Wednesday, July 29, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 9

அன்றுமாலை அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்த சத்யனை, அறைக்கதவைத் தட்டும் ஓசை எழுப்ப, எரிச்சலாக கண்விழித்தான், “யாரு” என்று அதட்டினான்

“காபி போட்டாச்சு வாங்க” என்று மான்சியின் குரல் கேட்க,.... போதையும் தூக்கமும் கண்களை திறக்கமுடியாமல் செய்ய “ எனக்கு வேண்டாம் நான் தூங்கனும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை இறுக்கிக்கொண்டான்,
“டேபிள்ல வச்சுகிட்டு வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க” என்று மான்சியின் குரல் மறுபடியும் கேட்டது

கண்கள் மூடியிருந்தாலும் சத்யனின் காதுகள் திறந்து தானே இருந்தது, இப்போ இவ என்ன சொல்றா ‘நீ வரலைன்னா நான் காபி குடிக்காம வெயிட் பண்ணுவேன்னா? ச்சே என்று கையை உதறியபடி எழுந்தான் சத்யன்

போட்டிருந்த டீசர்டையும், சாட்ஸ்ஸையும் சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்த சத்யனின் முகத்துக்கு நேராக காபி டம்ளரை நீட்டினாள் மான்சி... அவள் விழிகளை பார்த்துக்கொண்டே சத்யன் டம்ளரை வாங்கினான்



அன்று மாலை சத்யன் எங்கும் வெளியே போகவில்லை, கம்பியூட்டரே கதியென்று உட்கார்ந்திருப்பவன் அதிலும் அமராமல் ரொம்ப நாள் கழித்து சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்தான், ஏன்னா மான்சியும் டிவி பார்த்தாளே அதனால்தான்

அன்று இரவு சத்யன் படுத்தவுடன் வழக்கம் போல் தேவி கனவில் வந்தாள், சிரித்தாள், தொட்டாள், அணைத்தாள், முத்தமிட்டாள், சீண்டி சண்டையிட்டாள், பிறகு கட்டியணைத்து சமாதானம் செய்தாள், தன் மென்மையான மார்பினால் அவனுடைய முரட்டு நெஞ்சில் மோதினாள், தொட்டு தொட்டு அவனது ஆண்மையை உசுப்பேத்தினாள், உடலின் ஒவ்வொரு அணுவிலும் இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே மிச்சமிருந்தது பிறகு அவனை அணைத்து தூங்கினாள்

சிறிதுநேரத்தில் மான்சி வந்தாள் சத்யனை தனது பெரிய விழிகளை விரித்து உற்று நோக்கினாள், புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டாள், பிறகு சாந்தமான முகத்தோடு கண்மூடி ஜாடையில் சத்யனை தூங்கு என்று சொல்லிவிட்டு மறைந்தாள்,..

திடுக்கென்று விழித்து எழுந்தான் சத்யன், குபுகுபுவென வியர்வை உடலெங்கும் சுரக்க, அருகில் இருந்த டவலால் துடைத்துக்கொண்டு கதவை பார்த்தான், மூடிய கதவு மூடியபடியே இருந்தது,. அப்போ வந்தது கனவா? மான்சி என் கனவில் வந்தாளா? சத்யனுக்கு நம்பவே முடியவில்லை முதன்முதலாக தேவி அல்லாத ஒரு பெண் சத்யனின் கனவில் வந்திருக்கிறாள்

சத்யனுக்கு அதன்பிறகு தூக்கம் வரவில்லை, எழுந்து கம்பியூட்டர் முன் அமர்ந்து, தனது உணர்வுகளை கருத்துக்களாக பதிவுசெய்தான்,

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி மான்சியையும் பாண்டியனையும் அழைத்துக்கொண்டு, காலேஜ்க்கு போனான், அங்கே மான்சி வேலையில் சேர்த்துவிட்டு அவள் லேபுக்குள் போகும் வரை பார்த்துவிட்டு அதன்பிறகு தனது ஆபிஸ்க்கு கிளம்பினான்,

அன்று மாலை நாளு மணிக்கு பாண்டியனுடன் காலேஜ்க்கு போய் தயாராக இருந்த மான்சியை அழைத்துக்கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்கு வந்தார்கள் ,

காரை நிறுத்தி மான்சி இறங்கியதும் அவள் பெட்டியை எடுத்து கொண்ட சத்யன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனான். அங்கே தங்கியிருந்த பெண்களிடம் மான்சியை அறிமுகம் செய்த சத்யன், தனது கார்டை மான்சியிடம் கொடுத்து ஏதாவது தேவையென்றால் தயங்காமல் போன் செய்யுமாறு கூறிவிட்டு சத்யன் மான்சியிடம் தலையசைத்து விடைபெற, மான்சி கண்களால் விடைகொடுத்தாள்

அப்போதே பாண்டியனும் ஊருக்கு கிளம்பிவிட்டார், மகளை அடிக்கடி போய் பார்த்து கொள்ளுமாறு கண்கலங்கி சொல்லிவிட்டு கிளம்பினார், சத்யன் அவரிடம் மறக்காமல் மான்சியின் செல் நம்பரை வாங்கிக்கொண்டான்

பாண்டியனை பஸ் ஏத்திவிட்டு , தனது வீட்டுக்கு வந்த சத்யனுக்கு, முதன்முறையாக வீட்டின் வெறுமை மனதை சுட்டது, இவ்வளவு நாட்களாக தனிமைத் தவத்தை விருப்பத்தோடு இருந்த சத்யனுக்கு, மான்சியின் ஒருநாள் வருகை அந்த தவத்தை குலைத்து வசந்தத்தை அறிமுகம் செய்தது

மான்சி தன் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டதை உணர்ந்த சத்யனுக்கு மான்சியின் மனதை புரிந்துகொள்வது மிகக்கடினம் என்று எண்ணினான், எப்படியாவது அவளுக்கு தன்னை புரியவைக்க நினைத்தான்,

அதேசமயம் சத்யனின் மனதில் வழக்கம் போல இன்னொரு கேள்வியும் எழுந்தது, மான்சியை தன்னால் சந்தோஷமா வச்சுக்க முடியுமா? என்ற கேள்விதான் பெரியதாக எழுந்தது

அதைவிட பெரிய பிரச்சனையாக மான்சியின் தாழ்வுமனப்பான்மை பெரியதாக இருந்தது, அவள் மனம் இப்படி இருக்கும் போது , என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று கேட்டால், நம்முடைய ஊனத்தால் தான் இவனெல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கிறான்,, என்று நினைப்பாளோ என்று பயமாக இருந்தது

ஏனென்றால் சத்யன் சம்மந்தப்பட்ட சகலமான விஷயங்களும் நிச்சயம் மான்சிக்கு தெரிஞ்சிருக்கும், தேவியுடனான காதல், அவளோட மரணம், அதன்பிறகு ஒரு வருடம் பைத்தியமாக ஊர் சுற்றியது, இன்னும் மருத்துவ பரிசோதனைக்கு போய் வருவது., பத்தாக்குறைக்கு இந்த குடி பழக்கம் வேற . இவ்வளவும் தெரிஞ்ச பிறகு மான்சியிடம் திருமணம் பற்றி பேசுவது அவளது தாழ்வுணர்ச்சியை தூண்டுவது போல் ஆகிவிட கூடாது என்று நினைத்தான்

அன்று இரவும் தேவிக்கு பிறகு மான்சி வந்தாள், கண்களால் பேசி மவுனமாக ஜாடை செய்து தூங்கச் சொல்லிவிட்டு போனாள்,. பொழுது விடிந்ததும் சத்யனுக்கு புதிதாய் ஒரு பயம் வந்தது எங்க தேவியைப் போல் மான்சியுடனும் தன்னால் கனவில்தான் வாழமுடியுமா? என்ற பயம் வந்தது

மான்சியிடம் அடிக்கடி பேசி தன்னைப் பற்றிய நினைவுகளை அவள் மனதில் பதியவைக்க வேண்டும் என்று நினைத்தான் ... எட்டு மணியலவில் மான்சியின் நம்பருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான்,.. சிறிதுநேரம் கழித்து எதிர் முனையில் எடுக்கப்பட்டு ஹலோ என்று மான்சியின் குரல் கேட்டது

ஏதோ இப்போது தான் முதன்முதலாக காதல் வயப்பட்டவன் போல் தடுமாறிய சத்யனுக்கு எதுக்காக போன் பண்ணீங்க என்று அதட்டுவாளோ என்று பயமாகவும் இருந்தது, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " நான்தான் சத்யன் பேசுறேன்" என்றான்

" ம்ம் இந்த நம்பர் உங்க கார்டுல பார்த்தேன், என்ன விஷயம் சொல்லுங்க" என்றாள் மான்சி

ரொம்ப உஷாரானவ தான் போல என்று நினைத்துக்கொண்டு " இல்ல புது இடம் நல்லா தூங்கினயா? கூட இருக்கிறவங்க நல்லா பழகுறாங்களான்னு கேட்கத்தான் கால் பண்ணேன்" என்று சத்யன் சொன்னதும்

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நல்லா தூங்கினேன்,, கூட இருக்கிறவங்க நல்லா பழகுறாங்க,, ஆனா நான் காலேஜ் ஸ்டாப், அவங்க ஸ்டூடண்ட் அப்படிங்க எல்லையை மெயின்டைன் பண்றாங்க" என்று மான்சி விளக்கமாக சொன்னாள்

யப்பா இவ்வளவு அதிகமா பேசிட்டாளே என்று நினைத்து " இப்போ என்ன டிபன் செய்திருக்காங்க, நீ ஏதாவது ஹெல்ப் பண்ணியா?" என்றான்

" இட்லி சட்னி பண்ணிருக்காங்க, என்னை எதுவுமே செய்யவிடலை,, ஆமா ரூமுக்கு எவ்வளவு அட்வான்ஸ் குடுத்தீங்க, நாலாயிரம் குடுத்ததா இந்த பொண்ணுங்க சொல்றாங்க, நீங்க ஏன் இதை சொல்லலை,, இப்போ என்கிட்ட இரண்டாயிரம் இருக்கு ஈவினிங் வந்து வாங்கிட்டு போங்க" என்று மான்சி சொன்னாள், அவள் குரலில் உண்மையை மறைத்துவிட்டான் என்று இவன்மீது குற்றம்சாட்டும் கடுமை இருந்தது

சத்யனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை கொஞ்சநேரம் மவுனமாக இருந்தான் , பிறகு அவள் தனது பதிலுக்காக காத்திருக்கிறாள் என்று புரிந்து " அதெல்லாம் எதுக்கு மான்சி, பிறகு வாங்கிக்கிறேன், இப்போ வேண்டாம் நீ செலவுக்கு வச்சுக்க" என்று ரொம்ப குழைவாக பேசினான்

" எனக்கு செலவுக்கு இருக்கு, நீங்க வரமுடியலைன்னா உங்க கடை எங்க இருக்கு சொல்லுங்க ஈவினிங் நான் வந்து குடுத்துர்றேன்" என்று பட்டென்று பதில் வந்தது

இதுக்கு மேல சமாதானம் சரிவராது என்று புரிய " இல்ல இல்ல நீ வரவேண்டாம் நானே ஈவினிங் வந்து வாங்கிக்கிறேன்" என்று சத்யன் சொல்ல

" சரி வச்சிர்றேன், நான் காலேஜ்க்கு கிளம்பனும்" என்று இவன் பதிலை எதிர்பார்க்காமலே இணைப்பை துண்டித்தாள் மான்சி

சத்யன் மவுனமாகிவிட்ட தன் கையில் இருந்த போனையே வெறித்துப் பார்த்தான், ச்சே ஏன் போன் பண்ணோம் என்று எரிச்சலாக இருந்தது .... அவளுடைய ஒதுக்கம் சத்யனுக்க வலித்தது, ஆனாலும் இதற்கு மேல் அவளிடம் எதிர்பார்பது அநாகரிகம் என்று நினைத்தான்

அன்று மாலை நான்கு மணிக்கு சத்யன் மான்சியிருந்த வீட்டுக்கு போனபோது , மான்சி இவனை எதிர்பார்த்தது போல பணத்துடன் வந்து நின்றாள்,.. சத்யன் மவுனமாக வாங்கிக்கொண்டான்

" மீதி இரண்டாயிரம் சம்பளம் வாங்கியதும் தர்றேன்" என்று மான்சி சொன்னதும்... அவ்வளவு நேரம் மவுனமாக இருந்த சத்யன் கோபமாக நிமிர்ந்தான்,

" பரவாயில்லை வட்டி போட்டு குடேன் வாங்கிக்கிறேன்" என்றான் ஆத்திரமாக

" கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை,, எனக்கு அடுத்தவங்க கிட்ட கையேந்துவது பிடிக்காது,, இந்த வேலைக்கு நீங்க ஏற்பாடு செய்ததே எனக்கு உடன்பாடு இல்லை தெரியுமா,, ஆனா அப்பா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் வந்தேன்" என்று மான்சி பட்டென்று முகத்திலடித்தாற்போல பேசியதும்

சேரில் அமர்ந்திருந்த சத்யன் எழுந்து " அப்போ நான் அடுத்தவன்,, மான்சி உனக்கு ஊனம் காலில் இல்லை மனசுல தான்,, அந்த ஊனத்தை ஆண்டவனால தான் சரி பண்ணமுடியும்,, என்னால நிச்சயமா முடியாது,, நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி காரை எடுத்தான்,, அவன் காரை எடுத்த வேகத்தில் கார் குலுங்கியது

அன்று மாலை வீட்டுக்கு வந்த சத்யனுக்கு மனசுக்குள் நிறைய குழப்பத்தோடு உணவைக் கூட மறுத்துவிட்டு உடையை மாற்றிவிட்டு படுத்துக்கொண்டான், அவன் மனமெல்லாம் மான்சியின் வார்த்தையிலேயே உழன்றது,

அவளுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை வற்புறுத்துவது போல் உணர்ந்தான் சத்யன், அவள் பேச்சிலும் நடத்தையிலும் துளிகூட காதல் இல்லையோ என்று தோன்றியது, தான்தான் தவறாக நினைத்துக்கொண்டு அவளை நெருங்குகிறோம் என்று வருத்தமாக இருந்தது சத்யனுக்கு,

இனிமேல் அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதும் பழகுவதும் தனக்குத்தான் அவமானம் என்று நினைத்தான்,, அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட வேண்டியதுதான், ஏதாவது தேவையென்றால் உதவுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்,, ஆனால் அவள் எந்த தேவைக்கும் தன்னை அனுக மாட்டாள் என்றும் எண்ணினான்,,

நீண்டநாட்களுக்கு பிறகு வந்த வசந்தம் புயலாக மாறிவிட்டது போல் இருந்தது,, மனசுக்குள் ஒரு வலி ஏற்ப்பட்டது, பலமுறை பழகிய வலி என்றாலும்கூட இப்போது அதன் தாக்கம் அதிகமாக இருந்தது,,

தேவி மட்டும் இருந்திருந்தால் இப்படி காதலை யாரிடமும் யாசிக்கும் நிலை வந்திருக்குமா என்று நினைத்தான், அவள் இருந்த இடத்தை வேறு யாரும் வந்து ஈடுகட்டுவதற்கு முடியாதுதான், ஆனால் அன்புக்காக ஏங்கும் என் மனதையும், ஒரு பெண்ணின் தொடுகைக்காக ஏங்கும் உடலையும் என்னதான் செய்யமுடியும்?

மான்யின் வார்த்தைகள் அன்று தேவியின் இழப்பை அதிகமாக ஞாபகப்படுத்தியது, தனது படுக்கையின் அருகில் இருந்த தேவியின் படத்தை எடுத்து பார்த்தான், தேவி இவனையே உற்றுப் பார்ப்பதுபோல இருந்தது, சத்யனுக்கு கண்கள் கலங்கியது, தேவியின் படத்தை நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டான்,,

சிறிதுநேரம் கண்மூடி படுத்திருந்தவாறு இருந்தவன், தேவியின் படத்தை எடுத்து இருந்த இடத்தில் வைத்தான்,, கண்களில் இருந்து வழிந்து கன்னத்தில் கோடாக இறங்கியிருந்த கண்ணீரை சுண்டியவன் ச்சே என்ன வாழ்க்கை இது, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று நினைத்தான்

பிறகு படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தவன், ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலும் ஒரு கண்ணாடி கோப்பையையும் எடுத்துக்கொண்டு,, டிவி பார்த்த தட்சிணாவிடம் இரண்டு ஆம்லேட் போட்டு எடுத்து வருமாறு சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான்,

கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த ட்ராவை திறந்து பாதி காலியாகியிருந்த விஸ்கி பாட்டிலையும் சிப்ஸ் பாக்கெட்டையும் எடுத்தான், நிதானமாக க்ளாசில் ஊற்றி தண்ணீரை கலந்தான், தட்சிணா ஆம்லேட் எடுத்துவந்து வைத்துவிட்டு போனான்
கொஞ்சம் கொஞ்சமாக விஸ்க்கியை காலி செய்தவன், மறுபடியும் தேவியின் படத்தை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு கட்டிலில் குறுக்காக மல்லாந்து விழுந்தான், ஒருசில விநாடிகள் தேவியை அணைத்து படுத்திருப்பது போன்ற உணர்வில் சுகமாக கண்களை மூடிக்கொண்டான்

அவனது சந்தோஷத்தை தாங்காத அவனது மொபைல் ஒலித்து கலைத்தது, தேவியின் படத்தை எடுத்து பக்கவாட்டில் வைத்துவிட்டு எழுந்து தனது மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்தான், மான்சியிடம் இருந்துதான், அடுத்த நிமிடம் இவ்வளவு நேரம் சிந்தித்த அத்தனையும் மறந்து,, மாற்று யோசனை எதுவுமின்றி ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லும்மா” என்றான்

எதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ என்ன பண்றீங்க,, சாப்பிட்டீங்களா” என்றாள் மான்சி

“ ரூம்ல இருக்கேன்,, இன்னும் சாப்பிடலை,, நீ சாப்பிட்டயா?” என்று சத்யன் குரலின் தடுமாற்றத்தை மறைத்தபடி கேட்டான்

“மணி பத்தாகுதே இன்னுமா சாப்பிடலை,, ரூம்ல என்ன பண்றீங்க?” என் மான்சி கேட்டாள்

இந்த நேரடி கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சத்யனுக்கு புரியவில்லை, கண்ணை மூடி என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே....

“ரூம்ல உட்கார்ந்து ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா?” என்று மான்சியின் அடுத்த கேள்வி வந்து விழுந்தது

வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகவேண்டும் “ ம்ம் சும்மா கொஞ்சம் தான்,, மனசு கஷ்டமா இருந்துச்சு அதான்....” என்று திக்கினான் சத்யன்

“மனசு கஷ்டப்படும் படி என்ன நடந்தது”

இதுக்கு என்ன பதில் சொல்வது,, உன் வார்த்தைகள் ஏற்படுத்திய காயம்தான் என்று எப்படி சொல்லுவது,, அதற்க்கும் ஏதாவது வெடுக்கென்று பேசிவிட்டால் என்ன பண்ணுவது என்று சத்யன் யோசிக்கும் பேதே

“ இப்போ முடிஞ்சுதுல்ல,, அப்புறமென்ன போய் சாப்பிடுங்க,, டைனிங் டேபிளில் உட்கார்ந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு மறுபேச்சின்றி இணைப்பை துண்டித்தாள்

அன்று காலை போலவே இப்போதும் மொபைலை வெறித்துப் பார்த்தான்,, இவளை புரிஞ்சுக்கவே முடியலையே, கொஞ்சநேரத்து கொஞ்சநேரம் வார்த்தைகள் மாறிக்கிட்டே இருக்கே,, எது எப்படியோ நான் சாப்பிடனும்னு மட்டும் கவலையிருக்கு என்று நினைத்தவன் எழுந்து தள்ளாடியபடியே டைனிங் டேபிளில் அமர்ந்து அவளுக்கு போன் செய்வதற்குள் டிஸ்பிளேயில் அவள் நம்பரும் தொடர்ந்து ரிங்டோனும் வந்தது

அவசரமாக ஆன் செய்து “ டேபிளுக்கு வந்துட்டேன் மான்சி” என்றான்
“சரி தட்சிணாமூர்த்தி கிட்ட போனை கொடுங்க” என்றாள் மான்சி,.. அவள் நேற்றுகூட தட்சிணாவை முழுப்பெயர் சொல்லி அழைத்தது சத்யனுக்கு ஞாபகம் வந்தது,,

“டேய் தட்சிணா” என்று சத்யன் கூப்பிட, உடனே வந்தான் தட்சிணா,.. அவனிடம் போனை கொடுத்த சத்யன் ம் பேசு என்று ஜாடை செய்துவிட்டு டேபிளில் கவிழ்ந்து கண்களை சொருகிக்கொண்டான்

தட்சிணா “சரிக்கா, இப்பவே குடுக்கிறேன்,” என்று பேசும் குரல் கேட்டது
......................................................

“ஆமா ப்ரைடுரைஸ் தான் வாங்கி வச்சுருக்கேன்,”
....................................................................

“ இல்லக்கா அவருதான் வேனாம்னு சொன்னாரு”
............................................................................

“ சரிக்கா இனிமேல் எப்படியாவது சாப்பிட வைக்கிறேன்,, என்று பேசிக்கொண்டே இருந்தான்

தட்சிணாவை போன்லயே மிரட்டுறா போலருக்கு என்று நினைத்து சிரிப்பு வந்தது சத்யனுக்கு,, உதட்டில் வழிந்த சிரிப்புடன் மெதுவாக தலையை தூக்கிப்பார்த்தான்

“இங்கதான் இருக்காரு இதோ குடுக்கிறேன்” என்ற தட்சிணா “ இந்தாங்கண்ணே உங்ககிட்ட பேசனுமாம்” என்று போனை சத்யனிடம் கொடுத்தான்

“ சொல்லும்மா” என்றான் சத்யன்

“ ஏன் சாப்பாடு வேனாம்னு சொன்னீங்க,, குடிச்சுட்டு வெறும் வயித்தோட படுக்கக்கூடாதுன்னு உங்களூக்கு தெரியாதா,, நீங்க என்ன சின்னப்பிள்ளையா,, மொதல்ல சாப்பிட்டு படுங்க,, நீங்க சாப்பிட்டு முடிச்சதும் மறுபடியும் கால் பண்ணி தட்சிணாமூர்த்தி கிட்ட குடுங்க” என்றவள் இவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் காலை கட் செய்தாள்

சத்யனுக்கு கையில் இருந்த போனை சுவற்றில் எரிந்து நொருக்க வேண்டும் என்று வந்த ஆத்திரத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்,, எதிர்தரப்பு பதிலைக்கூட கேட்காமல் போனை கட் பண்றாளே என்னப் பொண்ணு இவ,, என்னமோ இவளுக்குத்தான் என்மேல் ரொம்ப அக்கறை மாதிரி போன் பண்ணிட்டு பதிலை கூட காதுல வாங்காமல் லைனை கட் பண்றது என்று எரிச்சலாய் நினைத்தான்




அவன் முன்னால் தட்டு வைத்து அதில் ப்ரைட்ரைஸ் பாக்கெட்டை பிரித்து அள்ளி வைத்தான் தட்சிணா, உணவை விரல்களால் கிளறியபடி போதையோடு அவனை நிமிர்ந்து பார்த்த சத்யன், “ என்னடா ரொம்ப மிரட்டுனாளா? ” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டான்

“ மிரட்டல்லாம் இல்லண்ணே அன்பாத்தான் சொன்னாங்க,, அவரு வேனாம்னு சொன்னா நீ அப்படியே விடுறதா,, உன்னோட கூடப்பிறந்த அண்ணன் இதுமாதிரி பட்டினியா இருந்தா உனக்கு சாப்பாடு இறங்குமா,, இனிமேல் அதுபோல நெனைச்சுகிட்டு அவரை சாப்பிட வை,, இனிமேல் அவரு சாப்பிடலைன்னா எனக்கு போன் பண்ணுன்னு சொன்னாங்க” என்று தட்சிணா சொல்ல

சத்யனுக்கு தொண்டையை அடைத்தது தண்ணீரை எடுத்து குடித்தவன்,, கலங்கிய கண்களை குனிந்து மறைத்துக்கொண்டு “ சரி நீபோய் டிவி பாரு நான் சாப்பிட்டு கூப்பிடுறேன்” என்றான் சத்யன்

“சரிண்ணே ஆனா நீங்க சாப்பிட்டதும் போன் பண்ணி சொல்ல சொன்னாங்க” என்றவன் ஹாலுக்கு போய்விட்டான்

என்னவோ மான்சி பக்கத்தில் இருந்து முறைப்பது போல உணவை அடைக்க அடைக்க அள்ளி விழுங்கிய சத்யன்,, தள்ளாடிக்கொண்டே எழுந்து கையை கழுவிவிட்டு ஹாலுக்கு வந்து தனது செல்லில் மான்சியின் நம்பரை அழுத்தி ரிங் போனதும் தட்சிணாவிடம் நீட்டினான்

“ மேடத்துக்கு தகவல் சொல்லிருடா” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனான்..,, எப்படியும் அவ என்கிட்ட பேசமாட்டா அதுக்கு அவனே தகவல் சொல்லட்டும்,, என்று நினைத்தவனுக்கு அவள் ஏன் தன்னிடம் மட்டும் அவ்வளவு முறைப்பாக பேசுறா என்று மட்டும் புரியவில்லை,, என்னிடம் பேசுவதற்கு எது தடுக்கிறது என்று புரியாமல் குழம்பினான்

சிறிதுநேரம் கழித்து தட்சிணா செல்லை எடுத்து வந்து கொடுத்தான்,, சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து லைட்டரை தேடி எடுத்து பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்த சத்யன் “என்னடா மேடம் இப்போ என்ன சொன்னாங்க” என்று கேட்டான்

“ சாப்பிட்டாரான்னு கேட்டாங்க,, சாப்பிட்டாருன்னு சொன்னதும்,, சரி தூங்கிட்டாரான்னு பாருன்னு சொல்லிட்டு குட்நைட் சொல்லி வச்சுட்டாங்க” என்று தட்சிணா கூறியதும்

சிகரெட்டை புகைத்து அறையெங்கும் புகைமண்டலமாக்கிய படி “ஆமாடா அவளுக்கு மண்ட கர்வம் அதிகம்டா,, என்கிட்ட பேசமாட்டா ஆனா ரொம்ப அக்கறை உள்ளவ மாதிரி விசாரிப்பா,, சரி நீ போ நான் படுக்கிறேன்” என்று கம்பியூட்டர் முன்பு சத்யன் அமர

தட்சிணா தயங்கி நின்றான்,, அவனை திரும்பி பார்த்த சத்யன் “ என்னடா ஏன் நிக்கிற” என்று கேட்க

“அண்ணே சிகரட்டை குடுங்க நான் வெளிய போட்டுர்றேன்,, நீங்க படுத்து தூங்குங்க மணி பதினொன்னு ஆகப்போகுது” என்று சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்

சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, இது புதுசு,, தனது தலையிலடித்துக் கொண்டு “ டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா” என்று சொன்னாலும் சிகரட்டை தரையில் தேய்த்து அனைத்துவிட்டு தட்சிணாவிடம் கொடுத்தான்,, “குப்பையில போட்டுட்டு நீயும் போய் தூங்கு,, டிவி பார்த்த போன் பண்ணி புது வார்டன் கிட்ட சொல்லிடுவேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தான்

தட்சிணாவும் சிரித்தான்,, சத்யனை ஆச்சரியமாக பார்த்தான்,, சத்யன் ஜோக்கடித்து சிரிப்பது ரொம்ப குறைவது அதனால் தட்சிணாவின் சந்தோஷம் முகத்தில் தெரிய “குட்நைட் அண்ணே தூங்குங்க” என்றுவிட்டு வெளியே போனான்

சத்யன் கட்டிலில் கால் நீட்டி படுத்தான்,, இந்த இரண்டுநாளில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் மனதுக்கு இதமாக இருந்தது, ஆனால் மான்சி தரப்பில் மிகப்பெரிய கேள்விக்குறிதான் தெரிந்தது,, அது எப்போது நிமிர்ந்து மறுபடியும் வளைந்து தனக்கு அடைப்பு குறியாக மாறுமோ என்று ஏக்கமாக இருந்தது

அவளிடமிருந்து நல்லமுறையிலான அனுகுமுறை பார்த்தபிறகு தான் தன்னுடைய மனதை திறந்து பேசவேண்டும் என்று எண்ணினான் சத்யன்,, அதுவரைக்கும் பொறுமையாக இருக்கனும் என்று நினைத்தபடி கண்களை மூடினான்

நாளாக நாளாக இது வழக்கமானது இரவில் சிலநேரங்களில் சத்யன் குடியை ஆரம்பிப்பதற்கு முன்பே மான்சியின் போன் வந்துவிடும்,, இவனிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு தட்சிணாவிடம் கொடுக்க சொல்வாள்,, அவன் தலையை ஆட்டி ஆட்டி பேசும்போதே இன்று அர்ச்சனை அதிகம்தான் போல என்று சத்யன் சிரிப்பான்

பிறகு பாட்டிலை தொடக்கூட முடியாதபடி ‘ அண்ணே ப்ளீஸ்’ என்று தட்சிணாவின் பார்வை கெஞ்சும்,, “ சரி போய் தொலை சாப்பிட வர்றேன்” என்று சத்யன் எரிச்சலாக சொன்னாலும் உடனே எழுந்து சாப்பிட போய் அமருவான்
தன்னுடைய கதையெல்லாம் சொல்லி தன்னை பார்த்துக்கொள்ளம் படி பாண்டியன் தன் மகளிடம் கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் சிலநேரங்களில் எழும்,, எது எப்படியோ வாழ்க்கை இப்போது சரியான பாதையில் போவது போல் இருக்கும்

சிலநாட்களில் சத்யன் மாலை வேலைகளில் மான்சி இருக்கும் வீட்டுக்கு போய் பார்த்துவிட்டு வருவான்,, சிலநாட்களில் அவனுடைய முகம் பார்த்து பேசும் மான்சி சிலநாட்களில் இலக்கற்று எங்காவது பார்த்து பேசுவாள்,, சத்யனுக்கு மான்சி புரியாத புதிராகவே இருந்தாள்

அவளுடைய ஊனம்தான் அவளுக்கு தடையா? அல்லது சத்யனின் முன்கதையின் பாதிப்பா என்று சத்யனுக்கு புரியாமல் தவிப்பாக இருந்தது,, மான்சி நாளை எப்படியிருப்பாள்,, இல்லை இல்லை அடுத்த நிமிடம் எப்படியிருப்பாள் என்றுகூட சத்யனால் கணிக்க முடியவில்லை

ஊரிலிருந்து வந்த ஜெயந்தியை அழைத்துக்கொண்டு இரண்டு முறை மான்சி வீட்டுக்கு போனான்,, மகள் இல்லாத ஜெயந்திக்கு மான்சியை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்,, மான்சியும் ஜெயந்தியிடம் ஆன்ட்டி என்று நன்றாக ஒட்டிக்கொண்டாள்,, நம்மிடம் பேசாவிட்டாலும் அக்கா கூடயாவது நல்லா அன்பா இருக்காளே என்று சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது
ஜெயந்தியின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு இருவரும் மணிக்கணக்காக பேசி அன்பை பறிமாறிக்கொண்டார்கள்,,

ஒருமுறை மான்சி வீட்டுக்கு சத்யன் போனபோது,, ஆயிரம் ரூபாயை எடுத்துவந்து சத்யனிடம் கொடுத்தாள்,, பணத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி சத்யன் பார்க்க,, மான்சி தலையை கவிழ்ந்து கொண்டாள் “ கட்ன் எனக்கு பிடிக்காது” என்று சொல்லிவிட்டு பணத்தை நீட்ட,, எதுவுமே பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு வேகமாக வீட்டிலிருந்து வெளியேறினான் சத்யன்

அன்று இரவு சத்யன் சற்று நேரத்தோடு தனது கச்சேரியை ஆரம்பித்தான்,, பாட்டில் காலியாக காலியாக மான்சியின் மீது ஆத்திரம் அதிகமானது,, அவளை புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆத்திரம்,, தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரம்,, தேவி இல்லையே, என்னை இப்படியெல்லாம் ஏங்க வச்சுட்டு போய்ட்டாளே என்று துக்கம் எல்லாம் சேர்ந்து சத்யனின் போதையை அதிகமாக்க அறையில் இருந்து காலி பாட்டிலுடன் வெளியே வந்தான்

டிவி பார்த்துக்கொண்டு இருந்த தட்சிணா இவனுடைய தள்ளாட்டத்தை பார்த்து திகைப்புடன் எழுந்து நின்றான்

“ ஏய் தட்சிணா பாட்டில் காலி, நீ போய் ஒரு எம் சி வாங்கிகிட்டு வில்ஸ் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா” என்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை அவனிடம் நீட்டினான்

“ அண்ணே வேனாம்ண்ணே, இப்பவே ரொம்ப அதிகமா குடிச்சிருக்கீங்க,, சாப்பிட்டு போய் படுங்கண்ணே,, அந்தக்காவுக்கு தெரிஞ்சா என்னைத்தான் திட்டுவாங்க” என்று தட்சிணா கெஞ்சி சொல்ல

மான்சியை பற்றி சொன்னதும் சத்யனின் ஆத்திரம் அதிகமானது,, “ டேய் பெரிய ***** மாதிரி பேசாத நான் சொன்னதை செய்,, அக்காவாம் அக்கா,, யாருடா அக்கா, உனக்கு அக்கா இவதான்” என்ற சத்யன் சாமி அலமாரியை திறந்து உள்ளேயிருந்த தேவியின் படத்தை எடுத்து தட்சிணாவிடம் காட்டினான்



பிறகு அந்த படத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சோபாவில் சரிந்தவன் “ தேவி என்னால முடியலை தேவி,, காதலை பிச்சையெடுக்க வச்சுட்டயே தேவி,, வேனாம் தேவி எனக்கு யாரும் வேனாம் நீ போதும்,, உன்கூட ஒருநாள் வாழ்ந்தது போதும்,, அதை நினைச்சே நான் வாழ்ந்து முடிச்சிர்றேன் எனக்கு வேற எவளுமே வேனாம்” என்று சத்யன் கண்களில் கண்ணீரும்.,, வார்த்தையில் சுயபச்சாதாபமும்,, குரலில் போதையுமாக புலம்பிக்கொண்டு கிடக்க...

அவனது செல் ஒலித்தது,, “ டேய் அவதான்டா அகம்பாவம் பிடிச்சவ,, அழகா இருக்கோம்னு திமிரு” என்றபடி செல்லை எடுத்து நம்பரை பார்த்தான்,, மான்சியின் நம்பர்தான்,, உடனே காலை கட் செய்தான், மறுபடியும் அடிக்க மறுபடியும் சுவிட்ச் ஆப் செய்து போனை சோபாவில் எரிந்தான்


No comments:

Post a Comment