Thursday, July 16, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 1

கார்த்திக் இன்று காலை எழுந்தது முதல் உற்சாகம் தான். அடிக்கடி கண்ணாடியை பார்த்து தலை முடியை சரி செய்து கொண்டான். 25 வயதான கார்த்திக் படித்தது MSc (Maths), M Phil. ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் தோற்றம். ஒரு சாயலில் பார்த்தால் சூர்யா போல இருப்பான். பிடித்தது ஸ்கூல் வாத்யார் உத்தியோகம்,  ஆனால் வேலை கிடைக்காதலால் அருகில் இருக்கும் குறிஞ்சி டுடோரியலில் கணக்கு ஆசிரியர் பணி. 10 மற்றும் 12 வது படிக்கும் மாணவ மாணவியர்க்கு சொல்லி கொடுப்பது அவன் தினசரி வேலை. மாலை நேரங்களில் தன் தெருவில் இருக்கும் 10 வது படிக்கும் மாணவர்களுக்கு கணக்கு டியூஷன்.
 
அப்பா அம்மா இல்லாத அனாதை. அப்பா வழி தாத்தா இருப்பது கிணத்து கடவு கிராமத்தில். அங்கேயே பள்ளி படிப்பு முடித்து, கோவையில் கல்லூரி  பட்டம் பெற்று, இப்போது இருப்பது கோவை மாநகரத்தின் மையமான சாய் பாபா காலனி அருகில் உள்ள KK புதூரில்.
 
அவன் எதற்கு அடிக்கடி கண்ணாடியை பார்த்து சிரிக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் இரண்டு மாதங்களுக்கு  முன் செல்ல வேண்டும். 
 
புதிதாக அவனிடம் டியூஷன் சேர வந்திருப்பவன் வாசு. வாசுவுக்கு கணக்கு என்றாலே வெறுப்பு. பல இடங்களில் டியூஷன் சேர்ந்து அவனை வைத்து சமாளிக்க முடியாமல் டியூஷன் பீசை திருப்பி கொடுத்த ஆசிரியர்கள் பல பேர்.கார்த்திக்கிடம் அவனை சேர்த்து விட்ட போதுஅவனுக்கு எச்சரிக்கை செய்தனர் அவனது நண்பர்கள்.

கார்த்திக் முதலில் அவனை சேர்த்து கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் நண்பர்களது எச்சரிக்கைக்கு பிறகு வேண்டாம் என்று சொல்லி விட முடிவு செய்தான். அன்று மாலை வாசு அவன் அப்பாவுடன் வரும் போது சொல்லி விட முடிவு செய்தான். மாலை 6 மணி அளவில் வாசு வர அவனுடன் வந்தது அவன் அப்பா அல்ல, ஒரு அழகு புயல். நடிகை சினேகாவை ஜீன்ஸ் Tஷர்ட் இல் பார்த்த மாதிரி இருந்தது. கண் இமைக்க மறந்த கார்த்திக்கை பார்த்து "சார், இது என்னோட அக்கா. அப்பாவுக்கு  முக்கியமான வேலை இருந்ததால் வரமுடியவில்லை.  சார் எப்போ சார் எனக்கு டியூஷன் ஆரம்பிக்க போறீங்க" என்று கேட்க, ஒரு வழியாக உணர்வுக்கு வந்த கார்த்திக், அந்த அழகு புயலைப் பார்த்து, "ஏன் வாசு வீட்டில பெரியவங்க யாரும் இல்லையா" என்று கேட்க, அந்த பெண்ணுக்கு சுருக் என்று கோபம் வந்தது. "ஏன் என்னை பார்த்தா பெரியவங்க மாதிரி இல்லையா நான் BA ஹிஸ்ட்ரி ரெண்டாவது வருஷம் படிக்கிறேன், நான் ஒன்னும் சின்ன கொழந்தை இல்லை என்று பொரிந்து தள்ள, அருகில் இருந்த வாசு அவள் அருகில் வந்து காதில் மெதுவாக " அக்கா நீயே கெடுத்து விட்டுடுவ போலிருக்கு. எனக்கு இந்த காலனி ஏரியால ஒருத்தர் கூட டியூஷன் சொல்லி தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நீயும் கெடுத்துடாத. இவர் ஒருத்தர்தான் இருக்காரு இவரும் கை விட்டாஎனக்கு எங்க போறதுன்னு தெரியல" என்று பாவமாக சொல்ல,அந்த அழகு மயில் தனது கோபத்தை குறைத்து விட்டு, "நீங்க இப்போ வாசுவுக்கு சொல்லி தர பீஸ் எவ்வளவு" என்று கேட்க. வாசு சிரித்துகொண்டே "இந்த பாரும்மா" என்று ஆரம்பிக்க, "நான் ஒன்னும் உங்க அம்மா இல்ல, எனக்கு பேர் இருக்கு, உங்கள விட சின்ன பொண்ணு  தான், என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம்" என்று சொல்ல. "சரி அம்மா, கருப்பாயி" என்று அவன் ஆரம்பிக்க, அதற்கு அவள் "என் பேரு கருப்பாயி இல்லை, பானு, பானு ரேகா என்று பொரிந்தாள்".




மனதுக்குள் சிரித்த கார்த்திக், "இங்க பாருங்க பானு, பீஸ் பத்தி பிறகு சொல்றேன், நாளைக்கு சண்டே, உங்க தம்பிய காலை 10 மணிக்கு வர சொன்னா, அவனுக்கு ரெண்டு மூணு டெஸ்ட் நடத்தி எந்த அளவுக்கு அவனுக்கு கணக்கு பாடத்தில் பரிட்சயம் இருக்கு என்பதை தெரிந்து, ஸ்பெஷல் கோச்சிங் கொடுப்பதா  வேண்டாமா என்று பற்றி முடிவெடுப்பேன்", என்று விளக்கி சொல்ல, "சரி அப்பிடின்னா நாளைக்கு நான் அவனை அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னாள். "வாசு உன் வீடு எங்க" என்று கார்த்திக் கேட்க, "சாய் பாபா காலனில" என்று சொல்லி விட்டு அவனை கண்களால் பிடுங்கி தின்பது போல் பார்த்தாள்.

கார்த்திக்கு அவளிடம் இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்று தோண ஆனால் இப்போது டியூஷன் ஆரம்பிக்க வேண்டி இருப்பதால் இன்னொரு சமயம் விளையாடலாம் என்று முடிவு செய்து, சரி பார்க்கலாம் என்று அவர்களை பதில் சொல்லி அனுப்பி வைத்தான்.
காலை மணி 10 , வீட்டின் காலிங் பெல் தலையில் அறைந்தது போல் அடிக்க, தூக்கத்தில் இருந்து திடும் என எழுந்து உட்கார்ந்தான் கார்த்திக். நேற்று இரவு நண்பர்களுடன் அடித்த சரக்கு இன்னும் போதை இறங்க வில்லை. கீழே கிடந்த லுங்கியை எடுத்து இடுப்பில் சுற்றி கொண்டு, கண்ணாடியை பார்த்து தலை முடியை சரி செய்து கொண்டு, கதவை திறந்தவன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தான்.வாசலில் நின்றது வாசு அவனுக்கு பின்னால் பானு. தாறு மாறாக உடை உடுத்தி இருந்தவனை பார்த்து பானு தலை குனிந்தாள், "நான் வேணா அப்புறம் வரவா" என்று கேட்டவளை, "ஒன்னும் இல்லை ஹால்ல ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க இதோ வந்துடுறேன்" என்று சொல்லி வாசு, பானு வுக்கு சேரை காண்பித்து அமர சொல்லி விட்டு புயல் வேகத்தில் பல் விளக்கி குளித்து விட்டு வந்தான். 

இன்று காலை வாசுவை வர சொன்னதை மறந்து விட்டு இப்படி கதவை திறந்ததை நினைத்து வெட்கப்பட்டான். பானு தவறாக நினைத்து கொள்வாளோ என்று அச்சப்பட்டான். உடைகளை மாற்றி கொண்டு, தலை வாரி, பௌடர் இட்டு கொண்டு, 10 நிமிடத்தில் ஹாலுக்கு வந்தான். 
அது வரை அவன் ஹாலில் இருந்த கதை புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தாள் பானு. சிறிய நூலகம் போல் இருந்த அந்த அறையின் சுவற்றில் இருந்த அலமாரிகளில் எழுத்தாளர்கள் அகிலன், சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன், எண்டமுரி விரேந்த்ரநாத், டாக்டர் மு.வ கதைகள் அடுக்கி இருக்க ஆச்சர்யத்துடன் அவற்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தாள்.


ஹாலுக்குள் நுழைந்த கார்த்திக் அவள் புத்தகங்களை புரட்டி கொண்டு இருப்பதைபார்த்து மெல்லிய புன்னகை பூத்தான். ஹாலுக்குள்  வந்த கோகுல் சந்தன பௌடரின் மணத்தை உணர்ந்த  பானுவின் நாசிகள், கார்த்திக் வந்ததை உணர்ந்து திரும்பி பார்த்தாள்.
அவனை பானு சிரித்துகொண்டே "நீங்க கணக்கு ஆசிரியரா இல்லை தமிழ் ஆசிரியரா" என்று தலை சாய்த்து கொண்டே கேட்க, கார்த்திக் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். "கணக்கு என் தொழில், தமிழ் என் உயிர்" என்று சொல்லி விட்டு, "நான் எழுதிய சிறு கதைகள் குமுதம், அனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. எழுதினத விட திரும்பி வந்தது தான் அதிகம்" என்று சொன்னான்.

வாசுவிடம் "என்ன வாசு நான் முதல்ல ஒரு டெஸ்ட் தரேன். அத எழுது. அதோட ரிசல்ட்ஐ பாத்துட்டு அடுத்த டெஸ்ட் வேணுமா இல்லையான்னு முடிவு பண்ணுறேன்". டெஸ்ட் கொடுத்து விட்டு அவனை உள்ளே உட்கார்ந்து எழுத சொன்னான். டெஸ்ட் முடிய 30 நிமிடம் ஆகும் என்பதால், பானுவுடன் பேசலாம் என்று, "பானு நீங்க ஏன் வாசுவுக்கு சொல்லி தர கூடாது" என்று கேட்க, அவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்து, "ஏன் சார் கிண்டலா, எனக்கு தெரிஞ்சா உங்ககிட்ட எதுக்கு டியூஷன் கேட்டு வர போறோம்" என்று பதில் சொல்லி கொண்டே"ஆமா நீங்க இன்னும் சாப்பிடலையா" என்று கேட்டாள்.

"இல்லைங்க பானு, இன்னிக்கு சண்டே, அதுனால ஒரு 11 மணிக்கு மேல போகலாம்னு பாத்தேன். ஆனா இப்போ போக முடியாதுன்னு நினைக்கிறேன்". ஏன் என்று பானு கேட்க, "இல்ல இந்த டெஸ்ட் எல்லாம் முடிய 12 மணிக்கு மேல ஆய்டும்", என்று சொல்லி யோசித்தான்

"கவலைபடாதிங்க, ஒரு 10 நிமிஷத்தில உங்களுக்கு தோசை வார்த்து எடுத்து வரேன்" என்று சொல்லி, "பானு வேணாம்ங்க" என்று தடுத்த கார்த்திக்கை பார்த்து கண்ணசைத்து விட்டு அவளது ஸ்கூட்டியில் பறந்தாள்.

பானு திரும்ப 20 நிமிஷத்துக்கு மேல் ஆனது. ஸ்கூட்டியில் இறங்கி பரபரப்பாக ஹாலுக்குள் நுழைந்து, ஒரு பிளேடை பேகில் இருந்து எடுத்து,அதில் நாலு தோசையை இட்டு, பருப்பு சட்னி வைத்து "இந்தாங்க சாப்பிடுங்க" என்று சொல்ல, அவனுக்கு தாங்க முடியாத ஆனந்தம். தனக்கு பசி என்றால் யாரும் இதுவரை பேச்சுக்காக கூட பசிக்கிதா என்று கேட்டதில்லை. இந்த பெண்ணை சந்தித்து கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை,ஏன் இந்த அளவுக்கு அன்பு காண்பிக்கிறாள். அவன் கண்கள் பனித்தன. கண்களை அவள் அறியாமல் துடைத்து கொண்டு, தோசையை பிய்த்து சாப்பிட்டான். "சாரிங்க, சட்னி அரைக்க நேரம் ஆகிடுச்சு. உப்பு காரம் எல்லாம் கரைக்டா இருக்கா" என்று கேட்டாள். தோசை வாயில் இருக்க,அருமையா இருக்கு என்று கை அசைத்து தெரிவித்தான் கார்த்திக்.


அதற்குள் டெஸ்ட் எழுதி விட்டு வாசு வர, அவனை வெயிட் பண்ண சொல்லி ப்ளேட் மற்றும் டிபன் பாக்ஸ் கழுவி வருவதாக சொல்ல, "இல்லை நான் வீட்டில் கழுவிக்கிறேன்" என்று சொல்லி பிடிவாதமாக அவனிடம் இருந்து ப்ளேட், டிபன் பாக்ஸ் அனைத்தையும் பிடுங்கி அவளது பையில் வைத்து கொண்டாள். அவளின் அன்புக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று தெரியாமல், கை கழுவி விட்டு, வாசுவுக்கு அடுத்த டெஸ்ட் எழுத கொடுத்து விட்டு, அவளிடம் "உங்களுக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்க, "எனக்கு அஜித் பிடிக்கும்,மாதவன் பிடிக்கும், சினிமா பாட்டு பிடிக்கும்" என்று ஆரம்பித்தாள். "ஓகே, உங்களுக்கு கதை புத்தகம் படிக்க பிடிக்குமா" என்று கேட்க, "ஒ எனக்கு பாக்கெட் நாவல் பிடிக்கும், மத்தபடி நீங்க வச்சிருக்கிற புக்ஸ் நான் இதுவரை படிச்சதில்லை" என்றாள். 

அவளுடன் பேசியவாறே வாசுவின் இரண்டு டெஸ்ட் பேப்பர்களையும் திருத்தி விட்டு, அவனிடம் என்ன பிரச்சினை இருக்கு என்று கண்டு பிடித்தான். கொஞ்சம் விளையாட்டு புத்தியும், புரியாத போது அவனை ஆசிரியர்கள் அடித்த அடியும் வாசுவுக்கு கணக்கு பாடத்தை கண்டாலே அலற வைத்தன. அவனுக்காக சில கணக்கு பாடங்களை மாற்ற வேண்டி இருப்பதை உணர்ந்து, அடுத்த நாள் காலை 10மணிக்கு வர சொல்லி விட்டு, "இப்போதைக்கு கிளம்புங்க" என்று சொல்ல வாசு, பானு இருவரும் கிளம்ப, பானு அவனிடம் "சார் எனக்கு படிக்க எதாவது புக் தாங்க" என்று சொல்லி, சுஜாதா கதையை (பிரிவோம் சந்திப்போம்) வாங்கி விட்டு வாசுவுடன் ஸ்கூட்டியில் கிளம்பினாள் பானு. 

தொடர்ந்த வாரங்களில் வாசுவின் கணக்கு படிப்பில் முன்னேற்றம் தெரிந்தது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்றும் அவனுக்கு கார்த்திக் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க, அவனுக்கு துணையாக பானுவும் வந்தாள். 

இப்போது பானுவுக்கு வாசுவின் கணக்கு வாத்யார் என்ற பயம் போயி தனக்கு ஒரு நல்ல நண்பன் கார்த்திக் என்று தோன்றியது. 

அவன் கொடுத்த கதைகளை படித்தாளோ இல்லையோ, அவனுக்காக அவனை தேடி வர ஆரம்பித்தாள். கார்த்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் ஈர்ப்பு அதிகமாக, அவள் வாசுவுடன் வரவில்லை என்றாலோ, தாமதம் ஆனாலோ, அவனுக்கு தவிப்பு அதிகமானது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இரண்டு மாதங்களாக தொடர அவள் தன்னை காதலிக்கிறாளா, இல்லையா என்று அறியாமல் குழம்பி போயிருந்தான் கார்த்திக். 

அவள் பேசும் போது என்ன பேசினாலும் தன்னை மறந்து சிரித்தான், அவளது கண்கள் அவனை பார்த்து குறும்புடன் கண் சிமிட்டும் போது தன்னை மறந்து போனான். 


இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.

இன்று காலை 9 மணிக்கு அவனது செல்போனில் ஒரு கால் வர தெரியாத நம்பராக இருந்ததால் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே எடுத்தான். அந்த பக்கம் பானுவின் குரல், "என்ன தமிழ் ஆசிரியரே நலமா? உங்க கூட நான் கொஞ்சம் தனியா பேசணும். நாம காலனிக்குள்ள பேசி யாராவது பார்த்து விட்டால் எனக்குத் தான் சிக்கல், வேற எங்காவது மீட் பண்ணலாமா? சரிஎனக்கு ஒரு இடம் தோணுது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நாம மருதமலைல சந்திக்கலாம்". 


பானு தொடர்ந்தாள் "காலை 9 மணிக்கு ஸ்ரீவள்ளி பஸ் ஸ்டாப்ல 70 ஆம் நம்பர் பஸ்சில் ஏறுங்க, நானும் அதில் வருவேன். மற்றவை நேரில்" என்று குறும்புடன் சொல்ல, படபடக்கும் இதயத்துடன் 8 . 30 மணி அளவில் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றான். 9 மணிக்கு மருதமலை செல்லும் 70 ஆம் நம்பர் பஸ் வர இன்னும் பானுவை காணவில்லை என்று தவிக்க ஆரம்பித்தான். பஸ் கிளம்பி செல்ல பானு வராததால் அவனும் பஸ்சில் ஏறவில்லை. 

அடுத்த பஸ் 92 ஆம் நம்பர் பஸ் 9 . 30 க்கு, நேரம் நெருங்க நெருங்க அவனுக்கு பதட்டம் தொற்றி கொண்டது, நல்ல வேலை பானு தூரத்தில் வருவது தெரிந்தது, அவள் பஸ்ஸ்டாப் வர பஸ்சும் வர சரியாக இருந்தது முன்பக்கம் ஏறிய பானு அவனுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். 

பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால் இருவரும் பேச முடியவில்லை. லாலி ரோடு வழியாக, பாரதியார் யுனிவெர்சிட்டியை பஸ் நெருங்கிய போது பானுவுக்கு இடம் கிடைத்தது. இரண்டு சீட் கொண்ட இருக்கை, காலியாக இருந்ததால், அவனை அருகில் அமர சொன்னாள். 

கொஞ்சம் கூச்சத்துடன் கார்த்திக் பானுவுக்கு அருகில் அமர, பஸ் மருதமலை அடிவாரத்தை அடைந்தது. இருவரும் இறங்கி பேசி கொண்டே நடந்தனர். பானு கார்த்திக்கிடம், "என்ன சார் மலை மேல் நடந்து போகலாமா இல்லை கோவில் பஸ்ல போகலாமா?" என்று கேட்க. இருவரும் தனியாக இருக்கும் சந்தர்பத்தை நழுவ விடக் கூடாது என்று "நாம படி வழியே போகலாம்" என்றான்

"என்ன பானு நீங்க படிச்சு முடிச்சுட்டு என்ன பண்ண போறீங்க" என்று கேட்க, "எனக்கு மேல படிக்கிறதுல இஷ்டம் இல்லை. அதால எனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க, நீங்க எப்பிடி" என்று சொல்லி அவனை பார்த்து புன்னகை செய்தாள்.கார்த்திக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான். "என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க"என்று கேட்க. "நீங்க நல்ல கணக்கு வாத்தியார், வாசுவுக்கு நீங்க சொல்லி கொடுக்கும் விதத்தில் இருந்து அவன் இந்த வருஷம் கட்டாயம் பாஸ் பண்ணுவது மட்டுமல்ல, நல்ல மார்க்கும் எடுப்பான் என்ற நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு யாரும் இல்லை, தாத்தா மட்டும் கிராமத்தில் இருக்கிறார்.உங்களுக்கு நிறைய கதை படிப்பதற்கும், கொஞ்சம் கதை எழுதுவதற்கும்பிடிக்கும். எனக்கு உங்ககூட பேசிகிட்டு இருக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்". 

சிறு குழந்தை போல அவள் சிரித்து பேசுவதை கண் கொட்டாமல் பார்த்து வியந்தான். பானு வளர்ந்து இருந்தாளே தவிர அந்த அளவுக்கு விபரம் பத்தவில்லை. இந்த வயதில் வருவதோ ஒரு ஈர்ப்பு, இன கவர்ச்சி. இது எல்லாம் கார்த்திக்கு புரிந்தாலும், அவனுக்கு என்னவோ பானு அருகில் இருப்பதில் ஒரு சந்தோஷம். ஒரு அழகான பெண் அருகில் இருந்தால் பருவவயதில் எந்த ஆணுக்கும் சந்தோஷமே. 

மருதமலை முருகன் கோயிலை அடைந்து பாம்பாட்டி சித்தர் மற்றும் விநாயகரை தரிசித்து விட்டு, சுப்ரமணியரை தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். சிறிது நேரத்தில் மூலவரை எட்ட, மூலவரிடம் தான் பானுவை மனமார விரும்புவதாகவும், அவளை திருமணம் செய்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என்றும் மனம் உருக வேண்டினான்.



தரிசனம் முடிந்த, பிறகு முன்னால் இருந்த பிரஹாரத்தில் அமர்ந்து இருவரும் பேசி கொண்டு இருந்தனர். பானுவிடம் "என்ன வேண்டி இருக்கீங்க?" என்று கேட்க, "வேற என்ன இந்த செமஸ்டர்ல அரியர் வராம இருக்கணும்னு தான்" என்று சிரித்து கொண்டே சொன்னாள். "நீங்க என்ன வேண்டிருக்கிங்க" என்று பதிலுக்கு கேட்க, "நல்ல வேலை கிடைக்க வேண்டும்" என்று வேண்டி இருப்பதாக சமாளித்தான்

"சரி என்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒன்னும் சொல்லாமல் வருகிறீர்களே" என்று கேட்க, "இல்லை சும்மா தான்" என்று சொல்லி விட்டு, அவன் காதருகில் "ஏன், என் கூட தனியா வர கசக்குதா" என்று கேட்டு விட்டு அவன் கண்களை பார்த்து மெல்லிய சிரிப்பு சிரித்தாள். "அய்யையோ அதல்லாம் இல்லீங்க, சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன்" என்று வழிந்து விட்டு, சரி பேச்சை மாற்றலாம் என்று, "சரி படிப்பு முடிஞ்சப்புறம் என்ன செய்ய போறீங்க என்று கேட்க, "கல்யாணம் தான், இப்பவே எனக்கு படிப்பு ஏற மாட்டேன் என்கிறது, அதுனால அப்பா கண்டிப்பா சொல்லிட்டாரு, படிப்பு முடிஞ்சவுடனே கல்யாணம்தான்னு, நீங்க சொல்லுங்க நான் அழகா இருக்கேனா, எனக்கு கல்யாண களை வந்திருச்சா" என்று கேட்க, "என்ன இவள் நம்ம கிட்டே அவ கல்யாணத்தை பத்தி கேக்குறா".

"உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பிடிக்கும்". 

"நல்ல வேலைல இருக்கணும், நல்லா சம்பாதிக்கணும், என்னை கண் கலங்காம பாத்துக்கணும், எல்லாத்துக்கும் மேல எங்க அப்பா அம்மாவுக்கு பிடிச்சிருக்கனும்". 

"நாமோ டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறோம், சம்பளமோ குறைவு. முதல்ல நல்ல வேலைல உக்காரணும், பின்னாடி நம்ம காதலை சொல்லனும்"னு முடிவு செய்தான்.

இருவரும் பேசி கொண்டே மலை அடிவாரம் வந்து, வீடு திரும்பினர் அன்று மாலை அவன் நண்பன் விஜயராகவன் தேடி வர, அவனிடம் இன்று நடந்ததை பற்றி சொல்ல விஜய் கவனத்துடன் கேட்டான். விஜயராகவன் பிறந்தது பாலக்காடில் என்றாலும் அவன் சிறியவயதில் தன் அக்கா வீட்டில் தங்கி படிக்க கோவைக்கு வந்து விட்டான். விஜயும் கார்த்திக்கும் அரசு பள்ளிகூடத்தில் படிக்கும் போதே நண்பர்கள்
"கார்த்திக் எனக்கு என்னமோ அந்த பொண்ணு கொஞ்சம் அவங்க அம்மா அப்பா கேட்டு நடக்கிற எடுப்பார் கை பிள்ளை மாதிரி தெரியுது,எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு" என்று சொன்னான். 

கார்த்திக் "டேய் அவ சின்ன பொண்ணுடா விபரம் பத்தலை மத்தபடி எனக்கு அவளோட வெகுளித்தனம் ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு முதல்ல ஒரு நிரந்தர வேலை தேடணும். எவ்வளவு நாள்தான் இந்த டுடோரியல்ஸ் கட்டி அழறதுன்னு தெரியலை", என்று சொல்ல

"சரி கவலைபடாதே பரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல 10 ஆம் வகுப்பு கணக்கு வாத்தியார் வேலை காலியா இருக்கு, ஆரம்ப சம்பளம் 3000ஆறு மாதம் கழித்து 4500 ஆக உயர்த்துவார்கள். எனக்கு ப்ரின்சிபலை தெரியும், அவர் இன்னிக்கு காலைல பேசிகிட்டு இருக்கும் போது ஏற்கனவே வேலைக்கு இருந்த அம்மணி கல்யாணம் பண்ணிட்டு நின்னுட்டாங்க. நல்ல ஆசிரியர் கிடைக்கலேன்னு தேடிக்கிட்டு இருக்கிறதா சொன்னார். அதனால உன்னை பார்க்க வந்தேன். நான் சொல்லி வைக்கிறேன். ஆனா இண்டர்வியூ ஒழுங்கா பண்ண வேண்டியது உன்னோட வேலை" என்று சொல்ல, "ஆனா உனக்கு டுடோரியல்ஸ் வருமானம் 5000 கிடைக்காம போய்டுமே" என்று சொல்ல, "அதுக்காக எப்பவும் அதை கட்டி அழ முடியுமா? எனக்கு நிரந்தர வேலை இப்போதைக்கு வேணும். எப்போ இண்டர்வியூ சொல்லு" என்று கார்த்திக் கேட்க, "நாளைக்கே அட்டென்ட் பண்ணனும்" என்றான் விஜய்.




No comments:

Post a Comment