Tuesday, July 28, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 6

சத்யனுக்கு அரை மனதாகவே இருந்தது, தேவியை முதல் நாள் பார்த்திருந்தாலாவது நிம்மதியாக இருந்திருக்கும், இப்போ திடீர்னு கிளம்புனதை அவளுக்கு எப்படி தெரியப்படுத்துறது என்று யோசித்தான், சித்தி வீட்டுக்கு போனதும் முருகனுக்கு கடைக்கு போன் பண்ணி தேவியை பார்த்து தகவல் சொல்ல சொல்லனும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டான்

திருச்சூரில் இறங்கியதும் அவர்கள் செல்லும் ஊருக்கு பஸ் தயாராக இருக்க அதில் ஏறியமர்ந்தார்கள், பஸ்ஸில் இருந்து இறங்கி ஆட்டோவில் சித்தி வீட்டுக்கு போய் இறங்கி கேட்டை திறந்து உள்ளே போனார்கள்.....

வீட்டின் முன்பகுதியில் இருந்த மிளகு கொடிக்கும் ரோஜா செடிகளுக்கும் பைப் மூலம் தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்த சத்யனின் சித்தப்பா தயாளன், இவர்களை பார்த்ததும் பைப்பை கீழே போட்டுவிட்டு வேகமா வந்து “ வாங்கப்பா என்ன திடீர்னு வந்திருக்கீங்க” என்று விசாரித்தபடி சத்யனின் அம்மா கையில் இருந்த சூட்கேஸை வாங்கிக்கொண்டு உள்ளே போனார்



சத்யனுக்கு பேச்சே வரவில்லை, அவனுடைய அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது, அவனுக்கு மட்டும் அதிர்ச்சியில்லை, அவன் தம்பி விநாயமூர்த்திக்கும் தான் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது

இவருக்கு தானே ரொம்ப சீரியசாக இருக்கிறது என்று கிளம்பி வந்தோம், இங்கே என்னடான்னா இவரு நல்லாத்தானே இருக்காரு என்று நினைத்து இருவரும் ஒருசேர தங்களின் தாயை திரும்பி பார்க்க, அவர் இவர்களின் பார்வையை தாங்காமல் தலைகுனிந்து வீட்டுக்குள் போனார்

ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் சத்யனுக்கு புரிய, வந்த இடத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று நினைத்து வேறு எதுவும் கேட்காமல் வீட்டுக்குள் போனான்

சித்தியிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு காலை டிபன் முடித்த பிறகு தோட்டத்தில் இருந்த பலாமரத்தின் அடியில் போய் அமர்ந்து அம்மாவின் பின்னாலேயே போன சத்யன், கைகளை கட்டியபடி தனது தாயை நேர்ப் பார்வை பார்த்து “என்னம்மா நடந்தது.. ஏன் பொய் சொல்லி கூட்டிட்டு வந்தீங்க” என்று கேட்க

ஒரு நிமிடம் தலைகுனிந்த அம்மா பிறகு “ என் தங்கச்சிய பார்க்கனும் போல இருந்தது அதனால கிளம்பி வந்தேன், இது என்னமோ பெரிய குற்றம் மாதிரி கேள்வி கேட்குற” என்று எடுத்தெறிந்து பேசுவதுபோல நடித்தாலும் அவர் முகம் பிரச்சனை வேறு என்று சொன்னது

“ சரிம்மா சித்தியை பார்க்கடனும்னு தோனுனா நீங்க வரவேண்டியதுதானே, எதுக்கு அழுதுகிட்டே எங்களையும் கூட்டிகிட்டு அவசரமா கிளம்பி வரனும்” என்று சத்யன் விடாமல் கேட்க

“ டேய் போடா என்னமோ பெரிய மனுஷன் மாதிரி கேள்வி கேட்கிற, ஆமாமா அய்யா இப்போ பெரியமனுஷன் தான, அதான் பெரிய பெரிய வேலையெல்லாம் செய்றாரு” என்று சொன்ன அம்மாவுக்கு அவசரத்தில் தான் வார்த்தையை விட்டுவிட்டோம் என்று புரிய மேற்கொண்டு எதுவுமே பேசாமல் தலையை குனிந்து கொண்டார்

பட்டென்று சத்யனுக்கு விஷயம் புரிந்துபோனது, ஏதோ ஒரு அசட்டு துணிச்சல் வர “ ஓ எல்லாம் தெரிஞ்சு போச்சா, ஆமா நான் தேவிங்கற பொண்ணை ஆறு மாசமா விரும்புறேன்,அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன், அதுவும் இன்னும் ரெண்டு மூனு நாளில் எங்க கல்யாணம் நடக்கப்போகுது, பாண்டி மாமாவை தான் உங்ககிட்ட பேசி சம்மதம் வாங்க சொன்னேன், வந்தாரா?” என்று சொல்லிவிட்டு அம்மாவை கேள்வியாக பார்த்தான் சத்யன்

“ஆமா வந்தாரு எல்லாம் சொன்னாரு, ஏன்டா மவனே உனக்கு உலகத்துல பொண்ணா இல்ல போயும் போயும் அந்த சாதி பொண்ணையா விரும்புவ, அந்த சாதியில பொட்டச்சிகளே கையில அரு வச்சிக்கிட்டு சுத்துவாளுக, சாதி கவுண்டனா இருந்து கிட்டு அந்த குடும்பத்திலயாடா பொண்ணு கட்டுறது, ஏன்டா உனக்கு புத்தி இப்படி போச்சு, அப்படியென்னடா உனக்கு என்னடா வயசாச்சு,” என்று அம்மா உச்சபட்ச கொதிப்புடன் பேச

சத்யனுக்கும் ஆவேசம் வந்தது “ அம்மா தேவி குடும்பம் வேனா அப்படியிருக்கலாம், ஆனா அவ ரொம்ப நல்லவம்மா, என்மேல உயிரையே வச்சிருக்கா, அவளைப் பார்த்தா உங்களுக்கு ரொம்ப புடிக்கும்மா, காதலை பிரிக்க சாதியை காரணம் சொல்லாதீங்க அம்மா ” என்று சத்யன் கண்கலங்க வாதம் செய்ய

அவனுடைய கலங்கிய கண்களை பார்த்ததும் பெற்ற வயிறு துடிக்க அவன் கைகளை பற்றிக்கொண்டு “ அய்யா சாமி அவ உன்மேல உயிரையே வச்சிருக்கா சரிதான், ஆனா அவளே உன் உயிர் போறதுக்கும் காரணமா இருக்க கூடாதுன்னுதாய்யா உன்னைய கூட்டிகிட்டு வந்தேன், அவ ரொம்ப நல்லவளாவே இருக்கட்டும் சாமி ஆனா எனக்கு என் பிள்ளையோட உயிருதானே முக்கியம்” என்று சொல்லியவாறே கண்கள் கண்ணீரை கரகரவென சுரக்க மகனின் தோளில் சாய்ந்துகொண்டார்

விபரீதமாக ஏதோ நடந்திருப்பது புரிய “ அம்மா தயவுசெய்து என்ன நடந்துச்சுன்னு விவரமா சொல்லுங்கம்மா, யாராவது உங்களை வந்து மிரட்டினாங்களா?” என்றவனை பார்த்த அம்மா கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு,

பாண்டியன் வந்து சொன்ன விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு மறுபடியும், பொங்கிய கண்ணீரை வடியவிட்டு “ அய்யா நமக்கு அந்த புள்ள வேனாம்ய்யா, சித்தப்பாகிட்ட சொல்லி சீக்கிரமாவே நல்ல பொண்ணா பார்த்து உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சாமி, அந்த குடும்பத்தோட சகவாசமே நமக்கு வேனாம்ய்யா” என்று சொல்லி முடிக்க......
பட்டென்று தரையில் மண்டியிட்ட சத்யன் முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தான்,

அம்மா பதறிப்போய் அருகில் வந்து “ அய்யோ அழாதடா போகப்போக எல்லாம் சரியாயிடும், நீ இங்கயே சித்தப்பா கிட்ட சொல்லி வேற வேலைத் தேடி பொழைச்சுக்கலாம்” என்று மகனுக்கு புத்திமதி என்ற பெயரில் எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றினார்கள்

“ தன் தோளில் இருந்த அம்மாவின் கையை உதறி எழுந்தவன், அம்மா அதைப்பத்தி எல்லாம் நெனைச்சுக்கூட பார்க்காதீங்க, தேவி இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை, அதோட அவ இப்போ கர்ப்பமா இருக்காம்மா, அய்யோ அவ வீட்டுக்கு தெரிஞ்சு போச்சா, இந்த சமயத்துல போய் அவளை விட்டுவிட்டு என்னை மட்டும் கூட்டிகிட்டு வந்துட்டீங்களே ” என்று குமுறலுடன் சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அம்மா

வளர்ந்த குழந்தையாக குமுறி கண்ணீர் விட்டவனையே பார்த்த அம்மா “ அய்யோ இதெல்லாம் பாண்டி தம்பி சொல்லலையே சத்யா, அடக்கடவுளே இப்போ அந்த புள்ளைய என்ன சித்ரவதை பண்றானுங்களோ, அடப்பாவி நீயாவது மொதல்லயே விஷயத்தை என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏதாவது ஏற்ப்பாடு பண்ணி கல்யாணத்தை முடிச்சிருக்கலாமே” என்று கூறிவிட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மகனையே பார்த்தார்

“ சரி நீ அழுதா ஒரு வேலையும் ஆகாது மொதல்ல போய் முருகனுக்கு இல்லேன்னா பாண்டிக்கு போன் பண்ணி அந்தப் பொண்ணை பார்க்க சொல்லு, அப்புறமா நீ கிளம்பு கூட தம்பியும் கூட்டிட்டு போ, நம்ம வீட்டுகிட்டயே போகாதீங்க பாண்டி வீட்டுல இல்லேன்னா முருகன் வீட்டுலயோ தங்குங்க, ரொம்ப ஜாக்கிரதைடா மகனே, முடிஞ்சா அந்த புள்ளைய கூட்டிகிட்டு இங்கயே வந்திரு குருவாயூரப்பன் கோயில் வச்சு கல்யாணத்தை முடிச்சுடலாம்” என்று எல்லா பிரச்சனைக்கும் தீர்வு மகனின் துக்கத்தை கொஞ்சமாவது போக்க முயன்றார் அம்மா

தாயாரின் ஆறுதல் வார்த்தைகள் புத்துணர்ச்சியை கொடுக்க கண்களை துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி போனை கையிலெடுத்து காய்கறி கடையின் நம்பரை டயல் செய்தான்,, இரண்டு ரிங் போனதும் கணக்குப்பிள்ளை போனை எடுக்க, சத்யன் வெகு அவசரமாக “ அண்ணே நான் சத்யன் பேசுறேன் முருகன் இருக்கானா?” என்று கேட்டான்

“ இங்க இல்லப்பா நைட்டுதான் லாரில ஒட்டன்சத்திரம் மார்கெட் போனான், அப்புறம் சத்யா தேவின்னு ஒரு சின்ன வயசு பொண்ணு வந்து ஒரு கவரை குடுத்து முருகன் மூலமா உன்கிட்ட குடுக்க சொல்லுச்சுப்பா வந்து வாங்கிக்கிறயா” என்று கணக்குப்பிள்ளை சொன்னதும்

சத்யன் பரபரப்பானான், அவன் குரலில் பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது “ அண்ணே அந்த புள்ள எப்பண்ணே வந்துச்சு” என்று ஆர்வமாக கேட்டான்

“ இப்பதான்ப்பா ஒரு மணிநேரம் இருக்கும் வந்துபோய்” என்றார் கணக்கு

“சரிண்ணே அந்த கவர் உங்ககிட்டேயே இருக்கட்டும் நான் சாயங்காலம் வந்து வாங்கிட்டு போறேன் வச்சிறேன் அண்ணே ” என்று இணைப்பை துண்டித்து விட்டு திரும்பியவன் முன்னால் குடும்பமே இருந்தது

“அம்மா இப்பத்தான் மார்கெட்டுக்கு வந்து போயிருக்கா, கணக்குப்பிள்ளை கிட்டே ஏதோ கவர் குடுத்துட்டு போயிருக்காலாம்” என்று சத்யன் சொன்னதும்

“வீட்டை விட்டு வெளியே வந்து மார்கெட்டுக்கு வந்து போயிருக்கான்னா அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லேன்னு தான் நெனைக்கிறேன்” என்று அம்மா சொன்ன ஆறுதலில் சத்யனின் முகம் தெளிந்தது

“ஆமா இப்போ சிரி இவ்வளவு நேரம் நீயும் அழுது என்னையும் அழ வைச்சுட்டு” என்ற அம்மா சூட்கேஸை திறந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து சத்யனிடம் கொடுத்து “ சீக்கிரமா கிளம்புடா நேரத்தை கடத்தாதே” என்று சொல்ல
சத்யன் சித்தி குடும்பத்தினரிடமும் அம்மாவிடமும் விடைபெற்று தம்பியுடன் கிளம்பினான்,

மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறியமர்ந்ததும், தம்பி இவனின் காதலை பற்றி விசாரிக்க, சத்யன் தேவியை சந்தத்தில் இருந்து கதை கதையாக சொன்னான், அவன் சொல்லி முடிக்கும்போது மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்துவிட்டது

மாலை ஆறு மணி, இருவரும் அவசரமாக இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து நேராக மார்க்கெட்தான் வந்தனர், ஆட்டோவுக்கு பணம் கொடுத்துவிட்டு உள்ளே போய் கடையை அடைய அதிசயமாக அங்கே முருகனும் பாண்டியனும் இருந்தனர்
இருவரையும் ஒன்றாக பார்த்ததும் சத்யனுக்கு அதிசயமாக இருந்தது “ என்னா மாமா இன்னேரம் ஸ்கூல் சவாரி போயிருப்பீங்களே என்ன இங்க வந்துட்டீங்க” என்று கேட்டான்

பாண்டியன் அவசரமாக முகத்தை வேறு பக்கம் திருப்பி கைத்துண்டால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு “ஸ்கூல் சவாரிக்கு வேற வண்டி அனுப்பிட்டேன், சும்மா முருகனை பார்க்க வந்தேன், சரி நீ எப்புடி வந்த” என்று பாண்டியன் கேட்க

“ தேவி ஏதோ கவர் குடுத்துட்டு போனாலாம் அதை வாங்கிட்டு உங்க வீட்டுக்கு தான் வரலாம்னு வந்தோம்” என்ற சத்யன் கடைக்குள் நுழைய முயல

“இரு சத்யா அந்த கவரை நான் காலையிலயே வந்து வாங்கிட்டு போயிட்டேன், வீட்டுல தான் இருக்கு நீ வா அங்க போய் படிக்கலாம் ” என்று சொல்லிவிட்டு பாண்டியன் திரும்பி பார்க்காமல் மார்க்கெட்டை விட்டு வெளியே நிறுத்தியிருந்த ஆட்டோவை நோக்கி போனான்

அவர் பின்னாலேயே வந்து ஆட்டோவின் பின் சீட்டில் தம்பியுடன் சத்யன் ஏறிக்கொள்ள, முருகன் முன்னால் உட்கார்ந்துகொண்டான் பாண்டியன் ஆட்டோவை கிளப்ப “என்ன மாமா குரல் ஒரு மாதிரியா இருக்கு, வேளையாவே போட்டுட்டியா” என்ற சத்யன் அம்மாவுடன் நடந்த வாக்குவாதத்தை ஒன்று விடாமல் சொன்னான்

“அட போ மாமா அவனுங்களுக்கு போய் பயந்து அம்மா கூட எங்களை அனுப்பிட்ட, அன்னிக்கு என்னமோ சொன்ன டேய் இந்த மாமன் இருக்கிறவரை எதுக்கும் பயப்படாதேன்னு, இப்ப என்னடான்னா நீங்க பயந்து அம்மாவையும் பயமுறுத்தி இப்பப்பாரு அவசரமா அங்கருந்து ஓடி வந்தோம்” என்று சத்யன் கதையளந்த படியிருந்தான் சத்யன்


பாண்டியனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, அடிக்கடி தோள்பட்டையில் முகத்தை துடைத்தவாறே ஆட்டோவை ஓட்டிக்கொண்டு இருந்தார்
ஆட்டோ வேறு வழியில் போவதை கவனித்த சத்யன் “ என்னா மாம்ஸ் ஆட்டோ வேற பக்கம் போகுது” என்று கேட்க

அவனைத் திருப்பிப் பார்த்த முருகன் “ இந்த பக்கம் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு என்னை இறக்கி விட்டுட்டு அப்புறமா நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க” என்றான்

“ சரிடா அதுக்கேன் மூஞ்சிய அழுவுற மாதிரி வைச்சுருக்க, மாமாவுக்கும் முகமே சரியில்லை, என்ன மாமா அக்கா கூட சண்டையா” என்றான் சத்யன்

அதற்க்கும் யாரும் பதில் சொல்லவில்லை “ வீட்டுல போய் அக்கா கையால சாப்பிட்டு மொதல்ல தேவி வீட்டுக்கு போகனும் மாமா, ஒக்காலி அவனுங்களா நாமளான்னு பார்க்கனும், தேவி மேஜர் பொண்ணு மாமா அவ என்கூட வந்துட்டா அவனுங்களால ஒன்னும் புடுங்க முடியாது, என்னையவே போட்டுத்தள்ள பிளான் போடுறானுங்களா பார்க்கலாம் மாம்ஸ் என்ன நடக்குதுன்னு, காலையில அவளும் நானும் திருச்சூருக்கு போறோம், இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கும், அதுக்கு நீயும் அக்காவும் புள்ளைகளை கூட்டிகிட்டு வர்றீங்க, டேய் முருகா உனக்கும் தான்டா சொல்றேன், நீ வரலைன்னா தேவி ரொம்ப டென்ஷன் ஆயிருவா, முருகண்ணே முருகண்ணேன்னு உன்மேல அவளுக்கு ரொம்ப பாசம்டா ” என்று ஆத்திரம் வீராப்பு கோபம் நட்பு என்று சத்யன் கலவையாக பேசிக்கொண்டே போனான் சத்யன் சொல்லிகொண்டு வர

ஆட்டோ ஒரு இடத்தில் நிற்க்க, முருகன் முதலில் இறங்கினான் பாண்டியன் அவனிடம் ஏதோ காதில் சொல்ல, முருகன் சரியென்று தலையசைத்து விட்டு எங்கோ ஓடினான்,



ஆட்டோவில் இருந்து இறங்கிய சத்யன் சோம்பல் முறித்தபடி “ என்ன மாமு தத்தநேரி சுடுகாட்டுல வந்து நிறுத்தியிருக்க, முருகனுக்கு தெரிஞ்சவங்க யாராவது இறந்துட்டாங்களா, ம்ஹும் எங்கப்பா செத்தப்ப இங்க வந்தது அதுக்கப்புறம் நான் யாரோட கேதத்துக்கும் வந்ததில்லை” என்று சொன்னபடி பீடிக்காக பாண்டியனின் பாக்கெட்டை தடவினான் சத்யன்

மெல்லிய இருட்டில் பாண்டியனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய பதறிப்போன சத்யன் “ அய்யோ மாமா உனக்கு தெரிஞ்சவங்க தான் இறந்துட்டாங்களா, யாரு மாமா இறந்தது, வா உள்ள போய் பார்க்கலாம்” என்று சத்யன் பாண்டியன் கையை பற்றி இழுக்க

அப்போது முருகன் வந்து “ பாண்டியண்ணே எல்லாம் முடிஞ்சு போச்சு, யாருமே இல்ல எல்லாரும் போய்ட்டானுங்க” என்று சொல்ல, பாண்டியன் சத்யன் கையை பிடித்துக்கொண்டு வேகமாக சுடுகாட்டின் உள்ளே இழுத்து சென்றார்

சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை சுற்றிலும் பார்த்தபடி அவர் இழுத்த இழுப்புக்கு கூடவே போனான், மதுரையின் மிகப்பெரிய மயானம் அது,, சுற்றிலும் ஆங்காங்கே சிதையில் உயிரற்ற உடல்கள் எரிந்துகொண்டிருக்க நான்கைந்து ஆட்கள் கையில் தடியுடன் தட்டித்தட்டி எரியவிட்டுக்கொண்டு இருந்தார்கள், எரியாத சிதையின் மீது சர்க்கரையை அள்ளி வீசினார்கள்,

சில சிதைகளின் முன்பு மட்டும், இன்று எரிந்துகொண்டிருக்கும் உடலுக்காக நாளை எரியப்போகும் உடல்கள் நின்று கதறிக்கொண்டு இருந்தனர், அவர்களுக்கு தெரியவில்லை பிறப்பு எப்படி மனிதனுக்கு சாசுவதமோ அதேபோல் இறப்பும் சாசுவதம் என்று, எல்லாம் தெரிந்தால் கண்ணீர் விடமாட்டார்கள், நாம் பிறக்கும் போதே இறக்கும் தேதியும் குறித்து வைக்கப்பட்டது என்று எத்தனைப் பேர் புரிந்துகொள்கிறார்கள்?,

சத்யனுக்கு அழும் அவர்களைப் பார்த்து பரிதாபம் வந்தாலும், கூடவே எரிச்சலும் வந்தது ‘ ஆமா உயிரோட இருக்கும் போது பெத்தவங்களுக்கு ஒருவேளை சோறு போட ஐகோர்ட் வரை போய் கேஸ் போடுவானுங்க செத்த பிறகு, அய்யோ அம்மா, அப்பா, தாத்தா, பாட்டின்னு, உறவுமுறை சொல்லி அழுவானுங்க’ என்று மனதுக்குள் எரிச்சல் பட்டப்படி பாண்டியனுடன் போனான்


இழுத்துப்போன பாண்டியன் முருகன் கைகாட்டிய ஒரு சிதையின் அருகே கொண்டு போய் அவனை நிறுத்தினார், முழுவதும் எரிந்த நிலையில் நடுவே நெருப்பு கனகனவென்று ஜொலிக்க, சுற்றிலும் சாம்பல் சரிந்து போயிருந்தது, அருகே இரண்டு மூங்கிலால் ஆன பாடை ஒன்று முரிந்து கிடந்தது, அந்த பாடையில் ஒரேயொரு ரோஜா மாலை மட்டும் இதழ்களை உதிர்த்துவிட்டு வெறும் நாராகக்கிடந்தது

“ அடப்பாவிகளா பாடையை கூட ஒழுங்கா கட்டி தூக்கிட்டு வரலை போலருக்கு பிசுநாரிப்பயலுக, யாரு மாமா இது” என்று சத்யன் நிமிர்ந்து பார்த்து பாண்டியனைக் கேட்க

அதுவரை அடக்கிக்கொண்டு இருந்த முருகன் தலையிலடித்துக்கொண்டு மண்டியிட்டு கத்தி கதற, பாண்டியன் தன் தோளில் இருந்த துண்டை வாயில் அடைத்துக் குமுறி கண்ணீர் விட்டார், சத்யன் தம்பி விநாயகம் ஒன்றும் புரியாமல் விழித்தான்

பாண்டியனை நெருங்கிய சத்யன் அவர் தோளைகளைப் பற்றி “ யோவ் மாமா சொல்லிட்டு அழுவுங்கய்யா, யாரு இது, வீட்டுல அக்கா,.. பிள்ளைகள் எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க” என்று குரலில் பயத்துடன் கேட்க

அதற்க்குமேல் பொறுக்க முடியாத பாண்டியன் எட்டி சத்யனை இழுத்து அணைத்து “ அடப்பாவி என் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்கடா, இங்க எரிஞ்சு போனது உன் பொண்டாட்டியும் பிள்ளையும் தான்டா, அய்யோ கடவுளே” என்று சத்யனை அணைத்து கதறி கண்ணீர் விட்டு அந்த சோகத்தை சொன்னார்

அவர் சொன்ன விஷயம் சத்யன் மூளையில் ஏற சிலவிநாடிகள் ஆனது, ஏறிய அடுத்த நிமிடம் அவர் அணைத்த அதே வேகத்தில் வலுவாக அவரை உதறித்தள்ளினான், அவன் உதறிய வேகத்தில் பாண்டியன் இரண்டடி பின்னால் நகர்ந்து கீழே விழ முருகன் ஓடிவந்து அவரை தாங்கிக்கொண்டான்

சத்யனின் முகம் ரௌத்திரமாய் மாற “ யோவ் என்னா நக்கலா, வீட்டுக்கு போகலாம் வாடான்னு இங்க கூட்டிவந்து இதைப்போய் என் பொண்டாட்டி புள்ளன்னு சொல்ற, அவதான் காலையில கூட கடைக்கு வந்து போயிருக்கா, அவளைப் போய் இந்தமாதிரி சொல்லிட்டயே மாமா ச்சே போய்யா” என்று சலித்தபடி சத்யன் முகத்தை திருப்பிக்கொண்டு போக

முருகன் ஆவேசத்துடன் சத்யனை நெருங்கி “ டேய் நில்லுடா அவரைப் போய் பிடிச்சு தள்ளிட்டு போற, அவரு காலையிலேர்ந்து எப்படி அலைஞ்சாரு எவ்வளவு அழுதாருன்னு எனக்குத்தான்டா தெரியும், காலையில தேவி செத்துப்போனது உண்மை, அவ வீட்டு ஆளுங்க போலீஸ் கேஸ் ஆயிடும்னு உடனே கொண்டு வந்து எரிச்சுட்டு போய்ட்டானுங்க ********** நீ என்னடான்னா சொல்றதை நம்பமாட்டேங்குற, காலையிலேர்ந்து இங்கதான்டா இருக்கோம், எல்லாத்தையும் எங்க கண்ணால பார்த்தோம், நம்ம தேவிதான்டா இது சத்யா” என்று முருகன் கதறியபடி அந்தக் கொடுமையை, அந்த அவலத்தை ஓலமிட்டு சொன்னான்

சத்யன் முருகனையே உற்றுப் பார்த்தான்,, முருகனின் வார்த்தைகள் மூளையில் உரைத்தாலும் மனது அதை ஏற்றக்க மறுத்தது, ஆதாரமற்ற கோபம் ஆவேசமாக வர அவன் முகம் மூர்க்கமானது, கண்மூடித்தனமான காதல் எதையும் நம்ப மறுத்தது, கண்களில் கனல் தெரிக்க

“ ஏலேய் வெண்ணெய் இதை என்ன நம்பச்சொல்றியா, எனக்கு தெரியும்டா தேவியோட குடும்பத்துக்கு பயந்து என்னோட மனசை மாத்த சொல்லி எங்கம்மா சொல்லிருப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் அதுக்கு ஒத்து ஊதுறீங்க, ஏலேய் தேவியை பத்தி உனக்கு என்ன தெரியும், அவ சாகமாட்டா, எங்களை எதிர்க்கிறவங்களை அவப் போட்டு தள்ளிருவா, அவ்வளவு தைரியசாலி அவ, உனக்கே தெரியுமே முருகா அவளைப் பத்தி, வேனாம்டா முருகா விளையாடாத” என்றவன் திரும்பி நின்று எரிந்து போன சிதையை பார்த்தான்

கவிழ்ந்து வரும் கும்மிருட்டில் ஆங்காங்கே எரியும் சிதைகள் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்க, சத்யன் சிதையின் அருகே போய் உற்று பார்த்தான், நடுவே இருந்த நெருப்பும் அனைந்து போயிருந்தது, ஒன்றிரண்டு எலும்புகள் எரியாமல் சாம்பலுடன் கலந்து இருந்தது,

சத்யனுக்கு முதுகுத்தண்டில் ஏதோ ஊர்வது போல் சிலிர்க்க, நடப்பதை நம்ப மறுத்த அவன் “யப்பா என்னால இனிமே இங்க ஒரு நிமிஷம் இருக்கமுடியாது” என்றவன் ஏதோ பயங்கரம் அவனை துரத்துவது போல தலைதெறிக்க அங்கிருந்து ஓடினான்

ஓடிப்போய் ஆட்டோவில் ஏறியவன் முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டான், சாவு என்ற வார்த்தையே அவனை கலங்க வைத்தது, உடலெங்கும் வியர்வை ஆறாய்ப் பெருக, காலையிலிருந்து சாப்பிடாத வயிறு ஓவென்று இரைச்சலிட்டது

புசுபுசுவென்று மூச்சு சூடாய் வெளியே வர 'அய்யோ அந்த சாம்பல் குவியலை போய் தேவி என்று சொல்கிறார்களே இவனுங்களுக்கு பைத்தியமா, அம்மா என்னால பொறுக்க முடியலையே, எல்லாமே பொய் இவனுங்க நாடகமாடுறானுங்க, என் தேவி இருக்க, அவளுக்கு ஒன்னும் ஆகலை, தேவி இருக்கா, என் தேவிக்கு எதுவும் ஆகலை,இதோ இருக்கா" என திரும்ப திரும்ப மனம் தேவியின் மரணத்தை பதிவு செய்ய மறுத்து புறந்தள்ளியது

உள்ளம் குமுறியது தொண்டையின் வரட்சி நாவில் தெரிய, ஒட்டிக்கொண்ட நாவை ஈரப்படுத்திக் கொண்டு வெளியே தலையை நீட்டி" டேய் வாங்கடா" என்று உச்சத்தில் அலறினான்

சிறிதுநேரத்தில் அனைவரும் வந்துவிட பாண்டியன் பின்னால் அமர்ந்து சத்யனின் தோளில் கைவைக்க, சத்யன் வெடுக்கென்று கையை தட்டிவிட்டான் " இப்போ வண்டியை எடுக்கப்போறியா இல்ல நான் வேற ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போகவா?" என்று சத்யன் பயங்கரமாக கத்த ....

பாண்டியன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஆட்டோவை அவருடைய வீட்டுக்கு செலுத்தினார்

சத்யனை அழைத்துக்கொண்டு பாண்டியன் வீட்டுக்குள் எல்லோரும் நுழையும்போது வாசலிலேயே நின்றிருந்த பரிமளா சத்யனை கண்டதும் கண்ணீருடன் வந்து கையைப்பிடித்துக் “ என்னடா தம்பி உனக்குப் போய் இப்படி விதிச்சுட்டானே இந்த கடவுள்” என்று அவன் கைகளில் முகத்தை வைத்துக்கொண்டு கதறியழுதாள்

கையை உதறிய சத்யன் “ அக்கா வேனாம், என்னக்கா நீயும் இப்படி சொல்ற தேவி ஒன்னும் ஆகலை நல்லாருக்கா அக்கா, இன்னும் கொஞ்சநேரத்தில் தேவியோட நான் வர்றேன், மொதல்ல எனக்கு சோத்தைப் போடுங்க பயங்கர பசி” என்ற சத்யன் விடுவிடுவென உள்ளே போய் சமையலறையின் வாசலில் சம்மணமிட்டு அமர்ந்தவன் “அடச்சே சுடுகாட்டுக்கு போய்ட்டு கால்கூட கழுவாம வந்துட்டேன் ஸாரிக்கா” என்று பரிமளாவை பார்த்துசொல்லி விட்டு புழக்கடை போனான்

பரிமளா அளவுகடந்த துக்கத்துடன் பாண்டியனை பார்க்க, அவர் கண்ணீருடன் இல்லை என்பதுபோல் தலையசைத்து உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கை செய்து, “ அவனுக்கு சோத்த போடு மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என்றார்

கைகால் கழுவிட்டு அவனே தட்டை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்த சத்யன் “ வாங்கக்கா சோறு போடுங்க, பசங்க இன்னும் டியூசனில் இருந்து வரலையா,” என்று தட்டை திருப்பி கைகளால் தாளம் போட்டான்

அவனை யாருமே இப்படி பார்த்ததில்லை, எப்போதும் ஒரு சிரிப்புடன் கூடிய மரியாதை இருக்கும், பத்துமுறை வற்புறுத்தினால் கூட சாப்பிட அமரமாட்டான், இப்போது அவனிடம் ஒரு பதட்டம் தெரிந்தது, எதையோ ஏற்றுகொள்ளாமல் தவிர்க்க அவன் முயற்சி செய்வது அத்தனை பேருக்கும் புரிந்தது, அவன் கண்களில் ஒரு தவிப்பு, கைகளில் நடுக்கம், அந்த நடுக்கத்தை மறைக்க தாளம் போட்டான், அடிக்கடி எல்லாருடைய முகத்தையும் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தான், அவனை பார்க்கவே எல்லாருக்கும் பயமாக இருந்தது

பரிமளா எதுவும் பேசாமல் அவனிடமிருந்து தட்டை வாங்கி தரையில் வைத்து சோற்றை அதில் போட்டு குழம்பை ஊற்றினாள், சத்யன் சாதத்தில் கைவைத்து பிசையவும், அவள் கண்ணீர் அவன் கையில் விழவும் சரியாக இருந்தது,
சோற்றை அள்ளி வாயில் வைத்த சத்யன் மறுபடியும் தட்டில் போட்டுவிட்டு பரிமளாவின் முகத்தை பார்த்து “ அக்கா தேவிக்கு எதுவும் ஆகலை தான, நீங்க சொல்லுங்க ” என்று குரல் நடுங்க கேட்க

அதற்க்கு மேல் பொறுக்க முடியாத பரிமளா “ அய்யோ தேவி இல்லடா பாவி உன்னை ஏமாத்திட்டாடா, ஏன்டா நம்ப மாட்டேங்குற, வாய்விட்டு அழுடா அழு, இல்லேன்னா போ போ நீயும் சாவு, இப்படி இருக்கிறதை விட செத்துப்போ போடா ” என்று தலையிலடித்துக் கொண்டு கதற ஆரம்பிக்க,

பேயை கண்டது போல் விதிர்த்துப் போய் பின்னால் நகர்ந்த சத்யன் “ அக்கா வேனாம் எதுவும் சொல்லாதீங்க” என்று சத்யன் காதுகளை பொத்திக்கொண்டு கத்தினான்

“ ஆமா சொல்லுவேன் தேவி செத்துப்போனா, நீயும் போ எங்களை கொல்லாதே” என்று தரையில் மடிந்து அழுத பரிமளாவை பாண்டியன் வந்து தூக்கி தோளில் சாய்க்க

பரிமளா அவரை உதறிவிட்டு எழுந்து சத்யனின் அருகில் வந்து அவன் சட்டை காலரைப் பற்றி முன்னால் இழுத்து “ இதோப்பாரு சத்யா உங்க மாமான்னா எனக்கு உயிருன்னு உனக்கு தெரியும் தானேடா, அந்த மாமா மேல சத்தியமா சொல்றேன் தேவி செத்துட்டா, தூக்குப் போட்டு செத்துட்டா, செத்துட்டாடா பாவி ” என்றவள் சத்யன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தாள்

பாண்டியன் அவள் கைகளை தடுக்க முயன்றார், அதிர்ந்து போய் சத்யன் பாண்டியனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான், அவர் ஆமாம் என்று தலையசைக்க, சோற்றை பிசைந்த கையோடு சுவற்றில் சாய்ந்து கொண்டான்



அதன்பிறகு அவனிடம் பேச்சே இல்லை, சத்யன் தம்பி விநாயகமுர்த்தி, முருகன், பாண்டியன் என்று அனைவரும் சத்யனை சுற்றி அமர்ந்துகொண்டார்கள், பாண்டியன் அவர் கையை ஆறுதலாக தட்டிக்கொடுத்தார், பரிமளா எழுந்து போய் தண்ணீர் எடுத்துவந்து சத்யனின் வாயருகே வைத்து “ கொஞ்சம் தண்ணி குடி சத்யா” என்று சொல்ல சத்யன் வாயை திறக்கவில்லை

டியுசன் விட்டு வந்த பிள்ளைகள், சத்யனை பார்த்ததும் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர், அதிகமாக அவனிடம் பேச தயங்கும் அம்மு சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள், பிறகு “ சாப்பிடு மாமா” என்று சாப்பாட்டை அவனருகில் எடுத்து வைத்தாள் அம்மு

அவனிடம் எந்த அசைவும் இல்லை, சிறிதுநேரம் அவனை தனியாகவிடுமாறு பாண்டியன் சைகை செய்ய, அனைவரும் அவனைவிட்டு நகர்ந்தனர், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தபின், அனைவருக்கும் சாப்பாடு போட்டு வைத்தாள் பரிமளா

சத்யன் அசையாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவனை விட்டு சாப்பிட யாருக்கும் மனமில்லை, விநாயகம் வெளியே போய் சித்தி வீட்டுக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டு வந்தான்

அனைவருக்கும் உறக்கம் வந்து கண்களை தழுவ அனைவரும் இருந்த இடத்திலேயே உறங்க ஆரம்பித்தனர், இரவு மணி இரணடை எட்டியது, பாண்டியனை வந்து உலுக்கி எழுப்பினான் சத்யன்


No comments:

Post a Comment