Saturday, October 31, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 2

சத்யன் உடை மாற்றி வருவதற்குள் அவன் அம்மா சாந்தி வந்துவிட, மூளையில் கிடந்த கணவனைக் கூட கவனியாது மகனை நெருங்கியவள் “ சத்யா இன்னிக்கு கோயில்ல ஒரு அம்மாவை பார்த்தேன், அவங்க திருவள்ளூர்ல ஒர வரன் இருக்குறதா சொன்னாங்க, பையன் கூட்டுறவு பேங்க்ல க்ளார்க்கா இருக்காராம், இந்தம்மாவுக்கு தங்கை மகனாம் இவங்க சொல்லை தட்டமாட்டாங்களாம், ஒரு நல்லநாள் பார்த்து மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொன்னாங்க... நான் உன் செல்போன் நம்பர் குடுத்துருக்கேன, அந்தம்மா பேரு ராஜம்மா,, போன் பண்ணா என்னா ஏதுன்னு தகவல் கேட்டு சொல்லு சத்யா” என்று உற்ச்சாகமாய் பேசும் அம்மாவையேப் பார்த்தான் சத்யன்

‘ அடபோம்மா இப்போ வர்றவனும் பஜ்ஜி சொஜ்ஜின்னு தின்னுட்டு வரதட்சணை பத்தாதுன்னு சொல்லிட்டு போகப்போறான்’ என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு தற்சமயம் சந்தோஷமே உருவாக நிற்கும் அம்மாவின் மனநிலையை கெடுக்க மனமின்றி “ சரிம்மா கால் பண்ணா என்ன விஷயம்னு கேட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்துவிட்டு தரையில் அமர்ந்தான்



சற்றுநேரத்தில் அந்த வீட்டின் கடைக்குட்டி அருணும் வந்துவிட, பாக்யாவிற்கு திருமணமே நிச்சயமாகிவிட்டது போன்ற உற்சாகத்துடன் அனைவரும் பேசிச் சிரித்தபடி உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டனர், இடியே விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் மூர்த்தி தூங்கினார்

அடுத்த இரண்டு நாட்கள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி இயல்பாக போக, வியாழன் அன்று மனுக்கள் சரிபார்க்கப்பட்டு பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த மான்சியைப் பார்த்து சினேகமாய் புன்னகை செய்துவிட்டு வரிசையை ஒழுங்குபடுத்த போய்விட்டான் சத்யன்

வரிசையில் நின்ற மான்சி அடிக்கடி இவனைப் பார்ப்பதுபோல் இருக்க சத்யன் அவளை நெருங்கி என்ன என்பதுபோல் பார்வையால் வினாவினான் ,...

பெரும் தயக்கத்திற்குப் பிறகு தனது கையில் இருந்த பையைப் பிரித்து அதில் இருந்து இரண்டு பிடி கட்டுகளை எடுத்து முந்தானை மறைவில் ரகசியமாக அவனிடம் காட்டி “சார் இதை உள்ள எடுத்துட்டுப் போக அனுமதிங்க சார், இது இல்லாம பார்க்க வராதேன்னு சொல்லிட்டாரு சார்” என்று மான்சி சத்யனிடம் கெஞ்சினாள்.... விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது

‘ ஓ அன்னிக்கு இதுக்குத்தான் இந்தப் பொண்ணை அழ வச்சான் போலருக்கு’ என்று மனதுக்குள் எண்ணியபடி “ ம்ம் மறைச்சு எடுத்துப்போய், யாரும் பார்க்காம மறைவா குடுங்க” என்ற சத்யன் முதன்முறையாக மான்சிக்காக தனது நடத்தை விதியை மீறினான், இன்றும் இந்த ஏழை கர்ப்பிணிப் பெண் அழக்கூடாது என்ற எண்ணத்தில் தான் மீறினான்

அவன் சம்மதம் சொன்னதும் அவள் முகத்தில் பட்டென்று ஒரு சந்தோஷம் மின்னலாய் புறப்பட்டு உடனே மறைந்தது,

அத்தோடு சில வாரங்கள் சத்யனுக்கு ஜெயிலுக்குள் காவல் இருக்கவேண்டும் என்று பணி மாற்றப்பட மான்சியை பார்க்கும் வாய்ப்பு பெரிதும் குறைந்து போனது,

அதற்கேற்றார்போல் பாக்யாவை பார்க்க வந்த மாப்பிள்ளை ராமசந்திரனுக்கு அவளை பிடித்துவிட, அதிக பேரமின்றி திருமணம் பேசி முடிவானது, எந்தவிதமான வரதட்சணையையும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார், ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்து அதில் பிடிவாதமாகவும் இருந்தனர்..


மாப்பிள்ளை ராமுவின் தங்கை அனுசுயாவை சத்யன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு கோரிக்கை சத்யன் முன்பு வைக்கப்பட்டது,, திருமணமே நடந்துவிட்டது போல பூரித்திருந்த தங்கையைப் பார்த்த சத்யனுக்கு அவர்களின் கோரிக்கையை நிராகரிக்க மனமில்லை, ராமுவின் தங்கை முகத்தை பார்க்காமலேயே நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டான்,

ஆனால் முதலில் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடக்கட்டும் பிறகு தனக்கு வைத்துக்கொள்ளலாம் என்று சத்யன் முடிவாக சத்யன் கூறிவிட எல்லோரும் ஒத்துக்கொண்டனர்

பாக்யாவின் நிச்சயதார்த்த வேலையில் சத்யன் வேலையில் மான்சியையும் முகுந்தனையும் சத்யன் மறந்தே போனான்,, பகல்நேரத்தில் நிச்சயதார்த்த வேலைகள் இருந்ததால் இரவுநேர பணிக்கு அனுமதி வாங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் இரவு பணி செய்தான்,

ஜந்தாவது நாள் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சிறைச்சாலையின் சிறு வாயில் வழியாக உள்ளே வந்து, கையெழுத்துப் போட்டுவிட்டு உள் வளாகத்தின் படிகளில் ஏறியவன் ஏதோவொரு உந்துதலில் பட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்

அவன் யூகம் தப்பவில்லை, அழுது வடியும் சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் சற்று தொலைவில் இருந்த மரத்தடி சிமிண்ட் மேடையில் மான்சி அமர்ந்திருப்பது தெரிந்தது..

சட்டென்று உடல் பதறினான் சத்யன், இந்த நேரத்தில் இவள் இங்கே என்னப் பண்றா? என்று கேள்விக்கு விடை காணும் ஆவலில் மான்சியை நோக்கி ஓடினான்

அவன் நெருங்கும்போதே மான்சி முந்தானையை வாயில் வைத்தபடி அழுதுகொண்டிருப்பது தெரிய சத்யனின் பதட்டம் அதிகமானது, “ என்னாச்சுங்க? இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க?” என்று சத்யன் பதட்டமாக கேட்க
அவன் குரல் கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்தவள், சத்யன் முகத்தைப் பார்த்ததும் அழுகை குமுறி வெடிக்க தலையிலடித்துக்கொண்டு ஓவென்று கதறினாள் மான்சி

சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அவள் அழுகை அவன் நெஞ்சை பிளந்தது, சட்டெனக் குனிந்து தலையில் அடித்துக்கொண்ட கைகளைப் பற்றி தடுத்து “ என்னம்மா ஆச்சு? இந்த நிலையில இப்படி அழலாமா? முகுந்தனுக்கு உடம்புக்கு ஏதாவதுன்னு தகவல் சொன்னாங்களா?” என்று சத்யன் மறுபடியும் கேட்க

ஒரு நீண்ட கதறலுக்குப் பிறகு “ அவரு செத்துபோயிட்டாராம்,, நெஞ்சுவலின்னு சொன்னாராம் கொஞ்சநேரத்தில செத்துட்டாராம், மதியானம் மூனு மணிக்கு தகவல் சொன்னாங்க, அப்பவே வந்து இங்க காத்து கெடக்கேன், அவர் உடம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிட்டாகளாம், அவரை வாங்க ஒரு போலீஸ்காரரை அனுப்புறேன்னு சொன்னாங்க ஆனா இன்னும் யாரும் வரலை” என்றவளுக்கு இயலாமையால் மீண்டும் கண்ணீர் வெடித்தது


அவள் கூறியதை கேட்ட சத்யனுக்கு திக்கென்றது, மதியத்தில் இருந்து ஒரு கர்ப்பிணியை இப்படி கதற வைக்கும் டிப்பார்ட்மெண்ட்டை நினைத்து ஆத்திரமாக வந்தது, மான்சிக்கு ஏதாவது செய்ய அவன் இதயம் துடித்தது

“ கொஞ்சநேரம் அழாம இங்கேயே இருங்க, நான் உள்ள போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்திர்றேன், நானே உங்ககூட ஆஸ்பத்திரிக்கு வர்றேன்” என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் ஜெயிலரின் அறைக்கு ஓடினான்

ஜெயிலரை சந்தித்து மான்சியுடன் செல்ல அனுமதி வாங்கிய சத்யன், உடனடியாக வெளியே வந்து மான்சி இருக்குமிடம் வந்து “ வாங்க கிளம்பலாம், உங்க கூட வர்றதுக்கு எனக்கு பர்மிஷன் குடுத்திருக்காங்க ” என்று கூற

மான்சி அழுகையை அடக்க முயன்று தோற்றபடி எழுந்து சத்யனுடன் சிறையிலிருந்து வெளியே வந்தாள்

ஒரு ஆட்டோ பிடித்து அதில் மான்சியை ஏற்றிவிட்டு, தனது பைக்கில் பின்தொடர்ந்தான் சத்யன், அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் செல்லும் போது இரவு பத்து மணி ஆகியிருந்தது

முகுந்தனின் உடல் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல், மார்ச்சுவரியின் வராண்டாவில் இருந்த ஸ்டெர்ச்சரில் அனாதையாக கிடந்தது, அந்த உடலைப் பார்த்ததும் அய்யோ என்று கதறியபடி மயங்கி சரிந்தவளை சத்யன் தன் கைகளில் தாங்கி மார்ச்சுவரியின் வெளியே தரையில் கிடத்தினான்,

கர்ப்பிணியான அவளை பார்க்கவே சத்யனின் வயிறு கலங்கியது, பாவம் என்னேரம் சாப்பிட்டாள் என்று தெரியவில என சத்யனின் நெஞ்சம் கசிந்தது ,, உப்பிய வயிற்றுடன் கிழிந்த நாராய் துவண்டு கிடந்தவளைப் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் தவித்து நின்றான்

முதலில் அவளுக்கு மூர்ச்சை தெளிவிக்க வேண்டும் என்று தோன்ற, வேறு ஓரு உடலுக்காக காத்திருந்த சிலரிடம் அவளைப்பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு மருத்துவமனைக்கு வெளியே வந்து தண்ணீர் பாட்டிலும் ஒரு கூல்டிரிங்க் பாட்டிலும் வாங்கிக்கொண்டு அவசரமாக உள்ளே ஓடி வந்து தண்ணீரை மான்சியின் முகத்தில் தெளித்து மயக்கம் தெளிவித்தான்

கண்விழித்து அவன் முகத்தைப் பார்த்து மறுபடியும் கதறியவளின் முகத்தை அவனையுமறியாது அவன் கைகள் தன் நெஞ்சோடு அணைத்தது




" கனவுகள் காற்றாய் கலைந்ததால்..

" உடைபட்டு போனது மான்சியின் இதயம்!

" ஆனால் ஒரு சிப்பி வதைக்கப்பட்டு..

" திறக்கப்படும் போதுதான்..

" ஒரு முத்து மின்னுகிறது!

" நெருப்பு என்பது வெப்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல...

" குளிர்ச்சியின் குறீயீடும் அதுவே!

" மான்சி வெப்பத்தின் வெளிப்பாடா?

" குளிர்ச்சியின் குறீயீடா?



மான்சியின் முகத்தை தன் நெஞ்சோடு வைத்து அழுத்திக்கொண்ட சத்யனுக்கும் கண்களில் நீர் திரண்டது, மூச்சை அடக்கி கண்ணீரை வெளிவராமல் தடுத்த சத்யன், யூனிபார்முடன் ஒரு பெண்ணை அணைத்து ஆறுதல் சொல்வது பார்பவர்கள் கண்களுக்கு வித்தியாசமாக தெரியக்கூடும் என்று உணர்ந்து மான்சியை விலக்கி அமர வைத்து கூல்டிரிங்ஸ் பாட்டிலை திறந்து அவள் முன்பு நீட்டி “ கொஞ்சம் குடிங்க” என்று சத்யன் வற்புறுத்தினான்

அவன் எவ்வளவு வற்புறுத்தியும் மான்சி தண்ணீரைக் கூட குடிக்க மறுத்தாள், நிறைமாத வயிற்றுடன் அரைநாள் பட்டினியால் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மான்சியின நிலைமை சத்யனுக்கு கவலையாக இருந்தது, சற்று துணிந்து மறுபடியும் பாட்டிலை அவள் வாயருகே எடுத்துச்சென்று “ இதோ பாருங்க நீங்க வெறும் ஆளா இருந்தா பட்டினி கிடங்கன்னு விட்டுடுவேன், ஆனா உங்க வயித்துல ஒரு ஒரு ஜீவன் இருக்கு அதை நினைச்சுப் பாருங்க... ப்ளீஸ் கொஞ்சூண்டு மட்டும் குடிங்க கொஞ்சம் தைரியம் வரும்” என்று சத்யன் மான்சியிடம் கெஞ்சினான்

சத்யன் மன்றாடுவதை கவனித்த அவர்களின் அருகில் இருந்த ஒரு பெண்மணி எழுந்து மான்சியின் மறுபக்கம் அமர்ந்து “ யம்மா அந்த தம்பியும் எம்புட்டு நேரமா கெஞ்சுது, கொஞ்சம் குடியம்மா... நாம பட்டினிக் கிடந்தா போன உசுரு திரும்ப வந்திடுமா தாயி,, வயத்துப் புள்ளக்காரி இப்படி இருக்ககூடாது” என்று மான்சியிடம் அன்பாக கூறிவிட்டு “ இப்புடி குடு தம்பி நான் குடுப்பாட்டுறேன்” என்று சத்யனிடமிருந்து பாட்டிலை வாங்கி மான்சியின் தலைய பிடித்துக்கொண்டு வாயில் ஊற்றி குடிக்க வைத்தாள் அந்த பெண்

எப்படியே அரை பாட்டில் வரை குடித்துவிட்டாள் மான்சி, சத்யன் அந்த பெண்ணுக்கு நன்றி சொல்ல... “ செத்துப்போனவரு உன் சம்சாரத்துக்கு என்ன உறவு தம்பி?” என்று அந்த பெண்மணி கேட்க..

மான்சி திகைப்புடன் நிமிர்ந்து சத்யனைப் பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள்..... சத்யன் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான்,, அவன காதுகளில் மறுபடியும் பாரதியாரின் அந்த பாடல் வரிகள் ஒலித்தது, கலங்கிய கண்களை அந்த பெண்ணுக்கு மறைத்து “ செத்துப்போனவர்தான் இவங்க புருஷன் அம்மா.... நான் செத்துப்போனவருக்கு நண்பன்” என்று சூழ்நிலையை சுமுகமாக்கினான் சத்யன்,, அவனுக்குத் தெரியும்..... மான்சியின் நண்பன் என்று சொன்னால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என்று... அதனால்தான் இறந்துபோன முகுந்தனை நண்பனாக்கிக் கொண்டான்

“ அய்யோ கடவுளே....... இதென்ன கொடுமை வயித்துப் புள்ளயோட இப்படி நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிட்டானே ” என்று அங்கலாய்த்தபடி எழுந்த அந்த பெண் அவள் உறவினர்கள் இருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்

சத்யன் எழுந்து மார்ச்சுவரி அறைக்குள் சென்று பார்த்தான்,, அப்போதுதான் ஒரு உடலை பேக் செய்து முடித்து வெள்ளை காடாத் துணியில் சுற்றிக்கொண்டு இருந்தனர், அங்கிருந்த ஊழியரிடம் “ ஏம்ப்பா வெளிய இருக்குற கைதியோட பாடி ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? சொந்தக்காரங்க யாருமில்லபா,, ஒரேயொரு லேடி மட்டும் தான் வெயிட் பண்றாங்க,, கொஞ்சம் சீக்கிரமா முடிச்சு குடுங்கப்பா” என்று சத்யன் கேட்க

“ இன்னா சார் நீயும் எங்க நெலமை புரியாம பேசுற,, இன்னிக்கு நிறைய பாடி வந்திருக்கு சார்,, இன்னிக்கு காலையிலேர்ந்து ஒன்னு ஒன்னா அறுத்து தைச்சு அனுப்பிக்கிட்டு தான் இருக்கோம் இன்னும் முடிஞ்ச பாடில்லை,, இன்னும் ஒரு சூசைட் கேஸ் இருக்கு அது முடிஞ்சதும் உங்க கேஸ்தான் சார்,, நீங்க வூட்டுக்குப் போய் தூங்கி எழுந்து காலையில ஆறு ஏழு மணிவாக்கில் வாங்க அதுக்குள்ள ரெடியாயிரும்” என்று மார்ச்சுவரி ஊழியர் சொல்ல

சத்யன் தலையசைத்து விட்டு வெளியே வந்தான், வீட்டுக்குப் போய் தூங்கிவிட்டு வருவதாமே,, இவளை இந்த நிலையில் விட்டுவிட்டா போகமுடியும்? என்று தனக்குள் விவாதித்துக்கொண்டு மான்சியைப் பார்த்தான்

இரவுநேர குளிர் உடலை வாட்ட உடலை குறுக்கிக்கொண்டு முந்தானையால் இழுத்து மூடியபடி வெறும் தரையில் சுருண்டு கிடந்தாள்...

சத்யன் சற்று ஒதுக்குப்புறமாக சென்று தனது மொபைலை எடுத்து வீட்டு செல்லுக்கு கால் செய்தான்,, சற்றுநேரத்தில் பாக்யாதான் எடுத்து “ சொல்லுண்ணா?” என்றாள்

“ அப்பா வீட்டுக்கு வந்துட்டாரா பாகி? ” என்று சத்யன் கேட்க

“ இன்னும் இல்லண்ணா,, மணி பனிரெண்டாகப் போகுது எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்காரோ” என்று கவலையுடன் பாக்யா கூற

“ சரிம்மா தெளிஞ்சதும் வருவாரு,, அருண் இருந்தா கூப்பிடு கொஞ்சம் அர்ஜண்ட்” என்று சத்யன் சொன்னதும்...

“ சரிண்ணா படிச்சுகிட்டு இருக்கான் இதோ கூப்பிடுறேன்” என்றவள் அருணை அழைப்பது சத்யனுக்கு கேட்டது

சற்றுநேரத்தில் “ அண்ணா சொல்லுங்க” என்று அருணின் குரல் கேட்டது

“ அருண் நான் இப்போ அடுக்கம் பாறை ஜிஹெச்ல இருக்கேன், ஜெயில்ல ஒரு அக்யூஸ்ட் இறந்துட்டான், அந்த பாடியை உடையவங்க கிட்ட ஒப்படைக்க வந்திருக்கேன், நீ எனக்கு ஒரு டீசர்ட்டும், சால்வை ஒன்னும் எடுத்துக்கிட்டு, எனக்கு பணம் கொஞ்சம் தேவைப்படுது, அதனால அம்மாகிட்ட பணம் இருந்தா ஒரு நாலாயிரம் வாங்கிட்டு வா,, பக்கத்து வீட்டு குமார் கிட்ட பைக் கேட்டு அதுல வந்துடு அருண்” என்று சத்யன் விளக்கமாக கூற ..

“ சரியண்ணா இன்னும் கொஞ்சநேரத்தில் அங்கே இருப்பேன்” என்ற அருண் இணைப்பை துண்டித்தான்

சத்யன் செல்லை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மான்சியின் அருகே வந்தான், படர கிளையில்லாமல் துவளும் கொடியாக கிடந்தாள், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இப்படியொரு சூழ்நிலையில் இருப்போம் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள்

அவளுக்கு பக்கத்தில் இருந்த கல்லில் அமர்ந்த சத்யன் “ ஏங்க தகவல் தெரிஞ்சதும் உங்ககூட யாருமே வரலையா? நீங்க வேலை செய்ற இடத்தில் இருந்து? குடியிருக்குற இடத்தில் இருந்து? யாருமேவா துணைக்கு வரலை? ” என்று சத்யன் மெதுவாக கேட்க

சேர்ந்து கிடந்தவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்து “ காலையிலேருந்தே உடம்புக்கு சரியில்லைன்னு நான் இன்னிக்கு வேலைக்கு போகலைங்க, அதனால கம்பெனியில யாருக்குமே தெரியாது, நான் இருக்குற ஹவுஸ் ஓனர் தகவல் தெரிஞ்சதும் வந்தார், ஜெயில்ல கையெழுத்து கேட்டதும், நீ போட்டுட்டு இங்கேயே இரும்மா நான் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவர் இப்ப வரைக்கும் வரலை” என்று குரலில் சோகம் கொப்புளிக்க மான்சி பேசப்பேச சத்யனுக்கு உள்ளுக்குள் கொதித்தது



பிரச்சனைகளுக்கு பயந்து உள்ளுக்குள் அடங்கும் மனிதர்கள் இருக்க இருக்க இதுபோன்ற அபலைகளின் கதி இதுதான், அதற்கு மேல் சத்யன் எதுவும் பேசவில்லை அங்கேயே சிறிதுநேரம் நின்றுவிட்டு, மருத்துவமனை வாசலை நோக்கி நடந்தான் சத்யன், கேட்டுக்கு வெளியே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று ‘ இனி இந்த பெண்ணின் கதியென்ன’ என்று குழம்பினான்

அப்போது அவன் செல் ஒலிக்க எடுத்துப் பார்த்தான் ,, அருண்தான் “ சொல்லு அருண்?” என்றான் சத்யன்

“ அண்ணா நான் ஆஸ்பிட்டல் கிட்ட வந்துட்டேன், நீ எங்கருக்க?” என்று அருண் கேட்க

“ ஆஸ்பிட்டல் பின்புறம் மார்ச்சுவரிக்கு வர்ற வழியிருக்கு, அங்கே ஒரு என்ட்ரன்ஸ் இருக்கும் அங்க வா அருண்” என சத்யன் அடையாளம் சொன்னான்


No comments:

Post a Comment