Saturday, October 31, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 3

அடுத்த மூன்று நிமிடங்களில் சத்யன் அருகில் பைக்கை நிறுத்திய அருண் முதலில் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான் “ அண்ணா,, அம்மா மூனாயிரம் வச்சிருந்தாங்க, பாகி அவளோட சேமிப்பு இரண்டாயிரம் சேர்த்து குடுத்தா, மொத்தம் ஐஞ்சாயிரம் எடுத்துட்டு வந்தேன்” என்று பணத்துக்கான காரணத்தை கேட்காமல் கொடுத்தான்

சத்யன் பணத்தை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அருண் கொடுத்த கவரில் இருந்த டீசர்ட்டை எடுத்துக்கொண்டு போட்டிருந்த சட்டையை கழட்டி மடித்து கவரில் வைத்துவிட்டு டீசர்ட்டை அணிந்துகொண்டான், சால்வை கையில் எடுத்துக்கொண்டு கவரை அருணிடம் கொடுத்தான்
சத்யனின் முகவாட்டம் அருணுக்கு என்ன கதை சொன்னதோ “ அண்ணா என்ன ரொம்ப டல்லா இருக்க?,, ஏதாவது ப்ராப்ளமா அண்ணா?” என்று அக்கரையுடன் கேட்டான்



அருணுக்கு என்ன பதில் சொல்வது என்று சிலநிமிடங்கள் குழம்பி, பிறகு நிதானித்து “ இல்ல அருண் செத்தவன் சிறுவயசு ஆள் அதான் மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தது” என்றான்

“ அட விடுண்ணா அவனுக்கு விதி அவ்வளவுதான்,, சரிண்ணா நீ ஏதாவது சாப்பிட்டயா? , பக்கத்துல ஓட்டல் இருக்கு ஏதாவது வாங்கிட்டு வரவா?” என்று அருண் கேட்க

“ அதெல்லாம் எதுவும் வேண்டாம் அருண், நீ வீட்டுக்கு கிளம்பு, அப்பா வேற இன்னும் வரலை அம்மாவும் பாகியும் தனியா இருக்காங்க, நான் காலையில வீட்டுக்கு வர முடியாது, ஏதாவதுன்னு கால் பண்ணு அருண்,, நீ கிளம்பு” என்று தம்பியை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு மருத்துவமணைக்கு உள்ளே வந்து மான்சியின் அருகே முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்தான்,

அவன் நினைத்தால் தனது போலீஸ் பவரை வைத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர் அறையில் கூட ஒய்வெடுக்கலாம், ஆனால் மான்சியை இந்த நிலையில் விட்டுவிட்டு விலகிப்போக மனமின்றி அங்கேயே அமர்ந்திருந்தான், அவள் அழும் ஒலி விட்டு விட்டு கேட்டது,, முகுந்தனுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி அழுகிறாளோ? அந்தளவுக்கு அவனை ரொம்பவும் காதலித்தாளா? அல்லது அவன் செய்த கொடுமைகளை எண்ணிப்பார்த்து அழுகிறாளோ? சத்யனுக்குள் புதிதாய் சில கேள்விகள்,, விடைதான் தெரியவில்லை,,

நடுநிசியை தாண்டும்போது மான்சி குளிரால் நடுங்குவது போல் இருக்க கையில் இருந்த சால்வையை அவள்மீது மூடினான், மான்சிக்கும் முகுந்தனுக்கும் எப்படி பொருத்தமே இல்லையோ அதேபோல் அவனுக்காக அவள் விடும் கண்ணீரும் பொருந்தாதது போல் தோன்றியது, இவள் இவ்வளவு விடும் கண்ணீருக்கு அவன் அவ்வளவு தகுதியானவனா? என்ற எரிச்சலான கேள்வியும் சத்யன் மனதில் எழுந்தது, இப்படியே விடாமல் அழுதுகொண்டே இருந்தால் இவள் நிலை என்னாவது? என அடிப்படை இல்லாத அன்பின் மேலீட்டால் மான்சியின் மீது கோபம்கூட உண்டானது, ஆனால் புருஷனுக்காக அழதே என்று சொல்ல தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது சத்யனுக்கு தெளிவாக புரிந்ததால் அவளின் கண்ணீரை மனதுக்குள் ஏற்ப்பட்ட மவுனக் குமுறலுடன் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது

மணி மூன்றை நெருங்கும் போது சூசைட் கேஸ் போஸ்ட்மார்ட்டம் முடிந்து பாடி வெளியே வர அங்கிருந்த கூட்டம் மொத்தமும் கதறிக்கொண்டு அந்த உடலிடம் ஓடியது, அவர்கள் போட்ட சத்தத்தில் திகைப்புடன் எழுந்து அமர்ந்து மிரள மிரள விழித்தவளைப் பார்த்ததும் பதறி அருகில் சென்று “ ஒன்னுமில்ல அவங்க கேஸ் எல்லாம் முடிஞ்சு வெளியே வந்திருச்சு, அதான் இப்படி கத்துறாங்க, நீங்க பயப்படாதீங்க ” என்று சத்யன் ஆறுதலாய் கூற.....


ஆனாலும் அவர்கள் அழுவதைப் பார்த்து மான்சியும் அழுதாள், சற்றுநேரத்தில் அந்த உடல் ஒரு கறுப்பு வேனில் ஏற்றப்பட்டு கிளம்ப அங்கிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது, மான்சியின் கண்ணீரும் வற்றிப்போய் கால்களை நீட்டி சுவற்றோடு சாய்ந்துகொண்டாள்

முகுந்தனின் உடல் உள்ளே எடுத்துச்சொல்லப் பட்டிருந்தது, குளிர் உடலை ஊடுருவ சத்யன் எழுந்து வெளியே போய் டீ குடித்துவிட்டு, மான்சிக்கும் ஒரு கப்பில் வாங்கி வந்தான்

டீயை மான்சியிடம் கொடுத்து “ ரொம்ப குளிருது கொஞ்சம் டீ குடிங்க தெம்பா இருக்கும்” என்று சத்யன் கூற...

வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தவள், “ என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்,, யாருமேயில்லாத இந்த அனாதைக்கு உதவ உங்களுக்காவது மனசு வந்ததே,, ஆனா இவரு செத்துட்டாருன்னு என்னால நம்பவே முடியலை, என்னைய எவ்வளவோ கொடுமை பண்ணப்ப எல்லாம் இவர் சாகனும்னு நான் ஒருநாளும் நினைக்கலை,, திருந்தி நானும் இவரும் எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரி நல்லா வாழனும்னு தான் சாமிய வேண்டுவேன்,, என்னிக்காவது ஒருநாள் ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் மனசார விரும்பி ஒத்துமையா வாழ்வோம்னு நினைச்சேன்,, இப்படி பாதியில என் வாழ்க்கை முடியும்னு நான் நெனைக்கலையே,, கூட்டிட்டு வந்த என்னை அனாதையா விட்டுட்டு ஓடிப்போகாம ஒரு தாலிய கட்டி பாதுகாப்பு குடுத்தாரு, இல்லேன்னா அந்த மெட்ராஸ்லயே நான் சீரழிஞ்சு போயிருப்பேன், என்னை அடிச்சு எவ்வளவோ சித்ரவதை பண்ணும்போதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா திருந்தி நல்லாயிடுவாருன்னு பொருத்து போனேன், இப்போ என் வயித்துல இருக்குற பிள்ளைக்கு அப்பான்னு அடையாளம் காட்டக்கூட ஆள் இல்லாம போய்ட்டாரே,, இனி எனக்கும் என் பிள்ளைக்கும் யார் இருக்கா? ” என்ற மான்சி முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கதற ஆரம்பிக்க.....

சத்யன் செயலற்று அதை வேடிக்கைப் பார்த்தான்,, மான்சியை முகுந்தன் நிறைய கொடுமைகள் செய்தான் என்று தகவல் அவனுக்குள் சிறு நெருப்பையே மூட்டியிருந்தது, இப்படி தேவதை மாதிரியான ஒரு பெண்ணை கொடுமை செய்ய இவனுக்கு எப்படி மனசு வந்திருக்கும்? முகுந்தன் இப்போது உயிருடன்இருந்திருந்தால் சத்யன் கையால் உயிரை விட்டிருப்பான் எனுமளவுக்கு சத்யனின் கோபம் கொந்தளித்தது

“ இவ்வளவு கொடுமை பண்ணவனுக்காக இப்படி கதறும் உங்களைப் பார்த்து ஆத்திரப்படுறதா? ஆச்சர்யப்படுறதான்னு எனக்கு புரியலை? ஆனா இந்த கண்ணீருக்கு முகுந்தன் தகுதியற்றவன்,, இதை மட்டும் என்னால் உறுதியா சொல்லமுடியும்” என்று சத்யன் ஒரு மாதிரி அடக்கிவைத்த குரலில் கூறியதும்.......

அவன் குரலில் இருந்த வித்தியாசம் உணர்ந்து பட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்த மான்சியின் விழிகளில் வியப்பு ... முதன்முதலாக தன்மீது உண்மையான அக்கரையுடன் பேசும் ஒருவனை கண்ட வியப்பு,, “ என்னோட கண்ணீர் அவரோட தகுதிக்காக இல்லை சார்,, அந்தளவுக்கு நானும் அவரும் வாழவும் இல்லை,, ஒருத்தரையொருத்தர் காதலிக்கவும் இல்லை,, ஆனா இதெல்லாம் என்னிக்காவது ஒருநாள் நடக்கும்னு நான் காத்திருந்தது பொய்யாய்ப் போச்சே,, இந்த உலகத்தில் எனக்குன்னு இருந்த ஒரு அடையாளமும் தொலைஞ்சு போச்சே,, என் கழுத்துல தாலி இருக்கும்போதே என்னை துகிலுரித்துப் பார்க்கும் வக்கிரங்கள் முன்னாடி இனி எப்படி வாழுறதுன்னு புரியமா அழுவுறேன் சார், இவர் எனக்கு நல்ல புருஷனா இல்லேன்னாலும் கூட, இவரு கட்டுன தாலி எனக்கு இவ்வளவு நாளா ஒரு பாதுகாப்பா இருந்துச்சு... இனிமேல்?” என்ற கேள்வியுடன் நிறுத்திவிட்டு கன்னத்தில் வழிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்த மான்சி,, 


சத்யனை நிமிர்ந்து நேராகப் பார்த்து... “ சார் நானும் இவரும் காதலிச்சு ஊரைவிட்டு ஓடி வரலை,, நீ ரொம்ப அழகா இருக்க சென்னைக்கு வந்து சினிமால சேர்ந்தா நிறைய பணம் வரும்,, கார் பங்களான்னு வசதியா வாழலாம்னு சொன்னாரு,, நானும் பணம் வந்தா வசதியா வாழலாம் என்ற ஆசையில் அவர்கூட வந்தேன், வந்ததும் தான் சினிமா எப்படின்னு புரிஞ்சது, அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் முடியாதுன்னு மறுத்ததும் வேற வழியில்லாம ராணிப்பேட்டை வந்தோம், தனித்தனி ஆளா இருந்தா தங்க வீடு கிடைக்காது நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவரு சொன்னப்ப எனக்கும் வேற வழி தெரியலை, நாங்க அப்போ ஊரைவிட்டு வந்து கிட்டத்தட்ட ஒருமாசம் ஆயிருந்தது, இந்த நாட்களில் கல்யாணம் எவ்வளவு அவசியம்னு எனக்கு நல்லா புரிஞ்சதால சரின்னு சம்மதிச்சேன்,

நூறு ரூபாய் செலவுல எங்க கல்யாணம் நடந்தது, யாரையோ பிடிச்சு ஒரு ரூமை வாடைகைக்கு எடுத்து தங்கினோம், கடமைக்காக நடந்த கல்யாணம் என்றாலும் நான் நல்ல மனைவியா வாழ முயற்சி பண்ணேன், ஆனா அவருக்கு நான் சினிமாவுக்கு வர மறுத்த ஆத்திரம் மனசுக்குள்ள இருந்தது, அடிக்கடி என்னை அடிச்சு போட்டுட்டு வெளிய போயிட்டு நாலஞ்சு நாள் கழிச்சு வருவாரு, அவருக்கு பணத்து மேலயும் போதை மேலயும் இருந்த ஆர்வமும் ஆசையும் கடைசி வரைக்கும் என்மேல வரவேயில்லை, எத்தனையோ பேரை திரும்பி பார்க்க வச்ச என் அழகு அவரை துளிகூட பாதிக்காதது என் துரதிர்ஷ்டம் தான்,, இந்த நாலு வருஷத்துல நாங்க சேர்ந்து வாழ்ந்த நாட்களை எண்ணி சொல்லலாம், இந்த குழந்தை என் வயித்துல வந்ததே பெரிய அதிசயம் தான்,, அவரு விட்டுட்டு போனதும் எத்தனை நாளைக்கு பசி பட்டினி கிடக்குறது, அக்கம்பக்கம் இருக்கிற பெண்கள் ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனாங்க, அவங்ககூட நானும் வேலைக்கு போய் என் பிழைப்பைப் பார்த்துக்கிட்டேன், ஆனா எங்க சுத்துனாலும் என்னிக்காவது ஒருநாள் வந்துருவார்ன் ஒரு நம்பிக்கையில இத்தனை நாளா வாழ்ந்தேன், இனிமேல் என் வாழ்க்கை எப்படின்னு தெரியலை, இது வரைக்கும் என்னைப் பத்தி யார்கிட்டயுமே சொல்லி அனுதாபத்தை தேடிக்க விரும்பமாட்டேன், நீங்க காட்டுற அன்பும் அக்கரையும் உதவியும் என்னை வெளிப்படையா எல்லாத்தையும் சொல்ல வச்சிருச்சு,, தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க சார் ” என்று மான்சி தன்னைப்பற்றிய முழுக்கதையையும் சொல்லி முடிக்க...

சத்யன் கையில் ஆறிப்போன டீகப்புடன் அவளையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. இவ்வளவு நேரம் அவனுக்குள் பாரமாய் அழுத்திக்கொண்டு இருந்த ஏதோவொன்று அவனிடமிருந்து விடை பெற்றது போன்ற உணர்வு , மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மூளையில் அழுத்தமாக பதிவானது,

ஒருவனின் மரணத்தில் மற்றொருவன் சந்தோஷப்பட்டால் அது மனிதாபிமானமற்ற செயல் என்று எண்ணும் சத்யனின் நெஞ்சுக்குள் முதன்முறையாக முகுந்தனின் மரணம் நிம்மதி கலந்த சந்தோஷத்தை அவனுக்கும் தெரியாமல் சிறு துளியாக விதைத்தது, தனக்குள் நிகழும் மாற்றங்களை இனம் காண முடியவில்லை அதற்காக சத்யன் முயற்சிக்கவும் இல்லை

“ஹும்’ என்ற பெருமூச்சுடன் எழுந்தவன் “ இந்த டீ ஆறிபோச்சு , வேற வாங்கிட்டு வர்றேன்” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளிய போனான்


சற்றுநேரத்தில் சூடான டீயுடன் வந்து “ தயவுசெய்து இந்த டீயை கொஞ்சூண்டு குடிங்க, நீங்க எழுந்து நடமாடுற அளவுக்கு தைரியமா இருந்தாதானே நான் முகுந்தனோட காரியங்களை கவனிக்க முடியும், இல்லேன்னா நீங்க எப்போ மயக்கம் போட்டு விழுவீங்களோன்னு பயத்துல உங்கப் பின்னாடியேதான் இருக்கனும்” என்று சத்யன் கரிசனத்தோடு கூறியதும்..

அவன் வார்த்தைகளின் நியாயம் மூளையில் உரைக்க மறுக்காமல் டீயை கையில் வாங்கிய மான்சி “ என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்,, கடவுளாப் பார்த்துதான் உங்களை உதவிக்கு அனுப்பியிருக்காரு” என்று கலங்கிய கண்களுடன் நன்றி கூறிவிட்டு டீயை குடித்தாள்

ஆனால் குடித்த சில விநாடியில் ஒரு பெரிய ஓங்கரிப்புடன் வாயைப் பொத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த குப்பை மேட்டில் போய் வாந்தியெடுத்தாள், இரவு குடித்த கூல்டிரிங்க்ஸ்ம், இப்போது குடித்த டீயும் கலந்து வந்து கொட்டியது, அவள் பின்னாலேயே பதறி ஓடி வந்த சத்யன் அவள் நெற்றியைப் பிடித்துக்கொண்டான், சற்றுநேரத்தில் வாந்தி நின்று முந்தானையால் வாயைத் துடைத்தபடி நிமிர்ந்தவளிடம் தண்ணீர் பாட்டிலை சத்யன் கொடுக்க, தண்ணீரால் வாயை கொப்புளித்துவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்

சிறு குற்ற உணர்வுடன் சத்யனை நிமிர்ந்துப் பார்த்து “ ஸாரிங்க நான் டீ குடிக்க மாட்டேன், அதுவும் காலி வயிற்றில் குடிச்சதும் வாந்தி வந்திருச்சு” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்தாள்,

“ டீ குடிக்க மாட்டீங்கன்னா சொல்ல வேண்டியது தானே,, வேற ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் ஆதங்கத்துடன் கேட்க....

“ நீங்க வாங்கிட்டு வந்த பிறகு சொல்றது வேஸ்ட்ன்னு குடிச்சிட்டேன்” என்றாள் மான்சி

சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, இவளால் யாரையுமே மனம் நோகச் செய்யமுடியாது, உண்மையில் வித்தியாசமானவள்,, அவன் மான்சியைப் பற்றி சிந்திக்கும் போதே மார்ச்சுவரி ஊழியர் சத்யனை கையசைத்து “ PC சார் இங்க வாங்க” என்று அழைக்க, சத்யன் எழுந்து அங்கே ஓடினான்

சிறிதுநேரம் அவரிடம் பேசிவிட்டு ஒருசில பேப்பர்களுடன் மறுபடியும் மான்சியிடம் வந்தவன் அவள் முன்பு மண்டியிட்டு “ இந்த பேப்பர்ல இன்ட்டூ மார்க் பண்ணிருக்க இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுங்க” என்றான்,,

மான்சி அவன் குறிபிட்ட இடங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு கண்ணீருடன் நிமிர்ந்து “ எல்லாம் முடிஞ்சு போச்சா? ” என்றாள் ,

ஆமாம் என்று தலையசைத்தவன் “ இதோபாருங்க இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எனக்கு சில வேலைகள் இருக்கு, நான் முகுந்தன் பாடியை எடுத்துகிட்டு வர்ற வரைக்கும் நீங்க அழாம உட்கார்ந்திருக்கனும், உங்களை இப்படி தனியா விட்டுட்டு போகவே மனசுக்கு கஷ்டமா இருக்கு, ப்ளீஸ் தைரியமா தெளிவா இப்படியே உட்கார்ந்திருங்க” என்று கெஞ்சலாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சத்யன்

மான்சி கையெழுத்துப் போட்ட பேப்பர்களை ஊழியரிடம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு “ கேட்டுக்கு பக்கத்துல இருக்கு கடையில வெள்ளை காடாத்துணி விப்பாங்க அதுல அஞ்சு மீட்டர் வாங்கிட்டு வாங்க சார்” என்றான்




சத்யன் மறுபடியும் வெளியே ஓடி டீக்கடையில் விசாரித்து காடாத்துணியை வாங்கிக்கொண்டு உள்ளே வந்து திரும்பி மான்சியைப் பார்த்தான், அவளும் அந்தநேரத்தில் அவனைதான் பார்த்துக்கொண்டு இருந்தாள், ‘ நான் அழவில்லை தைரியமாகத்தான் இருக்கிறேன்’ என்று அவனுக்கு உணர்த்துவது போல முடிந்தளவு நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்

சத்யன் நிம்மதியாக மற்ற வேலைகளை கவனித்தான்,, குஞ்சுகளுக்கு இரைதேடும் பட்சிகளின் ஓசையுடன் பொழுது பளிச்சென்று விடிந்தது,, அதற்குள் இன்னும் இரண்டு உடல்கள் மார்ச்சுவரிக்கு வந்துவிட அந்த உயிரற்ற உடலின் உறவினர்கள் பெரும் கூச்சலுடன் தரையில் உருண்டு புரண்டு அழ, சத்தம்கேட்டு வெளியே வந்த சத்யன் இந்த கூச்சலில் மான்சி எங்கே மறுபடியும் மிரண்டு விடுவாளோ என்று அச்சத்துடன் அவளை அடைந்தபோது,, மான்சியுடன் ஐந்தாறு பேர் நின்றிருந்தனர்

மான்சி அழுதபடி ஒரு இளம் பெண்ணின் தோளில் சாய்ந்திருந்தாள், சத்யன் குழப்பத்துடன் மான்சியின் முகத்தைப் பார்க்க,, மான்சி அங்கிருந்தவர்களிடம் “ இவருதான் அந்த சார்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தனது அழும் பணியை தொடர்ந்தாள்

அங்கிருந்தவர்களில் ஒல்லியான ஒரு இளைஞன் சத்யனை நெருங்கி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ சார் போலீஸ்னாலே கொடும்பாவி ரேஞ்சுக்கு பேசுற இந்த காலத்தில் உங்களைப்போன்ற மனிதாபிமானம் உள்ள சிலரால தான் சார் அந்த டிப்பார்ட்மெண்ட் பேரை காப்பாத்த முடியுது, நாங்கல்லாம் மான்சி கூட வேலை செய்றவங்க, மிட்நைட் சிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்பதான் எங்களுக்கு விஷயம் தெரியும், மான்சி தனியா இருந்து என்னபண்ணுதோன்னு காலையில முதல் பஸ்ஸுக்கு கிளம்பி ஓடிவந்தோம் சார், வந்ததும் மான்சி சொல்லுச்சு நீங்கதான் நேத்துலேருந்து உதவி பண்றீங்கன்னு, நீங்க தெய்வம் மாதிரி சார் ” என்று அந்த இளைஞன் கண்கலங்க உணர்ச்சிகரமாக பேசினான்

அந்த இளைஞனின் கையை தட்டிய சத்யன் “ நானும் மனுஷன்தான், எனக்கும் அம்மா அப்பா தங்கை தம்பின்னு ஒரு குடும்பம் இருக்கு, எப்படியும் டிப்பார்ட்மெண்ட்ல இருந்து இவங்ககூட ஒரு PC அனுப்புவாங்க, அவங்க சும்மா ஒப்புக்கு வந்துட்டு உடனே வீட்டுக்குப் போயிருப்பாங்க, எனக்கு இவங்க ஏற்கனவே சிறையில் அறிமுகம் ஆனவங்கங்கறதால கூடவே இருந்து உதவனும்னு தோனுச்சு, அதோடு இவங்களோட இந்த நிலைமையும் என்னை நகரவிடாமல் பண்ணிருச்சு, அவ்வளவுதான் , இதுக்குப் போய் ஏன் தெய்வம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க” என்று அந்த இளைஞனை சமாதானம் செய்தான் சத்யன்

அந்த இளைஞன் கண்களை துடைத்துக்கொண்டு “ எல்லாம் முடிஞ்சதா சார்? எப்போ குடுப்பாங்க?” என்று கேட்க

“ ம்ம் ஓரளவுக்கு முடிஞ்சது,, இப்பதான் காடா வாங்கிட்டுப் போய் குடுத்தேன் பாடியை கவர்ப் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றான் சத்யன்

“ எதுனால சார் இப்படி திடீர்னு இறந்துட்டாரு?, என்னப் ப்ரச்சனை?” என்று மறுபடியும் அந்த இளைஞன் கேட்க

திரும்பி மான்சியைப் பார்த்த சத்யன், பிறகு மறுபடியும் அந்த இளைஞனிடம் திரும்பி “ போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர் கிட்ட நான் விசாரிச்ச வரைக்கும், முகுந்தன் மரணம் நிச்சயிக்கப்பட்டது தான்னு சொல்றாரு, அதிகமான போதை பழக்கம் அவனோட உள்ளுறுப்புகள் மொத்தத்தையும் டேமேஜ் பண்ணிருச்சாம், இத்தனைநாள் இருந்தததே ஆச்சர்யம்னு சொல்றாரு” என்றவன் மறுபடியும் அழுதுகொண்டிருந்த மான்சியைப் பார்த்துவிட்டு “ ஆகமொத்தத்தில் எல்லாரும் கதறியழுது வேதனைப்படும் அளவுக்கு முகுந்தனின் மரணம் அப்படியொன்றும் பரிதாபமானது இல்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்


முகுந்தனின் உடல் சத்யனிடம் ஒப்படைக்கப்படும் போது காலை மணி பத்தாகிவிட்டது, இரண்டு ஊழியர்கள் முகுந்தனின் உடல் ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிவந்து வெளியே விட, சத்யன் அவர்களிடம் சில நூறுரூபாய்களை கொடுத்துவிட்டு, ஸ்ட்ரெச்சரை ஓரமாக இழுத்து நிறுத்திவிட்டு மான்சியிடம் வந்தான்

அதற்குள் எல்லோரும் மான்சியை அழைத்துக்கொண்டு முகுந்தன் உடலருகே வந்தனர், முகுந்தனின் தலையில் கட்டப்பட்டிருந்த துணியில் உள்ளிருந்து ரத்தம் கசிந்து வழிந்து வெள்ளைத்துணியில் உடனடியாக பரவியது, சத்யன் அதை கவனித்து மான்சியை ஒதுக்குவதற்குள் அவள் அதை கவனித்துவிட்டாள், அடுத்த நிமிடம் “ அய்யோ” என்ற பெரும் அலறலுடன் மயங்கி சரிந்தாள்

பட்டென்று நெற்றியில் தட்டிக்கொண்ட சத்யன் “ அவங்க இதையெல்லம் பார்த்தா தாங்குவாங்களா? ஏன்பா அதுக்குள்ள இங்க கூட்டி வந்தீங்க?” என்று அழைத்து வந்தவர்களைப் பார்த்து கடிந்து கொண்டான்

“ ஸாரி சார்” என்றவர்கள் மான்சியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தள்ளிப் போய் நின்றார்கள்,

அந்த ஒல்லியான இளைஞன் சத்யன் அருகே வந்து “ சார் என் பேர் அரவிந்த்” என்று முதன் முறையாக தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொண்டு “ ஏதாவது வண்டி ரெடி பண்ணி எடுத்திட்டு போயிடலாம் சார்” என்றான்

“ ஆமா அரவிந்த் ஆஸ்பிட்டல் இலவச பிண வண்டி வெளியே போயிருக்காம் வேற வண்டி தான் ஏற்பாடு பண்ணனும்” என்று கூறிவிட்டு சத்யன் மான்சியின் அருகே வந்த போது, அவள் மயக்கம் தெளிந்து தோழி ஒருத்தியின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்

அப்போது சத்யன் அருகே வந்த புதிய நபர் ஒருவர் “ சார் நான் மான்சி குடியிருக்கும் வீட்டு ஓனர்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்
மான்சி ஏற்கனவே அந்தாளைப்பற்றி சத்யனுக்கு சொல்லியிருந்ததால், நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? என்ற அருவருத்த பார்வையுடன் “ சொல்லுங்க சார், இப்படித்தான் ஒரு பொண்ணை சிறையில அனாதரவா விட்டுட்டுப் போவீங்களா?” என்று கோபமாக கேட்டான்

“ நான் என்ன சார் பண்ண முடியும், எனக்கும் குடும்பம் இருக்கு, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா யாரு அவஸ்தை படுறது இந்த பொண்ணைப் பத்தி தெரிஞ்சு தங்க வீடு குடுத்ததே பெரிய விஷயம் ” என்று குரலை உயர்த்தி பேசியவன் “ அதுமட்டுமில்ல சார் என்னோட மகளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கேன் இந்த நேரத்துல பிணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து போட்டு அழுதா நல்லாருக்காதுன்னு என் வீட்டுல அபிப்ராயப்படுறாங்க, பாடியை என் வீட்டுக்கு எடுத்திட்டு வராம வேற எங்கயாவது கொண்டு போயிடுங்க சார், அப்புறம் கல்யாணத்துக்கு வர்றவங்க தங்க வீடு வேனும், அதனால இன்னும் ஒரு வாரத்துல வீட்டை காலிப் பண்ணிட்டு இந்த பொண்ணோட சாமான்களை எல்லாம் எடுத்துக்க சொல்லுங்க” என்று மனிதாபிமானம் இன்றி அந்த மனிதமிருகம் பேச சத்யனுக்கு ஆத்திரமாய் வந்தது

“ நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா” என்று அவன் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கினான், கூடியிருந்தவர்கள் சத்யனை விலக்கிவிட,, சட்டையை சரி செய்தபடி முனங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அந்தாள்


இப்போது முகுந்தன் உடலை எங்கு எடுத்துச்செல்வது என்ற குழப்பத்துடன் சத்யன் மான்சியைப் பார்க்க,, அவள் அவனை பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக்கும்பிட்டு “ ஏதாவது செய்யுங்களேன்” என்று கதறினாள்

சத்யன் அருகே வந்த அரவிந்த் “ சார் மான்சிக்குன்னு எந்த சொந்தமும் இல்லை, அப்படியிருக்க நொந்துபோன பாடியை ஏன் இன்னும் காக்க வைக்கனும், நேரா சுடலைக்கே எடுத்துட்டுப் போய் எல்லா காரியங்கங்களையும் முறையா செஞ்சு அடக்கம் பண்ணிடலாம், நீங்க என்ன சார் சொல்றீங்க?” என்று சத்யனிடம் கேட்க...

சத்யனுக்கும் அவன் சொல்லும் யோசனைதான் சரியென்று பட்டது, மான்சி ஏதாவது சொல்வாள் என்று அவள் முகத்தைப் பார்த்தான், அவள் கண்கள் வற்றிய நிலையில் நிலையற்ற எதையோ வெறித்தபடி நின்றிருந்தாள்

“ சரி அரவிந்த் மான்சி மத்தவங்க எல்லாரையும் ஒரு ஆட்டோவில் ஏத்தி சுடலைக்குப் போய் வெயிட் பண்ணச்சொல்லலாம்,, நாம ரெண்டு பேரும் பாடியை ஏதாவது வண்டில எடுத்துகிட்டு போகலாம்” என்று சத்யன் சொல்ல, எல்லோரும் அதுதான் சரியென்று முடிவு செய்து ஒரு ஆட்டோவில் மான்சியை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு கிளம்பினார்கள்

சத்யன் நூறுரூபாயை அரவிந்தனிடம் கொடுத்து “ நீங்க போய் மாலை ஒன்னு வாங்கிட்டு வாங்க, நான் வெளிய நிக்கிற வேன்கள்ல ஏதாவது பேசி ஏற்பாடு பண்றேன்” என்றான்,

அரவிந்த் உடனே வெளியே ஓட, அவன் மாலையுடன் வருவதற்குள் சத்யன் ஒரு மாருதி வேனில் முகுந்தனின் உடலை ஏற்றிவிட்டு காத்திருந்தான், அரவிந்தன் மாலையுடன் வந்ததும் அதை வாங்கி முகுந்தனின் உடலின் மீது சத்யன் போட்டான், இந்த பொல்லாத உலகில் மான்சி சீரழிந்துவிடாமல் ஒரு சமூக அந்தஸ்தை கொடுத்தவனுக்காக சத்யன் மரியாதை செய்தான், அரவிந்தன் தான் வாங்கி வந்த மாலையை முகுந்தன் உடலில் போட்டான், வேன் சுடலையை நோக்கி கிளம்பியது, நேரம் பதினொன்றை கடந்திருந்தது

வேன் சுடுகாட்டில் நின்றதும், சத்யன் வேனிலிருந்து இறங்கி அங்கிருந்த மயான ஊழியரிடம் மருத்துவமனை சான்றிதழ்களை யும், தனது ஐடென்ட்டி கார்டையும் காட்டிவிட்டு நிலைமையைக் கூறி கொஞ்சம் பணத்தை கொடுக்க, அவர் சில பொருட்களை வாங்கி வரச்சொன்னார்,

அரவிந்தன் அந்தபக்கம் வந்த ஆட்டோவில் ஏறிச்சென்று அவர் கூறிய பொருட்களை வாங்கி வர, வேனில் இருந்து இறக்கி கீழே வைக்கப்பட்ட முகுந்தனின் உடலில் இருந்த பழைய மாலைகளை எடுத்துவிட்டு வாங்கி வந்த புது வேட்டியை போட்டு போர்த்தி பன்னீர் தெளித்து, புதிதாக வாங்கிய மாலையைப் போட்டு தலைமாட்டில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றிவிட்டு மான்சியை அருகில் அழைத்து முகுந்தனின் கால் பகுதியில் விழுந்து வணங்கிச் சொன்னார் அந்த சுடலை ஊழியர்

கண்ணீர் இன்றி வரண்ட விழிகளுடன் இயந்திரமாக விழுந்து எழுந்தவளைப் பார்த்து “ஏன்மா ரெண்டு பேருக்கும் யாரும் சொந்தக்காரங்க இல்லைன்னு சொல்றீங்க, உனக்கு பண்ண வேண்டிய சடங்கு எல்லாம் இனிமே யாரும்மா செய்வாங்க, பேசாம வளையலையும் கழுத்துல இருக்குற கயிறையும் அவிழ்த்து செத்தவன் மடியிலயே போடு, அவனோட அதுவும் போய் சேரட்டும்” என்று அந்த ஊழியர் ஒரு நிதர்சனத்தை அலட்சியமாக கூறினார் 


அவ்வளவு நேரம் கண்ணீர் வற்றிப் போய் நின்றிருந்த மான்சி முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று கதறி கண்ணீர் விட ஆரம்பித்தாள், அவளின் நிலையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அழுதனர், முதன்முறையாக சத்யனுக்கும் கண்கள் குளமானது யாரும் பார்க்கா வண்ணம் கண்ணீரை மறைத்தவன் மெதுவாக நடந்து மான்சியை நெருங்கினான்

முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் சத்யன் தன்னை நெருங்கியதை உணர்ந்து முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள், கண்ணீர் நிறம்பிய கண்களால் அவனைப்பார்த்தாள்

“ மான்சி ” ஒரு ஈரமான இரவில் ரசனையுடன் தான் எழுதிய கவிதை வாசிப்பவன் போல அவளை சந்தித்த இத்தனை நாட்களில் முதன்முறையாக அவளை பெயர் சொல்லி அழைத்தான் சத்யன் “அவர் சொல்றது ரொம்ப சரி, இந்த சடங்குகள் எல்லாம் செய்யும் நிலையில் நாம இல்லை, அதற்கான சந்தர்ப்பமும் இல்லை, அதனால அவர் சொன்ன மாதிரி செய்துடுங்க மான்சி” என்றான் இறைஞ்சுதலாக...

சிறிதுநேர தயக்கத்திற்க்குப் பிறகு மான்சி இயந்திரமாய் தலையசைத்து தனது கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை வெளியே எடுத்து தலைவழியாக கழட்டி கண்ணீரால் அதை கழுவி முகுந்தனின் உடலில் வயிற்றுப்பகுதியில் வைத்துவிட்டு மறுபடியும் அவன் காலடியில் விழுந்து எழுந்தாள், அந்த தாலியில் கூட தங்கம் இல்லை, வெறும் மஞ்சள் முடிந்திருந்தது அந்த கயிற்றில் ,,

மான்சி தன் கைகளில் இருந்த வளையல்களை கழட்ட முயன்றாள்,, சத்யனுக்கு மனசுக்குள் சுருக்கென்றது,, கடந்த நான்கு மாதங்களாக அவனிடம் மனு கொடுக்கும் வளையல் அணிந்த கைகள் இனிமேல் வளையல் இல்லாமலா? “ ம்ஹூம் வளையல் கழட்ட வேண்டாம் மான்சி” என்று அவசரமாய் தடுத்துவிட்டான்

மான்சியின் உடனிருந்த பெண்களும் “ வேண்டாம்மா, புள்ளைத்தாச்சி வளையல கழட்டாத” என்றார்கள்

விறகுகள் அடுக்கப்பட்டு முகுந்தனின் உடல் அதன் மீது வைக்கப்பட்டது, “ யாருப்பா கொல்லி வைக்கப் போறது ” என்று அந்த மனிதன் உரக்க குரல் கொடுக்க,, அத்தனைபேரும் தடுமாறி விழித்தனர்,

“ அந்தப் பொண்ணு புள்ளத்தாச்சியா இருக்குறதால அது கொல்லி வைக்க கூடாது, வேற யாராவது ஆம்பளை அந்த கொழாவுல குளிச்சுட்டு புது வேட்டியை கட்டிக்கிட்டு கொல்லி வைங்கப்பா” என்று அந்த நபர் மீண்டும் உரக்க குரல் கொடுக்க



சத்யன் மான்சியை திரும்பி பார்த்தான்,, அவள் கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை ‘ என்ன விலை கொடுத்தால் இவளின் கண்ணீர் நிற்கும்’ என்று தன் மனதிடமே கேள்வி கேட்டான்

சில விநாடிகள் தான் சிந்தித்தான் சத்யன், அதற்கு மேல் அவனை சிந்திக்க விடவில்லை மான்சியின் கண்ணீர், சரசரவென தனது டீசர்ட்டை கழட்டி அரவிந்தனிடம் கொடுத்தான், பேன்ட் பாக்கெட்டில் மிச்சமிருந்த பணத்தையும் செல் போனையும் எடுத்து கொடுத்தான், வேகமாக நடந்து சற்று தள்ளியிருந்த குழாயின் கீழ் அமர்ந்து தலை முழுகினான், பிறகு அங்கிருந்த வெள்ளை வேட்டியை பேன்ட்க்கு மேலேயே இடுப்பில் முடிந்துகொண்டு தோட்டியிடம் கொல்லி வைக்க விறகுக்காக கைநீட்டினான், எல்லாமே நிமிடநேரத்தில் நடந்தது

யாரோ ஒரு முகுந்தனுக்கு, ஒரு சகோதரனாக, தகப்பனாக, மகனாக.. சத்யனே இருந்து கொல்லி வைத்தான், நெருப்பு திகுதிகுவென்று எறிய கதறிய மான்சியை அணைத்தபடி சுடுகாட்டின் வெளியே அழைத்து போனார்கள் பெண்கள்


No comments:

Post a Comment