Saturday, July 25, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 1

2002 ம் வருடம், நவம்பர் மாதம், ஒரு நல்ல மழைக்கால காலை பொழுது, குடகுமலைகாற்று தாலாட்டும் கோவில் மாநகரான மதுரையின் மத்தியில் இருக்கும் அழுக்கும் குப்பைகளும் நிறைந்த சென்ரல் மார்க்கெட்,.. தொடர்ச்சியாக பெய்த இரண்டுநாள் மழையில் கனுக்கால் புதையும் அளவுக்கு சேரும் சகதியும் நிறைந்திருக்க,.. மனித கழிவுகளை விட அதிகமாக நாற்றமடிக்கும் காய்கறி கழிவுகள் குவிந்து கிடக்கும் மார்க்கெட்,

மறுநாள் கார்த்திகை திருநாள் என்பதால், கையில் பையுடன் பெண்கள் கால்கள் புதைய புதைய நாற்றத்தின் முகச்சுளிப்புடன் காய்கறி வாங்கிக்கொண்டு இருக்க, மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளர்கள் முதுகில் காய்கறி மூட்டையுடன் அந்த சகதியில் லாவகமாக ஓடி ட்ரைசைக்கிள்களிலும் வேன்களிலும் ஏற்றிக்கொண்டு இருந்தனர்



முதுகில் சுமந்த என்பது கிலோ வெங்காய மூட்டையை வேனில் ஏற்றிய சத்யன், தலையில் கட்டியிருந்த சிவப்பு துண்டை அவிழ்த்து முகத்தில் வலிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே பக்கத்தில் வந்த தனது நண்பன் வேல்முருகனை பார்த்து “ டேய் ரொம்ப பசிக்குதுடா , அம்மாச்சி கடையில நாலு இட்லியை தின்னுட்டு அப்புறமா மிச்ச மூட்டையை ஏத்துவாம்டா” என்று பசித்த குரலில் கேட்டான்

முருகனுக்கும் பசி வயிற்றை கிள்ள “ சரி வாடா சாப்புட்டு வந்துரலாம்” என்று தலையில் அவிழ்த்த துண்டை இடுப்பில் டவுசருக்கு மேலே கட்டிக்கொண்டு, மூட்டையை தூக்க உதவும் கொக்கியை இடுப்பில் சொருகிக்கொண்டு, இருவரும் அம்மாச்சி இட்லி கடைக்கு போய் சிறு மர ஸ்டூல்களில் அமர்ந்து இட்லிக்கு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்

பூ விற்க்கும் பெண்கள் உதிரிப்பூக்களை மடியில் கட்டிக்கொண்டு, கையில் இருந்த வாழை நாரை மெல்லிய நூலாக கிழித்து விரலில் சுற்றிக்கொண்டு இட்லிக்காக காத்திருக்க, நீளமாக காது வளர்த்திருந்த அம்மாச்சி மற்றவர்களை விட்டுவிட்டு சத்யனுக்கும் முருகனுக்கும் தட்டில் சுடச்சுட இட்லியை வைத்து அதில் சாம்பார் சட்னியை ஊற்றி முதலில் கொடுக்க,

அதை கவனித்த ஒருத்தி “ஏத்தா கிழவி நாங்கல்லாம் இம்புட்டு நேரமா இங்கன என்னத்துக்கு உட்கார்ந்திருக்கோம், நீ என்னடா இப்ப வந்தவிகளுக்கு வச்சு குடுக்குறவ, இளவட்டப்பயலுகன்னா உனக்கும் கெறக்கமாத்தான் இருக்கு போலருக்கு” என்று கொஞ்சம் கோபமாக ஆனால் நக்கலாக கேட்டாள்

தட்டில் இருந்த இட்லியை பிய்த்து சாம்பாரில் தொட்ட சத்யன் அப்படியே நிறுத்திவிட்டு “கோவிச்சுக்காத யக்கா காலையிலருந்து ஆளுக்கு அறுவது மூட்டை தூக்கியிருக்கோம், இன்னும் ரெண்டு வேன் லோடு ஏத்தனும், அதுக்குள்ள பசி வயித்த கிள்ளுது, அம்மாச்சிக்கு எங்களை பத்தி தெரியும் அதான் வந்ததும் குடுத்துருச்சு, கோவிச்சுக்காதக்கா ” என்று சமாதானப்படுத்தும் குரலில் கூறிவிட்டு அவசர அவசரமாக இட்லியை சாம்பாருடன் குழைத்து அள்ளி சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தட்டை மறுபடியும் இட்லிக்காக நீட்டினான்

சண்டையிடும் நிலையில் இருந்த பூக்காரிக்கே அவனது பசி பரிதாபத்தை வரவழைக்க, “ சரி தம்பி நீதா மொதல்ல சாப்பிடு, நாங்க என்னத்த வெட்டி முறிக்கப் போறோம், சாயங்காலம்தான் பூ ஏவாரத்துக்கு போகனும்” என்று சொல்ல,..

சத்யன் அந்த பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து புன்னகைத்து விட்டு மறுபடியும் இட்லியை அவசரமாக விழுங்கி எழுந்து கைவிட்டு டவுசரில் கைவிட்டு ஒரு ஐந்து ரூபாயை எடுத்து கிழவியிடம் கொடுத்துவிட்டு முருகனுடன் மூட்டை தூக்க ஓடினான் 


சத்யன் மறுபடியும் முதுகில் மூட்டையை சுமந்துகொண்டு அந்த நாற்றமெடுத்த சேற்றில் கால் புதைய ஓடி வேனில் ஏற்றினான்

சத்யமூர்த்தி என்ற சத்யன், இப்போது வயது இருபது, ஒரு ஏழைக்கு பிறந்த மூத்த ஏழை வாரிசு, சிறுவயதிலேயே படிப்பு நன்றாக வந்தாலும், இவனுடைய பதினாலாவது வயதில் திடீரென்று ஏற்ப்பட்ட தகப்பனின் மரணம் இவனது வாழ்க்கை தடத்தை மாற்றியமைத்தது,

வீட்டைவிட்டு வெளியேறி பழக்கமில்லாத தாயாருக்காக இவன் குடும்ப சுமையை தன் தோளில் ஏற்றிக்கொள்ள, அவனின் பத்தாம் வகுப்பு படிப்புக்கு ஏற்ப நிலையாக எந்த வேலையும் கிடைக்காமல் இந்த நான்கு வருடமாக சுற்றித்திரிந்து, இந்த காய்கறி மார்கெட்டில் வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதமாகிவிட்டது

முதலில் சுமை தூக்குவது கடினமாக இருந்தாலும், போகப்போக பழகிவிட இப்போது அந்த மார்கெட்டில் சத்யனை தெரியாதவர்கள் கிடையாது, பகலெல்லாம் மூட்டை தூக்கிவிட்டு கிடைத்த கூலியில் பாதியை குடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு போகும் தொழிளாலர்கள் மத்தியில், ஒரு பீடி வாங்ககூட கூலியை செலவு செய்யாமல் தன் தாயிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து காலை உணவுக்கு காசு வாங்கி வரும் சத்யனை நினைத்து அவன் தாய்க்கு ரொம்ப பெருமை,

சத்யனின் முதலாளியிடமும் அவனுக்கு நல்லபெயர் இருந்தது
இவனுக்கு பிறகு ஒரு தம்பி விநாயகமூர்த்தி, இவனைவிட படிப்பில் மந்தம் என்றாலும் முட்டிமோதி கல்லூரி படிப்பை தொட்டிருந்தான், அவனுக்கும் சேர்த்து சத்யன் உழைத்தான்,

அவனுடைய இளமையும், அதற்கேற்ற உயரமும் வலிமையும், கருகருவென அரும்பிய மீசையும், வெயிலில் திரிந்து நிறமாறிய மாநிறமும், பளிச்சென்ற முகவெட்டும், எப்போதும் சிரிக்கும் உதடுகளும், பார்பவரகளை எளிதில் ஈர்க்கும் சக்தியுடயது,

முதுகில் மூட்டையுடன் முருகன் முன்னே செல்ல, அடுத்த மூட்டையை கொக்கி போட்டு இழுத்து லாவகமாக முதுகில் ஏற்றிக்கொண்டு கடையின் படியில் இறங்கி பூ மார்கெட் செல்லும் மாடியின் படியருகே சத்யன் வந்தபோதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது

காலில் ஹீல்ஸ் செருப்புடன் சல்வார்கம்மீஸ்ல் பூ மார்க்கெட் இருக்கும் மாடியின் படியில் இறங்கி வந்த ஒரு இளம்பெண், கடைசி படியில் இருந்து இறங்கி தரையில் கால் வைக்கவும் , ஏற்கனவே சேறும் சகதியுமாக இருந்த படியில் வாழையிலை ஒன்று கிடக்க, அந்த இலையின் மீது கால் வைத்தாள் அவள்,

சட்டென வாழைஇலை சருக்கிவிட, அய்யோ என்ற அலறலுடன் கிட்டத்தட்ட இரண்டடி தூரம் வரை சர்ரென்று வழுக்கியபடி முன்னால் சென்றவளை,சத்யன் கவனித்து விட்டான், அய்யோ பொட்டப்புள்ள கீழே விழுந்துர போறா என்ற இரக்க உணர்வில் இடக்கையில் இருந்த கொக்கியால், மூட்டையை வலுவாக பற்றிக்கொண்டு, வலக்கையால் தன்னை நோக்கி சருக்கியபடி வந்தவளை கீழே விழாமல் சட்டென்று பற்றி தன்னுடன் இழுத்து தன் தோளில் அவளை சாய்த்துக்கொண்டான்

அவன் தோளில் விழுந்த அந்த பெண் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிரும் வரை காத்திருந்த சத்யன் முதுகில் இருந்த மூட்டையை பக்கத்து கடையின் திண்ணையில் இறக்கிவிட்டு, “ஏங்க ஜாக்கிரதையா வரக்கூடாதா, நான் எட்டி பிடிக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்” என்றபடி திரும்பி அவளை பார்த்தவன் அடுத்த வார்த்தை வராமல் பிரம்மிப்பால் வாயடைத்துப் போனான்

இவளையா சற்றுமுன் என் தோள்களில் தாங்கினேன், இப்படிப்பட்ட பேரழகியெல்லாம் நாட்டுல இருக்காங்களா என்ன, இவளோட கலர் இதை எப்படி சொல்றது வெள்ளைன்னா? இல்லை சந்தன நிறம்னு சொல்லலாமா? இவளோட கண்ணு ஏன் இவ்வளவு பெரிசா அழகா இருக்கு, இந்த கண்களை பார்த்தவங்களுக்கு மறுபடியும் இவளை பார்க்காமல் இருக்கமுடியாதே?

நிமிடநேரத்தில் அவள் அழகை பற்றி சத்யன் மனதில் பல கேள்விகள் எழ,. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் கொள்ளை அழகை கொட்டி வைத்திருந்த அந்த மதிமுகத்தை விட்டு கண்களை அகற்ற முடியாமல் சத்யன் அவளையே வெறித்துக்கொண்டிருந்ரதான்


அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பலபேர் முன்னிலையில் சருக்கி கீழே விழுந்திருப்போம் என்ற பயம் அவளின் கண்களில் இருந்து அகலாமல் அவனை நோக்கி “ ரொம்ப நன்றிங்க” என்று ஒற்றை வார்த்தை நன்றி கூறிவிட்டு கூட வந்த இன்னொரு பெண்ணுடன் திருப்பி போனாள்

சத்யனுக்கு அவளின் குரல் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலிக்க அங்கேயே நின்றுகொண்டு அவளின் நீண்ட பின்னல் அசைந்தாட அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்,

சிறிதுதூரம் போனதும் அவள் நின்று இவனை திரும்பி பார்க்க அவனையும் அறியாமல் முகம் மலர பளிச்சென்று அவளைப்பார்த்து புன்னகைத்தான், அவள் உடனே முகத்தை திருப்பிக்கொண்டு போக, அவள் பின்னாலேயே ஓடி அவளை சமாதானம் செய்யவேண்டும் என்று வேகமாக எழுந்த உணர்வை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிய சத்யன் அவள் போகும் வரை பார்த்துவிட்டு பிறகு மறுபடியும் மூட்டையை தூக்கிக்கொண்டு வேனில் ஏற்றினான்,

அன்று முழுவதும் அந்த அழகியின் ஞாபகம் அவன் மனதைவிட்டு விலகாமல் ஆட்சி செய்ய, ஒருவித மந்தநிலையில் எல்லா வேலைகளையும் செய்தான், 


அன்று மாலை கூலி வாங்க முதலாளியிடம் சென்றபோது , ‘ முதலாளியின் சார்பில் நாளை திருப்பரங்குன்றத்தில் அன்னதானம் நடப்பதால் காலையிலேயே கோவிலுக்கு வந்துவிடுமாறு முதலாளி சொல்ல, சரியென்று தலையசைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்

அவுட்டோர் ஏரியாவில் வீட்டு வாடகை குறைவு என்பதால் * அவன் வீடு மதுரையின் புறநகர்ப் பகுதியான வண்டியூரில் இருந்தது , அதிக குடியிருப்புகள் இல்லாத பகுதியில் இருந்தது வீட்டில் அம்மா தம்பியுடன் இருந்தான் சத்யன்

வீட்டில் அம்மா வெந்நீர் வைத்து கொடுக்க அலுப்பு தீரக் குளித்தவன், அம்மா தந்த உணவை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டான், கண்மூடி கற்பனையில் அன்று காலையில் பார்த்த அழகியை மனதில் கொண்டு வந்தவன் அவளின் சுகமான நினைவிலேயே தூங்கிப்போனான்

அன்று இரவு சரியாக பதினொன்று முப்பது மணிக்கு வழக்கம் போல அவன் அம்மா எழுப்பிவிட, எழுந்த சத்யன் முகத்தை கழுவிக்கொண்டு அப்பாவின் படத்தின் முன்பு சிறிதுநேரம் கண்மூடி நின்றுவிட்டு வெளியேயிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட்டுக்கு கிளம்பினான்



தினமும் அவன் கிளம்பும் நேரம் இதுதான், இந்தநேரத்தில்தான் காய்கறி லோடுகள் வரும் என்பதால் சத்யன் சரியாக பதினொன்று இருபதுக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவான்

மார்க்கெட்டுக்குள் நுழைந்து சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்கு போக, அங்கே இருந்த கணக்குப்பிள்ளை " சத்யா ஒரு வண்டி மட்டும் கூட இருந்து இறக்குலே மிச்ச வண்டி எல்லாம் இருக்கறனுங்க பார்த்துக்குவானுக, நீ கோயிலுக்கு போய் அங்க கூடமாட வேலையைப் பாருலே" என்று உத்தரவிட

"சரிங்க கணக்கு" என்ற சத்யன் சட்டையையும் கைலியையும் கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு துண்டை தலையில் கட்டிக்கொண்டு, இடுப்பில் கொக்கியை சொருகியவாறு லாரியின் அருகில் ஓடி வேகமாக காய்கறி மூட்டைகளை இறக்க , கூட ஆட்கள் இருந்ததால் சீக்கிரமே இறக்கிவிட்டு கோவிலுக்கு கிளம்பினான் சத்யன்

ட்ரைசைக்கிளில் ஏற்றப்பட்ட அன்னதானத்திற்கு தேவையான வாழைஇலை காய்கறிகளுடன் திருப்பரங்குன்றம் போனபோது விடிந்துவிட்டது, சமுதாயக்கூட சத்திரத்தில் சமையலுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு, அப்போது அங்கே வந்த கணக்குப்பிள்ளையிடம் கோவிலுக்கு போய் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கோயிலுக்குள் நுழைந்த சத்யன் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்துவிட்டு வியர்வை சொட்ட சொட்ட வெளியே வந்தான்

கோவிலின் பக்கவாட்டில் இருந்த மலையடிவாரத்தின் பாதையில் மலையின் மீது ஏறினான், திருப்பரங்குன்றம் வந்தால் சாமி பார்த்துவிட்டு அந்த சிக்கலான மலைப்பாதையில் ஏறி மலைமேல் இருக்கும் சிக்கந்தர்பாஷா பள்ளிவாசலுக்கு போவது சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும்

அன்றும் அப்படித்தான் வியர்வையில் நனைந்த சட்டையை கழட்டி தோள்மீது போட்டுக்கொண்டு சரியான வழியில்லாத அந்த பாதையில் சத்யன் ஏறிக்கொண்டு இருந்தான்


மலைப்பாதையில் கவணம் இருந்தாலும் நேற்றுப் பார்த்த அழகிய முகம் மனம் முழுவதும் நிறைந்திருக்க உதட்டில் புன்சிரிப்புடன் நடந்தவன், தன் பின்னால் யாரோ தன்னை உற்று பார்ப்பது போல ஏதோ ஒரு உணர்வு தோன்ற நின்று சட்டென திரும்பி பார்த்தான்

பார்த்தவன் பார்த்தபடி அப்படியே நின்றான், அவளேதான் நேற்று பார்த்த அதே அழகிதான், இன்று பட்டுப்பாவாடை தாவணியில் இருந்தாள், சத்யனோ நேற்று போலவே இன்றும் சட்டையில்லாமல் இருந்தான், அவளின் பார்வையில் லேசான வெட்கம் இருந்தாலும் அவனுடைய வெற்றுடம்பையே வைத்தகண் வாங்காமல் பார்க்க

சத்யன் அவசரமாக தனது தோளில் கிடந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டே அவளை பார்க்க , அவனுடைய பரபரப்பு அவளுக்கு சிரிப்பை ஏற்படுத்த விரல்களால் வாயை பொத்திக்கொண்டு சிரித்துவிட்டாள், அவளின் சிரிப்பை பார்த்த சத்யன் தானும் பதிலுக்கு சிரித்துவிட்டு " என்னங்க கோயிலுக்கு சாமி கும்பிட வந்தீங்களா" என்று சம்பிரதாயமாக ஆனால் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை கேட்க

அவளோ " இல்லைங்க சினிமாவுக்கு வந்தேன்" என்றாள் கிண்டலாக

சத்யன் சற்றே அசடு வழிய நின்றுவிட்டு, ச்சே கேட்டது தப்போ என்று எண்ணியபடி மறுபடியும் திரும்பி மலையேற ஆரம்பித்தான்,

" என்ன கோபமா, பின்ன கோயிலுக்கு சாமி கும்பிட வராம சினிமா பாக்கவா வருவாங்க" என்றபடி அவன் பின்னாலேயே அவள் குரல் சமாதானமாக சொல்ல,

சத்யன் அவளின் உரிமையான பேச்சில் வியந்து போய் நின்றுவிட்டான், அதற்க்குள் அவனருகில் வந்தவள் " நீங்க அடிக்கடி இந்த மலைக்கு வருவீங்களா, நான் திருப்பரங்குன்றம் வரும்போதெல்லாம் இந்த மலையேறம போகமாட்டேன்" என்று ரொம்ப நாள் பழகியவள் அவள் சரளமாக பேச, சத்யன்தான் அவளுக்கு பதில் சொல்ல தடுமாறினான்

அப்போது கீழேயிருந்து " ஏய் தேவி கொஞ்சம் நில்லுடி நாங்களும் வந்துறோம் " என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க,....:

அவள் சத்யனை பார்த்துக்கொண்டே " ம்ம் இங்கதான் இருக்கேன் சீக்கிரமா வாங்க அக்கா" என்று அந்த பெண்ணுக்கு பதில் சொன்னாள், அவள் பார்வை என் பெயர் அதுதான் என்று அவனுக்கு சொல்லாமல் சொல்ல

கீழேயிருந்து அந்த பெண் ஏறி வருவது தெரிய, சத்யன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை பார்த்த தேவி தலைகுனிந்து " ஒவ்வொரு வாரமும் காலையில பத்து மணிக்கு இந்த மலைக்கு வருவேன்" என்ற தகவலை அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்

அந்த பெண் நெருங்கிவிட ,சத்யனும் அவசரமாக திரும்பி மேல் நோக்கி ஏற ஆரம்பித்தான் 

சத்யன் அதன்பிறகு அவளை திரும்பி பார்க்காமல் வேகமாக மலையேறினான் , காரணம் தேவியுடன் வேறு ஒரு பெண் வந்து சேர்ந்து கொண்டதால் இந்த பாராமுகம், மற்றபடி அவளை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற உணர்வை அடக்க முடியாமல்தான் மலையேறினான்

தர்ஹாவை அடைந்து பிரார்த்தனை முடித்துக்கொண்டு ஒரு பாறையின் மறைவில் அமர்ந்தபோது அவனருகே இருந்த மற்றொரு பாறையில் வந்து தேவி அமர்ந்தாள், சத்யன் இதை எதிர்பார்க்கவில்லை, திகைப்புடன் எழுந்து நின்று அவளுக்கு பின்னால் வந்த பெண்ணை தேடினான்

தாவணியின் பின்புறத்தை தூக்கி விட்டு பாறையில் அமர்ந்த தேவி “ அந்த அக்காவால ஏற முடியலை பாதிலேயே உட்கார்ந்துட்டாங்க, நீங்க உட்காருங்க” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல,

சத்யன் அவளைவிட்டு சற்று விலகி அடுத்த பாறையில் அமர்ந்தான், அவளிடம் நிறைய பேசவேண்டும் என்று மனசு தவித்தாலும், நேற்று சந்தித்த அறிமுகமில்லாத பெண்ணிடம் என்ன பேசுவது என்று குழப்பத்தில் அமர்ந்திருந்தான்

“ என்ன எதுவுமே பேசமாட்டேங்கறீங்க, நேத்து மட்டும் நீங்க பிடிச்சு நிறுத்தலைன்னா, சறுக்கிகிட்டே என் வீடுவரை போயிருப்பேன்,” என்று தேவி சிரிக்கும் முகமும், தேன் சிந்தும் இதழ்களும் கதை பேசும் கண்களுமாக சொல்ல

அவள் பேச்சில் இருந்த குறும்பு சத்யனுக்கு சிரிப்பை வரவழைக்க, வாய்விட்டு சிரித்தான், அவன் சிரிப்பதையே பார்த்தவள் “ உங்கப்பேர் என்ன?” என்றாள்

“ சத்யமூர்த்தி , எல்லாரும் சத்யன்னு கூப்பிடுவாங்க” என பளிச்சென்று பதில் சொன்ன சத்யன், வெகு அருகில் அவள் அழகை ரசித்துக்கொண்டே “ உங்க பேர் வெறும் தேவி தானா” என்று கேட்டான்

“ ம்ம் வெறும் தேவிதான், உங்களுக்கு வேனும்னா ஏதாவது கூட சேர்த்துகங்க, உங்க பேர் நல்லாருக்கு” என்று தேவி நக்கலாக சொல்லவிட்டு சத்யன் என்று சத்தம் வராமல் சொல்லிப்பார்த்து கொண்டாள்

சத்யனுக்கு அவளை பார்த்து ஆச்சரியமாக இருந்தது, வெகுநாட்களாக பழகியவள் போன்ற அவளது பேச்சு வியப்பாக இருந்தது,

அவனையே பார்த்துக்கொண்டிருந்த தேவி “அந்த அக்காவை கீழே உட்கார வச்சுட்டு வந்துருக்கேன், சீக்கிரமா உங்களைப்பத்தி சொல்லுங்க, உங்க வயசு என்ன? என்ன படிச்சுருக்கீங்க? உங்க வீடு எங்கருக்கு?” என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்க

சத்யன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான், அவனுடைய இருபது வருட வாழ்க்கையில் இன்றுதான் தனிமையில் ஒரு அழகான பொண்ணுடன் பேசிக்கொண்டு இருக்கிறான்

“ என்ன நீங்க பேசவே மாட்டேங்கறீங்க, நான் மட்டும் பேசிகிட்டு இருக்கேன், நான் பேசுறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நான் போறேன்” என்று சலிப்போடு தேவி சொல்லவும்

“ இல்லங்க நீங்க பேசுறது பிடிக்குது தான், ஆனா நேத்துதான் என்னைய பார்த்தீங்க அதுக்குள்ள என்கிட்ட இவ்வளவு பேசுறீங்க, நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்லை என்கிட்ட மட்டும் இப்புடி பேசுறீங்களா,” என்று சத்யன் அவளை பத்தி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்

“ நான் எப்பவுமே இப்படித்தான் சத்யன், எல்லார்கிட்டயும் சட்டுன்னு பழகிடுவேன், அதனாலயே என்னை எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும், காலேஜ்ல கூட எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க” என்று படபடவென்று தேவி அவனுக்கு பதில் சொல்ல

“ ஓ நீங்க காலேஜ்ல படிக்கிறீங்களா” என்ற சத்யனின் குரலில் அளவுகடந்த ஏமாற்றம் வெளிப்படையாக தெரிந்தது, யாரிடமும் இந்த மாதிரி பேசியதில்லை உங்ககிட்ட மட்டும்தான் இப்படி பேசுறேன் என்று தேவி சொல்லவேண்டும் என சத்யனின் இளமனது எதிர்பார்த்தது போல அதனால் வந்த ஏமாற்றம் தான் இது

அவன் முகமும் குரலும் அவன் மனதை சொல்ல “ அட ஆமாங்க சும்மா டிகிரிக்காக என்னை காலேஜ்ல சேர்த்து விட்டுருக்காங்க, மத்தபடி எனக்கு படிப்பு அவ்வளவா வராது” என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் அவள் சொல்கிறாள் என்று சத்யனுக்கு நன்றாக புரிந்தது

முகத்தில் லேசான புன்னகையை படரவிட்ட சத்யன், தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சுருக்கமாக அவளுக்கு சொல்லிவிட்டு “ நீங்க எங்கருக்கீங்க, எந்த காலேஜ்ல படிக்கிறீங்க” என்று அவளை விசாரித்தான்

தேவி துளிகூட தயக்கமின்றி “ உங்களுக்கு இருபது வயசுதானா ஆகுது, பார்த்தா அப்படி தெரியலை ரொம்ப உயரமா பெரிய ஆள்மாதிரி இருக்கீங்க” என்று ஆச்சிரியப்பட்டவள்

“ நான் தேவி, வயசு பதினெட்டு முடிஞ்சு போச்சு, எனக்கு ஒரு அக்கா ரெண்டு அண்ணன், வீடு வைகை ஆத்துக்கு அந்தபக்கம் செல்லூர்ல இருக்கு, அப்பா அண்ணன் எல்லாருமே வட்டிக்கு தவனைக்கு குடுத்து வாங்குறவங்க, ஆனா எனக்கு அதெல்லாம் பிடிக்காது, என்னப் பண்றதுன்னு பொறுத்துகிட்டு இருக்கேன், எனக்கு மட்டும் கல்யாணம் ஆயிட்டா எங்கம்மா வீட்டுக்கே வரமாட்டேன் சத்யன், கீப்பாலத்துகிட்ட இருக்கே மீனாட்சி காலேஜ் அங்கதான் படிக்கிறேன், நீங்க அந்தபக்கம் வருவீங்களா?” என்று தன்னைப்பற்றி விரிவாக படபடவென்று சொன்ன தேவி அவன் தன் காலேஜ் பக்கமாக வருவானா என்ற கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து அவன் முகத்தை பார்த்தாள்

“ அந்த காலேஜ்லயா படிக்கிறீங்க, நான் வேலை முடிஞ்சு தினமும் மூனு மணிக்கு அந்தபக்கம் தான் சைக்கிளில் வீட்டுக்கு போவேன்” என்று சத்யன் வியப்புடன் பதில் சொன்னதும்,



தேவியின் முகம் பூவாய் மலர “ அப்படின்னா நாளைக்கு நாலு மணிக்கு வர்றீங்களா நான் வெயிட் பண்ணவா” என்று ஆர்வமாக கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சத்யன் சில நிமிடங்கள் தயங்கி தலைகுனிய

“ உங்களுக்கு பிடிக்கலைன்னா வரவேண்டாம், ஆனா எனக்கு நேத்துலேருந்து உங்களை பார்க்கனும் பேசனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு அதான் கேட்டேன்” என்று வருத்தமாக தேவி சொன்னாள்


No comments:

Post a Comment