Wednesday, July 8, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 3

அடுத்த சிலநிமிடங்களில் சத்யன் அவர்முன் இருந்தான், ராஜாராமன் அவனை பார்த்து “ தம்பி இவதான் இந்த வீட்டோட இளவரசி மான்சி, என்னோட ஒரே செல்ல மகள், இவ உங்களோட பெயரை கேட்டதுக்கு நீங்க சொல்லலையாம் அதனால ரொம்ப கோபமா இருக்கா, உங்க பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கங்க தம்பி” என்று அமைதியான குரலில் கூறினார்

அவருக்கு சரியென்று தலையசைத்த சத்யன் திரும்பி மான்சியை பார்த்தான், அவள் வீம்பாக திமிராக தன் மார்புக்கு குறுக்கே கைக்கட்டிக் கொண்டு முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு இருக்க, சத்யனின் முதுகு விறைக்க நிமிர்ந்தான்

“ என் பெயர் சத்யன், எம்ஏ தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன், அலங்காநல்லூர் பக்கத்தில் பாலமேடு என் சொந்த ஊர், அப்பா அம்மா ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க, பெரிய தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சு, என் அப்பாவும் நானும் விவசாயம் பார்க்கிறோம், நான் இதுவரை எங்கயுமே வேலைக்கு போனதில்லை இப்பத்தான் முதல்முறையா வேலைக்கு வந்திருக்கேன், இவ்வளவுதான் நான்” என்று சத்யன் நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்ல


மான்சிக்கு அவன் தன்னை நக்கல் செய்கிறானா, பெயரை மட்டும் கேட்டதுக்கு அவனை பத்தி இவ்வளவு டீடெயில்ஸ் சொல்றானே என்று அவனை திரும்பி பார்த்தாள்,

அவன் நெஞ்சை நிமிர்த்தி அவளை நேர் பார்வை பார்த்தான், இப்போது மான்சிக்குத்தான் அவனை பார்க்க முடியவில்லை, முகத்தை திருப்பிக்கொண்டாள்

சத்யன் அதற்க்குமேல் அங்கே நிற்க்காமல் “ சார் நான் வெளியே இருக்கேன்” என்று நகர்ந்தான், அப்போது ஒருநிமிஷம் என்ற மான்சியின் குரல் அவனை நிறுத்தி திரும்பி பார்க்கவைத்தது

மான்சி அவன்முன் கை நீட்டி “ ஐ ஆம் மான்சி, பிஈ தேர்ட் இயர் ஸ்டூடண்ட், ஃப்ரம் கேவிஎன் இன்ஜினியரிங் காலேஜ்” என்றாள் அமைதியாக

சத்யன் அவள் முகத்தை பார்த்தான், பிறகு முகத்தில் புன்னகையோடு “ ம் சரிங்க” என்று சொல்லிவிட்டு வெளியே போனான்

இவ்வளவு நேரம் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தவன் சட்டென புன்னகைத்ததும் மான்சியின் மனதில் அந்த புன்னகை அழுத்தமாக பதிந்தது, கத்தையாய் இருந்த கறுத்த மீசைக்கு கீழே, தட்டையாக இருந்த தடித்த உதடுகளுக்கு நடுவே, வெண்மையாக இருந்த பற்களின் பளீரிடும் சிரிப்பு அவளை பெரிதும் கவர அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்

பிறகு தனது அப்பாவிடம் திரும்பி “ டாடி நான் எப்புடி காலேஜ் போறது, மாணிக்கம் மறுபடியும் எப்பத்தான் வேலைக்கு வருவாரு” என்று கால்களை உதறி சலித்துக் கொண்டாள்

“ என்னம்மா பண்றது அம்மாவுக்கு மேலுக்கு சொகமில்லைனு சொல்லிட்டு போனான் இன்னும் ஆளை காணோம், நான் போய்ட்டு உடனே வண்டியை அனுப்புறேன் நீ காலேஜுக்கு போம்மா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்

என்ன காரணம் என்று புரியாமலேயே மான்சியின் முகம் பட்டென்று மலர “ சரிப்பா நான் ரெடியாகுறேன் நீங்க உடனே வண்டி அனுப்புங்க” என்று உள்ளே ஓடினாள்

சத்யனின் நேர்த்தியான டிரைவிங் ராஜாராமனுக்கு பிடித்தது, “ ஏம்ப்பா சத்யன் நீங்க வேற ஏதாவது படிப்பு செலக்ட் பண்ணி படிச்சிருக்கலாமே” என்று சம்பிரதாயமாக விசாரித்தார்

“ இல்லீங்க எனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும், அதுவுமில்லாம வேற படிப்பு படிக்க அவ்வளவாக வசதியில்லை” என்று சத்யன் பணிவாக கூறினான்
சிறிதுநேரத்தில் மதுரை கீழமாசி வீதியில் இருந்த அந்த பெரிய ஜவுளிக்கடையின் முன் கார் நிற்க்க, சத்யன் வேகமாக இறங்கி ராஜாராமனுக்கு கதவை திறந்துவிட்டான்,

ராஜாராம் இறங்கி கொண்டு “ சத்யன் நீங்க சீக்கிரமா போய் மான்சியை காலேஜுக்கு கூட்டிட்டு போங்க” என்று உத்தரவிட்டு விட்டு உள்ளே போனார்
அந்த பெரிய கடையின் அழகை ரசிக்ககூட நேரமில்லாது சத்யன் உடனே காரில் ஏறி கிளம்பினான்


கார் ராஜாராமின் வீட்டில் போய் நிற்க்க மான்சி அதற்க்காகவே காத்திருந்தது போல ஓடிவந்து காரில் ஏறினாள், சத்யன் அவளை திரும்பியும் பார்க்காமல் காரை எடுக்க மான்சிக்கு அவன் தன்னை பார்க்கவில்லையே என்பதைவிட தன்னுடைய அலங்காரத்தை பார்க்கவில்லை என்பதுதான் ஆத்திரமாக வந்தது

“ ஹலோ என்ன சார் திரும்பி பார்க்கமாட்டீங்களா, அதென்ன ஒரே மாதிரி முகத்தை வச்சுகிட்டு இருக்கீங்க” என்று நக்கலாக கேட்டாள்

அவளை திரும்பி பார்த்த சத்யன் “ என் முகமே அப்படித்தாங்க” என்றான், ஆனால் ஒரு விஷயத்தை சத்யன் கவனிக்க தவறவில்லை, அது மான்சி ஒருமையில் இருந்து பன்மைக்கு மாறியதைத் தான்

“ இல்லியே கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கூட எங்க வீட்ல அழகா சிரிச்சீங்களே” என்றாள் மான்சி

சத்யன் தனக்கு முன்னால் சென்ற ஒரு காரை கடந்து செல்லும் முயற்சியில் மான்சியின் பக்கம் கண்ணாடியை பார்த்தான், அப்போது பக்கத்தில் இருந்த மான்சி அழகு அவனை மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டியது

மனதை கட்டுப்படுத்த முடியாது ஒருகட்டத்தில் சத்யன் நேரடியாக மான்சியை திரும்பி பார்த்தான் . பிஸ்தா பச்சையில் முக்கால் கை சட்டையும் அடர் நீலத்தில் ஜீன்ஸும் போட்டிருந்தாள், காதில் வைரத்தில் சிறு தொங்கட்டானும், அதே வைரத்தில் டாலர் வைத்த சிறிய செயினும் போட்டிருந்தாள், சத்யனுக்கு வைரத்தை பற்றி தெரியாவிட்டாலும் அதன் ஜொலிப்பில் இருந்து அது வைரமாகத்தான் இருக்கும் என்று யூகித்தான்

அவன் தன்னை பார்க்கிறான் என்ற நினைப்பே மான்சியின் மனதை உற்சாகத்தில் பறக்கவிட, அவன் பார்க்க வசதியாக அவன் பக்கமாக ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு அவனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள்

“ நீங்க ஏன் எம்ஏ தமிழ் படிச்சீங்க வேற ஏதாவது செலக்ட் பண்ணி படிச்சிருக்கலாமே” என்று மான்சி கேட்க

இப்போது சத்யனுக்கு மனதில் ஒரு எரிச்சல் மூண்டது, அப்பாவும் பொண்ணும் ஒரே கேள்வியை கேட்க்கிறாங்களே, எனது படிப்பு இவர்களுக்கு கேள்விக்கேட்கும் நிலைமையில் இருக்கிறதா என்று மனதில் நினைத்தவன் “ எனக்கு பிடிச்சது அதனால படிச்சேன், என்று எரிச்சலுடன் கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொன்டான்

மான்சிக்கு ஏன் கேட்டோமோ என்று ஆகிவிட்டது, அவன் முகத்தை திருப்பி கொண்டது காரணமின்றி அவளை மனதில் ஒரு கவலையை தோற்றுவித்தது

இதுவரை யாருக்குமே பணிந்து போகதா மான்சி " ஸாரி நான் சும்மாத்தான் கேட்டேன், எம்ஏ தமிழ்கூட நல்ல படிப்புதான்,நோ ப்ராப்ளம்" என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் கூற

சத்யனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, தனது கவனத்தை சாலையில் வைத்திருந்தான்

அவன் தன்னை திரும்பி பார்க்கவில்லை என்றதும் மான்சி " அதான் ஸாரி சொல்லிட்டேன்ல்ல அப்புறமென்ன " என்று அவன் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றாள்

ஆனால் சத்யன் அவள் பக்கம் திரும்பவில்லை,அப்போது கார் கல்லூரியை நெருங்க, சத்யன் பேசாதது மான்சியின் மனதில் வெறுமையை உணரவைத்தது " நீங்க ஏன் இப்படி கோபமாவே இருக்கீங்க, உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் ஸாரி கேட்டதில்லை," என்றாள் வருத்தமான குரலில்..

இதற்க்கும் சத்யனிடம் இருந்து பதில் இல்லை, ரொம்ப கவனமாக கார் ஓட்டுபவன் போல காட்டிக்கொண்டான்

" நான் காலையில உங்ககிட்ட அப்படி பேசினதை வச்சு என்னை ரொம்ப திமிர்பிடிச்ச பொண்ணுன்னு நெனைக்கிறீங்களா, நான் உங்க பேரை கேட்டப்ப நீங்க தான பதில் சொல்லலை அதனால்தான் எனக்கு கோபம் வந்துருச்சு, ஆனா இப்போ எல்லாமே சரியா போச்சு " என்று காலையில் நடந்ததற்கு விளக்கம் கூறுவதுபோல் மான்சி பேச

அப்போது கார் கல்லூரியில் சென்று நின்றது, மான்சிகாரைவிட்டு இறங்கி, தான் இவ்வளவு பேசியும் தனக்கு பதில் கூறாது இருந்த சத்யன் மேல் இருந்த கோபத்தை கார் கதவில் காட்டி காரை அறைந்து சாத்தினாள்

பிறகு காரை சுற்றி சத்யன் இருக்கை அருகில் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து " உங்களுக்கு என்னதான் ப்ராப்ளம்னு தெரியலை, ஆனா என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க, என்னை யாருமே இதுவரைக்கும் இப்படி நடத்தினதில்லை," என்று வருத்தமாக கூறிவிட்டு காரைவிட்டு விலகிச்செல்ல

" கொஞ்சம் இருங்க" என்ற சத்யனின் குரல் அவளை தடுத்து நிறுத்த திரும்பி வந்து மறுபடியும் குனிந்து அவனை ஆர்வத்துடன் பார்த்தாள்

" நீங்க யாருக்காகவும் மாறவேண்டாம், நான் உங்கவீட்டு கார் டிரைவர், ஒரு டிரைவர்கிட்ட எப்படி பழகுவீங்களோ, அந்த மாதிரியே பழகுங்க போதும்" என்று சத்யன் சொல்ல

" யார்கிட்ட எப்படி பழகனும்னு எங்களுக்கு தெரியும், யாரும் எனக்கு அட்வைஸ் பண்ணத் தேவையில்லை" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் கல்லூரிக்குள் நுழைந்தாள் மான்சி 



" காதல் கானல் நீரைப்போல....

" அருகில் செல்லச் செல்ல....

" காணாமல்ப் போய்விடும்....

" காதல் கானல் நீர் என்று தெரிந்தும்....

" தாகத்துடன் நெருங்குகிறேன்!

மான்சி கல்லூரிக்குள் நுழைவதையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்த சத்யன், முகத்தில் லேசான புன்னகை படர, யார் இவள் எங்கிருந்து வந்து என் மனதை இப்படி சலனப்படுத்துகிறாள், இவள் திமிர் பேச்சுக்கும் இவளின் மன்னிப்புக்கும் கொஞ்சம் கூட பொருந்தவில்லையே. பணக்கார பெண்களே இப்படித்தானோ, என்று நினைத்தவாறே காரை கிளப்பினான்

சத்யன் மான்சியின் வீட்டுக்கு வந்தபோது, அவள் அம்மா நீலவேணி மார்க்கெட் செல்வதற்காக தயாராக இருந்தாள், நீலவேணி இவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக்காரி என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள், அவ்வளவு எளிமையாக இருந்தாள்,

இவர்கள் இருவருக்குமா மான்சி பிறந்தாள் எனெறு சத்யனுக்கு சந்தேகம் வருமளவுக்கு மான்சிக்கு அவள் பெற்றொருக்கும் வித்தியாசமிருந்தது

நீலவேணி கையில் ஒரு பெரிய பையுடன் வீட்டுக்குள் இருந்து வர, சத்யன் காரைவிட்டு இறங்கி நின்றான்

காரின் அருகே வந்த நீலவேணி, சத்யன் கார் கதவை திறந்துவிட உள்ளே அமர்ந்தாள், “ மார்கெட் போகனும் தம்பி. உங்களுக்கு வழி தெரியுமா ” என்று சத்யனிடம் கேட்க

ம் வழி தெரியும்மா. நான் படிச்சது மதுரையில தான் மேடம்” என்று சத்யன் சொன்னதும்

“ மேடம்னு எல்லாம் கூப்பிடாதீங்க தம்பி சும்மா அம்மான்னு கூப்பிடுங்க, அதான் வீட்டுல எல்லாருக்கும் பழக்கம்” என்று நீலவேணி புன்னகையுடன் கூற,

“ சரிங்கம்மா இனிமே அப்படியே கூப்பிடுறேன். காலையில சார் எதுவுமே சொல்லலை, யாருக்கு எந்த டைம்ல கார் தேவைப்படும்னு எதுவுமே தெரியலை” என்று சத்யன் கேட்டான்

“ தம்பி நம்ம வீட்டு இன்னொரு டிரைவர் மாணிக்கம் லீவுல சொந்த ஊருக்கு போய்ட்டார், அவர் வர்றவரைக்கும் உங்களுக்கு ரொம்ப சிரமம்தான், காலையில அய்யாவை கொண்டு போய் கடையில விட்டுட்டு வந்து மான்சியை காலேஜ் கூட்டிட்டு போகனும், அப்புறம் வீட்டுக்கு வந்து என்னை மார்கெட் கூட்டிட்டு போகனும், மறுபடியும் அய்யாவை மதியம் சாப்பாட்டுக்கு அழைச்சிட்டு வரனும், அப்புறம் மூன்றறை மணிக்கு மான்சியை காலேஜ்ல இருந்து கூட்டிட்டு வரனும், அப்புறமா அய்யாவை ஆறு மணிக்கு கடைக்கு கூட்டிட்டு போகனும், மறுபடியும் நைட் வீட்டுக்கு கூட்டிட்டு வரனும், இந்த சிரமம் இன்னும் நாலு நாள்தான், அப்புறம் மாணிக்கம் வந்துட்டா அவன் அய்யாவுக்கு கார் டிரைவிங் பண்ணுவான், நீங்க வீட்ல இருந்து மத்தவங்களுக்கு டிரைவிங் பண்ணா போதும்” என்று ஒரு நீண்ட விளக்கமாக நீலவேணி கூறியதும்

சத்யனுக்கு மலைப்பாக இருந்தது, அப்போ நாம எப்போ வீட்டுக்கு போறது, ஜவுளிக்கடை என்றாலே எப்படியும் இரவு பத்து மணிக்கு மேல ஆகும், அப்புறமா எப்போ வீட்டுக்கு போறது, மறுபடியும் அங்கருந்து காலையில ஆறு மணிக்கு கிளம்பினா தான் இங்கே வர சரியாக இருக்கும், என்று யோசித்தவாறே சத்யன் காரை செலுத்த

அவன் மனதை படித்தவள் போல நீலவேணி “ என்ன தம்பி இது என்னடா வேலை இவ்வளவு கஷ்டமா இருக்குன்னு நெனைக்கிறீங்களா, இந்த நாலு நாளைக்கு மட்டும் நீங்க இங்கயே வாட்ச்மேன் கூட தங்கிக்கங்க, அதுக்கப்புறம் மாணிக்கம் வந்ததும் நீங்க நைட் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிரலாம்” என்று யோசனை சொன்னாள்




சத்யனுக்கு நீலவேணி சொல்வதுதான் சரியெனப் பட்டது, சாயங்காலமா எங்கயாவது எஸ்டிடி பூத்ல இருந்து சரவணன் அண்ணனுக்கு ஒரு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டா, அண்ணே அப்பாருகிட்ட சொல்லிடும், அப்படியே காலையில யாரையாவது மாத்து துணி எடுத்துட்டு வரச்சொல்லனும், என்று அவன் எண்ணிக்கொண்டிருக்க மார்க்கெட் வந்துவிட்டது

பிறகு சத்யன் நீலவேணியை வீட்டில் விட்டுவிட்டு, ஜவுளிக்கடைக்கு போய் ராஜாராமனை அழைத்து வந்தான், அவரை வீட்டில் விட்டுவிட்டு மாலை சாப்பாட்டுக்காக அவரிடம் ஹோட்டலுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினான்

“ கொஞ்சம் இருப்பா சத்யன்” என்று அவனை தடுத்த மாணிக்கம் வர்றவரைக்கும் நீங்க வீட்டுலயே சாப்பிட்டுக்கலாம், அப்புறமா ஹோட்டல் போய் சாப்பிடு”, என்று ராஜாராம் கூற

“ இல்லங்க சார் எனக்கு யார் வெளியார் வீடுகளில் சாப்பிட்டு பழக்கம் இல்லை, அதோட நீங்க இனிமேல் என்னை வா போ அப்படின்னே கூப்பிடுங்க” என்று கூறிவிட்டு சத்யன் ஹோட்டலுக்கு கிளம்பினான்

அவன் போவதையே பார்த்த ராஜாராமனுக்கு சத்யனின் பேச்சும் நடத்தையும் அவரின் இளமை காலத்தை நினைவுபடுத்தியது , இவனைப் போலவேதான் அவரும் இருந்தவர் என்பதால், முகத்தில் புன்னகையுடன் அவன் போவைதை பார்த்துவிட்டு சாப்பிட டைனிங் ஹாலுக்கு போனார்

சாப்பிட்டு விட்டு வந்த சத்யன் வாட்ச்மேனுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தான், அப்போது வீட்டுக்குள் இருந்து வந்த ஒரு வேலைக்காரன் கல்லூரிக்கு சென்று மான்சியை அழைத்துவருமாறு நீலவேணி சொன்னதாக சொல்லிவிட்டு போனான்

சத்யன் உடனே காரை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு விரைந்தான், காரை கல்லூரியின் வாயிலில் நிறுத்திவிட்டு இறங்கி கல்லூரிக்குள் போய் மான்சியை தேடினான், சற்று தொலைவில் மான்சி சில பெண்களுடன் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தாள்

சத்யன் அவளை காலையில் பார்த்தபோது எப்படி இருந்தாளோ அதேபோல் அப்போதுதான் மலர்ந்த ரோஜாவை போல புத்துணர்ச்சியுடன் இருந்தாள், இவனை பார்த்ததும் இதோ வருகிறேன் என்பதுபோல சைகை செய்துவிட்டு வேகமாக அவனை நோக்கி வந்தாள்

“ நீங்க ஏன் உள்ள வந்தீங்க. கார்லயே வெயிட் பண்ணவேண்டியது தானே” என்று சற்று கோபமாக அதட்டியவள், வந்த வேகத்தில் காரின் கதவை திறந்து முன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டாள்

சத்யனுக்கு அவள் ஏன் கோபப்படுகிறாள் என்றே புரியவில்லை, ஒருவேளை நாம அவள் காலேஜ்க்குள்ள போனதை கௌரவக் குறைச்சலா நினைக்கிறாளோ என்று நினைத்தவாறு காரை கிளப்பினான்.

கார் பயனித்து கொண்டிருக்க காருக்குள், காருக்குள் மான்சிக்கு பிடித்தமே இல்லாத ஒரு அமைதி நிலவியது, அவள் ஏன் தன்னை கல்லூரிக்குள் வரவேண்டாம் என்று சொன்னாள், என்ற கேள்வி மனதை போட்டு அழுத்தினாலும், அதை பற்றி அவளிடம் கேட்காமல் சத்யன் அமைதியாக கார் ஓட்டினான்

அந்த அமையை பொறுக்கமாட்டாத மான்சி “ நான் உங்களை ஏன் காலேஜ்க்குள்ள வரவேண்டாம்னு சொன்னேன் தெரியுமா” என்று அவனிடம் கேட்க

“ என்க்கெப்படி தெரியும் நீங்கதான் சொன்னீங்க, நீங்களே பதிலையும் சொல்லுங்க” என சத்யன் ஆர்வமே இல்லாதவன் போல பேசினான்

மான்சிக்கு முணுக்கென்று கோபம் வந்தது, என்ன இவன் பெரிய இவனாட்டம் இவ்வளவு அலட்சியமா பேசுறான், என்று கோபம் வந்தாலும் ஏனோ அந்த கோபத்தை அவனிடம் செயலாக்க அவளால் முடியவில்லை காரணமேயில்லாமல் அவனிடம் வழிய வழிய போய் விழுந்தது மனது


“ அது வந்து இப்போ என்கூட இருந்தாளுங்க இல்ல என்னோட ப்ரண்ட்ஸ், அவளுங்ககிட்ட இன்னிக்கு பூராவும் நான் உங்களைப்பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன், அதுக்கு அவளுங்க உங்களை பார்க்கனும்னு சொன்னாளுங்க, அவளுங்க எல்லாரும் உங்களை பார்க்கறதுல எனக்கு விருப்பம் இல்லை, அதனாலதான் ஏன் உள்ள வந்தீங்கன்னு கேட்டேன்,” என்று மான்சி சொல்ல

அமைதியாக கார் ஓட்டிக்கொண்டு இருந்த சத்யன் பட்டென திரும்பி அவளை பார்த்து “என்னை பத்தி உங்க பிரண்ட்ஸ் கிட்ட என்ன சொன்னீங்க, அவங்க ஏன் என்னை பார்க்கனும்னு சொன்னாங்க” என குரலில் வழிந்த கோபத்தை அடக்க முடியாமல் கொஞ்சம் உக்கிரமாக கேட்டான்

அவனின் உக்கிரமான குரல் மனதை சில்லென்று தாக்கி சிலிர்க்க வைத்தாலும் “ நான் சும்மாதான் உங்களை பத்தி சொன்னேன், என் வீட்டுக்கு புதுசா ஒரு டிரைவர் வந்திருக்காரு, அவரு நல்லா ஆறடிக்கு மேல உயரமா, அவரோட சிவப்பு கலர் வெயில் பட்டதால மங்கி ஒருமாதிரி காக்டெய்ல் கலரா இருக்கும், அப்புறம் அவர் உடம்பு நல்லா ஜிம் பாடி மாதிரி இருக்கும், ஆனா சிக்ஸ்பேக்கான்னு சட்டையை கழட்டி பார்த்தாதான் தெரியும்னு சொன்னேன்”

அவள் சொல்ல சொல்ல சத்யனின் முகம் ரௌத்திரமாக மாறிக்கொண்டு இருந்தது, ஆனால் அவள் அதை கவனிக்காமல் குழந்தை தனமாக தன் போக்கில் பேசிக்கொண்டே போனாள்

“ அப்புறம் தலையில நிறைய ஹேர் அடர்த்தியா அழகா சுருள்சுருளா இருக்கும், முகம் எப்பவுமே கடுமையாக இருக்குற மாதிரி தெரியும் ஆனா அவரோட கண்கள் எப்பவுமே சிரிக்கிற மாதிரி இருக்கும், அவரோட மீசை அப்புடியே பிடிச்சு இழுக்கலாம் போல கத்தையா இருக்கும், அவரோட உதடுகள் கிள்ளியெடுக்கலாம் போல தடியா இருக்கும், அப்புறமா” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் “ நிறுத்தங்க” என்ற சத்யனின் இரைச்சலான குரல் கேட்க கார் சாலையின் ஓரம் நின்றது

அவன் போட்ட இரைச்சலில் மான்சி கலவரத்தோடு அவனை திரும்பி பார்த்தாள்

காரை ஓரம் நிறுத்திய சத்யன் அவள் பக்கம் திரும்பி “ உங்க மனசுல என்னதான் நெனைச்சுகிட்டு இருக்கீங்க, என்னை பத்தி பேச நீங்க யாரு, அதுவும் உங்க ப்ரண்ட்ஸ் கிட்ட போய் இப்படியெல்லாம் சொல்லிருக்கீங்க, இது என்னை நக்கல் பண்றதுன்னு தானே அர்த்தம் , நான் வேலைக்கு வந்து இன்னும் இருபத்திநாலு மணிநேரம் கூட ஆகலை அதுக்குள்ள என்னை பத்தி பேச உங்களுக்கு என்ன இருக்கு, நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு,” என்று கோபத்தின் உச்சியில் இருந்து சத்யன் பேச

உண்மையில் மான்சி மிரண்டுதான் போனாள், என்ன சொன்னோம்னு இவன் இவ்வளவு கோபப்படுறான் என்று எண்ணியவாறு “ நான் உங்களை பத்தி தப்பா எதுவும் சொல்லலையே , புதுசா பார்த்த ஒருத்தரைப் பத்தி ப்ரண்ட்ஸ் கிட்ட பேசுறது தப்பு ஒன்னும் கிடையாதே, எங்க ப்ரண்ட்ஸ் எல்லாருமே அப்படித்தான் பேசுவோம்,அதைத்தான் நானும் சொன்னேன், ஆனா அவளுங்க எல்லாரும் உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க அது எனக்கு பிடிக்கலை அதனாலதான் நீங்க ஏன் காலேஜ்க்குள்ள வந்தீங்கன்னு கேட்டேன், இதில என்ன தப்பு" என்று மான்சி எதிர் கேள்வி கேட்டாள்

சத்யனுக்கு அவள் பேச்சே புரியவில்லை, இவள் தெரிஞ்சு தான் பேசுறாளா இல்லை தெரியாமல் குழந்தைத்தனமா பேசுறாளா, புதுசா சந்திச்ச ஒருத்தனை பத்தி இப்படி பேசுவது தப்புன்னு இவளுக்கு ஏன் புரியலை, ஒருவேளை இது பணக்கார பெண்களின் ஹாபியா, என்று மனதில் எண்ணமிட்ட வாறு அவளை பார்த்தவனுக்கு, அவள் கடைசியாக சொன்ன ஒருவிஷயம் மனதில் ஆழமாக பதிந்தது

இவளுடைய தோழிகள் ஏன் என்னை பார்க்கக்கூடாது என்று நினைச்சா, அது ஏன் இவளுக்கு பிடிக்கலை, இது எதை குறிக்கிறது, என சத்யன் மனதில் நினைத்தாலும், அவன் மனம் வேறு எதை எதையோ கற்பனை செய்ய,ச்சீ முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படுற மாதிரி இதென்ன அற்பத்தனமான ஆசை என்று மனதுக்கு கடிவாளமிட்டான்

அதன் பிறகு சத்யன் எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி செலுத்த, அவன் அமைதியாகிவிட்டது மான்சிக்கு நிம்மதியாக இருந்தது

மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள் " காலையில அம்மா சொன்னாங்க நீங்க நாலுநாளைக்கு எங்க வீட்டுல தான் தங்கப் போறீங்கன்னு, அப்படின்னா எங்க தங்குவீங்க" என்று மெதுவாக கேட்டாள்

அவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன் " வாட்ச்மேன் ரூம்ல" என்றான்

" அது ரொம்ப சின்னதா இருக்குமே, எங்க வீட்டு மாடியில ஒரு ரூம் வேஸ்ட்டா இருக்கு, நான் வேனா எங்க டாடிகிட்ட சொல்லி நீங்க அங்க தங்க ஏற்பாடு பண்ணவா" என்று ஆர்வத்துடன் அவனை பார்த்து கேட்க

"அதெல்லாம் வேண்டாம் நான் வாட்ச்மேன் ரூம்லயே அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன் " என்று பட்டென சொன்னான் சத்யன்

அவன் முகத்திலடித்தாற்போல சொன்னதும் மான்சி கொஞ்சநேரம் அடங்கினாள், பின்னர் மறுபடியும் " உங்களோட மொபைல் நம்பர் என்ன" என்றாள்

" என்கிட்ட மொபைலே இல்லை" என்றான் சத்யன் சாலையில் கவனத்தோடு



" என்னது மொபைலே இல்லையா, இந்தகாலத்தில் மொபைல் இல்லாத ஒரே ஆண் பிள்ளை நீங்கதான், அப்புறம் நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட எப்படி பேசுவீங்க " என்று மான்சி திகைப்புடன் கேட்க

" எனக்கு யாரும் போன் பண்ணமாட்டாங்க,இதுவரை நானும் யார்கிட்டயும் போன் பேசவேண்டிய அவசியம் ஏற்படலை, அதனால எனக்கு மொபைல் தேவைப்படலை" என சத்யன் விருப்பமற்ற குரலில் கூறினான்

" அப்போ நான் எப்புடி உங்களை கான்டாக்ட் பண்றது" என மான்சி வருத்தமாக கேட்க

" நீங்க ஏன் என்னை கான்டாக்ட் பண்ணனும், அதுக்கு அவசியம் என்ன" என்று பட்டென கேட்டான்

மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்துவிட்டு, பின்னர் உடனே சுதாரித்து " ஆங் அதுவந்து நான் அடிக்கடி வெளியே ஷாப்பிங் போவேன், அப்புறமா ப்ரண்ட்ஸ் கூட வெளியே சுத்துவேன், அப்போ எல்லாம் உங்களை கூப்பிடனுமே அதனாலதான் கேட்டேன்" என சமாதானமாக கூறினாள்

சத்யன் காரின் வேகத்தை குறைத்துவிட்டு அவளை திரும்பி பார்த்து "நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க உங்க வீட்ல வேலை செய்ற எல்லார்கிட்டயுமே இப்படித்தான் பேசுவீங்களா, இல்லை என்கிட்ட மட்டும்தான் இப்படி பேசுறீங்களா" என கொஞ்சம் நக்கல் கலந்த குரலில் சத்யன் கேட்க

அதுவரை படபடவென பேசிய மான்சி இப்போது அமைதிகாத்து பிறகு அவனை பார்க்காமல் தலை குனிந்து " உங்ககிட்ட மட்டும்தான் இப்படி பேசுறேன், ஆனா ஏன்னு தான் என்க்கே தெரியலை" என்றாள் 



" என்னை மறப்பதற்காவது...

" ஞாபகம் வைத்துக்கொள்..

" இது காதலில் தோற்றவனின்..

" வேண்கோள்!

" தோல்விதான் வெற்றிக்கு முதல்படி ..

" இது பழமொழி!

" ஆனால் காதலுக்கு பொருந்தாது...

" இந்த பழமொழி!


No comments:

Post a Comment