப்படியே மதுரையில எங்க வந்து அவரை பார்க்கனும்னு கேட்க்கங்க” என்று சத்யன் தனிந்த குரலில் கூறினான்,

துரைக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது, எழுந்து வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு “ மகனே உனக்கு விருப்பமா இருந்தா மட்டும் போப்பா இல்லைன்னா வேனாம்” என்றார்

“ அதெல்லாம் இல்லப்பா நானே எங்கயாவது வேலைக்கு போகனும்னுதான் நெனைச்சேன், இப்போ நீங்க சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன் அவ்வளவுதான், சரிப்பா நீங்க தூங்குங்க நான் கழனியை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர்றேன்” என்று எழுந்து போனான் சத்யன்

“ பாத்து ஜாக்கிரதையா போடா மவனே” என்று மகனை எச்சரிக்கை செய்துவிட்டு கட்டிலில் படுத்துவிட்டார் துரை

சத்யன் ஒரு கையில் டார்ச்சும் மறுகையில் மரத்தடியும் வைத்து முன்னால் தட்டிக்கொண்டே நடந்தான், அவன் மனதில் நாளைக்கு சேர்மனின் மருமகன் சொல்லப்போகும் வேலையை பற்றியே சிந்தித்தது, அந்த வேலை கிடைத்தால் தன் குடும்பத்துக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று நினைத்தான் 





" பொன்னுயர் நாட்டினைப்...

" புதியதோர் உலகமாய்....

" தன்னுயிர் போலவே..

" தமிழர்கள் காத்தனர்.....

" கற்றவன் மேலவன்..

" கடுந்தொழில் செய்பவன்...

" உற்றவன் எனும்பெயர்...

" உழுவதே தமிழ்க்கடன் ...

" பசியெனத் தோன்றுவார்..

" பகைவர்கள் ஆயினும்....

" புசியென சொல்லுவோம்...

" புதியதோர் தமிழனாய்!




No comments:

Post a Comment