Friday, October 16, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 10

“ அய்யோ இவரு கையை பாருங்க அக்கா, எரியுற அடுப்புல காட்டிட்டாரு” என்று மான்சி கட்டுப்படுத்த முடியாமல் அலறினாள்

அவள் அலறல் விபரீதத்தை உணர்த்த, வேகமாய் வந்து சத்யனின் கைகளை விரித்துப் பார்த்த ராகினி “ அய்யய்யோ என்ன கொடுமை இது, ஏன் தம்பி இப்பிடி பண்ணீக” என்று கதறலுடன் ராகினி கேட்க..

“ ம் அவ கையையும் பாருங்க, ஏன்னு அவகிட்டயே கேளுங்க” என்று சத்யன் சொன்னான்



ராகினி மான்சியின் கையை இழுத்து பார்த்து விட்டு “ அய்யோ நல்லபடி ஒன்னு சேர்ந்துட்டீங்க, ரெண்டுபேரும் தனியா பேசிக்கட்டும்னு தானே புள்ளைய தூக்கிகிட்டு வெளிய போனேன், இப்ப பார்த்தா ரெண்டு பேரும் கையை இப்படி வேக வச்சிகிட்டு இருக்கீங்களே, உங்க ரெண்டுபேருக்கும் எதுனா ஆனா அந்த குழந்தையோட கதியென்னான்னு யோசிக்கவே மாட்டீங்களா?” என்று அழுதபடி பேசிய ராகினி “ ஏன் தம்பி அதுதான் உலகம் தெரியாதது, நீங்க படிச்சவரு, நாலு விஷயம் தெரிஞ்சவரு, நீங்களுமா இப்படி பண்றது” என்று கண்ணீருடன் சத்யனிடம் கேட்க ..

“ அவதான் மொதல்ல நெருப்புல கையை காட்டினா, அவளோட வலியை நானும் அனுபவிக்கனும்ல, அதான் நானும் கை வச்சேன், பரவாயில்லை விடுங்க எனக்கு வலிக்கலை” என்று சத்யன் சொன்னதும்..

மான்சி திகைப்புடன் அவனைப் பார்த்தாள், ‘ இவன் என்ன சொல்றான்? என் வலியை இவன் அனுபவிக்கனும்னா எப்படி? அப்படின்னா இவனைப் பிரிஞ்ச இத்தனை நாளா இவனும் என்னைப் போலவே வேதனை பட்டேன்னு சொல்ல வர்றானா?’ மான்சி அவனை நன்றாகப் பார்த்தாள்,

அவன் பார்வையில் நடையில் பேச்சில் முன்பிருந்த அலட்சியம் இப்போது இல்லை, ஆள் எடை குறைந்த கன்னத்து தாடை தூக்கலாக தெரிந்தது, கண்களைச் சுற்றி லேசான கருவளையம், விழிகளில் சோர்வு, எப்போதும் ட்ரிம்மாக உடை உடுத்துபவனின் ஆடைகள் லூசாக, களைந்து போயிருந்தது, முன்பு கண்களில் அலட்சியம் போய், இப்போது ஒரு தேடல் கலந்த ஆர்வம் தென்பட்டது, உதடுகளில் எப்போதும் தென்படும் குறும்பு சிரிப்பு காணாமல் போய், உதடுகள் இறுகியிருந்தது, அவனின் வலிமையான தோள்கள் குறுகிவிட்டது போல் இருந்தது, முன்பெல்லாம் இவள் எப்போதும் படுத்துறங்க நினைக்கும் அவனின் உரமேறிய மார்பு அதன் விடைப்பு குறைந்தது போல் இருந்தது, பார்த்துக்கொண்டே வந்தவளின் பார்வை அவன் கைகளுக்கு வந்ததும், மான்சிக்கு கண்ணீர் முட்டியது, “ அக்கா சீக்கிரமா ஆஸ்பிட்டல் போகலாம்கா” என்று அழுகையுடன் ராகினியைப் பார்த்து கூற ..

“ ஆமா இப்ப வந்து அழு, ஆசையா வந்த புள்ள கைய இப்புடி வேக வச்சுட்டியே” என்ற ராகினி, “ வாங்க தம்பி உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு மொதல்ல போகலாம், நாளைக்கு டவுனுக்கு போகலாம்” என்று கூறிவிட்டு வாசலுக்குப் போக...

சத்யன் மான்சியைப் பார்த்தபடியே நின்றான்... அவனை நெருங்கிய மான்சி, தலை குனிந்து “ இப்படியாகும்னு நான் நெனைச்சுப் பார்க்கலை, ப்ளீஸ் வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்” என்று அவனின் வலது கையைப் பற்றிக்கொண்டு வெளியே இழுக்க...

சத்யன் அசையாமல் நின்றபடி அவள் கண்களையே பார்த்தபடி “ நீ என்கூட வீட்டுக்கு வந்தா தான், நான் ஆஸ்பிட்டல்க்கு வருவேன், இல்லேன்னா என் கைகள் சீல் புடிச்சி அழுகினாலும் இங்கிருந்து நகரமாட்டேன் ” என்று அமைதியாக கூறினான், ஆனால் அந்த குரலில் இருந்த உறுதி மான்சியை உலுக்கியது,
சற்றுமுன் அவன் பிடிவாதத்தை கண்கூடாக பார்த்தவள் ஆயிற்றே, இருந்தாலும் உன்மேல் காதலே இல்லையென்று கூறியவன் இப்போது இப்படி கெஞ்சுவதை அவளால் நம்பமுடியவில்லை, நாளைக்கே நான் செத்துட்டா என்னப் பண்ணுவ என்று அசையாமல் கூறி என்னை படுக்கையில் ருசித்த முன்பு இருந்தவன் நடிகனா? இல்லை இப்போது கையில் நெருப்பை வைத்துக்கொண்டு வெந்து துவண்டு நிற்கும் இவன் நடிகனா? எதுஎப்படியோ இரண்டுமே மிரட்டல் தான், மான்சிக்கு மண்டை குழம்பியது, தலையை இரு கையால் தாங்கி தரையில் தொப்பென்று அமர்ந்தாள், 


சற்றுநேரம் கழித்து அவளருகே அமர்ந்த சத்யன் “ மான்சி நான் கெட்டவன் இல்லை மான்சி, நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு, நம்பு மான்சி” என்று கெஞ்சலாக கூற

கண்ணீருடன் அவனை ஏறிட்ட மான்சி “ நீங்க பண்ணது , பேசினது , எல்லாம் நான் சாகும்வரை மறக்கமுடியாது, உங்கமேல எனக்கு எந்த சமயத்துலயும் நம்பிக்கை வராது சத்யன், நீங்க உங்கவீட்டுக்கு கிளம்புங்க, அங்க போயே கைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துக்கங்க, இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்து உங்களுக்கு பணியும் மான்சி செத்துப்போய் ரொம்ப நாளாச்சு, இப்ப இருக்கற மான்சி நெஞ்சுரம் மிகுந்தவள், நீங்க எதை பணயமாக வச்சாலும் மயங்கமாட்டா, தயங்கமாட்டா, அதனால நீங்க கிளம்பலாம் சத்யன்” என்று உறுதியுடன் கூறிவிட்டு எழுந்து வாசலுக்கு வந்தவள்

அங்கே இருந்த ராகினியிடம் “ அக்கா இவரு அவரோட ஊருக்கு கிளம்பிட்டாரு, அங்க போய் கைக்கு வைத்தியம் பார்க்கட்டும், நீங்க ரிஷிய தூக்கிட்டு வாங்க, பிள்ளை பசியாறி ரொம்ப நேரமாச்சு” என்று கூறிவிட்டு வாசலிலேயே நின்றாள்
அசையவில்லை சத்யன் அப்படியே கைகளை நீட்டியபடி அமர்ந்திருந்தான்,

ராகினி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து மான்சியிடம் கொடுத்துவிட்டு, கடிவாளம் இல்லாத இரண்டு பிடிவாத குதிரைகளைப் பார்த்து கண்ணீர் உகுத்துவிட்டு சாப்பிட ஏதாவது வாங்கிவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றாள்,

மான்சி மகனுடன் வந்து சத்யனுக்கு முதுகாட்டி அமர்ந்து மகனுக்கு பசியாற்ற தொடங்கினாள், சத்யன் அவள் முதுகையே குறுகுறுவென பார்ப்பான் என்று தெரியும், முந்தானையால் முதுகையும் சேர்த்து மூடினாள்

குழந்தை பால் குடித்துவிட்டு மறுபடியும் உறங்கியது, ராகினி ஆச்சி கடை இட்லியோடு வந்துவிட்டாள், இன்னும் இருவரும் எதிரெதிர் துருவங்களாக அமர்ந்திருப்பதை எண்ணி வேதனையுடன் சத்யன் அருகே வந்து “ அந்த புள்ளை கெடக்குது,, நீங்க வாங்க தம்பி நான் ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டுப் போறேன்” என்று கெஞ்சினாள்

“ இல்லக்கா, அவ என்கூட வீட்டுக்கு வந்தால்தான் நான் ஆஸ்பிட்டல் வருவேன், பரவாயில்லை நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க, நான் இப்படியே இருக்கேன்” என்று தீர்மானமாக கூறிவிட்டு அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டான்.

“ சரி ரெண்டு இட்லியாவது சாப்பிடுங்க தம்பி” என்று ராகினியின் வற்புறுத்தலுக்கு சத்யனிடம் பதிலில்லை.

ராகினியும் சாப்பிடவில்லை, அமைதியாக சமையலறையின் ஓரமாய் பாயைவிரித்து அதில் ரிஷை கிடத்தி அவன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்

வாங்கி வந்த உணவு பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது, நேரம் கடந்தது, சத்யன் விரித்த கையை அப்படியே வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான், அவனுக்கு எதிரே பிடிவாதமாக கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மான்சிக்கு அவன் கைகளைப் பார்க்க பார்க்க வயிறு எரிந்தது, எத்தனை வலுவான கைகள், இப்படி சிதிலமடைஞ்சு போச்சே, என்று கலங்கினாள்

நேரம் ஆக ஆக சத்யனின் கண்கள் சொருகியது, வலியின் வேதனை அவன் முகத்தில் தெரிந்தது, சத்யனின் முகத்தை பார்த்து மான்சியின் வைராக்கிய கோட்டை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்தது,

சத்யனை பசியும் வாட்டுகிறதோ என்று கலங்கினாள், ஒரு கட்டத்தில் அவளது வைராக்கியத்தை காதல் பொடிப்பொடியாக்க, வேகமாய் எழுந்து தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்றி எடுத்துக்கொண்டு சத்யனருகே வந்து, இட்லியை பிய்த்து சட்னியில் த*ொட்டு அவன் வாயருகே எடுத்துச்சென்று " மொதல்ல சாப்பிட்டு ஆஸ்பிட்டல் வாங்க, அதுக்கப்புறம் நான் உங்ககூட வீட்டுக்கு வர்றேன், ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உங்ககூட நிறைய பேசனும்" என்று கூறிவிட்டு அவன் வாயில் இட்லியை வைக்க..

சரியென்று தலையசைத்து இட்லியை வாங்கியவன், அதை விழுங்கி விட்டு, கலங்கி கண்ணீர் விட்ட கண்களுடன் " கை ரொம்ப எரியுது மான்சி, என்னால வலி தாங்கமுடியலை மான்சி" என்று பரிதாபமாக கூற..

அவ்வளவுதான், கையிலிருந்த தட்டை தரையில் வீசிவிட்டு அவனை இழுத்து அணைத்து " அய்யோ சத்யா" என்று கதறினாள் மான்சி 




மான்சி சத்யனை அணைத்துக்கொண்டு விட்ட கண்ணீர் சத்யனின் சட்டையை நனைத்து அவன் நெஞ்சை ஈரமாக்கியது, அவள் விரல்கள் அவன் முகத்தை வருடி வருடி அடையாளம் காணமுயன்றன, முன்பு இருந்தவனுக்கும் இப்போது இருந்தவனுக்கும் நிறைய வித்தியாசம், சத்யனின் தாடை எலும்புகள் தூக்கித் தெரிய, மான்சி அதை வருடிவிட்டு, நெஞ்சில் இருந்த முகத்தை நிமிர்த்தி “ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கீங்க?” என்று கவலையுடன் கேட்க..

“ உன்னைப் பார்க்காமல் தான் மான்சி” என்று பட்டென்று பதில் வந்தது சத்யனிடத்தில், அவன் வார்த்தையில் பொய்யில்லை என்று அவன் கண்கள் சொன்னது

அவன் கண்கள் தன்னை மறுபடியும் கோழையாக்குவதை உணர்ந்து தலைகவிழ்ந்த மான்சி, “ இப்போ இவ்வளவு அன்பு வச்சிருக்க நீங்க, அன்னிக்கு ஏன் அவ்வளவு கேவலமா நடந்துகிட்டீங்க?, உங்களை நம்பித்தானே நீங்க கூப்பிட்டதும் வந்தேன்? ’’ என்று மான்சி தொண்டையடைக்க மெல்லிய குரலில் கூற

“ என்னிக்கு மான்சி?” என்று சத்யன் குழப்பமாக கேட்டான்

திக்கென்றது மான்சிக்கு, இவன் என்ன என்னை முட்டாள்னு நெனைச்சிட்டானா? ஒன்னுமே நடக்காதது மாதிரி கேட்கிறானே? வெடுக்கென்று நிமிர்ந்தவள் அவன் கண்களைப் பார்த்து மறுபடியும் குழம்பியது, அய்யோ இது என்ன நடிப்பா? நிஜமா? இன்னமும் இவனை எடைபோட எனக்குத் தெரியலையே? தன்மீதே ஆத்திரமாக வந்தது மான்சிக்கு

“ கை ரொம்ப வலிக்குது மான்சி” என்று சத்யன் அவள் கவனத்தை திசைதிருப்பினான்

“ ஏன் கண்ணு தம்பி எவ்வளவு நேரம் வலியை தாங்கும், மொதல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்து எங்கனா விடியவிடிய பேசுங்களேன்” என்று ராகினி அதட்டியதும்,

மான்சி எழுந்துகொண்டு “ சரி வாங்க போகலாம்” என்று சத்யனை அழைத்துவிட்டு, சமையலறை பக்கம் திரும்பி “ அக்கா ரிஷியை பார்த்துக்கங்க, நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு கதவை திறந்துகொண்டு மான்சி வெளியேற, சத்யன் அவள் பின்னாலேயே வந்தான்
ஒருத் தெருத் தாண்டி அடுத்த தெருவின் கடைசியில் பள்ளிக்கூடம் அருகில் இருந்தது ஆரம்ப சுகாதாரநிலையம், மான்சி சத்யனை விட்டு விலகி நடக்க முயன்றாலும் சத்யன் முடிந்தவரை அவளை ஒட்டியே வந்தான், தெருவிளக்கின் வெளிச்சத்தில் இவர்கள் இருவரையும் எல்லோரும் பார்த்துவிட்டு தங்களுக்குள் ரகசியமாக ஏதோ பேசிக்கொண்டனர், மான்சி அந்த ஊர் மக்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமானவள் என்பதால், எல்லோருடையப் பேச்சும் இவர்களைப்பற்றியே இருந்தது .

ஆஸ்பத்திரியில் இருந்த இரவு நேர டாக்டர், சத்யனின் காயத்தைப் பார்த்துவிட்டு “ எப்படியாச்சு மான்சி” என்று கேட்க

மான்சி பதில் சொல்ல தினறினாள், “ அது நானா தவறி நெருப்புல கைவச்சிட்டேன் டாக்டர்” என்று சத்யன் சொல்லி சமாளித்தான்

மேற்கொண்டு ஏதோ கேட்க வாயெடுத்த டாக்டர், அவர்கள் இருவரும் பார்வையாலேயே ஒருவரையொருவர் விழுங்குவதைப் பார்த்து எதுவும் கேட்காமல் வைத்தியம் செய்ய ஆரம்பித்தார், மான்சியின் காயத்தையும் பார்த்து மருந்திட்டார்

உள்ளங்கைகளில் மட்டுமே காயமிருந்ததால் இரண்டு கைகளிலும் விரல்களை விட்டுவிட்டு கட்டுப் போட்டனர், இரண்டு பக்க இடுப்பிலும் ஊசி போடும்போது அவனை சிறு குழந்தை போல் பாவித்து மான்சி அவன் அருகில் நின்று கையை அழுத்தமாக பற்றிக்கொள்ள, சத்யன் ஊசி குத்தாத இடமில்லை என்று அவளுக்கெப்படி தெரியும்,

இருவரும் வீட்டுக்கு வரும் தெருவில் திரும்பும்போதே சத்யன் வீட்டு கார் ராகினியின் வீட்டு வாசலில் நிற்க, ராகினி சாமிநாதனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், சாமிநாதனுடன் விஜயாவும் வந்திருப்பதைப் பார்த்த மான்சியின் கால்கள் பயத்தில் பின்னிக்கொண்டன, மனதில் எவ்வளவு தைரியத்துடன் இருந்தாலும்கூட விஜயாவைப் பார்த்ததும் மான்சிக்கு பழைய ஞாபகங்கள் வந்தன

மான்சியின் மனதை படித்தவன் போல் சத்யன், தன் வலது கையை மான்சியின் தோளில் போட்டு வளைத்துக்கொண்டான், ஏனோ மான்சிக்கும் அவனைச் சார்ந்தே இருக்கவேண்டும் போல் இருந்தது,

இருவரும் வீட்டை நெருங்கியதும், சாமிநாதன் சத்யனிடம் ஓடி வந்து “ ஏன்ப்பா எங்களை இப்படி அலையவைக்கிற?, எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா எல்லோருமா சேர்ந்து வந்திருக்கலாமே? ” என்றவர் அவன் கையை இழுத்துப் பார்த்து “ கையை வேற காயம் பண்ணிகிட்டயாமே? இந்தம்மா தான் சொன்னாங்க, இன்னும் நீங்க ரெண்டுபேரும் சின்னபசங்களாடா?” என்று அதட்டியவர் மகன் அணைப்பில் இருந்த மான்சியைப் பார்த்தார் “ என்னம்மா நல்லாருக்கியா?”

மான்சி தலையை குனிந்து கொண்டு “ நல்லாருக்கேன் அங்கிள்” என்றாள்
அவர்களிடம் வந்த ராகினி மெல்லிய குரலில் “ தெருவுல சனம் கூடிபோச்சு, எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசலாம், உள்ளார வாங்கய்யா” என்று கூற, அப்போதுதான் மான்சி கவனித்தாள், தெருவே கூடியிருந்தது,

மறுபேச்சின்றி அமைதியாக, அனைவரும் உள்ளேபோனார்கள், உள்ளே போன மான்சிக்கு அடுத்த அதிர்ச்சியாக விஜயா தன் பேரனை மடியில் வைத்துக்கொண்டு கண்கலங்க கொஞ்சிக்கொண்டிருந்தாள், மான்சியைப் பார்த்ததும் “ நல்லாருக்கியா மான்சி” என்று கேட்க, மான்சியால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை, இயந்திரம் போல தலையசைத்து பதில் சொன்னாள் 


இருந்த ஒரு நாற்காலியில் சாமிநாதன் அமர்ந்துவிட, சத்யன் தன் தாயருகே தரையில் அமர்ந்தான், மான்சி நின்றபடியே இருக்க, ராகினி வந்தவர்களுக்கு சாப்பிட கொடுக்க இந்த நடு இரவில் எதுவுமில்லையே என்ற வருத்தத்தோடு சமையலறையின் மூலையில் அமர்ந்தாள்

விஜயா மகனின் கையைப் பார்த்து “ என்னடா இது சின்னபுள்ளக மாதிரி நெருப்புல விளையாடியிருக்கீங்க, எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாமே, உன் நிலைமையை சொல்லியிருந்தா மான்சி மனசு மாறியிருக்குமே ராஜா, அதைவிட்டுட்டு இப்படி பண்றது?,” என்று வேதனையாக சொல்ல....

சத்யன் நிலைமை என்ன? என்று மான்சி குழப்பத்துடன் சாமிநாதனைப் பார்க்க, அவர் பார்வையால் அவளை அமைதிபடுத்தி “ சத்யனுக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை மான்சி பயப்படாத” என்றவர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மகனைப் பார்த்து “ உன்னைய காணோம்னு பழனி மொுத்தமும் தேடுனோம், அப்போ ஆட்டோ ஸ்டான்டுலதான் சொன்னாங்க, நாயோட ஒருத்தர் ஒரு வேன் பின்னாடி மான்சி மான்சின்னு கத்திகிட்டே ஓடுனாரு, அப்புறம் இங்கே வந்து ஒரு ஆட்டோவுல ஏறி வேனை பின்தொடர்ந்து போனாருன்னு சொன்னாங்க , அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு போய் உன்னைய எங்க இறக்கி விட்டார்னு கேட்டு கண்டுபிடிச்சு இங்க வந்தோம்” என்று எப்படி வந்தோம் என்பதற்கான விளக்கத்தை சொல்லிவிட்டு “ சரி ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணீங்க?, இப்போ நடுச்சாமம் ஆயிருச்சு, அதனால பொழுதுவிடிய பொள்ளாச்சிக்கு கிளம்பலாமா?” என்று கேட்டார்

“ ம்ம் போகலாம்பா” என்று ஆர்வத்துடன் முதல் ஆளாய் சத்யன் குரல் கொடுக்க, மான்சி அமைதியாக நின்றிருந்தாள், அவள் நின்றிருந்த தோரணையே அவளின் மறுப்பை தெரிவிப்பது போல் இருக்க .......


“ மான்சி உங்களுக்குள்ள என்ன நடந்தது, ஏன் நீ இவனை பிரிஞ்சு வந்த? இதெல்லாம் எதுவுமே எங்களுக்குத் தெரியாது,, ஆனா நீ வந்த பிறகு சத்யனுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் நீ தெரிஞ்சுக்கனும்” என்ற சாமிநாதன் சத்யன் சென்னை ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்

“ இப்பவும் சத்யனுக்கு உன்னையும், பிரவுனி, சந்துருவைத் தவிரவேற யாரையுமே தெரியலை, உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கான் மான்சி, முதல்ல வெறுத்த நாங்களே இவனோட அன்பை பார்த்து திகைச்சுப் போனோம் மான்சி, நீ இல்லாம இவன் வாழமாட்டான்னு புரிஞ்சுகிட்டோம், இத்தனை நாளும் உன் நினைவுகளோடையே வாழ்ந்தான் மான்சி,, நாங்களும் எங்களால முடிஞ்சவரை இந்த ஒன்றரை வருஷமா நாங்க கொஞ்ச கொஞ்சமா எடுத்து சொல்லி பலவிஷயங்களை புரியவச்சிருக்கோம், ஆனா கடைசியா நீ இவனை விட்டு போன அன்னிக்கு என்ன நடந்ததுன்னு இவனுக்கு தெரியலை, அதை நீ சொன்னால்தான் தெரியும்” என்று கூறிவிட்டு அவளை கூர்மையுடன் பார்த்தார்

சாமிநாதன் கூறிய விஷயங்களை கேட்டு மான்சி அதிர்ந்து போய் நின்றிருந்தாள், சத்யனின் தலைவலிக்கு பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்து இருக்குமென்று அவள் கனவிலும் நினைத்தாளில்லை, ஒவ்வொரு நாளும் வலியுடன் தன் மடி சாயும்போது எத்தனை கடவுளை பிராத்தித்திருப்பாள், இவன் தலைவலி தீர எத்தனை விரதங்கள் இருந்திருப்பாள், கோயில்களில் அடி பிரதட்சணம்,, அங்க பிரதட்சணம் என்று எத்தனை வேண்டுதல் செய்திருப்பாள், இதெல்லாம் ஒன்றுகூட பலிக்கவில்லையா? அப்படியானால் என் காதல் பொய்யா? இல்லை கடவுள் பொய்யா? இந்த சின்ன வயசுல இவ்வளவு வேதனையைக் கொடுத்து, மரணத்தோடு போராட விட்ட கடவுளை அவள் மனதார நிந்தித்தாள்,



தன் மனதில் ஒடியவற்றை வாய்விட்டுச் சொல்லி மான்சி முகத்தை மூடிக்கொண்டு கதறியபோது அனைவருமே அதை கேட்டு திகைத்துப் போனார்கள்.

சத்யனுக்குமே இந்த விஷயங்கள் அனைத்தும் புதிது என்பதால், அவள் காதலின் ஆழம் தெரிந்து சந்தோஷத்தின் உச்சத்திற்குப் போனான், தான் எவ்வளவு காதலிக்கப்பட்டிக்கிறோம் என்று தெரிந்த அவன் மனநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை



“ விண்ணோடு வாழ்ந்தாலும்...

“ நிலவோடு ஒட்டாத மேகம் போலே...

“ என்னோடு வாழ்ந்தாலும்...

“ என் மனதோடு ஒட்டாத நிலவு...

“ நீ என்று நினைத்தேன்!

“ இப்போதுதான் புரிகிறது...

“ நீ எனக்காகவே தேய்ந்து....

“ எனக்காகவே வாழ்ந்த...

“ என் இதய நிலா நீ என்று!


No comments:

Post a Comment