Thursday, July 23, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 16

ஜனனி கார்த்திக்காக ஆவலோடு காத்திருக்க மணி ஆன போதும் கார்த்திக் இன்னும் திரும்பி வரவில்லை.இங்கே குழந்தையோ பால் குடிக்காமல் தொடர்ந்து அழுவதால், டாக்டர் ஆலோசனைப்படி கொஞ்சம் க்ளுகோஸ் மட்டும் கொடுத்தனர். ஸ்பூனில் கொஞ்சம் குடித்துவிட்டு குழந்தையும் உறங்க தொடங்கினான். 

மாலை ஐந்து மணி அளவில் கார்த்திக் மோகன் இருவரும் ஹாஸ்பிடல்வந்து சேர, அவர்களை தொடர்ந்து நடிகர் அக்ரம், அவன் குருநாதர் முனி ரத்னம், நடிகை நேகா மற்றும் யவன ராணி பட பிடிப்பு குழுவினர்களும் வந்து வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்பிடல் ஜே ஜே என்று இருந்தது.
"படம் மிகப்பெரிய வெற்றி" என்றும் தொடர்ந்து வந்த ரிப்போர்ட் தெரிவிக்கஅனைத்து தொலை காட்சிகளும் திரை அரங்குகளில் நிரந்த கூட்டத்தையும், திரை பட விமர்சனத்தையும் நேரடியாக ஒளி பரப்பின.



அக்ரம் கார்த்திக்கை தனியாக அழைத்து "எனக்கு கிடைத்த தகவல் படி இன்று மட்டுமே 200 கோடி வசூல் ஆகும். இன்னும் ஒரு வாரத்தில் போட்ட முதல் கிடைத்து விடும். அதுக்கப்பறம் வர்றது எல்லாமே லாபம் தான். பாண்டியன் சாக்கு மூட்டைலதான் பணம் எடுத்து போவான்னு நினைக்கிறேன். ஆமா உனக்கும் ஏதோ பங்கு இருக்குல்ல, அக்ரிமென்ட் எல்லாம் ஒழுங்கா போட்டிடுயா" என்று கேட்க 

"சார் எல்லாத்தையும் மோகன் நல்லபடியா முடிச்சிட்டான்" என்று தெரிவிக்க, "ஆமா அவன் இருக்கான்ல. ஆனா கார்த்திக் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்பா. உன் நண்பன் உனக்காக உயிரையே கொடுப்பான். உன் மனைவியோ உனக்கு ஒரு மந்திரி மாதிரி. இப்போ ராஜகுமாரன் மாதிரி ஒரு குழந்தை. எனக்கு உன்னை பார்த்த பொறாமையா இருக்கு" என்று சொல்ல "சார் நீங்க ரொம்ப புகழ்ரிங்க எனக்கு கூச்சமா இருக்கு" என்று சொன்னான்.

ஒரு வழியாக ஹாஸ்பிடல் வந்த கூட்டம் குறைய தொடங்க தன் வாட்சில மணி என்ன என்று பார்க்க, சரியாக ஏழு ஆகி இருந்தது.திரும்ப தூங்கி விழித்த குழந்தை பசி எடுத்து அழ, ஜனனி பால் குடிக்க வைக்க முயற்சி செய்ய, குழந்தை பால் குடிக்காமல் முரண்டு பிடித்தது. 

சொன்னபடி இரவு எட்டு மணிக்கு ரவுண்டு வந்த டாக்டர் "ஏன் குழந்தை இப்படி அழறான்" என்று கேட்கபூரணி விஷயத்தை சொல்ல, "கவலை படாதிங்க சில நேரங்கள்ல இப்படி ஆவது உண்டுநாளை மதியம் வரை வெயிட் பண்ணலாம். அது வரைக்கும் நான் சொன்ன மாதிரி க்ளுகோஸ் கொடுங்க" என்று சொல்ல, "சரி டாக்டர்" என்று கவலை தோய்ந்த முகத்துடன் ஜனனி, கார்த்திக் தலை ஆட்டினர். 

க்ளுகோஸ் இரண்டு ஸ்பூன் குடித்த குழந்தையை தன் நெஞ்சை ஒட்டி இரு கைகளுக்கு நடுவில் வைத்து கார்த்திக் பார்த்து "என்னடா கண்ணா. அம்மா கிட்ட பா குடிக்க தெரியலையா? பழக்கம் இல்லையா? சரி அழாதே. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம்" என்று கொஞ்சி கொண்டிருக்கபக்கத்தில் இருந்த பூரணி "இங்க பாருடி ஜனனி ஆச்சர்யத்தை, பிறந்த குழந்தைகள் கண் முழிக்கிறதே பெரிய விஷயம். இந்த குட்டி பையன் என்னடான்னா இப்படி கண்ண உருட்டி உருட்டி பாக்குது பாரேன்" என்று சொன்னாள்.


அடுத்த நாள் வந்த டாக்டர் ஜனனியை செக் செய்து விட்டு, "நான் முதல்லயே சொன்ன மாதிரி இன்னும் இரண்டு நாட்களில் ஜனனியை டிஸ் சார்ஜ் செய்யலாம்" என்று கார்த்திக்கிடம் சொல்ல அதை கேட்ட ஜனனிக்கு நிம்மதி.

"எனக்கு இந்த ஹாஸ்பிடல் மருந்து வாசனையே பிடிக்கலை எப்பதான் வீட்டுக்கு போவோம்னு இருக்கு" என்று சொல்ல, கார்த்திக் "கவலை படாதே இன்னும் ரெண்டு நாள் தானே பொறுத்துக்க. கண்ணை மூடி திறக்கரதுக்குள்ள ஓடி போய்டும் பாரு" என்று சொல்ல,"சரி" என்று தலை அசைத்தாள்.

ஜனனி மனதில் இப்போது மனதில் இருக்கும் பெரும் கவலையே "ஏன் குழந்தை பால் குடிக்க மாட்டேன்" என்கிறது தான்கார்த்திக் அதற்குள் பாண்டியனை பார்க்க கிளம்பினான். 

மதியம் வீட்டில் இருந்து தோட்டக்காரன்அவன் மனைவி மற்றும் மூன்று மாத குழந்தையுடன் வர ஜனனி அவர்களுடன் பேசி கொண்டுருந்தாள். அவளை கண்ட பூரணிக்கு ஒரு யோசனை தோன்றியது. 

ஜனனி அருகில் சென்று அவள் காதில் ஏதோ சொல்ல, ஜனனி "என்னம்மா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?ஏன் இப்படி பேசுற. நான் என் பையனை கொடுக்க மாட்டேன்" என்று சொல்ல, "இல்லைடி எனக்கு ஒரு சந்தேகம். நாம ஒரு தடவ முயற்சி செஞ்சு பார்க்கலாமே" என்று சொன்னாள். ஜனனி யோசித்து பார்த்து "சரி ஒரு வேளை அம்மா சந்தேகப்படுவதுபோல் இருந்து விட்டால்". ஐயோ நினைக்கவே அவளுக்கு பயமாக இருந்தது. 

ஜனனியின் முகத்தில் தோன்றிய கலவரத்தை கவனித்தபடி, தோட்டக்காரன் மனைவியை கூப்பிட்டு பூரணி பேசினாள். அவள் கொஞ்ச நேரம் யோசனை செய்து விட்டு கடைசியில் "சரிங்க அம்மா" என்று சொன்னாள். மெதுவாக பூரணி நடந்து சென்று ஜனனியின் அருகில் தொட்டிலில் படுத்து இருந்த குழந்தையை எடுத்து தன் ப்லௌசை விலக்கி குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சி செய்தாள்

குழந்தை தனது பிஞ்சு கைகளால் தோட்டக்காரன் மனைவியை தள்ள முயற்சி செய்ய, மீண்டும் அவள் குழந்தையின் வாயில் அவளின் மார்பு காம்பை வைக்க இந்த தடவை குழந்தை காம்பை உறிஞ்ச ஆரம்பித்ததுகொஞ்ச நேரம் பால் குடித்த குழந்தை அப்படியே உறங்கி விட, அதை தொட்டிலில் விட்டு விட்டு ஜனனியை பார்த்தாள்.


ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் இப்போது நடந்ததை அவளால் நம்ப முடியவில்லை. தன்னிடம் பால் குடிக்க மறுக்கும் குழந்தையை பரிதாபமாக பார்த்தாள். அவள் மூளை சிந்திக்கும் தன்மையை இழந்து விட்டது.

"கார்த்திக் ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை. என்னோட குழந்தை என் கிட்ட பால் குடிக்க மாட்டேங்கிறான். ஆனா அவ கிட்ட இப்போ குடிக்கிறான். எனக்கு அவமானமா இருக்கு" என்று குமுறினாள். 

அவள் மனநிலை புரிந்து கொண்ட கார்த்திக் அவள் அருகில் வந்து அவள் தலையை தடவி கொடுத்து "கவலை படாதே. எனக்கென்னவோ டாக்டர் சொன்ன மாதிரி இனிமே அது உன்கிட்ட குடிக்கும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இரு" என்று சமாதான படுத்தஜனனி தலை அசைத்து மீண்டும் படுத்து கொண்டாள்.

வேலைக்காரன்அவன் மனைவி, குழந்தையுடன் திரும்பி செல்ல, இரவு உணவை முடித்து விட்டு கார்த்திக் பூரணியுடன் பேசி கொண்டு இருந்தான். 

இரவு எட்டு மணி அளவில் டாக்டர் ரௌண்ட்ஸ் வந்து குழந்தை அருகில் வந்து என்னம்மா பால் குடிசான என்று கேட்க, இல்லை டாக்டர் என்றாள். டாக்டர் குரலை கேட்ட குழந்தை கண் விழித்து சிணுங்க ஆரம்பித்தது.

அதற்குள் கட்டிலில் மெதுவாக எழுந்த ஜனனியை பார்த்து "நீ கொஞ்சம் சாஞ்சிக்க" என்று சொல்லி விட்டு டாக்டர்குழந்தையை எடுத்து அவள் கையில் கொடுத்து "இப்போ பால் கொடு" என்று சொல்ல,ஜனனி பால் கொடுக்க முயற்சித்தாள். குழந்தையோ தன் காலால் அவளை உந்தி தள்ள முயன்றான். மேலும் வற்புறுத்த காம்பில் வாய் வைக்க மறுத்து தலை அசைக்க, ஜனனி அவனை கட்டாயபடுத்த, அவன் பிடிவாதம் ஜாஸ்தி ஆகி குழந்தை துள்ள ஆரம்பித்தான். டாக்டருக்கு இப்போது புரிந்தது

"முதல்ல அவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் ஸ்பூன்ல கொடுத்து தூங்க வைக்கலாம். பிறகு நான் என்ன விஷயம்னு சொல்றேன்" என்று சொல்ல ஜனனிகண் கலங்க "சரிங்க டாக்டர்" என்று தலை அசைத்து, குழந்தைக்கு ஸ்பூனில் க்ளுகோஸ் கொடுத்தாள். குழந்தையும் இரண்டு ஸ்பூன்களை குடித்து உறங்க ஆரம்பித்தது.

பூரணியை அழைத்து "நீங்க கொஞ்சம் வெளியில இருங்க நான் ஜனனி கார்திக்கிட்ட தனியா பேசனும்னு" அவளும் குழப்பம் நிறைந்த முகத்துடன் வெளியேறினாள்.


உறங்கி கொண்டுருந்த குழந்தையை ஜனனி மார்போடு அணைத்து கொண்டு "இப்போ சொல்லுங்க டாக்டர் என்ன பிரச்னை? இவன் என் கிட்ட ஏன் குடிக்க மாட்டேன் என்கிறான்?" என்று கேட்க

டாக்டர்" ஜனனி இப்போ நான் கேட்கிற சில கேள்விகளுக்கு உண்மைய மறைக்காம பதில் சொல்லணும்" என்று கேட்க "சரி" என்றுதலை அசைத்தாள்.

"குழந்தை பெத்துக்கிறது சம்மந்தமா உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டை வந்ததா?"என்று கேட்க, அவளும் யோசனையுடன்தயங்கி பேச ஆரம்பித்தாள்.

"டாக்டர் எனக்கும் இவருக்கும் ஆரம்பத்ல இருந்து குழந்தை பெத்துக்கிரதிள்ள கருத்து வேறுபாடு இருந்தது",

"சரி என்ன கருத்து வேறுபாடு?"என்று கேட்க, 

"அவர் குழந்தை பெத்துக்கலாம்னு கேட்க ,எனக்கு அதில விருப்பம் இல்லை". 

"சரி அப்புறம்", 

"கருவை கலைச்சிடலாம்னு சொன்னேன் அதுக்கு அவர் ஒத்துக்கல". 

"சரி உங்களுக்கு ஏற்கனவே எதாவது குழந்தை இருக்கா?", 

"இல்லை டாக்டர்" 

"அப்புறம் பெத்துக்கிரதிள்ள என்ன தவறு இருக்கு" என்று ஆச்சர்யபட்ட டாக்டர் "ஓகே இப்போ சொல்லு, அப்புறம் என்ன முடிவுபண்ணின?".

"அவர் கெஞ்சி கேட்டதால நான் கரு கலைப்பை வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா எனக்கு என் வயிற்றில வளர்ற குழந்தை மேலஆரம்ப காலத்ல ஒரு வெறுப்பு இருந்தது". 

"ஓஹோஅப்புறம் இன்னம் இந்த குழந்தை மேல உனக்கு வெறுப்பு இருக்கா?"

"இல்லை டாக்டர் அவனோட முகத்தை பார்த்த உடனே எனக்கு மனசு மாறி போச்சு" என்று சொல்லி விட்டு ஜனனி தலை குனிய




"பரவாயில்லை உனக்கு கொஞ்சமாவது தாயுள்ளம் இருக்கே" என்று வெறுப்பாக சொல்லி விட்டுடாக்டர் கார்த்திக்கை பார்த்து சத்தம்போட ஆரம்பித்தாள்.

"நீங்க ரெண்டு பேரும் படிச்சவங்களா. என்னால நம்பவே முடியலை. இவ்வளவு கேவலமா நடந்துரிக்கிங்கச்சே. உங்களோட பேசஎனக்கு அருவெறுப்பா இருக்கு. குழந்தை வயித்ல இருக்கும்போது விருப்பு, வெறுப்பு எது வந்தாலும்
அது குழந்தையை கடுமையாக தாக்கும் அப்படிங்கிறது உங்களுக்கு தெரியாது?"

" ஜனனி நீ குழந்தை மேல வச்சிருந்த வெறுப்பு தான், இப்போ அது உங்க கிட்ட தாய் பால குடிக்க மாட்டேன்னு சொல்றதுல்ல போய்முடிஞ்சுருக்கு. இது மாதிரி குழந்தைகள் அம்மா கிட்ட பால் குடிக்காம போன சில சம்பவங்கள் ஏற்கனவேநடந்திருக்கு".

"ஏன் கார்த்திக் நீங்க பக்த பிரஹலாதனை பற்றி படிச்சதில்லை"என்று கேட்கஇருவரும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்தலைகுனிந்தனர்

இருவரில் முதலில் சுதாரித்த ஜனனி "டாக்டர் அவர் மேல தப்பு இல்லை. நான் தான்....." என்று ஆரம்பிக்க

"வாயை மூடு. நான் மட்டும் உன் புருஷனா இருந்துருந்தா கரு கலைப்பு செய்வேன்னு சொன்ன உன்னோட வாய்க்கு சூடு வச்சிருப்பேன்"என்றுசொல்ல அதற்கு கார்த்திக் ஏதோ பதில் சொல்ல வர

"என்ன கார்த்திக் நான் ரொம்ப அதிகமா பேசுற மாதிரி இருக்காஜனனி வயசு தான் என் பொண்ணுக்கும். அதனால தான் கொஞ்சம்உணர்ச்சி வசப்பட்டுட்டேன். sorry" என்று சொல்லி விட்டு அந்த குழந்தையை வாங்கி அணைத்து கொண்டாள்.

தலை குனிந்து நின்ற இருவரையும் பார்த்து ஒரு கணம் யோசித்த டாக்டர் " சரி எனக்கு ஒரு யோசனை தோணுது. கார்த்திக் முதல்ல வெளியே நிக்கிற உங்க மாமியாரை கூப்பிடுங்க" என்று சொல்ல, பூரணியை அழைத்து வந்தான்.


அதற்குள் டாக்டர் ஜனனியை பார்த்து "உனக்கு பால் கொடுக்காம மார் கட்டி போயிருக்குமே?" என்று கவலையுடன் கேட்க,

"ஆமா டாக்டர் எனக்கென்னவோ ரெண்டு பக்கமும் வலிக்குது. fever வேற வர்ற மாதிரி இருக்கு"என்று சொல்ல, 

அந்த நேரத்தில் உள்ளே யோசனையோடு நுழைந்த பூரணியை பார்த்து, "இப்போ உங்க பேரன் ஜனனி கிட்ட பால் குடிக்காம அவளுக்கு பால் கட்டிருச்சு. நான் பம்ப் வாங்கி தர சொல்றேன். நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு உதவி செஞ்சா பாலை எடுத்துடலாம். எடுத்த பாலை அஞ்சு நிமிஷத்துக்குள்ள குழந்தை வாய்ல, ஸ்பூனை வச்சு கொஞ்சம் கொடுங்க. ஒரு வேளை குழந்தை குடிக்கும்னு நினைக்கிறேன்.

இப்போ ஜனனிக்கு பெட்டரா இருக்கு. அதனால நாளை மாலை டிஸ்சார்ஜ் செய்யலாம்னு நினைக்கிறேன்என்று சொல்லி விட்டு டாக்டர் கிளம்பினார். 

என்ன செய்வதென்று விழித்த ஜனனி, தன் மார்பில் உறங்கும் அந்த இளம் பிஞ்சை அணைத்து கண்ணீர் விட்டாள்

கார்த்திக் அவள் அருகில் வந்து "டாக்டர் சொல்றதுல உண்மை இருக்கு. நான் கூட எழுத்தாளர் அம்பை எழுதிய ஒரு கட்டுரைல அவங்க அம்மா கிட்ட பால் குடிக்காம பக்கத்துக்கு வீட்டு அம்மா கிட்ட பால் குடிச்சு வளர்ந்ததா எழுதி இருக்காங்க.

மேலும் நடிகர் சூர்யாவோட சுயசரிதைல அவர் அவங்க அம்மா வயித்தில இருந்தப்போ, அவங்க அம்மாவோட நெருங்கிய தோழி இறந்தது அவர்களை பாதித்ததாகவும், அது வயிற்றில் இருந்த சூர்யாவையும் பாதித்தது என்று எழுதி இருந்தார்.

இப்போ எனக்கு ஒரு யோசனை தோணுது. ஆட்டோ சஜ்ஜசன் முறைப்படி குழந்தை காதுல நீ கொஞ்சம் அன்போடு பேசு பால் குடிக்க சொல்லு, அது தூங்கும் போது கூட நீ குழந்தை முன்னால அது முகத்தை பார்த்து பேசு, மன்னிப்பு கூட கேட்கலாம். குழந்தைக்கு நீ பேசுறது புரியாம போகலாம். ஆனால் உன்னோட உணர்வுகள் அதுக்கு புரியும். 

அதுவே உன் மேல அன்பை உருவாக்கி, ஒரு வேளை உன்கிட்ட பால் குடிச்சாலும் குடிக்கலாம்" என்று சொல்லி விட்டு "நான் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுறேன்"என்று சொல்லி விட்டு வெளியேறினான். 

பூரணி மெடிக்கல் சென்று டாக்டர் எழுதி கொடுத்த அந்த பம்பை வாங்கி கொண்டு வந்து ஜனனிக்கு உதவி செய்ய, பால் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கண்டைனரில் ஊற்றினாள்.


குழந்தையை அணைத்தபடி ஸ்பூனில் பாலை எடுத்து வாயில் ஊற்ற குழந்தையோ துப்ப ஆரம்பித்தான். ஜனனி விடவில்லை. விடாமல் இன்னும் ஒரு ஸ்பூன் கொடுக்க, லேசாக சப்பி குடித்து விட்டு மீண்டும் உறங்க தொடங்கினான். ஜனனிக்கோ கொஞ்சம் சந்தோஷம் திரும்பியது.

தன் அருகில் கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த குழந்தையிடம் மனதோடு பேச ஆரம்பித்தாள். குழந்தை சிணுங்கும் போதெல்லாம் அணைத்து கெஞ்சினாள், கொஞ்சினாள்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பிய கார்த்திக்கு ஜனனி குழந்தையை கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்து முகத்தில் சிரிப்பு திரும்பியது. 

ஜனனியிடம் "என்ன சொல்றான் பையன்?"என்று கேட்க அவளோ"இப்போ தாங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கு. கொஞ்சூண்டு பால் குடிச்சுருக்கான். திரும்ப முரண்டு பிடிக்காம இருக்கணும்" என்று கவலையோடு தெரிவித்தாள். கார்த்திக்கு அவள் மன வேதனை புரிந்தது.எந்த அம்மாவுக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்று நினைத்து கொண்டான். 

எல்லாரும் இரவு பத்து மணி அளவில் உறங்கினர். கார்த்திக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. எப்படியும் குழந்தை அழுவான். ஜனனி களைப்பாக இருப்பதால் குழந்தை அழுவது தெரிய வாய்ப்பு குறைவு. நாம தான் எழுப்ப வேண்டி இருக்கும் எண்ணி கொண்டே இரவு ஒரு மணி அளவில் தன்னை மறந்து கொஞ்சம் கண் அயர்ந்தான். திடீரென்று வீறிட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டு அவனை எழுப்ப,ஜனனியும் கண் விழித்து விட்டாள். 

குழந்தையை தொட்டிலில் இருந்து அவன் எடுத்து கொடுக்க, ஜனனி அதை அணைத்து கொஞ்சியபடி தன் இடது மார்பு காம்பை குழந்தை வாயில் வைக்க அரை தூக்கத்தில் இருந்த குழந்தை தன் வாயை வைத்து உறிஞ்ச, அவளுக்கு மார்பு வலி குறைய ஆரம்பித்தது. வலி குறைந்ததாலா இல்லைகுழந்தை பால் குடிப்பதாலா, தெரியவில்லைஆனால் ஜனனி கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய ஆரம்பித்தது. 

அவள் சந்தோசத்தை அதிகப்படுத்துவது போல் குழந்தை அவள் இடது மார்பின் பால் குடத்தை தீர்த்த பின் அவள் வலது மார்புக்கு தாவினான். இதை ஓர கண்ணால் கவனித்த கார்த்திக் புன்சிரிப்புடன் படுத்து கொண்டான். குழந்தை குடித்து விட்டு அவள் அருகிலே சுவரை ஒட்டி படுத்து உறங்க ஆரம்பித்தது.

குழந்தை வீட்டுக்கு திரும்பிய பதினைந்தாம் நாள் ஜனனி விருப்பப்படி அவனுக்கு ஆதித்யா என்று பெயர் வைக்கப்பட்டது. 

கார்த்திக் போனில் மோகனிடம் பேசி கொண்டுரிந்தான். "மோகன் நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. என்னால இப்போ வர முடியாது"அவன் போட்ட சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து ஜனனி வாசலுக்கு வந்தாள்.

"என்ன கார்த்திக் என்ன பிரச்சனை? மோகன் அண்ணாவை பொதுவா நீங்க சத்தம் போட மாட்டிங்களே. இன்னைக்கு என்ன பிரச்சனை?"

"ஒண்ணுமில்லை" அவன் என்று மழுப்ப ஜனனிக்கு சந்தேகம் வலுத்தது. 

அவனிடம் இருந்த போனை அவள் வலுகட்டாயமாக பிடுங்கி மோகனிடம்"என்ன அண்ணா என்ன பிரச்சனை?" என்று ஆரம்பிக்க சொல்ல வேண்டுமா என்று யோசித்தான் மோகன்.

"அண்ணா நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது. சும்மா சொல்லுங்க".

"ஒண்ணுமில்லை ஜனனி ரெண்டு நாளா அவனை டைரக்டர் சங்கத்துக்கு கூப்பிடுறேன் வர மாட்டேங்கிறான். கேட்டா எனக்கு வீட்ல நிறைய வேலை இருக்கு. குழந்தைய வேற பாத்துக்கணும் அப்பிடின்னு சொல்றான். 

'ஏன்டா குழந்தையை பார்த்துக்க ஜனனி இருக்காளே' அப்பிடின்னு கேட்டா பதிலை காணோம். 

சரிடா அப்போ எப்பதான் நாம அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணுறதுன்னு கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறான். நீதான்மா என்னன்னு கேக்கணும்" என்று சொல்ல, அதற்குள் குழந்தை அழும குரல் கேட்டு "சரி அண்ணா, நீங்க அவர் கிட்ட பேசுங்க" என்று சொல்லி விட்டு போனை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு குழந்தையை அள்ளி எடுக்க ஓடினாள்.

தொட்டிலில் இருந்து அழுத குழந்தையை தூக்கி மார்போடு அணைத்து கொண்டு"என்னடா செல்லம், அழாத, அம்மா வந்துட்டேன்.அய்யோ மூச்சா போயிட்டியா? அதுக்கு தான் இந்த அழுகையா?" என்று அவன் போட்டுரிந்த ஜட்டியை கழட்ட, குழந்தை ஆதித்யா அவள் மார்பை முட்ட தொடங்கினான்.

"குட்டி பையனுக்கு பசிக்குதா? சரி சரி இப்போ மம்மு கொடுத்தா போச்சு" என்று ஜட்டியை கழட்டி விட்டு குழந்தையை மடியில் ஏந்தி கொஞ்சு கொண்டே பாலூட்ட தொடங்கினாள்.

மோகனிடம் பேசி விட்டு உள்ளே நுழைந்த கார்த்திக் தண்ணீர் குடிக்கலாம் என்று பிரிட்ஜ் நோக்கி நகர, அவனை "கொஞ்சம் நில்லுங்க உங்க கிட்ட பேசணும்" என்றாள்.

"என்ன பிரச்சனை உங்களுக்கு?, எதுக்கு மோகன் அண்ணா கிட்ட வர மாட்டேன்னு சொன்னிங்க?".

அதற்கு கார்த்திக்ஒன்றும் பதில் பேசவில்லை. 

குரல் தழு தழுக்க "என்கிட்ட உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம். நான் யாரையும் கட்டாய படுத்த விரும்பலை."

"இல்லை ஜானு. நான் இனிமே சினிமா டைரக்ட் பண்ண போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்""ஏன்? யார் என்ன சொன்னாங்க?.யவன ராணி படம் பல சாதனைகளை புரிஞ்சுகிட்டு இருக்கு. இப்படி திடீர்னு குண்டை தூக்கி போட்டா என்ன அர்த்தம"

"இல்லை எனக்கு அதை விட பெரிய பொறுப்பு இருக்கு."

"எனக்கு புரியலை. எனக்கு தெரியாம வேற என்ன பொறுப்பு?"

பால் குடித்த குழந்தையை கை நீட்டி வாங்கி தோளில் போட்டு முதுகை நீவி விட்டு தொடர ஆரம்பித்தான்.

"இல்லை ஜானு. இப்போ நீ குழந்தையை பாத்துக்கிற. ஆனா மூணு மாசம் கழிச்சு நான் தான பாத்துக்கணும்" என்று சொல்ல, ஜனனிக்கு மெல்ல மெல்ல விளங்க தொடங்கியது. தான் சொன்னது தனக்கே பிரச்சனையாக வரும் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை.

ஒரு கணம் சுதாரித்து கொண்டு "கார்த்தி, அது நான் அப்போ புத்தி கெட்டத்தனமா சொன்னது. என்னால குழந்தையும், உங்களையும் விட்டு போக முடியாது. நான் உங்களோடையே இருந்துடுறேனே please?" என்று கெஞ்ச, வறண்ட புன்னகையுடன் பேச தொடங்கினான்.

"ஜானு உனக்கு தெரியாததில்ல. காதல்லையும் சரி கல்யாணத்திலையும் சரி, ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு மனமொத்து வாழ்ந்தால் தான் அது வாழ்க்கை. எனக்காக பரிதாபபட்டு, குழந்தைக்காக வேற வழி இல்லாம என் கூடசேர்ந்து வாழணும்னு நீ நினைக்கிறது எனக்கென்னவோ பிச்சை போடுற மாதிரி இருக்கு. 

உண்மையான காதல் பிச்சை போடாது, பிச்சையும் எடுக்காது. இப்பயும் நான் சொல்றேன். நீ குழந்தையோட அம்மாவா இங்கே எப்பவும் இருக்கலாம். அதுல எனக்கு எந்த பிரச்சனையையும் இல்லை. ஒரு நாள் உனக்கு நான் இல்லாமல் இனிமே வாழவே முடியாதுன்கிற நிலைமை வரும். அப்போ நாம ஒண்ணாசேரலாம். அது வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன். நீயும் காத்து இருக்கணும். இதுதான் என்னோட முடிவு".

குழந்தையை தூக்கி கொண்டு கார்த்திக் வெளியேற, கண்ணிமைக்காமல் அப்படியே நின்றாள் ஜனனி.





No comments:

Post a Comment