Friday, July 10, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 10

சத்யன் தனது வார்த்தைகள் இனிமேல் எடுபடாது என்பது புரிய தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.. ச்சே நம்ம கிட்ட செல்போன் இருந்தாலாவது ராஜாராமனுக்கு போன் பண்ணி தகவல் சொல்லலாம் என்று நினைத்தான்

பிறகு ஏதோ யோசனை வர ஏன் வெளிய போய் ஒரு ரூபாய் காயின் பூத்துல இருந்து பேசலாமே என நினைத்தவன் தனது யோசனையை செயலாக்க உடனே எழுந்து வாசக்கதவை நோக்கிப் போகவும் கௌசல்யா உள்ளே வரவும் சரியாக இருந்தது

சத்யனை பார்த்ததும் முகம் முழுவதும் புன்னகையுடன் "எங்க ஏன் மாமா தங்கச்சி .. செவசெவன்னு அம்புட்டு அழகாமே ஊரே பேசிக்குது, ஆமா நீ எங்க கெளம்புற மாமா. உங்க அண்ணே உன்னைய பத்தரமா பார்த்துக்கச் சொல்லிதா என்னை அனுப்புச்சுது எப்படி நீயே உள்ளாற போறியா இல்ல நான் உன்னைய இழுத்துகிட்டு உள்ளாற போகவா" என மிரட்டலாக கேட்க



" எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டீங்கல்ல பின்னே பேசமாட்டீங்க" என்று சலிப்புடன் கூறிய சத்யன் கட்டிலில் போய் தொப்பென்று உட்கார்ந்தான்

உள்ளே வந்த கௌசல்யா அங்கே ஓரமாக நின்றிருந்த மான்சி பார்த்ததும் வாயை ஆவென்று பிளந்து தனது விரல்களை தாடையில் வைத்து " அடியாத்தி என்ன இது கோயில் சிலையாட்டம் இருக்கீக. யம்மாடி என் கண்ணே பட்டுரும் போலருக்கே, ஆமா நீங்க ஏன் நிக்கிறீங்க ஏய் பூங்கொடி ஏளா என் தங்கச்சிய நிக்க வச்சிருக்க, அவுகளுக்கு கேட்க ஆளில்லைனு மட்டும் நெனைக்காதே, நா இருக்கேன் ஆமா சொல்லிப்புட்டேன்" என்று வாய் மூடாமல் பேசிய கௌசல்யாவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள் மான்சி

மான்சிக்கு முதல் பார்வையிலேயே கௌசல்யாவை ரொம்ப பிடித்துப்போனது,, அவளை பார்த்து புன்னகையுடன் தலையசைக்க கௌசல்யாவும் அவள் கைகளை பற்றிக்கொண்டாள்

கௌசல்யா மான்சியை பார்த்து கண்சிமிட்டி விட்டு சத்யன் அருகில் கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டு " ஏ மாமா நேத்து இவுகல காருக்குள்ள வச்சு என்னமோ பண்ணிப்புட்டயாமே .. அப்புடி என்னா மாமா பண்ண............ .உனக்கு ஒன்னுமே தெரியாது ஏன் மவன் பச்சப்புள்ள அப்புடின்னு உங்காத்தா பீத்திக்குமே.. இப்போ பாரு அவுக மவன பாவம் என் தங்கச்சிய என்னா பாடு படுத்தியிருக்காகன்னு... சரி சரி என்கிட்ட மட்டும் சொல்லு மாமா நா யார்கிட்டயும் சொல்லமாட்டேன் " என்று ரொம்ப ஆர்வமாக கேட்பது போல் நக்கல் செய்ய

சத்யன் கௌசல்யாவை முறைத்துவிட்டு மான்சியை எரித்துவிடுவது போல பார்த்தான் ... மான்சிக்கு சிரிப்பு வர அதை அடக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து கொண்டாள்

அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த ஊரே செல்லத்தம்மன் கோயிலில் கூடியிருக்க .. சத்யன் சாதரண கூரை வேட்டியில் இருக்க ,, மான்சி சிவப்பில் வெள்ளை கட்டம் போட்ட கைத்தறி கூரைப் புடவையில் இருந்தாள்.. பூங்கொடியின் புதிய சிவப்பு ரவிக்கை அவளின் மெல்லிய தேகத்துக்கு பொருந்தாமல் தொளதொளவென்று இருந்தது.. இருவரின் கழுத்திலும் இருந்த சம்பங்கி மாலை அவர்களை மேலும் தேவர்களை போல காட்டியது

எந்தவித ஒப்பனையும் இல்லாமல் ஓவியப் பாவையாக இருந்த மான்சியை அந்த ஊரே ஏதோ எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்தனர் ... ஆனால் அவள் அழகை பார்த்து ரசிக்கவேண்டியவனோ திரும்பிக்கூட பார்க்காமல் மான்சியை நோகடித்தான்

கோயில் பூசாரி அம்மனுக்கு அபிஷேகம் முடித்து கற்பூரம் காட்டிவிட்டு அம்மனின் பாதத்தில் இருந்த தாலியை எடுத்துவந்து ஊர் பெரியவரிடம் கொடுக்க அவர் அந்த மங்களநானை சத்யனிடம் கொடுத்தார்

பெரும் தயக்கத்துடன் அதை வாங்கிய சத்யன் திரும்பி தனது தாயை பார்க்க தனலட்சுமி கண்கள் கலங்க இரண்டு கையையும் உயர்த்தி ஆசிர்வதித்து கட்டுப்பா என்பதுபோல் தலையசைக்க சத்யன் மான்சியின் பக்கம் திரும்பி அவளின் தங்கக் கழுத்தில் தங்கமில்லாத அந்த மஞ்சள் முடிந்த தாலியை கட்டினான்

கூடியிருந்த அனைவரும் அட்சதையை தூவி வாழ்த்த,, சில இளவட்டங்கள் உற்ச்சாகத்தில் ஓவென்று கூச்சலிட்டு வாழ்த்தினர் .. சத்யனும் மான்சியும் முதலில் அந்த பெரியவரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு பிறகு துரை தனலட்சுமி கால்களில் விழுந்து வணங்கினர்

துரையும் தனலட்சுமியும் கண்கலங்க அவர்களை வாழ்த்தி நெற்றியில் திருநீறு பூசிவிட்டனர் ..

கிராமமக்களின் பலத்த ஆதரவோடு ஆரவாரத்துடன் அமர்க்களமாக ஆனால் மிக எளிமையாக மான்சி எனும் கோடிஸ்வரிக்கும் , சத்யன் எனும் ஏழை விவசாயிக்கும் திருமணம் நடந்தது 


சத்யன் மான்சியின் கழுத்தில் தாலி கட்டியபிறகு அனைவரும் கோயில் மண்டபத்திலேயே சாப்பிட அமர்ந்தார்கள்.. சரவணனும் கௌசல்யாவும் அனைவரையும் உட்கார வைத்து உணவு பரிமாறினர்.

ஊர் மக்கள் அனைவரின் முகத்திலும் இந்த திடீர் கல்யாணத்தால் சந்தோஷத்தின் சாயல் தெரிய.. சத்யனின் முகத்தில் மட்டும் சோகம் கோபம் இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு கலவையான உணர்ச்சி இருந்தது... கோயில் மண்டபத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான் மாலை நாலு நாற்பது ஆகியிருந்தது.

சத்யன் திரும்பி மான்சியை பார்த்தான், அவள் கழுத்தில் மாலையோடு பதுமை போல் ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருக்க அவளுக்கு எஸ்கார்ட் மாதிரி இருபக்கமும் பூங்கொடியும் தனலட்சுமியும் நின்றிருந்தார்கள்

சத்யன் வேகமாக மான்சியை நெருங்கி “ ஏய் உன்னோட மொபைல் போன் எங்க அதை குடு” என்று முறைப்பாக கேட்க

“ இப்போ எதுக்குடா செல்லு போனு கேட்குற அதை என்ன பண்ணப்போற” என மருமகளுக்கு முன்பு தனலட்சுமி மகனை கேட்டாள்

“ ம் அவங்க வீட்டுக்கு தகவல்,.. அம்மா இந்த நேரம்தான் இவ காலேஜில் வர்ற நேரம் இன்னும் கொஞ்சநேரத்தில் இவளை எல்லாரும் தேட ஆரம்பிச்சுடுவாங்க,.. அதுக்குள்ள அவங்களுக்கு தகவல் சொல்லனும்”,.. என்று தன் அம்மாவிடம் சொன்னவன் மான்சியிடம் திரும்பி “ஏய் மொபைல் எங்க” என்று மறுபடியும் அதட்டி கேட்டான்

அவனுடைய கடுமையான அதட்டல் மான்சிக்கு முதன்முறையாக லேசாக உதறலெடுக்க “ மொபைல் என்னோட பேக்கில் இருக்கு என்று” என்று தடுமாறியபடி கூறினாள் ..

உடனே சத்யன் பூங்கொடியிடம் திரும்பி “ பூங்கொடி நீ யார்கிட்டயாவது சைக்கிள் வாங்கிகிட்டு வீட்டுக்கு போய் அவ பேக்குல இருக்கிற போனை எடுத்துட்டு வா சீக்கிரமா போ பூங்கொடி” என்று அவசரமாக சொல்ல

அண்ணன் சொல் தட்டாத பூங்கொடி அங்கிருந்தவர்களில் யாரிடம் சைக்கிள் இருக்கிறது என்று தேடிப்பிடித்து ஒருவரிடம் சைக்கிளை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு மெரித்தாள்

அவள் போன சிறிதுநேரத்திலேயே மான்சியின் மொபைலுடன் திரும்ப வந்து அதை சத்யனிடம் கொடுத்தாள்...

அதை சத்யன் வாங்கி மான்சியிடம் நீட்டி “ ம் உங்கப்பா நம்பருக்கு போன் பண்ணி நீ என்னப் பண்ண, இப்போ என்ன நடந்தது இதெல்லாத்தையும் சொல்லு” என்று கூற

மான்சி பலத்த அதிர்ச்சியுடன் விக்கித்துப்போய் அவனைப்பார்த்து “ நானா... நானா சொல்லனும்” என்று கேட்க

“ ஆமா நீதான் சொல்லனும் இது எல்லாமே உன் இஷ்டப்படி தானே நடக்குது அதனால இதையும் நீதான் சொல்லனும்” என்று எகத்தாளமாக சொன்னான் சத்யன்

அதற்க்குள் தனலட்சுமி முன்வந்து “ டேய் மவனே அந்தப்புள்ள எப்புடிலே சொல்லும்,.. நா உங்க சின்ன தாத்தாவை விட்டு இவ அப்பாருகிட்ட பேசச்சொல்லுறேன்” என்று சொல்ல

“ ம்ஹூம் அதெல்லாம் சரிவராது இவதான் சொல்லனும்” என்று தனது தாய்க்கு பதில் சொன்னவன் மான்சியின் பக்கம் திரும்பி “ ஏய் இந்த விஷயத்துலயாது என் பேச்சுக்கு மரியாதை குடு,.. உங்கப்பாவுக்கு போன் பண்ணி தகவல் சொல்லு ம்” என்று குரலில் வெறுப்பு இழையோட சொல்ல

மான்சி மிரட்சியுடன் அவனை பார்த்துக்கொண்டே போனை வாங்கி தனது அப்பாவின் நம்பருக்கு டயல் செய்துவிட்டு மீண்டும் சத்யனை பார்த்து கண்கலங்க “ நீங்க சொல்லுங்களேன்” என்று கெஞ்சுதலாக கேட்க

இவ்வளவு நாட்களாக அவனறியாத அவளின் கண்ணீர் பார்வையும் கலங்கிய முகமும் சத்யனின் மனதை கசக்கி பிழிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு “ ம்ஹூம் நீதான் பேசனும்” என்று என்று உறுதியாக சொன்னான்

நம்ம பேச்சை நம் மகன் கேட்க்கும் சூழ்நிலையில் என்பதை உணர்ந்த தனலட்சுமி சாப்பிடுபவர்களை கவனிப்பதற்காக அங்கிருந்து சென்றுவிட்டாள்

அதற்க்குள் எதிர் முனையில் எடுக்கப்பட்டு “மான்சி என்னம்மா” என்று ராஜாராமனின் குரல் கேட்க...

மான்சி வேறு வழியில்லாமல் போனை காதில் வைத்து குரல் கண்ணீரில் தழும்பி தடுமாற “ டாடி” என்று மட்டும் சொல்ல

மறுமுனையில் “ சொல்லுடா கண்ணம்மா அப்பா கடையில இருக்கேன்.. நீ காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்துட்டியா” என்று ராஜாராமன் அக்கரையுடன் மகளை விசாரிக்க

மான்சிக்கு அடிவயிற்றில் இருந்து குமுறிக்கொண்டு வந்தது.. தன் தகப்பனின் பாசமிகுந்த குரலை கேட்டதும் தான் இப்போது என்னை சொல்லுவது என்று புரியாமல் அவள் தவிப்புடன் சத்யன் ஏதாவது உதவுவானா என்பதுபோல் ஏக்கத்துடன் அவனை பார்க்க

அவன் ம்ஹூம் என்பதுபோல தலையசைத்து பேசு என்பதுபோல கையையும் அசைத்து அவள் ஏக்கப்பார்வைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்

அவனின் அலட்சியம் மான்சியின் மனதில் ஒரு வீராப்பை விதைக்க, எனக்கென்ன பயமா என்பதுபோல அவனை பார்த்து தலையை சிலுப்பி கழுத்தை வெட்டித் திருப்பிக்கொண்டு சட்டென போனை காதில் வைத்து “ அப்பா நான் நம்ம வீட்டுல டிரைவரா வேலை செய்த சத்யனை ரொம்ப லவ் பண்ணேன்.. அவரு வேலைவிட்டுட்டு வந்ததும் என்னால அவரை பார்க்காம இருக்கமுடியலை அதனால நான் காலையில காலேஜ் போகாம. அங்கருந்து கிளம்பி அவரோட ஊரு பாலமேட்டுக்கு வந்துட்டேன்,.. இங்கே அவருக்கும் எனக்கும் ” என்று பாதியில் நிறுத்திவிட்டு எச்சில் விழுங்கி வரண்டுபோன தொண்டையை ஈரப்படுத்திக்கொண்டு ,” டாடி எனக்கும் அவருக்கும் இங்கேயிருக்கிற அம்மன் கோயில்ல மேரேஜ் ஆயிடுச்சு டாடி” என்று மான்சி சொல்லிமுடிக்குமுன்னே "என்னது" என்ற ராஜாராமின் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்க

மான்சி கண்களில் வழிந்த கண்ணீருடன் கையிலிருந்த போனையே வெறித்துப் பார்த்துவிட்டு ஆப் செய்து அவள் அமர்ந்திருந்த சேரில் போட்டாள்

அவளின் கண்ணீர் வழியும் முகத்தை பார்த்து மனம் துணுக்குற்றாலும். அதை அடக்கியவாறு “ என்ன இப்போ ஏன்டா பெத்தவங்களை விட்டுட்டு இங்க வந்தோம்னு வருத்தமா இருக்கா” என்று தனிந்த குரலில் கேட்க

அவன் வார்த்தைகள் அவளின் நெஞ்சில் முள்ளாக தைக்க, நான் செய்த தவறை எனக்கு அழுத்தமாக சொல்லி புரியவைத்து எனது காதலை பொய்யாக்க முயல்கிறான், என்று மனதில் நினைத்துக்கொண்டாள்,..

வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்த மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “நான் ஏன் வருத்தப்படனும், என் சொர்க்கம் எங்க இருக்குன்னு எனக்கு புரிஞ்சுது அதைத்தேடி நான் வந்தேன் இதுல வருத்தபட என்ன இருக்கு” என்று பட்டென சொன்னாள்

“ அப்போ ஏன் அழுத” என்றான் சத்யன் விடாமல்

அவன் முகத்தையே ஒருநிமிடம் வெறித்த மான்சி “ இப்போ உங்களுக்கு என்ன வேனும், என்ன என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க,. இதோ இப்ப நீங்க கட்டிய தாலி இதை கழட்டி உங்ககிட்ட குடுத்துட்டு நான் எங்கப்பாக்கூட போகனும் நெனைக்கிறீங்களா,, அது நான் பிணமாகும் போதுதான் நடக்கும் அதுவரை வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு தான் அமர்ந்திருந்த சேரில் இருந்த மொபைலை கையில் எடுத்துக்கொண்டு தொப்பென சேரில் அமர்ந்தாள்

அவளுடைய வார்த்தைகள் சத்யனின் முகத்தில் அறைந்தது போல இருந்தது, யப்பா என்னா மாதிரி பேசுறா இவ, என்று நினைத்தவன அவளை சமாதானப்படுத்தும் விதமாக “சரி வா சாப்பிடலாம்”என்று அவளை அழைத்தான்

“ எனக்கு வேனாம் நீங்க வேனும்னா போய் சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு முகத்தை திருப்ப

“ மதியானமும் நீ சரியா சாப்பிடலை,.. வா மான்சி” என்று மனைவியின் வயிற்றை பற்றி கவலைப்படும் உண்மை கணவனாய் சத்யன் கவலை குரலில் மான்சியை அழைத்தான்

மான்சி பதில் சொல்லாமல் உம்மென்று இருக்க... சத்யன் அங்கிருந்து நகர்ந்து தனலட்சுமியிடம் ஏதோ சொல்ல, அவள் சிறு புன்னகையுடன் மான்சியிடம் வந்து “ வந்தவுக எல்லா சாப்புட்டாச்சு வாம்மா வீட்டு ஆளுகதான் சாப்பிடனும்” என்று கூப்பிட மான்சி மறுபேச்சின்றி எழுந்து மாமியாருடன் சாப்பிட போனாள்

அனைவரும் சாப்பிட்டுவிட்டு இருக்கும் வேலைகளை முடித்து வீட்டுக்கு வர மணி 5-30 ஆனது,.. மணமக்களை வெளியில் நிறுத்தி சுமங்கலி பெண்கள் ஆரத்தி சுற்றி சுண்ணாம்பு கலந்த மஞ்சள் நீரை தொட்டு அவர்களின் நெற்றியில் வைக்க,

ஆரத்தி சுற்றிய கௌசல்யா ஆரத்தி தட்டில் சத்யன் போட்ட ஐம்பது ரூபாயை எடுத்து அவனிடமே கொடுத்துவிட்டு " இந்த காசெல்லாம் பத்தாது ஐநூறு ரூவா போடு மாமோய்" என்று தகராறு செய்துகொண்டு இருக்க... அப்போதுதான் ஊருக்குள் புழுதியை கிளப்பிக்கொண்டு இரண்டு கார்கள் வந்து நின்றது

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புழுதி பறந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க,... மான்சி உள்ளம் பதற அருகிலிருந்த சத்யனின் வலதுகையை பற்ற, சத்யன் அவளை முறைத்துப் பார்த்து பற்றியிருந்த கையை தட்டிவிட்டான்




அவனுடைய புறக்கணிப்பால் ... நாம் எடுத்த முடிவு தவறோ என்று முதன்முறையாக மான்சி தோன்றியது

முதலில் நின்ற காரில் இருந்து ராஜாராமனும் நீலவேணியும் இறங்கி சத்யன் மான்சியை நோக்கி வர ... அடுத்த காரிலிருந்து மான்சிக்கு அறிமுகமில்லாத சிலர் இறங்கி வந்தனர்

உடனே ஊர்மக்கள் சத்யன் மான்சியை சுற்றி அரணாக நின்றுகொண்டு வந்தவர்களுக்கு வழிவிடாமல் செய்ய .. " எதுக்காக எல்லாரும் வழிமறிச்சு நிக்கிறீங்க அவங்க வரட்டும்" என்ற சத்யன் கூட்டத்தினரை விலக்கி தள்ளிவிட்டு , மான்சியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ராஜாராமன் முன்னால் வந்து நின்றான்

அவர்கள் இருவரையும் ஏறஇறங்க பார்த்தார் ராஜாராம், நீலவேணியோ கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் தனது மகளையே வேதனையுடன் பார்த்தாள்

" ஸாரி மம்மி, ஸாரி டாடி " என்று மான்சி தனது பெற்றோரை நெருங்க, .. ராஜாராமன் தன் மனைவியின் கையை பற்றிக்கொண்டு இரண்டடி பின்னால் வந்து,... கிட்டே வராதே என்பதுபோல் மான்சியை நோக்கி கைகாட்டி தடுத்தார்

மான்சியிம் பிரேக்கடித்து போல் அப்படியே நின்றாள்,..சத்யன் மான்சியின் அருகில் வந்து நின்று " சார் என்னை மன்னிச்சிடுங்க" என்று வருத்தமான குரலில் கூற

அப்போது டிரைவர் மாணிக்கம் முன்னால் வந்து " அடப்பாவி ஐயா உன்னை எவ்வளவு நம்பினார் , இப்புடி அன்னமிட்ட வீட்டுலயே கன்னக்கோல் வச்சிட்டியே இது நல்லாருக்காடா" என்று ராஜாராம் குடும்பத்தின் மேல் தனக்கு இருக்கும் விசுவாசத்தை காட்டினான்

உடனே வெகுண்டு முன்னால் வந்த மான்சி " மாணிக்கம் அண்ணா அவரை எதுவும் சொல்லாதீங்க,.. அவர் ரொம்ப நல்லவர், இந்த கல்யாணத்தில் அவருக்கு இஷ்டமே இல்லை,.. நான்தான் பிடிவாதமா இருந்து இவரை மேரேஜ் பண்ணிகிட்டேன், எது சொல்றதா இருந்தாலும் என்னைச் சொல்லுங்க" என்றவள் தன்னை பெற்றவர்களிடம் திரும்பி

" அப்பா அம்மா நான்தான் இவரை விரும்பினேன்,.. நான் என்னோட விருப்பத்தை இவர்கிட்ட சொன்னபோது இவர் என் லவ்வை ஏத்துக்காம மறுத்துட்டார், இன்னிக்கு காலையில வேலைவிட்டுட்டு அவர் வந்ததுக்கு காரணமும் அதுதான், அப்புறமா நான்தான் அவரை தேடிவந்து இந்த ஊர் ஆளுங்க எல்லார்கிட்டயும் என் லவ்வை சொல்லி அவர்கூட சேர்த்து வைக்க சொன்னேன்,அப்பவும் இவர் மேரேஜ்க்கு ஒத்துக்கலை நான் செத்துப்போய்டுவேன்னு மிரட்டுனதுக்கு அப்புறம்தான் என்னை மேரேஜ் பண்ணிகிட்டார்,.. அதனால அவருமேல எந்த தப்பும் இல்லை டாடி,.. ப்ளீஸ் டாடி நம்புங்க " என்று ராஜாராமனிடம் வேண்டி கேட்க

அவர் எதுவுமே பேசாமல் இருக்க ... " ஏன்டி எனக்கு உடனே புருஷன் வேனும்னு சொல்லியிருந்தா எங்கயாவது எவனையாவது தேடிப்பிடிச்சு உனக்கு கல்யாணத்தை பண்ணியிருப்போமே,.. போயும் போயும் இவனைத்தானா நீ செலக்ட் பண்ணனும், ஒரே நாள் எங்களோட மானத்தை வாங்கிட்டயேடி" என்று வார்த்தைகளில் கடுமையை பிரயோகித்தாள் நீலவேணி

தனது மனைவியை கைபிடித்து தடுத்த ராஜாராம் சத்யனை ஏறெடுத்துப் பார்த்து "ஒரு மாசத்துல என் பொண்ணு மனசை கெடுத்து ,.. என் குடும்பத்தையே நாசம் பண்ணிட்டயே, உன் என் புள்ளை மாதிரி நெனைச்சு மரியாதை கொடுத்தேனே, அதுக்கு நீ காட்டுற நன்றியாடா இது" என்று கோபத்தில் குரல் நடுங்க உடல் உதற சத்யனிடம் கேட்க

சத்யன் என்ன சொல்வது என்று புரியாமல் தலைகுனிந்து நிற்க்க,.. " டாடி அவரை எதுவும் பேசாதீங்கன்னு சொன்னேன், எல்லாத்துக்கும் நான்தான் காரணம்" என்று மான்சி தனது அப்பாவின் கையை பற்ற

பட்டென்று அவள் கையை உதறிய ராஜாராம் .. அவளை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு , " இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை நாங்களும் உன்னை தலைமுழுகிர்றோம், நீயும் உன்னை பெத்தவங்க செத்துட்டுதா நெனைச்சு தலைமுழுகிரு" என்று கூறிவிட்டு தன் மனைவியின் கையைபிடித்து இழுத்துக்கொண்டு காரில் போய் ஏற அடுத்த நிமிடம் கார் மறுபடியும் புழுதியை வாறி தூற்றியபடி கிளம்பியது

எதையோ பெரிதாக எதிர்பார்த்த ஊர் மக்கள் ஒன்றுமே நடவாமல் போக உச்சுக் கொட்டியவாறு அங்கிருந்து கலைந்தனர்,... மான்சி விக்கித்துப் போய் நிற்க்க, சத்யன் மட்டும் வீட்டுக்குள் தனியாக நுழைந்தான்,.. கௌசல்யா வந்து குமுறிக்கொண்டிருந்த மான்சியை தன் தோளில் சாய்த்து வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்




" காதலித்து திருமனம் முடிந்த பின்பும்...,

" எனக்கு காதலில் தோற்றுப்போனது...

" போல் தான் உள்ளது,.. ஏனென்றால்,...

" உன்னைப்போல் காதலிக்க...

" எனக்கு தெரியவில்லை.......

" நாம் காதலிக்கும் போது ....

" நான் உன்னிடம் எதுவும் பேசவில்லை....

" நீயும் என்னிடம் எதுவும் பேசவில்லை...

" ஆனால் இன்று நமது திருமணத்திற்கு பிறகு.

" ஊரே நம்மை பற்றி ஏதேதோ பேசுதடி...


No comments:

Post a Comment