Monday, October 5, 2015

மைதிலி - அத்தியாயம் - 1

சனி, ஜனவரி, 21 2012 மாலை 4:00
நீல வானமும் அதன் கீழிருக்கும் நீலக் கடலையும் பார்த்தவாறு கடற்கரையில் நான் அமர்ந்து இருக்கிறேன். அந்த இளமாலை நேரத்தில் என் தலைக்கு பின்புறம் சூரியன் அஸ்தமனத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறான்.

நானோ என் இதய ஜோதியின் அஸ்தமனத்துக்காக காத்து இருக்கிறேன்.

சற்று நேரத்தில் என் பின்னால் ஆளரவம் கேட்க திரும்புகிறேன். என் அன்பு மகள் அமுதாவும் அவள் கையைப் பிடித்து நடந்து வந்த என் பேத்தி மம்தாவும் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

"நான் தாத்தாகிட்ட ஓடிப் போறேம்மா" என்ற என் பேத்தியை

"நோ டியர் .. தாத்தா இஸ் நாட் வெல்"

"பட் யூ ஸெட் பாட்டி இஸ் நாட் வெல்"

"தாத்தா இஸ் ஆல்ஸோ நாட் வெல். செல்லம் .. "

"பட் வொய்?"



அழுதழுது கண்கள் வீங்கிய நிலையிலும் தன் மகளிடம் அதுவரை பொருமையாக பேசிய என் மகளைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். பாட்டிக்கு உடல் சரியில்லை என்றால் தாத்தாவுக்கு உடல், மனம் எதுவும் சரியாக இருக்காது என்று அந்த அந்த மழலைக்குத் தெரியுமா?

தன் மகளுக்கு மேலும் பதிலளிக்காமல் அருகில் வந்த என் மகள், "டாட், ஷீ இஸ் ஸிங்கிங்க்"

"ம்ம்ம் ... பேசறாங்களா?"

"நீங்க சொன்ன மாதிரி நாங்க எல்லாம் பேசிட்டோம். நவ் இட்ஸ் யுவர் டர்ன். எவ்வளவு நேரம் பேசிட்டு இருப்பாங்கன்னு தெரியலை ..."

"ம்ம்ம் ... என் கிட்ட பேசாம போக மாட்டா"

கையூன்றி எழுவதற்குள் மூட்டுக்கள் ஒவ்வொன்றும் எனக்கு விடைகொடு என்று கதறின .. அறுபது வயது வரை ஆரோக்கியமாக இருந்த என் உடல், இந்த இரண்டு வருடங்களில்தான் எவ்வளவு வலிவிழந்து விட்டது? கடந்த ஆறுமாதங்களாக என் கண்மணி கண்மூடியவுடன் விழுவதற்காக அல்லவா காத்து இருக்கிறது?

ஒரு வருடத்துக்கு முன்பு கடற்கரையோரம் ஒரு சிறு ரிஸார்ட் அமைப்பதற்கென இருந்த அந்த இடத்தை வாங்கி அதில் என் கண்மணி மைதிலிக்காக கட்டிய வீட்டை நோக்கி நடக்கிறேன். இரண்டாம் மாடியில் கடலை நோக்கி கண்ணாடிச் சுவருடன் அமைந்த அறையை பார்த்த வண்ணம் நடக்கிறேன். என் கண்மணி அங்குதான் என்னிடம் இருந்து விடைபெறக் காத்து இருக்கிறாள்.

நான், உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் முரளி வாசுதேவ்.

தன் கடைசி மூச்சை விடுவதற்கு முன் என்னிடன் பேசக் காத்து இருப்பது ... எனக்கு சினேகிதியாகத் தொடங்கி, காதலியாகி, என் குழந்தை அமுதாவுக்கு தாயாகி, சில நாட்கள் என் வைப்பாட்டியாக இருந்து பிறகு மனைவியாகி என் மகனைப் பெற்ற என் இல்லத்தரசி மைதிலி முரளீதரன்.

உடன் வந்த பேத்தியை என் மருமகன் மஹேஷ் தூக்கிக் கொள்ள என் மகள் அவன் நெஞ்சில் முகம் புதைத்து மறுபடி அழத் தொடங்க அவளை சமாதானப் படுத்த அவன் காட்டிய அன்னியோன்னியத்தில் என் மனம் நெகிழ்ந்தது. மஹேஷின் தந்தை என் அருகே வந்து என் தோளை ஆதரவாகப் பற்றி என் மைதிலி இருக்கும் அறைவரை உடன் நடந்து வருகிறார்.

அறை வாசலில் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் நின்று என்னை வரவேற்தார்

"Sir, we have removed her life support .. and she is sinking .. "

"Will talking to me be too much strain for her?"

"The steroids we have pumped will make her feel nothing .. But I am afraid she is beyond strain now ..."

"So .. how long ?"

"Can't say .. please go 
talk to her"

"கவலைப் படாதீங்க கடைசி வரைக்கும் என் கிட்ட பேசிட்டுத்தான் இருப்பா"

அருகே ஆறடிக்கும் மேல் இருக்கும் என் மகன் அஷோக் குனிந்து நின்று அவன் தோளுயரத்துக்கே வந்த மருமகள் கீதாவின் தோளில் தலை சாய்த்து அழுது குலுங்கியவாறு இருந்தான். 
அந்த சுமையான தருணத்திலும் அந்த காட்சியை என் மனைவி கண்டு இருந்தால் கல கலவென்ற அவள் ட்ரேட் மார்க் சிரிப்பு ஒலித்து இருக்கும் என்று நினைத்தபடி அறைக்குள் நுழைகிறேன்.

எப்போதும், எந்த கஷ்டத்திலும் 
சிரிப்பு, உற்சாகம்; கடவுள் அவளுக்கு கொடுத்து இருந்த வரம் அது .. 
படுக்கையில் கடலைப் பார்த்தபடி திரும்பிப் படுத்து இருந்த மைதிலி நான் அறைக்குள் நுழைவதை உணர்ந்து சிரமத்துடன் திரும்ப முயலுவதற்குள் ஒரு கணத்தில் அவள் எதிரில் நின்றேன்.

கான்ஸர் தின்று மீதி இருந்த உடலை முழுவதுமாக ஒரு அங்கி போத்தி இருக்க அவளது அழகான முகத்தில் எனக்கு மட்டும் என்று அவள் வைத்து இருந்த அன்பு, காதல், காமம் எல்லாம் கலந்த அந்தப் புன்னகை தவழத் தொடங்கியது .. அலை அலையாக இருந்த கூந்தல் முழுவதும் உதிர்ந்ததில் இருந்து தலையில் எப்போதும் இருந்த ஸ்கார்ஃப் சற்று விலகி இருப்பதை சரி செய்கிறேன்.

சன்னமான குரலில், "போதும் விடுங்க .. இன்னும் என்ன?"

அவளைப் பார்த்தபடி அருகே அமர்கிறேன் ... ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் .. என் முகத்தைத் தொட கையை எடுக்க அவள் முயற்சிக்க அவள் கையருகே என் முகத்தை எடுத்துச் செல்கிறேன் ..

சருகான விரல்களால் என் முகத்தை வருடுகிறாள். என் மடியில் அமர்ந்து இருகைகளால் என் முகத்தை ஏந்தி வருடுவது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு ..

"ம்ம்ம் .. எனக்குத்தான் முதல்ல தெரியப் போகுது"

"என்ன சொர்க்கம்-நரகமா இல்லை அடுத்த ஜென்மமான்னா?"

"ம்ம்ம்"

"சொர்க்கம்-நரகம் அப்படின்னு இருந்தா நீ சொர்க்கத்துக்குத்தான் போவே"

"நீங்களும் சீக்கரம் வந்துடுங்க .. "

"சொர்க்கத்துக்கு நான் வருவனாங்கறது சந்தேகம் .. "

"இல்லை .. போனதும் ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணறேன் .. "

"கண்டு ப்டிச்சா இங்கேயே எனக்கு ஜாமீன் கிடைக்கறது சந்தேகம். இங்கே சிக்காதவன் எல்லாத்துக்கும் அங்கேதான் பதில் சொல்ல வேண்டிய இருக்கும்"

"ம்ம்ம் .. அப்ப எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கறேன்"

"வேண்டாம் நரகத்தில் சந்தோஷமா இருக்க முடியாது"

"உங்க கூட இருந்தா போதும் .. இதுவரைக்கும் .." என்று மூச்சு இழுத்தாள்

"இதுவரைக்கும்?"

"நீங்க கூட்டிட்டு போகாத ஒரு இடம்"

இருவரும் ஒருவரை ஒருவர் பாத்து புன்னகைக்கிறோம்.

"அப்படி இல்லாம இருந்தா?"

"அடுத்த ஜென்மம்ன்னு இருந்தாவா? நீ ஒரு ராஜகுமாரியா பொறப்பே"

"நீங்க ?"

"உன் அரண்மணையில் ஒரு கரப்பான் பூச்சியாப் பொறப்பேன்"

"ரெண்டு பேரும் கரப்பான் பூச்சியா பொறக்கலாம்"

"கரப்பான் பூச்சின்னா ரொம்ப தூரம் போய் நிப்பே? இன்னமும் தொட்டுட்டு இருக்கே?"

"இப்ப இருந்தே பழகிக்கறேன் .. ஆனா" மறுபடி மூச்சிரைப்பு

"ஆனா?"

"அமுதாகிட்ட சொல்லாதீங்க . "

சோகச் சிரிப்புடன் நான், "ஏன் ?" தாயை விட கரப்பைக் கண்டால் அலறுபவள் அமுதா

"இப்பவே பேகான் ஸ்ப்ரே அடிச்சுடுவா" என்று சொல்லி களுக்கென்று சிரிக்கிறாள் .. கண்கள் கலங்குகின்றன .. என் முகத்தை வருடிக் கொண்டு இருந்த விரல்கள் சலனமற்று நிற்கின்றன

என் மைதிலி என்னை விட்டு பிரிகிறாள் .. 


ஜனவரி 23, 2012 பகல் 2:30

அன்று அதிகாலையில் என் மைதிலியின் அஸ்தி இருந்த செம்பைக் கையில் ஏந்தி கடலை நோக்கி நடந்தேன்.

என் மைதிலியுடன் ஐந்து வருடத்துக்கு முன்பு இந்த வீட்டில் குடி புகுந்ததில் இருந்து இரண்டு வருடத்துக்கு முன்பு வரை காலையிலும் மாலையிலும் தவறாமல் வாக்கிங்க் சென்ற அதே கடற்கரைதான் அது. தன் அலைகளால் அவள் கால்களை குளிப்பாட்டிய அதே கடலில் அவளது மிச்ச மீதியை கரைக்கச் சென்றேன்.

கடலில் அஸ்தியை கரைத்த பிறகு அங்கேயே செய்ய வேண்டிய பூஜைகளை முடித்தேன். அருகில் அழுத மகனையும் மகளையும் தேற்ற அவரவர் வாழ்க்கைத் துணையிருக்க நான் மட்டும் தனித்து இருப்பது போல் உணர்ந்தேன். 'கடவுளே, என் டைம் டேபிள் படி என்னை கூட்டிட்டு போயிடு' என்பது ஒன்றே எனது பிரார்த்தனை.

மதியம் வீட்டில் படைப்புச் சாப்பாட்டை அவளது படத்தின் முன் வைத்து பூஜை செய்ய வேண்டியிருந்த போது எதை முதலில் செய்ய வேண்டும் அதற்கு அடுத்தது என்ன என்று சற்று திணறினேன். என் தந்தையின் மூன்றாம் நாள் பூஜையின் போது உடன் இருந்து ஒவ்வொன்றையும் மைதிலி செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது.

பூஜையை முடித்து காக்காய்க்கு சாப்பாடு வைத்து மாடியில் நின்று 'கா கா கா' என்று கத்திய போது சேன் டியாகோவில் ஃபிஷர்மென்ஸ் வார்ஃப் என்ற இடத்துக்கு அருகே இருக்கும் கடற்கரைக்கு என் தந்தையின் வருடாந்திரத்தின் போது காக்காய்க்கு சோறிடுவதற்கென சென்றபோது காகங்களுடன் கடற் பறவைகளும் சாப்பிட்டதைக் கண்ட மைதிலி கல கல வென சிரிப்புடன், "நம்ம ஊருன்னா மாமா காக்கா ரூபத்தில் மட்டும் வந்து சாப்பிட்டு இருப்பார். இங்கே சீ கல் ரூபத்திலயும் வந்து இருக்கார்" என்றதையும் நினைவு கூர்ந்தேன்.

மதியச் சாப்பாட்டுக்கு பிறகு என் ஸ்டடி ரூமுக்கு செல்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக மைதிலி என்னுடன் இல்லாத போதெல்லாம் அதுவே என் சரணாலயம். நடமாடக் கூடிய நிலையில் இருந்த போது பல சமயம் மைதிலியும் என்னுடன் அங்கு வந்து, நான் சொஃபாவில் அமர்ந்து இருந்தால் என் மேல் சாய்ந்த படி என் அருகிலோ அல்லது ரிக்ளைனரில் அமர்ந்து இருந்தால் என் மடியிலோ அமர்ந்து இருப்பாள்.

நான்கு வருடத்துக்கு முன்னர் பெங்களூரில் இருந்த எங்களது பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து இருந்தாலும். இந்த வீட்டில் அவைகளை முழுவதுமாக அடுக்கி ஒழுங்கு படுத்த இருவரும் ஒரு வருடம் எடுத்துக் கொண்டோம்.

பள்ளி இறுதியில் இருந்து எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது. எனது டைரிகள் அனைத்தையும் அழகாக ஒரு அலமாரியில் அடுக்கி வைத்து இருந்தாள். இது வரை என் அந்தரங்கத்தை மதித்து எனது டைரியை அவள் திறந்து கூட பார்த்தது இல்லை.

ஒரு வருடத்துக்கு முன்பு அவளது வாழ்க்கை விரைவில் முடியப் போகிறது என்று ஆன பிறகு அவள் இது வரை செய்திராத, அனுபவித்து இராதவற்றை இருவரும் ஒரு பட்டியல் இட்டோம். அந்த பட்டியலில் ... 'ஒரு மலையுச்சிலே இருந்து பஞ்ஜி ஜம்ப் பண்ணனும்' போன்றவற்றைத் தவிற பெரும்பானவற்றை முடித்து இருந்தோம் ...

ஒன்று மட்டும் இன்னும் தொடங்காமலே இருந்தது ...

ஒரு நாள் அவள் என்னிடம் ...

"எம்ப்பா, எனக்கு இன்னொரு ஆசை ... "

"என்ன ஆசை?"

"எனக்குத் ஞாபக சக்தி ரொம்பி கம்மி இல்லையா?"

"உனக்கா? உனக்கு இருக்கறது செலெக்டிவ் மெமரி .. ஸம்திங்க் பண்ணற அவசரத்தில உன் பட்டுப் புடவை ஒண்ணு கொஞ்சூண்டு கிழிஞ்சு போனது நல்லா ஞாபகம் இருக்கும் ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நீ முதல் முதலா யூ.எஸ்ஸுக்கு வந்தது மறந்து போயிருக்கும்" என்றேன் ... 'ஸம்திங்க்' என்பது எங்களது சேர்க்கைக்கு எங்களுக்கு இடையே இருந்த குறியீட்டு மொழி .. தவிற, எனக்கு வேண்டும் என்று இருந்தால் அவள் முதுகை வருடுவதும் அவள் உள்ளங்கையை சுரண்டுவதும் எனது தேவையின் சங்கேத அறிவிப்பு. வீட்டில் லோ ஹிப் கட்டி இருப்பது அவளது தேவையின் சங்கேத அறிவிப்பு. ஐந்து வருடத்துக்கு முன்னர் வரை வாரத்துக்கு நாலு நாட்களாவது எங்களுக்கு இடையே ஸம்திங்க் நடக்கும். சரி, அப்போது நடந்த உரையாடலை தொடர்கிறேன் ..

"சரி. நீங்க சொல்ற மாதிரி எனக்கு செலக்டிவ் மெமரின்னே வச்சுக்கலாம். ஆனா, எனக்கு நாம் மொத மொதலா பாத்ததில் இருந்து ஒவ்வொண்ணையும் உங்க கூட உக்காந்து ஞாபகப் படுத்திப் பார்க்கணும்னு ஆசை"

"எப்படி?"

"ம்ம்ம் ... உங்க டைரி ஒவ்வொண்ணா நீங்க எனக்கு படிச்சுக் காட்டணும்"

"என் டைரியை படிச்சா உனக்கு ஞாபகம் வராது .. "

"இல்லை .. படிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லணும். நீங்க ஹிண்ட் கொடுத்தா எனக்கு என்ன நடந்ததுன்னு ஞாபகம் வரும். அனேகமா உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லாதது ஒண்ணும் இருக்காது. சோ, நீங்க நிச்சயம் டைரில எழுதி இருப்பீங்க"

"சரி, One of these days we will do it .. " என்று வாக்களித்து இருந்தேன்.

அவள் நினைவாக அவள் என்னிடம் இருப்பது போல் பாவித்து நான் அவளை சந்தித்த நாள் முதல் எழுதிய டைரிகளை படித்து நடந்தவற்றை நினைவு கூரத் துவங்குகிறேன் ...

1970இல் இருந்து நாற்பத்து இரண்டு டைரிகளை மூன்றாக பிரித்தேன். மேடு பள்ளங்கள் நிறைந்த முதல் பதினோறு வருடங்கள். அதற்கு அடுத்த ரம்மியமான இருபத்தி ஐந்து வருடங்கள். முடிவை நோக்கிப் பயணித்த அடுத்த ஏழு வருடங்கள். முதலில் தொடங்கி இறுதி வரை படிக்காமல் தினமும் இந்த மூன்று பகுதிகளில் இருந்தும் படிக்க முடிவெடுத்தேன்.

முதல் பகுதியில் முதல் டைரியை கையில் எடுக்கிறேன்




1970

மைதிலி என் வாழ்வில் தோன்றிய பக்கங்களுக்கு செல்லுகிறேன் ...

கோவையில் புகழ் பெற்ற பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் பி.ஈ மெக்கானிகல் எஞ்சினீயரிங்க் நான்காம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது. என் தங்கை வசி என அழைக்கப்படும் வசந்தா எஸ்.எஸ்.எல்.ஸியில் இருந்தாள். என் தந்தை வாக்களித்தது போல் எனக்கு ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து இருந்தார். எனக்கு மோட்டார் பைக் வாங்கிக் கொடுப்பதை விட இரண்டு பைக்குகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் வெளியில் செல்லுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே என் தந்தையின் பரோபகாரத்துக்கு முக்கியக் காரணம். அதுவும் குறைந்த செலவில் ஒரு செகண்ட் ஹாண்ட் பைக் வாங்கி அதை ஒரு அளவுக்கு புதிது படுத்திக் கொடுத்து இருந்தார்.

அன்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய போதுதான் அவளை முதல் முதலாகப் பார்த்தேன். ஹாலில் என் தங்கையுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாள். உள்ளே இருந்து வந்த அம்மா,

"முரளி, இது மைதிலி. இவங்க அப்பாவுக்கு இந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்கு. நம்ம பக்கத்து வீட்டுக்கு குடி வந்து இருக்காங்க. நம்ம வசி ஸ்கூலில்தான் அவளும் எஸ்.எஸ்.எல்.ஸி சேர்ந்து இருக்கா"

'பதினோறாவுது படிக்கறான்னா நிச்சயம் பதினாறு வயசுதான் இருக்கும். மூஞ்சியைப் பாத்தா அப்படித்தான் தெரியுது. ஆனா உடம்பு சும்மா கும்முன்னு எப்படி இருக்கு?' என்ற என் மனத்தைப் படித்து இருப்பாளோ தெரியவில்லை

தாவணியை ஒதுக்கியபடி "நான் வரேன் ஆண்டி. வரேன் வசி. நாளைக்கு ஸ்கூலில் பாக்கலாம்" என்று விடை பெற்றுச் சென்றாள்.

அன்று முதல் தினமும் அவளை அவள் என்னை பார்க்காத போது பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். அவளது தங்கை மற்றும் தம்பி இருவரும் அருகில் இருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றனர். அவள் மட்டும் வசி படிக்கும் பள்ளிக்குச் சென்றாள். அந்த பள்ளி என் கல்லூரிக்கு அருகே இருந்தது. நான் என் தங்கையை பின் சீட்டில் அமர்த்திக் கொண்டு செல்கையில் அவள் பஸ் ஸ்டாப்பில் நின்று இருப்பாள்.

ஒரு நாள் வசி என்னிடம் "அண்ணா அவளையும் கூட்டிட்டு போகலாமா?"

"ட்ரிப்பிள்ஸ்ஸா? போலீஸ் பிடிச்சான்னா தீட்டிறுவான்"

"இங்க எங்கண்ணா போலீஸ்காரனுக வராங்க? லக்ஷ்மி மில்ஸ் ஜங்க்ஷனில்தான் எப்பவாவுது போலீஸ்காரங்க நின்னுட்டு இருப்பாங்க. நம்ம வேணும்ன்னா அவளை கூட்டிட்டு நவ இந்தியா வழியா போயிறலாம்" என்று அறிவுரைத்தாள்.

வசியின் பிடிவாதத்தை நன்கு உணர்ந்த நான், "அப்பா அம்மா திட்டுவாங்க. நம்ம அப்பா அம்மா சரின்னாலும் அவளோட அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்க" என்று மனதுக்குள் வேண்டிய படி எனது அடுத்த சப்பைக் கட்டைக் கட்டினேன்.

வசி எங்கள் இரு பெற்றோர்களிடமும் பேசி ஒப்புதல் வாங்கினாள். மைதிலியின் பெற்றோருக்கும் எனது பெற்றோருக்கும் இதனால் மிக்க மகிழ்ச்சி.

வசி இதை மைதிலியுடன் வந்து அறிவித்த போது நான், "என்னடா இது பையன் ட்ராஃபிக் ரூல்ஸை மீறரானேன்னு ஒருத்தருக்கும் அக்கறை இல்லை" என்று சலித்துக் கொண்டு வேண்டா வெருப்பாக ஒப்புக்கொள்வது போல் ஒப்புக் கொண்டேன்.

அன்று அவளது குணத்தின் ஒரு பரிமாணத்தைப் புரிந்து கொண்டேன்.

நான் அப்படிச் சொன்ன மறுகணம், "வேண்டாம் வசி. நான் பஸ்ஸிலயே போய்க்கறேன்" என்று சொல்லிவிட்டு அவளது வீட்டுக்கு சென்று விட்டாள்.

வசியிடம் இருந்தும் என் அன்னையிடம் இருந்தும் எனக்கு வசை மாரி பொழிந்தது.

அம்மா, "என்ன பையண்டா நீ? ஒருத்தருக்கு உதவறதுல உனக்கு என்ன அப்படி சலிப்பு"

"நீ என்ன பண்ணுவியே ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அவ கிட்ட பேசி சமாதானப் படுத்தி நாளைக்கு நம்ம கூட வர வைக்கற" இது வசியின் ஆணை.

அவர்கள் வீட்டை அடைந்த என்னை மைதிலியின் அம்மா, "என்ன முரளி ஆச்சு? மூஞ்சியை உர்ருன்னு வெச்சுட்டு வந்து ரூமுக்குள்ள போய் கதவை தாள் போட்டுட்டு இருக்கா"

"அவளை வெளியில் வரச் சொல்லுங்க ஆண்டி. நான் விளையாட்டா எதோ சொன்னேன். அவ அதுக்கு கோவிச்சுகிட்டுப் போயிட்டா"

அவளது பெற்றோர் அவளை அழைக்க அறையில் இருந்து வெளியில் வந்தவளிடம்

"சாரி மைதிலி. நான் விளையாட்டுக்கு சொன்னேன்" என்று நான் அசடு வழிய அவள் என்னை முறைத்தபடி இருந்தாள்.

தொடர்ந்து நான், "என்ன நாளைக்கு எங்க கூட வர்றியா?" ... மறுபடி அதே கோவப் பார்வை. மௌனம்.

தொடர்ந்து கெஞ்சுவது போல் நான் "அம்மா தாயே, வசி எனக்கு வீட்டில் சோறு போடாம செஞ்சுறுவா. தயவு செஞ்சு ஒத்துக்கோ" என்றதும் முத்துப் பரல்கள் உதிர்ந்தது போல் கல கலவென சிரித்தபடி தலையசைத்தாள்.


அடுத்த நாளில் இருந்து என் பைக்கின் பெட்ரோல் டாங்கின் முக்கால் பாகத்தில் எங்கள் மூவரின் புத்தகப் பைகள், அதற்கடுத்த கால் பாகத்திலும் சீட்டின் முன்புற நுனியிலும் நான், எனக்கு பின்னால் வசி, அவளுக்கு பின்னால் மைதிலி என எங்கள் காலைப் பயணம் தொடங்கும். முன்னால் இருந்து பார்ப்பவர்க்கு என் தலை மட்டும் தெரியும். மாலை வீடு திரும்புகையிலும் அவ்வாறே.

வீட்டில் விடுமுறை நாட்களில் அவ்வப் போது மொட்டை மாடியில் நடக்கும் அவர்களது அரட்டையில் நானும் கலந்து கொள்வேன். ஆனால் நான் கலந்து கொள்ளாத நேரத்தில் அவர்களது அரட்டையை என் அறையில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பேன். எங்கள் இருவரின் கண்களும் அடிக்கடி பேசிக் கொள்ளும்.

ஒரு நாள் அவர்களது அரட்டைக்கு நடுவே கீழே சென்ற வசி அங்கு இருந்து என்னை கூப்பிட அறைக்குள் இருந்த என்னை மைதிலி வந்து அழைத்தாள்.

எல்லோரிடமும் என்னைப் பற்றி பேசுகையில் 'வசி அண்ணா' என்று குறிப்பிடும் அவள் அன்று நேரிலும் "வசி அண்ணா, ஆண்டி கூப்பிடறாங்க" என்றாள்

"நான் உனக்கு அண்ணனா?"

குறு குறுத்த கண்களால் என்னைப் பார்த்தவள், "வசிக்கு அண்ணா அதான் ... வேற எப்படிக் கூப்பிடணும்ன்னு சொல்லுங்க"

"பேரைச் சொல்லிக் கூப்புடு. போதும்"

"வசியே உங்களை பேர் சொல்லிக் கூப்பிடறதில்லை. நான் கூப்டா எனக்கு திட்டு விழும்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ முறையை மாத்தாதே"

"என்ன முறை?" என்று கேட்டாலும் அவள் முகத்தில் இருந்த குறும்புப் புன்னகை அவளுக்கு தெரியும் என்று காட்டிக் கொடுத்தது. கீழே செல்ல படிகளை அடைந்தவள், தலை மட்டும் தெரியும் அளவுக்கு நின்று என்னைப் பார்க்காமல் என் காதில் விழும்படி "சரியான மக்கு. அண்ணான்னா கூப்டேன்? வசி அண்ணான்னு தானே கூப்டேன்" என்ற பிறகு வெட்கத்தில் முகம் சிவக்க படிகளில் இறங்கினாள்.

வசி எப்படியோ மோப்பம் பிடித்து விட்டாள். ஒரு நாள் பேச்சுவாக்கில் அம்மாவிடம் அவள், "அம்மா, அண்ணன் மைதிலிகிட்ட ரொம்பவே வழியுது"

அன்று இரவு என் பெற்றோர் என்னை அழைத்துப் பேசினர்

அப்பா, "என்னடா நடக்குது?"

நான், "என்ன?"

அம்மா, "நேரடியா கேக்கறேன் ... மைதிலி மேல உனக்கு ஆசையா?"

நான், "ம்ம்ம் .. "

அப்பா, "உனக்கு இது இப்ப தேவையா? மேல படிக்கணும், தொழில் ஆரம்பிக்கணும் அப்படிங்கற கனவெல்லாம் என்னாச்சு?"

நான், "அப்பா, சத்தியமா அந்த கனவெல்லாம் இருக்குப்பா"

அப்பா, "அப்பறம் ஏண்டா இப்படி மனசை கெடுத்துக்கறே? அதுவும் இல்லாம அவ சின்ன பொண்ணு. எதாவுது எக்கு தப்பா நடந்துதுன்னா உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டுறுவாங்க"

நான், "அப்பா, நான் அப்படிப்பட்டவன் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா? ஏன் இந்த மாதிரி என்னை பத்தி இப்படி கேவலமா யோசிக்கறீங்க?"

அம்மா, "உங்க ரெண்டு பேர் வயசும் அப்படிடா"

நான், "அம்மா எனக்கு இருவது வயசாச்சு"

அப்பா, "இன்னும் வெவரம் பத்தாதுடா. பொட்டைப் புள்ளகளும் பதினாறு வயசில் அப்படித்தான். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு யோசிச்சிப் பாரு உனக்கே இது ஒரு இன்ஃபாக்சுவேஷன் அப்படின்னு புரியும்"

நான், "இல்லைப்பா, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் எனக்கு இப்படித்தான் இருக்கும்"

அம்மா, "சரி, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அந்த பொண்ணுகிட்ட எதுவும் பேசாதே. தள்ளியே இரு. அதுக்கு அப்பறமும் உனக்கு அவளை பிடிச்சு இருந்து அவளுக்கும் உன்னை பிடிச்சு இருந்தா நானே அவங்க அப்பா அம்மா கிட்ட பேசறேன்"

நான், "சரிம்மா"

அப்பா, "அப்போ உன் ப்ளான் எல்லாம்?"

நான், "அப்பா, என் ப்ளான் எதுவும் தடைபடாதுப்பா. நிச்சயம் பி.ஈ. முடிச்சதும் யூ.எஸ்ஸுக்கு மேல் படிப்புக்கு போகத்தான் போறேன். அங்கே வேலை வாங்கத்தான் போறேன். அதுக்கு அப்பறதான், அதுவும் வசிக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்"

அம்மா, "வசி கல்யாணத்துக்காக நீ காத்து இருக்க வேண்டாம். அவ தலையில் எப்படி எழுதி இருக்கோ அப்படி நடக்கும். நீ நெனச்சபடி நீ முன்னுக்கு வந்தா போதும்"

இவ்வாறாக அடுத்த இரண்டு ஆண்டு டைரிகளில் மௌனமாக நான் அவளை காதிலித்ததைப் பற்றி மட்டும் எழுதி இருந்தேன்....



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள் இல்லாத பக்கங்களை திருப்புகிறேன். அடுத்தடுத்த டைரிகளை எடுக்கிறேன்.


1 comment: