Monday, July 20, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 9

ஜனனிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரோ அவளின் இதயத்தை இரண்டாக பிளந்தது போல் ஒரு உணர்வு. நேற்று நடந்த சம்பவங்கள் அவள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்று கார்த்திக் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு மறக்க முடியாத துயரத்தை அளித்தன. அவனிடம் இருந்து தன் அதரங்களை விடுவித்து கொண்ட ஜனனி கண்களில் இருந்த வழிந்த கண்ணீரை துடைக்க கூட தோணாமல் வீட்டின் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள். 

ஆட்டோ பிடிக்க வேண்டும் என்று அவளுக்கு தோணவில்லை, நடந்தே ஹாஸ்டல் வந்த அவள் தனது படுக்கையில் அமர்ந்து முகத்தை தனது இரண்டு கைகளால் மூடிக் கொண்டு கதற ஆரம்பித்தாள். தன்னை நம்பி அனுப்பிய அம்மா அப்பாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை. அப்படியே படுக்கையில் படுத்து கிடந்த அவள் உடல் களைப்பாலும் மனகளைப்பாலும் அப்படியே அயர்ந்து உறங்கி விட்டாள். 



எங்கேயோ செல்போன் அடிக்கும் ஓசை கேட்க, கஷ்டபட்டு கண் விழித்தாள். யாராக இருக்கும் என்ற யோசனையில் செல்போனின் டிஸ்ப்ளே பார்க்க மோகன் பெயர் வந்தது. போனை எடுத்து கொண்டே சுவிட்ச் ஆன் செய்து கொண்டே, சுவர் கடிகாரத்தை பார்க்க நேரம் 9மணி. அடுத்த முனையில் இருந்த மோகனின் குரலில் பதட்டம். "ஜனனி என்ன இன்னும் வேலைக்கு வரலையா? இப்போ எங்கே இருக்க
? "

"என்ன அண்ணா என்ன ஆச்சு?"

"இங்கே பிரச்சனையா இருக்கு. காலை எட்டுமணி அளவில ஒரு பெரிய கூட்டம் வந்து தூங்கிட்டு இருந்த கார்த்திக்கை நல்லா போட்டு அடிச்சுருக்காங்க. அவனுக்கு கழுத்துல, கைல மற்றும் கால்ல காயங்கள். அவன் போடுற சத்தத்தை கேட்டு பக்கத்துக்கு வீட்டுகாரங்க ஓடி வர அவனை அடிச்சு கொண்டு இருந்த கிட்டத்தட்ட பாத்து பேரை விரட்டி போனதில்ல ரெண்டு பேரை மட்டும்தான் பிடிக்க முடிஞ்சது.அவங்க உச்ச நடிகரின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவங்க. இன்னைக்கு காலைல பேப்பர்ல கார்த்திக் உச்சநடிகரை திட்டியதாக வந்த செய்தியால் கோபப்பட்டு வந்துரிக்காங்க". 

"அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு?"

"நாங்க இப்போ கார்த்திக்கை தேவகி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம். நீ கொஞ்சம் வந்தா உதவியா இருக்கும்" என்று சொல்ல அப்போதுதான் ஜனனிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் போது கதவை வெறுமனே மூடிவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.கார்த்திக்கும் தூங்கி கொண்டு இருந்ததால் கதவை பூட்டி இருக்கும் வாய்ப்பு இல்லை என்று உணர்ந்தாள். இப்போது தான் அவள் செய்த தவறு அவளுக்கு உரைத்தது. 

"சரி மோகன் அண்ணா நான் இப்பவே கிளம்பி வரேன்" என்று சொல்லி ஐந்து நிமிடத்தில் தேவகி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.


அதற்குள் எமெர்ஜென்சி அறையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்த கார்த்திக்கு முதல் உதவி செய்யப்பட்டு வேறு அறைக்கு மாற்றப்பட ரிசப்சனில் கார்த்திக் அட்மிட் செய்யபட்ட அறை எண் விசாரித்து விரைந்து சென்றாள். வாசலில் காத்து இருந்த மோகனிடம் "என்ன அண்ணா அவருக்கு என்ன ஆச்சு". 

"அவனுக்கு கைகால் அடிபட்டது அந்த அளவுக்கு பிரச்னை இல்லை கட்டு போட்டுரிக்காங்க. ஆனா கழுத்து எலும்பு முறிஞ்சுருக்குமோ அப்பிடின்னு சந்தேகம் இருக்கு. அவன் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கான். நீ உள்ளே போய் பாரு" என்று சொல்ல, கதவை திறந்து உள்ளே படுத்து இருந்த கார்த்திக்கை பார்த்த உடன் மனது பதறியது. கை கால் மற்றும் கழுத்தை சுற்றி கட்டு போட்டு இருந்தது. உதடுகள் வீங்கி இருக்க கார்த்திக்கை அவளுக்கு அடையாளம் கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. 

மோகனிடம் "இப்போ என்ன அண்ணா செய்வது" என்று கேட்க

"நான் ஷூட்டிங்கை எல்லாம் ஒரு வாரம் ரத்து பண்ண போறேன். அவனுக்கும் யாரும் இல்லாததால நான் தான் அவன் கூட இருக்கணும்" என்று பரிதாபமாக சொல்ல
"அப்போ ஷூட்டிங் கேன்சலானா அதிக நஷ்டம் ஆகுமே" என்று கேட்க

வேற வழி இல்லை. அவனுக்கு வேற யார் இருக்கா" என்று கேட்க, ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை

"அண்ணா எனக்கு ஒரு யோசனை தோணுது, நீங்க ஷூட்டிங் எதுவும் கான்சல் பண்ண வேண்டாம். நான் வேணாம் ஹாஸ்பிடல்ல பகல் முழுக்க இருந்துக்கிறேன். நீங்க பகல் முழுக்க ஷூட்டிங் முடிச்சுட்டு நைட் எட்டு மணிக்கு வந்து என்னை ரிலீஸ் பண்ணினா போதும்"என்று சொல்ல


"நீ சொல்றது நல்ல யோசனைதான். சரி, அது மாதிரியே பண்ணிடலாம்" என்று சம்மதம் தெரிவித்தான். ஜனனிக்கு தான் ஏன் அப்படி பேசினோம் என்று தெரியவில்லை, ஆனால் கார்த்திக் கஷ்டப்படும் போது அவனை அப்படியே விட்டு விட்டு போக அவளுக்கு மனமில்லை. அதற்குள் எக்ஸ்ரே எடுத்த ரிசல்ட் வர டாக்டர் மோகனை அழைத்தார். மோகனுடன் ஜனனியும் செல்ல, டாக்டர் "கழுத்தில் சிறிய ஹேர்லைன் பிராக்சர் இருப்பதால் கழுத்தை சுற்றி மட்டும் மப்ளர் போன்ற கட்டு போட சொல்லி இருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். ஆனால் அடுத்த ஒரு மாதம் கழுத்தை வேகமாக அசைக்க கூடாது" என்றும்சொல்ல, மோகனுக்கு நிம்மதி ஆனது.

"ஜனனி இனிமே ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை, நீ சொன்ன மாதிரி பகல்ல நீ இருந்துக்கோ, இரவு எட்டு மணிக்கு நான் வரேன்"என்று சொல்லி விட்டு, அவளை கார்த்திக் இருந்த ரூமின் உள்ளே இருந்த சேரில் அமர சொல்லி விட்டு ஷூட்டிங் கிளம்பினான்.

மதியம் இரண்டு மணி அளவில் கண் விழித்த அவனுக்கு ஜனனி ஜூஸ் மற்றும் அரிசி கஞ்சி மெதுவாக ஸ்பூன் வழியாக ஊட்ட, அவளை கண்ட சந்தோசத்தில் கார்த்திக் அவளை கண்களால் பருகியபடி சாப்பிட்டான். மூன்று மணி அளவில் உச்ச நட்சத்திரம் அவனை பார்க்க வர கூட்டம் அதிகமானது. நடந்ததை கேள்விபட்ட அவர் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். கார்த்திகை அடித்தவர்கள் ரவுடிகள் என்றும் அவர்கள் யாராக இருந்தாலும் அவரை போலிஸ் கைது செய்ய அவர் ரசிகர் மன்றம் ஒத்துழைக்கும் என்று சுற்றி இருந்த பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். கார்த்திக் கைகூப்பி அவருக்கு நன்றி தெரிவிக்க அவர் திரும்பி சென்றார். 

பிறகு வலி அதிகம் இருந்ததால் உறக்கம் வராத கார்த்திக் ஜனனியின் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவளுக்கு பாவமாக இருந்தது. ஜனனிக்கு கார்த்திக் மேல் தாங்க முடியாத கோபம் இருந்தாலும், இப்படி அடி வாங்கி கிடப்பது கண்கலங்க வைத்தது. அவனை பார்த்தால் தன் மனம் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதால், பார்ப்பதை தவிர்த்தாள். 



இரவு வந்து மோகன் அவளை ரிலீஸ் செய்ய, அப்படியே மூன்று நாட்கள் பறந்து சென்றன. மூன்றாம் நாள் மாலை டாக்டரை சந்தித்த போது அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்வதாக சொல்ல, ஜனனி இனி தனக்கு வேலை இல்லை என்று உணர்ந்தாள். அந்த மூன்று நாள் இடைவெளி அவளுக்கு ஓரளவு சிந்திக்கும் திறமையை அளித்திருந்தது. 


இரவு எட்டு மணிக்கு வழக்கம் போல் வந்த மோகனிடம் தான் கோவை திரும்பவதாக சொன்ன போது மோகனுக்கு நம்ப முடியவில்லை.என்ன காரணம் என்று கேட்க அவளுக்கு உண்மையான காரணம் சொல்ல விரும்பவில்லை. "அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் செய்வதாகவும் அவர்களுடன் கொஞ்ச நாள் இருந்து விட்டு பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்வேன்" என்று சொன்னாள்.

மோகனுக்கு அது உண்மையான காரணமாக இருக்க முடியாது என்று புரிந்தது. இந்த இரண்டு மாதத்தில் ஜனனி பற்றி ஓரளவு அறிந்த அவன் அவளை மேலும் வற்புறுத்த விரும்பவில்லை. சரி என்று சொல்லி "காலையில் எத்தனை மணிக்கு ட்ரைன்" என்று கேட்க, "6.15கோவை எக்ஸ்பிரஸ்" என்று அவள் பதில் சொல்ல, "சரி நான் டிரைவர் மூலம் உன்னை ஸ்டேஷன்ல ட்ராப் செய்ய சொல்லுறேன்" என்று சொன்னான். "சரி" என்று சொல்லி விட்டு, உள்ளே கண்மூடி உறங்கி கொண்டிருந்த கார்த்திக்கை ஒரு முறை கண் கலங்க பார்த்து விட்டு ஹாஸ்டல் கிளம்பினாள்.


அடுத்த நாள் காலை ஜனனி ட்ரைனில் கிளம்ப தன்னை ட்ராப் செய்த டிரைவரிடம் நன்றி சொல்லி ஒரு கவரை கொடுத்து கார்த்திக்கிடம் கொடுக்க சொன்னாள்.கோவை எக்ஸ்பிரஸ் நூற்றுகணக்கான பயணிகளை சுமந்து கொண்டு கோவை நோக்கி விரைந்து சென்றது. 

கார்த்திக்கை காலை ஏழு மணிக்கு டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து விட, டிரைவருக்காக மோகனுடன் காத்து இருக்க, டிரைவர் வந்து ஜனனி கொடுத்ததாக கவரை கொடுத்தான்.

மனதில் கேள்விகளுடன் கவரை பிரித்த அவன் ஒரு கடிதத்தையும் பல ஆயிரம் ருபாய் நோட்டுகளையும் பார்த்தான். கடிதத்தை எடுத்து படிக்க. "அன்பு கார்த்திக், இனிமே உங்களை அப்படி அழைக்க முடியுமான்னு எனக்கு தெரியலை, உங்களை விட்டு நிரந்தரமாக ஒதுங்கி இருக்க போகிறேன். நீங்க நேகாவை திருமணம் செய்து , அட்லீஸ்ட் அவளுக்காவது துரோகம் செய்யாமல் குடும்பம் நடத்தவும். கவருடன் நீங்க கொடுத்த அட்வான்சில் மீதி பணமான 40000 வைத்து இருக்கிறேன். பெற்று கொள்ளவும். என்னை இனிமேல் எக்காரணத்தையும் முன்னிட்டு தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். உங்கள் திருமண வாழ்க்கைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்". சில எழுத்துகள் கண்ணீரில் அழிந்து இருந்தன.

கண் கலங்கி பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்த கார்த்திக்கை மோகன் பிடித்து உலுப்ப நினைவுக்கு வந்து கதறி அழ ஆரம்பித்தான்.எதற்கு அவள் என்னை விட்டு பிரிந்து போகிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை இன்னும் அவள் மனதில் ராஜ்குமார் இருப்பானோ என்று அவன் மனது பல கற்பனைகள் செய்து நொந்து போனது. 


மோகன் அவன் கையில் இருந்த கடிதத்தை படித்து விட்டு "என்ன நடந்தது" என்று கேட்க, பார்ட்டி முடிந்த பிறகு நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்க, மோகனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இது இவர்கள் இருக்கும் இடையில் நடக்கும் மன போராட்டம். இதை தீர்க்க அவர்கள் இருவரால் மட்டுமே முடியும் என்று உணர்ந்து, "டேய் இப்போ ஒன்னும் காரியம் கெட்டுபோகல. நீ உடனே ஏர்போர்ட் கிளம்பு.எந்த பிளைட் இருந்தாலும் சரி, அவ வீட்டுக்கு போறது முன்னால போய் சேர். முதல்ல அவளோட அம்மா அப்பாவை பார்த்து பேசி சம்மதம் வாங்கு. எப்படியாவது அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும். அவ மாதிரி உன் மேல உயிரை வச்சிருக்க பொண்ணை எங்கேயும் பார்க்க முடியாது. இல்லேன்னா உன் வாழ்க்கை முழுக்க பேரிழப்பு தான்" என்று எச்சரிக்கை செய்ய, "நீ எப்போ வர்ற" என்று கார்த்திக் கேட்க, "இன்னைக்கு ஷூட்டிங் இருக்கு. மதியம் ஒரு மணி வரைக்கும் நடத்தி முடிச்சுட்டு மதியம் பிளைட்ல வந்து சேர்றேன்"என்று சொல்ல, டிஸ்சார்ஜ் ஆன கையோடு டிரைவர் ஏர்போர்டில ட்ராப் செய்ய 10 . 05 மணிக்கு கிளம்பும் இண்டிகோ ப்ளைட்டை பிடித்தான்.


ட்ரெயினில் ஏறியது முதல் ஜனனிக்கு நிறைய குழப்பங்கள். "தான் செய்தது சரியா? குறைந்த பட்சம் கார்த்திக்கை பார்த்து நேரில் சொல்லி இருக்கலாம். ஆனால் தன்னை நேகாவை போல் நினைத்ததை ஒத்து கொள்ள முடியவில்லை". சரி அம்மாவிடம் பேசலாம் என்று முடிவு செய்தாள். பூரணி போனை எடுத்த உடன் "அம்மா நான் இப்போ சென்னைல இருந்து கிளம்பி வந்துக்கிட்டு இருக்கேன்.வேலைய விட்டுட்டேன். இப்போ ட்ரெயின்ல இருக்கறதால சரியா சிக்னல் கிடைக்காது. அதனால நேர்ல வந்து சொல்றேன்" என்று சுருக்கமா சொல்லி போனை வைத்து விட்டாள். 

சரியாக 12 மணிக்கு கேகே புதூர் அடைந்த கார்த்திக்கை பார்த்த பூரணிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. "இப்போதான ஜனனி பேசுனா,கார்த்திக் வர்றதை பத்தி சொல்லவே இல்லையே" என்று எண்ணி குழம்பினாள். "தம்பி நீங்களும் சென்னைல இருந்த தான வரிங்க.ரெண்டு பேரும் ஒரே ட்ரைன்ல வந்து இருக்கலாமே" என்று சொல்ல, முதலில் சதானந்தனின் நலம் விசாரித்து விட்டு "இல்லை, இது கொஞ்சம் அர்ஜென்ட் ஆன விஷயம். அதோட நான் இங்க வந்துரிக்கது அவளுக்கு தெரியாது" என்று சொல்லி விட்டு, "அக்கா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். இப்போ ஒன்னாவும் சேந்துட்டோம்". 

"என்ன" என்று அதிர்ச்சியுடன் பூரணி, சதானந்தன் கேட்க

"இதுல அவ மேல தப்பு இல்லை. எல்லா தப்பும் என் மேல தான். நீங்க தான் கல்யாணம் பண்ணி வைக்கணும். அவ என் மேல ரொம்ப கோபத்ல இருக்கா, அதுனால ஒத்துக்க மாட்டா. நீங்க தான் எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்கணும்" என்று சொல்ல, பூரணிக்கு புரிந்தது. ஆனால் சதானந்தன் "எதுவா இருந்தாலும் என் பொண்ணோட சம்மதம் இல்லாம நடக்காது" என்று சொல்ல, பூரணி பதறி போனாள். "தம்பி நீங்க கொஞ்சம் ஹால்ல வெயிட் பண்ணுங்கன்னு" சொல்லிட்டு, சதானந்தனை வார்த்தைகளால் வறுக்க ஆரம்பித்தாள். 

"ஏங்க புரிஞ்சு தான் பேசுறிங்களா. நாம ஊர் முழுக்க சல்லடை போட்டு தேடுனாலும் இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்குமா ? அவதான் புரியாம முரண்டு பிடிக்கிறான்னா, நீங்களும் சேர்ந்து ஏன் குட்டையை குழப்புரிங்க. ஆரம்பத்தில பிரச்னை இருந்தாலும் எல்லாம் போக போக சரி ஆயிடும். நாம ஒத்துக்கலாம்" என்று சொல்ல, அவர் யோசித்து பார்த்தார், அவருக்கும் அதுவே சரியான யோசனையாக பட்டது.

ரெண்டு மணி அளவில் கோவை ஸ்டேசனில் இறங்கிய ஜனனிக்கு முகத்தில் நிம்மதி பரவியது. "அப்பாடா நம்ம ஊரு வந்தாச்சு. இனிமே கொண்டாட்டம் தான்" என்று எண்ணியபடி, தன் கையில் இருந்த அரை லிட்டர் மாஸா ஜூஸ் பாட்டிலை குடித்தபடி ஆட்டோ தேட ஆரம்பித்தாள். ஒரு வழியாக ஆட்டோ வாடகை பேசி 80 ரூபாய்க்கு ஒத்து கொண்டு ஏற, இருபது நிமிடத்தில் வீட்டு வாசலை அடைந்தாள். 

காலிங்பெல் அடித்தவுடன் கதவு திறக்க, உள்ளே இருந்த கார்த்திக்கை பார்த்து பேயறைந்தது போல் அவள் முகம் மாறியது.

"வெல்கம் பேக் மேடம்" என்று கிண்டல் செய்த கார்த்திக்கை எரிப்பது போல் பார்த்து விட்டு, விறு விறு என்று வீட்டுக்குள் நுழைந்து"அம்மா இவர் எப்படி இங்க, நான் இவரை பார்க்க விரும்பல, ப்ளீஸ் போக சொல்லும்மா" என்று கெஞ்ச, "இல்லைடா என்னநடந்ததுன்னு அவர் சொல்லிட்டார். ஆனா இது உன்னோட வாழ்க்கை பிரச்னை. உடனே முடிவெடுக்கிறது தான் நல்லது" என்று பீடிகைபோட, ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. 

"கண்ணா நாளைக்கு நல்ல முகூர்த்தம் இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு இருக்கோம். கார்த்திக்குதாத்தா மட்டும் தான் அவரை நாம எப்போ வேணாம் கூப்பிட்டுக்கலாம்" என்று சொல்ல, ஜனனிக்கு தலை சுற்றாத குறை. 

"என்ன கல்யாணமா, எனக்கா, அதுவும் கார்த்திக் கூடவா, இந்த ஜன்மத்தில கிடையாது" என்று பல்லை கடித்து கத்த,

"ஒன்னு நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும், இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் இந்த விஷத்த குடிச்சிடுவோம்" என்று பூரணிமிரட்ட, 

"நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்" என்று சொல்ல 



"அவர் கிட்ட பேசியாச்சு, என்னங்க" என்று அழைக்க அங்கே வந்த சதானந்தனும் "ஜானும்மா நீ இந்த கல்யாணத்துக்கு ஒதுக்கணும்அதுதான் உனக்கு நல்லது"


"இல்லையப்பா" என்று ஜனனி ஆரம்பிக்க, 

"புரியுதும்மா உங்க ரெண்டு பேருக்கும் இடைல உள்ள பிரச்சனை, பேசி தீர்த்து கொள்வது தான் நல்லது. கார்த்திக் எங்க கிட்ட நடந்தவிஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டார். மன்னிப்பும் கேட்டு விட்டார். இனிமே திரும்ப இதை பத்தி பேச வேண்டாம்". பூரணியிடம்திரும்பி "நாம மத்த ஏற்பாடு கவனிக்கலாம், ஜானு சொல்ல மறந்துட்டேன். கல்யாணம் மருதமலைல" என்று சொல்லி விட்டு அவர்ரூமுக்கு திரும்பினார். 

இதற்குள் கார்த்திக்குடன் ஏற்கனவே பேசியபடி மோகன் தன்னுடன் இருந்த 5 அசிஸ்டன்ட் டைரக்டர்களையும் அழைத்து கொண்டுமதியம் இரண்டு மணி ப்ளைட்டில் கோவை கிளம்பினான்.



No comments:

Post a Comment