Wednesday, October 14, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 5

அவளுக்கு எல்லாம் புரிந்துபோனது, இப்போது தன்நிலை என்ன என்று தெள்ளத்தெளிவாக புரிந்துபோனது, சற்றுமுன்பு வரை இருந்த நிம்மதி தொலைந்து போக, வாசுகி ஜானகி இருவரின் வார்த்தைகளை வைத்து தனக்கு இது வழக்கம் போல தாமதமாக வரும் மாதவிடாய் அல்ல, சத்யனின் பிள்ளை தன் வயிற்றில் உருவாகிவிட்டதால் தள்ளிப்போன மாதவிடாய் என்ற உண்மை முகத்திலறைய “ அப்பா அப்பா” என்று புலம்பியபடி இடைவிடாமல் அழுதாள்,

திடீரென எழுந்துபோய் அந்த காலண்டரை எடுத்து பையிலிருந்த சிவப்பு மை பேனாவால் ஒவ்வொரு நாளையும் கவணமாக அடித்துவிட்டு எண்ணிப் பார்த்தாள், அதே எழுபத்தியாறு நாள் கணக்குதான் வந்தது ‘ அப்படியானால் இரண்டு மாதம் முழுதாக முடிந்து மூன்றாவது மாதம் தொடங்கி விட்டதா?’ மான்சியின் வயிற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது, மயக்கம் வரும்போல் இருக்க அப்படியே படுத்துக்கொண்டாள்



மதியம் ஒரு மணிவாக்கில் வாசுகி வந்து மான்சியை எழுப்ப உறக்கத்தில் இருந்து விழிப்பவள் போல் எழுந்து அமர்ந்தாள் மான்சி, அழுதழுது வீங்கிய மான்சியின் முகத்தைப் பார்த்து “ என்னம்மா விஜயாம்மா திட்டுனாங்களாடா? அவங்க குணம் தெரிஞ்சது தானே? இதுக்கு போய் நீ அழுவலாமா கண்ணு? சரி இரு உனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று மான்சியின் கண்ணீருக்கு தவறானதொரு அர்த்தத்தை கூறி எழுந்தவளை தடுத்த மான்சி “ அக்கா காபி வேனாம், ரொம்ப பசிக்குது, கொஞ்சூண்டு சாதத்தில் ரசம் ஊத்தி குடுங்கக்கா?” என்று கண்கலங்க கேட்க, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான வாசுகி தாயன்புடன் மான்சியை அணைத்துவிட்டு “ இருடா கண்ணு இதோ எடுத்துட்டு வர்றேன்” என்று ஓடினாள்

சற்றுநேரத்தில் ஒரு கிண்ணத்தில் உணவுடன் வந்த வாசுகி “ இந்தா மான்சி,, சாப்பிட்டு பாத்திரத்தை வை, நான் போய் அய்யாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு போடுறேன், நேரமாச்சு” என்று கூறிவிட்டு மறுபடியும் ஓடினாள்

மான்சி கைகழுவிவிட்டு வந்து கிண்ணத்தில் இருந்த ரசம் சாதத்தை குழைய பிசைந்து அவசரமாக சாப்பிட்டாள், சாப்பிட்டதும் உடலுக்கும் மனதுக்கும் புது தைரியம் வந்தது, வயிற்றில் இருக்கும் பிள்ளையை எண்ணி புதிய கற்பனைகளும் ஆசைகளும் தோன்றின, நான் ஏன் அழனும்? என் சத்யனோட பிள்ளை இது? இது என் வயிற்றில் உருவானதுக்கு சந்தோஷம் தானே படனும்? என்ன இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நடக்கப் போகும் கல்யாணம் இப்பவே நடந்தாகனும் அவ்வளவுதான், என் சத்யன் கிட்ட சொன்னா எல்லா பிரச்சனையையும் அவர் பார்த்துக்குவாரு” என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டவள் இரவுக்காக காத்திருந்தாள்

மாலை ஆறுமணிக்கு தோட்டத்தை பார்வையிட வந்த விஜயா அறை வாசலில் நின்று “ ஏய் குட்டி வெளியே வா?” என்று குரல் கொடுக்க, படுத்திருந்த மான்சி பதறியடித்துக்கொண்டு எழுந்து வந்தாள்

“ என்னடி குட்டி தலைவலின்னு காலேஜ்க்கு மட்டம் போட்டுட்டியாமே? நாளையிலேருந்து ஒழுங்கா போய்ட்டு வா, ஏன்னா உன் படிப்புக்கு பணத்தை பணம்னு பாக்காம செலவு பண்றது நாங்க” என்று நக்கலாக சொல்ல, மான்சி

தலையை குனிந்தபடி “ இனிமேல் கரெக்டா போறேன்மா” என்றாள் குரல் நடுங்க
“ம்ம்” என்றுவிட்டு விஜயா அங்கிருந்து நகர, மான்சி குழாயடிக்கு சென்று முகம் கழுவிவிட்டு சத்யனை சந்திக்கப் போகும் நிமிடங்களுக்காக காத்திருந்தாள்

இரவு உணவாக இரண்டு சப்பாத்தியும் குருமாவும் எடுத்துவந்து வாசுகி கொடுக்க, பிறகு சாப்பிடுவதாக கூறிவிட்டு வாங்கி வைத்துவிட்டாள் மான்சி

இரவு வாட்ச்மேனைத் தவிர அனைவரும் போய்விட தோட்டத்து விளக்குகள் அனைக்கப்பட்டு பிரவுனி அவிழ்த்துவிடப்பட்டது, தோட்டத்தில் இருள் கவிழ்ந்ததும் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்த மான்சி சத்யனின் அறையை அண்ணாந்து பார்த்தாள், லைட் எறிந்தது, ஜன்னல் திறந்திருந்தது ஆனால் சத்யனை காணவில்லை,‘ ம் பாத்ரூம் போயிருக்கலாம், நிச்சயம் வருவான், என்று அவன் அறையையே பார்த்தபடி கழுத்துவலிக்க அண்ணாந்திருந்தாள்,


வெகுநேரம் கழித்து சத்யன் ஜன்னலருகே வர, துள்ளி குதித்து எழுந்த மான்சி, அவசரமாக கையசைத்து ‘கீழே வாங்க’ என்று அழைக்க, அவனோ இன்று முடியாது என்று சைகையில் சொன்னான், ‘ அப்போ நான் அங்கே வர்றேன்’ என்று ஜாடையில் சொன்னாள் மான்சி

சிறிதுநேரம் மவுனமாக இருந்த சத்யன் ‘ இரு நானே வர்றேன்’ என்று சைகை செய்துவிட்டு ஜன்னலைவிட்டு அகன்றான்,

சற்று நேரத்திற்க்கெல்லாம் அவளெதிரே நின்ற சத்யனை எந்த பேச்சுமின்றி உரிமையோடு தாவியணைத்தாள் மான்சி, அவன் நெஞ்சிலே கொஞ்சமாக முத்தமிட்டு, முகத்தில் சற்று அதிகப்படியான முத்தங்களை வாரியிறைத்தவளைப் பார்த்து “ என்னாச்சு மான்சி? இன்னிக்கு கேட்காமலேயே இவ்வளவு கிடைக்குது ” என்றான் சத்யன்

அவனைவிட்டு விலகி நின்று அவனையே குறுகுறுவென்று குறும்புடன் பார்த்தவள், அவனின் வலது கையை எடுத்து பட்டென்று தன் அடிவயிற்றில் அழுத்திக்கொண்டாள், அவளின் செய்கையில் சிலநிமிடங்கள் குழம்பிய சத்யன், உடனே தெளிந்தான் தன் உதடுகளை குவித்து “ ஓ” என்றுமட்டும் சொன்னவன்

அவளிடமிருந்து கையை உருவிக்கொண்டு அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் போய் அமர்ந்தான், உடனே பிரவுனி வந்து அவன் காலருகே மண்டியிட்டது
வேகமாக அவனருகில் வந்து அமர்ந்த மான்சி “ என்ன வெறும் ஓ மட்டும்? எனக்கே தெரியாது இன்னிக்கு காலையிலேதான் கண்டுபிடிச்சேன், முழுசா எழுபத்தியாறு நாளாச்சு, அதாவது மூனாவது மாசம் இது ” என்று மான்சி உற்சாகத்துடன் கூவ

“ ஸ் சத்தம்போடாதே” என்று எரிச்சலாக கூறியவன், “ என்னா பொண்ணுடி நீ இத்தனை நாள் வரைக்கும் கண்டுபிடிக்காம இருந்திருக்க, ரெண்டு மூனுநாள் டிலே ஆனதுமே கண்டுக்க வேனாமா? ச்சே இவ்வளவு முத்தவிட்டுட்டு இப்போ வந்து தகவல் சொல்ற, இப்போ எவ்வளவு சிக்கல் தெரியுமா? ” என்று சற்று அதிகமாகவே சத்யன் தன் எரிச்சலை காட்ட

மான்சி சோர்ந்து போனாள், அவன் சொல்வது போல் இது சிக்கல் தான், எப்படி எல்லார்கிட்டயும் சொல்லி உடனே கல்யாணத்தை நடத்தமுடியும்?’ என்று எண்ணியபடி அவன் முகத்தையே வருத்தமாக பார்த்தாள்

சற்றுநேரம் தலையை கைகளில் தாங்கி யோசித்த சத்யன், சட்டென்று ஒரு பெரிய மூச்சை வெளியேற்றி விட்டு எழுந்தான் “ சரி நீ காலையி காலேஜுக்கு போறேன்னு கிளம்பி பஸ்ஸ்டாப்பில் போய் நில்லு, நான் காரை எடுத்துக்கிட்டு வர்றேன், எனக்கு தெரிஞ்ச லேடி டாக்டர் ஒருத்தர் இருக்காங்க, ரெண்டுபேருமா போய் டாக்டரை பார்க்கலாம், என்ன நிலவரம்னு தெரியும் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பினான்

அவன் முதுகையே வெறித்த மான்சி ‘ ஆமால்ல டாக்டர்கிட்ட முதல்ல செக்கப்புக்கு போகனும், உள்ள பாப்பா நல்லா ஆரோக்கியமா வளர மருந்தெல்லாம் தருவாங்க, அது ரொம்ப முக்கியமாச்சே ’ என்று வழக்கம் போல தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு அறைக்குள் போய் படுத்துக்கொண்டாள்




மறுநாள் காலை தன் சோர்வை விரட்டி அழகான சுடிதார் அணிந்து அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி சத்யன் சொன்னமாதிரி பஸ்ஸ்டாப்பில் அவனுக்காக காத்திருந்தாள், அவளை வெகுநேரம் காக்க வைக்காமல் உடனே வந்து நின்றது சத்யனின் கார், சத்யன் எட்டி பக்கத்து கதவை திறக்க, மான்சி காரில் ஏறி அவனருகே அமர்ந்தாள், பஸ்ஸ்டாப்பில் வேடிக்கைப் பார்த்தவர்களை இருவருமே சட்டை செய்யவில்லை,

ஊடுருவும் ஏசியின் குளிரில், கண்களுக்கு குளிர் கண்ணாடியை கொடுத்து, சிகரெட்டைக்கு உதட்டைக் கொடுத்து ஸ்டைலாக சத்யன் கார் ஓட்டும் அழகையே கண்கொட்டாமல் ரசித்தாள் மான்சி, சத்யன் சாலையில் கவனமாக இருந்தானேத் தவிர மான்சியை பார்க்கவில்லை,

கார் வெகுதூரம் பயணிப்பது போல் இருக்க “ என்ன இவ்வளவு தூரத்திலயா ஆஸ்பிட்டல் இருக்கு? பக்கத்துலயே ஏதாவது ஆஸ்பிட்டல் இருந்தா பார்க்கலாமே?” என்று மான்சி மெதுவாக கூற ..

அவளைத் திரும்பி பார்த்து கடுமையாக முறைத்த சத்யன் “ ஏன் எவனாவது பார்த்துட்டு எங்கப்பா கிட்ட போட்டுகொடுக்கவா?” என்றான்
மான்சி கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்,

சற்றுநேரத்தில் அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமான மகப்பேறு மருத்துவமனை வந்துவிட, மான்சியின் மனம் துள்ளியது, இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வயித்துக்குள்ள பாப்பா எப்படியிருக்குன்னு சொல்லிடுவாங்க’ என்று உள்ளுக்குள் பூரித்தாள்

காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அவளுக்கு கதவைத் திறந்து இறக்கிவிட்டு சத்யன், அவளை தோளோடு அணைத்து சிறிதுநேரம் அமைதியாக இருந்தான், பிறகு “ யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது, எதுவாயிருந்தாலும் நான் பேசிக்கிறேன், என்ன சரியா? ” என்றான் அவள் கண்களை பாராமல்

“ ம் சரிங்க” என்ற மான்சியை அணைத்தபடியே உள்ளே அழைத்துச் சென்றான், மருத்துவமனை வெறிச்சோடிக் கிடந்தது, ஒரேயொரு வெள்ளைப் புடவை கட்டிய நர்ஸ் மட்டும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள், அவளைப் பார்த்தால் யாருமே நர்ஸ் என்று நம்பமாட்டார்கள், தெருவோரம் மறைவாக கஞ்சா விற்கும் பெண்ணைப் போல இருந்தாள் இவர்களைப் பார்த்ததும் வேகமாக எழுந்து “ அடடே சத்யன் தம்பியா? வாங்க? என்ன ரொம்ப நாளா இந்தபக்கம் ஆளையே காணோம்” என்று கேட்டபடி சத்யனை உரசுவது போல வந்து நிற்க,

சத்யன் சட்டென்று மான்சியுடன் விலகி சோபாவில் அமர்ந்து “ நேத்து நைட்டே டாக்டர்க்கு போன் பண்ணேன், ப்ரீயா இருக்காங்களான்னு பாரு முனியம்மா?” என்று சத்யன் இறுகிய குரலில் கூற, அந்தப்பெண் சரியென்று பக்கவாட்டில் இருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள்,

மான்சிக்கு அந்த மருத்துவமணையின் தோற்றமே வயிற்றில் கிலியை ஏற்படுத்தியது, ஏன் இங்கு யாரையுமே காணலை?’ என்று அவள் யோசிக்கும் போதே, நெடுகிலும் இருந்த அறைகளில் ஒன்றின் கதவைத் திறந்து கொண்டு, அடிமேல் அடிவைத்து ஒரு பெண் நடந்து வந்தாள், அவள் நடையிலேயே நோயாளி என்று புரிய, மான்சிக்கு நிம்மதியாக மூச்சு வந்தது,


சற்றுநேரத்தில் வெளியே வந்த முனியம்மா “ உன்னைய மட்டும் வரச்சொன்னாக சத்யா” என்று கூற, சத்யன் தலையசைத்து எழுந்து “ நீ இங்கயே இரு நான் இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு போனான், அவன் பின்னாலேயே போன முனியம்மா “ சத்யா போனவாட்டி வந்தப்ப தர்றேன்னு சொல்லிட்டு கடைசியா ஏமாத்திட்டு போய்ட்ட, இந்த முறையாவது என் கணக்கை கரெக்டா குடுத்துட்டு போ அப்பு” என்று கூற, சத்யன் எதுவுமே பேசாமல் அறையை திறந்து கொண்டு போனான்

அவளின் பேச்சை கவனித்த மான்சி அலட்சியமாக தோள்களை குலுக்கிக்கொண்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்களில் கூறப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுரைகளை கவனமாக படித்தாள்,
வெகுதூர கார்ப் பயணம் என்பதால், கொஞ்ச நேரத்தில் மான்சிக்கு வயிறு முட்ட, டிவியில் மூழ்கியிருந்த முனியம்மாவை நெருங்கி “ பாத்ரூம் எங்க இருக்கு? ” என்று கேட்டாள், அவளோ டிவியில் கவனமாக சத்யன் சென்ற அறைக்கு பக்கத்து அறையின் கதவை காட்டினாள்

மான்சி அவசரமாக நகர்ந்து அந்த அறையின் கதவை திறந்து உள்ளே போனாள், உள்ளே போனதுமே அது பிரசவம் பார்க்கும் அறை என்று புரிய வெளியே வர யோசித்தவள், அங்கே டாய்லெட் என்று ஆங்கிலத்தில் எழுதிய கதவைப் பார்த்து விட்டு அதைத் திறந்து உள்ளே போனாள், சற்றுநேரத்தில் சுடிதார் பாட்டத்தின் முடிச்சை இறுக்கிக்கொண்டே வெளியே வந்து உடையை சரிசெய்து கொண்டாள், வெளியேவர திரும்பும்போது அங்கிருந்த மற்றொரு கதவின் வழியாக சத்யனின் குரல் கேட்க சற்று நிதானித்து அந்த கதவருகே போனாள்,

கதவு பாதி மூடிய நிலையில் இருக்க உள்ளே சத்யன் குரலுடன் இன்னொரு பெண்ணின் குரலும் தெளிவாக கேட்டது, இவ்வளவு நேரமா அப்படியென்ன பேசுறாங்க என்ற ஆர்வம் உந்த கதவருகே நின்று அவர்களின் பேச்சை கேட்டாள்

“ இல்லை சத்யன் இத்தனை முறை அபார்ஷன் பண்ணப்ப வாங்குன பணத்தை விட இப்போ இரண்டு பங்கு அதிகமா வேனும், இந்த பில்டிங் ஓனர் வாடகையை இரண்டு பங்கா ஏத்திட்டாரு சத்யன், அதோ முன்ன மாதிரி கேஸ்ஸும் நிறைய வர்றதில்லை” என்றது பெண் குரல்

“ அதுக்காக இப்படி ஒரேடியா பிப்டி தவுசண்ட் கேட்டா எப்படி டாக்டர்” என்று சத்யன் கோபமாக கேட்டான்

“ ஆமாம் சத்யன், எத்தனையே முறை நீங்க கூட்டிவந்த பொண்ணுங்க எல்லாரும் மேஜர் பொண்ணுங்க, அதோடு அவங்க சம்மதத்தோடு அபார்ஷன் பண்ணேன், இப்போ நீங்க கூட்டி வந்திருக்கிறது மைனர் பொண்ணுன்னு சொல்றீங்க, அதுவும் அவளுக்கு எதுவும் தெரியாதுன்னு வேற சொல்றீங்க, நாளைக்கு அவ வீட்டுல ஏதாவது பிரச்சினை பண்ணி கோர்ட்டு கேஸ்னா யாரு அவஸ்தை படுறது, முடிஞ்சா குடுங்க இல்லேன்னா வேற ஆஸ்பிட்டல் போங்க சத்யன்” என்றது பெண் குரல்

“ இல்ல டாக்டர் இவளுக்கு யாருமே இல்லை, என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லை, நீங்க பயப்படவேண்டிய அவசியமில்லை, இட்ஸ் ஓகே இனி வீன் வாதம் வேண்டாம், என்கிட்ட நாற்பதாயிரம் தான் இருக்கு, வாங்கிட்டு இந்த பொண்ணுக்கு க்ளீன் பண்ணி அனுப்புங்க” என்று சத்யன் கூறினான்


மான்சிக்கு தொண்டை வரண்டது, எச்சிலை கூட்டி விழுங்கினாள், நெஞ்சு திகுதிகுவென எறிய, காது மூக்கு தொண்டை எல்லாம் கபகபவென சூடேறியது, தலை சுற்றுவதுபோல் இருந்தது, பற்றுதலாய் சுவற்றை பிடித்துக்கொண்டு நின்றாள் “ அடப்பாவிகளா” என்று முனகி சுருக் சுருக்கென குத்திய இதயத்தை ஒற்றை விரலால் அழுத்திக்கொண்டாள்

“ கோச்சுக்காதீங்க சத்யன் இப்பல்லாம் அதிகமா கேஸ் வரலை அதனால்தான் கறாராக பேசவேண்டியிருக்கு, பாருங்க நீங்களே இங்க வந்து நாலஞ்சு மாசம் ஆகுது, உங்களைப்போல ஆட்களை நம்பி தொழில் நடத்துற நாங்கல்லாம் என்னப் பண்றது சொல்லுங்க?” என்று அளவுக்கதிகமாகவே வழிந்தது பெண் குரல்,

“ ம்ம், சீக்கிரமா வேலையை முடிங்க, ஈவினிங் நாலு மணிக்கெல்லாம் அவளை வீட்டுக்கு கொண்டு போய் விடனும்” என்ற சத்யன் சேரைத் தள்ளிவிட்டு எழுவது கேட்டதும், மான்சியின் மூளை சுறுசுறுப்படைந்தது, பட்டென்று கதவை திறந்துகொண்டு அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள்

மான்சியைப் பார்த்ததும் சத்யன் அதிர்ச்சியுடன் நிற்க, அந்த டாக்டர் பெண்ணும் எழுந்துவிட்டாள், அவளைப்பார்த்தால் டாக்டர் போல் இல்லை, சினிமாவில் வரும் கவர்ச்சியான துணை நடிகை போல் இருந்தாள், அவள் தோற்றமே அவள் தரத்தை சொன்னது

நேராக சத்யனிடம் வந்தவள் “ என்ன சொன்ன என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லையா? அடப்பாவி உன்னை என் உயிரா நம்பினேனே, இப்படி துரோகம் பண்ணிட்டயே? உனக்கு தேவை என் உடம்பு மட்டும் தானா? நீ என் வயித்துல இருக்குற புள்ளைய நல்லபடியா வளர்க்க மருந்து வாங்கி குடுக்க தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தேன்னு நெனைச்சேன், ஆனா நீ அதை அடியோட அழிக்க நெனைச்சிருக்கயே?, கடைசில உன் பணக்கார புத்திய கான்பிச்சுட்டியே? துரோகி, என்னை சீக்கிரமே கல்யாணம் பண்ணுவேன்னு நம்பினேனே பாவி கடைசில இப்படி ஏமாத்திட்டயே, இப்படி ஈவு இரக்கமில்லாம ஒரு குழந்தையை அழிக்க கூட்டி வந்திருக்கயே, ச்சே நீயெல்லாம் மனுஷனா?” என்று ஆவேசமாக பேசிவிட்டு டாக்டர் பக்கம் திரும்பியவள்

“ ஏன்டி இதெல்லாம் ஒரு பொழப்பா? ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் போதே சந்தேகப்பட்டேன், இப்படி டாக்டர் தொழிலை கேவலப்படுத்தி சம்பாதிக்கிறதை விட நீ இந்த மாதிரி பணக்கார பசங்களுக்கு முந்தானை விரிச்சி நல்லா பணம் சம்பாதிக்கலாம், அட த்தூ” என்று வராத எச்சிலை டாக்டர் முன்பு மான்சி துப்ப

“ ஏய் நாயே யாரைப் பார்த்து என்னடி சொல்ற?” டாக்டர் கோபமாக எழுந்தாள், அதற்குள் சுதாரித்த சத்யன் மான்சியை எதுவும் சொல்லாமல் டாக்டரை நெருங்கி

“ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க, அவ ரொம்ப கோபமா இருக்கா, நான் அவளை சமாதானம் பண்றேன்” என்று கூறிவிட்டு மான்சியின் அருகே வந்து அவளை தொட முயன்றான்

அவன் இரண்டடி நெருங்கியதும், இவள் நான்கடி பின்னால் போனாள், “ மான்சி நான் சொல்றதை கேளு, இந்த நிலமையில் இதைத்தவிர வேற வழியில்லை, அதனால்தான் உன்னை அபார்ஷனுக்காக இங்க கூட்டி வந்தேன், வேற வழி கிடையாது மான்சி” என்று கெஞ்சுவது போல் சத்யன் கூற..

அவனை அருவருப்புடன் நோக்கிய மான்சி “ ஏன் இல்லை, வா இப்படியே போய் உன் அப்பா அம்மா காலில் விழுவோம் நிலமையை எடுத்துச்செல்லி போராடி கல்யாணம் பண்ணிக்குவோம்” என்று மான்சி முடிவுடன் கூற..


அவளையே வினோதமாக பார்த்த சத்யன் “ கல்யாணமா? எனக்கும் உனக்குமா? ஏய் என்ன விளையாடுறியா? என்னிக்காவது உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என் வாயல சொல்லிருக்கேனா? நல்லா யோசிச்சு சொல்லு ” என்று சத்யன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மான்சியின் காதுகளில் காய்ச்சிய ஈயமாக கொட்டியது

அவன் வார்த்தைகளை கிரகித்துக்கொள்ள சிறிதுநேரம் ஆனது, இவ்வளவு நேரம் இருந்த ஆவேசம் பட்டென்று வடிய, அவன் முகத்தை பரிதாபமாக பார்த்து “ அப்ப நீங்க என்னை காதலிக்கவே இல்லையா?” என்று மெல்லிய குரலில் மான்சி கேட்க

மான்சியின் பார்வையில் எரிச்சலான சத்யன் “ காதலாவது மண்ணாங்கட்டியாவது, ஒரு மசுரும் இல்லை, ஒழுங்கா வயித்தை க்ளீன் பண்ணிகிட்டு காலேஜ் போய் படிச்சு முன்னுக்கு வர்ற வழியப் பாரு” என்று உரக்க கத்தியவன் வெளியேப் பார்த்து “ ஏய் முனியம்மா” என்று குரல் கொடுக்க,
அடுத்த நிமிடம் முனியம்மா வந்து நின்றாள் “ இவளை கூட்டிப்போய் உள்ள படுக்க வைச்சிட்டு எல்லாம் ரெடி பண்ணு” என்று விட்டு டாக்டரிடம் திரும்பி “ இவளுக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன் டாக்டர், இனிமே முரண்டு பண்ண மாட்டா, நீங்க ரெடி பண்ணுங்க, நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு கண்ணீருடன் நின்றிருந்த மான்சியை இரக்கமாக பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்

“ முனியம்மா இந்த பொண்ணை ரெடி பண்ணி உள்ள கூட்டிப்போய் படுக்க வை, நான் ஒரு கப் காபி குடிச்சிட்டு வர்றேன் ” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேபோக

முனியம்மா மான்சியின் கைகளை பற்றிய முனியம்மா பக்கத்தில் இருந்த பிரசவ அறைக்கு அழைத்துச்சென்று ஒரு பச்சை கவுனை மான்சியிடம் கொடுத்து “ இத்த மாட்டிகிட்டு உன் டிரஸை எல்லாம் கழட்டி ஓரமா சுருட்டி வை, வீட்டுக்கு போறப்ப மாட்டிக்கலாம், நானும் போய் காபி குடிச்சிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு டாக்டர் போன அதே வழியில் முனியம்மாவும் போய் விட..

மான்சி கையிலிருந்த கவுனை வீசி எறிந்தாள்,, டாக்டரின் அறைக்கதவை தள்ளினாள், வெளிப் புறமாக பூட்டியிருந்தது, தான் ஏற்கனவே பாத்ரூம் போவதற்கென்று வந்த கதவைப் பார்த்தாள், அது திறந்தே இருந்தது, அதன் இடைவெளியில் வெளியே ஹாலை நோட்டம் விட்டாள், முன்பு நடந்த நோயாளிப் பெண் மட்டும் இடுப்பில் இரண்டு கைகளையும் தாங்கி நடந்து கொண்டிருந்தாள், சத்யன் இல்லை,

ஹாலில் இருந்து தோடடத்துக்கு செல்லும் கதவு திறக்கப்பட்டு தோட்டத்தில் தீவீர சிந்தனையுடன் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான், மான்சியின் காலேஜ் பேக் ஹால் சோபாவில் கிடந்தது,

மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்த மான்சி, பூனை போல் நடந்து சோபாவில் கிடந்த தன் பையை எடுத்துக் கொண்டாள், தெரு பக்கத்து கதவை நோக்கி மெதுவாக நடந்தவள், வாசலை கடந்ததும் திபுதிபுவென ரோட்டை நோக்கி ஓடினாள், மான்சி இப்படி செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்காததால் யாரும் அவளை கவனிக்க வில்லை,

ரோட்டில் ஓடிய மான்சி எதிர் திசையில் வந்த ஒரு பஸ்ஸைப் பார்த்ததும் ஓட்டத்தை நிதானப்படுத்தி பஸ்ஸை நோக்கி கைகாட்டினாள், கொஞ்சம் கொஞ்சமாக மெதுவான பஸ்ஸின் போர்டில் திண்டுக்கல் என்றிருக்க, நடத்துநர் தலையை நீட்டி ‘ எங்கம்மா போகனும் என்று கேட்க

“ திண்டுக்கல் சார்” என்றாள் மான்சி பட்டென்று,, ...... “ சரி சீக்கிரம் ஏறும்மா, ஸ்டாப்பிங் இல்லாத இடத்துலே எல்லாம் வண்டிய நிறுத்திக்கிட்டு” என்று நடத்துநர் சலித்துக்கொள்ள, மான்சி உடனே ஏறினாள், அடுத்த நிமிடம் பஸ் சீறிக்கொண்டு கிளம்பியது,


உள்ளே வந்த மான்சியிடம் டிக்கெட்டை கொடுத்துவிட்டு பணத்துக்காக நடத்துனர் கை நீட்ட, நேற்று ஜானகி கொடுத்த பணத்தை எடுத்து கொடுத்து விட்டு மீதியை வாங்கினாள்,

“ உள்ள ஒரு சீட் இருக்கு பாரும்மா, அங்க போய் உட்காருங்க” என்று நடத்துனர் சொல்ல.. மான்சி ஓடும் பஸ்ஸில் கம்பியைப் பற்றியபடி தடுமாறி நடந்து நடத்துனர் சொன்ன சீட்டருகே வந்தவள், அங்கே உட்காரத் தயங்கி அப்படியே கம்பியை பிடித்தபடி நின்றுகொண்டாள்,

அங்கே அமர்ந்திருந்தவர் வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்து வரை மதிக்கலாம், தலையை வாரி பின்னலிட்டு மல்லிகைப்பூ வைத்திருந்தார், அந்தப்பூ காலையில் வைத்ததாக இருக்கவேண்டும் வதங்கி இருந்தது, நெற்றியில் பெரிய ஸ்டிக்கர் பொட்டும், அதற்கு மேலே விபூதி கீற்றும் குங்குமமும் இருந்தது, கழுத்தில் கனமான பெரிய டாலர் வைத்த கவரிங் செயின், அழகான ஆரஞ்சு வண்ணத்தில் புடவை கட்டியிருக்க, அதற்கு மேட்ச்சான ரவிக்கை அணிந்திருந்தார், பார்த்தவுடன் சொல்லலாம் ஏதோ கோவிலுக்கு போய்விட்டு வருகிறார் என்று, ஆணிலிருந்து பெண்ணாக மாறியதன் அடையாளமாக மேலுதட்டில் இருந்த பச்சையை பவுடர் கொண்டு மறைக்க முயன்றிருந்தாள், அகன்ற தாடையுடன் கடலோரக் கவிதைகள் படத்து ரஞ்சனியை ஞாபகப்படுத்தினாள் ( இவர்கள் தங்களை பெண்களாகவே நம்புவதால், இனிமேல் இவர் இல்லை இவள்)

வியர்த்து விறுவிறுத்துப் போய் மான்சி நின்றகொண்டே வருவதை பார்த்து “ ஏன் பாப்பா படிச்ச நீங்களே இப்படி எங்களை கேவலமா நெனைச்சு ஒதுக்கி வச்சா, படிக்காத சனம் என்ன சொல்லும், இதெல்லாம் நாங்களா விதிச்சதா? ஆண்டவனோட படைப்பு அந்தமாதிரி, நாங்களும் மனுஷப் பிறவிங்க தான் தாயி” என்று அந்த அரவாணிப் பெண் கூற..

மான்சி சங்கடமாக நெளிந்தபடி “ இல்லைங்க நான் அப்படியெல்லாம் நினைக்கலை” என்ற கூறிவிட்டு பட்டென்று அந்தப்பெண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்,

உடனே சந்தோஷமான அந்தப்பெண் “ நன்றிமா” என்றாள்

மான்சி அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப்போய், முகம் கோண முன்சீட்டின் கம்பியைப் பற்றி கவிழ்ந்து கொண்டாள்,
சற்று நேரத்தில் மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலில் பஸ் நிற்க, எல்லோரும் சாப்பிட இறங்க பஸ் காலியானது, மான்சியின் பக்கத்து சீட் பெண்ணும் இறங்குவதற்காக எழுந்திருக்க, மான்சி எழுந்து அவளுக்கு வழிவிட்டாள்

“ ஏன் பாப்பா நீ சாப்பிடலையா? நான் வேனா ஏதாவது வாங்கியாரட்டா?” என்று அந்த பெண் கேட்க..

“ இல்லைங்க வேனாம் எனக்கு பசியில்லை” என்று கூறிவிட்டு மீண்டும் சீட்டில் அமர்ந்து கொண்டாள்,



அந்தப்பெண் சாப்பிட இறங்காமல் தயங்கி நின்று “ பாப்பா நான் கேட்கிறேன்னு தப்பா நெனைக்காத, பஸ்ஸுல ஏறுனதுல இருந்து உன் முகமே சரியில்லை, எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்க, அதுவுமில்லாம இம்புட்டு தூரம் தனியா வேற வர்ற, ஏதாவது பிரச்சினையா பாப்பா, யாராச்சும் உன்னை விரட்டுறாங்களா? எதுவாயிருந்தாலும் பயப்படாம என்கிட்ட சொல்லும்மா, என்னால முடிஞ்ச உதவியை செய்றேன்” என்று பெரும் தயவுடன் அந்தப் பெண் கேட்க

மான்சிக்கு அந்த ஆறுதல் வார்த்தைகளால் கண்ணீர் வந்தது, கலங்கிய கண்களுடன் “ அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க, திண்டுக்கல்லில் என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, வீட்டுல எல்லாரும் ஏற்கனவே போய்ட்டாங்க, நான் இப்பதான் போறேன்” என்று சரளமாக ஒரு பொய்யை சொல்லிவிட்டு கம்பியில் தலையை கவிழ்ந்து கொண்டாள்

சற்று நேரம் மான்சியவே பார்த்த அந்தப்பெண் வேறு எதுவும் கேட்காமல் அந்த பெண் இறங்கி சாப்பிட போனாள்,





No comments:

Post a Comment