Friday, October 23, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 1

நாள்: மார்ச் மாதம் முதல் தேதி, 2009இடம்: ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், மேடாரம் தடாவி காட்டு பகுதி.

(தெலுங்கு பேச்சு நமது வாசக நண்பர்களுக்காக தமிழில் கொடுக்கப்பட்டு உள்ளது.)
"டேய் அவனை தேடுங்கடா. அவன் அடிபட்ட சிங்கம்டா. தப்பிக்க விட்டா நமக்கு தான்டா ஆபத்து".

"அண்ணா நீங்க சொல்றது உண்மை அண்ணா."

"டேய் அவனை எங்க கண்டாலும் கண்ட துண்டமா வெட்டி எறிங்கடா."
இருபது பேர் கொண்ட அந்த கூட்டம் ஆவேசத்தோடு தேடி கொண்டு இருந்தது. அவர்கள் கைகளில் நீண்ட கத்தி, அருவாள், கோடரி, உருட்டை கட்டைகள் இருக்க, சிலரின் தோள்களில் இருந்த சாக்கு மூட்டையில் கடப்பா நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.

பெரும்பாலானவர்களின் கால் காயங்களில் ரத்தம் வழிந்தாலும் பொருட்படுத்தாமல் தேடி கொண்டு இருந்தனர். 

அந்த நபர்கள் யார்? அவர்கள் தேடும் அவன் யார்? அவன் இவர்கள் கையில் சிக்குவானா?

பதினைந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் மங்காபெட். கிராம நுழைவாயிலில் இருக்கும் அந்த குடிசை வீட்டில் இரண்டு குரல்கள். 



"சார், நான் சொன்னா கேளுங்க சார். அவங்க வெறி புடிச்சவங்க. உங்களை கண்டா விட மாட்டாங்க. உங்களால இதுக்கு மேல ஓடி ஒழிய முடியாது. இப்பவே மாலை ஆறு மணி ஆச்சு. இன்னைக்கு ராத்திரி மட்டும் இங்கே ஒளிஞ்சு இருந்தா, நாளைக்கு காலைல எப்படியும் இந்த வழியா பத்ராசலம் போற பஸ் இல்லை லாரில உங்களை ஏத்தி விடுவேன். அங்கே இருந்து நீங்க மும்பை போய்டுங்க.
"
பேசிய நபருக்கு ஐம்பது வயது இருக்கும்.அவர் பேசி கொண்டுறிந்த அந்த வாலிபன் முகத்தில் ரத்த காயம். உடல் முழுக்க சிராய்ப்புகள். காலில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. 

"முடியாது வீரராஜு. என்னால இதுக்கு மேல முடியாது. நான் அவங்களை எதுத்து நின்னு ஒரு பத்து பேரையாவது கொன்னுட்டு தான் உயிரை விடுவேன். என் நாட்டுக்காக உயிர் விடுறதில எனக்கு சந்தோஷம் தான்."
வீர ராஜு கண்களில் கண்ணீர். இந்த அளவுக்கு நாட்டு பற்றும, வீரமும் உள்ள ஒரு உயர் அதிகாரி கண் முன்னே காயப்பட்டு இருப்பது அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

"சார், சொன்னா கேளுங்க. அவங்க எல்லாரும் ரொம்ப ஆபத்தானவங்க. இந்த நேரத்தில வீரமா யோசிக்கிறதை விட, விவேகமா யோசிக்கணும். உங்க குடும்பத்தை கூண்டோட அழிச்ச அவங்களுக்கு உங்களை பிடிச்சு கொல்றது அந்த அளவுக்கு கஷ்டம் இல்லை.அது மட்டும் இல்லை அவங்களை நீங்க தண்டிக்க வேண்டாமா. தயவு செஞ்சு இப்போதைக்கு இங்கே இருந்து கிளம்பி போங்க. சந்தர்ப்பம் வரும். அப்போ நீங்க திரும்பி வந்து அவங்களை களை எடுக்கலாம். ப்ளீஸ்."
அந்த முப்பது வயது மதிக்க தக்க இளைஞன், அவரின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து "நீங்க சொல்றது சரியான யோசனை வீர ராஜு. முதல்ல என்னை இவங்க கிட்ட இருந்து காப்பத்திக்கிறேன். இப்போதைக்கு போறேன். ஆனா திரும்ப வருவேன் இந்த காட்டையே கொளுத்தி அந்த அசுரர்களை ஒழிப்பேன்". 

நிலா வெளிச்சத்தில் அவன் செய்த சபதம் வெண்மையாக இருந்த அந்த இடத்தை சிகப்பாக மாற்றி கொண்டு இருந்தது.


ஜனவரி மாதம் 2012

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம். காலை ஆறு மணி. 

விஜயவாடாவில் இருந்து வந்த அந்த வோல்வோ பேருந்து எல்லா பயணிகளையும் இறக்கி விட, ஒவ்வொருவராக இறங்கி வந்து தங்களது பேக் மற்றும் சூட்கேஸ் எடுத்து கொள்ள காத்து இருந்தனர். பேருந்துக்கு பக்கவாட்டில் இருந்த சுமைகள் வைக்கும் பகுதியில் இருந்து ஒவ்வொரு பெட்டியாக டிராவல் ஊழியர் எடுத்து கொடுக்க, பெற்று கொண்ட ஒவ்வொருவரும் இடத்தை காலி செய்ய,கடைசியாக இரு பெண்கள் பேருந்தில் இருந்து இறங்கினர்.

இருவருக்கும் வயது இருபத்தி இரண்டு இருபத்தி மூன்று இருக்கும். ஒரு பெண்ணோ கொஞ்சம் மாநிறம், போட்டு இருந்த உடை வயலெட் கலர் சுடிதார், பார்க்க ஒரு சாயலில் சினிமா நடிகை அஞ்சலி போல் இருப்பாள். அவள் அருகில் லிவி ஜீன்ஸ், டி ஷர்ட்டில் இருந்த பெண்ணுக்கு உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். நல்ல கோதுமை நிறம். காஜல் அகர்வால், சமந்தாவை சரியான அளவில் கலந்தது போல் இருந்தாள். அவளை பார்த்த ஊழியர்களும் பக்கத்தில் இருந்த அனைவரும் கொஞ்ச நேரம் கண்ணிமைக்க மறந்தனர்.

இருவரின் (தெலுங்கு) பேச்சில் நாம் கலந்து கொள்வோம்.

"என்னடி அனு, இப்பவே மணி ஆறு ஆச்சு. எப்படியும் யுனிவர்சிட்டி போக ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். ஏதாவது டீ சாப்பிட்டு விட்டு போகலாம்" என்று ஜீன்ஸில் இருந்த அந்த பெண் சொல்ல, அவள் தோழி பேச தொடங்கினாள்.

"ஓகேடி ஷிவானி,அங்கே இருக்கிற ஆவின் பூத்ல குடிச்சுட்டு போகலாம்.அப்பாடா, ஒரு வழியா நம்ம படிப்பு இந்த செமெஸ்டரோட முடிஞ்சுடும்.ஆமா படிப்பு முடிஞ்ச பின்னே என்ன செய்ய போறே.?"

"அப்பா அப்பவே சொல்லிட்டார். படிப்பு முடிஞ்சா கல்யாணம் தான்னு. ஏதாவது வேலைக்கு போகணும். சென்னை வரலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்."

"சென்னைல எப்படி வேலை பார்ப்ப. உனக்கு தமிழ் சரியா பேச தெரியாதே."

"சும்மா என்னை ஒட்டாதே. எனக்கு தமிழ் நல்லா புரியும். ஓரளவு பேச தெரியும்கிறதாலே சமாளிக்கலாம். அது மட்டும் இல்லை என்னோட சித்தி வீடு அண்ணா நகர்ல இருக்கு. அங்கே தங்கி 2 வருஷம் வேலை பார்த்துட்டு அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்னு அப்பாகிட்ட சொல்ல போறேன்.ஆமா உன்னோட பிளான் என்ன?"

"உனக்கு தெரியாதா. எங்க அப்பாவோட பிசினஸ் பார்ட்னர் பையனை தான் அல்லயன்ஸ் பார்த்து இருக்காங்க. எப்படியும் ஒரு வருஷத்தில முடிசுடுவாங்கன்னு நினைக்கிறேன்.சரிடி, நம்ம ரெண்டு பேர் வீட்டிலையும் நமக்கு கால் கட்டு போடு தீர்மானமா இருக்காங்கன்னு சொல்லு. ஒரு வேளை நம்ம தொல்லை தாங்க முடியலையோ?" என்று சிரித்து கொண்டே அனு கேட்க, அவளை விளையாட்டுக்கு அடிப்பது போல் ஷிவானி கை ஓங்கினாள்.


"உனக்கு ரொம்ப கொழுப்புடி" என்று சிரித்து கொண்டே, "கிளம்பலாம்" என்று அவளை இழுத்து கொண்டு பேருந்து நிலைய வாசலில் இருந்த ஆட்டோவில் ஏறி மதுர வாயிலில் இருக்கும் நேரு யுனிவர்சிட்டி ஹாஸ்டலுக்கு வந்த போது மணி ஏழு.

காலை மணி ஒன்பது. எம் ஏ எகனாமிக்ஸ் இரண்டாம் ஆண்டுவகுப்பு. 

பில்டிங் வாசலில் நுழைந்த அனுபமா, ஷிவானியிடம் "ஹேய் பார்த்தியா. இன்னைக்கு நாம் தான் கிளாஸ்ல பிரஸ்ட். அசைன்மென்ட் இன்னும் ஒரு பேஜ் பாக்கி இருக்கு. ப்ரொபசர் சிடு மூஞ்சி ரெட்டி வரதுக்குள்ள முடிச்சுடலாம். சீக்கிரம் வாடி. கிளாஸ் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு."

கிளாஸ் ரூமுக்குள் நுழைந்த இருவரும் அதிர்ச்சியில் சிலையாகி நின்றனர். அவர்களுக்கு முன்னே ஒருவன் கிளாஸ் ரூம் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருக்க அவன் கையில் இருந்ததோ அளவில் பெரிய புஸ்தகம். அவன் தலை குனிந்து நோட்ஸ் எழுதி கொண்டு இருந்ததால், முகம் சரியாக தெரியவில்லை. ஆள் பார்க்க ஆறடி உயரம், கொஞ்சம் மாநிறம் என்று மட்டும் தெரிந்தது. 

ஷிவானி யோசிக்க ஆரம்பித்தாள். 'இவன் புதிதாக சேர்ந்து இருக்கும் ஸ்டூடன்ட் ஆக தான் இருக்க வேண்டும். நமக்கு முன்னாலே வந்து அசைன்மென்ட் எழுதிகிட்டு இருக்கான் போல' என்று எண்ணியபடி, "அனு, உட்காருடி, அவன் எழுதுறதுக்குள்ள நாம சப்மிட் பண்ணிரலாம். பெரிய படிப்பாளின்னு நினைப்பு". பொருமி கொண்டே தனது ப்ராஜெக்ட் நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

பேச்சு குரல் கேட்டு முகத்தை உயர்த்தி அவன் பார்க்க அனு அவனை பார்த்து அசந்து போனாள். நீண்ட நெற்றி, ஏற்றிய புருவங்கள்,சிறிய கண்கள். அடர்த்தியான மீசை. அனுவை பார்த்து அவன் சிரிக்க அவன் காந்த சிரிப்பில் அனு மெய் மறந்து போனாள்."இங்கே பாருடி அவனை, பார்க்க நாகார்ஜுனா மாதிரி இருக்கான்" என்று கிசுகிசுக்க ஷிவானி பார்ப்பதற்குள் அவன் திரும்ப தனது தலையை குனிந்து நோட்ஸ் எடுப்பதை தொடர்ந்தான்.

ஷிவானி அனு தலையில் கொட்டினாள்"லூசாடி நீ. யாரை பார்த்தாலும் உனக்கு நாகார்ஜுனா மாதிரி தெரியுது" என்று கிண்டல் செய்ய, அனு கோபத்தில் முகத்தை திருப்பி கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர அந்த கிளாஸ் ரூம் நிறைய ஆரம்பித்தது.இப்போது மணி பத்து.ப்ரொபசர் ரெட்டி வரும் நேரம். ஷிவானி வேகமாக எழுதி முடிக்க, அனு இன்னும் எழுதி கொண்டு இருந்தாள்."அனு, சீக்கிரம் முடிடி.நேரம் ஆகுது."
எல்லோரும் ப்ரொபசர் எதிர் பார்த்து இருக்க வந்ததோ வைஸ் சான்செல்லர் டாக்டர் முத்து சாமி.

"ஹாய் ஸ்டுடண்ட்ஸ், ப்ரொபசர் ரெட்டி தன்னோட Ph D ப்ராஜெக்ட் முடிக்க நாலு மாதம் லீவ் போட்டு இருக்கார். அவர் இடத்தில தற்காலிகமாக புதிய நபரை அப்பாய்ன்ட் செய்து இருக்கோம்" என்று சொல்லி விட்டு "மிஸ்டர் ராகவ் ப்ளீஸ் கம் டு ஸ்டேஜ்" என்று அழைக்க, எல்லார் முகமும் ஆச்சர்யத்தில் மாறியது.




கடைசி பெஞ்சில் இருந்த அந்த இளைஞன் கையில் இருந்த புத்தகத்துடன் மேடைக்கு வந்து "ஹை எவரிபடி, குட் மார்னிங்" என்று சொல்ல, ஷிவானி, அனு முகத்தில் ஈ ஆடவில்லை.

அவன் தோற்றத்தை பார்த்து விட்டு, "அனு நீ இது வரைக்கும் சொன்னதில, இது மட்டும்தாண்டி உண்மை" என்று ஷிவானி அவள் காதில் கிண்டலாக சொன்னாள்.

முத்துசாமி தொடர்ந்தார். "மீட் மிஸ்டர்ராகவ். பி ஏ எகனாமிக்ஸ், பிரம் ராஜா சரபோஜி காலேஜ், தஞ்சாவூர். எம் ஏ எகனாமிக்ஸ், பிரம் டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்அண்ட் Ph D பிரம் ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி, யு எஸ்".


"ப்ரொபசர் ரெட்டி நடத்த வேண்டிய International Trade and Finance, Financial Markets and Institutions. இந்த ரெண்டு சப்ஜெக்ட் உங்களுக்கும்,Quanitative Methods for Economic Analysis, Indian Economic Policy இந்தரெண்டு சப்ஜெக்ட் பஸ்ட் இயர் ஸ்டுடண்ட்ஸ்க்கும் நடத்துவார். ஓகே சீ யூ ஸ்டுடண்ட்ஸ். பெஸ்ட் ஒப் லக் டாக்டர் ராகவ்"

சொல்லி விட்டு வி சி வெளியேற, எல்லோரும் அதிர்ச்சியில் இருந்து வெளிப்பட சிறிது நேரம் ஆனது. ராகவ் முகத்தில் புன் சிரிப்பு தவழ்ந்தது.எல்லோரையும் கை அசைத்து அமர சொல்லி விட்டு, பேச தொடங்கினான். 

"ஹாய் ஸ்டுடண்ட்ஸ். நான் ஒரு நாலு இல்லை அஞ்சு மாசம் தான் உங்களுக்கு இந்த பாடங்களை நடத்துவேன். உங்களுக்கு ரெட்டி மாதிரி சுவாரஸ்யமா நடத்த முடியாட்டினாலும் ஓரளவு உங்க எதிர்பார்ப்பை நிறைவு செய்வேன்."

ஷிவானி முனக தொடங்கினாள். "ரெட்டியே ஒரு பெரிய ரம்பம். இவன் அதை விட பெருசா போடப்போறான்னு நினைக்கிறேன்".
ராகவ் பேச்சை தொடர்ந்தான்."டியர் பிரெண்ட்ஸ், நம்ம என்னோட கிளாஸ்ல சில கிரௌண்ட் ரூல்ஸ் இருக்கு.

ரூல் நம்பர் ஒன். என் கிளாஸ் பிடிக்காதவங்க யாராவது இருந்தா, இப்போவே போய்டலாம். அட்டெண்டென்ஸ் போட்டுடுவேன்.எக்ஸாம் எழுத வந்தா மட்டும் போதும்.

ரூல் நம்பர் டூ. டெஸ்ட் எல்லாமே சர்ப்ரைஸ் டெஸ்ட் தான் எப்போ இருக்கும்னு சொல்ல முடியாது.

ரூல் நம்பர் த்ரீ. ஒரு மணி நேர கிளாஸ்ல முதல் பத்து நிமிடங்கள் எனக்கு பிடித்த, நமக்கு உபயோகமான, சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக்குவேன். நீங்களும் ஏதாவது பகிர்ந்துக்கனும்னா அந்த நேரத்தில பேசலாம்.

ரூல் நம்பர் போர். நாம எல்லாரும் கிளாஸ்குள்ள ப்ரொபசர் ஸ்டுடண்ட். வெளியே நாம எல்லாம் பிரெண்ட்ஸ்."


"ஓகேயா" என்று கேட்க, பின்னால் இருந்து ஒருத்தன் கை உயர்த்தினான். 
"சார், உங்களை மச்சான்னு கூப்பிடலாம்ல". 

சிரித்தான் ராகவ்"எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை.உங்களுக்கு அழகான தங்கச்சி இருந்தால், யோசிச்சு கூப்பிடுங்க என்று சொல்ல, எல்லோரும் பெஞ்சில் தடதடவென்றுகையை அடித்து சந்தோசத்தை வெளிபடுத்தினர்.

"ஓகே ஸ்டுடண்ட்ஸ். இப்போதைக்கு என்னை பத்தி வி.சி சொன்ன மாதிரி, உங்களை எல்லோரும் அறிமுகபடுத்தி கொள்ளுங்க.முதலில் பெயர், சொந்த ஊர், யு ஜி படிப்பு, வொர்க் எக்ஸ்பீரியன்ஸ், உங்களோட வாழ்க்கை லட்சியம். இந்த வரிசையில். சரியா?"

ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தனர். அனுவின் முறை வந்தது. "சார், என் பெயர் அனுபமா. பிரம் குண்டூர். யுஜி பிஏ எகனாமிக்ஸ்.வாழ்கையின் லட்சியம், எங்க பாமிலி பிசினஸ், மிளகாய் பிசினஸ் பாத்துக்கிறது."

அடுத்து ஷிவானி பேச ஆரம்பித்தாள். "என் பெயர் ஷிவானி, சொந்த ஊர் நெல்லூர்.இப்போ இருக்கிறது விஜயவாடா . யுஜி பிஏ எகனாமிக்ஸ்.வாழ்கையின் லட்சியம்பொறுப்புள்ள நல்ல குடிமகளாக நடந்து கொள்வது"

"இன்டரெஸ்டிங்", ராகவ் ஆச்சர்யபட்டு கொண்டே, "அப்படின்னா கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா.?"

"அப்பா அம்மாவுக்கு நல்ல மகளா, கணவனுக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு நல்ல அம்மாவா."

அதற்குள் பின்னால் இருந்து சிரிப்பு ஒலிக்க கோபமானான் ராகவ்
"ஹலோ, அவங்க தன்னோட லட்சியத்தை வெளிப்படையா சொன்னாங்க. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னு தோணினா இங்கே முன்னால வந்து சொல்லுங்க". பதில் ஒன்று வரவில்லை.
சுற்று முற்றும் பார்த்து விட்டுகைதட்ட தொடங்கினான். "ஐ லைக் இட். உங்க பெயர் என்ன சொன்னிங்க?". 
"ஷிவானி சார்."
"ஓகே தாங்க்ஸ். மறக்க முடியாத பதில் சொல்லிட்டிங்க".
முப்பது மாணவர்களின் அறிமுகம் முடிய, இருபது நிமிடங்கள் ஆனது.


"டியர் பிரெண்ட்ஸ், நான் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்ல போறேன். இது என்னோட வாழ்க்கைல ஒரு பாடமா இருந்தது. உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்."

"இது ஒரு ஏர் போர்ட்ல நடந்த விஷயம்." எல்லோரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.

"முதல் பெஞ்சில் இருந்த அனுவை பார்த்தபடி "அனு, உங்களை மாதிரி ஒரு லேடி. ஏர் போர்ட்ல பிளைட் டுக்காக காத்து கொண்டு இருந்தாங்க. பிளைட் ஒரு மணி நேரம் டிலே ஆகும்னு தகவல் கிடைத்தது. அவங்களுக்கு நல்லா பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. சாப்பிடும் நேரமும் கிடையாது. சரி கொஞ்சம் பிஸ்கட் வாங்கி தின்னலாம் அப்படின்னு, குட் டே பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு ஒரு சேர்ல போய் உட்கார்ந்தாங்க. 

கைல சேடன் பகத் புத்தகம், பிஸ்கட் பாக்கெட் அடுத்த சேர்ல அதை ஒட்டி இன்னொருத்தர். இந்த லேடியை பார்த்து 'ஹாய்' என்று சொல்ல, திருப்பி 'ஹாய்' சொல்லி விட்டு புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தார். பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கட் டை எடுத்து தின்ன தொடங்க, அருகில் இருந்த நபர் சிரித்து கொண்டே ஒரு பிஸ்கட்டை எடுத்து கொண்டார்.

அந்த பெண்ணுக்கு கோபம் அதிகமானது'என்ன இது. ஒரு மரியாதைக்கு கூட கேட்காமல் பிஸ்கட் எடுத்து சாப்பிடுறதை பாரு.இடியட்' என்று மனதுக்குள் திட்டியபடி, புத்தகத்தை படித்தபடியே அடுத்த பிஸ்கட் எடுக்க, அந்த நபரும் ஒரு பிஸ்கட் எடுத்து கொண்டார். இப்படியாக ஒவ்வொரு பிஸ்கட்டும் காலியாகி கொண்டே வந்தது. கடைசியில் இருந்து ஒரே ஒரு பிஸ்கட். சரி இந்த பிஸ்கட்டாவது நமக்கு கொடுப்பான் என்று அந்த பெண் காத்து இருக்க, அந்த நபரோ கடைசி பிஸ்கட்டை உடைத்து இரண்டாக்கி ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, மீதி பாதியை தன் வாயில் போட்டு கொண்டார். 

பெண்ணுக்கோ தாங்க முடியாத கோபம்'என்னடா இது அநியாயமா இருக்கு. அந்த ஆள் நாக்கை பிடிங்கிகிற மாதிரி ஒரு கேள்வி கேட்கணும்' என்று எழ, அதற்குள் பிளைட் போர்டிங் அறிவிப்பு வந்தது. வேறு வழி இல்லாமல் அந்த பெண் கிளம்பி பிளைட்டில் ஏறி அமர்ந்து தனது பேக்கை திறந்து புக்கை வைக்கலாம் என்று பார்க்க உள்ளே இருந்தது உடைக்காத குட் டே பிஸ்கட் பாக்கெட்

எல்லா மாணவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த கவனிப்பு.

ராகவ் தொடர்ந்தான். "அந்த பெண்ணுக்கோ தன் மேலே கோபம் வந்தது'நாம் இவ்வளவு நேரம் எடுத்து தின்றது அந்த ஆளோட பிஸ்கட் பாக்கெட். ஆனால் அந்த நபர் தன்னை ஒரு வார்த்தை கூட தவறா சொல்லலையே. சொல்ல போனா, கடைசி பிஸ்கட்ல பாதியை கூட நமக்கு கொடுத்தார். இப்போ போய் அவர் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னா கூட அதற்கு வாய்ப்பு இல்லையே'. கூனி குறுகி போனாள்.

"

"இது போல, நம்ம வாழ்க்கைல, நாம தப்புன்னு நினைச்சது உண்மைல சரியா இருக்கலாம். சரின்னு நினைச்சது உண்மைல தப்பா இருக்கலாம். ஒரு விஷயத்தை முழுக்க ஆராயாம மற்றவர் மேல கோபப்படுவதோ, வருத்தப்படுவதோ தவறு. இது தான் இன்னைக்கு நான் சொல்ல நினைக்கிற புதிய விஷயம்". அவன் சொல்லி முடிக்க எல்லோரும் விடாமல் கைதட்டினர்.

ஷிவானி முகத்தில் சிரிப்பு"அனு, இந்த மனுஷன் கிட்ட ஏதோ விஷயம் இருக்குடி. இவன் சாதாரண ஆள் கிடையாது."



No comments:

Post a Comment