Thursday, October 29, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 7



2009 ஜனவரி மாதம்

"ராமையா, இந்த நிரஞ்சன், நம்மளோட இயக்கத்தை கூண்டோடு அழிசிடுவான்னு நினைக்கிறேன் என்னடா செய்றது"கேஷவ் குரலில் இருந்த விரக்தியை கண்டு துணுக்குற்றான் ராமையா.

கேஷவ் ராவின் வலது கரம் ராமையா. அவனுக்கு தெரியாமல் இயக்கத்தில் ஒரு துரும்பு கூட நகர்த்த முடியாது. சில நேரங்களில் கேஷவ் ராவை மீறி வேலை செய்வது அவன் வழக்கம்.

"அண்ணா, எனக்கு ஒரு யோசனை. இப்போ ஆந்திர முதலமைச்சர் நாம எல்லாரும் சரணடைய, பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு கொடுத்து இருக்காரு. அதை பயன்படுத்து நாம கொஞ்ச நாள் சண்டை நிறுத்தத்தை அறிவிப்போம். அதற்குள் நமக்கு தேவையான ஆயுதங்களை சேர்த்து விடலாம்."

யோசித்தான் கேஷவ். 'ராமையா சொல்வதும் ஒரு நல்ல யோசனைதான். சரி, அப்படியே செயல்படலாம்.'

அடுத்த நாள் ஈநாடு, ஆந்திர வாணி உட்பட அனைத்து தெலுங்கு பத்திரிக்கைகளில் கேஷவ் ராவின் செய்தி வெளி வந்தது.'அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சண்டை நிறுத்தம் செய்வதாகவும், பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும்' தெரிவிக்க,அரசாங்கம் டி ஜி பி மூலம் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுத்து இருந்தது.



சுகுமாரா, நிரஞ்சனை அழைத்து விஷயத்தை தெரிவிக்க, அவன் உடனே அண்ணாமலை தலைமையில் பத்து பேர் அடங்கிய போலிஸ் அதிகாரிகளை காவலுக்கு நியமித்தான்.

வீர ராஜு மனதில் மட்டும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது."சார், எனக்கு இவங்க மேல சந்தேகமா இருக்கு. நான் என்னோட கடந்த இருபது வருட போலிஸ் வாழ்க்கைல இவங்க இப்படி பல தடவைஉறுதி மொழி கொடுத்து பின்னால முதுகில குத்தி இருக்காங்க. நாம கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்."

"வீர ராஜு, உங்களுக்கு யாரை பார்த்தாலும் சந்தேகம். கொஞ்சமாவது மனுசங்க மேல நம்பிக்கை வைங்க" என்று சிரித்து கொண்டே நிரஞ்சன் சொல்ல, வீர ராஜு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அதற்கு ஏற்றார் போல், கேஷவ் மற்றும் ராமையா நடவடிக்கைகளில் பெரிய மாற்றல் தெரியவில்லை. 'சரி நமக்குதான் யாரை பார்த்தாலும் தப்பா தெரியுது' என்று தன்னையே கடிந்து கொண்டார்.

நாட்கள் உருண்டோடின. நக்சலைட் இயக்கத்தின் கோரிக்கைகள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்ற முடியாது என்று ஒதுக்கி தள்ள,கேஷவ் ராவ் தலைமையில் இருந்த குழு பேச்சு முறிந்தது என்று சொல்லி மீண்டும் வாராங்கல், கம்மம் ஒட்டிய காட்டு பகுதிக்கு பதுங்கினர்.


2009 பிப்ரவரி மாதம்

வாரங்கல் நகரத்துக்கு குண்டு வைக்க வந்த ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டு வீர ராஜு இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வர, விஷயம் அறிந்த அண்ணாமலை மற்றும் நிரஞ்சன் விசாரணைக்கு வந்தனர். கூடவே பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜம்மா வந்து சேர்ந்தார்.

கெஞ்சி பேசி பார்த்தும் அந்த பெண் வாய் திறக்கவில்லை. அவளை அடித்தால் தான் வாய் திறப்பாள் என்பதை உணர்ந்த ராஜம்மா தனது தேர்ட் டிகிரி முறையை உபயோகிக்க ஆரம்பித்தாள்.

நிறைய அடி வாங்கியும் அந்த பெண் வாய் திறக்கவில்லை.

வீர ராஜு நிரஞ்சனிடம் பேசினார்.

"சார், இந்த பொண்ணு வாயை திறக்க மாட்டேங்கிறா. நாம ஒண்ணு செய்யலாம். அவள் மேல குற்றம் இல்லைன்னு சொல்லி விடுவிச்சுரலாம். பின்னாலே ராஜம்மாவை அனுப்பி கண்காணிக்கலாம்."

"இல்லை வீர ராஜு. அது கொஞ்சம் ரிஸ்க். ராஜம்மாவை நிறைய பேருக்கு தெரியும். வேற யாராவது போகணும். என்ன செய்றது."

"சார், நான் போறேன். நான் இங்கே போலிஸ் சப் இன்ஸ்பெக்டரா வேலை பண்ணுறது நிறைய பேருக்கு தெரியாது."

கொஞ்ச நேரம் யோசித்த நிரஞ்சன்"சரி, நீங்க சொல்றது நல்ல யோசனையா படுது. என்ன அண்ணாமலை நீ என்ன சொல்ற."

"நிரஞ்சன், நீங்க சொல்றது சரிதான்"

சொன்னபடி அந்த இளம் பெண் லக்ஷ்மியை விடுவிக்க அவள் சந்தோசமாக மேடாரம் காட்டுப்பகுதியை நோக்கி சென்றாள்.சொன்னபடி வீர ராஜு பின்னே செல்ல, அவள் சென்ற இடம் நக்சலைட் அதிகம் வசிக்கும் பகுதி என்று தெரிய அதிர்ந்து போனார்.

வீர ராஜு லக்ஷ்மியை தொடர்ந்து செல்ல, அங்கே காட்டுக்கு நடுவில் இருந்த கூடாரங்களை பார்த்து அசந்து போய் தனது காமெராவை எடுத்து போட்டாக்கள் எடுத்தார்.


(தென்னிந்தியா மாநிலங்களில் ஆந்திர மாநிலம் ஜமின்தார்கள் என்று சொல்லப்படும் உயர் வகுப்பு பணக்காரர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தது. கீழ் மட்ட வேலைகளில் இருந்த ஆண், பெண்கள் கடுமையான வேலை வாங்கப்பட்டனர். கல் குவாரிகளில் வேலை செய்த ஆண், பெண்கள் தங்களது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தினர். பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட அவர்களின் சார்பாக தட்டி கேட்ட தீவிரவாத கம்யூனிஸ்ட்கள் நக்சலைட் என்று அழைக்கபட்டனர். 

ஆரம்ப காலங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக இருந்த நக்சலைட்கள், எண்பது தொன்னூறுகளில் பாதை மாற தொடங்கினர். பல நக்சலைட்கள் பாதை மாறி கொள்ளைக்காரர்கள் போல ஆகி கடத்தலில் ஈடுபட்டு பணம் பறிக்க தொடங்கினர்.

அதில் சேர்ந்த பெண்களும் கால போக்கில் நக்சல் தலைவர்களுக்கு ஆசை நாயகிகள் ஆக்கப்பட்டனர்.)

லஷ்மி நக்சல் இயக்க தற்கொலை படை தலைவி. கேஷவ் ராவை சந்திக்க சென்றாள். அவளுக்கு பின்னே மறைந்து சென்ற வீர ராஜு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தார்."லக்ஷ்மி வந்துட்டியா. நீ திறமையான பொண்ணு ஆச்சே. எப்படி மாட்டிக்கிட்டே."

அவளை கட்டி தழுவி அனைத்து கொண்டு"நீ இல்லாமல் எனக்கு ராத்திரி தூக்கம் போச்சு. சொல்லு லட்சுமி உன்னை டார்ச்சர் பன்னுனான்களா."

"என் ராசா, அவங்க என்னதான் டார்ச்சர் பண்ணினாலும் நான் வாயை திறக்கலை. எல்லாத்துக்கும் அந்த நிரஞ்சன் தான் காரணம்.அவனை சீக்கிரம் போட்டு தள்ளனும். இல்லைனா நமக்கு பிரச்சனை."

யோசித்தான் கேஷவ்"நீ சொல்றது உண்மைதான் லக்ஷ்மி. அவனை நாம உடனே தொட கூடாது. கொஞ்சம் கண்காணிக்கலாம்.பிறகு அவனை பிளான் பண்ணி காலி பண்ணலாம். இப்போ நாம சந்தோஷமா இருக்கலாம்."

அது மாலை நேரமாக இருந்ததால், நடமாட்டம் குறைவாக இருந்தது. வீர ராஜுக்கு யார் கண்ணிலும் படாமல் தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
காட்டுக்கு அடுத்த பக்கம் இருந்த ஜீப்பில் ஏறி வாராங்கல் நகரம் வந்து சேர மணி இரவு பத்து.
அவருக்காக நிரஞ்சன், அண்ணாமலை, ராஜம்மா காத்து இருக்க, தான் எடுத்த போட்டோக்களை எல்லாம் காண்பிக்க, அதை பார்த்த நிரஞ்சன் சிந்தனையில் தோய்ந்தான்."வீர ராஜு நீங்க சொன்னது உண்மை. நான் தான் தப்பு பண்ணிட்டேன்". 

"அண்ணாமலை, இனிமே நம்மளோட தாக்குதலை அதிக படுத்த வேண்டியது தான். உடனே நம்ம குழுவை நாளைக்கு காலை எட்டு மணிக்கு, பரேட் கிரௌண்ட்ல ஆஜர் ஆக சொல்லுங்க."


"ராஜம்மா, நீங்க அந்த பெண் லக்ஷ்மியை கவனிக்க ஆளை ஏற்பாடு செய்யுங்க. இப்போ அவங்களை க்ளீன் பண்ணலைனா,ஏற்கனவே மனம் மாறி பொது வாழ்க்கைக்கு திரும்பி விட்ட பழைய நக்சலைட்களை தவறான பாதைக்கு திருப்பிடுவாங்க."

அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது

வீர ராஜுக்கு நிரஞ்சனின் தவிப்பு புரிந்தது. திருந்தி வந்தவர்களின் மறு வாழ்வுக்கு கலக்டர், பேங்க் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். இவ்வளவு நான் கஷ்டபட்டு உழைத்த உழைப்பு வீணாக போய் விடுமோ என்ற பயம் அவன் மனதில் இருக்கிறது என்று அவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது.

வீட்டுக்கு திரும்பிய நிரஞ்சன் முகத்தில் சோர்வு கண்டு ராமானுஜம் முகத்தில் கேள்விக் குறி. நிரஞ்சன் எப்போதும் உற்சாகமாக இருப்பான். எந்த ஒரு பிரச்சனையையும் சுலபமாக தீர்த்து விடும் அளவுக்கு சிந்திக்க கூடியவன். என்ன பிரச்சனையோ.

"நிரு, என்ன பிரச்சனை."

"ஒண்ணும் இல்லைப்பா", முகம் கழுவி கொண்டே பதில் சொல்ல"இல்லை, உன் முகத்திலே ஏதோ சோகம் தெரியுது, கலக்கம் தெரியுது. என்ன பிரச்சனை. என் கிட்ட சொல்ல முடியாத அளவு ரகசியம்னா சொல்ல வேண்டாம்".

முகத்தை துண்டால் துடைத்து விட்டு, அப்பா அருகில் இருந்த சேரில் அமர்ந்து, "உங்க கிட்ட சொல்றது ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா". நடந்த விஷயத்தை சொல்ல ராமானுஜம் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
"நிரு, நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மைதான். இவ்வளவு நாள் நீ கஷ்டபட்டது எதுவும் வீணாககூடாது. நான் நாட்டு எல்லைல எதிரிகள் கிட்ட இருந்து நாட்டை காப்பாத்த போராடினேன். நீ நாட்டுக்கு உள்ளே இருக்கிற எதிரிகள் கிட்டே இருந்து நம்ம மக்களை காப்பாத்த போராடுறே. அட்லீஸ்ட் எனக்கு எதிரிகள் யாருன்னு தெளிவா தெரிஞ்சுது.கவலைபடாதே நிரு, இது மகாபாரத போர் மாதிரி. நீ கெட்டவங்களை அழிக்க போற அர்ஜுனன். உனக்கு அதை தவிர வேற எதிலேயும் மனசு அலை பாயகூடாது. சரியா",என்று சொல்லி தோளை தட்டி கொடுக்க, "சரிப்பா" என்றான்.

'அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்ன கீதை போல எனக்கு அறிவுரை சொல்லி இருக்கீங்க அப்பா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை' என்று மனசுக்குள் உருகினான்.

அதற்குள் அம்மா வந்து "என்ன நிரு, தோசை ஊத்தட்டுமா?" என்று கேட்க, ராமானுஜம் புன்னகையுடன் "போய் சாப்பிடு. எந்த பிரச்சனை வந்தாலும், வயித்துக்கு வஞ்சனை பண்ண கூடாது. பசியோட இருந்தா, மூளை வேலை செய்யாது"என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார்.




அடுத்த நாள் காலை பரேட் கிரௌண்டில் இருபது இன்ஸ்பெக்டர் மற்றும் நூற்றி எட்டு கான்ஸ்டபிள் இருக்க, அவர்களுடன் பேச தொடங்கினான் நிரஞ்சன்.

எல்லோரும் ஆளுக்கொரு யோசனை சொல்ல, அருகில் சைலேன்ட் மோடில் இருந்த வீர ராஜு போனில் கால் வர, வீர ராஜுவை தேட அவர் தூரத்தில் பேசி கொண்டு இருந்தார்.

'சரி, யார் அழைப்பது' என்று பார்த்தான். ஒரு பெண்ணின் போட்டோ வர, ஷிவானி என்று பெயர் வந்தது. போனை எடுத்து நடந்து சென்று அவர் கையில் கொடுத்து, "உங்களுக்கு ஷிவானின்னு ஒரு பொண்ணு கிட்டே இருந்து போன் வருது"


போனை எடுத்து காதில் வைத்து "நான் கொஞ்ச நேரத்தில கூப்புடுறேன்" என்று சொல்லி விட்டு, "சார் அது என்னோட, பொண்ணு ஷிவானி. பி ஏ ரெண்டாவது வருஷம் படிக்கிறா"என்று சொல்ல, "உங்க முகத்தில இருக்கிற சந்தோசத்தை பார்த்தா உங்களுக்கு உங்க பெண் மேல ரொம்ப பாசம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "ஆமாம் சார், அவளுக்கும் என் மேல உயிரு. ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாவது பேசினா தான் நிம்மதி. விஜயவாடா ட்ரான்ஸ்பர் கிடைச்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்"என்று பெருமூச்சு விட,நிரஞ்சன் அவர் பேச்சில் இருந்த ஏக்கத்தை உணர்ந்தான்.

பிப்ரவரி பதினாலாம் தேதி, காட்டில் உள்ள கேஷவ் ராவின் கோட்டையை தாக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நாள் தான் தன் பிறந்த நாள் என்று நிரஞ்சன் யாரிடமும் சொல்லவில்லை.

பதிமூன்றாம் தேதி இரவு தனது அப்பா அம்மாவிடம் அடுத்த நாள் நக்சலைட் வேட்டைக்கு செல்ல இருப்பதாக சொல்ல, அவன் அம்மா சிணுங்க ஆரம்பித்தாள்.
"என்னடா நிரு, இந்த பிறந்த நாள் கொண்டாடாம எதுக்குடா இப்படி போற, ஒரு நாள் தள்ளி போட கூடாதா.?"

அம்மா சொல்லில் இருந்த உண்மை புரிந்தாலும், "சாரிம்மா, இது எங்க டீம் முடிவு செய்தது. நான் அதை மாற்ற முடியாது. இந்த பிறந்த நாள் இல்லைனா, நாம அடுத்த வருஷம் கொண்டாடிட்டா போச்சு" என்று சொல்ல, அதை ராமானுஜமும் ஆமோதித்தார்.

"என்ன, லலிதா, சின்ன பிள்ளை மாதிரி. அவன் நம்ம மகன். எங்கே போக போறான். திரும்பி வந்துடுவான்" என்று சமாதானம் சொன்னார்.

'பாவம்இந்த பிறந்த நாள் மட்டும் அல்ல, இனி வரும் எந்த பிறந்த நாளும் இனிமேல் அவன் பெற்றோருடன் கொண்டாட முடியாது' என்பது நிரஞ்சனுக்கு தெரியாமல் போனது.


அடுத்த ஒரு வாரம் நடந்த சண்டையில் இருபதுக்கும் மேல் நக்சலைட் கள் கொல்லப்பட, கேஷவ், லக்ஷ்மி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டPWG குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். ராமையா மட்டும் தன் கூட்டாளிகள் ஐம்பது பேருடன் தப்பித்தான்.

தினமும் டி ஜி பி சுகுமாரா, நிரஞ்சனிடம் பேசி நிலவரத்தை தெரிந்து கொண்டார். 

'நிப்பு, எங்கு சென்றாலும் அங்கே தீப்பொறி பறப்பதாக' ஈநாடு பத்திரிக்கை குறிப்பிட, நிரஞ்சனின் உண்மையான பெயர் மறந்து போய் அனைவரும் அவனை நிப்பு என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

முக்கியமான ஆட்கள் கைது செய்யபட்டதால் இயக்கம் வலுவிழந்து போக, டி ஜி பி அவனை போனில் அழைத்து "நிரஞ்சன், இப்போ தான் நீங்க ஜாக்ரதையா இருக்கனும். இன்னும் ராமையா உட்பட சில பேர் வெளியில இருக்காங்க. உங்களை அட்டாக் பண்ண வாய்ப்பு இருக்கு. உங்க வீட்டை சுத்தி பத்து போலிஸ்போட சொல்லி இருக்கேன்."

சிரித்தான் நிரஞ்சன். "சார், எனக்கு அம்மா அப்பா மட்டும் தான் இங்கே இருக்காங்க. அக்கா யு எஸ் ல இருக்கா, எங்க மூணு பேருக்கு எதுக்கு பத்து போலிஸ்.

"இல்லை நிரஞ்சன், இதை சாதாரணமா எடுத்துக்காதிங்க. நீங்க எந்த அளவுக்கு எங்களுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உங்க குடும்பத்தோட பாதுகாப்பும் முக்கியம்."
அவர் பேச்சில் இருந்த அக்கறையை உணர்ந்து கொண்ட நிரஞ்சன், "சரி சார், நீங்க சொல்றபடி கேக்குறேன். அஞ்சு பேரை காவலுக்கு போட்டா போதும்."

யோசித்த டி ஜி பி, "சரி உங்க இஷ்டம்" என்று போனை வைக்க போக, "சார் ஒரு பர்சனல் ரிக்வெஸ்ட்."

"சொல்லுங்க நிரஞ்சன், என்ன விஷயம்."

"சார், என் கூட இருக்கிற சப் இன்ஸ்பெக்டர் வீர ராஜு குடும்பம் விஜயவாடாவில இருக்காங்க. அவரும் ட்ரான்ஸ்பர் கேட்டு ரெண்டு வருஷம் ஆகுது. இப்போ கொடுத்தா அவருக்கு உதவியா இருக்கும்."

"அவர் உதவி உங்களுக்கு வேண்டாமா.?"

"பரவாயில்லை சார், நான் மேனேஜ் பண்ணிக்குவேன்."

"சந்தோஷமா இருக்கு நிரஞ்சன்.உங்க கீழ வேலை பார்க்கிற எல்லார் மேலயும் உங்களுக்கு நல்ல அக்கறை இருக்கு. அதே சமயத்தில,நீங்க எந்த வேலைல எந்த குறையும் வைக்கிறது இல்லைன்னு எனக்கு தகவல் வந்து இருக்கு. Good. உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு."


"இன்னும் ஒரு முக்கிய செய்தி. வீர ராஜு, இந்த வருஷ ப்ரோமொசன் லிஸ்ட்ல இருக்கார். அதனால இப்போ ட்ரான்ஸ்பர் பண்ணும்போது ப்ரோமொசன் கொடுத்து ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க. இந்த விஷயத்தை நீங்களே அவருக்கு சொல்லுங்க."

"ஓகே சார், தாங்க்யூ சார்". போனை வைத்தான் நிரஞ்சன்.

மனதுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் தனக்கு கீழே நான்கு வருஷமாக வேலை பார்க்கும் வீர ராஜுவை அவர் விரும்பியபடி ட்ரான்ஸ்பர் செய்ய டி ஜி பி ஒத்து கொண்டது எதிர்பாராத விஷயம்.


போனில் வீர ராஜுவை அழைத்து நேரடியாக வர சொன்னான்.

ACP அலுவலகம் வந்த வீர ராஜு, நேரடியாக கேபினுக்குள் விரைந்து சென்று சல்யூட் அடிக்க, திரும்பி சல்யூட் அடித்தான் நிரஞ்சன்."வீர ராஜு ஒரு ஹாப்பி நியூஸ்."

"சொல்லுங்க சார், ராமையா மாட்டிகிட்டானா."

தன்னை மறந்து கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான் நிரஞ்சன். 
"என்ன சார் எப்ப பார்த்தாலும் வேலை ஞாபகம் தானா. வீட்டு ஞாபகம் கிடையாதா."

"இல்லை சார்..." என்று வீர ராஜு தடுமாற, சிரித்து கொண்டே, "உங்களுக்கு ரெண்டு சந்தோசமான செய்தி".

"

ஒண்ணு உங்களுக்கு இன்ஸ்பெக்டர் ப்ரோமொசன் கிடைச்சு இருக்கு. இரண்டாவது, உங்களுக்கு விஜயவாடா ட்ரான்ஸ்பர் கிடைச்சு இருக்கு. இப்போ சந்தோஷமா
?"

"சந்தோஷம் சார், ஆனால் இப்போதைக்கு ட்ரான்ஸ்பர் வேணாம் சார்" முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வீர ராஜு பேச, நிரஞ்சன் அயர்ந்து போனான். 

'என்ன மனுஷன் இவர். குடும்பத்தோட போறதுக்கு யோசிக்கிறாரு' என்று மனதில் கேள்வி எழ, அவரை பார்க்க 

"சார், இப்போதைக்கு உங்களை ஆபத்து சூழ்ந்து இருக்கு. அந்த ராமையாவை பிடிக்கும் வரையாவது நான் இங்கே இருக்கணும்னு நினைக்கிறேன்."



No comments:

Post a Comment