Monday, July 20, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 7

ட்ரெயினில் ஆறாவது கோச்சில் ஏறிய ஜனனிக்கு ஜன்னல் ஓர சீட் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டு இருந்ததால் பிரச்னை இல்லை. தனது ஹோல்ட் ஆல் பேக்கை சீட்டுக்கு அடியில் தள்ளி விட்டு கையில் வைத்திருந்த ஆனந்த விகடனை புரட்ட ஆரம்பித்தாள். அதில் சினிமா நியூஸ் என்ற பக்கத்தில் போடப்பட்டு இருந்த "கார்த்திக்கின் புதிய ராணி" என்ற தலைப்பில் யவன ராணி படத்தை பற்றிய அப்டேட் இருந்தது. அதை படித்து பார்த்தாள். கொஞ்ச நேரம் கண்ணை மூடி இருக்கலாம் என்று நினைத்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக சீட்டில் சாய்ந்து ஓய்வு எடுக்க, இதமான காற்றில் தன்னை அறியாமல் உறங்கி விட்டாள். 

செல்போனில் sms வந்த ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தவளுக்கு காலியாக இருந்த சீட் முழுவதும் ஆட்கள் அமர்ந்திருக்க பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பதியினரையும் அவர்கள் மடியில் அமர்ந்திருந்த மூன்று வயது பெண் குழந்தையையும் கவனித்தாள்.குழந்தையின் குறும்புத்தனம் அவள் மனதை கவர்ந்தது. 

தனது செல்போனில் என்ன மெசேஜ் என்று அவள் செக் செய்ய, அது கார்த்திக்கிடம் இருந்து வந்த sms. படித்து பார்த்தாள். "ஜானு, பிரேக் பாஸ்ட் ஆயிடுச்சா", என்று sms படித்தஅவளுக்கு அப்போது தான் பசி உறைக்க தொடங்கியது. கை கடிகாரத்தை நோக்க அது 9 மணி காண்பித்தது. சாதாரணமாக கல்லூரி செல்லும் போது 8 மணிக்கு பிரேக் பாஸ்ட் உண்ணும் பழக்கம் இருந்ததால், இன்று அந்த நேரத்தை தவற விட்டதால், பசி அதிகமாக தெரிந்தது. தன் கைபையில் இருந்த இட்லி பொட்டலத்தை பிரித்து சாப்பிடஆரம்பித்தாள். கொஞ்சம் அந்த குழந்தைக்கும் கொடுக்க, அது வேண்டாம் என்று துப்பி வைத்து விளையாட தொடங்கியது.

 


சாப்பிட்டு கை கழுவி விட்டு, மீண்டும் தனது இருக்கைக்கு வந்து குழந்தையை வாங்கி மடியில் வைத்து கொண்டாள். குழந்தை அகிலாவோ அவளிடம் ஒட்டி கொண்டது. இடையே அம்மா பூரணி அழைக்க பேசி விட்டு, சென்னை சென்ட்ரல் சேர்ந்த உடன் அழைப்பதாக போனை வைத்து விட்டாள். அகிலாவிடம் விளையாடி கொண்டிருந்ததில் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. 

அரக்கோணம் தாண்டிய உடன் sms வந்தது. கட்டாயம் கார்த்திக் மாமாதான் என்று நினைத்து கொண்டே அவள் செல்போனை ஓபன் செய்ய, அவள் முகத்தில் புன்சிரிப்பு. அவள் நினைத்தது சரிதான். டிரைவர் சென்ட்ரலில் வெயிட் செய்வதாகவும் இறங்கியவுடன், VIPகார்பார்கிங் வர சொல்லி sms வந்திருந்தது. "ஓகே" என்றுஅவள்பதில்அனுப்ப, "டேக் கேர்" என்று பதில் வர செல்போனை மூடி கை பைக்குள் வைத்தாள்.பல பத்திரிகைகளில் பார்த்த போதும் கார்த்திக்கை 5 வருடங்களுக்கு பிறகு பார்ப்பது ஒரு த்ரில் அனுபவம்தான் என்று நினைத்து கொண்டாள். தன்னை பார்க்கும் கார்த்திக்கு கட்டாயம் அடையாளம் தெரியாது என்று எண்ணி மனதுக்குள் சிரித்தாள். 

சரியாய் மதியம் 1 . 50 மணிக்கு சென்ட்ரலில் ரயில் நுழைய, அவளுக்கு மேலும் ஒரு sms என்ன என்று திறந்து பார்க்க "வண்டிஎண்: 6666 ,பென்ஸ் கருப்பு கலர்" என்று sms வந்திருக்க, "எனக்கு எதுக்கு இந்த மாதிரி காஸ்ட்லியான கார் அனுப்பணும்" என்று கோபப்பட்டாள்.அதற்குள் ரயில் வந்து நிற்க இறங்கி மெதுவாக நடந்து சைடு கேட் வழியாக அருகில் இருந்த VIP பார்கிங் வர 5 நிமிடம் ஆனது. 

முதல் வரிசையில் மூன்றாவதாக கருப்பு கலர் பென்ஸ் நிற்க, காரின் பின்புறம் மட்டும் தெரிய, நடந்து முன்புற கதவை மெதுவாக தட்டினாள். டிரைவர் முகம் தொப்பியால் மூடி இருக்க, பதில் இல்லை. "சரி தூங்கி கொண்டு இருக்கிறான் போல" கதவை திறக்க முயற்சி செய்தாள். ஆச்சர்யமாக கதவு திறந்தே இருந்தது. திறந்து முன் இருக்கையில் சரிந்து ஹலோ என்று குரல் எழுப்ப, தொப்பியை தூக்கி கொண்டு கார்த்திக் "வெல்கம் டு சென்னை" என்று சொல்ல, இன்ப அதிர்ச்சியில் பதுமையாக சமைந்து நின்றாள்

"ஹேய் என்ன ஆச்சு?" என்று கேட்டு தன் கையை அவள் முகத்தின் முன்னால் அசைக்க, சுயஉணர்வுக்கு வந்த ஜனனி என்ன பேசுவது என்று தெரியாமல் "என்ன கார்த்திக் மாமா நீங்க எப்பிடி இங்க" என்று கேட்க "முதல்ல கார்ல ஏறு, பேசலாம்" என்று சொல்லி அவள் பேகை பின் சீட்டில் வைத்து விட்டு காரை அவசரமாக எடுத்து விரைந்தான்.

இன்னும் அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. கோபமும் வந்தது. அருகில் இருந்தவளை ஓரகண்ணால் பார்த்து கொண்டே வண்டி ஒட்டிய கார்த்திக்கு நம்ப முடியவில்லை. "ஐந்து வருடங்களில் அழகு பதுமையாக மாறி விட்ட ஜனனியை கண்டால் தமிழ் சினிமா உலகம் கனவு கன்னி என்று கொண்டாடி ஏற்று கொள்ளும். என்ன செய்வது. அவளுக்கு விருப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை.இப்போதைக்கு நம்மிடம் வேலை பார்க்கட்டும். ஒரு வேளை விருப்பம் இருந்தால் பிறகு பேசி கொள்ளலாம்" என்று முடிவு செய்து, "என்ன ஜனனி கோபமா இருக்கிற மாதிரி இருக்கு". "கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுங்க" என்று சொல்ல, ஓரத்தில் நிப்பாட்ட சீட்டில் இருந்து எழுந்து அவள் தலையில் குட்டுவது போல் சைகை செய்ய, "அம்மாடி. அடிக்காத, இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்" என்று சரண்டர் ஆனான் கார்த்திக். இருவரும் சிரித்து கொள்ள, "அந்த பயம் இருக்கட்டும்" என்று ஜனனி மிரட்டி விட்டு "இப்ப வண்டியை எடுங்க"என்று சொன்னாள். 

அவளுக்கோ 50 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரில் வலம் வரும் கார்த்திகை கண்டு சந்தோசமாக இருந்தது. கோவையில் ஒரு சைக்கிளை ஒட்டி கொண்டு அலைந்த அந்த கார்த்திக் எங்கே? இப்போது பென்ஸ் காரில் பறக்கும் இந்த கார்த்திக் எங்கே?. இப்போ பானு பார்த்தாள் அவள் நிலை எப்படி இருக்கும்? என்று யோசித்து பார்த்தாள். அவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்ப்பதை அறிந்த கார்த்திக் "என்ன இப்படி பார்க்கிற, நான் இன்னும் அதே பழைய கார்த்திக் மாமாதான் பழச மறக்கல, மறக்கவும் மாட்டேன்" என்று பல்லை கடித்தான்.

அதற்குள் மயிலாப்பூர் வந்துவிட இருவரும் இறங்கி வீட்டுக்குள் நுழைய, "முதல்ல நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம், பிறகு மத்த விஷயங்கள் பேசலாம்" என்று அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லி விட்டு அவள் பேகை ஹாலை ஒட்டி இருந்த விருந்தினர் அறையில் வைத்து விட்டு டைனிங் அறைக்கு அழைத்து செல்ல கார்த்திக்கை தொடர்ந்து சென்றாள். ஏற்கனவே அவளுக்கு வேண்டிய சைவ உணவுகள் தயாராக இருக்க இருவரும் 15 நிமிடத்தில் சாப்பிட்டு வர அவளை விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றான். 

அவளை பெட்டில் உட்கார சொல்லி விட்டு அங்கே இருந்த சேரில் அமர்ந்த கார்த்திக், "ஜானு உனக்கு ரெண்டு ஆப்சன் இருக்கு. ஒன்னு இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம். ரெண்டாவது ஆழ்வார்பேட்டை சிக்னல் கிட்ட ஒரு வொர்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கு. அங்கே ஸ்டே பண்ணிக்கலாம். அங்கே இருந்து இங்கே நடந்து வர பத்து நிமிஷம் ஆகும். ஆட்டோவில வர ஒரு 2 -3 நிமிஷம் ஆகும். எது உனக்கு ஓகே" என்று கேட்க ஜனனி "எனக்கு ஹாஸ்டல் ஓகே. ரெண்ட் எவ்வளவு? மத்த டிடைல்ஸ் சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்" என்று சொல்ல, அதற்குள் வெளிவேலையாக சென்றிருந்த மோகனும் திரும்பி வர, "வாம்மா ஜனனி நாந்தான் மோகன், கார்த்திக்கு வலதுகை இடதுகை எல்லாம்", என்று சொல்ல ஜனனி சிரிக்க ஆரம்பித்தாள். 

"என்ன சார், நீங்களே எல்லா வேலையும் பண்ணிட்டா, கார்த்திக் மாமா ஒரு வேலையும் பண்ண மாட்டரே" என்று கிண்டல் செய்ய, "நீ சொல்றது உண்மைதான் அம்மா என்று சொல்லி விட்டு, உனக்கு ஹாஸ்டல் பார்த்தது நாந்தான். அதைபத்தி ஏதாவது சொன்னானா"என்று கேட்க "இல்லையே நீங்கதான் பாத்திங்கன்னு சொல்லலையே. அவர் சொன்னதை பார்த்தா அவர்தான் அலைஞ்சு கண்டு பிடிச்ச மாதிரி இருந்தது. இப்போதான் உண்மை தெரிஞ்சுகிட்டேன். பாவம் வேலை செய்றது நீங்க, பெயர் மட்டும் அவருக்கு" என்று மோகனுக்காக பரிதாபப்பட்டாள். சிரித்து கொண்டே கார்த்திக் "சரி, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் ஒரு அஞ்சு நிமிஷத்ல வந்துடுறேன்" என்று சொல்லி விட்டு வெளியேறினான் கார்த்திக். மோகனும் ஜனனியும் பேசிகொண்டு இருக்க மோகனுக்கு ஜனனியை மிகவும் பிடித்து போனது. படிப்பறிவு இருந்தாலும் உலக அறிவு இல்லாத பெண் இவள் என்று புரிந்து கொண்டான்.


சுடிதாரில் எளிமையாக இருந்த அவளை பார்த்து இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சர்யப்பட்டான். அடிக்கடி அவனை"சார்" என்று கூப்பிட்டவளை "இனி அண்ணா என்றுதான் கூப்பிட வேண்டும்" என்று அன்புடன் கண்டித்தான். இருவரும் சிரித்து பேசி கொண்டிருக்க, திரும்பி வந்த கார்த்திக் தன் கையில் இருந்த 500 ருபாய் நோட்டு கட்டை ஜனனியிடம் கொடுத்து "இதை வைச்சுக்கோ"என்று சொல்ல, ஜனனி கேள்வி குறியுடன் நோக்க, "இது அட்வான்ஸ் தான் மாதம் 10000 அட்ஜஸ்ட் பண்ணிடுவோம், உனக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, அவள் மேலும் யோசிப்பதை பார்த்து "வாங்கிக்கோ" என்று மோகனும் சொல்ல "சரி" என்று வாங்கி கொண்டாள். 

அவளை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு மாலை ஐந்து மணிக்கு ஹாஸ்டல் செல்லலாம் என்று கார்த்திக் சொல்ல சரி என்று சொன்னாள். 

ஜனனி உடனே அம்மாவிடம் பேசி விபரங்கள் சொல்ல, அம்மாவும் மிகவும் சந்தோசபட்டாள். மாலை 5 மணிக்கு ஹாஸ்டல் சென்று மாத வாடகை ஷேரிங் பேசிஸ் 3000 என்றும் தனியான ரூமுக்கு 5000 என்றும் சொல்ல, ஜனனி தனியான ரூம் செலக்ட் செய்ய அதற்கு அட்வான்ஸ் 10000 கட்ட சொன்னாள் ஹாஸ்டல் வார்டன். மோகன் பேசிவிட்டு வர காரில் இருந்த கார்த்திக்கிடம் ஜனனி நடந்ததை சொன்னாள்.

"ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். நீ தினமும் காலை 8 மணிக்கு வந்து இரவு 8 மணி வரை வேலை பார்ப்பதால் காலை,மதியம் மற்றும் இரவு உணவு உனக்கு அங்கேயே தரப்படும். ஞாயிற்றுகிழமை மட்டும் நீ கொஞ்சம் மேனஜ் பண்ணிக்கணும். சிலநேரம் சண்டே கூட வேலை இருக்கும் அப்போ உனக்கு அங்கேயே சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்" என்று சொல்ல, "எனக்கு தனியா சைவ உணவு செய்யணுமே பரவாயில்லையா" என்று கேட்க, "கவலைபடாதே மோகன் கூட வெஜ்தான், அதினால உனக்கு தனியா சமைக்கனும்கிற அவசியம் இல்லை. அவனுக்கு சமைக்கும் போதே உனக்கும் சேர்ந்து சமைத்து விடுவோம். தனி அடுப்பு கூட இருக்கு. இப்போ சந்தோசமா?" என்று கார்த்திக் கேட்க, ஜனனிக்கு நிம்மதி முகத்தில் பரவியது. "அப்பாடி. சாப்பாடு, தங்க இடம் பிரச்னை இல்லை.வேலையும் நம்ம கார்த்திக் மாமா தான்" என்று சந்தோசப்பட்டாள்.

ஜனனிக்கு லோக்கல் கார்டியன் என்ற இடத்தில கார்த்திக் கையெழுத்திட்டான். பிறகு காரில் இருந்த தனது பேகை எடுத்து கொண்டு அவள் கார்த்திக், மோகனிடம் விடைபெற இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினர். 

மாலை ஏழுமணி அளவில் நேகாவிடம் இருந்து போன்வர கார்த்திக் "இதோ வரேன்" என்று சொல்லி கிளம்பினான். மோகனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்ன செய்வது என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தான். எப்படியாவது கார்த்திக்கை இந்த படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு ஒரு வழியும் தோணவில்லை.

மறு நாள் காலை, முந்தைய இரவு பார்ட்டி சென்று லேட் ஆக வந்ததால் அப்போது தான் எழுந்து பல் விளக்கி கொண்டிருந்தான் கார்த்திக்.வீட்டு வாசல் காலிங்பெல் அடிக்கும் ஓசை கேட்டு யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே கதவை திறக்க அங்கே பச்சை நிற காட்டன் புடவையில் ஜனனி நிற்க அசந்து போனான். வெறும் பெர்முடாஸ், பனியனில் நின்ற அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

ஜனனியிடம் "என்ன எட்டு மணின்னு சொன்னா 7 மணிக்கே வந்து நிக்கிறதா" என்று கேட்க, அவள் சிரித்து கொண்டே "மாமா உங்க கண்ணை கசக்கி பாருங்க" என்று கிண்டல் செய்ய, அவன் சுவர் கடிகாரம் 7 . 59 என்று காண்பிக்க அவனுக்கு புரிந்தது. முகத்தில் அசடு வழிய, "இதோ வரேன்" என்று சொல்லி விட்டு உள்ளே ஓடி செல்ல, சிரித்து கொண்டே ஹாலில் இருந்த சேரில் அமர்ந்து ஓரத்தில் அடுக்கி இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கோ ஐந்து வருடங்களுக்கு முன் இதுபோல் கார்த்திக் வீட்டுக்கு சென்று புத்தகங்கள் படித்தது நினைவுக்கு வந்தது.



அதை தொடர்ந்த பானுவின் நினைவும், கார்த்திக் தற்கொலைக்கு முயன்றதும் நினைவுக்கு வர கண் கலங்கினாள். யாரும் பார்ப்பதற்கு முன்னால் கண்ணை துடைத்த அவள், இப்போது பானு கார்த்திக் மனைவியாக இருந்தால் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம என்று பெரு மூச்சொரிந்தாள். அவளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று அவளுக்காக பரிதாபபடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. 


பத்து நிமிடத்தில் குளித்து புதிய உடை உடுத்தி வந்த கார்த்திக்கை பார்த்து அவளுக்கு தன் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது. இவன் டைரக்டராக மாறாமல் இருந்தால் கட்டாயம் சினிமா ஹீரோ ஆகி இருப்பான் என்று அவளுக்கு தோன்றியது. அவளை கை அசைத்து சாப்பிட கூப்பிட, இருவரும் காலை உணவான இட்லி, பொங்கல், தோசை என்று விருந்து போன்ற உணவை வேலைக்காரர்கள் வழங்க அளவோடு உண்டனர். மோகன் அதற்குள் வந்து காலை உணவுக்கு சேர்ந்து கொண்டான்.

ஜனனிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை மோகன் விளக்கமாக சொன்னான். ஜனனிக்கு கையெழுத்து அருமையாக இருப்பதால் திரைகதை மற்றும் வசனங்கள் எழுதும் வேலையும், மற்ற நேரங்களில் கார்த்திக்கு PA ஆகவும் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்ல, ஜனனிக்கு தாங்க முடியாத சந்தோஷம். எப்போதும் கார்த்திக் கூட இருக்கலாம், அந்த நினைப்பே அவளுக்கு இனிப்பாக இருந்தது. உடனே சரி என்று சந்தோசமாக சிரித்து கொண்டே சொல்ல, மோகனுக்கு அவள் குழந்தை போல் சிரிக்கும் சிரிப்பு மனதை தொட்டது. "என்ன இந்த பெண் கார்த்திக் பேரை சொன்னாலே சந்திரனை கண்ட அல்லி போல மலர்கிறாலே" என்று ஆச்சர்யப்பட்டான். 
மோகன் அவளை மாடியில் இருந்த ஆபீஸ் அறையில் அழைக்க அவளும் சென்று பார்த்தாள். 

கார்த்திக், மோகன், டிஸ்கசன்ரூம், விருந்தினர் அறை என்று நான்கு அறைகள் இருந்தன. ஜனனி கார்த்திக் இருக்கும் அறையிலே இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஒரு சேர் மற்றும் டேபிள் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. கார்த்திக்கு ஷூட்டிங் வேலைகள் இருப்பதால் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே வர முடியும் என்று தெரிந்தது. மோகன் அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி சொன்னான். "யவனராணி கதையை முழுக்க படித்து அதை திரைக்கதையாக மாற்றுவது கார்த்திக் வேலை, இடையில் வரும் வசனங்களை கதையின் போக்கு குன்றாமல் கார்த்திக் சொல்ல அதை எழுதுவது அவள் வேலை", என்று மோகன் சொன்னான். 

இன்று முழுவதும் அவளுக்கு வேறு வேலை கிடையாது, கதையை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், இன்று வெளிபுற படபிடிப்பு இருப்பதால் கார்த்திக் வெளியே செல்ல வேண்டி இருக்கும். மீண்டும் மாலை சந்திக்கலாம். ஒரு வேலை எட்டு மணி ஆகி விட்டால் அவள் ஹாஸ்டல் திரும்ப வேண்டியது என்று முடிவு செய்யப்பட்டது. முன்பே முடிவு செய்தபடி சாப்பாடு ஜனனிக்கு ரெடி செய்யப்பட,கார்த்திக் மோகனுடன் மகாபலிபுரம் சென்றனர். 

ஜனனி ஏற்கனவே கார்த்திக் கொடுத்த புத்தகங்களில் படித்திருந்தாலும் திரும்ப படிக்க ஆரம்பித்தாள். "யாராவது கதை படிக்க சம்பளம் தருவார்களா" என்று தனக்குள் சிரித்து கொண்டாள். ஏழுமணி அளவில் கார்த்திக் திரும்ப, அவனிடம் "நீங்க ஏற்கனவே படம் எடுக்க ஆரம்பிசுடிங்க, இப்போ எதுக்கு நான் இதை படிக்கணும்" என்று கேட்க, அவளிடம் "நாங்க இப்போ எடுப்பது சண்டை காட்சிகளும் மற்றும் சாகச காட்சிகளும் தான். நீ இப்போ எழுத போற வசனங்களில் தான் கதையின் ஜீவன் இருக்கு" என்று சொல்ல, அவளுக்கு நம்ப முடியவில்லை. முகம் மலர்ந்தது. 

"சரி சாண்டில்யன் பல கதைகளை எழுதி இருக்க எதுக்கு இந்த கதை எடுத்திங்க என்று கேட்க, சாண்டில்யன் கதைகளில் ஹீரோ வொர்ஷிப் அதிகம் உண்டு. இந்த கதையில் மட்டும்தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகனுக்கு இணையான பத்திரமாக படைத்தது இருப்பார். எந்த ஒரு கலைஞனுக்கும் இந்த கதையை திரைபடமாக்குவது ஒரு பெரிய சவால்" என்று சொல்ல,ஜனனிக்கு புரிந்தது.

அடுத்த நாள் ஷூட்டிங் இல்லாததால் கார்த்திக் வசனங்கள் சொல்ல, ஜனனி எழுத ஆரம்பித்தாள். கண் முன் யவனராணி திரைபடம் நடப்பது போல் அவளுக்கு தோன்றியது. கார்த்திக்கை உன்னிப்பாக கவனித்த அவளுக்கு அவன் மேல் மதிப்பு உயர்ந்தது. "அவன் நான் இன்னும் பழைய கார்த்திக்தான்" என்று சொன்னாலும் அவன் திரைகதை வசனங்கள் அமைக்கும் திறமும், அவன் அசிஸ்டன்ட் டைரக்டர்களிடம் அவனுக்கு இருந்த மதிப்பும் அவனின் பெருமையை அவள் மனதுக்குள் உயர்த்தின. 

ஒருநாள் அவனுடன் ஷூட்டிங் சென்று அவன் பம்பரமாக வேலை பார்ப்பதை பார்த்து வியந்து போனாள். மதிய உணவு சாப்பிடாமல் கூட வேலை பார்த்த அவனை அன்புடன் கண்டித்து "இப்போ சாப்பிட்டாதான் விடுவேன்" என்று சொல்லி வழி மறித்து நின்று கொண்டாள்.மதிய உணவை அவளே பரிமாறி அவனுக்கு பிடித்த உணவு வகைகளை நிறைய போட்டு அவனை சாப்பிட வைத்தாள். "இப்படி சாப்பிட்டால் மதியம் வேலை பார்க்க முடியாது தூங்க வேண்டியது தான்" என்று அவளை கிண்டல் செய்தான். அவளின் தாய் போன்ற அன்பில் கண் கலங்கினான். 

அவள் அருகில் வரும் போதல்லாம் சுகந்த வாசனை அவனை இழுத்தது, அவளிடமே கேட்டபோது "இது பொம்பளைங்க சமாசாரம் நீங்க தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க" என்று சிரித்து கொண்டே பதில் சொன்னாள். அவன் ஷூட்டிங்கில் இருக்கும் நாள் எல்லாம் அவனுக்கு மதியம் சரியாக ஒரு மணி அளவில் தினமும் "சாப்பிட்டாச்சா" என்று sms வர அதை தொடர்ந்து அவளிடம் இருந்து கால் வரும். அந்த கரிசனம் அவனுக்கு புதுமையாக இருந்தது. அதே சமயத்தில் பிடித்திருந்தது.

நேகா அவனிடம் "அடுத்த பார்ட்டி சனி கிழமை இருப்பதாக" சொல்ல, வர முடியாத அளவுக்கு வேலை இருப்பதாக சொல்லி தவிர்த்தான்.அவளுக்கோ அவன் நடந்து கொள்ளும் முறை விசித்திரமாக இருந்தது. அவனை நேரடியாக சந்தித்து கேள்வி கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு வந்தாள். கார்த்தி க்ஷூட்டிங் விஷயமாக அவுட்டோர் சென்றிருக்க அவளுக்கு யாரை சந்திப்பது என்று தெரியவில்லை.வாட்ச்மானிடம் "வேறு யார் இருக்கா" என்று கேட்க "நீங்க சாரோட புது PA ஜனனி மேடம் இருக்காங்க அவங்ககிட்ட நீங்க பேசலாம்."

" எங்கே" என்று கேட்க மாடிக்கு வழி காண்பித்தான். 
மாடிக்கு வந்த நேகா ஜனனியை கண்டவுடன் ஆச்சர்யம் அடைந்தாள். இவ்வளவு அழகான பெண் கார்த்திக்கு PA வாக இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. அதற்குள் உள்ளே வந்த நேகாவை கண்ட ஜனனி மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்கு பிடித்த நடிகைகளில் ஒருத்தி நேகா. 

அடுத்த அறையில் இருந்த வாலிபன் ஒருவனை பார்த்து "யார் இவன்?" என்று நேகா கேட்க, என்னோட சீனியர் ராஜ்குமார். சொந்த ஊரு கோவை. வேலை இல்லாம இருப்பதல நாந்தான் மோகன் அண்ணாகிட்ட பேசி இங்கே வேலைக்கு ஏற்பாடு செய்தேன். இவனை எனக்கு கடந்த அஞ்சு வருஷமா தெரியும்". 

"அது சரி கார்த்திக் பத்தி என்ன நினைக்கிற". 

கார்த்திக் பேரை கேட்டவுடன் ஜனனி முகம் மத்தாப்பாய் பூத்தது. "எனக்கு கார்த்திக் மாஸ்டரை அஞ்சு வருஷமா தெரியும். எனக்கு கணக்கு டியுசன் மாஸ்டர்ரா ஆரம்பத்தில தெரியும். இப்போ குடும்ப நண்பர் வேற. வாழ்க்கைல ரொம்ப கஷ்டபட்டவரு. இப்போ ரொம்ப நல்லா இருக்கார். அவர் மனசு தங்கமான மனசு. அவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையணும்னு நான் ஆண்டவனை வேண்டி இருக்கேன். "


"பரவாயில்லை உன் வேண்டுதல் பலிக்கிற நேரம் வந்துடிச்சு அப்பிடின்னு நினைக்கிறேன். நானும் கார்த்திக்கும் ரொம்ப நெருங்கியநண்பர்கள். கல்யாணம் பண்ணிக்கலாம் அப்பிடின்னு கூட ஐடியா இருக்கு. இந்த பட ஷூட்டிங் முடிஞ்சவுடனே கல்யாணம்தான். உனக்குவேற கார்த்திக்கை அஞ்சு வருஷமா தெரியும்னு சொல்லுற. அதுனால நீதான் எனக்கு மணமகள் தோழி" என்று நேகா சொல்ல,ஜனனிக்கு மனம் கலங்கியது. ஒன்னும் பேசவில்லை.

"சரிங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொல்லி வேலையில் மூழ்க, தான் வந்த வேலை முடிந்து விட்ட மகிழ்ச்சியில் நேகாகிளம்பினாள். தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி இருந்த ஜனனியால் வேலையை தொடர்ந்து பார்க்க முடியவில்லை.தலை வலிக்க ஏழு மணிக்கே ஹாஸ்டல் கிளம்பினாள். 

ஹாஸ்டல் ரூமில் படுத்து இருந்த ஜனனியால் தான் எதற்கு அழுதோம் என்று புரியவில்லை. கார்த்திக் மாமாவை காதலிக்கிறேனா.தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டாள். இல்லை இல்லை. அது தப்பு. அவர் அந்தஸ்து எங்கே. நான் எங்கே. நான் அவரிடம் வேலைபார்க்கும் ஒரு அன்றாடம் காய்ச்சி. அவரோ தமிழ் திரை உலக பிரம்மாக்களில் ஒருவர். ஒரு வேளை நேகாவும் கார்த்திக்கும்திருமணம் செய்ய முடிவு செய்தால் நாம் என்ன செய்ய முடியும். 

ஆனால் தன்மீது தனிபட்ட ப்ரியம் காண்பிக்கும் கார்த்திக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம். தினமும் ஷூட்டிங்ல 
இருந்தால் கூட மறக்காம காலை மதியம் இரவு சாப்பிட்டாயா என்று கேட்பது. எதாவது பிரச்சனையா. ஹாஸ்டல் ஸ்டே ஓகேயா,ஆபீஸ்ல எதாவது பிரச்சனையா என்று தினமும் அவர் அன்புடன் விசாரிக்கும் போது என் மனது ஏன் அவர் பின்னே செல்கிறது.அவளுக்கு புரியவில்லை இது காதல் படுத்தும் பாடு என்று. இரவு முழுக்க அவள் சரியாக தூங்கவில்லை. இடையில் செல்போனைஎடுத்து பார்த்த போது கார்த்திக்கிடம் இருந்து ஆறு மிஸ்ட் கால் வந்திருந்தது. திரும்ப கூப்பிடலாம் என்றால் மணி இரவு ஒருமணிக்கு மேல், சரி காலையில் பேசி கொள்ளலாம் என்று கண் அயர்ந்தாள்.




No comments:

Post a Comment