Saturday, July 25, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 2

ஒரு பொண்ணே வழியவந்து கேட்கும்போது அதை மறுப்பது ஆண்பிள்ளைக்கு அழகில்லை என்றாலும், அவளது குடும்ப பின்னனியும், பெண்கள் கூட இடுப்பில் அரிவாளை சொருகிக்கொண்டு வெட்டு குத்துக்கு அஞ்சாத அவளுடைய இனமும் சத்யனை தயங்க வைத்தது, தனது தாயையும் தம்பியையும் நினைத்துப்பார்த்தான், எதுஎப்படியோ அவனுடைய இளமனது அந்த புதிய காதலை குதூகலமாக கொண்டாடியது

அடுத்த கணம் மாற்று யோசனையின்றி உடனே “ ம்ம் சரியா நாலு மணிக்கு வர்றேன்ங்க ” என்று சந்தோஷமாக சொல்லவும், அவள் முகம் சந்தோஷத்தில் ஜொலித்ததை பார்த்து ச்சே முதலிலேயே சொல்லியிருக்கலாமோ என்று தன்னையே கடிந்துகொண்டான்

அதே சந்தோஷத்துடன் எழுந்த தேவி “ சரி நேரமாச்சு நான் கிளம்புறேன், நீங்க அப்புறமா வாங்க” என்று இரண்டடி நடந்தவள் மறுபடியும் திரும்பி “ நீங்க இனிமே என்னை வா போன்னு கூப்பிடுங்க, இல்லேன்னா தேவின்னு கூப்பிடுங்க” என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு போனாள்



அவள் போய் வெகுநேரம் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தான், அவனுக்கு நடந்ததெல்லாம் கனவுபோல இருந்தது, ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா?, இது சரிதானா அவளுடைய அழகுக்கும் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் நான் தகுதியானவனா? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட சத்யன் குனிந்து தனது உடையை பார்த்தான்

கோவிலுக்கு போகவேண்டும் என்பதற்காக இரவு வீட்டிலிருந்து எடுத்து வந்த பிரவுன் கலர் பேன்ட் போட்டிருந்தான், எல்லா நேரமும் கைலியே கட்டுவதால், அவனிடம் இருக்கும் ஒரேயொரு நல்ல பேன்ட் இதுதான், சட்டையும் ரொம்ப பழசுதான், இதையெல்லாம் பார்த்து அவளுக்கு என்னை எப்படி பிடித்தது என்று சந்தேகமாக இருந்தது

ஒருவேளை அவள் இயல்பாக பேசுவதை நான்தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா, என்று மனம் குழம்பி தவிக்க, நிச்சயம் அப்படித்தான் இருக்கும், பின்னே இவ்வளவு அழகான பொண்ணு என்னை காதலிக்கவா செய்யும், அதெல்லாம் ஒன்னும் இருக்காது, இது சும்மாதான், என்று அறிவாளி மூளை அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து அவன் தவிப்புக்கு எண்ணை ஊற்றியது

ஆனால் அந்தநிமிடமே காதலின் முதல் விதை அவனையுமறியாமல் அவன் மனதில் விழுந்துவிட்டது, அன்று முழுவதும் எங்கே பார்த்தாலும் தேவிதான் தெரிந்தாள், யார் பேசினாலும் தேவியின் குரல்தான் கேட்டது, வேறு எதுவுமே சிந்திக்கமுடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு மறுநாள் நான்கு மணி எப்போது வரும் என்று காத்திருந்து, சரியாக மூன்று மணிக்கே கல்லூரியின் அருகில் மறைவாக காத்திருந்தான்

அவனுக்கு எதிரில் வண்டி மாட்டுக்கு இரண்டு பேர் லாடம் அடித்துக்கொண்டு இருக்க, பக்கத்தில் இருந்த இரும்பு பட்டரையின் சம்மட்டியடிக்கும் சத்தமும், கல்லூரியின் இடதுபுறமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலின் சாக்கடை நாத்தமும், நிமிர்ந்து பார்த்தால் மதுரை மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களின் இறைச்சலும் என மாத்தி மாத்தி அவன் கவனத்தை கவர்ந்தாலும், எதுவுமே மனதில் பதியவில்லை

மணி மூன்று ஐம்பது ஆனது, சத்யனுக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்க சட்டையின் காஜா பட்டியில் ஒளித்து வைத்திருந்த பீடியை எடுத்து பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்து புகையை பக்கவாட்டில் ஊதியவனுக்கு பதட்டம் கொஞ்சம் தனிந்தது போல இருந்தது

கல்லூரியில் இருந்து விதவிதமான உடைகளில் பெண்கள் வெளியே வர அவ்வளவு கூட்டத்திலும் அவன் கண்கள் தேவியை தேடியது, அதோ அதோ தேவி என்று அவன் மனம் தாவி குதிக்க, சத்யன் விரலிடுக்கில் இருந்த பீடியை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு கீழேபோட்டு காலால் நெருப்பை அனைத்தான்

தேவியும் அவனை பார்த்துவிட்டாள் ஆனால் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் கூட வந்த பெண்களிடம் ஏதோ சொல்லிவிட்டு, கீழ்ப்பாலம் சொல்லும் வழியில் வேகமாக நடக்கத் தொடங்க, சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை, அவள் பின்னே போகலாமா இல்லை இப்படியே திரும்பி விடுவோமா, என்று யோசித்தபடி நின்றவனை , அவன் காதல் மனது ம் போ அவள் பின்னால் என்று துரத்த,

சத்யன் சைக்கிளை தள்ளிக்கொண்டு அவள் போன திசையில் நடந்தான், அவனுக்கு முன்னால் சென்ற தேவி ஆற்றை ஒட்டிய ஒரு சரிவில் இறங்கி மேம்பாலத்தின் அடியில் இருக்கும் பொரிய சிமிண்ட் தூணின் பின்னால் மறைந்தாள்..

சத்யன் சைக்கிளை சரிவில் விட்டுவிட்டு அவனும் இறங்கி அவள் இருந்த தூண்னருகில் போனான்

மார்பில் புத்தகங்களை அணைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருந்த தேவி " ஏன் இவ்வளவு நேரம் நான் வந்ததும் என் பின்னாடியே வரவேண்டியது தானே" என்றவள் அருகில் நின்ற அவனை நெருங்கி " நான் வரும்போது நீங்க சிகரெட் தானே பிடிச்சீங்க" என்று நேரிடையாக அதட்டி கேட்க

சத்யன் மறைக்காமல் சொன்னான் " சிகரெட் இல்லை பீடிதான் பிடிச்சேன்" என்று

சிலநிமிடங்கள் அவனை உற்று பார்த்தவள், தனது ஆள்காட்டி விரலால் அவன் உதட்டில் வலிக்கும் படி பட்டென்று சுண்டியவள் " இனிமேல் பீடி பிடிச்சு பாரு அப்புறமா இருக்கு உனக்கு வேடிக்கை" என்று எச்சரிக்கை செய்ய

வலித்த உதட்டை தடவியபடி அவளை ஆச்சரியமாக பார்த்தான் சத்யன்

தேவி சுண்டிவிட்ட தனது உதடுகளை விரலால் தேய்த்துக்கொண்டே அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் சத்யன், சந்தித்து இரண்டு நாள் கூட முழுசா முடியலை அதுக்குள்ள அவளின் நெருக்கமான அனுகுமுறையும், உரிமையான பேச்சும் அவனுக்கு வியப்பாக இருந்தது,

அவனையே பார்த்துக்கொண்டிருந்த தேவி “ என்னாச்சு அப்புடி பார்க்குற, இனிமேல் பீடியெல்லாம் பிடிக்ககூடாது சரியா” என்று கேட்க
சத்யனுக்குள் இருந்த தன்மானம் சட்டென்று தலைதூக்க முகம் இறுக “ அதை ஏன் நீங்க சொல்றீங்க நான் பீடி பிடிப்பேன்” என்று பிடிவாதமாக சொன்னான்

அவனை முறைத்து பார்த்த தேவி “ சரி நான் கிளம்புறேன் நேரமாச்சு” என்று கீழே வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்காக அவள் திரும்ப

அய்யோ தவறாக பேசிட்டோமோ என்று நினைத்த சத்யன் “என்னை எதுக்கு இங்க வரசொன்னீங்க இப்போ கிளம்பறீங்க” என்று பேச்சை வளர்த்து அவளை நிறுத்த முயன்றான்

அவனை திரும்பி பார்த்து மறுபடியும் முறைத்த தேவி “ என்ன பிராண்ட் பீடி பிடிக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் வரச்சொன்னேன்” என்று நக்கலாக கூற

அவளது கோபம் சத்யனுக்கு புரிய “ இல்லைங்க எனக்கு இந்த மாதிரியெல்லாம் பேசி பழக்கம் இல்ல, நான் பேசுற மொத பொண்ணு நீங்கதான், அதுவுமில்லாம யாராவது பார்த்துட்டா என்ன பண்றது, நானாவது பையன் பரவாயில்லை, உங்களை உங்க வீட்டு ஆளுங்க பார்த்தா என்ன கதின்னு யோசிங்க,” என்று பொறுமையாக பேசி அவளுக்கு புரியவைக்க முயன்றான்

மறுபடியும் பையை கீழே வைத்தவள், அவனை நெருங்கி நின்று “ இதோபார் எனக்கு எதையுமே மறைச்சு பேசத்தெரியாது, என்ன காரணமோ உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, அதோட நானும் இந்த மாதிரியெல்லாம் பேசினதில்லை எனக்கும் இது புதுசுதான், யாராவது பார்த்தா பார்த்துட்டு போகட்டும், பொண்ணு நானே பயப்படலை நீ ஏன் பயப்படுற,

" மொதல்ல இந்த வாங்க போங்கன்னு கூப்பிடுறத நிறுத்து, அப்புறமா ஏதோ ஸ்கூல் டீச்சர் கிட்ட பேசுறமாதிரி கையை கட்டிகிட்டு பேசாதே, இங்க யாராவது பார்ப்பாங்கன்னு பயமா இருந்தா பார்க்காத இடத்துக்கு கூட்டிட்டு போ, நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன் புரியுதா” என்று தேவி விளக்கமாய் சொல்லி அதட்டி கேட்க

அவளுடைய வேகத்தை பார்த்து சத்யனுக்கு வயிற்றில் இனம்புரியாத கலவரம் உண்டாக “இதுக்கு என்ன அர்த்தம்” என்று மொட்டையாக கேட்டான்
தேவியின் முகபாவனையில் அவள் மறுபடியும் கடுப்பாகிவிட்டாள் என்று மட்டும் புரிய, அவள் பதிலுக்காக காத்திருந்தான் சத்யன்

“ ஏய் என்னப்பா நீ சரியான டியூப்லைட்டா இருக்க” என்ற தேவி குளிக்காமல் வியர்வை நாற்றத்துடன் இருந்த அந்த கூலிக்காரனை இன்னும் சற்று நெருங்கி சட்டை பட்டனை திருகியவாறு

“ எனக்கு உன்னை ரொம்ப புடிச்சுருக்கு, உன்னை விரும்புறேன்னு நெனைக்கிறேன், எனக்கு எதை பத்தியும் யாரை பத்தியும் கவலையில்லை, எனக்கு நீதான் வேனும், என்னடா பார்த்து ரெண்டுநாள் தானே ஆச்சு அதுக்குள்ள எப்படி லவ் வந்துச்சுன்னு லூசுத்தனமா யோசிக்காத,

"அது அப்படித்தான் ஒருத்தரை பார்த்ததுமே நமக்கு இவங்கதான்னு மனசு சொல்லிரும், உன்னை பார்த்ததும் என் மனசும் அப்புடித்தான் சொல்லுச்சு, உனக்கு நம்பிக்கை வரலைன்னா ஒன்னு செய்யலாமா இப்படியே பெரியார் பஸ்ஸ்டாண்ட் போய் எதாவது பஸ்ஸை புடிச்சு எங்கயாவது ஓடிப்போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்துவமா?

"எது எப்படி இருந்தாலும் எனக்கு படிப்பு சுத்தமா வரலை, வராத அதை புடிச்சுகிட்டு மல்லுகட்டுறதைவிட, எனக்கு ஈசியா வர்ற இதை பண்ணுவோமா? எனக்கும் எங்கவீட்டு ஆளுங்களுக்கு பிடிக்காத எதையாவது பண்ணி அவங்க சுத்தல்ல விடனும்னு ஆசை என்ன சொல்றீங்க எங்கயாவது ஓடிப்போயிரலாமா?” என்று அவள் முடிப்பதற்குள் சத்யனுக்கு உடலெல்லாம் வியர்த்து கால்வழியாக வியர்வை வழிந்தது

மடித்து கட்டியிருந்த கைலியை அவிழ்த்து முகத்தையும் கழுத்தையும் துடைத்தவன் தனது நடுக்கத்தை முடிந்தவரை மறைத்துக்கொண்டு “நான் கிளம்புறேன் நேரமாகுது” என்று நகர


“ சரி நீ ரொம்ப பயப்படுற அதனால இன்னொரு நாளைக்கு ஓடிப்போறத பத்தி பேசுவோம், ஆமா நீ எப்பவுமே காக்கி டவுசர்தான் போடுவியா, இல்ல அன்னிக்கு மார்க்கெட்லயும் காக்கி டவுசர்தான் போட்டிருந்த, அதான் கேட்டேன்” என்று போகிறவனை நிறுத்தி அவள் பேச்சை வளர்க்க

ம்ம் நம்மளை பத்தி எல்லாத்தையும் கவனிக்கிறா போல “ பின்னே காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்றவன் சஃபாரி சூட்டா போட்டுருப்பான்” என்று சத்யன் நக்கலாக கேட்க

“ அய்யோ கருவாயனுக்கு உடனே கோபம் வருதா, இந்த டிரஸ்ல தான் உன்னை பார்த்து எனக்கு லவ் வந்துச்சு, எனக்கும் வெட்டி பந்தா எல்லாம் பிடிக்காது, நான் போட்டுருக்க எல்லாமே என் வீட்டுல இருக்கிறவங்க திருப்த்திக்காக, ஆனா உன்கூட வந்த பிறகு நீ சாக்குபை குடுத்தா கூட சுத்திக்குவேன், சரியா ” இன்னும் அவன் சட்டை பட்டனை திருகிக்கொண்டே தான் பேசினாள்

அவளை பார்க்க பார்க்க சத்யனுக்கு ஒருபுறம் வியப்பும் ஒருபுறம் பயமாகவும் இருந்தது, அவளது வேகம் அவனை நடுங்க வைத்தது, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்

“ என்ன அப்புடி பார்க்குற, நான் ஓகேவா,” என்று தேவி கண்சிமிட்டி கேட்டாள்,...
சத்யனின் தலை அவனையும் அறியாமல் அசைந்து சம்மதம் சொன்னது, தேவி அவன் வலதுகை விரலகளை பற்ற லேசாக நடுங்கிய விரல்களை ஆறுதலாக தன் கைகளுக்குள் வைத்து அடக்கிக்கொண்டாள்

“ என்னடா இவ இப்படியெல்லாம் பேசுறாளேன்னு பயப்படாதே சத்யா, என்னால உனக்கு ஒரு ஆபத்துன்னா என்னவேண்டுமானாலும் செய்வேன் அந்த ஆபத்து என் வீட்டு ஆளுங்களால வந்தாலும் சரி என் உயிரை கொடுத்து உன்னை காப்பாத்துவேன், நீ என்னை நம்புறே தானே” என்று அவ்வளவு நேரம் விளையாட்டுத்தனமாக பேசியவள், இப்போது கண்கலங்கி மெல்லிய குரலில் கேட்டாள்

அவள் கைகளுக்குள் இருந்த தன் கையை புரட்டி அவளின் வலதுகையை பற்றி தன் நெஞ்சில் வைத்த சத்யன் “ நானும் ஒன்னும் கோழை இல்லை தேவி, எனக்கு எது நல்லது சரின்னு படுதோ அதை யாருக்கும் பயப்படாமல் செய்வேன், இந்த உலகத்திலேயே நான் பயப்படும் ஒரே ஜீவன் என் அம்மாதான், மத்தபடி எனக்கும் பிடிச்சுருக்கு ” என்று தன் வாயால் அவளுக்கு முதன்முறையாக மனதை திறந்து ஆறுதல் சொன்னான்

“அப்போ மொதல்ல மாமியாரைத்தான் பார்க்கனும் போலருக்கு, சரி சொல்லு நான் என்னைக்கு உன்வீட்டுக்கு வரட்டும்” என்று சட்டென்று குறும்புத்தனமாக தேவி கேட்க

“அய்யய்யோ கடவுளே எல்லாம் குட்டிச்சுவராக்கிடுவ போலருக்கு, அம்மா தாயே இவ்வளவு வேகம் ஆகாது கொஞ்சம் பொறுமை இரு எல்லாம் ஒழுங்கா நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும் , நீ வீட்டுக்கு போ பொறவு பார்க்கலாம்" என்று கூறிவிட்டு விலகியவனை

கைபிடித்து நிறுத்திய தேவி " நாளைக்கு வருவீங்க தானே, நான் இங்கேயே வெயிட் பண்ணவா?" என்று பரிதாபமாக கேட்க

மறுபடியும் அவளருகே வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நெருக்கமாக நின்று தன் விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி அவளுடைய கண்களை பார்த்தவாறே " நிச்சயமா வருவேன் தேவி நானும் இதையெல்லாம் விரும்புறேன் தான், ஆனா இந்த வேகம்தான் எதுவுமே நிலைக்காம போயிடுமோன்னு பயமா இருக்கு" என்றவன் இன்னும் அதிகமாக நெருங்கி அவளின் மூச்சு காற்றை சுவாசித்த வாறு

" நீ ரொம்ப அழகா இருக்க தேவி, நான்தான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாம இருக்கேன்" என்றான்

" யார் சொன்னது நமக்கு பொருத்தம் இல்லேன்னு, எப்பவுமே மார்கெட் வராத நான் அன்னிக்கு மட்டும் ஏன் பூ வாங்க வரனும், வந்தவ ஏன் சறுக்கி உன்மேல விழனும், எத்தனையோ வாட்டி கோயிலுக்கு போயிருக்கேன் ஆனா அன்னிக்கு மட்டும் ஏன் உங்களை கோயில்லே மறுபடியும் சந்திக்கனும், இதெல்லாம் சும்மா நடக்குமா சத்யா, நாம ரெண்டு பேரும் பொருத்தமானவங்கன்னு கடவுளே முடிவு பண்ணிட்டாரு தெரியுமா? ரெண்டு நாளா நான் தூங்காம எல்லாத்தையும் நல்லா யோசிச்சுட்டேன், நீ எதையுமே யோசிக்க வேண்டாம் சரியா" என்று அவள் குழந்தை தனமாக குமரிக் குரலில் கூறியதை கேட்டு சத்யனுக்கு சிரிப்புதான் வந்தது

" சரி நான் எதையுமே யோசிக்கலை, நீயே எனக்கும் சேர்த்து யோசிச்சு நான் என்ன செய்யனும்னு சொல்லு" என்று சிரிப்புடன் சத்யன் சொல்லிவிட்டு தனது விரலை அவளுடைய உதடு நோக்கி எடுத்துச்சென்றவன், வண்ணான் ஒருவன் ஆற்றில் துவைத்து காயவைத்த துணிகளை சுருட்டிக்கொன்டே அவர்களை பார்பதை உணர்ந்து பட்டென்று கையை மடக்கிக்கொண்டு விலகினான்

" சரி நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்ப, தேவியும் அங்கிருந்து கிளம்பினாள் 




வீட்டுக்கு வந்த சத்யன் குளித்துவிட்டு அம்மா கொடுத்த சாப்பாட்டை யந்திரகதியில் சாப்பிட்டுவிட்டு படுத்தவனுக்கு கலர்கலராக கனவுகள் வரவில்லை மனசுக்குள் கலவரம்தான் நடந்தது

இது சரியா தவறா என்று எண்ணி குழம்பினான், அவனுடைய குடும்ப சூழல் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற வைத்தது, அவன் குடும்ப வறுமை ஒருபுறம் தன்னுடைய எட்டாம் வகுப்பு படிப்பு பெரிய தடையாக இருந்தது

அவள்தான் ஏதோ குழந்தைத்தனமா பேசினால் நமக்கு எங்கபோச்சு புத்தி என்று தன்னையே கடிந்து கொண்டான், ஆனாலும் அவளுக்கு மட்டும்தான் ஆசையா என்ன நானும்தான் எனக்கும்தான் அவளை ரொம்ப பிடிச்சுருக்கு...

இரவின் நெடுநேரம் வரை சிந்தனையில் புரண்டவன் தூங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அவன் அம்மா மார்க்கெட்க்கு போவதற்காக எழுப்பிவிட பாதி தூக்கத்தில் எழுந்த சத்யன் மிகுந்த சோர்வுடன் கடைக்கு கிளம்பினான்

சைக்கிளை மிதித்தபடி தேவியை நினைத்துக்கொண்டு மதுரை பெரியாஸ்பத்திரியை தாண்டும்போது எதிரே வந்த ஒரு வேன் இவன் சைக்கிளில் உராய, சத்யன் தாறுமாறாக கீழே விழ இவன்மீது ஏறவேண்டிய வேன் இவன் சைக்கிள் மீது ஏறி நிற்க்காமல் கடந்து சென்றது

கீழே கிடந்த சத்யனை அங்கிருந்த சிலர் தூக்கி நிறுத்த, சைக்கிளின் மர்கார்டு கிழித்ததால் வலது முழங்காலில் ஆழமாக சதை கிழிக்கப்பட்டு இருந்து ரத்தம் வழிய நெற்றி கைகள் என உடலில் ஆங்காங்கே ரத்தகாயங்கள் கூட்டத்தினர் அவனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று ராஜாஜி மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்த்தனர்

அங்கே வெகு நிதானமாக சிகிச்சை செய்த நர்ஸ்கள் , சத்யனின் கால் காயத்திற்கு வலிக்க வலிக்க பச்சையாக சதையை இழுத்துப்பிடித்து தையல் போட்டனர், துடித்துபோய் சிறுபிள்ளை போல் அழுத சத்யனை கிண்டல் செய்தனர்

ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் காயம் ஆழமாக இருப்பதால் இரண்டு நாள் பெட்டில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போக, சத்யன் அம்மாவுக்கு எப்படி தகவல் சொல்வது என்று தவித்தான், அடி மனதில் இன்னொரு தவிப்பும் ஏற்பட்டது, அதாவது மாலையில் தேவி வந்து காத்திருப்பாளே என்ற தவிப்பு நேரமாக நேரமாக அதிகரித்தது

அதிகாலையில் வந்த டாக்டரிடம் வீட்டுக்கு தகவல் சொல்லவேண்டும் வெளியே போய் வரலாமா என்று கேட்க, அதிசயமான அந்த நல்ல டாக்டர் தனது மொபைலில் பேசலாம் நம்பர் சொல்லுப்பா என்று கேட்டார்

சத்யன் தான் வேலை செய்யும் கடையின் நம்பர் சொல்ல, டாக்டர் டயல் செய்து அவனிடம் கொடுத்தார், கடை போனை எதிர்முனையில் கணக்குப்பிள்ளை எடுக்க, வேலைக்கு வரும்போது விபத்து ஆன விவரத்தை சொன்ன சத்யன், தனது அம்மாவுக்கு தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு மொபைலை டாக்டரிடம் கொடுத்தான்

அடுத்த சில மணிநேரத்தில் முருகனுடன் இவன் அம்மாவும் வந்தனர், அம்மா கண்ணீர் விட்டு கதறவில்லை என்றாலும் காயங்களை கவனமுடன் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை கேட்டார், பிறகு மகனைவிட்டு நகராமல் பாதுகாப்புடன் பார்த்துக்கொண்டார்

முருகன் சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பினான், அவனிடம் தேவிக்கு ஏதாவது தகவல் சொல்லலாம் என்று பார்த்தால் அவன் அம்மா அங்கேயே இருக்கவே சத்யனால் முடியாமல் போனது

மாலை நாலு மணியானதும் இன்னேரம் தேவி பாலத்தின் கீழே வந்து காத்திருப்பாளே, என்ற எண்ணம் மருந்து மாத்திரைகளை மீறி அவனை தூங்கவிடாமல் செய்தது, தேவியின் மேல் உள்ள காதல் அவனுக்கே இப்போதுதான் புரிந்தது, புரிந்த விஷயம் மனதை சந்தோஷப்படுத்த அன்று இரவு கனவுகளுடன் உறங்கினான்

மறுநாள் காலை டாக்டரின் ரவுண்ட்ஸ் முடிந்தவுடன், முருகன் வந்தான், சத்யனிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்த முருகன். “ அம்மா நீங்க வீட்டுக்கு போங்க நான் இங்கயே இருந்து சாயங்காலம் சத்யனை டிச்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வர்றேன், நீங்க கிளம்புங்கம்மா” என்று சத்யனின் தாயாரை வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்

சத்யனின் அம்மா வார்டை விட்டு வெளியே போன அடுத்த நிமிடம் “ கொஞ்சம் இருடா சத்யா இதோ வர்றேன்” முருகன் அவசரமாக வெளியே ஓடினான் மறுபடியும் உள்ளே வந்தவனுடன் தேவியும் வந்தாள்

தேவியை பார்த்ததும் துள்ளிகுதித்த மனதை அடக்கியவாறு கட்டிலில் இருந்து எழுந்து அமரவும் தேவி அவனருகில் வந்து கட்டிலில் பக்கத்தில் அமரவும் சரியாக இருந்தது,

கட்டிலில் அமர்ந்த தேவி எதுவும் பேசாமல் அவன் கைகளை எடுத்து தனது கைகளுடன் சேர்த்து இணைத்துக்கொண்டு கண்கலங்க அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் , சிறிதுநேரம் அங்கே வாய் பேச்சுக்கு வேலையின்றி கண்களால் இருவரும் பேசிக்கொள்ள,

கட்டிலின் ஓரத்தில் அவளுடைய கல்லூரிக்கு எடுத்துச்செல்லும் பையை வைத்த முருகன் “ காலையில மார்க்கெட்ல வந்து உன்னைய பத்தி விசாரிச்சாங்க சத்யா, அப்புறம் நான்தான் பார்த்து மேட்டரை சொல்லி இங்க கூட்டிவந்தேன், அம்மா இருந்ததால வெளியவே நின்னுகிட்டு இருந்தாங்க” என்று நடந்தவற்றை விளக்கிச் சொன்னான்

சத்யன் எதுவும் பேசவில்லை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான், தேவி கலங்கிய கண்களுடன் அவன் நெற்றி காயத்தை வருடினாள், முழங்கால் கட்டை தொட்டுப்பார்த்தாள்

பிறகு கண்ணீருடன் “ பார்த்து கவனமா வரக்கூடாதா, நேத்தே நடந்திருக்கு இந்த அண்ணே கிட்டயாவது காலேஜுக்கு சொல்லியனுப்பியிருக்கலாமே, உனக்கு என்னாச்சுன்னு நேத்து பயந்துபோய் அழுதுகிட்டேதான் வீட்டுக்கு போனேன் தெரியுமா?” என்று நேற்றைய நினைவில் இன்று கண்ணீர்விட்டாள்

அவள் கையை ஆறுதலாக வருடியவாறு “ எங்கருந்து பார்த்து வர்றது, நைட் பூராவும் தூங்கலை, தூக்கக்கலக்கத்துலயே சைக்கிள் மெதிச்சேன், கோரிப்பாளையம் திருப்பத்துல வேன் வந்ததை கவனிக்கலை, நல்லவேளையா அந்த வேன்காரன் கவனமா இருந்ததால நான் தப்பிச்சேன், இல்லேன்னா சைக்கிளுக்கு பதிலா நான் நசுங்கியிருப்பேன்” என்ற சத்யன் அவள் விரல்களின் மென்மையை ரசித்துக்கொண்டே கூற

“ ஏன் நைட்டு தூங்கலை, தூங்காமல் என்னப் பண்ண” தேவி அதட்டிக் கேட்க

அவள் விரல்களை தனது கன்னத்தில் வைத்த சத்யன் அவள் கண்களைப் பார்த்து பிறகு அவளின் பருத்த ஈர உதடுகளை பார்த்து எச்சில் விழுங்கிக்கொண்டே “ உன்னையே நெனைச்சுக்கிட்டு இருந்தேன் அதான் தூக்கம் வரலை” என்றவன் “ நீ நல்லா தூங்குனயா” என்று ரகசியமாக கேட்டான்

அவன் குரலும் பார்வையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்க, புதிதாய் வந்த வெட்கத்துடன் அவனிடமிருந்து தன் விரல்களை விடுவித்துக்கொண்டு லேசாக தலைகுனிந்து “ம்ஹூம் ரெண்டு நாளா தூங்கவேயில்லை” என்றாள்

அதற்குள் பக்கத்து பெட்டில் இருந்தவரின் மனைவி சந்தேகப் பார்வையுடன் “ யாரு தம்பி இந்தப்புள்ள” என்று அருகில் வந்து தேவியை உற்றுப்பார்த்து கேட்க

சத்யனும் தேவியும் அந்த பெண்ணுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழிக்க, முருகன் சட்டென்று சுதாரித்து “ இந்த புள்ள இவனோட மாமா மக அக்கா, இப்பத்தான் விஷயம் தெரிஞ்சு கடைக்கு வந்துச்சு நான் கூட்டிட்டு வந்தேன், அவங்க வீட்டுல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்கலாம்,” என்று சிறு விளக்கமாக சொன்ன முருகன்

“ சரிடா நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க நான் போய் கொஞ்சம் வெளிய சுத்திட்டு அப்புடியே உனக்கு மத்தியான சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்று கிளம்பினான்

மறுபடியும் தேவியின் கையைப் பற்றி தன் மார்பில் வைத்துக்கொண்ட சத்யன் “ ஆமா நீ என்னோட மாமா மகளா” என்று குறும்பு குரலில் கேட்க

சட்டையின் மறைவில் அவன் மார்பில் இருந்த சிறு ரோமங்களை வருடியவாறு “ நீ எப்புடி வேனா வச்சுக்கோ, எனக்கு நீ அத்தை மகன்தான், அதிலும் ஆசை அத்தை மகன்” என்றவள் “ ஆமா நீ சின்னப்பையன் தானே அதுக்குள்ள நெஞ்சுல இவ்வளவு முடியிருக்கு, தாடி மீசையெல்லாம் கூட அதிகமா இருக்கு, உனக்கு இருபது வயசுதானே ஆகுது” என்று கேனத்தனமாக கேள்விகேட்டவளை பார்த்து சிரித்த சத்யன்

“ஆமா மயிரை உரம் போட்டு வளர்க்குறேன், ஏய் இப்போ இது ரொம்ப முக்கியம், ஆமா நீ காலேஜுக்கு போகலையா, உன்வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுறது”

“தெரிஞ்சா தெரியட்டும் அதைபத்தி எனக்கு கவலையில்லை, காலேஜுக்கு போனாலும் உன்னையே நெனைச்சுகிட்டு எதுவுமே படிக்கப்போறதில்ல, அப்புறமா எதுக்கு போகனும், காலையில காலேஜ் போறேன்னு சொல்லிட்டு நேரா சென்ட்ரல் மார்க்கெட் போனேன், உன் பேரை சொல்லி விசாரிச்சேன், உடனே முருகன் அண்ணே வந்துச்சு, விவரத்தை சொல்லி இங்க கூட்டி வந்துச்சு, பஸ்ல வரும்போது அழுதுகிட்டே வந்தேன் தெரியுமா” என்று தேவி சொன்னதும்

“ ஏன் தேவி உனக்கு பயமாவே இல்லையா, எல்லாத்தையும் இவ்வளவு துணிச்சலா பண்ற” என்று சத்யன் அவள் கண்களை உற்றுப் பார்த்து கேட்டான்

“ஏன் பயப்படனும், நான் என்ன தப்பா பண்றேன், காதல் பண்றது தப்பான விஷயமா, என் மனசு என்ன சொல்லதோ அதை செய்வேன், யாருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டேன், இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்க, யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன், ஏதாவது ஏடாகூடமா பண்ணி என்னைய தட்டிக்கழிக்க பார்த்த,, உன்னையும் போட்டுத்தள்ளிட்டு நானும் செத்துப்போய்டுவேன், என் குடும்பம் மட்டுமில்ல நானும் மோசமான பொண்ணு தான் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா என்னை கல்யாணம் பண்ணிக்கிற வழியப்பாரு, புரியுதா” என்று அதுவரை குழைவாக காதல் பேசியவள் சட்டென்று தொனி மாறி உறுதியான குரலில் சத்யனை எச்சரிக்கை செய்தாள்

சத்யன் எதுவும் பதில் சொல்லவில்லை, இந்த சின்ன வயசுல இவ்வளவு வைராக்கியமா பேசுறாளே என்று ஆச்சர்யபட்டு, தன் அளவுகடந்த காதல் வைத்திருக்கும் இதுபோன்றதொரு காதலி எத்தனைப் பேருக்கு கிடைப்பாள் என்று நினைத்தான்

அவன் ஏதாவது பேசுவான் என்று அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் தேவி

" சரி தேவி இவ்வளவு சின்ன வயசுலயா கல்யாணம் பண்ணிக்கிறது, இன்னும் நாலஞ்சு வருஷம் போகட்டும் அப்புறமா பண்ணிக்குவோம், அதுவரைக்கும் நீ நல்லா படி , நானும் என் வீட்டு பிரச்சனை எல்லாத்தையும் முடிச்சுகிட்டு கொஞ்சம் பணம் சேர்த்துக்கிறேன், சரியா” என்று குழந்தைகளுக்கு சொல்வதுபோல் சத்யன் எடுத்து சொன்னான்

சட்டென்று முகம் இறுக “ என்ன விளையாடுறியா, நாலு வருஷமா, இன்னும் நாலு மாசம் கூட என்னால வெயிட் பண்ணமுடியாது, இப்ப என்ன உங்கப்பன் பொட்ட புள்ளைகளையா பெத்து உன் தலையில கட்டிட்டு போயிருக்காரு, இருக்குறது ஒரு தம்பி அவனும் காலேஜ்க்கு போறான் படிச்சுட்டு ஏதாவது வேலைக்கு போகட்டும், அப்புறம் அத்தை மட்டும் தானே, அத்தைகாரிய நான் பார்த்துக்கிறேன், இப்போ நான் படிச்சு என்னத்த பண்ணப்போறேன், உன்கூட குடும்பம் நடத்தி புள்ள பெத்துக்க இந்த படிப்பு போதும், இன்னொரு முறை படின்னு சொல்லாத எரிச்சலா வருது, ஒரு கருமமும் மண்டையில ஏற மாட்டேங்குது, நானே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உன்னைய பார்த்திருந்தா, காலேஜாவது மண்ணாங்கட்டியாவதுன்னு உன்னைய கல்யாணம் பண்ணி வருஷத்துக்கு ஒன்னுன்னு ரெண்டு புள்ள பெத்துட்டு, இன்னேரம் குடும்பக்கட்டுபாடு பண்ணியிருப்பேன்" என்று எரிச்சலாக பேசியவள் தன் மணிக்கட்டை திருப்பிப் பார்த்து

"ச்சே இந்த முருகண்ணன் எங்க போச்சு ரொம்ப நேரமாகுது உனக்கு சாப்பாடு குடுக்கனுமே" என்று கோபக் குரலில் கூறிவிட்டு, வார்டின் வாசலை பார்த்தாள்

முருகன் வருவான் என்று பார்த்தவள் அவன் வராததை உணர்ந்து மேலும் எரிச்சலாக முகத்தை வைத்துக்கொண்டாள்

சத்யனுக்கு அவள் பேச்சு ரொம்ப குழப்பமாக இருந்தது, இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு கூட அவகாசம் தரவில்லை அவள், எது எப்படியிருந்தாலும் இனிமேல் தன்னுடைய வருங்காலம் இவளுடன் தான் என்று மட்டும் புரிந்தது, தேவியின் எதிர்பார்ப்பில்லாத முரட்டுத்தனமான அன்பு அவனுக்கு ரொம்ப பிடித்தது, அவளால் தான் காதலிக்கப்படுகிறோம் என்ற நினைப்பே சுகமாக இருந்தது

நேரம் ஆகஆக வரும் வழியை பார்த்தவள் , ஏதோ நினைத்துக்கொண்டு தனது நெற்றியில் தட்டியவாறு " ச்சே சாப்பாடு என்கிட்டயே இருக்கு மறந்து போய்ட்டேன் பாரு " என்றவள் குனிந்து தனது பேக்கை எடுத்து அதிலிருந்து ஒரு சாப்பாட்டு கப்பையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்தாள்

அதை கட்டிலில் வைத்துவிட்டு போய் கைகழுவிவிட்டு வந்தவள் , கட்டிலில் அவனை பார்த்தவாறு அமர்ந்து கப்பை திறந்து முகர்ந்து பார்த்தாள் " ம்ம் வாசனை தூக்குது, எங்காத்தா தக்காளி சாதமும் முட்டையும் குடுத்துருக்கு," என்றவள் அதில் ஒரு கவளம் அள்ளி அவன் வாயருகே எடுத்துச் சென்று " ம் வாய திற" என்று அதட்ட

அவசரமாக தலையாட்டி மறுத்தான் சத்யன் " நீ சாப்பிடு எனக்கு முருகன் வாங்கிட்டு வருவான், அதை நான் சாப்பிட்டுக்கிறேன்" என்று மறுத்தவனை பார்த்து தேவி முறைக்க , சத்யனின் வாய் ஆட்டோமேட்டிக்காக திறந்து அவள் தந்த உணவை வாங்கிக்கொண்டது,

கை நல்லாத்தானே இருக்கு அப்புறம் ஏன் ஊட்டிவிடுறா என்று மனம் அவனிடம் கேட்டாலும், அதை அவன் தேவியிடம் கேட்கவில்லை, அப்புறமா அதுக்கும் நீளமா ஏதாவது பேசுவா, ஏற்கனவே அந்த வார்டே அவர்களை வேடிக்கை பார்த்தது

வேகவேகமாக முட்டையை தொட்டு அவனுக்கு சாப்பாட்டை ஊட்டியவள் " எங்காத்தா பாரு இன்னிக்குன்னு கொஞ்சூண்டு குடுத்திருக்கு" என்று அவள் சொல்லவும் முருகன் சாப்பாட்டு கவருடன் வரவும் சரியாக இருந்தது

அவனை பார்த்ததும் " ஏன்ண்ணே இவ்வளவு லேட்டு, சரி அந்த சாப்பாட்டை பிரிச்சு இந்த கப்புலயே போடுங்க இன்னும் கொஞ்சம் சாப்பிடட்டும்" என்று உத்தரவிட, முருகன் ஆச்சிரியமாக சத்யனை பார்க்க,

அவன் பரிதாபமாக தேவி கொடுத்த உணவுக்காக வாயைத் திறந்துகொண்டு இருந்தான், முருகனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, பொட்டலத்தை பிரித்து தேவியின் கப்பில் போட்டு சாம்பாரை ஊற்றினான்

சிந்தாமல் சிதராமல் சத்யனுக்கு ஊட்டிய தேவி அதே கப்பில் போட்டு தானும் சாப்பிட்டாள், மிச்சமிருந்த சாப்பாட்டை முருகன் சாப்பிட்டுவிட்டு, பிறகு வருவதாக கூறிவிட்டு வெளியே போய்விட்டான்



சத்யனுக்கு மாத்திரை கொடுத்து விட்டு " சரி தூங்கு நான் கீழே உட்கார்ந்துகிறேன் "என்றவள் " தரையில் அமர்ந்து கட்டிலில் இரண்டு கையையும் மடித்து வைத்துக்கொண்டு அதில் தன் முகத்தை பதித்து அவன் முகத்தையே பார்க்க

" நீ கிளம்பு தேவி நான் டாக்டர் வந்ததும் கேட்டுகிட்டு முருகன் கூட வீட்டுக்கு போறேன்" என்று சத்யன் சொல்ல

நீ தூங்கு டாக்டர் வந்ததும் கேட்டு நானும் உன்னை வீட்டுல விட்டுட்டு அப்புறமா போறேன், பயப்படாத உன் வீட்டுக்கு முன்னாடியே நான் இறங்கிருவேன் " என்று தேவி உறுதியாக கூற

"அய்யோ தேவி வேண்டாம்மா,உங்க வீட்டுக்கு தெரிஞ்சு ஏதாவது சிக்கல் ஆயிட போவுது" என சத்யன் கலவரமாக சொன்னான்

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கவலைபடாம தூங்கு " என்று அதட்டல் போட , அதன்பிறகு சத்யன் எதுவும் பேசவில்லை , அவள் பக்கமாக திரும்பி படுத்தவன் அவளின் அழகை ரசித்தபடி விழித்திருக்க

அவனின் நேர்ப்பார்வையை தவிர்த்த தேவி " என்ன தூக்கம் வரலையா" என்று ரகசியமாக கேட்க

ம்ஹூம் என்று தலையசைத்தவன், அவளையே குறுகுறுவென பார்த்து தன் உதட்டை நாவால் தடவி உதடு குவித்து முதன்முதலாக ஒரு முத்தம் கேட்க,... தேவியின் முகம் பட்டென்று வெட்கத்தில் சிவந்து போனது 


" காதல் என்ற பூ விழுந்தால்...........

" கல்கூட கரைந்துபோகும்.........

" காதலுக்காக கண்ணீர் சிந்தும்.....

" காதலிக்காக தன்னைத்தானே.....

" சிற்பமாக செதுக்கிக்கொள்ளும்!



No comments:

Post a Comment