Thursday, October 29, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 9

ஷிவானியின் மனது வீர ராஜு சொன்ன நிப்புவின் கடந்த கால வாழ்கையில் இருந்து விடுபடவில்லை. கண்களில் கண்ணீர் தளும்பியது.

'அப்பா, அம்மா இருவரையும் ஒரே சமயத்தில் இழப்பது ஒரு கொடுமையான விஷயம். இருவரையும் இழந்து அனாதையாக இருந்த நிரஞ்சன் மீது ஒரு பழி சுமத்தி விட்டேன். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் தன்னிலை இழக்காமல், தன்னை பற்றி கேவலமாய் பேசாமல், தன் கற்பை காப்பாற்றிய ஒரு நல்ல மனிதனை, ஒரு காவல் துறை தலைவனை தவறாக நினைத்து விட்டேனே' என்று அவள் மனது புலம்பியது.

ஒரு வழியாக சமாளித்து விட்டு தனது அறைக்கு திரும்ப, "என்ன ஷிவானி சாப்பிடாம போற" என்று பத்மாவதி கேட்க, "

இல்லம்மா எனக்கு பசிக்கலை"கதவை திறந்து உள்ளே தாளிட்டு கொண்டாள்.

அப்பா விவரித்த காட்சிகள் இன்னும் அவள் மனக்கண்ணில் ஓடி கொண்டு இருந்தன. 

'சிவில் சர்வீஸ் இன்டர்வியுவில் சொன்ன பதில்கள், வாரங்கல் நகரத்தின் சட்ட ஒழுங்கு துறை டி எஸ் பி ஆனது,பெண்களுக்கு கொடுத்த மரியாதையாரை கண்டும் பயப்படாதவீரம், நக்சலைட்களின் புனர்வாழ்வுக்கு பாடுபட்டது, பெற்றோர் கடத்தபட்டது, கொலை செய்யப்பட்டது, பல போலிஸ் அதிகாரிகள் கண்ணி வெடியில் உயிர் இழந்தது, நிரஞ்சனின் வீர சபதம்'இவை எல்லாம் அவளின் சிந்தனையை ஆக்ரமிக்க படுக்கையில் இருந்த தலையணையில் இருந்த நிரஞ்சனின் அந்த ஓவர் கோட்டை கட்டி கொண்டு கண்ணீர் விட்டாள்.

அருகில் இருந்த செல்போன் அலற, அனுவின் கால் வந்தது."சொல்லு அனு,"

"ஷிவானி, ஒரு விஷயம் தெரியுமாடி. நம்ம காலேஜ் ப்ரொபசர் பேரு ராகவ் இல்லை. அவர் பேரு நிரஞ்சன். நிப்பு நிரஞ்சன்"அவள் குரலில் ஆச்சர்யத்தோடு கலந்த உற்சாகம் இருந்தது."எனக்கு தெரியும் அனு. இப்போ தான் அப்பா சொன்னார்"குரலில் சோர்வு தெரிய,அனு பதில் பேசினாள்.

"ஷிவானி, எங்க அப்பா உன்னோட அப்பாவோட பழைய நண்பர்கிறதால வாரங்கல் போயிருந்தபோது நிப்புவை சந்திச்சு இருக்கார். அதை அவர் விபரமாக சொன்னார்."

"அனு, எனக்கு அவரை பார்க்க வேணும் போல இருக்கு. அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும். என்னடி செய்றது" அனுவுக்கு அவளின் சுயவிரக்கத்தை பார்த்து வருத்த படுவதா, இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை. "நான் வேணாம் வரட்டுமா."


"இல்லை அனு, வேணாம். நான் சமாளிச்சுக்கிறேன்" போனை ஷிவானி வைக்க, கதவை தட்டும் ஓசை.

கதவை திறக்க, வாசலில் சாப்பாடு தட்டுடன் வீர ராஜு. 

"என்னம்மா சாப்பிடாம வந்துட்டே."

உள்ளே வந்து டேபிளில் வைத்து விட்டு"உட்காரு நான் ஊட்டி விடுறேன்" என்று சொல்ல, மௌனமான வேண்டாம் என்றுதலை அசைத்தாள்.

அவளுக்கு அப்பா மீது பாசம் அதிகம். அதுபோல் தான் வீர ராஜுவுக்கும். தனது மகள் தன்னை போலவே பேச்சு, நடவடிக்கை,இருப்பது அவருக்கு பெருமை. 

சாப்பாடை எடுத்து மெளனமாக சாப்பிட்டாள். கொஞ்சம்தான் சாப்பிட முடிந்தது. போதும் என்று சொல்லி விட்டு கை கழுவி விட்டு தட்டை எடுத்து கொண்டு சமையல் அறை செல்ல, வீர ராஜு கிளம்பலாம் என்று எழுந்தார். அவர் கண்ணில் படுக்கையில் கிடந்த ஓவர் கோட் கண்ணில் பட்டது.

எடுத்து கொண்டு வெளியே வர, அம்மாவுடன் பேசி கொண்டு வந்த ஷிவானி அப்பா கையில் இருந்த ஓவர் கோட்டை பார்த்து திகைத்து நின்றாள்.

"அம்மா ஷிவானி, இது ஆண்கள் போடுகிற ஓவர் கோட். அது மட்டும் இல்லை. போலிஸ் ஆபீசர் மட்டும் தான் இந்த மாதிரி கோட்டை போடுவாங்க. இது நிப்புவோட கோட்தானே."

கையும் களவுமாக பிடிபட்ட ஷிவானி சமாளித்தாள்

"ஆமாப்பா. அவர் என்னை காப்பாத்தி விட்டு போகும்போது இதை தான் போர்த்தி விட்டார். திரும்ப பார்க்கும் போது கொடுக்கலாம்னு நானே எடுத்து வந்துட்டேன்."

"சரி, இந்த அழுக்கு கோட்டை துவைக்க போட வேண்டியது தானே". "இல்லைப்பா, அவசரமாக பிடுங்கினாள், என் கிட்ட இருக்கட்டும்", தலை குனிந்து கொண்டே தனது அறைக்கு செல்ல, வீர ராஜு யோசிக்க ஆரம்பித்தார்.

"பத்மா, ஷிவானி மனசுல நிப்பு இருக்கிறார்னு நினைக்கிறேன். ஆனால் நிப்பு மனசில ஷிவானி இருக்காளா, தெரியலை."

"என்னங்க, நீங்க அவரை நேர்ல பார்த்தா பேசுங்க."

'எப்படி நேர்ல பார்க்கிறது'யோசனையில் ஆழ்ந்து போனார் .இரவு தனது மொபைல் போன் ரிங் சத்தம் கேட்க, யாரை இருக்கும் என்று எடுத்தார்.


"சார்"
.........."சொல்லுங்க சார்."
.........."ஓகே சார்"
.........."இப்போவே கிளம்பிறேன். காலைல ஆபீஸ்ல ரிப்போர்ட் பண்ணுறேன்.

"
.........."குட் நைட் சார்."

போனை வைக்க, அருகில் இருந்த பத்மாவதி "என்னங்க, யார் இந்த நேரத்தில".

"டிஜிபி தினேஷ் ரெட்டி கூப்பிட்டு இருக்கார். அவசர கூட்டம் இருக்காம். ஹைதராபாத் உடனே கிளம்பி வர சொன்னார். நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நான் தலைமை அலுவலகத்தில் இருக்கனும். ஏதோ ஒரு சீரியஸ் ஆன விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா அவரே போனில கூப்பிட மாற்றார். அது மட்டும் இல்லை வேற யாருக்கும் சொல்ல வேண்டாம்னு கண்டிப்பா சொல்லி இருக்கார்."

கடிகாரத்தை பார்க்க, மணி ஒன்பது. உடனே கான்ஸ்டபிளிடம் போன் செய்து டிக்கெட் எடுக்க சொன்னார்.

"பத்மா2-3 நாள் ஆகும்னு நினைக்கிறேன். டிரஸ் எடுத்து வை. சொல்லி விட்டு முகம் கழுவி வந்து சாப்பிட உட்கார்ந்தார்."

ஷிவானியை அழைக்க, பசிக்கவில்லை என்று சொல்லி விட்டதால், பத்மா வீர ராஜுவுக்கு தோசை இட்டு கொடுக்க, சாப்பிட்டு விட்டு,ஷிவானியிடம், "அம்மா நான் அவசர வேலையா ஹைதராபாத் போக வேண்டி இருக்கு.2-3 நாளில் வந்துடுவேன்", என்று சொல்ல,அப்பாவின் போலிஸ் வேலை பற்றி அவளுக்கு நன்றாக தெரியும் ஆதலால், 'சரி'யென்று தலை அசைத்தாள்.

கான்ஸ்டபிள் இரவு ட்ரெயினில் எமர்ஜென்சி கோட்டாவில் டிக்கெட் எடுத்து வர, நரசபூர் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஹைதராபாத் பயணமானார்.

காலை ஐந்து மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தடைய, ஹோட்டல் சென்று குளித்து கிளம்பி எட்டு மணிக்கு சைபாபாத் ஆந்திரா போலிஸ் தலைமை அலுவலகம் சென்று டிஜிபிக்காக காத்து கொண்டு இருந்தார்.

அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்த நபரை பார்த்து அசந்து போனார். "அண்ணாமலை சார் நீங்களா."


அண்ணாமலை வீர ராஜுவை பார்த்த மகிழ்ச்சியில், கண்கள் கலங்க, "எப்படி இருக்கீங்க வீர ராஜு பார்த்து மூணு வருஷம் ஆச்சு."

"சார் நீங்க அந்த குண்டு வெடிப்பில, ...." வார்த்தைகள் வரவில்லை வீர ராஜுவுக்கு.

"உண்மைதான், நான் கண்ணி வெடில மாட்டி கொண்டு எனது வலது கால் துண்டிக்கப்பட்டது. இனிமே என்னால வழக்கமான வேலை செய்ய முடியாதுன்னு டிஜிபி கிட்ட பேசி கண்ட்ரோல் ரூம்ல வேலைல இருக்கேன்"

"ஏன் என்னை கூப்பிடலை."

"டி ஜி பி தான் நான் யாரையும் தொடர்பு கொள்ள கூடாதுன்னு சொல்லிட்டாரு. என்னை அந்த PWG இயக்கம் பற்றி தகவல்களை ரகசியமா சேகரிக்க சொன்னார்."

"அப்படியா, ஆமா ஒரு சந்தேகம். நிப்புவை பார்த்திங்களா."

"நிப்பு யு எஸ்ல இருக்கான்னு டிஜிபி சொல்லி இருந்தாரே."

"இல்லை அவர் இப்போ இந்தியால தான் இருக்கார். சில நாட்களுக்கு முன்னால சென்னைல இருந்துருக்கார்."

'அப்படியா', ஆச்சர்யத்தோடு கேட்ட அண்ணாமலையின் செயற்கை காலை பார்த்து பெருமூச்சு விட்டார் வீர ராஜு.

"அப்படின்னா, டிஜிபி கிட்ட நிரஞ்சன் பத்தி தகவல் கட்டாயம் உண்டு" என்று சந்தோசத்தோடு அண்ணாமலை கூற, அதற்குள் டிஜிபி அழைப்பதாக இருவருக்கும் அழைப்பு வந்தது.

உள்ளே நுழைந்த இருவரும் சல்யூட் அடிக்க, பதில் சல்யூட் அடித்து விட்டு எதிரே இருந்த சேரில் இருவரையும் அமர சொன்னார் டிஜிபி தினேஷ் ரெட்டி.

"இந்தஅவசரமான அழைப்பை நீங்கஎதிர்பார்க்கலை இல்லையா?

"ஆமா சார். என்ன விஷயம்" வீர ராஜு கேட்க, "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு லைட் ஆப் செய்து, தனது அருகில் இருந்த ப்ரொஜெக்டர் ஆன் செய்தார்.


ப்ரொஜெக்டரில் நிறைய போட்டோக்கள் காட்டப்பட, "இது தான் கடந்த மூணு வருஷமா PWG இயக்கத்தோட நடவடிக்கைகள். இவங்களோட பெரிய திட்டம் அடுத்த வாரம் அசம்பிலியை தற்கொலை படையை வைத்து தாக்குதல் நடத்துறதுதான்.இது எனக்கு கிடைத்த நம்பகமான தகவல். 

அது மட்டும் இல்லை, கேஷவ் ராவ் சென்னைல இருந்து இப்போ வாரங்கல் காட்டுக்குள திரும்ப பதிங்கிட்டான்னு தகவல். இதை சமாளிக்க இருநூறு பேர் கொண்ட பெரிய போலிஸ் படை தயாரா இருக்கு, உங்க ரெண்டு பேருக்கும் மூணு ஆண்டுகளுக்கு முன்னால நடந்த தாக்குதல்ல பங்கு பெற்ற அனுபவமும் இருக்கு."

"அது மட்டும் இல்லை, முப்பதுக்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகளை கொலை செஞ்சுட்டு பெருமையா பேசிட்டு திரியுறாங்க. அந்த கூட்டதில யாரும் உயிரோட இருக்க கூடாது." டிஜிபி முகம் இறுகியது, "இந்த திட்டத்துக்கு Operation Nippu 2 பெயர் வைத்து இருக்கேன். அந்த தாக்குதலை முன்னின்று நடத்த போறவர்" என்று சொல்லி விட்டு திரும்ப லைட் ஆன் செய்ய, கண்ணை கசக்கி கொண்டு யார் என்று பார்த்த அண்ணாமலை வாயடைத்து போனான்.

வீர ராஜு முகத்தில் சந்தோஷம். "நிப்பு நீங்களா?"மூன்று ஆண்டுகளுக்கு பின் பார்க்கும் நிரஞ்சனின் முகத்தில் பல மாற்றங்கள். முகத்தில் கருமை குறைந்து செம்மை ஏறி இருக்க, புதியதாக அடர்ந்த மீசை. 

இருவரும் கை குலுக்க, அண்ணாமலை ஓடி வந்து கட்டி கொண்டான்.

"டேய், நீ இன்னும் உயிரோட இருக்கியா? ஏன்டா என்னை கூப்பிடவே இல்லை.

"வீர ராஜுவும் ஆமோதித்தார். "சார், என்னை கூட நீங்க கூப்பிடவே இல்லை".

இருவர் முகத்திலும் தெரிந்த வருத்தத்தை கண்ட நிரஞ்சன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, டிஜிபி உதவிக்கு வந்தார்.

"நிரஞ்சன் மேல தப்பு இல்லை. நான்தான் யாரையும் தொடர்பு கொள்ள கூடாதுன்னு சொன்னேன். நிரஞ்சன் உயிரோட இருக்கும் விஷயம் தெரிஞ்சா PWG இயக்கதில இருக்கிறவங்க உஷார் ஆய்டுவாங்க."

அவர் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்று உணர்ந்த வீர ராஜு, அண்ணாமலை இருவரும்நிரஞ்சனை பார்த்து புன்னகை செய்ய, அவன் முகத்தில் நிம்மதி.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் தெளிவாக வகுக்கப்பட, இந்த தடவை Operation Nippu 2 வின்தாரக மந்திரம் 'செய் அல்லது செத்து மடி' (do or die) என்பதுதான் என்று நிரஞ்சன் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.

மதியம் ஒரு மணி அளவில் மீட்டிங் முடிய, அண்ணாமலையிடம் பேசி கொண்டு இருந்த நிரஞ்சன், வீர ராஜு டிஜிபியிடம் பேசி விட்டு அண்ணாமலையிடம் டிஜிபி அழைப்பதாக சொல்ல, அண்ணாமலை உள்ளே சென்றான்.


நிரஞ்சன் வீர ராஜுவிடம் "என்னை பார்த்தது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்ததா?" என்று கேட்க

"அதிர்ச்சியா இல்லை. ஆச்சர்யமா இருக்கு. நீங்க சென்னைல வந்து இருக்கீங்க, என்னை கூப்பிடனும்னு தோணலை" என்று வேதனையோடு தெருவிக்க 

நிரஞ்சன் தர்மசங்கடமாக உணர்ந்தான். 

"ஆமா நான் சென்னை வந்து போனது உங்களுக்கு எப்படி தெரியும்."

"என்னோட பொண்ணு சொன்னா? நீங்க வேலை பார்த்த யுனிவர்சிட்டில தான் அவளும் படிச்சா"

"ஓ, யாரு அது"

"ஷிவானி"

"அப்படியா", நம்ப முடியாமல் கேட்ட நிரஞ்சன், "இப்போதான் புரியுது உங்க பெண்ணை பார்க்கும் போது அப்படியே உங்களை பார்த்த ஞாபகம். என்னை கண்டாலே உங்க பொண்ணுக்கு பிடிக்காதே." 

சிரித்து கொண்டேதொடர்ந்தான்."அது மட்டும் இல்லை என்னோட விஷயத்ல உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு".

"என்ன" என்று கேள்வி குறியோடு வீர ராஜு புருவத்தை உயர்த்த, 

"நீங்க யாரை பார்த்தாலும் சந்தேகப்படுவீங்க, என்னை தவிர. உங்க பொண்ணு யாரை பார்த்தாலும் நம்பிடுவாங்க, என்னை தவிர." உரக்க சிரித்தான் நிரஞ்சன்.

"சாரி சார், உங்களை தப்பா நினைச்சுட்டா. இப்போ அதை நினைச்சு வருத்தபட்டா. அது மட்டும் இல்லை. உங்களை பத்தி எல்லா விஷயமும் சொல்லிட்டேன்." தயக்கத்தோடு, "சார், நான் ஒண்ணு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டேங்கல்ல".

"சொல்லுங்க வீர ராஜு."

"அவளோட நடவடிக்கைகளை பார்த்தால் உங்க மேல நிறைய மதிப்பு, மரியாதை இருக்கிற மாதிரி தெரியுது. உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு வருத்தப்பட்டு சரியா கூட சாப்பிடாம இருக்கா. நீங்க ஒரு தடவை எங்களோட வீட்டுக்கு வந்தா என் மனைவி, ஷிவானி ரெண்டு பேரும் சந்தோசபடுவாங்க.உங்களை பத்தி என்னோட மனைவி கிட்ட நான் நிறைய சொல்லி இருக்கேன்.கட்டாயம் நீங்க வரணும். please"

ஒரு நொடி யோசித்த நிரஞ்சன், "கட்டாயம் வரேன். உங்க கூடவே வரேன். ஆனால் இப்போதைக்கு நான் விஜயவாடா வர்ற விஷயம் தெரிய வேண்டாம். ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்."


மார்ச் 20, 2012

இடம்: அனுவின் வீடு

அனுவிடம் பேசி கொண்டு இருந்தாள் ஷிவானி.

"என்னடி அனு, அப்பா ஹைதராபாத் போய் 2 நாள் ஆச்சு. ஒரு தகவலையும் காணோம். இன்னைக்கு காலைல அம்மா கிட்ட பேசினாரு.ஒரு வழியா காலை ட்ரெயின்ல கிளம்பிவராறாம். எதுக்கு போனாரு என்ன வேலை. ஒண்ணும் தெரிய மாட்டேங்குது."

"நீ எதுக்கு தேவை இல்லாமல் கவலைபடுற. ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும். போலிஸ் வேலைனா அப்படிதான், எப்போ கூப்பிடுவாங்கன்னு சொல்ல முடியாது. உனக்கு தெரியாதா."

"தெரியும்டி. ஆனாலும் மனசு கேக்கலை. அந்த போனை கொடுடி."

அனுவின் செல்போன் எடுத்து திரும்ப நிரஞ்சன் நம்பரை ட்ரை செய்ய, சுவிட்ச்டு ஆப் என்று பதில் வந்தது. சோர்ந்து போனாள்.



"என்னடி, ஒரு நூறு தடவையாவது முயற்சி பண்ணி இருப்பியா. கிடைக்கலைனா விடவேண்டியது தானே."

"சரிடி, அப்பா வரும் நேரம் ஆச்சு. நான் வீட்டுக்கு கிளம்புறேன்."

"சாப்பிட்டு விட்டு போ.இங்கே வரும்போதே மதியம் சாப்பிட்டு விட்டு போறேன்னு என் கிட்ட சொல்லி இருந்தியே மறந்து போச்சா?"

'சரி' என்று தலை ஆட்டி விட்டு, அனுவுடன் பேருக்கு சாப்பிட்டு விட்டு, வீடு கிளம்பியபோது மணி இரண்டுக்கு மேல்.தனது பிங்க் கலர் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு விரட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீடு வாசலில் இருந்தாள்.

"அம்மா, அம்மா" அழைத்து கொண்டே உள்ளே வர பதில் இல்லை."இந்த அம்மா எங்கே போனா? சரி வீட்டு கதவை பூட்டி வைப்போம்."உள்ளே பூட்டி விட்டு தனது அறைக்கு சென்று, கதவை பூட்டி கொண்டு கண்ணாடி முன்னால் உட்கார்ந்தாள்.



No comments:

Post a Comment