Saturday, October 31, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 1

வானம் தங்கநதியாய் பொங்கி வழியும் காலைப்பொழுது.... திரைப்படத்திற்கு போவதை திருவிழாவைப் போல கொண்டாடும் நடுத்தரவர்க்கத்து பெண்களைப்போல் மேகங்கள் கண்கூசும் ஜொலிப்புடன் ஆங்காங்கே மிதந்துக்கொண்டிருந்தன

தமிழ்நாட்டில் சூரியனின் பார்வையில் எப்போதும் செல்லப்பிள்ளையாக வலம்வரும் வேலூர்மாவட்டம்... ஒருகாலத்தில் பொன்னையாறும் பாலாறும் கரைபுரண்டு ஓடிய மாவட்டத்தில், இன்று இந்த இரு ஆறுகளும் மக்களின் தாகத்தை தணிக்கமுடியாத சோகத்தில் வரண்டுபோன நிலையில் பரிதாபமாக காட்சியளித்தது

பல புரதான அடையாளங்களை கொண்ட வேலூர் மாவட்டத்தை தற்போது நினைத்த மாத்திரத்தில் ஞாபகத்திற்கு வருவது வேலூர் மத்திய சிறைச்சாலைதான்... அகலமான சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் வரிசையாய் அலங்கரிக்க... கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பதினான்கடி உயர காம்பவுண்ட் சுவற்றின் மேல் பகுதியில் மின்வேலி சுற்றப்பட்டு கம்பீரமாக காட்சி தந்து... பல நூற்றாண்டுகளாக வினோபா, காமராசர், அண்ணா, போன்ற லட்சியவாதிகளையும், ஆட்டோ சங்கர், பிரேமானந்தா, இன்னும் சில அரசியல் துரோகிகள் என பல கொடுங்கோலன்களையும், தனக்குள் வைத்திருந்த.. வைத்திருக்கும் மத்திய சிறைச்சாலை..



கியரை முறுக்கிய கையை திருப்பி மணியைப் பார்த்துவிட்டு அன்றும் பணிக்கு தாமதமாக செல்லும் அவசரத்தில் தனது பாக்ஸர் ஏடி யில் பறந்துகொண்டிருந்தான் சத்யன்...

சத்யன் இருபத்தியாறு வயது இளைஞன்.. மத்தியச் சிறையில் கான்ஸ்டபிளாக கடந்த ஒன்பது மாதமாக பணியில் இருக்கிறான், எஸ்ஜ ஆகவேண்டும் என்று தனது கனவுக்கு அரசாங்கத்தின் மறைமுக விலை அதிகம் என்பதால், பணத்தகுதி இல்லாமல் உடல்தகுதியை முன்நிறுத்தி சாதாரண கான்ஸ்டபிளாக பணியமர்த்தப் பட்டான்.. அவனுடைய ஆறடி உயரமும் நாற்பத்தி இரண்டு இஞ்ச் மார்பு சுற்றளவும், பள்ளி கல்லூரியில் பல்வேறு விளையாட்டுகளுக்காக வாங்கிய பட்டயங்களும் அவனுக்கு பெற்றுத்தந்தது சாதாரண கான்ஸ்டபிள் வேலையைதான்

எஸ்ஜ ஆகி நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெயர் வாங்கவேண்டும் கனவை தனது தலையணையில் புதைத்துவிட்டு, வயது வந்து பலவருடங்களாக துணைத்தேடி காத்திருக்கும் தங்கைக்கு கல்யாணம், ப்ளஸ்டூ படிக்கும் தம்பியை அடுத்த வருடம் கல்லூரியில் சேர்க்கவேண்டும், அம்மாவுக்கு தங்கத்தில் ஏதாவது ஒரு நகை வாங்கி தர வேண்டும், குடிகார அப்பனை ஏதாவது மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்த வேண்டும், அடிப்படை சம்பளம் ஆறாயிரம் மட்டுமே வரும்போது இப்படி வருவாயை மீறிய கடமைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலையை தன் தோளில் சுமந்தபடி தினமும் சிறைச்சாலைக்கு சென்றுவரும் ஒரு குடும்ப கைதி சத்யன்

சிறைச்சாலையின் எதிரே இருந்த சிறை ஊழியர்களுக்கான பார்க்கிங் பகுதியில் தனது எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாக்ஸரை பாதுகாப்பாக பார்க் செய்து, பிறகு லாக் செய்துவிட்டு சிறையின் பெரிய இரும்பு கதவுக்கு பக்கத்தில் இருந்த சிறிய கதவை காவலர் ஒருவர் திறந்துவிட கதவருகே இருந்த கூண்டில் மேசையில் இருந்த கையெழுத்து பேரேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு “ ஸாரி அண்ணே இன்னிக்கும் லேட்டாயிருச்சு” என்று ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு உள்ளே போனான்


அவனது பணி வழக்கம் போல கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை முறைப்படுத்தி அனுப்புவதுதான், காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை கைதிகளை சந்திக்கலாம்.. ஒரு கைதியை தலா மூன்றுபேர் வரை சந்திக்கலாம் என்பதால் விடுமுறை நாட்களைத் தவிர எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்,

பார்வையாளர்கள் கொடுத்திருந்த மனுக்களை அள்ளிக்கொண்டு மேசையில் அமர்ந்து ஒவ்வொன்றாக செக் பண்ணி, சிறையின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப்போகும் மனுக்களை ஒருபக்கமாக அடுக்கி கையில் எடுத்துக்கொண்டு தவறாக பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அள்ளி வேறு ஒரு கான்ஸ்டபிளிடம் கொடுத்து “ மனு கொடுத்தவங்க பேரை கூப்பிட்டு அவங்ககிட்ட மனுவை ரிட்டன் குடுங்க துரை அண்ணே ,, நான் இந்த மனுவை எல்லாம் ஜெயிலர் கிட்ட காட்டி கையெழுத்து வாங்கிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு துரையின் பதிலை எதிர் பார்க்காமல் சிறை வளாகத்தில் ஓடினான்

பார்வையாளர்கள் கைதிகளை பார்ப்பதில் இன்று தன்னால் ஒரு மணிநேரம் தாமதம் என்ற குற்ற உணர்வில் சத்யன் ஜெயிலர் அறையை நோக்கி ஓடினான், உள்ளே நுழைந்து விரைப்பாக ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு மனுக்களை அவர் மேசையில் வைக்க மேலோட்டமாக பார்வையிட்ட ஜெயிலர் அத்தனை மனுவிலும் தனது கையெழுத்தை அவசரமாக பதித்துவிட்டு “ காத்தமுத்துவை போய் கைதிகளுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டு நீ போய் விசிட்டர்ஸ் வர்ற பக்கம் பாதுகாப்பை செக்ப் பண்ணு” என்று ஜெயிலர் சொல்ல

“ எஸ் சார்” என்றவன் மறுபடியும் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேவந்து, கான்ஸ்டபிள் காத்தமுத்து எங்கே என்று தேடி கண்டுபிடித்து அவரிடம் மனுக்களை கொடுத்துவிட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பை கவனிக்க சிறையின் வெளிப்புறமாக சென்றான்

சவுக்கு மர கொம்புகள் கட்டப்பட்டு வரிசையாக செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்க, அந்த வரிசைகளில் வயது வித்தியாசமின்றி ஏகப்பட்ட மக்கள் வெயிலை பொருட்படுத்தாது காத்திருந்தனர்,

நிராகரிக்கப்பட்ட மனுக்களை தங்கள் கையில் வைத்துக்கொண்டு என்னவென்று காரணம் புரியாமல் சோகமாக நின்றிருந்த மக்களை பார்க்க சத்யனுக்கு பரிதாபமாக இருந்தது, ஒரு மரத்தடியில் நின்று அவர்களை நோக்கி கையசைத்து அழைத்து, ஒவ்வொருவரின் மனுவையும் வாங்கி அதிலிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, வேறு மனு எழுதி கொடுத்துவிட்டு நாளை வந்து கைதிகளை பார்க்கும்படி சொல்லிக்கொண்டு இருந்தவன் முன்பு பிளாஸ்டிக் வளையல் அணிந்த கை ஒன்று ஒரு மனுவை நீட்டியது


வளையல் அணிந்த இந்த கை சத்யனுக்கு பரிச்சயமானது தான்... கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பரிச்சயமான அழகான கை... குனிந்து மனுவை பார்த்துக்கொண்டு இருந்த சத்யன் அந்த கைக்கு சொந்தக்காரியை பார்க்கும் நோக்கில் நிமிர அடுத்து அவன் பார்வையில் பட்டது அந்த பெண்ணின் உப்பிய கர்ப்பிணி வயிறு, அவளின் மெல்லிய இடை முதுகோடு வளையும் அளவிற்கு அவளின் வயிற்றுச் சுமை வளர்ந்திருந்தது,

சத்யன் மெதுவாக நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான், அவளேதான்.... நான்கு மாதங்களாக வளர்ந்து வரும் வயிற்றுடன் ..... ஆட்டோவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தன் கணவனை காண வாரம் இருமுறை சிறைச்சாலைக்கு வரும் வடநாட்டுப் பெண்... ஆனால் தமிழ்நாட்டு அடக்கம்,... கட்டியிருந்த அரக்கு நிற கைத்தறி சேலையை தோளோடு போர்த்தியிருந்தாள், அதையும் மீறி கழுத்தில் தெரிந்த மஞ்சள் கயிறு மஞ்சள் இல்லாமல் வெளுத்திருந்தது, அடர்ந்த கூந்தலை கொண்டையாக அள்ளி முடிந்திருந்தாள், அழகான மஞ்சள் முகத்தில் வகிட்டில் குங்குமமும், செயற்கையாக அல்லாமல் இயற்கையாகவே வளைந்திருந்த புருவ மத்தியில் சிவப்பு பொட்டும், அகன்ற விழியில் நிரந்தரமாக தேங்கிய சோகமும், கூர் நாசியின் இடதுபுறத்தில் சிறு பொட்டாக முத்து மூக்குத்தியும், செம்பருத்தி மடலாய் விரிந்து மடங்கிய காதுகளில் சிறியதாய் ஒரு தோடு என,, தனது அபரிமிதமான அழகை மலிவான ஆடைக்குள் அடக்கி வைத்த அழகானப் பெண்

கையில் இருந்த மனுவை அவனிடம் நீட்டியபடி “ என்ன மிஸ்டேக்னு தெரியலை.. ரிஜக்ட் பண்ணிட்டாங்க சார்” என்று பரிதாபமாக கூறியவளை பார்க்கவே அய்யோ என்றிருந்தது,

இவள் மனு எப்பவுமே சரியாகத்தானே இருக்கும், பாவம் இப்போது இவள் ஏன் நிராகரித்தோம் என்று வருத்தத்துடன் எண்ணியபடி மனுவை வாங்கி பிரித்துப் படித்துப்பார்த்தான் சத்யன்,, எல்லாம் சரியாக இருந்தது, ஒன்றைத்தவிர.. மனுதாரரின் பெயர் குறிப்பிடப் படவில்லை, சத்யன் அவளிடம் அதை குறிப்பிட்டு காட்டினான்

“ மறந்துட்டேன் போலருக்கு சார் மன்னிச்சிடுங்கோ” என்றவள் கையொப்பமிட பேனாவுக்காக சுற்றுமுற்றும் தேடினாள்,

சத்யன் தன் பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து கொடுத்து “ இன்னேரம் எல்லா கைதிக்கும் சொல்லி முடிஞ்சிருக்கும், மறுபடியும் நாளைக்குதான் சொல்லுவாங்க, ஆனா நான் முடிஞ்சவரைக்கும் ட்ரைப் பண்ணி உங்க வீட்டுக்காரரை வரவழைக்கிறேன், நீங்க கையெழுத்துப் போட்டு குடுத்துட்டு அந்த மரத்தடியில போய் உட்காருங்க, க்யூ கொஞ்சம் நகர்ந்ததும் உங்களை கூப்பிடுறேன்” என்று சத்யன் கருணையுடன் சொல்ல

கலங்கிய கண்களுடன் கையெடுத்துக்கும்பிட்டு விட்டு கையெழுத்துப் போட்டாள் அந்தபெண்,, ஆங்கிலத்தில் அழகான கையெழுத்தில் மான்சி முகுந்தன் என்று எழுதிவிட்டு பேப்பரை மடித்து சத்யனிடம் கொடுத்து “ ரொம்ப நன்றிங்க சார், இனிமேல் இந்த மாதிரி தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் தனது கொஞ்சும் தமிழில்


அவளை வாரம் இருமுறை பார்த்தாலும் அவள் குரலை கேட்பது இதுதான் முதல்முறை, பிற மொழிகளின் கலப்பு இல்லாமல் நல்ல தமிழில் அவள் பேசியது சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஏதோ கேட்பதற்கு வாயெடுத்துவிட்டு, பிறகு சூழ்நிலை உணர்ந்து, அமைதியாக தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தான்
சத்யன் சிறைக்குள் சென்று ஏழாம் நம்பர் செல்லில் இருந்த முகுந்தனின் பெயர் சொல்லி அழைக்க, சற்றுநேரத்தில் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து “ இன்னா சார் என்ற திமிரான குரல் கேட்க,

கையில் இருந்த மனுவில் மான்சி போட்ட கையெழுத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனை நிமிர வைத்தது அந்த திமிரான குரல்,, இவனை எப்படி அந்த பெண்ணின் கணவனாக ஒத்துக்கொள்வது என்று பார்ப்பவரை பெரும் குழப்பத்துக்குள்ளாக்கும் மனிதன் முகுந்தன், மான்சியையும் முகுந்தனையும் சேர்த்துப் பார்க்கும் போதெல்லாம் சத்யனுக்கும் இந்த குழப்பம் வருவதுண்டு

மனுவில் குறிபிட்டிருந்த வயது என்னவோ முப்பதுதான், ஆனால் நாற்பது என கூறும் தோற்றம், இடுங்கிய கண்கள், காஞ்சாவின் உதவியால் பழுப்பேறிய கன்னங்கள், கறுத்துப் போன உதடுகள், ரத்தசோகையால் வெளுத்த உடம்பு, சராசரி உயரமும் அந்த உயரத்திற்கேற்ற உடல்வாகு இல்லாமல் ரொம்பவே மெலிந்து இருந்தான், அவன் மூன்று வருட தண்டனை குற்றவாளி என்பதால் கட்டம்போட்ட சீருடையில் இருந்தான்

“ இன்னா சார் என் சம்சாரம் வந்திருக்காளா? அந்த கஸ்மாலத்தை நேத்தே வரச்சொன்னேன், இன்னிக்குதா வந்திருக்காளா? ” என்று கர்ப்பிணி மனைவி என்ற பரிதாபம் இல்லாமல் தெனாவட்டாக கேட்டவனை இழுத்து நாலு அறை விட துடித்து கையை அடக்கிக்கொண்டு “ திமிர் பேசாம ஒழுங்கா வாடா” என்று கூறிவிட்டு சத்யன் முன்னால் போக முகுந்தன் பின்னால் வந்தான்

கொஞ்சநேர நடைக்கே மூச்சு வாங்க “ இந்த லூசுக் ** மவள பார்க்குறதுக்கு நடக்குறதுக்குள்ள நான் போய் சேர்ந்திருவேன் போலருக்கு” என்று அசிங்கமாக பேசியபடி வந்தவனை சத்யன் திரும்பிப்பார்த்து முறைக்க .

“ இன்னா சார் முறைக்கிற, இனிமேல ஒரு அடி என் உடம்புல விழுந்தாலும் தாங்கமா்டேன்னு ஜெயில் டாக்டரு சொல்லிட்டாரு, அதனால இனிமே ஐயாவை யாரும் அசைக்கமுடியாது” என்று திமிர் பேசி நெஞ்சை நிமிர்த்திய முகுந்தனைப் பார்க்க சத்யனுக்கு பரிதாபமாகத்தான் இருந்தது

எதுவும் சொல்லாமல் பார்வையாளர்களை சந்திக்கும் அறைக்கு அருகே இருந்த பெஞ்சில் முகுந்தனை உட்கார வைத்துவிட்டு, அங்கிருந்த காவலரிடம் “ அண்ணே இந்த பய இங்கயே உட்கார்ந்திருக்கட்டும், நான் சொல்லும்போது அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வெளியே வந்தான்




காத்திருந்த பார்வையாளர்களை ஆறு ஆறு பேராக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள், சத்யனின் கண்கள் அந்த சோக பதுமையை தேடியது, சற்று தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தடியின் சிமின்ட் திடலில் கால்நீட்டி அமர்ந்து வேறொரு வயதான பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்

சத்யன் தொலைவில் நின்று சிறிதுநேரம் அந்த மவுன அழகை ரசித்தான், பிறகு அவள் இருக்கும் இடம் நோக்கி நடந்தான், நெருங்கும் போதே “ இது எட்டாவது மாசம் அம்மா” என்று மான்சி அந்த பெண்ணிடம் கூறுவது கேட்டது

மான்சி அவனைப் பார்த்ததும் அவசரமாக எழுந்திருக்க முயற்சிக்க..... “ வேனாம் எழுந்திருக்க வேனாம்,, உட்காருங்க,, இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்... கூட்டம் கொஞ்சம் குறையட்டும்” என்று சத்யன் சொன்னதும் ...

சரியென்று தலையசைத்துவிட்டு மறுபடியும் அமர்ந்துகொண்டாள்... “ சரி கண்ணு நான் கெளம்புறேன், துணைக்கு யாரும் இல்லைன்னு சொல்ற உசாரா இரும்மா” என்று கூறிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்
சத்யன் அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றான், நெற்றியில் உற்பத்தியான வியர்வை மூக்கில் வழிந்தது, அடிக்கடி முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டாள்... “ ஏதாவது குடிக்கிறீங்களா?” என்று சத்யன் கேட்டான்... இதற்கு முன்புகூட ஒருமுறை வரிசையில் நிற்கும்போது தண்ணீர் கொடுத்திருக்கிறான்,

“ இலல வேனாம் சார், பாட்டில்ல கொண்டு வந்திருக்கேன்” என்று தன் பக்கத்தில் இருந்த அரைலிட்டர் மிரண்டா பாட்டிலை எடுத்து காட்டினாள்... அந்த பாட்டிலின் அடியில் சிறிதளவே தண்ணீர் இருக்க சத்யன் அந்த பாட்டிலை அவளிடமிருந்து வாங்கி சற்று தொலைவில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து எடுத்துவந்து கொடுத்தான்

நன்றி சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டவள் . “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவரைப்பார்க்க” என்று தலைகுனிந்தபடி கேட்டாள்

“ முகுந்தனை செல்லில் இருந்து கூட்டி வந்தாச்சு, ஆனா கொஞ்சம் கூட்டம் குறையட்டும்னு பார்க்கிறேன்” என்று கூறிய சத்யன், சற்றுநேர அமைதிக்கு பிறகு “ யாராவது வக்கீலைப் பார்த்து முகுந்தனுக்கு ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணலாம்ல?” என்று கேட்க

அவனை நிமிர்ந்துப் பார்த்த மான்சி “ கஞ்சா கேஸ் என்பதால அவ்வளவு சீக்கிரம் ஜாமீன் கிடைக்காதாம், பணமும் நிறைய செலவு ஆகுமாம், அதுக்கெல்லாம் வசதி இல்லீங்க” என்றவள் தலைகுனிந்து “ எங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே இல்லைங்க” என்றாள் வேதனையுடன்


அமைதியாக நின்றிருந்தவன் பிறகு “அப்போ நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க, ஏதாவது வேலை செய்றீங்களா?” என்று அவளைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான்

“ நான் ராணிப்பேட்டையில ஒரு ஷூ கம்பெனியில வேலை செய்றேனுங்க, மாசம் நாலாயிரம் சம்பளம் வருது, முத்துக்கடையில ஒரு சின்ன ரும் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கேன், இவரு ஆரம்பத்துலேருந்தே சரியில்லைங்க, எதுவும் வேலையில்லாமல் சும்மா சுத்திகிட்டு இருந்தாரு, அப்புறம் ஆறு மாசம் ஆட்டோ ஓட்டுனாரு, அதுலதான் கஞ்சாவை கடத்தினாருன்னு போலீஸ் பிடிச்சிட்டாங்க, இப்போ இவரை பார்க்க வாரம் ரெண்டு வாட்டி வர்றேன், இந்த உடம்பை வச்சிகிட்டு வெயில்ல அலைய முடியலைங்க” என்று தனது சோகத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தை துடைப்பது போல வழிந்தவிருந்த கண்ணீரை சேர்த்து துடைத்துக்கொண்டாள்

கேட்கலாமா? வேண்டாமா? என்ற பெரும் தயக்கத்திற்கு பிறகு கேட்டுவிடுவது என்ற முடிவுடன் “ முகுந்தன் உங்களுக்கு சொந்தமா? எப்படி இவரைப் போய்? என்கிட்ட சொல்லனும்னா சொல்லுங்க, இல்லேன்னா வேனாம் ” என்று சத்யன் தயக்கமாக கேட்க

அவளும் சில நிமிடங்கள் தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக ஆரம்பித்தாள் “ சொந்தமெல்லாம் இல்லீங்க, நான் ராஜஸ்தான் பக்கத்துல ஒரு கிராமம்ங்க, நான் டென்த் படிச்சிருக்கேன், அப்பா இல்லை இவரு அங்க கட்டிட வேலைக்கு வந்திருந்தாரு, நானும் எங்கம்மா அக்கா எல்லாரும் சித்தாள் வேலைக்கு போவோம் அப்பதான் பழக்கமாச்சு, நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாரு, என்னையே சுத்தி சுத்தி வருவாரு, நீ ரொம்ப அழகா இருக்க மெட்ராஸுக்கு வந்தா சினிமாகாரங்க கொத்திக்கிட்டுப் போயிருவாங்கன்னு ஆசை காமிச்சாரு, நானும் இவரு பேச்சை நம்பி ஒருநாள் நைட்டு கிளம்பி இவருகூட மெட்ராஸுக்கு வந்தேன், அப்ப எனக்கு பதினாறு வயசுதான், இங்கே வந்ததும்தான் சினிமா எவ்வளவு கேவலம்னு புரிஞ்சுது, அதில் நுழைய நிறைய விளை கொடுக்கனும்னு தெரிஞ்சதும் அருவருப்புல எனக்கு சினிமாவே வேண்டாம்னு மறுத்துட்டேன், இவரு எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்துட்டு அப்புறம் ராணிப்பேட்டைக்கு கூட்டிவந்தாரு, ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டினாரு, அப்புறம் இந்த நாலு வருஷமா நான் வேலைக்குப் போய்தான் ஜீவனம் நடக்குது, இவ்வளவு நாளா குழந்தையில்லாம இருந்து இப்பதான் இது வயித்துல தங்குச்சு, இது தங்குன நேரம் அப்பனை ஜெயிலுக்கு அனுப்பிருச்சு” என்று முடித்தவள் பாட்டிலை திறந்து தண்ணீரை குடித்துவிட்டு மூச்சு வாங்க மரத்தில் சாய்ந்து கொண்டாள்

“ அவன் கஞ்சா கடத்தி உள்ள வந்ததுக்கு பாவம் குழந்தை மேல ஏன் பழி போடுறீங்க” என்றவன் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து வரிசைப் பகுதிக்கு வந்தான்,

“ என்னா சத்யா அந்த பொண்ணு கூட அவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்த? பொண்ணைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்குள்ள, அந்த சப்பை பயலுக்கு இப்படி ஒரு அழகான பொண்டாட்டி பாருப்பா?’ என்று வரிசையை ஒழுங்குபடுத்திய காவலர் ஒருவர் கூற... சத்யன் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினான்


கூட்டம் சற்று குறைந்திருக்க அங்கிருந்தபடியே மான்சியை நோக்கி கையசைத்தான், இவன் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தது போல, உடனே எழுந்து வந்தவளை அவள் கையில் இருந்த பையை பரிசோதித்து விட்டு உள்ளே போக அனுமதித்தான்

முகுந்தனுடன் அவள் பேசுவது ஊமைப் படமாக சத்யனுக்கு தெரிந்தது, முகுந்தன் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு ஏதோ திட்ட, மான்சி முந்தானையால் கண்களை துடைப்பதும் தெரிந்தது, சத்யனுக்கு ஆத்திரமாய் வந்தது முகுந்தன் கையில் கிடைத்தால் இரண்டு விளாசவேண்டும் போல் இருந்தது

சிறிதுநேரம் மான்சி அவனிடம் மன்றாடினாள், பையிலிருந்த பொட்டலங்களை எடுத்துக் கொடுத்து அவனிடம் கெஞ்சினாள், அவன் அதை வாங்காமல் அலட்சியமாய் தலையை சிலுப்பிக் கொண்டு போனான், மான்சி கம்பிகளுக்கு அப்பால் போகும் அவனையே பரிதாபமாக பார்த்தாள், பிறகு சோக பதுமையாக வெளியே போனாள்

அவளைப் பார்த்ததும் சத்யனுக்கு “ நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ... சொல்லடி சிவசக்தி” என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது

மான்சி போய்விட, அன்று வீட்டுக்கு போகும் வரை முகுந்தன் என்ன கேட்டான், மான்சி எதற்காக மன்றாடினாள் என்று குழப்பத்துடனேயே போனான், வீட்டுக்குப் போனதும் வழக்கம் போல எல்லாமே மறந்து போக முட்டமுட்ட குடித்துவிட்டு இடுப்பு வேட்டி அவிழ்ந்து கிடக்க வாசப்படியில் மல்லாந்திருந்த அப்பனைப் பார்த்ததும் குடும்ப நிலவரம் முகத்தில் அறைய மான்சியும் முகுந்தனும் மறைந்து போனார்கள், வாசற்படியில் ஏறாமல் அப்படியே நின்று கீழே கிடந்த அப்பா மூர்த்தியை வெறித்தான்

“ அண்ணா இன்னிக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்து விழுந்தாருண்ணா .... இன்னும் எழுந்திருக்கலை, உள்ள இழுத்துட்டுப் போகலாம்னு பார்த்தா அருணையும் இன்னும் காணோம், நீயாவது ஒரு கை பிடி உள்ள தூக்கிட்டுப் போய் போடலாம்” என்று தங்கை பாக்கியலட்சுமி கூற



“ ம் வா பாகி” என்றவன் குனிந்து மூர்த்தியின் வேட்டியை ஒதுக்கி சரி செய்துவிட்டு காலை பிடித்து தூக்க... பாக்யா அப்பாவின் இரண்டு தோள்களையும் பற்றி தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போய் சிறிய ஹாலின் ஒரு மூளையில் மூர்த்தியை கிடத்தினார்கள்

சத்யன் யூனிபார்மை மாற்ற பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்தபடி “ பாகி அம்மாவை எங்க காணோம்?” என்று கேட்க..

“ இன்னிக்கு செவ்வாயக்கிழமைல .. ராகுகாலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்குப் போடனும், நான் கோயிலுக்கு போககூடாதுன்னு அம்மா விளக்குப் போட போயிருக்காங்க அண்ணா, இப்போ வர் நேரம்தான்” என்றவள் சத்யனுக்கு காபி எடுத்துவர கிச்சனுக்குள் நுழைந்தாள் ..

சத்யன், பாக்கியலட்சுமி, அருண், என்ற இந்த மூன்று ரத்தினங்களை குடிகாரனுடன் வாழ்ந்து பெற்றெடுத்தவள் தான் சாந்தி,, பெயரைப் போலவே அமைதியானவள்,, மூர்த்தியிடம் அடி உதை என்று பொழுது போனாலும், பொழுது விடிவது தன் பிள்ளைகளுக்காக என்று எண்ணி வாழ்பவள், இருபத்திமூன்று வயது மகளுக்கு இன்னும் திருமணம் கூடவில்லையே என்ற கவலை மனதை அரிக்கும் நடுத்தரவர்க்க பெண்மணி



No comments:

Post a Comment