Tuesday, October 27, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 6

2003 ஏப்ரல் மாதம்

நிரஞ்சன் சிவில் சர்வீஸ் எக்ஸாம் பைனல் ரவுண்டு இன்டர்வியுக்காக காத்து கொண்டு இருந்த இடம் டெல்லி, யு பி எஸ் சி நிறுவனத்தின் இரண்டாவது மாடி.


அவனுக்கு அருகில் இருந்தவனுடன் பேச தொடங்கினான்.


"டேய் அண்ணாமலை. வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சுடா. இன்னும் நம்மளை கூப்பிடலை. மணி மதியம் ஒரு மணி ஆக போகுது.இப்போ சாப்பிட போனால், திடீரென்று கூப்பிட்டால் என்ன செய்வது."

அருகில் இருந்த அண்ணாமலை, "டேய் நிரஞ்சா. என் கிட்ட கொஞ்சம் பிஸ்கட் இருக்கு, இப்போதைக்கு சாப்பிட்டுவை. கூப்பிடும்போது பார்த்து கொள்ளலாம்."



அடுத்த பத்தாவது நிமிடத்தில் அண்ணாமலை உள்ளே அழைக்கபட, எப்படியும் அடுத்த அறிவிப்பு தனக்கு தான் என்று ஆர்வத்தோடு உட்கார்ந்து இருந்தான். 


ப்ரிலிமினரி எழுதும்போதும், பைனல் எழுதும்போதும் இல்லாத ஒரு பதட்டம் அவனை சூழ்ந்து கொண்டது. அப்பா சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்தான்.

"நிரு, நீ உன்னோட கடமையை முழு மனதோட செய். பலனை எதிர் பாராதே. தேவை இல்லாமல் டென்சன் ஆகாதே. உனக்கு சிவில் சர்விஸ் பாஸ் பண்ணனும்னு விதி இருந்தா அது நடந்தே தீரும். அதற்க்காக உன்னோட முயற்சிகளை தளர விடாதே.நம்ம குடும்பத்தில் நீ ஒரு நேர்மையான, நாட்டு மக்களுக்கு உதவி செய்கிற போலிஸ் அதிகாரியா வந்தா எனக்கு பெருமை தாண்டா. என்னால கார்கில் போர்ல வலது கையை இழந்துட்டேன். ஆனால் என்னோட மகனா நீ நாட்டுக்கு நீண்ட நாள் சேவை செய்யனும்கிறது தான் என்னோட ஆசை. செய்வியா.?"

"கட்டாயம் அப்பா" மனதிற்குள் முணுமுணுத்தான். 

'என்னவோ தெரியவில்லை. அப்பாவை மனதில் நினைத்து கொண்டால், எந்த சோர்வும் அண்டுவதில்லை.'

சரியாக பதினைந்து நிமிடம் கழித்து அண்ணாமலை திரும்ப வர, தொடர்ந்து உள்ளே வர சொல்லி அழைப்பு வந்தது. 

அண்ணாமலை பெஸ்ட் ஆப் லக் சொல்லி அனுப்பி வைக்க புன்னை நல்லூர் மாரியம்மன் மேல் பாரத்தை போட்டு விட்டு இன்டர்வியு நடக்கும் இடத்துக்கு வந்தான்.

கதவை தட்டி "மே ஐ கம் இன் சார்" என்று கேட்க உள்ளே வர சொல்லி அழைப்பு வந்தது.


இன்டர்வியு போர்டில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இருக்க, முதலில் பெண்களாய் பார்த்து "குட் ஆப்டர் நூன் மேடம் அண்ட் சார்ஸ்" என்று சொல்ல அந்த பேனல் தலைவரான காப்டன் சுர்ஜீத் சிங் பேச ஆரம்பித்தார்.


"நிரஞ்சன் உங்களை பத்தி சொல்லுங்க.?"

"சார் என்னோட பெயர் நிரஞ்சன் ராகவ், பிறந்தது பெப்ரவரி மாதம் 14, 1981


அப்பா கார்கில் போர்ல கலந்துகிட்டு கைல இழந்ததால இப்போ வீட்டில இருக்கார். அம்மா இல்லத்தரசி. அக்கா டாக்டர் படிப்பு முடிச்சு இப்போ தஞ்சாவூர் அரசு மருத்துவமனைல டாக்டரா இருக்கா. 

நான் படிச்சது பி ஏ எகனாமிக்ஸ், மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர். மேல் படிப்பு, எம் ஏ எகனாமிக்ஸ், டெல்லி ஸ்கூல் ஒப் எகனாமிக்ஸ். இப்போ படித்து கொண்டு இருப்பது ரெண்டாவது வருஷம். அடுத்த மாசம் பைனல் செமெஸ்டர் எக்ஸாம் இருக்கு."

"சரி நிரஞ்சன். நீங்க பிறந்த தேதி என்ன விசேஷம் தெரியுமா?"சிரித்து கொண்டே பதில் சொன்னான் நிரஞ்சன். 

"சார், அது காதலர் தினம்ன்னு அழைக்கபடுது. அது மட்டும் இல்லை கோவைல குண்டு வெடிப்பு நடந்த நாள் அதுதான்."

"வெரி குட்"
அடுத்த நபர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

"உங்க சொந்த ஊர் தஞ்சாவூரா.?"

"ஆமா சார்."

"சரி, உங்க ஊரோட பெருமை என்ன."

"தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கபடுவது தஞ்சாவூர். இது பண்டைய சோழ மன்னர்களின் தலை நகரம். ராஜ ராஜன் கட்டிய பெரிய கோவில். உலக அளவில் புகழ் பெற்றது. நிறைய தமிழ் எழுத்தாளர்கள் - கல்கி, தி.ஜானகி ராமன் போன்றவர்கள் பிறந்த பூமி.அது மட்டும் இல்லை அரசியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு."


"பரவாயில்லை. உங்க ஊர் பெருமையை சொல்லும்போது முகம் ஜொலிக்குது" என்றார் மூன்றாவது ஆபீசர்.

அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்"நீங்க சிவில் சர்விஸ் சேருவதற்கான காரணம் என்ன?"

ஒரு நொடி யோசித்த நிரஞ்சன் பதில் பேச தொடங்கினான்.
"சார், என்னோட அப்பா ராணுவத்தில இருந்தனால பல இடங்கள் சுற்றி பார்த்த அனுபவம் இருக்கு. நான் ஸ்கூல் படிச்சது சைனிக் ஸ்கூல் என்று அழைக்கபடுகிற ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான ஸ்கூல்ல. அப்பா காஷ்மீர் ட்ரான்ஸ்பர் ஆனதால சொந்த ஊரான தஞ்சாவூர் வந்துட்டோம். அப்பா கூடவே இருந்ததால எனக்கு ராணுவத்தில சேரணும்னு ஆர்வம. 

சின்ன வயசில இருந்து என்னோட உடம்பும் மனசும் அதுக்கு ஏத்த மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டது. அப்பா கார்கில் போரில் ஈடுபட்டு தன்னோட வலது கையை இழந்து விட்டார். ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் தான் வேலை செய்ய முடியும். ஆனால் காவல் துறைல நீண்ட காலம் வேலை செய்யலாம். அது மட்டும் இல்லை, இப்போ நாட்டுக்கு நேர்மையான அதிகாரிகள் தேவை அப்படின்னு சொல்லி என்னை சிவில் சர்விஸ் படிக்க சொன்னார். அவர் சொன்ன காரணங்கள் எல்லாம் சரியாக இருந்ததால், எனக்கு சிவில் சர்விஸ் படிக்க ஆர்வம் வந்து விட்டது. 

டெல்லியில் அதற்கான வாய்ப்பு அதிகம். அதனால தான் இங்கே எம் ஏ சேர்ந்தேன். மொத்ததில இது என்னோட வாழ்கையின் லட்சியம்."

அடுத்து அமர்ந்து இருந்த அந்த பெண் அதிகாரி கேட்டார்

"சரி மிஸ்டர் நிரஞ்சன். ஒரு வேளை இந்த வருஷம் நீங்க செலக்ட்ஆகலைனா.?"

ஒரு நொடி மௌனம்"மேடம் நான் திரும்ப வருவேன். நான் சிவில் சர்விஸ்ல தேர்வாகுற வரைக்கும் திரும்ப வருவேன். விட மாட்டேன்."

அவன் உறுதியை கண்டு இன்டர்வியு போர்டு சேர்மன் சந்தோசமாக ஆமோதித்து, "ஐ லைக் திஸ் பாய்" என்று சொல்ல, எல்லோரும் கைதட்டினர்.

அடுத்த அரை மணி நேரத்தில் எகனாமிக்ஸ், காமர்ஸ் பாடங்களில் பல கேள்விகள், பொது அறிவு, நடப்பு செய்திகள் என்று கேள்விகள் அருவியாக கொட்ட அனைத்துக்கும் பதில் சொல்லி பாராட்டு பெற்றான்.

கடைசியில் அவனுக்கு போட்ட மதிப்பெண்கள் 245/300




வெளியே வந்த நிரஞ்சனை பார்த்து அண்ணாமலை "என்னடா, உனக்கு மட்டும் ஐம்பது நிமிஷம் ஓடி போச்சு. நல்ல மார்க் போட்டாங்களா?" என்று கேட்க, "ஒண்ணும் சொல்லலைடா. ஆனா அவங்களோட உதட்டு அசைவை வைத்து மார்க்கை கண்டுபிடிச்சுட்டேன்"என்று மார்க்கை சொல்ல, அதிர்ச்சி ஆனான் அண்ணாமலை. 

"டேய் நிரஞ்சா, இது வரைக்கும் யாரும் இந்த அளவுக்கு வாங்கின மாதிரி கேள்விபடலைடா. அருமை மச்சான்" என்று கட்டி பிடித்து கொள்ள, "உன்னோட இன்டர்வியு என்ன ஆச்சு, சுமார் தாண்டா. எப்படியும் ஒரு நூறு ரேங்க்குள்ள வந்துடுவேன்னு நினைக்கிறேன்".

எம் ஏ படிக்க வந்த அண்ணாமலைக்கு ஐ பி எஸ் ஆசையை தூண்டியது நிரஞ்சன் தான்.

அப்பாவிடம் போனில் பேச, அப்பா ராமானுஜத்துக்கு சந்தோஷம். "நிரு நீ முழு மனசோட நல்லா பண்ணி இருக்க. முடிவை பற்றி கவலைபடாதே"என்று சொல்ல, "அப்பா, நீங்க சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. இப்போ நான் என்னோட கடைசி செமஸ்டர் பரீட்சைக்கு படிக்க போறேன்."

மே மாதம் இரண்டாவது வாரத்தில் ரிசல்ட் வர, நிரஞ்சன் அகில இந்திய அளவில் ஒன்பதாவது ரேங்க் எடுத்து இருக்க அவன் நண்பர்கள் எல்லோரும் ஐ ஏ எஸ் சேர சொல்ல, பிடிவாதமாக ஐ பி எஸ் சேர்ந்தான். நண்பன் அண்ணாமலை எண்பத்து இரண்டாவது ரேங்க் எடுக்க,இருவரும் ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் நிறுவனத்தில் சேர்ந்தனர்.

45 வாரங்கள் நடந்த அந்த கடுமையான பயிற்சி அவர்களுக்கு உரமேற்றியது. அந்த ட்ரைனிங் முடியும் சமயத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பெற சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திர மாநில டி ஜி பி சுகுமாரா, நிரஞ்சன் திறமை கண்டு அசந்து போனார். 

'பயிற்சி முடிந்து விட்டதால் எங்கே போக விருப்பம்' என்று கேட்க, 'தமிழ்நாடு போக விருப்பம் இருந்தாலும், சவாலான வேலை கிடைத்தால் ஆந்திர மாநில போலீசில் சேருவேன்' என்று சொல்ல, அவனை பார்த்து பூரித்து போய், "நான் உனக்கு சவாலான வேலை தரேன். சேருவியா" என்று கேட்க, அவரின் அன்பில் கட்டுப்பட்டு தலை அசைத்தான் நிரஞ்சன்.

சுகுமாரா ஐ ஜி யை அழைத்து வாரங்கல் நகர டி எஸ் பி யாக நியமிக்க சொன்னார்.அண்ணாமலைக்கு நிரஞ்சனை விட்டு போக மனம் இல்லாததால் அவனும் வாரங்கல்லில் ஏ எஸ் பி யாக சேர்ந்து விட்டான். 

சேர்ந்து ஒரு வருடம் கழித்து அக்காவின் திருமணம் முடிந்து அவள் யு எஸ் சென்று விட அம்மா அப்பாவை அழைத்து கொண்டு வாரங்கல் வந்து விட்டான் நிரஞ்சன்.

ஆரம்ப காலத்தில் இன்வெஸ்டிகேசன் டிபார்ட்மென்ட்டில் இருந்த நிரஞ்சன் ஒரு ஆண்டு முடிந்தவுடன் சட்டம் மற்றும் ஒழுங்கு துறைக்கு மாற்றபட்டான்.


வாரங்கல், ஹனுமகொன்டா இரட்டை நகரங்களில் இருந்த பிரச்சனைகளில் பெரிய பிரச்சனை, சட்டஒழுங்கு இல்லாமல் இருந்ததுதான்.படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ராக்கிங் மற்றும் ஈவ் டீசிங் அதிகம் இருந்ததால், தினமும் இரண்டு புகார்கலாவது வருவது வழக்கம்.

2005 நெல்லூர் நகரத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த வீர ராஜு ட்ரான்ஸ் பர் ஆகி வந்தார். அவரது பெண் அப்போது பத்தாவது படித்து வந்ததால், படிப்பு பாதிக்க வேண்டாம் என்று தனது மனைவி, பெண்ணை நெல்லூரில்விட்டு விட்டு வந்தார்.

அவரின் ஆரம்ப கால கட்டத்தில் சென்னையில் ஐந்து ஆண்டு வேலை பார்த்து வந்ததால், தமிழ் நன்றாக பேச தெரியும். 

அவர் நிரஞ்சன் கீழே இருந்த போலிஸ் ஸ்டேசனில் வேலைக்கு சேர அவர் வந்தது மொழி புரியாத நிரஞ்சனுக்கு உதவியாக இருந்தது.

ஒரு நாள் காலை வந்த புகார் மனுவை படித்த நிரஞ்சன், ராகிங் பிரச்சனையை எப்படி தடுப்பது என்று யோசித்து குழம்பி போனான். ஒரு வழியாத முடிவுக்கு வந்து, வாரங்கல் நகரின் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரி செல்லும் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்க அதில் ஏறினான். 

யுனிபார்ம் இல்லாமல் சாதாரண உடையில் அவன் இருக்க, அவனை தொடர்ந்து வீர ராஜுவும் பஸ்ஸில் ஏறினார்.தனக்கு முன்னே இருந்த அந்த வாலிபன், அவனுக்கு முன்னால் இருந்த பெண்ணின் தோளில் கை வைத்து சில்மிஷம் செய்ய, அந்த பெண் பயந்து முன்னால் சென்றாள். இனிமேலும் முன்னால் செல்ல முடியாது என்ற நிலை வந்து பாதியிலே நிற்க, பின்னால் வந்த அந்த வாலிபனுக்கு கொண்டாட்டமாக போனது.

பஸ் ப்ரேக் போதும்போது கம்பியை பிடிப்பது போல் அந்த பெண்ணின் கையை பிடிக்க, அவளோ அழுவது போல் ஆனாள். இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த நிரஞ்சன் மெதுவாக நகர்ந்து அந்த வாலிபன் பக்கத்தில் வந்தான். 

இப்போது எதிர்ப்பு இல்லாததால் அந்த வாலிபன் துணிவோடு அந்த பெண்ணின் இடுப்பை சுற்றி கை வைக்க, அவன் கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்தது. பொறி கலங்கி போன அவன் 'யார் அடித்தது' என்று திரும்பி பார்க்க, நிரஞ்சன்கண்கள் சிவக்க தனது இடது கையால் அந்த வாலிபனின் சட்டை காலரை பிடிக்க, அவனுக்கு கோவம் வந்தது.

"யோவ் யாருயா நீ. எதுக்கு என்னை அடிச்சே.""எதுக்குடா அந்த பெண் மேல கையை வச்சே" உடைந்த தெலுங்கில் நிரஞ்சன் கேட்க,அவனுக்கு புரிந்து போனது. "யோவ், அந்த பொண்ணே கேக்கலை. ரசிசுகிட்டு இருந்தா. உனக்கு என்ன பிரச்சனை.?"


அதற்குள் வீர ராஜு டிரைவரிடம் போய் போலிஸ் ஸ்டேஷன் திருப்ப சொல்ல, பஸ் திரும்பி விரைந்தது.அந்த பெண்ணை நிரஞ்சன் பார்க்க, அவள் கண்களில் தண்ணீர் தளும்ப கை கூப்பினாள்.

"ஏன்டா, ராஸ்கல். பொண்ணுகளை தெய்வமா மதிக்கிற நம்ம நாட்டில உன்னை மாதிரி கழிசடையும் பிறந்து இருக்கு."

மற்ற பயணிகள் விலகி நிற்க, அவனை அடித்து நொறுக்க ஆரம்பித்தான். "உன்னோட அம்மாகிட்ட, அக்காகிட்ட இது மாதிரி பண்ண வேண்டியது தானே."

அதற்குள் போலிஸ் ஸ்டேஷன் வந்து சேர, பஸ்ஸில் இருந்து அவனை கீழே நெட்டி தள்ளினான். முகத்தில் அடிபட்டு, மூக்குடைந்து ரெத்தம் பொங்க அவனை தள்ளி கொண்டு வீர ராஜு செல்ல, பஸ்ஸில் இருந்து இறங்கிய நிரஞ்சன், 'இனிமே யாராவது பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்தா இது தான் கதி' என்று விரலசைத்து எச்சரிக்க, பயணிகள் பீதியில் உறைய, அவர்களில் ஒருவர்,"இந்த ஆளுதான் புது டிஎஸ்பி நிரஞ்சன் ராகவ்" என்று சொல்ல, எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம்.

உள்ளே ஜெயிலில் உட்கார வைத்து அவனை அடித்து நொறுக்க, "நீ யாரு. என் மேல தேவை இல்லாம கை வச்சே. எனக்கு மினிஸ்டர் ராமராவ் மாமா முறை வேணும். சொன்னா உன்னை ட்ரான்ஸ்பர்ல தூக்கி அடிப்பார்."கோபத்தோடு பெல்ட்டை கழட்டினான். 

"டேய், உன்னோட மாமாவுக்கு அஞ்சு வருஷம்தான் பதவி. ஆனா என்ன மாதிரி அரசாங்க ஊழியர்களுக்கு ஐம்பத்தெட்டு வயசு வரைக்கும் பதவி இருக்கும்" பேசி கொண்டே அவனை புரட்டி எடுத்து விட்டு, "இங்கே பாரு இனிமே உன்னை இந்த மாதிரி பஸ்ல பொண்ணுகளை உரசி பார்த்தேன். அங்கேயே தோலைஉரிச்சிடுவேன். ஜாக்கிரதை"

அடி வாங்கிய அந்த வாலிபன், நொண்டி நொண்டி போய் விட, வீர ராஜு, நிரஞ்சன் கையை பிடித்து பாராட்டினார்.

"சார், உங்களை மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி கிட்ட வேலை பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு.""வீர ராஜு, நீங்க உங்க குடும்பத்தை எப்போ கூட்டிட்டு வர போறீங்க.பாவம் நீங்க வெளியே சாப்பிட்டு வயிற்றை கெடுத்து கொள்ள கூடாது."

சிரித்து கொண்டே வீர ராஜு, "சார் இந்த வருஷம் பொண்ணோட பத்தாவது படிப்பு. முடிஞ்ச உடனே வீடு மாத்தலாம்னு நினைக்கிறேன். பார்க்கலாம்."

போலிஸ் ஸ்டேஷனில் தொலைபேசி 'டிரிங் டிரிங்' என்று ஒலிக்க, வீர ராஜு போனை எடுத்தார்.


"எஸ் சார், சொல்லுங்க சார், இங்கே தான் இருக்கார்."

"யார், வீர ராஜு"

போன் ரிஸிவரை கையால் மூடி கொண்டு "சார், IG. உங்க கிட்ட பேசணுமாம்."

போனை "வாங்கி சொல்லுங்க சார்"

"என்ன நிரஞ்சன். மினிஸ்டருக்கு தெரிஞ்ச ஆளை போட்டு புரட்டி எடுத்துட்டிங்க. என்ன விஷயம்."

"சார், பஸ்ல போற பொண்ணு மேல கை வச்சான். அதனால தான்."

"ஓகே, அவன் மேல யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களா."

"இல்லை சார்,"

"அப்புறம் எதுக்கு அவனை அடிச்சிங்க."

"சார், அவனை அடிச்சேன் தவிர, எப் ஐ ஆர் எதுவும் போடலே. அதனால நமக்கு ஒண்ணும் ப்ரோப்லம் கிடையாது."

"ஓகே நிரஞ்சன், அவங்க ரவுடி எலிமன்ட்ஸ்.கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க."

"சரி சார்". போனை வைக்க, அருகில் இருந்த வீரராஜு, "சார் நான் ஒண்ணு கேட்கலாமா?"

"கேளுங்க வீர ராஜு."

"உங்களோட வேலை பார்த்த இந்த மூணு மாசத்தில, இப்படி கோபப்பட்டு நான் இப்போதான் பார்க்கிறேன்"

"பெண்ணை ஒருத்தன் இப்படி தொந்தரவு செய்யும் பொது என்னை அறியாம கோபம் வருது. மத்தபடி எனக்கு சுலபமா கோபம் வராது."

சிரித்து கொண்டே"என்னை ஆபீஸ்ல ட்ராப் பண்ணுங்க" என்று சொல்ல, தனது ஜீப்பில் அனுப்பி வைத்தார் வீர ராஜு.


அடுத்த சில மாதங்கள், எங்கு பார்த்தாலும் மக்கள் நிரஞ்சனை பற்றி பேச ஆரம்பித்தனர். ரவுடிகளின் அட்டகாசம் குறைந்து வாரங்கல் நகரம் நிம்மதியை உணர ஆரம்பித்தது. 

இரண்டு ஆண்டுகள் கடந்தன. இப்போது நிரஞ்சனால் தெலுங்கு நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது, ஓரளவுக்கு பேசவும் முடிந்தது.

வீர ராஜுவும் தனது பெண்ணுக்கு ஜூனியர் காலேஜ் முடித்து, காலேஜ் சேர விஜயவாடாவில் இடம் கிடக்க, தனக்கும் விஜயவாடா ட்ரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

நிரஞ்சன் தனது கடுமையான வேலை காரணமாக வீட்டுக்கு வர தினமும் நேரம் நள்ளிரவு ஆகி போனது. அம்மா அவன் உடல் நிலைமை பற்றி கவலைப்பட, "அம்மா இந்த வேலைலதாம்மா, நிறைய பேருக்கு உதவி செய்ற வாய்ப்பு இருக்கு. போலிஸ் வேலையும், டாக்டர் வேலையும் எப்போ நமக்கு அழைப்பு வரும்னு சொல்ல முடியாது.நாம தாம்மா அனுசரிச்சு போகணும்."

ராமானுஜதுக்கு தன் மகனை பற்றி அளவு கடந்த பெருமை. "நிரு, நீ என்னோட மகன்னு நிருபிச்சுட்டடா" என்று பாராட்ட, அம்மாவுக்கு மட்டும் இனம் புரியாத கோவம் வரும்.

"ஏன்டா, உன் வயசு பசங்க எல்லாம், பொண்ணுங்க பின்னாலே திரிய நீ மட்டும் என்னடா இந்த வேலைய கட்டி அழுற" என்று அக்கா போனில் அடிக்கடி கிண்டல் செய்வாள்.

அம்மாவோ "என்னடா நிரு, உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும்டா. அப்பவாது சீக்கிரம் வீட்டுக்கு வர்றியான்னு பார்க்கணும்" என்று கேட்க, நமட்டு சிரிப்புடன் பதில் பேசாமல் போவது நிரஞ்சன் வழக்கம் ஆகி போனது.

வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் சப் இன்ஸ்பெக்டர் வீர ராஜுவிடம் இந்த விஷயத்தை சொல்லி புலம்புவது அம்மா லலிதாவின் வழக்கம்.

"என்ன சார், அம்மா அடிக்கடி கேட்குறாங்க, ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா."

"என்ன வீர ராஜு, நீங்க அம்மா வோட சேர்ந்து காமெடி பன்னுரிங்க. எனக்கு இருவத்தி ஆறு வயசுதான் ஆகுது. இப்போ என்ன அவசரம்.எனக்கு நிறைய சாதிக்கனும்னு ஆசை.கல்யாணம் செய்தா அதெல்லாம் தள்ளி போகும். அது மட்டும் இல்லை, எனக்கு மனசுக்கு பிடிச்ச பெண்ணை இது வரைக்கும் பார்க்கலை. அப்படி ஒரு வேளை சந்தித்தால், பார்க்கலாம்."வாயடைத்து போய் விடுவார் வீர ராஜு.

ஒரு நாள் திடீரென்று டிஜிபி சுகுமாராவின் போன் கால் வர போனை எடுத்து பேசினான் நிரஞ்சன்.

"நிரஞ்சன் நீங்க வேலைக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு.வாரங்கல் நகரம் முழுக்க உங்களை பற்றி தான் பேச்சு. நிறைய ரவுடிகளை அடக்கி இருக்கீங்க. இனிமே உங்ககிட்ட ஒரு பெரிய அசைன்மென்ட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க உங்க பிரெண்ட் அண்ணாமலை கூட உடனே ஹைதராபாத் கிளம்பி வாங்க."

சொன்னபடியே நிரஞ்சன் ஹைதராபாத் கிளம்பி சென்று டிஜிபி யை சந்தித்தான்.

"நிரஞ்சன், உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும். தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா மாநிலத்தில் நக்சலைட் பிரச்சனை பல ஆண்டுகளா வேரோடி இருக்கு. இது வரைக்கும் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை.இப்போ முதல் அமைச்சரா இருக்கிற ஒய் எஸ் ஆர், என் கிட்ட நக்சலைட் இயக்கத்தை வேரோடு அழிக்க சொல்லி இருக்கார். இங்கே நக்சலைட் PWG (Peoples War Group) என்ற பெயரில் செயல் படுகிறார்கள்.

அந்த இயக்கத்தில் முக்கியமான ஆள் கேஷவ் ராவ். அவனுக்கு கீழே ஆயிரத்து ஐநூறு பேர் இருக்காங்க.அவர்களோட முக்கியமான வேலை ஜாமீன்தார்கள், போலிஸ், அரசாங்க அதிகாரிகளை கொல்வது, கடத்தி சென்று பணய கைதிகளாக்கி பணம் கேட்பது,அவர்களின் குழுவை சேர்ந்தவர்களை விடுதலை செய்வது தான்.

அவர்களில் நிறைய பேருக்கு முன்னால இருந்த அளவுக்கு ஆர்வம இல்லை. வெளியே வர தயாரா இருக்காங்க. அவங்களைபொது வாழ்க்கைக்கு திருப்பனும். முடியலைனா அவங்களை கைது செய்யணும். இது தான் நம்ம கடமை.இதுக்கு துடிப்பான ஆள் தேவை.உங்களோட இளமை, யாருக்கும் பயப்படாத தைர்யம், நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு. 

இந்த வேட்டைக்கு ஆபரேஷன் நெருப்பு (Operation Fire) அப்படின்னு பெயர் கொடுத்து இருக்கேன். உங்க நண்பர் அண்ணாமலை உங்களோட பணி ஆற்ற போறார். உங்களுக்கு கீழே இருவது இன்ஸ்பெக்டர், நூற்றுக்கும் மேற்பட்ட கான்ஸ்டபிள்ஸ் வேலை செய்வாங்க.நீங்க எனக்கு நேரடி ரிபோர்டிங் செய்யணும். மாதம் ஒரு முறை நாம நேரடியா சந்திக்கணும்" .என்று சொல்லி விட்டு நிரஞ்சனிடம் கவரை நீட்ட, 

"சார் இது"

"நிரஞ்சன். இது உங்களோட ப்ரோமொசன். புதிய வேலைல ஈடுபடப்போற உங்களை ACPயா ப்ரோமொட் பண்ணி இருக்கேன். உங்க நண்பர் அண்ணாமலை DSPயா இருப்பார்."

"எஸ் சார்" என்று சல்யூட் அடித்த நிரஞ்சன் முகத்தில் பெருமிதம். 

'பல உயர் அதிகாரிகள் இருந்த போதும் யாருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பொறுப்பு தனக்கு கிடைத்து இருக்கிறது
' அவனுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

அடுத்த இரண்டு வருடங்கள் ஆந்திர மாநிலம் அலறியது என்று சொன்னால் மிகை ஆகாது

பிரச்சனை செய்த இருவது நக்சலைட்களை நடந்த பல என்கௌன்டரில் சுட்டு தள்ள, நிரஞ்சன் புகழ் வேகமாக பரவியது.

என்கௌன்ட்டர் பயத்தில் இருந்த நிறைய பேர் சரணடைய, அவர்களுக்கு புனர் வாழ்வு அமைக்கும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் வீரராஜுவை ஈடுபடுத்தினான் நிரஞ்சன்.கொஞ்சம் கொஞ்சமாக PWG வலுவிழக்க ஆரம்பித்தது. 

கேஷவ் ராவ்வின் கோபம் எல்லை மீறியது. அது ஒரு பெரிய விபரீதத்துக்கு அடிகோலியது. 



No comments:

Post a Comment