Tuesday, July 28, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 8

“ சரி மாமா நான் போய் அவரை பார்த்த பிறகு என்ன தகவல்னு போன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்தான்
ஒரளவுக்கு அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து அந்த சான்றிதழ்களை படித்துப் பார்த்தவன், மறுபடியும் முதல் பக்கத்தில் இருந்த மான்சியின் படத்தை பார்த்தான், ஏனோ அவனுக்கு அம்மு என்ற பெயர் சட்டென்று மறைந்து மான்சி என்ற பெயர் மனதில் பதிந்தது

சத்யன் மான்சியை கடைசியாக பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, சிறு வயதிலேயே மான்சி அழகு என்று தெரியும், ஆனால் முகம் இந்தளவுக்கு மாறும் என்று நினைக்கவில்லை, அந்த சிறிய படத்தில் தனது பெரிய கண்களை விரித்துப் பார்த்தபடி புன்னகைத்தாள் மான்சி, சிறிதுநேரம் பார்த்தவன் மறுபடியும் மடித்து கவரில் போட்டு மேஜை டிராயரில் வைத்தான்

தனது டெலிபோன் டைரியை எடுத்து அந்த கல்லூரி நிறுவனரின் மொபைல் நம்பரை தேடி எடுத்தான், அவர் நம்பருக்கு போன் செய்தவுடன் உடனே எடுத்தார்



" ஹலோ சார் நான் ஜெயந்தி மோட்டார்ஸ் சத்யன் பேசுறேன்" என்று சத்ய் தன்னை அவருக்கு ஞாபகப்படுத்தும் போதே....

" ஹலோ சத்யன் எப்படி இருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு, உங்க மாமா எப்படி இருக்கார்" என்று நட்பாய் விசாரித்தார் அவர்

" எல்லாரும் நல்லாருக்கோம் சார், உங்ககிட்ட ஒரு ஹெல்ப் வேனும்" என்று சத்யன்

" சொல்லுங்க சத்யன் என்ன செய்யனும்" என்றார்

" எனக்கு தெரிஞ்சவரோட பொண்ணுக்கு உங்க காலேஜ்ல ஏதாவது ஜாப்க்கு ஏற்பாடு பண்ணனும், அந்த பொண்ணோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு, நீங்க சொன்னா நானே நேர்லயே எடுத்துட்டு வர்றேன்" என்று சத்யன் சொன்னதும்

மறுபேச்சின்றி " எடுத்துட்டு வாங்க சத்யன் பார்க்கலாம்" என்றார் அந்த மனிதர்

அதன்பின் சம்பிரதாய விசாரிப்புக்கு பிறகு நன்றி சொல்லி சத்யன் இணைப்பை துண்டித்தான்

மறுபடியும் மேஜை டிராயரை திறந்து , மான்சியின் படத்தையே சிறிதுநேரம் பார்த்தான்

அன்று மாலை நான்கு மணிக்கு அவர் வரச்சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே அந்த கல்லூரிக்குப் போய் காத்திருந்தான் சத்யன்

கல்லூரி பியூன் வந்து அவனை ஆபிஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றான்.. சத்யன் உள்ளே நுழைந்ததுமே எழுந்து வரவேற்றார் கல்லூரி நிறுவனர்

சத்யன் அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து தன்னிடம் இருந்த மான்சியின் சர்டிஃபிகேட் அடங்கிய கவரை அவரிடம் கொடுத்தான்

ஒன்றுக்கு இரண்டுமுறையாக கவணமாக பார்த்த கல்லூரி நிறுவனர் " இந்த பொண்ணு மாற்றுத்திறனாளியா?" என்று கேட்டார்

சிறிது தயக்கத்திற்கு பிறகு " ஆமாம் சார், காலையிலயே சொல்ல மறந்துட்டேன்" என்றான் சத்யன்

" பரவாயில்லை சத்யன், அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை, இன்னும் சொல்லப்போனா, என்கிட்ட இதுபோன்றவர்களுக்கு தான் முன்னுரிமை, ஆனா பொண்ணு வயசு ரொம்ப கம்மியா இருக்கு அதனால லெக்சரர் மாதிரியான போஸ்ட்டிங் போட முடியாது, வேனும்னா இவங்ககளுக்கு லேப் டெக்னீசியனா போடலாம், அதுதான் இவங்க படிப்பு சரியான வேலை, இவங்களை மன்டே வந்து வேலையில ஜாயின்ட் பண்ணச்சொல்லுங்க " என்று கல்லூரி நிறுவனர் கூறினார்

சத்யன் எழுந்து நின்று அவருக்கு கைகூப்பி நன்றி சொல்ல ... உடனே அவரும் எழுந்து கூப்பிய சத்யனின் கையை பற்றி தடுத்து விலக்கி " என்ன சத்யன் இது அவங்க படிச்சிருக்காங்க அதுக்கு எங்ககிட்ட இருக்கிற வேலையை தர்றோம், இதுல நன்றி எதுக்கு, அதுவும் நமக்குள்ள" என்றார்

அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக பாண்டியனுக்குத்தான் போன் செய்தான்,,, அவரும் அதற்காகவே காத்திருந்தது போல உடனே எடுத்து " என்ன சத்யா வேலைக்கு ஏற்பாடு ஆயிருச்சா" என்று ஆர்வமாக கேட்டார்

சத்யனும் குரலில் என்றுமில்லாத உற்சாகத்துடன் " ரெடி பண்ணிட்டேன் மாமா, நீங்க மான்சியை கூட்டிக்கிட்டு ஞாயித்துக்கிழமை காலையிலேயே வீட்டுக்கு வந்துடுங்க" என்று சத்யன் சொன்னதும்

" என்னது மான்சியா?" என்று ஆச்சிரியமாக கேட்ட பாண்டியன் " அம்முன்னு சொல்லு சத்யா, மான்சிங்கற பேரே எங்களுக்கெல்லாம் மறந்து போச்சு" என்று பாண்டியன் சிரிப்புடன் சொல்ல

" இல்ல மாமா நீங்கல்லாம் எப்புடி வேனா கூப்பிடுங்க, நான் மான்சின்னு தான் கூப்பிடுவேன், சரி நீங்க எப்படி வரப்போறீங்க" என்று கேட்டான்

" நாங்க சனிக்கிழமை மிட்நைட்ல முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல திண்டிவனம் வந்து அங்கேருந்து பஸ்ல உன்னோட ஊருக்கு வர்றோம் சத்யா" என்று பாண்டியன் சொன்னார்

" பஸ்ஸெல்லாம் வேண்டாம் , நான் கார் எடுத்துக்கிட்டு திண்டிவனம் வந்து வெயிட் பண்றேன்" என்று கூறிவிட்டு மொபைலை வைத்தான்

ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிக்கே எழுந்த குளித்துவிட்டு, வெள்ளை முழுக்கைச் சட்டையும், நீலநிறத்தில் ஜீன்ஸும் அணிந்து, காரை எடுத்துக்கொண்டு திண்டிவனம் போய் ரயில் வருவதற்காக காத்திருந்தான்

ரயில் வந்ததும் எந்த பெட்டியில் வருகிறார்கள் என்று தெரியாமல் தேடியவன், ஒரு பெட்டியில் பாண்டியன் இறங்குவதை பார்த்ததும் உற்சாகமாக அவரை நோக்கி வேகமாக போனான் ,

அவருக்கு பின்னாலேயே பாண்டியனின் தோள்களை பற்றியவாறு மான்சியும் இறங்கினாள், சத்யன் அவளை ஏறெடுத்துப் பார்த்தான், வெளிர்மஞ்சள் சுடிதாரில் அப்போது தான் பூத்த ரோஜா மலரைப் போல இருந்தாள் மான்சி, சத்யன் "வா மான்சி" என்று புன்னகைக்க

அவ்வளவு நேரம் ரயிலில் பயணம் செய்த களைப்பு சிறிதுமின்றி சத்யனை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள் மான்சி


சத்யனைப் பார்த்து புன்னகைத்த மான்சி கீழேயிருந்த லெதர் பேக்கை எடுத்துக்கொண்டு முன்னே போனாள், அவசரமாக அவளை தொடர்ந்த சத்யன் “ குடு மான்சி பையை நான் எடுத்துகிட்டு வர்றேன்” என்றான்

நின்று அவனை திரும்பி பார்த்த மான்சி “ பரவாயில்லை நானே எடுத்துக்கிறேன், அவ்வளவா வெயிட் கிடையாது” என்றவள் குனிந்து சத்யனின் காலை பார்த்தாள் “ கால் இப்போ சரியாயிடுச்சா, நல்லா நடக்க முடியுதா” என்று கேட்க

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு இளம்பெண்ணின் அக்கறையான விசாரிப்பு மனதில் வெண்சாமரம் வீச சட்டென்று பூத்த புன்னகையுடன் “ ம் சரியாயிடுச்சு இப்போ ஸ்டிக் இல்லாமலே நல்லா நடக்கிறேன்” என்று பதில் சொன்னான் சத்யன்

“ ஆனா நடையோட ஸ்டைல் மாறிபோச்சு,, பழைய மாதிரி நடை இல்லை” என்று சொல்லிவிட்டு மான்சி முன்னால் போக, எக்கி எக்கி அவள் நடப்பதை ஒருசிலர் பரிதாபமாக பார்க்க சத்யனுக்கு எரிச்சலாக வந்தது

சத்யனும் பாண்டியனும் பின்னால் பேசிக்கொண்டே வந்தனர், பாண்டியனுடன் பேசினானே ஒழிய அவன் மனம் மான்சி கடைசியாக சொன்ன வார்த்தைகளையே அசைபோட்ட படி வந்தது ‘ மான்சி என்னன்னு சொன்னா நடையோட ஸ்டைல் போச்சு, பழைய நடை இல்லை’ அப்படின்னா முன்னாடி நான் நடந்ததை பார்த்து ரசிச்சிருப்பாளா? ச்சேச்சே அப்போ மான்சிக்கு பன்னிரெண்டு வயசுதானே இருக்கும்.,, என்று கேள்வியும் அவனே பதிலும் அவனே என்று ரயில் நிலையத்தை விட்டு சத்யன் வெளியே வந்தான்

வெளியே ஓரமாய் நின்ற காரின் லாக்கை ரிமோட்டால் விடுவித்து, பின்புறம் டிக்கியை திறந்து பாண்டியன் கையில் இருந்த பெட்டியை வாங்கி வைத்த சத்யன் மான்சியிடம் பேக்கை வாங்க கைநீட்டினான், அவள் கொடுத்தவுடன் வாங்கி வைத்துவிட்டு டோரை மூடி பக்கவாட்டில் போய் கார் கதவை திறந்துவிட்டான் , இருவரும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள சத்யன் காரை கிளப்பினான்

வீட்டுக்கு உள்ளே வந்ததும் மான்சி வீட்டை சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள், முன்புறம் இருந்த அறையின் கதவை திறந்த சத்யன் “ மாமா பெட்டி பேக்கை இங்க வைங்க, மான்சி இங்கே தங்கட்டும், நீங்க என்னோட ரூமுக்கு வாங்க” என்றவன்,

மான்சியிடம் திரும்பி “ மான்சி இங்க எந்த ரூமிலேயும் அட்டாச்டு பாத்ரூம் கிடையாது, பின்னாடி தோட்டத்துல தான் இரண்டு பாத்ரூம் இருக்கு, நான் போய் ஹீட்டர் போடுறேன், நீ வந்து குளிச்சுக்கோ” என்றவன் தோட்டத்து பக்கம் போய் பாத்ரூமில் ஹீட்டர் போட்டுவிட்டு வந்தான்

மான்சி தனது உடைகளை எடுத்துக்கொண்டு வந்தாள், அதற்குள் சத்யனுடன் இருக்கும் கடை பையன் வர “ தட்சிணா ஒரு பாக்கெட் பால் வாங்கிகிட்டு வா” என்று அனுப்பி வைத்தான்

மான்சி குளித்துவிட்டு வரவும், சத்யன் காபிபோட சமையலறையில் போராடிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்துவிட்டு உள்ளே வந்து “ தள்ளுங்க நான் போடுறேன்” என்று சொல்ல, சத்யன் மறுபேச்சின்றி விலகி நின்றான்
மான்சி “எததனை பேருக்கு காபி வேனும்” என்று கேட்க. “ நாலு பேருக்குதான்” என்றான் சத்யன்

அளவாக தண்ணீர் விட்டு பாலை காய்ச்சி மான்சி காபி போடும் அழகை ரசித்தபடி சத்யன் நின்றிருக்க, சட்டென்று திரும்பி பார்த்த மான்சி என்ன என்று புருவத்தை உயர்த்தி ஜாடையில் கேட்க,

ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற உந்துதலில் “ என்னோட பழைய நடை ஸ்டைல் மாறிபோச்சுன்னு சொன்னியே, நான் எப்படி நடப்பேன்னு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்

ஒரு நிமிடம் அவனையே உற்றுப்பார்த்த மான்சி “ நல்லா நடக்கிறவங்க எல்லாரோட நடையுமே என் ஞாபகத்தில் இருக்கும், அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டேன்” என்று மான்சி சொல்லிவிட்டு கலந்து வைத்திருந்த காபியை டம்ளர்களில் ஊற்றினாள்

சத்யனுக்கு ஏன் இதை கேட்டோம் என்றாகிவிட்டது, இன்னும் இவள் மாறவேயில்லை, சின்னப்பொண்ணாக இருந்தபோது இருந்த அதே தாழ்வுமனப்பான்மை இன்னமும் அப்படியே இருக்கிறது, இவளை எப்படி மாற்றுவது, என்று சத்யனுக்கு புரியவில்லை,.. ஆனால் இவளை ஏன் நீ மாற்றவேண்டும்? என்ற கேள்வியும் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது

மான்சி ஒரு டம்ளரை எடுத்து அவளிடம் நீட்ட,.. சத்யன் வாங்கிக்கொண்டு வெளியே வந்தான், அவன் பின்னாலேயே வந்த மான்சி பாண்டியனுக்கும் தட்சிணாவுக்கும் ஒரு ஒரு டம்ளரை கொடுத்தாள்

“ மாமா நீயும் குளிச்சிட்டு கிளம்புங்க, இங்கே பக்கத்தில் இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு பேமஸ் கோயில் இருக்கு, மான்சியை கூட்டிக்கிட்டு போய்ட்டு வரலாம்” என்றான்

பாண்டியன் தயக்கமாக மான்சியை பார்த்து “ என்ன அம்மு போய்ட்டு வரலாமா?” என்று கேட்க

“ இல்லப்பா நான் வரலை நீங்க வேனா போய்ட்டு வாங்க” என்றவள் காபி டம்ளருடன் அவளுக்கு ஒதுக்கிய அறைக்குள் போய்விட்டாள்

பாண்டியன் சத்யனைப் பார்த்து உதட்டை பிதுக்கி காட்டி ம்ஹூம் என்று தலையசைக்க, இருங்க என்று அவருக்கு கையசைத்து பதில் சொன்ன சத்யன், மான்சி இருந்த அறைக்குள் போனான்

கட்டிலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்த மான்சி இவனைப் பார்த்து எழுந்து நிற்க்க “ பரவாயில்லை உட்காரு மான்சி” என்றவன் அங்கிருந்த சேரில் அமர, மான்சி நின்றுகொண்டிருந்தாள் “ ஏன் மான்சி நான் வெளியாளா என்ன மரியாதை மனசுல இருந்தா போதும் ப்ளீஸ் உட்காரு” என்றான் சத்யன் 

மான்சி தயக்கமாக கட்டிலின் நுனியில் அமர, உதடு வரை வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு “ இதோ பாரு மான்சி நீ வேலைக்கு போகப்போற காலேஜ் ரொம்ப பெரிசு, உன்னை லேப் டெக்னீஷியனா போட்டுருக்காங்க, நீ வேலையை பத்தி எதுவுமே பயப்பட வேண்டாம், எல்லாம் சீக்கிரமே கத்துக்கலாம், அந்த காலேஜ் நிறுவனர் எனக்கு ரொம்ப வேண்டியவர், அதனால உனக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இருக்காது” என்று சொல்லிகொண்டே வந்தவன் மான்சியை நிமிர்ந்து பார்த்தான்

“ ஆனா நீ அங்கேயெல்லாம் நல்லா கலகலப்பாக இருக்கனும், எதுக்கெடுத்தாலும் பட்டுப் பட்டுனு பதில் சொல்லாதே, அடுத்தவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சுகிட்டு, நீ பதில் சொல்ற விஷயம் எதுவாயிருந்தாலும் யோசிச்சு சின்ன புன்னகையோடு சொல்லு, கேட்கிறவங்க மனசு சங்கடப்படாம இருக்கும்” என்று சத்யன் அவளுக்கு எடுத்து சொன்னான்

தலைகுனிந்து கையில் இருந்த காலியான காபி டம்ளரை ஆராய்ச்சி செய்தபடி “ சரி” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னவள்,.. நிமிர்ந்து சத்யனை நேரடியாக பார்த்து “ எனக்கு தங்கறதுக்கு எங்கே ஏற்பாடு பண்ணிருக்கீங்க, இப்பவே போகலாமா” என்று கேட்டாள்

முகத்தில் அறை வாங்கியது போல் நிமிர்ந்த சத்யன் சேரில் இருந்து எழுந்து கதவருகில் போய் நின்று அவளை திரும்பி பார்க்காமலே “ அதே காலேஜ்ல படிக்கிற சீனியர் பொண்ணுங்க மூனுபேர் தனியா வீடு எடுத்து தங்கியிருக்காங்க, அவங்ககூட தங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன், ஆனா இன்னிக்கு போகமுடியாது, நாளைக்கு காலேஜ்ல இருந்து அவங்ககூட நேரா அங்க போயிரு, நான் ஈவினிங் உன்னோட பெட்டியை எடுத்துட்டு வந்து குடுத்துர்றேன்” என்று சொல்லிவிட்டு அவளை கோவிலுக்கு கூப்பிடாமலே அறையை விட்டு வெளியே போனான்

வெளியே வந்த சத்யன் தட்சிணாவிடம் பணம் கொடுத்து டவுனில் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கே காலை உணவு வாங்கி வரச்சொல்லிவிட்டு பாண்டியன் அருகில் சோபாவில் அமர்ந்து மான்சி தங்கும் விபரங்களை சொன்னான்

சிறிதுநேரம் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி சமையலறையில் காபி டம்ளரை வைத்துவிட்டு வெளியே வந்து தனது ஈரக்கூந்தலை சுற்றியிருந்த டவலை அவிழ்க்க, சட்டென்று சரிந்த அவள் கூந்தலின் நீளம் சத்யனை வியக்க வைத்தது, ஆவென வாயை திறந்தபடி மான்சியின் கூந்தலையே பார்த்துக்கொண்டிருந்தான், பாண்டியன் சொன்ன எதுவுமே அவன் காதில் விழவில்லை

ஈரக்கூந்தலை நுனியில் முடிந்த மான்சி ஹாலிலேயே மணிகள் வைத்து அமைக்கப்பட்டிருந்த பூஜை அறையை பார்த்துவிட்டு அதன் கதவைத்திறந்தாள்,, உள்ளே தேவியின் படம் பெரியதாக்கப்பட்டு மாலையுடன் இருந்தது, அந்த படத்தையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு தொட்டு கும்பிட்டவள் அங்கிருந்த விபூதி கிண்ணத்தில் இருந்து சிறிது எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள், சத்யனை திரும்பிப்பார்த்து “ இதெல்லாம் யார் பண்ணுவாங்க” என்று பளபளவென இருந்த பூஜை சாமான்களை காட்டி கேட்டாள்

அதெல்லாம் வாராவாரம் ஜெயந்தி அக்கா வந்து சுத்தம் பண்ணுவாங்க, மத்தபடி வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் கழுவ, எல்லாம் ஒரு வயசான பெரியம்மா வருவாங்க, துணியெல்லாம் வாஷிங்மெஷினில் போட்டுருவேன், அக்காவும் கௌதமும் சனி ஞாயிறு வரும்போது மட்டும் வீட்டுல சாப்பாடு செய்வோம் மத்தநாளில் ஹோட்டல் சாப்பாடுதான்” என்று அவள் கேட்காத தகவலை சேர்த்து சத்யன் சொன்னான்

சத்யனை பார்த்துக்கொண்டே பாண்டியன் பக்கத்தில் சோபாவில் அமர்ந்த மான்சி “ தினமும் உங்க காருக்கு எவ்வளவு பெட்ரோல் போடுவீங்கன்னு சொல்ல மறந்துட்டீங்களே” என்று சிரிக்காமல் சொல்ல

சில வினாடிகளுக்கு பிறகே அவள் சொன்னதன் அர்த்தம் புரிய நெடுநாட்களுக்கு பிறகு வயிற்றை பிடித்துக்கொண்டு வாய்விட்டு சரித்தான் சத்யன், அந்த சிறிய நகைச்சுவையான பேச்சுக்கு அவ்வளவு அதிகமாக சிரிக்கவேண்டியது இல்லையென்றாலும் சத்யன் வழிய சிரித்தான்

அவன் சிரிப்பதையே மெல்லிய புன்னகையோடு பார்த்த மான்சி “கோயிலுக்கு போகனும்னு சொன்னீங்க எப்ப போகலாம்” என்றாள்

சத்யனின் சிரிப்பு சட்டென்று நின்றுபோக வியப்புடன் அவளைப் பார்த்தான், இவளை புரிந்துகொள்ளவே முடியாது போலருக்கே, நான் வரலைன்னு சொன்னா, இப்போ என்னடான்னா எப்ப போகலாம்னு கேட்கிறா, என்று வியப்பாக சத்யன் பார்க்க

“ என்ன அப்படி பார்க்கிறீங்க, கோயிலுக்கு போறோம் தானே” என்று மறுபடியும் கேட்டாள் மான்சி

" ம்ம் கண்டிப்பா போகலாம், இதோ இப்ப டிபன் வாங்கிட்டு வந்துருவான், வந்ததும் சாப்பிட்டு கிளம்புவோம்" என்று சத்யன் சொன்னதும் சரியென்று கூறிவிட்டு எழுந்து அறைக்குள் போனாள் மான்சி

தட்சிணா உணவுடன் பைக்கில் வந்து இறங்கி வருவதை பார்த்த சத்யன், மூடியிருந்த அறை கதவை தட்டி " மான்சி டிபன் வந்தாச்சு சீக்கிரம் சாப்பிட்டு போகனும், கோயில் பனிரெண்டு மணிக்கெல்லாம் மூடிடுவாங்க, அப்புறம் நாலு மணி வரைக்கும் வெயிட் பண்ணனும்" என்று குரல் கொடுத்ததும்

" இதோ வர்றேன்" என்று குரல் கொடுத்தபடி மான்சி அறை கதவை திறந்து வெளியே வந்தாள்



வெளியே வந்த மான்சியை பார்த்து வியந்துபோய் நின்றான் சத்யன், குளித்துவிட்டு போட்டிருந்த சுடிதாரை கழட்டிவிட்டு புடவைக்கு மாறியிருந்தாள் மான்சி, இளம் மாதுளம் முத்துக்களின் சிவப்பில், பட்டில் பார்டர் வைத்து தைக்கப்பட்டிருந்த புடவைக்கு மேட்சாக பட்டில் பார்டர் வைத்த ரவிக்கையும் அணிந்திருந்தாள்,

கழுத்தில் மெல்லிய செயின் ரவிக்கைக்குள் போய் மறைந்திருக்க, காதில் சிறிய ஜிமிக்கியுடன் கூடிய தோடும், கையில் சிவப்பு நிறத்தில் கண்ணாடி வளையலும் போட்டிருந்தாள், சற்றுமுன் பூசிய விபூதி கீற்றின் கீழே சிவப்பு பொட்டு வைத்திருந்தாள், செயற்கையாக திருத்தப்படாத புருவங்கள் வில்லாய் வளைந்திருந்தது,.. அடர்த்தியான இமைகளுடன் விழித்தாமரை மலர்ந்திருந்தாள்,.. அழகின் மறுஉருவம் தான் இவளோ என்று வியப்பில் சத்யன் அப்படியே நின்றான்

மான்சிக்கு அவன் பார்வை கூச்சத்தை ஏற்படுத்த, தலைகுனிந்து விலகி வந்து டைனிங்டேபிளுக்கு சென்றாள், அங்கே தட்சிணா உணவுகளை பிரித்து வைத்துக்கொண்டு இருந்தான்,.. " தள்ளுங்க நான் எடுத்து வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மான்சி எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்

ச்யன் வந்து அமர்ந்ததும் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினார்கள்,.. மான்சி காரின் பின்னால் ஏறியதும், கார் கதவை மூடிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்து காரை எடுத்த சத்யன் பின்னால் திரும்பி " ஏன் மான்சி நீ கொலுசு போட்டுக்கலையா?" என்று கேட்க

அதுவரைக்கும் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென்று மறைய, " நான் எப்பவுமே கொலுசு போட்டுக்கமாட்டேன்" என்று பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

அவள் பதில் அப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்த சத்யன், இந்தமுறை விட்டுக்கொடுக்காமல் காரை எடுத்து மெயின்ரோடில் திருப்பியபடி " ஏன் போட்டுகிட்டா என்ன , உனக்கு ஒன்னும் கால் சூம்பிப்போய் இல்லையே, ஒரு காலைவிட இன்னொரு கால் அளவு கம்மி அதனால கொலுசு போடலாமே" என்று அவளுடைய தாழ்வுமனப்பான்மையை குறைக்க முயன்றான்,,

அதற்க்கு மான்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லை,, சத்யன் சொன்னது ரொம்ப சரி என்று புரிந்தாலும் மகளின் கோபத்துக்கு பயந்து பாண்டியன் வாயை திறக்காமல் வந்தார்

கோவிலை நெருங்கி காலியான இடத்தில் காரை பார்க செய்த சத்யன், இறங்கி மான்சிக்கு கதவு திறந்துவிட அவள் இறங்கினாள்,, சத்யன் பேச்சின் பாதிப்பு இன்னும் அவள் முகத்தில் தெரிந்தது, ஆனாலும் சத்யன் எதுவும் சொல்லாமல் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு கோயிலின் உள்ளே போனார்கள்

திருப்பதியின் பிரதியை போல இருந்த பாண்டுரங்கன் ரகுமாயி சமேத கர்ப்பக்கிரகத்தை மான்சி வியப்புடன் பார்க்க, அவள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்ததும் சத்யனுக்கு அப்பாடா என்று இருந்தது

மான்சி கண்களை மூடி மனமுருகி சுவாமியை வேண்ட, வெகுநாட்களுக்குப் பிறகு சத்யனும் கண்மூடி கடவுளை வேண்டினான்,, மான்சியின் தாழ்வுமனப்பான்மை போய் அவள் எல்லாப்பெண்களையும் போல இயல்பாக இருக்கவேண்டும் என்று வேண்டினான்

அந்த ஊர் முழுக்க ஆங்காங்கே கோயில்கள் இருக்க சத்யன் எல்லா கோயிலையும் சுற்றி காட்டினான்,, அந்த கோயிலின் கோபுரம் வித்தியாசமாக பார்த்து மான்சி வியந்துபோய் கேட்க,... வடநாட்டு முறைப்படி கட்டப்பட்ட கோபுரம் என்று சத்யன் சொன்னான்

கோயில் முழுவதும் சுற்றிவிட்டு , களைத்து போனாலும் முகத்தில் ஒரு சந்தோஷமான திருப்த்தியுடன் சத்யனைப் பார்த்து, " ரொம்ப நன்றி நீங்க கூட்டிட்டு வரலைன்னா என்னால இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது" என்று சொன்னவளை பார்த்து ஒரு புன்னகையை தந்துவிட்டு, காரில் ஏறினான்

கோயில் இருந்து திரும்பி வரும்போதுதான் சத்யனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது,.. அதாவது மான்சி இதுவரையில் சத்யனை மாமா என்று கூப்பிடவே இல்லை,, ஒரு ஒரு முறையும் எதையாவது குறிப்பிட்டு சொன்னாலே ஒழிய மாமா என்று கூப்பிடவே இல்லை,.. சின்ன வயசுல வீட்டுக்கு போனா அதிகமாக இல்லையென்றாலும் " என்ன மாமா எப்படியிருக்கீங்க' என்று கேட்பாளே , இப்போ என்னாச்சு என்று யோசித்தான் சத்யன் 


" என் காதலி எப்படியிருக்க வேண்டும்?"

" அவள் இதயத்தில் எப்போதும் இதமாக நானிருக்க வேண்டும் !

" அவள் விழிகள் எதை நோக்கினாலும் அதில் நான் தெரிய வேண்டும்!

" அவள் உடலின் மெல்லிய நறுமணத்தை என் நாசிகள் மட்டுமே நுகர வேண்டும்!

" அவள் கொலுசின் சத்தத்தை எங்கிருந்தாலும் நான் கண்டுபிடிக்க வேண்டும்!

" அவள் எனது சிறுசிறு தீண்டல்களை விழிமூடி ரசிக்க வேண்டும்!

" அவள் எனது கண்களை பார்த்து என் மனதை படிக்க வேண்டும்!

" அவள் தலைகவிழ்ந்து நின்றாலும் எனது செயல்களை உணர வேண்டும்!

கோயிலில் இருந்து மூவரும் வீடு திரும்பியதும் மதிய உணவு டேபிளில் தயாராக இருக்க, மான்சி சத்யனையும் பாண்டியனையும் சாப்பிட அழைத்தாள், இருவரும் பிறகு சாப்பிடுவதாக சொல்லிவிட்டு, சத்யனின் அறைக்குள் புகுந்துகொள்ள, மான்சி அவர்களுக்காக டேபிளில் காத்திருந்தாள்

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்த சத்யன், டேபிளில் கவிழ்ந்த நிலையில் மான்சி உறங்கியதை பார்த்ததும் சத்யன் பதறிப்போனான், வேகமாக டேபிளை நெருங்கி மான்சியின் தோளைத் தட்டி “ மான்சி” என்று எழுப்ப, உடனே கண்விழித்த மான்சி தோளில் இருந்த சத்யனின் கையை முறைப்புடன் பார்த்தாள்.

அவளின் முறைப்பை பார்த்ததும் பட்டென்று கையை எடுத்துக்கொண்டான் “ இல்லே உன்னை எழுப்பத்தான் தொட்டேன்” என்று சத்யன் சங்கடமாக சொல்ல, அவனிடமிருந்து வந்த விஸ்க்கியின் வாடை இருவரும் இவ்வளவு நேரம் என்ன செய்தார்கள் என்று காட்டிக்கொடுத்தது

மான்சியின் முகம் மேலும் கோபமாக “ ரெண்டுபேரும் இவ்வளவு நேரமா குடிச்சுகிட்டு இருந்தீங்களா, ஏதோ பேசிகிட்டு இருக்கீங்கன்னு நெனைச்சு நான் வெயிட்ப் பண்றேன் ச்சே” என்று எழுந்து தோட்டத்து பக்கமாக திரும்பினாள்

அவள் சாப்பிடாமல் போகிறாளே என்று சத்யன் வேகமாக அவளுக்கு முன்னால் போய் எதிரில் நின்று “ ஸாரி ஸாரி மான்சி சரி மாமா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரேன்னு சும்மா கொஞ்சமாதான் குடிச்சோம், ப்ளீஸ் இதைப் போய் பெரிசு பண்ணாதே மான்சி, வா சாப்பிடலாம்” என்று சத்யன் வற்புறுத்தி கூப்பிட்டான்

“இல்ல எனக்கு தூக்கம் வருது, நான் போறேன் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்றவள் பக்கவாட்டில் நகர்ந்து தோட்டத்தில் இருந்த பாத்ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொண்டாள்

சத்யனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, ச்சே இவ இப்படி முரண்டு பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா சரக்கடிக்கும் வேலையை நைட்டு வச்சிருப்பேன், இவளுக்கு சிறுவயதில் இருந்த ஈகோ பிரச்சனை கொஞ்சம் கூட மாறவில்லை,இவளை எப்படி மாத்துறது, ம்ஹூம் இவ திருந்தவே மாட்டா, தானும் வருந்தி மத்தவங்களையும் வருத்தும் இந்த குணம் எப்பத்தான் மாறுமோ, என்று எண்ணியபடி பெருமூச்சு விட்டான் சத்யன்,

ஆனால் சத்யனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, நான் முகம் மாறினால், மனம் வருந்தினால் மான்சிக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் புரிந்தது, கோயிலுக்கு வர சம்மதித்த போதே இதை தெரிந்துகொண்டான்

பாத்ரூம் கதவை திறந்துகொண்டு மான்சி வருவதை பார்த்ததும் வேகமாக வழிமறித்து நின்ற சத்யன், “ இதோபார் மான்சி இப்போ நீ சாப்பிட வரலைன்னா நானும் சாப்பிட மாட்டேன்” என்றவன் அதே வேகத்தில் திரும்பி தனது அறைகதவை திறந்து உள்ளே போய் கட்டிலில் படுத்துவிட்டான்

சிறிதுநேரத்தில் அறை கதவை தட்டி“ வாங்க சாப்பிடலாம்” என்று மான்சியின் குரல் கேட்டது

சத்யனுக்கு ஏற்கனவே பசி வயிற்றை கிள்ள, அதற்குமேல் பிகு பண்ணாமல் உடனே வந்து சேரில் அமர்ந்தான், அவனுக்கு முன்பே பாண்டியன் அங்கே தலைகுனிந்து அமர்ந்திருந்தார்,...

அவரை பார்க்கவே சத்யனுக்கு ஆச்சிரியமாக இருந்தது, பத்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்த பாண்டியனுக்கும் இவருக்கும் எவ்வளவு வித்தியாசம், ஒரு சிகரெட் பிடிக்ககூட மகளை நினைத்து பாண்டியன் பயப்படுவது சத்யனுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது, விஸ்கியை கூட இரண்டு ரவுண்டுக்கு மேலே வேண்டாம் என்று எழுந்துகொண்டார்

சத்யன் காலையில் இருந்து மான்சியிடம் இன்னொரு விஷயமும் கவனித்து வந்தான், அதாவது ஒரே பார்வையால் எதிராளியை அடக்கும் திறமையை பார்த்தான், சில பெண்களுக்கு மட்டுமே உடலும் குரலும் நளினமாக இருந்தாலும், பார்வையில் மட்டும் ஒரு கம்பீரம் இருக்கும், அந்த கம்பீரமான பார்வை மான்சியிடம் இருந்தது,



இது நல்லதா கெட்டதா என்று சத்யனுக்கு புரியவில்லை, தன்னை பார்வையால் அவள் அடக்கிவிடுவாள் என்று சத்யன் நம்பவில்லை, ம்ஹும் எத்தனை பேரை நாம அதட்டி அடக்கியிருக்கோம் நம்மளை இவ என்னப் பண்ணமுடியும் என்று நினைத்தான்

“ சாப்பாட்டுல கையை வச்சுகிட்டு என்ன யோசனை, ம் சாப்பிடுங்க” என்ற மான்சியின் குரல்தான் சத்யனின் சிந்தனையை களைத்தது

சத்யன் அவளை நிமிர்ந்து பார்த்தான், அதே பார்வை, எதிராளியை நேருக்கு நேராக சந்திக்கும் நேர் பார்வை, ஒரு மகாராணியை போல் உணர வைக்கும் பார்வை, அந்த காலத்து மகாராணிகளுக்கும் வீரப்பெண்களுக்கும் இப்படித்தான் பார்வை இருந்திருக்கும் என்று எண்ணினான்

தன் முகத்தையே சத்யன் பார்பதை உணர்ந்து புருவத்தை உயர்த்தி கண்ணாலேயே என்ன என்று மான்சி கேட்க ... ம்ஹூம் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான்

‘அட இப்பத்தான் இவளால என்னை அடக்கமுடியாது என்று சொன்ன, இப்போ இவ்வளவு அவசரமா சாப்பிடுற’ என்று ஏளனம் மனதை தண்ணீர் குடித்து அடக்கினான் சத்யன்



No comments:

Post a Comment