Thursday, July 9, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 8

பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து கண்மூடி சாய்ந்த சத்யனுக்கு மான்சியின் நினைவுகள் மனம் முழுவதும் மதுரையில் மான்சியிடமே இருந்தது . இரவு நடந்ததை நினைத்தால் சத்யனின் உடல் இப்போதும் கூசி சிலிர்த்தது

தனது ஆத்திரத்தால் நடந்திருக்க வேண்டிய விபரீதம் சத்யனின் உள்ளத்தை வதைக்க கண்ணோரம் ஒருத்துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது, யாரும் கவனித்துவிட போகிறார்கள் என நினைத்து அவசரமா கண்களை துடைத்துக்கொண்டான்

மான்சி ஏன் அப்படி கிடந்தாள், உண்மையாவே இதில் அவள் தவறேதுமில்லையா, அந்த வஞ்சகன் தான் எதையாவது கலந்து மான்சிக்கு கொடுத்திருப்பானா, என்று நினைத்தவனுக்கு ரோகித்தின் ஞாபகம் வந்ததும் உடலும் மனமும் கொதித்து குமுறியது , அவனை ஏன் கொலை செய்யாமல் வந்தோம் என்று இப்போது வருந்தினான்



மான்சி சொன்னது பொய்யாகவே இருந்தாலும் தான் அவளிடம் நடந்துகொண்ட முறை ரொம்ப தவறு என்று இப்போது புரிந்தது, கையெடுத்துக் கும்பிட்ட அவளின் கண்ணீர் முகம் மறுபடியும் மறுபடியும் நினைவில் வந்து அவனை வதைத்தது

ஆனால் சத்யன் ஒருவிஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தான்,... எப்போதுமே மான்சியால் தன்னுடன் ஒத்து வாழமுடியாது, அவளின் பழக்கவழக்கங்கள் வேறு என்னுடைய பழக்கவழக்கங்கள் வேறு இரண்டுக்கும் நடுவே தாம்பத்யம் என்பது விழலுக்கிறைத்த நீராய் வீனாகத்தான் போகும், அதைவிட இப்போது விலகிவிடுவது மேல் என்பதில் உறுதியாக இருந்தான் சத்யன்

அவனின் சிந்தனை ஓட்டத்தை விட மெதுவாக சென்ற பஸ் ஒருவழியாக பாலமேட்டில் நின்றதும் இறங்கிய சத்யன், பத்துநாள் பட்டினி கிடந்தவன் போல் சோர்ந்த நடையுடன் தனது வீட்டை அடைந்தான், தெருக்கதவு ஒருக்களித்து மூடியிருக்க தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்

துரையின் வீடு அந்த கிராமத்தில் ஒரளவுக்கு பெரியதுதான், சீமை ஓடு போடப்பட்ட வீடு நடுவில் முற்றமும், அதை சுற்றிலும் தாழ்வாரமும், பக்கவாட்டில் எதிரெதிராக இரண்டு அறைகள் இருக்க, தாழ்வாரத்தை கடந்துபோனால் அடுக்களையும் அதற்கடுத்து மூட்டைகள் அடுக்கும் ஒரு அறையும் இருந்தது, பின்கட்டில் ஒரு உறைக் கிணறும் அதன் பக்கத்தில் தென்னை ஓலை வேய்ந்த ஒரு குளியலறையும் இருக்க தோட்டத்தில் மல்லிகை செடிகளும் செம்பருத்தி செடிகளும் வாழைமரங்கள் நடப்பட்டிருந்தது


கூடத்தில் அமர்ந்து முருங்கைக் கீரையை ஆய்ந்துக்கொண்டு இருந்த சத்யனின் அம்மா தனலட்சுமி சத்யனை பார்த்ததும் “ என்னய்யா ராவைக்கு வராமப் போய்ட்ட உனக்கு சோறு எடுத்து வச்சுட்டு கார்த்தால தான் நீர் வார்த்தேன்,ஏன் ராசு நேத்து வரலை” என்று அக்கறையோடு மகனை விசாரிக்க

அந்த அன்பான விசாரிப்பு சத்யனின் கண்களை கலங்க வைக்க, முருங்கைக் கீரை இருந்த முறத்தை நகர்த்தி வைத்துவிட்டு தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்

அவன் இதுவரைக்கும் இதுபோல நடந்ததில்லை என்பதால் பதறிப்போன தனம் “ என்னய்யா ராசு என்னாச்சு ஏன் இப்புடி கலங்கி போயிருக்க” என்று கேட்க
சிறிதுநேரம் மவுனமாக இருந்த சத்யன் பிறகு “ அம்மா எனக்கு அந்த வேலை புடிக்கலை அதனால வேலையை விட்டுட்டு வந்துட்டேன்” என்று சொன்னான்

" அட அம்புட்டுதானா இதுக்கா இப்புடி கலங்குவ, நானே அந்த வேலையை விட்டுப்புட சொல்லலாம்னுதே இருந்தே, எம்புட்டு அலைச்சல்டா ராசு இந்த ஒரு மாத்தையில ஆளு பாதியா இளச்சுப் போய்ட்ட, நீ முடிஞ்சா நம்ம காடுகரையை பார்த்துக்க, இல்லாட்டி வீட்டுல இரு நாங்க பொங்கி போடுரோம் நீ வேற எங்கயும் போக வேனாம்ய்யா ” என ஆறுதல் மொழிக் கூறி மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்

சத்யனின் கண்ணீர் அவன் தாயின் மடியை நனைத்தது, அப்போது மக்காச்சோளத்திற்க்கு களை வெட்டிவிட்டு வந்த அவன் தங்கை பூங்கொடி சத்யன் அம்மா மடியில் படுத்திருப்பதை பார்த்து பதறியடித்து அருகே வந்தாள்

“ என்னாண்ணே இப்புடி படுத்திருக்க மேலுக்கு சொகமில்லையா” என்று அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்

“ அதெல்லாம் ஒன்னுமில்ல பூங்கொடி, நீபோய் அண்ணனுக்கு வென்னி வை குளிச்சுட்டு சாப்புட்டு நல்லா உறங்கட்டும்” என மகளுக்கு தனம் உத்தரவிட

“ இதோ போய் வென்னி வைக்கிறேன்” என்று பூங்கொடி பின்கட்டுக்கு ஓடினாள் 


சத்யன் தாயின் மடியில் இருந்து எழுந்து கண்களை துடைத்துக்கொண்டு, “ நா பல்லு விலக்கிட்டு வர்றேன் பழையது இருந்தா போட்டு வைம்மா ரொம்ப பசியா இருக்கு” என்றவன் எழுந்து தாழ்வாரத்து கொடியில் இருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பின்கட்டு சென்றான்

தாயின் மடியில் படுத்துக்கொண்டு விட்ட கண்ணீர் அவன் மனதை ஓரளவுக்கு சமாதானப் படுத்தியிருந்தது தென்னத் தடுக்கில் நுழைந்து பல் விலக்கி விட்டு வெளியே வர, அதற்குள் பூங்கொடி வென்னீர் பாத்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு அவனெதிரே வந்தாள்

“ அண்ணே வென்னி ரெடியாயிருச்சு ஒரு முட்டா நீ குளிச்சுட்டு வந்துருண்ணே” என்றவள் தடுக்கினுல் நுழைந்து அங்கிருந்த சிறிய பித்தளை அரைஅண்டாவில் தண்ணீரையும் வென்னீரையும் சரிவிகிதத்தில் கலந்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்

“ இருண்ணே நா போய் சோப்பு எடுத்துட்டு வர்றேன்” என்று போனவள் அதேவேகத்தில் திரும்பி வந்து சத்யனிடம் சோப்பை கொடுத்தாள்
சத்யன் குளித்துவிட்டு அடுக்களைக்குள் வர, அவனுக்கு தயாராக வெங்கலக் கிண்ணியில் பழையதும் பக்கத்தில் ஒரு தட்டில் பச்சைமிளகாயும் இரண்டு மாவடுவும் இருக்க, ஏதோ விருந்தை பார்த்தவன் போல நாக்கில் நீர் ஊற சத்யன் சோற்றின் முன் அமர்ந்தான்

அவன் அரக்கப்பரக்க உணவை அள்ளி விழுங்குவதை பார்த்த தனமும் பூங்கொடியும் கண்கலங்கினர், மறுபடியும் கிண்ணியில் சோற்றை போட்ட பூங்கொடி அவனு தண்ணீர் வைத்துவிட்டு வெளியே போனாள்

தாழ்வாரத்தின் ஓரத்தில் கிடந்த சிறிய மரக்கட்டிலில் ஒரு போர்வையை எடுத்துவந்து விரித்த பூங்கொடி தலையனை எடுக்க உள்ளே போனாள்
உணவு முடித்து வந்த சத்யன் அப்படியே கட்டிலில் கால்நீட்டி படுத்தான்.

“இந்தாண்ணே இதை தலைக்கு வச்சு படுத்துக்கோ, நேத்து வேலைக்கு எங்கயும் போகலை ..சரி சும்மாத்தானே இருக்கோம்னு வீட்டுல இருந்த கேல்வரகை குத்தி புடைச்சு அதோட கொங்கைய துணியில அடைச்சு தலைகானியா தைச்சு வச்சேன், இதுல தலவச்சுதூங்குனா தலைவலி வராது” என்றவள் அவன் தலையை தூக்கிவிட்டு தலையனையை அடியில் வைத்துவிட்டு சாப்பிடுவதற்கு அடுக்களைக்கு போனாள்

ரொம்பவே மென்மையாக இருந்த அந்த தலையனையில் தலைவைத்து படுத்த சத்யன் இரவுமுழுவதும் கண்விழித்த அசதியில் சீக்கிரமே உறங்கிப்போனான்


அடுக்களையில் சாப்பிட்டு கொண்டிருந்த தனம் தன் மகளிடம் சத்யன் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்ட விபரத்தை சொல்ல,

“ அதுதா ஆத்தா அண்ணே அப்புடி கவலை படுது, அட போம்மா அண்ணன் எங்கயும் வேலைக்கு போகவேண்டாம், அதோட படிப்புக்கு தகுந்தாப்ல ஏதாவது வேல கெடைக்கற வரைக்கும் நம்ம வயலை பார்த்துக்கட்டும், செலவுக்கு காசு பத்தலைன்னா நாம ரெண்டு பேரும் கூலிக்கு போகலாம்மா, இனிமே அண்ணனை எங்கயும் அனுப்பாத, நா அப்பாருக்கிட்டயும் சொல்லுறேன்” என்று ஒரு வாய் சோறும் ஒரு வார்த்தையுமாக சொல்ல

" உன் அண்ணன் மதுரைக்கு வேலைக்கு போறது உங்கப்பாருக்கும் புடிக்கலை பூங்கொடி, புள்ள ரொம்ப எழைச்சு போய்ட்டான்னு நேத்து வயக்காட்டில் பொழம்பிகிட்டுதா இருந்தாக, சரி நீ சாப்பிட்டு மதியானத்துக்கு சோத்தை பொங்கிட்டு, கருவாட்டு பானையில நாலு நெத்திலி கிடக்கும் அதப்போட்டு கொழம்பு வை நல்லா காரமா வை அப்பதா அண்ணனுக்கு புடிக்கும்” என்று சொல்லிவிட்டு பின்கட்டில் போய் கைகழுவிவிட்டு வந்தாள் தனம்

அடுக்களையின் மூலையில் இருந்த நெல்லுக் கொட்டும் குந்தானிக்குள் கையைவிட்டு இரண்டு நாட்டு கோழி முட்டையை எடுத்து மகளிடம் கொடுத்து “இத வெங்காயம் போட்டு ரெண்டு மெளகை தட்டிப்போட்டு பொரிச்சு அண்ணனுக்கு மட்டும் வை, நா போய் வள்ளியாத்தா காட்டுல மாத்தாளுக்கு வேலைக்குப் போய்ட்டு வர்றேன்” என்று உடனே கிளம்பினாள்

அந்த ஊரில் இது ஒரு பிரச்சனை ஆட்கள் எல்லாம் வெளியூர்களுக்கு வேலைதேடி போய்விட. விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் மாத்து ஆளாய்ப் போய் வேலை செய்யவேண்டும், இன்று இவள் போனால்தான் நாளை அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வேலைக்கு வருவார்கள்... கூலியாக கொடுத்தால் கூட வாங்க மாட்டார்கள் மாத்து ஆள்தான் வரவேண்டும் வேலைக்கு

பூங்கொடி தனது அண்ணனுக்காக சமையலை கவனமாக செய்ய ஆரம்பித்தாள்

ராஜாராமன் கிளம்பி கடைக்கு போய் இறங்கி கொண்டு மான்சி கல்லூரிக்கு செல்ல காரை திருப்பி அனுப்பினார், அன்று மான்சி ரொம்பவும் தாமதமாக எழுந்து குளித்து உடைமாற்றி கல்லூரிக்கு செல்ல தயாராகி தனது மாடி அறையிலிருந்து கீழே வந்தாள்

டைனிங் ஹாலில் இருந்த கண்ணாடி மேசையில் காலை உணவு தயாராக இருக்க, சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்த மான்சி டேபிளில் இருந்த நாப்கினை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு பீங்கான் பிளேட்டை எடுத்து வைக்க, அதற்க்குள் அங்கே வந்தாள் நீலவேணி

“ என்னம்மா இவ்வளவு நேரமா தூங்கிட்ட, ஆமா நேத்து நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த,நான் நேத்து டேப்லட் போட்டிருந்ததால சீக்கிரமே போய் படுத்துட்டேன், நீ நைட் வந்து சாப்பிடலன்னு அன்னம்மா சொன்னாங்க, பார்ட்டியிலயே நல்லா சாப்பிட்டு வந்துட்டியா” என்று மகளை விசாரித்தபடியே தட்டில் பூரியை வைத்து குருமாவை ஊற்றினாள் நீலவேணி

மான்சி பூரியை பிய்த்து குருமாவில் தொட்டுக்கொண்டே “ஆமாம் மம்மி பார்ட்டியிலயே சாப்பிட்டேன், நைட் வந்ததுமே உங்க ரூமுக்கு வந்து பார்த்தேன் நல்லா தூங்கிகிட்டு இருந்தீங்க அதான் டிஸ்டர்ப் பண்ணாம என் ரூமுக்கு போய் படுத்துட்டேன்” என்று முதன்முறையாக தன் தாயிடம் சரளமாக பொய் சொன்னாள் மான்சி

மகளின் பாச்சை நம்பிய நீலவேணி மான்சி சாப்பிட்டதும் ஆப்பிள் ஜுஸ் குடிப்பாளே என்று நினைத்துக்கொண்டு அவசரமாக ஜுஸ் தயாரித்து எடுத்து வந்தாள்

மான்சி மவுனமாக சாப்பிட்டுவிட்டு அம்மா குடுத்த ஜுஸையும் குடித்துவிட்டு எழுந்து கைகழுவ, அப்போது மாணிக்கம் வந்து சின்னம்மா ரெடியாயிட்டீங்களா . அப்பாவை கொண்டுபோய் கடையில விட்டுட்டு வர லேட்டாயிருச்சும்மா, அதான்" என்று கைகட்டி பின்னந்தலையை சொரிந்தவாறு சொல்ல

கைகழுவிக்கொண்டு இருந்த மான்சி திக்கென்று ஒரு உள்ளுணர்வு தாக்க மாணிக்கத்தை திரும்பி பார்த்தாள் " நீங்க ஏன் அப்பாவை கூட்டிட்டு போகனும், சத்யன் எங்க போனாரு மாணிக்கம்" என்று கேட்க

" சின்னம்மாவுக்கு விஷயமே தெரியாதா, சத்யன் தம்பி காலையிலயே வேலையை விட்டுட்டு போயிருச்சு" என்று மாணிக்கம் கூறியதும்

மான்சி அதிர்ச்சியுடன் கையை துடைத்துக்கொண்டு இருந்த டவலை கீழே விட்டாள் " என்ன சொல்றீங்க மாணிக்கம் " வாய்விட்டு கத்திவிட்டாள்

அவளின் சத்தம் கேட்டு ஓடிவந்த நீலவேணி "என்னம்மா மான்சி என்னாச்சு" என கேட்க

அப்போதுதான் தான் உரக்க கத்திவிட்டோம் என்பது மான்சிக்கு புரிய "ஒன்னுமில்ல மம்மி சத்யன் ஏன் வேலையைவிட்டு போனாரு, என்ன சொல்லிட்டு போனார்" என்று தன் தாயை கேட்டாள்

" இதுக்குத்தானா இப்படி கத்துன நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன், சத்யனோட அப்பாவால தனியா விவசாயத்தை கவணிக்க முடியலையாம், அதனால நான் போய் உதவி செய்யப்போறேன்னு சொல்லிட்டு போட்டாப்ல மான்சி, ரொம்ப நல்ல தம்பி அவரை மாதிரி மறுபடியும் ஒரு டிரைவர் எப்போ கிடைப்பாரோ" என நீலவேணி கவலையுடன் கூறினாள்

இந்த விஷயத்தை மான்சியால் ஜீரணிக்க முடியவில்லை, தன் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு ஒதுங்குவான் என்றுதான் நினைத்திருந்தாள். இப்படி வேலையைவிட்டு ஒரேடியாக போய்விடுவான் என்று அவள யோசிக்கவில்லை, திகைப்புடன் அப்படியே சிறிதுநேரம் நின்றுவிட்டாள்




எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியவில்லை ..." சின்னம்மா காலேஜ்க்கு நேரமாச்சு" என்று மாணிக்கம் ஞாபகப்படுத்த

அவன் குரலில் சட்டென்று சுதாரித்த மான்சி " இதோ வர்றேன்" என்று மான்சி மாடிப்படிகளில் தடதடவென ஏறி தனது அறைக்கு ஓடினாள் ... அங்கே போய் கட்டிலில் தொப்பென்று விழுந்தவள் வந்த அழுகையை அடக்க பெரும்பாடுபட்டாள்

ம்ஹூம் இது அழுவதற்கான நேரமில்லை உடனடியாக சிந்தித்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என தன் மனதி திடப்படுத்திக் கொண்டாள். பிறகு நிதானமாக யோசித்த மான்சி சத்யன் இல்லாத ஒரு வாழ்க்கையை தன்னால் வாழவே முடியாது என்பதை மட்டும் சரியாக நிர்ணயித்தாள்

அதன்பின் மான்சி இறுதியாக சத்யனிடம் போய் சேர்ந்துவிடுவது தான் இதற்கு ஒரே வழி என்று நினைத்தாள் .. அவன் தன்னை ஏற்றுக்கொண்டாலும் சரி நீ வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் சரி அவன் காலடியில் கிடந்து உயிரைவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் எழுந்தாள்

அறையில் இருந்த பீரோவை திறந்த மான்சி தனது காதுகளில் போட்டிருந்த வைரக்கல் பதித்த தொங்கட்டான்களை கழட்டினாள், தனது கைகளில் இருந்த வளையலையும் வைர பிரேஸ்லெட்டையும் கழட்டினாள், குனிந்து காலில் இருந்த தங்க கொலுசுகளை கழட்டினாள் எல்லாவற்றையும் பீரோக்குள் இருந்த லாக்கரில் வைத்தாள்

பிறகு ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து ' சத்யனை காதலிப்பதாகவும் .. அவனில்லாத வாழ்க்கையை நினைக்கமுடியாமல் அவனிடமே போய்விட்டதாகவும்' என இரண்டே வரிகள் எழுதி அதை மடித்து ட்ரஸிங் டேபிளின் மேல் வைத்துவிட்டு தனது கல்லூரிக்கு செல்லும் பையை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்

சமையலறையில் இருந்த அம்மாவிடம் வந்தவள் " மம்மி நான் கிளம்பறேன்" என்றவள் நீலவேணியை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டு பைம்மா என்றுவிட்டு கிளம்பினாள்

கார் கல்லூரியை சென்றடைந்ததும் காரை வெளியிலேயே நிறுத்தச்சொல்லி இறங்கிய மான்சி " நீங்க கிளம்புங்க மாணிக்கம் நான் எதிரில் இருக்குற ஷாப்ல ஒரு புக் வாங்கிட்டு காலேஜ்க்கு போறேன்" என்றாள்

மாணிக்கம் உடனே காரை திருப்பிக்கொண்டு போய்விட.. மான்சி உடனே அருகிலிருந்த ஆட்டோ ஸ்டான்டில் ஒரு ஆட்டோவை பிடித்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து இறங்கினாள்

அங்கே இருந்தவர்களிடம் பாலமேடு பஸ் பற்றி விசாரித்து அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டாள் ... அவள் மனம் எந்த சஞ்சலமும் இன்றி தெளிவாக இருந்தது. வாழ்ந்தாலும் செத்தாலும் சத்யனோடுதான் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்

தனது பெற்றோரின் ஞாபகம் வந்தது ம் என்ன கொஞ்சநாள் அழுவாங்க அதன்பிறகு ஒரு பேரக்குழந்தையை பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.. இவர்கள் கொஞ்சநாள் அழக்கூடாது என்பதற்காக நான் காலமெல்லாம் அழ முடியாது

என்னை பொருத்தவரையில் சத்யனுக்கு பிறகுதான் மற்ற யாருமே... என நினைத்தவள் ... தன்னை பார்த்ததும் சத்யனின் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்

பஸ் மான்சியை சுமந்துகொண்டு பாலமேடு நோக்கி பயணித்தது.


பூங்கொடி சமையலை முடித்துவிட்டு புழக்கடையில் போய் முகம் கைகால் கழுவி வீட்டுக்குள் வரவும் வெளியிலிருந்து “யாராவது இருக்கீங்களா” என்று ஒரு பெண்ணின் குயில் குரல் கேட்கவும் சரியாக இருந்தது

இவ்வளவு அழகான குரல் இந்த ஊருல எவளுக்கு இருக்கு என்று நினைத்து தாவணியில் கையை துடைத்தபடி வந்த பூங்கொடி ஒருக்களித்து மூடியிருந்த கதவை திறந்து வெளியே பார்க்க

வீட்டின் வெளித் திண்ணையில் ஒரு அழகான பொண்ணு உட்கார்ந்திருக்க, தெருவில் நான்கைந்து பேர் நின்று அந்த அழகியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்

பூங்கொடிக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை, இவ்வளவு அழகாகூட பொண்ணுங்க இருப்பாங்களா என நினைக்கும் போதே பூங்கொடியின் மூளையில் மின்னலடித்தது, ஆகா நம்ம ஊர்ல சினிமா ஷுட்டிங் எடுக்க போறாக போல, இவுகதான் ஹீரோயினா இருக்கும், என்று அவளது அதிகப்படியான சினிமா அறிவு தனது திறமையை காட்டியது

அதற்க்குள் திண்ணையில் உட்கார்ந்திருந்த மான்சி எழுந்து பூங்கொடியின் அருகில் வந்து “இது சத்யன் வீடுதானே, அவர் இருக்காரா” என்று கேட்க

தனது அண்ணனைப் பற்றி கேட்கவும் பூங்கொடிக்கு திக்கென்று இருக்க, ஆமாம் எங்கண்ணன் தான், நீங்க யாரு” என்றவள் சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் ஆட்களை கவனித்துவிட்டு அவசரமாக “நீங்க உள்ள வாங்க” என்று அழைத்தாள் பூங்கொடி

அதற்க்காகவே காத்திருந்ததுபோல மான்சி உடனே எழுந்து கொண்டு பூங்கொடியின் பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தாள். தாழ்வாரத்துக்கு போகும் வழியில் இருந்த வராண்டாவில் கிடந்த நாற்காலியை எடுத்துப்போட்ட பூங்கொடி

“ இங்கயே உட்காருங்க அண்ணே தூங்குது நான் எழுப்பி கூட்டிட்டு வர்றேன்” என்று வீட்டுக்குள் போனாள்

கட்டிலில் கவிழ்ந்து படுத்து மெல்லிய குரட்டையுடன் அசந்து உறங்கிய சத்யனை பூங்கொடி தோளைத் தொட்டு அசக்கி “ அண்ணே எழுந்திரி உன்னைய யாரோ தேடி வந்திருக்காங்க எழுந்திரிண்ணே” என்று உலுக்கி எழுப்ப

தூக்கம் கலைந்த சத்யன் தனது கண்களை கசக்கியபடி “ என்னைத்தேடி யாரும்மா வந்திருக்காங்க” என்று திரும்பியவன் பார்வை நிலைக்குத்தி அப்படி அதிர்ந்துபோய் பார்த்தான்

ஆமாம் மான்சி வராண்டாவில் அமராமல் பூங்கொடியின் பின்னாலேயே வந்துவிட்டிருந்தாள்,... சத்யனையே வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தவள் , கண்கள் கலங்க “என்னை ஏன் உங்கூட கூட்டிட்டு வரலை சத்யா, நீங்க இல்லேன்னா நான் செத்துருவேன்னு உங்களுக்கு புரியலையா சத்யா ” என்று நாவு தழுதழுக்க கேட்டாள்

சத்யனுக்கு இன்னும் அதிர்ச்சி தெளியாமல் அவளையே பார்த்தக்கொண்டு இருக்க, இவர்கள் இருவரையும் பார்த்த பூங்கொடிக்கு பட்டென்று எதுவோ புரிய சத்யனைவிட அதிர்ச்சியை அதிகமாக தாங்கி கண்கள் விரிய இருவரையும் பார்த்தாள்

“ சொல்லுங்க சத்யா ஏன் என்னைவிட்டு வந்தீங்க” என மான்சி மறுபடியும் கேட்க
அவளுடைய வார்த்தைகள் சத்யனின் மூளையில் சென்று தாக்கியது, சட்டென்று சுதாரித்த சத்யன் கட்டிலில் இருந்து எழுந்து நழுவிய கைலியை இழுத்து இறுக்கி இடுப்பில் கட்டிக்கொண்டு பூங்கொடியை திரும்பி பார்த்தான்






" நேற்றுவரை நிலவில் ஒருத்தி ..

" வசிப்பதாக நான் நம்பவேயில்லை...

" உன்னை நேரில் பார்த்த பிறகு ...

" நேற்றுவரை நிலவில் வசித்தது...

" நீயாகத்தான் இருக்கும் என்று...

" நான் நம்புகிறேன்!

" நிலவு தேய்வதில் வியப்பில்லை...

" ஆனால் நீ ஏன் தேய்கிறாய்...

" கேட்டால் உன்னால்தான் என்கிறாய்...

" உன்னை பார்க்காமல்தான் என்று ...

" என்னையே குற்றம் சாட்டுகிறாய்!

No comments:

Post a Comment