Wednesday, July 8, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 4

“நான் உங்ககிட்ட மட்டும்தான் இப்படி பேசுறேன, ஆனா ஏன்னு தான் எனக்கே தெரியலை, எனறு மான்சி கூறியதும்

சத்யனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை, பரிதாபம்தான் வந்தது, ஒருவேளை இவளுடைய சுபாவமே இப்படித்தானோ என்னவோ, எடுத்து சொன்னாள் நிச்சயம் புரிந்துகொள்வாள் என நினைத்தான்

காரின் வேகத்தை இன்னும் குறைத்து சாலையின் ஓரமாகவே செலுத்தியவன் “ இப்போ நீங்க என்ன பேசினீங்கன்னு உங்களுக்கு புரியுதா” என்று அவளை பார்த்து கேட்க

“ நான் என்ன சின்ன பாப்பாவா, எல்லாம் எனக்கு தெரியும்” என்றாள் மான்சி பட்டென

“ எங்கே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்னு சொல்லுங்க எனக்கு புரியுதா பார்க்கலாம்” என்று சத்யன் ஏளனமாக கூற

அவனை ஏறிட்டுப் பார்த்த மான்சி “ இன்னிக்கு காலையில உங்களை பார்த்தப்ப உங்களை பிடிக்கலை, அப்புறம் நீங்க உங்களை பத்தி சொல்லிட்டு பளிச்சுனு சிரிச்சீங்க பாருங்க அப்பத்துலேருந்து தான் உங்களை ரொம்ப பிடிச்சுது” என்று எந்த தடையுமின்றி பேசி சிரிக்க

“ அப்போ தன்னை பத்தி விரிவா சொல்லிட்டு பளிச்சுனு சிரிச்சா உங்களுக்கு யாரை வேனா புடிக்கும்னு சொல்லுங்க, அந்த பிடிச்சவங்கள்ள இப்போ நான் எத்தனாவது இடத்தில் இருக்கேன் ” என சத்யன் நிதானமாக கேட்டான்

அவன் வார்த்தைகள் புரிய மான்சிக்கு சற்று நேரம் பிடித்தது, புரிந்தவுடன் வருத்தத்துடன் அவனை பார்த்து “ அப்பிடின்னா யார் சிரிச்சாலும் அவங்ககிட்ட நான் இப்படித்தான் இளிச்சுகிட்டு பேசுவேன்னு சொல்றீங்களா” என்றாள்



" நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை, நான் சிரிச்சதால உங்களுக்கு பிடிச்சதுன்னு சொன்னீங்க, நான் வேலைக்கு வந்து இன்னும் ஒரு நாள் முழுசா முடியலை அதுக்குள்ளேயே என்னை பிடிக்கும்போது, இதுக்கு முன்னாடி உங்ககிட்ட எத்தனை பேரு இந்த மாதிரி சிரிச்சுருப்பாங்க அதுல நான் எத்தனாவது இடம்னு கேட்டேன்” என்று அவளுக்கு விளக்கம் கொடுப்பது போல் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினான் சத்யன்

மான்சி சிறிதுநேரம் அவனையே உற்றுப்பார்த்தாள் பிறகு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்

அவள் தன்னை பார்த்துவிட்டு திரும்பும் போது அவள் கண்கள் கலங்கியிருந்தனவோ என்று சத்யனுக்கு சந்தேகமாக இருந்தது, நான் அவ கேட்டதுக்கு தான பதில் சொன்னேன், அதுக்கு போய் ஏன் கண்கலங்கனும், என நினைத்தவன்

“ என்ன பதில் சொல்லாம திரும்பிகிட்டீங்க, இல்ல இவனுக்கெல்லாம் நாம ஏன் பதில் சொல்லனும்னு நினைக்கிறீங்களா” என அவளை சீண்டினான்

முகத்தை திருப்பி அவனை பார்த்த மான்சியின் கண்கள் கலங்கித்தான் இருந்தன, “ என்னாச்சு கண்ணு கலங்கியிருக்கு ஏதாவது தூசு விழுந்துருச்சா” என்றவன் அவள் கோபத்தில் முறைத்ததும

“ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண்கலங்குறீங்க, இப்போ என்கிட்ட சொன்னதை வேற யார்கிட்டயாவது சொன்னா சிரிப்பாங்க, பார்த்த பணிரெண்டு மணிநேரத்தில் ஒருத்தனை ரொம்ப பிடிச்சுருக்கு என்று சொன்னால் நிச்சயமா சிரிக்கத்தான் செய்வாங்க” என்று கூறிவிட்டு மற்றவர்கள் சிரிப்பதற்கு முன் இவனே வாய்விட்டு சிரித்தான்

அவன் சிரிப்பு நக்கலாக இருந்தாலும், அதிலிருந்த அழகு மான்சியின் முகத்தை மலர செய்தது, “நீங்க சிரிக்கும்போது எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா, ஆனா நிறைய சிரிக்கமாட்டீங்க போலருக்கு ” என்று மான்சி கூறியதும்

சற்றுமுன் கலங்கி இருந்த அவள் கண்கள் இப்போது மலர்ந்து சிரிப்பதை பார்த்த சத்யனுக்கு மறுபடியும் அவள்முகம் மலர இன்னும் நன்றாக சிரித்துக் காட்டவேண்டும் என்று வந்த நினைப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்


அப்போது வழியில் ஒரு எஸ்டிடி பூத் தெரிய சத்யன் காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு “என்னோட வீட்டுக்கு ஒரு போன் பண்ணனும், நீங்க கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு கார் கதவை திறக்க முற்ப்பட்டவனை

“ இருங்க சத்யன் என்கிட்ட செல்போன் இருக்கு அதிலேருந்து பேசுங்க, இந்தாங்க” அவனை நோக்கி தனது மொபைலை நீட்டினாள் மான்சி

அவளையும் அவள் மொபைலையும் ஒருமுறை பார்த்தவன் தனது கீழுதட்டை பிதுக்கி அலட்சியமாக தோள்களை குலுக்கிவிட்டு கார் கதவை திறந்துகொண்டு இறங்கி அந்த எஸ்டிடி பூத்துக்குள் நுழைந்தான்

மான்சிக்கு பயங்கர ஆத்திரம் வந்தது, கையிலிருந்த மொபைலை சத்யன் அமர்ந்திருந்த இருக்கையில் வீசியடித்து தனது ஆத்திரத்தை மொபைலில் காண்பித்தாள்,

சிறிதுநேரத்தில் வந்த சத்யன் கார் கதவை திறந்தவன் தன் அமரும் இருக்கையில் கிடந்த மொபைலை பார்த்துவிட்டு அதை எடுத்து அவளிடம் நீட்டினான்

“ எனக்கு வேண்டாம் வெளியே தூக்கிப்போட்டுடுங்க” என்றாள் மொட்டையாக

“ ஏன் என்னாச்சு நல்லாத்தானே இருக்கு இதை ஏன் கீழே போடனும்” என சத்யன் கேட்க

“ எனக்கு பிடிக்கலை அதனால அதை கீழே போடுங்க” என்று கோபத்தில் கொஞ்சம் சத்தமாக பேசினாள் மான்சி

“ ஸ்..... ஏன் இவ்வளவு கோபம், பிடிக்கலைன்னா வீட்ல போய் கல்த் தூக்கிப் போட்டு நசுக்கிறலாம், இப்போ உள்ள வச்சுக்கோ” என்ற சத்யன் அவள் மடியில் இருந்த அழகான பெரிய பர்ஸை எடுத்து அதிலிருந்த மொபைல் பவுச்சில் மான்சியின் மொபைலை வைக்க

மான்சி அவனை தடுக்கும் முயற்சியில் அவனிடமிருந்து பர்ஸை பிடுங்கினாள்,... சத்யன் அவள் கைகளை பற்றி விலக்கிவிட்டு பர்ஸை மூடி அவள் மடியில் வைத்தான் பிறகு காரை ஸ்டார்ட் பண்ண

மான்சி அவன் கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ இவ்வளவு நேரமா நீங்க சும்மாதானே என்னை பேசினீங்க, உங்களுக்கும் என்னை பிடிக்கும் தான” என கெஞ்சுதலாக கேட்டாள்

சத்யன் அவளிடமிருந்து தன் கைகளை விடுவித்துகொள்ள முயன்றவாறே “பின்னே சம்பளம் குடுக்கப்போற முதலாளியோட மகளை பிடிக்கலைன்னு சொல்லமுடியுமா,” என நக்கலாக பேசினான்

தன் கைகளில் இருந்த அவன் கையை சட்டென உதறிய மான்சி “ நீங்க என்னதான் பொய் சொன்னாலும் உங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு அது எனக்கு தெரியும்” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு திரும்பிக்கொன்டாள்

சத்யனுக்கு எரிச்சலாக வந்தது, என்ன பொண்ணு இவ, என்னை சந்திச்சு இன்னும் ஒருநாள் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி பைத்தியக்காரத்தனமாக பேசுறாளே, இவ அந்தஸ்து என்ன என்னோட அந்தஸ்து என்ன என்று யோசிக்கவே மாட்டாளா, பேசமால் இந்த வேலையை விட்டுவிட்டு போய்விடலாமா, என சத்யன் எண்ணும்போதே சற்று முன் போனில் பேசிய தங்கையின் ஆர்வமான குரல் ஞாபகம் வந்தது

காரை எடுக்காமலே சிறிதுநேரம் இருந்துவிட்டு அவளிடம் திரும்பி “ நீங்க இப்போ என்னதான் சொல்றீங்க, இதுக்கு ஒரே தீர்வு நான் இன்னிக்கே வேலையைவிட்டு கிளம்பிறேன், அப்பதான் சரியா வரும்” என்று கூறிவிட்டு காரை கிளப்பினான்

அவன் வேலையைவிட்டு போய்விடுவேன் என்றதும் மான்சிக்கு திக்கென்றது “சரிசரி நான் இனிமேல் இதுபோல பேசமாட்டேன், ஆனா நீங்க என்னை வா போன்னு கூப்பிடுங்க மரியாதை எல்லாம் வேனாம்” என்று சமாதானக் குரலில் மான்சி கூறியதும்

பரவாயில்லையே வேலைக்கு வரமாட்டேன் என்றால் அடங்கிவிடுவாள் போலருக்கே என்று சத்யனுக்கு சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டு “ ம்ம் பார்க்கலாம்” என்று ஒரே வார்த்தையில் அவளுக்கு பதில் சொல்லிவிட்டு தன் வேகத்தை காரில் காட்டினான்

மான்சி தன் பார்வையை இப்படி அப்படி திருப்பாமல் அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வர, சத்யன் ரொம்ப கவணமாக அவள் பக்கம் தன் பார்வைத் திருப்பாமல் நேர்ப் பார்வை பார்த்து காரை செலுத்தினான்

கார் வீட்டு கேட் தாண்டி உள்ளே நுழைந்து நின்றதும் சத்யன் இறங்கி மறுபக்கம் வந்து அவளுக்கு கார் கதவை திறந்துவிட, மான்சி அவனை முறைத்து “ டோரை திறந்து எனக்கு இறங்க தெரியும் நீங்க ஒன்னும் எனக்கு திறந்துவிட வேண்டாம்” என்று கோபமாக கூறிவிட்டு அவன் கார் கதவில் இருந்த அவன் கையை விலக்கிவிட்டு இறங்கி திரும்பி பார்க்காமல் வீட்டுக்குள் போனாள்


சத்யனுக்கு மறுபடியும் சிரிப்புதான் வந்தது , மறுபக்கம் வந்து காருக்குள் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு நேரம் மான்சிக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தையை மனதில் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி என்னதான் அவளின் தேவை என்ன என யோசித்தான், ஏதோ புரிவதுபோல் இருந்தாலும், புரிந்ததை மனதில் பதிக்க அவனது தன்மானம் மறுத்தது

அதன்பிறகு ராஜாராமனை கடைக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு அங்கேயே காத்திருந்து அழைத்து வந்தான் , அங்கே காத்திருந்த நேரத்தில் அந்த ஜவுளிக்கடையை சுற்றிப்பார்த்தான், அன்று இரவு உடுத்திக்கொள்ள ஒரு கைலியும் டவலும் மட்டும் பில் போட்டு வாங்கிக்கொன்டான்

நீலநிற யூனிபார்ம் அனிந்து அங்கே வேலை செய்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண் பெண்களை பார்த்தான், துணிகளை எடுத்துவிட்டு பில் போடுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற ஜனக்கூட்டத்தை பார்த்தான், ராஜாராமின் செல்வச்செழிப்பு சத்யனின் முகத்தில் அறைந்தது, மான்சியின் அந்தஸ்து அவன் தலையில் அடித்தார் போல் புரிந்தது

அதுவரை மான்சியை பற்றி தன் மனதில் இருந்த சலனத்தை அடியோடு அழிக்க முயன்றான், இனிமேல் அவளைவிட்டு ரொம்ப தள்ளியே இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்

இரவு பத்த மணிவாக்கில் ராஜாராமுடன் வீடு திரும்பிய சத்யனுக்கு அந்த ஒருநாள் ஒரு வருட அனுபவத்தை கொடுத்திருந்தது, கார் செட் அருகில் இருந்தது வாட்ச்மேன் அறை, மிகச்சிறியதாக இருந்த அறையில் ஒரு நாடாக் கட்டிலும் ஒரு மேஜையும் மட்டுமே இருந்தது,

அறைக்குள் வந்து தனது பேன்ட்டை கழட்டிவிட்டு புதிய கைலியை கட்டிக்கொண்டு தோளில் டவலை போட்டுக்கொண்டு வெளியே வந்தான் தோட்டத்தில் இருந்த பைப்பில் சத்யன் முகம் கழுவிவிட்டு டவலால் முகத்தை துடைத்துக்கொண்டு திரும்பியவன் ஏதோ தோன்ற சட்டென நிமிர்ந்து பார்த்தான்

அங்கே மாடியின் அறை ஒன்றில் மான்சியின் வெண்ணிலா முகம் ஜன்னல் வழியாக தெரிந்தது, தோட்டத்தில் இருந்த மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பொற்றாமரைக்குளத்தின் தங்க தாமரைப் போல ஜொலிக்க சத்யன் முகம் துடைப்பதை மறந்து அவளையே பார்த்தான், இதுபோன்றதொரு பின்னணியில் இப்படியொரு அழகு முகத்தை அவன் இதுவரை பார்த்ததில்லை

அவள் அங்கேயிருந்து எவ்வளவு நேரமாக இவனை பார்த்துக்கொண்டு இருந்தாள் என்று தெரியவில்லை, சத்யன் தன்னை பார்ப்பதை அறிந்ததும், பளிச்சென்று சிரித்து ஜன்னல் வழியாக தனது வலதுகையை வெளியே விட்டு சாப்பிட்டாச்சா என்று சைகையில் கேட்க

சத்யனின் சம்மதமில்லாமலே அவன் தலை தானாக அசைந்து இல்லை என்று அவளுக்கு பதில் சொன்னது, சற்றுமுன் அவன் மனதில் எடுத்த உறுதியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது

இவன் சாப்பிடவில்லை என்றதும் அவள் முகம் பட்டென வாடியது அந்த வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது, மான்சி தனது இடதுகையையும் வெளியேவிட்டு வலதுகை மணிக்கட்டை தட்டி நேரமாகிவிட்டது சீக்கிரம் போய் சாப்பிடுங்க என்று சொல்ல, இதுக்கும் சத்யனின் தலை தானாக அசைந்து சரியென்றது

மான்சி மறுபடியும் போங்க என்பது போல் கையசைக்க, சத்யன் அங்கிருந்து நகர்ந்து வாட்ச்மேனின் டிவிஎஸ் பிப்டி வண்டியை எடுத்துக்கொண்டு சாப்பிட ஹோட்டலுக்கு கிளம்பினான்

ஹோட்டலில் சாப்பிடும்போது கூட அவனுக்கு மான்சியின் ஞாபகம் தான், ஒரே நாளில் இது எப்படி சாத்தியம் என நினைத்தான், இதுவரையிலும் இதுபோல ஒரு பெண்ணை பார்த்திராததால் ஏற்பட்ட வெறும் இனக்கவர்ச்சியா... இது சரியா என அவன் மனம் கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை



நிறைய விடை தெரியாத கேள்விகளை அவன் அனுபவ அறிவு கேட்க அவற்றிற்க்கெல்லாம் பதில் தெரியாது சத்யனின் மனம் குழம்பி தவித்தது,

அரைகுறையாக சாப்பிட்டு முடித்துவிட்டு சத்யன் மான்சியின் வீட்டுக்கு வந்து வாட்ச்மேன் அறையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனான், வாட்ச்மேன் தரையில் ஒரு பாயை விரித்து படுத்திருக்க. இவனை பார்த்ததும்

"சத்யா தம்பி நீங்க கட்டில்ல படுத்துக்கங்க, நான் இப்படியே படுத்துக்கிறேன், குடிக்க தண்ணி கூஜாவில் இருக்கு, பாத்ரூம் போனும்னா தோட்டத்தில் ஒரு பாத்ரூம் இருக்கு அங்க போய்க்கலாம்" என்று அவனுக்கு தகவல் சொன்னவர் போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அடுத்த சிலநிமிடங்களில் குறட்டைவிட ஆரம்பித்தார்

கட்டிலில் படுத்த சத்யனுக்கு தூக்க் வரவில்லை, புது இடம் என்பதாலா இல்லை மான்சியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்ததாலா என்று தெரியவில்லை, சத்யன் கட்டிலைவிட்டு எழுந்தான்

அறையைவிட்டு வெளியே வந்தவன், தோட்டத்தில் கிடந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான், மாசிமாத குளிர் அவனை ஒன்றும் செய்யவில்லை, தனது கையை விரித்து பார்த்து ஏதோ ரேகை பார்ப்பவன் போல ஆராய்ந்தவன், நிமிர்ந்து மான்சியின் அறையை பார்த்தான்

பார்த்தவன் அதிர்ந்து போய் எழுந்து நின்றுவிட்டான், அங்கே மான்சி ஜன்னலின் கிரீல் கம்பிகளை பிடித்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், சத்யனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது

என்ன பொண்ணு இவ இன்னும் தூங்காம எவ்வளவு நேரமாக இங்கேயே நிற்க்கிறாள் என்று தெரியவில்லை, சரியான பைத்தியக்காரியா இருப்பா போலருக்கு ச்சே என நினைத்தவனை ,... நீமட்டும் எதுக்காக இப்போது எழுந்து வந்தாய் என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்க சத்யன் தன் நெற்றியில் அறைந்து கொண்டான்

மான்சி அங்கிருந்து என்னாச்சு என்று கையசைத்து கேட்க,,..... ஒன்னுமில்ல நீ தூங்கலையா என்று சத்யன் பதிலுக்கு சைகை செய்தான்,

மான்சி தூக்கம் வரலை என்று அவனுக்கு பதில் செய்ய,.. சத்யன் அவளை பார்த்து கைகூப்பி ப்ளீஸ் போய் படுத்து தூங்கு என்றான்

ம்ஹூம் என்று தலையசைத்தவள், நான் அங்க வரவா, என்பது போல் கேட்க... சத்யன் திகைத்துப் போய் வேண்டாம் என்று வேகமாக தலையசைத்தான்

இருங்க என்று சைகையில் சொல்லிவிட்டு உள்ளே போன மான்சி சிறிதுநேரத்தில் வந்து எதையோ அங்கிருந்து தூக்கிப் போட அது சத்யன் காலடியில் விழுந்தது

சத்யன் அதை எடுத்தான் ஒரு பேப்பரை ஹேர்பின்னில் வைத்து சுருட்டி போட்டிருந்தாள்,.. சத்யன் அதை பிரித்து பார்த்தான் " நீங்க போய் தூங்குங்க, காலையில் இருந்து ரொம்ப அலைச்சல் ப்ளீஸ் தூங்குங்க' என்று எழுதியிருந்தது

அதை படித்ததும் சத்யனின் கண்கள் பணித்தது, அவளை நிமிர்ந்து பார்த்து 'முதலில் நீ போய் படு அப்பத்தான் நான் போய் படுப்பேன், என்று சைகையால் சொல்ல

அவனையே சிறிதுநேரம் உற்றுபார்த்துக் கொண்டு இருந்தாள் மான்சி, சத்யனும் சலைக்காமல் அவள் பார்வையை தாங்கி நிமிர்ந்து அவளையே பார்த்தான்,

அந்த இரவின் தனிமையில் அந்த இரண்டு ஜோடி விழிகளும் ஆயிரம் வார்த்தைகள் பேசி மௌனக் கவிதை வாசித்தது

சத்யனுக்கு கழுத்து வலிப்பது போல இருந்தாலும் தனது பார்வையை தாழ்த்தவில்லை, பிறகு மான்சியே அவனிடம் தலையசைத்து விடைபெற்று உள்ளே போக, சத்யன் பதிலுக்கு தலையசைத்து விட்டு தனது அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தான்

மனசு முழுவதும் உற்சாகத்தில் சிறகடித்துப் பறக்க, உடல் லேசாகி மிதப்பது போல இருந்தது ... இந்த புதிய உணர்வில் அவனுக்கு இந்த உலகமே தனது காலடியில் இருப்பதுபோல் இருந்தது

அடிப்பெண்ணே நீ மட்டும் இந்த மாளிகையில் பிறக்கவில்லை என்றால், இன்னேரம் உன்னை தூக்கிச்சென்று எனது வயக்காட்டில் இருக்கும் கட்டிலில் போட்டு உன்னை எழவிடாமல் அழுத்தி உன் முகத்தில் ஆயிரம் ஈர முத்தங்களை பதித்து எனது அன்பை உனக்கு உணர்த்தியிருப்பேன்

ஆனால்........................................?????? 



" காதலித்தால் உடலில் சிறகுகள் முளைக்கும்....

" உள்ளம் ரெக்கைக் கட்டி விண்ணில் பறக்கும்...

" உன்னைப் பார்த்துதான் தேவதைகளுக்கு...

" சிறகுகள் முளைத்திருக்குமா!

" ஓ.. நீதான் தேவதைகளின் இளவரசியா....

" அதனால்தான் உன்னைப் பார்ப்பவர்களுக்கு கூட...

" கற்பனை சிறகுகள் முளைத்து விடுகிறதோ!


மறுநாள் அதிகாலை வாட்ச்மேன் எழுப்பி கண்விழித்த சத்யன், இன்னும் இருள் விலகாத இந்த அதிகாலையில் இவர் ஏன் எழுப்பினார் என்ற குழப்பத்துடன் வாட்ச்மேனை பார்க்க...

“ தம்பி உங்க அப்பாரு உனக்கு போட்டுக்க துணி எடுத்துக்கிட்டு வந்திருக்காரு, வெளியேவே நிக்கிறாரு நீ போய் பாரு” என்று சொல்லிவிட்டு போய்விட

சத்யன் அவசரமாக எழுந்து கைலியை இருக்கி கட்டிக்கொண்டு, வாட்ச்மேன் வைத்திருந்த பல்பொடியை கொஞ்சம் கையில் கொட்டிக்கொண்டு வெளியே வந்து தோட்டத்து குழாயில் முகம் கழுவி பல்விளக்கி முகத்தை துண்டால் துடைத்தபடி வேகமா கேட்டை நோக்கி நடந்தான்

அவன் அப்பா கேட்டின் ஓரமாக கையில் ஒரு லெதர் பேக்குடன் நிற்க, சத்யன் அவரை நெருங்கி “என்னப்பா இங்கயே நின்னுட்டீங்க உள்ளே வரவேண்டியதுதானே” என்று கூறி அவர் கையில் இருந்த பேக்கை வாங்கிக்கொண்டு அவரை தோட்டத்து பக்கமாக வாட்ச்மேன் அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கட்டிலில் உட்காரச்சொன்னான்

கட்டிலில் உட்கார்ந்த துரை அறையை சுற்றி தனது பார்வையை ஓடிவிட்டார் பிறகு சத்யனிடம் திரும்பி “ ஏன்ய்யா மவனே பொறாக் கூடு மாதிரி இருக்கு இதுலயாப்பா ராத்திரி உறங்கின” என்று வருத்தமாக கேட்டுவிட்டு தனது சட்டை பாக்கெட்டில் இருந்து சில நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து சத்யனிடம் கொடுத்து

“ மவனே இதுல ரெண்டாயிரம் ரூவா இருக்கு, போட்டுக்க நல்லதா நாலு உருப்படி வாங்கிக்க, அப்பறம் வெளியே ஓட்டல்ல எங்கயாவது போய் தங்கிக்க மவனே, இந்த எடமே எனக்கு புடிக்கலைடா ராசு மூச்சடைக்கும் போலருக்கு” என்று வேதனை குரலில் கூறினார்

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைப்பா, இன்னும் நாலு நாளைக்குத்தானே இருக்கப் போறேன் அப்புறமா ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவேன், ஆமா இந்த ரூபாய் ஏதுப்பா,” என சத்யன் கையில் இருந்த பணத்தை காட்டி கேட்க



நம்ம பூங்கொடி கொலுசு வாங்கன்னு நூறுநாள் வேலைக்கு போன காசையெல்லாம் சேர்த்து வச்சிருந்தது, ராவு பூங்கொடிதா உன்னோட உருப்படியை எல்லாம் எடுத்து பேக்குல வச்சுது,

" அப்புறமா காலையில நா கெளம்பறப்ப இந்த ரூவாவ குடுத்து அண்ணன் துணியெல்லாம் ரொம்ப பழசா இருக்குப்பா இந்த ரூவாயில நல்லதா நாலு துணி வாங்கிக்க சொல்லுப்பானு குடுத்துச்சுடா மவனே” என்று துரை சொன்னதும்

அவ்வளவு காலையில் சத்யனுக்கு கண்கலங்கி நெஞ்சை அடைத்தது, கையில் இருந்த பணத்தையே பார்த்தவன், பிறகு அதை அவரிடமே கொடுத்து “எனக்கு இருக்குற துணி போதும்ப்பா, நீங்க இந்த பணத்தை பூங்கொடி கிட்டயே குடுங்க” என்றான்

“ இல்லடா மவனே பணத்தை திருப்பி குடுத்தா அந்த புள்ள சங்கடப்படும், நீ துணி வாங்கிக்கோ, நீ மொத மாசம் சம்பளம் வாங்குனதும் பூங்கொடிக்கு கொலுசு வாங்கி குடுடா மவனே” என்றவர் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டு

“நா கெளம்பறேன் ராசு வயக்காட்டுல உங்கம்மாளை மடை மாறச்சொல்லிட்டு வந்தேன்” என்று வாசலை நோக்கி போக

“ இருங்கப்பா ஏதாவது சாப்புட்டு போவீங்க, இதோ நானும் வர்றேன்” என்றவன் அவருடன் வெளியே வந்தான்


No comments:

Post a Comment